கூடாக்காமம்

பொ. கருணாகரமூர்த்தி
ஓவியம்: தோமஸ்
அமராவும் டாக்டர்.அலெக்ஸான்டரும் காதலித்துக் கடிமணம் செய்துகொண்டவர்கள். மிக்கவசதியான நடுவயதுத்தம்பதி. அவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள்,அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் பயின்றுகொண்டும் பணியுடனும் வெவ்வேறு இடங்களில் ஜீவனம். டாக்டர்.அலெக்ஸான்டர்ஒரு பேராசிரியர் +வானியல் ஆய்வறிஞர்.அவர் ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தைப்பற்றி அமராவுக்குச் சொன்னால் அவர் அதைமுடிக்க முன்னரே அமரா எழுப்பும் ‘கிர்ர்ர்ர்ர்’‘கொர்ர்ர்ர்’ ஒலி அவரது விபரிப்புக்கு இடைஞ்சல் பண்ணும்.
அமராவுக்கு கணவனுடன் சுமுகமான உறவில்லை. காரணம் அவரது ஆய்வுகளல்ல. கொஞ்சநாளாக அவரது ஆய்வக உதவியாளரான ஒரு ஜப்பானிய இளநாரியுடன் அவருக்கேற்பட்டுள்ள ஒருங்கிசைவும் நெருக்கமும், அவளே காலையில் வழியில் வீட்டுக்குவந்து ஆய்வறிஞரையும் தன் மகிழுந்தில் இட்டுக்கொண்டு பல்கலைக்குச் செல்வதுவும், அவரும் மாலை முழுவதும் அவளுடன் கோர்த்துக்கொண்டு அலைவது, சாப்பிடுவது, சில இரவுகளில் அவள் வீட்டிலேயே தங்கி அவர் தன்பாட்டுக்குச் சந்தோஷமாக இருப்பதுவுந்தான்!
அமரா அனுபவிக்கும் அவர்களது தோட்டத்துடன்கூடிய வளமனையும்வாழ்க்கையும் டாக்டர். அலெக்ஸான்டரின் தந்தைவழி ஆதனங்கள். தர்க்கரீதியானதும், நடைமுறைப்பட்டதும், சரியானதுமான முடிவுகளை எடுக்கக்கூடியவள் அமரா. கணவன். மீதுள்ள அதிருப்தியால் அச்சுகபோகங்களையெல்லாம் இழந்துவிட்டு நடுவீதியில்நின்று கஷ்டப்பட அவளொன்றும் ‘அசட்டுப்பேய்ச்சி’ அல்ல.
வீட்டிலே தேமேயென்று இருந்தபடி கணவனின் சாங்கியங்களை அவதானித்துக்கொண்டு இருந்தஅமராஇப்போது ஒருவிநோதமுடிவுக்கு வருகிறாள். அதுவாவது இனிமேல்உறவுகளின் வீட்டுக்கொண்டாட்டங்கள், திருமணங்கள், பிறந்தநாட்கள், விருந்துகள், கேளிக்கை நிகழ்வுகள் உட்பட எதுக்காகவும் நான் வீட்டைவிட்டு வெளியே போவதில்லை.வீட்டுத்தோட்டத்தில் கொஞ்சம் உலாவுவது மட்டுந்தான்.
அமராவின் தாயாருக்கு 63 வயது, கைம்பெண்,ஒக்ஸ்ஃபோர்ட்டில் வாழ்கிறார். அடிக்கடி போன்செய்து நச்சரிப்பார்: “பேபி, நீ வெளியே போகாவிட்டால் பரவாயில்லை,இங்கே எங்கிட்டேயாவது வந்துபோய்க்கொண்டிரேன்டி.”
இவள் அவ்வகையான வேண்டுதல்களுக்கு மசிந்தோ இணங்கியோ,அங்கேயெல்லாம் போய்விடமாட்டாள். சிலநாட்கள் காத்திருந்துவிட்டுக் கிழவியே இழுத்துப் பறித்து இரண்டு தொடரிகள்மாறி ஏறியிறங்கி மூச்சிழைத்துக்கொண்டு அவளிடம் வரும். கிழவிக்கு மருமகனிடம் வெகு மரியாதை.அவரிடம் காலநிலை,பூவிதைகள்,தோட்டம் தவிர்த்துவேறெதுவும் பேசமாட்டார்.
அமராவின் மகன்றால்ஃப்புக்கு இன்னும் நிரந்தர ஸ்நேகிதி அமையவில்லை. மகள் ஜெனெட்டின் ஸ்நேகிதன் ஃபைஸல் ஒரு பர்ஸிக்காரன், தனியார் மருத்துவமனையொன்றில் தாதியாகப்பணிபுரிகின்றான். மிக இளகிய மனதும் பிறன்பால் கரிசனையுமுடையவன். எப்போது அவன் வந்தாலும் அமராவிடம் ஒரு பிள்ளைக்குரிய அக்கறையுடன்என்ன சாப்பிட்டாய், குடித்தாய் என்று அக்கறையாய்விசாரிப்பான். ஒரு நற்செவிலிக்கேயுரிய பதனத்துடன் இதய அழுத்தம், நாடித்துடிப்பை எல்லாம் அளந்துவிட்டு, “சும்மா சும்மா நீங்கள் வீட்டுக்குள் எப்போதும் அடைந்துகிடக்கக்கூடாது, ஜிம்முக்காவது போய்வரவேண்டும்.சதா இயங்கிக்கொண்டிருக்கவேண்டும். அதுவே உங்கள் ஆரோக்கியத்து நல்லது” என்று சொல்லி வைப்பான்.அதெல்லாம் அமராவுக்கும் தெரியாமலில்லை.
அவளே மிகவும் முன் ஜாக்கிரதையானவள். அவளுக்கு முன்பொருமுறை டென்னிஸ் விளையாடப்பழகவேண்டுமென்று ஆசை வந்ததாம், ஆனால் அதற்கு முதல் முதலுதவி வகுப்பொன்றுக்குஆறுமாதங்கள் போனாளாம். விளையாடும்போதுவிழுந்து சுளுக்கு முறுக்கு ஏற்பட்டாலோ, முழங்கால் முட்டிகளைத் தேய்த்துக்கொண்டாலோ முதலுதவி தெரிந்திருக்கவேண்டாமோ?
சில நாட்களில் பேராசிரியரே சமைத்து அவளுக்கும்எடுத்துவந்து தருகிறார். அவளின் படுக்கையறையிலுள்ள அலமாரிகள்இரண்டிலும்எப்போதாவது அவள் படிக்கும் நாவல்கள் / சுவையூட்டப்பட்ட தானியங்கள், பிஸ்தாஸீன்/ பாதாம்பருப்பு/ சீஸ் /உப்பு /பிஸ்கெட்ஸ்/ சிப்ஸ்/ பழரசங்கள்/ வைன்/ பியர் என்பன நிரப்பி வைக்கப்பட்டிருக்கும்.
அவை தவிர அமராவும் அவ்வப்போ உணவகங்களிலிருந்து அனுப்பாணைகள் மூலம் சூடான உணவுகளையும் பிட்ஸா, பஸ்ரா, நூடில்ஸ் என்பவற்றையும்வரவழைப்பாள்.தினமும் ஏராளம் தொலைபேசி அழைப்புகள் வரும்.அமரா விரும்பினால் குணமாய் இருந்தால் அவற்றில் சிலவற்றை எடுப்பாள், அல்லது மாட்டாள்.இப்படியாகமெல்லநடக்கிறதுஅவளதுகாலம்.
அவர்களது வீட்டைத் தினமும் சுத்தம் பண்ணவும், மாடிப்படிகளை மொப் பண்ணவும்,ஜன்னல் கண்ணாடிகளைக் கழுவித் துடைக்க – கிளீன்– எனும் ஒரு துப்பரவுக்குழுமத்துடன் பேராசிரியர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். அக்குழுமத்தின் ஊழியர் ஒருவர் வந்து தினமும் துப்புரவு செய்வார். ஜன்னல் கண்ணாடிகளைக்துடைக்க மட்டும் வாரத்தில் ஒருமுறைஒருவரேவருவார்.
அன்று ஜன்னல் கண்ணாடிகளைத் துடைப்பதுக்கு பெண்டிகோஷும் ஸ்லீவ்லெஸ் லெதர் ஜாக்கெட்டும் அணிந்திருந்த ஒரு கருப்பினத்தவன் வந்தான்.அவனது கைகள் நீண்டவையாகவும் உறுதியானவையாகவும் அவைக்கேற்றாற்போல் கால்களும் ஸ்திரமாயிருந்தன. அழகான உடலமைப்பும்உச்சிக்குடுமித் தலையலங்காரமும்உடல்மொழியும், தேர்ந்த வார்த்தைகளில் நாகரீகமான பேச்சும்,சாந்தமான முகத்தின் விகசிப்புமாக இருந்தவனை அமராவுக்கு மிகவும் பிடித்துப்போனது. அவன் தன்னைக் கட்டிலில் தள்ளி ஆக்கிரமித்தாலோ சல்லாபித்தலோகூடத்தேவலாம் போலிருந்தது.
அமராவின் அறைக்கதவில் மென்மையாகத்தட்டி உத்தரவுபெற்றுக்கொண்டு உள்ளே பிரவேசித்தவன் அவளுக்கு மீண்டும் முகமன் கூறிவிட்டு ஜன்னலின் எழினிகளை ஒதுக்கி அவைக்கான பட்டிகளில் கட்டினான். கடற்பஞ்சை சவர்க்காரநீரில் அமுக்கி நனைத்துக்கொண்டு அலுமினிய ஏணியை ஓசைப்படாமல் நிறுத்திவைத்து அதிலேறி ஜன்னல் கண்ணாடிகளைக் கழுவும் சாங்கத்தையும் அவனது லாவகத்தையும் ரசித்துக்கொண்டிருந்த அமராவைத் திரும்பித்தானும் பார்த்தானில்லை. தன் கருமத்திலேயே கண்ணாகி ஒன்றியிருந்தான்.
அவன் கவனத்தைக் கவருவதற்காக இவள் பண்பலை வானொலியில் போய்க்கொண்டிருந்த இசையின் சத்தத்தை உயர்த்தினாள். அவன் அப்போதும் அவள் பக்கம் திரும்பினானில்லை. வைப்பரால் கண்ணாடியின் ஈரத்தை இழுத்துக் கொண்டிருக்கையில் அமரா அவனைக் கூப்பிட்டாள்.
“மெஸூர்.”
அவன் திரும்பவும், “வாட்ஸ் யூவர்நேம்”என்றாள்.
“மார்க்குஸ், பிளீஸ்.”
“என்ன கப்ரியேல் மார்க்குஸா?”
“ நொன்நோ…. மாம், நோபிள் மார்குஸ்.”
“கண்ணாடிகளைத் துடைத்தபின்னால் உனக்குக்கொஞ்சம் நேரம் இருக்குமா?”
“நான் வேறும் ஏதாவது பண்ணணுமா மாம்?”
“ஜஸ்ட் ஒரு சின்னவேலைதான்.”
“ரொம்ப நேரமாகுமோ?”
“பத்து நிமிஷத்திலிருந்துஒருமணிநேரம்கூட நீடிக்கலாம், அது உன் திறமை, இரசனை, கலைத்துவத்தைப்பொறுத்தது டியர்.”
“ஆகட்டும்மாம், செய்திட்டாப்போச்சு.”
அவன் ஜன்னல்கண்ணாடிகளின் மூலைப்பகுதிகளையும்டிஸூவினால் துடைத்தபிறகுஅமரா சொல்லப்போகும் வேலைக்காக வந்து பௌவியத்துடன் காத்துநின்றான்.
“நாம முதலில் ஒரு காப்பி சாப்பிடுவோமாடியர்.”
அந்த ‘டியர்’ அவனைக்கூச்சப்படுத்தியது.
“ஆகட்டும்சந்தோஷம் மாம்” என்றான்.
அவனை அங்கிருந்த மேடாவொன்றில் அமரச்சொல்லிவிட்டு அமராபோய் இருவருக்குமாக பில்டருக்குள் காப்பியைப்போட்டு மிஷினுள் நீரைநிரப்பி அதை உயிர்ப்பித்தாள். காப்பி வடியும்வரை குளியலறையுள் புகுந்து மார்பு இடுப்புக்கச்சைகள் இரண்டையையும் கழற்றிஅவைக்கான கூடைக்குள் வீசினாள். வேகமாகத் தன்மேல் தூவலைப்பிடித்தாள். நாலுக்கு நாலு மீட்டர் விசாலமான அக் குளியலறைதான் அவளது மேக் அப் அறையும். உடலைத்துவட்டி முகத்துக்கு ஃபேஸியல்கிறீமைப்பூசி, உதட்டுச்சாயத்தைச் சரிசெய்து கண்மையையும் புதிதாகத்தீட்டினாள்.முகவலங்காரம் சரியாக இருப்பதை உறுதிசெய்தவள்உள்ளாடைகள் எதுவும் அணியாமல்ஹாங்கரில் தொங்கிய அழகான ஒருலாவென்டர் நிற வெல்வெட் நைற்றியை அணிந்து, அதன் இடுப்புப்பட்டியைக் கட்டிக்கொண்டு இருப்பவற்றுள் சிறந்த பெர்பியூமைஎடுத்து தன்மீது விசிறினாள்.குசினிக்குள்போய்க் காப்பியை கோப்பைகளில் வார்த்து எடுத்துக்கொண்டுவந்தாள்.காப்பியைப் பவ்வியமாக வாங்கிய மார்குஸ் அப்போது வானொலியில் பாடிக்கொண்டிருப்பது“சாம்புரவுன்தானேமாம்” என்றான்.
“ஆமாம், நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள்.
அமராவின்காப்பிதந்த கைகளையோ, வனப்பான கால்களையோ,நைற்றியின் மேலால் திமிறி அழைத்த ஆழமான மார்புக்குவட்டையோ வெறித்தான் இல்லை.
அவன்காப்பிக்கோப்பையைக் காலியாக்கும்வரை காத்திருந்தஅமரா அவனுடன் சங்கதியை வளர்த்தவேண்டி, “காப்பி பரவாயில்லையா” என்றாள்.
“ஒஃப் கோர்ஸ். நீண்டநாட்களுக்குப்பிறகு நான் குடித்த அருமையான காப்பி இது”என்று உபச்சாரமாகக் கூறிவிட்டு கூடவே,“உங்களில் கமழும் சுகந்தம்உன்னதமாயிருக்கிறது. நிச்சயம் அதுவிலைகூடியதொரு பெர்பியூமாகத்தான்………” என்றவனுக்கு திடுப்பென அது வேண்டாத விளப்பமென்று தோன்றியிருக்க வேண்டும்வசனத்தை பூரணப்படுத்தாமலே வாயைப் பட்டென மூடிக்கொண்டான்.
இவளோ, மார்குஸ் தனிமையிலிருக்கும் தன்னிடம்தன் அழகைப்பற்றி எதுவும் சொல்லமாட்டானா என்று தவித்தாள்.தன்னில் காலிய சுகந்தத்தை அவன் சொன்னவுடன் அதைப் பயல் சற்றே நெருங்குவதான சமிக்ஞையாக உணர்ந்தஅமராவுக்கு அவன் திடுப்பென நிறுத்திக்கொண்டது ஏமாற்றமாக இருந்தது.தொடர்ந்தும்வானொலியில் போன அடுத்த பாட்டையும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவனின் கவனத்தைக்கலைக்க, “மார்குஸுக்கு இசையென்றால் ரொம்ப இஷ்டம்போல”என்றாள்.
“ஆமாம்மாம்.கிளாஸிகல் சங்கீதம் என் முதல்தேர்வு, கல்லூரிக்காலத்தில்ஜாஸ் படித்தேன். கொஞ்சம்போல சக்ஸ் வரும். இளமைக்காலத்தில் ஜாஸ் நண்பர்களுடன் சேர்ந்துலிவர்பூலில்ஒரு திறந்தவெளி அருந்தகத்தில்சக்ஸ் வாசித்தேன். அதன் பிறகு மீண்டும் சக்ஸ் வாசித்துக் களிக்கும்படியான இசைநாட்கள் இனியபொழுதுகள் அமையவில்லை” என்றுவிட்டுப் புன்னகைத்தான்.
“நீ சக்ஸ் வாசிப்பதைக்கேட்க ஆசையாக இருக்கு. ஒருநாள் எனக்காக அதை வாசிப்பாயா?”
“தாட்ஸ்மைபிளெஸர்மாம். உங்களுக்காக ஒரு நாள்நிச்சயம் வாசிப்பேன்.”
“ஓஅப்படியா, மிக்க நன்றி மார்க்குஸ். இன்றைய உனது நாள் எப்படியிருக்கும்? வீட்டுக்குப்போய் மாலையில் என்னவெல்லாம் பண்ணுவாய்?”
“எனக்கொரு மகள் இருக்கிறாள் மாம், 12 வயசு” என்றுவிட்டு நிறுத்தினான்.
“ஓஅவள்கூட வெளியே போவியோ?”
“இல்லை மாம், அப்படி அவளுடன் போகமுடிந்தால் எனக்கும் இஷ்டந்தான். அப்படியெல்லாம் முடியாது. அவளொரு மாற்றுத்திறனாளி.அவர்களுக்கானபள்ளியில் இட்டுவைத்திருக்கிறோம்,அவளிடம் இன்று மாலை வருவதாய்ச் சொல்லியிருக்கிறேன்.ஞாயிறு அவளை வீட்டுக்கு அழைத்துவந்து அவளுக்குப் பிரியமானWonton (கோள வடிவ பாலாடை) பண்ணிக்கொடுப்பதாக இருக்கிறேன்” என்றவனின்கண்கள்எருதின் கண்களைப்போல் ஈரத்தால் மின்னின.
அமராவின்உணர்ச்சிக்கங்குகளின்மீதுகனமானபனிமழைகொட்ட ஆரம்பித்தது. சுதாகரித்துக்கொண்டு, “ஆமாம் மார்குஸ், வாழ்க்கை ஒருவருக்குப்போல் இன்னொருவருக்கு இருப்பதில்லை.சிலருக்கு வித்தியாசமான பணிகள் பணிக்கப்படுகின்றன,அது விசித்திரமானதுதான்’ என்றாள்.
“ஆமாம்மாம், எல்லாவற்றுக்கும் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டேன்”என்றவன்மீண்டும்புன்னகைத்தான்.
“மாம், நான் என்னவோ பண்ணவேண்டும் என்றீர்களே, நான் இப்போதே பண்ணலாமா அல்லதுநான் திரும்பி வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா” எனவும், “இல்லை என் நண்பனே, இப்போது நான் வித்தியாசமாக நினைக்கிறேன்”என்றபடி அருகிலிருந்த கொமொட்டின் லாச்சியை இழுத்தாள். அதிலிருந்த 50 பவுண்ட்தாளொன்றை எடுத்து அவனிடம் நீட்டியபடி, “இதை வைச்சுக்கோ, உன் மகளுக்கு விருப்பமான எதையும் என் பரிசாக வாங்கிக்கொடு”என்று தந்தாள்அமரா.
மார்கோஸுக்கு எதுவும் புரியவில்லை.
“பொ. கருணாகரமூர்த்தி” <karunah08@yahoo.com>