சில்வியா பிளாத்: கல்லறையைச் சென்றடையாது மிதந்த குரல்

 சில்வியா பிளாத்: கல்லறையைச் சென்றடையாது மிதந்த குரல்

ஸிந்துஜா

 

ந்த பிப்ரவரி அதிகாலையில் படுக்கை அறையில் அவள் நுழைந்து பார்த்தபோது, அவளுடைய மூன்று வயதுப் பெண் குழந்தையும்ஒரு வயது ஆன ஆண் குழந்தையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்கள் எழுந்ததும் குடிப்பதற்குப் பாலும் உண்பதற்கு ரொட்டியும் எடுத்து வைத்தாள். கதவுகளின் இடைவெளிகளை மூடி, ஜன்னல்களைத் துணிகளால் அடைத்துவிட்டு சமையல் அறைக்குச் சென்றாள். அங்கிருந்தஎரிவாயு அடுப்பைத் திறந்தாள். அந்தத் தீயடுப்பைஎரியவிட்டு அதற்குள் தன்தலையைக் கொடுத்தாள். அப்போது அவளுக்கு வயது முப்பது. அன்று காலையில் வீட்டுக்குள் வந்து பார்த்த நர்ஸ், அங்கேசில்வியா பிளாத் இறந்து கிடப்பதை பார்த்தாள்.

 

சில்வியாபிளாத் 1932ஆம் ஆண்டு பாஸ்டனில் பிறந்தாள். அவளது தந்தை ஓட்டோ பிளாத் ஓர் ஜெர்மானியர், தாய் அரெலியா பிளாத் ஆஸ்திரிய வம்சா வழியில் வந்த அமெரிக்கப் பெண்மணி. சில்வியா அவளுடைய எட்டாவது வயதில் பாஸ்டன் ஹெரால்டு பத்திரிகையில் குழந்தைகளுக்கான பாடலை எழுதினாள். இயற்கை, பறவைகள், வசந்த காலம், இலையுதிர் காலம், முதன் முறையாகப் பார்த்த பனி மழை, தலைக்கு மேல் மின்னும் நட்சத்திரங்கள் இவையெல்லாம் ஒரு சிறுமியைப் பிரமிக்க வைக்கும் விஷயங்கள்தான்; ஒரு வளரும் கவிதாயினியைக்கூட. அவளுடைய முதல் கவிதை ‘கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்’ பத்திரிகையிலும் முதல் சிறுகதை ‘செவென்டீன்’ இதழிலும் வெளிவந்தன.

ஸ்மித் கல்லூரியில் படிக்கையில் அவளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. படிப்பில் அவள் தேர்ச்சி மிகுந்த மாணவியாக இருந்தாள். கல்லூரி நடத்திய இதழான ‘ஸ்மித் ரிவியூ’வின் எடிட்டராக இருக்கும் வாய்ப்பு கிடைத்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். மூன்றாம் ஆண்டுப் படிப்பை முடிக்கும் போதுMademoiselleஇதழின் கௌரவ ஆசிரியராக நியமிக்கப்பட்டுஒரு மாதம் நியூயார்க்கில் வேலை பார்த்தாள். மேற்படிப்புக்குக் கேம்பிரிட்ஜ் சென்ற போதும் அவளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

அவளது இளம் வயதில் நேர்ந்த தந்தையின் மறைவு சில்வியாவின் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது. சில்வியா தன்இருபதாவது வயதில் அவளுடைய முதல் தற்கொலை முயற்சியை மேற்கொண்டாள். ஹார்வர்டில் அவள் படிக்க அனுமதி கிட்டாததாலும் வேலைப் பளுவினாலும் விரக்தி அடைந்த அவள் ஒரு நாள் வீட்டிற்குள் அவள் தாய் வைத்திருந்த தூக்க மாத்திரைகள் அனைத்தையும் உட்கொண்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்த அவளை மின் அதிர்வுத் தெரப்பி மூலம் குணப்படுத்தினார்கள். ஆனால், அவள் ஆழ்மனதில் தற்கொலை முயற்சிக்கான எண்ணம் பதிந்திருப்பதை இது உணர்த்தியது.

 

சில்வியாவின் இளமையில் அவளின் கவனம் அமெரிக்க சூழலின் கட்டுடைப்புகளில் விழுந்தது. குறிப்பாக ராபர்ட் லோவெல் என்னும் அமெரிக்கக் கவிஞரின் ‘வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகள்’ என்னும் புத்தகம் சில்வியாவைப் பெரிதும் ஈர்த்தது. லோவெல்லின் இந்தப் புத்தகம் தனிப்பட்ட, குடும்ப மனோரீதியான போராட்டங்களை மூடுதிரைகள் ஏதுமின்றி வீரியத்துடன் எழுதப்பட்ட கவிதைகளைக் கொண்டதாக இருந்தது. மரபுக் கவிதைகளும் புதுக் கவிதைகளும் எழுதிய லோவெல் தன் மனதைத் திறந்து, அந்தரங்கங்களைப் பொது வெளியில் தனது ஒப்புதல் வாக்குமூலங்களாக வெளிப்படுத்தினார். சில்வியாவை இத்தகைய சிந்தனைப் போக்கு வெகுவாகக் கவர்ந்தது. மேலும்,லோவெல் மனநல மருத்துவமனையில் எதிர்கொண்ட அனுபவங்களை அவள் தன் மன நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். இத்தகைய உணர்ச்சி பொங்கும், கலைத்திறன் மிக்க, மனோதத்துவத்தை வெளிப்படுத்துகிற அமெரிக்கக் கவிதை முயற்சிகளில் அவள் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டாள்.

அமெரிக்காவிலிருந்து படிப்புக்காக சில்வியா இங்கிலாந்து சென்றாலும் அவளது கலை மனது அமெரிக்காவையே நாடியது. அவள் விரும்பிய பல எழுத்தாளர்கள் அமெரிக்கர்களாக இருந்தார்கள். தன்னை ஒரு பத்தாம் பசலி என்றும் தன் மனம் ஐம்பது வருஷங்கள் பின்னோக்கிச் சென்று வாழ்கிறது என்று ஒரு முறை சில்வியா சொன்னாள். ஆனால், இருப்பிடத்தைப் பொறுத்தவரை அவள் இங்கிலாந்தை விரும்பினாள்.

ஆங்கிலக் கவிகளின் (British Poets) சிந்தனைப் போக்கு அமெரிக்கக் கவிஞர்களுடன் ஒப்பிடுகையில்சற்றுப் பின்தங்கியதாகத்தான் இருந்தது என்றுசில்வியா கருதினாள். ஒரு கவிஞன் அமெரிக்காவில் தன் வாசிப்பை ஆரம்பிக்கையிலேயே டி.எஸ். எலியட், டைலன் தாமஸ், யீட்ஸ் என்று நவீன கவிதைகளைப் பரிச்சயம் செய்துகொள்ள முடிந்த நிலையில், இங்கிலாந்தில் எவரும் ஷேக்ஸ்பியரிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை என்று அவள் ஒருமுறை தெரிவித்திருக்கிறாள்.

இங்கிலாந்தில் படிக்கும் போது ஆங்கிலக் கவியான டெட் ஹ்யூசுடன் பழக்கம் ஏற்பட்டது.இருவருக்கும் இடையே இருந்த இலக்கிய ஆர்வமும் கவிதை ஈடுபாடும் அவர்கள் திருமணம் விரைவில் முடியக் காரணங்களாக இருந்தன. ஹியூஸ் தனது ஆசிரியர் பதவியை விரும்பாததால் அதனை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளனாக மாறினார். அப்போது சில்வியா, அவள் படித்த ஸ்மித் கல்லூரியிலேயே வேலை பார்க்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியிருந்தது. ஹியூசின் வற்புறுத்தல் காரணமாக சில்வியாவும் வேலையை விட்டு முழு நேர எழுத்தாளராக மாறினாள். ஆனால், அவளது இரு குழந்தைகளையும் வைத்துக்கொண்டுஎழுதிச் சம்பாதித்து குடும்பம் நடத்துவது என்பது பெரும் பிரச்சினையாக ஆகிவிட்டது. இதனால், கணவனுடன் அடிக்கடி தகராறுகள் எழுந்தன.அவளது திருமணம் ஆறு ஆண்டுகள்தான் நீடித்தது. கணவனுக்கும் அவளுக்கும்சிநேகிதியா இருந்தஅசியா வெவிலுடன் ஹியூஸ் கொண்ட உறவு தெரிய வந்ததும் சில்வியா அவனிடமிருந்து விவாகரத்து பெற்றாள்.

 

ண வாழ்க்கைப் பிரச்சினையைத் தவிர சில்வியாவின் முப்பதாவது வயதில் அவளைத் தற்கொலைக்குத் தூண்டிய மற்றொரு முக்கியமான நிகழ்வு, ‘பெல் ஜார்’ என்னும் அவளது நாவலை, அவளது கவிதைகளைப் பிரசுரித்த ஆல்ஃபிரெட் ஏ.நாஃப் என்னும் பதிப்பாளர் நிராகரித்துவிட்டார். புகழ்பெற்ற அன்னா ஃபிராங்க் டயரிகளைக் கண்டுபிடித்து வெளியிட்ட ஜூடித் ஜோன்ஸ்தான் அப்போது மேற்குறிப்பிட்ட பதிப்பகத்தின் ஆசிரியராக இருந்தார். அவர் சில்வியாவுக்கு எழுதிய கடிதத்தில்,‘வாஸ்தவத்தில் ஒரு நாவலைச் சொல்லும் முறையில் ‘பெல் ஜார்’ எழுதப்படவில்லை’ என்று சொல்லியது சில்வியாவை மிகவும் துன்புறுத்திவிட்டது.

‘பெல் ஜார்’ பிரசுரமான போது சில்வியா பிளாத் மறைந்துவிட்டிருந்தாள். ஆனால், அது வெளிவந்தவுடன் உலகின் ‘கிளாசிக்’ நாவல்களில் ஒன்றாகப் புகழ்பெற்றுவிட்டது. அம்மாவுடன் சண்டை போடுபவள், சாதனை நிகழ்த்த வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவள்,தன் சுய கவுரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுபவள் என்ற வகையில் இருந்த அல்லது இவர்களைப் போலிருந்த பெண்கள் அனைவரும் கொண்டாடும் நாவலாகி விட்டது ‘பெல் ஜார்’.

‘பெல் ஜார்’, சில்வியா பிளாத்தின் சுயசரிதக் கதைதான். அந்நாவலில் போற்றப்பட்ட சுய நிராகரிப்பையும் அது விவரித்த எல்லையற்ற நேர்மையையும் கண்டு வாசக உலகம் பலத்த வரவேற்பை அளித்தது. 1950களில் நிலவிய சமூக அரசியலைக் குறி வைத்து எழுதப்பட்ட நாவல் அது. பெண்களுக்கான குறுகிய சூழலை அறிய வரும் கதாநாயகியான எஸ்தரை தனிமையும் பின்னர் சித்தப்பிரமையும் சூழ்ந்துகொள்கின்றன. பெண்களின் பாலுணர்வு, தாய்மை, சுடர் விடும் அறிவின் ஒளி ஆகியவற்றின் மீது அன்றைய காலம் ஏற்படுத்திய சுமைகளை ஏற்க முடியாமல் எஸ்தர் சின்னாபின்னமடைவதை நாவல் சுட்டுகிறது. இறுதியில் அவள் இந்தக் கட்டுக்களிலிருந்து விடுபட்டு எழுவதைப் பெண்களின் வெற்றி என்று நாவல் அறிவிக்கிறது.

 

ழுங்கும் கட்டுப்பாடும் தனது எழுத்தில் காணக் கிடைக்க வேண்டும் என்று சில்வியா உறுதியாக நம்பினாள். கட்டப்பட்ட பிம்பங்கள் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைக்காமல் அவளது நடமாட்டம் இருந்தது. ‘ஷேக்ஸ்பியரைப் படிக்கிறேன். அவ்வளவுதான்’ என்று சொல்லும் தைரியம் அவளிடம் இருந்தது. தனது கவிதைகளைப் பற்றிப் பேசுகையில் அவளது முதல் தொகுப்பான ‘கொலாசஸி’ல் உள்ள கவிதைகளை உரத்துப் படிக்கும் வாய்ப்பு தனக்குக் கிட்டவில்லை என்றும் அதற்குப் பின் வந்த கவிதைகளைவாய்விட்டுப் படிக்கையில் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் உணர்வு ஏற்பட்டதாகவும் கூறினாள். இம் மாதிரி படிக்கப்படும் கவிதைகளை ஒலிநாடாவில் பதிவு செய்து மற்றவர்கள் ரசிக்கப் பகிர்வது கவிஞர்களுக்குச் செய்யப்படும் சேவை என்று அவள் நினைத்தாள். முந்திய காலத்தில் ஒரு சிறு கூட்டமாகக் கவிஞர்கள் தமக்குள் பேசிப் புழங்கியதற்குமாறாக இது கவிஞனின் தாக்க வெளியை அதிகரித்து விடுகிறது என்பது அவளின் நம்பிக்கையாக இருந்தது.

 

சில்வியாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘கொலாசஸ்’ 1960இல் வெளிவந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் சில்வியாவிடம் இருந்த விரக்தியையும் வெறுப்பு மனப்பாங்கையும் வன்முறை உணர்ச்சிகளையும் மரணத்தைக் கொண்டாடும் மனநிலையையும் எதிரொலித்தன. 1962ல் சில்வியா முழு வேகத்துடன் கவிதைகளை படைத்தாள். உலகப் புகழ்பெற்ற அவளுடைய கவிதைகளான ’லேடி லாசரஸ்’, ‘டாடி’ ஆகியவை இந்த சமயத்தில்தான் எழுதப்பட்டன.

‘டாடி’ கவிதை பிக்காஸோவின் பிரசித்திப் பெற்ற கெர்னிகாவைப் போல கவிதை உலகின் பீடத்தை அலங்கரிக்கிறது என்று இலக்கிய விமரிசகரும் தத்துவவாதியுமான ஜார்ஜ் ஸ்டெய்னர் கூறினார். ‘டாடி’ கவிதை டாகாவ், ஆஷ்விஸ் ஆகிய வதை முகாம்களைப் பற்றியும் ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் பற்றியும் பேசுகிறது. சில்வியாவின் பின்புலம் ஜெர்மனியையும் ஆஸ்திரியாவையும் சார்ந்தது என்பதால் அவற்றின் தாக்கம் கூர்மையாக இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது.

‘லேடி லாசரஸ்’ சில்வியாவின் வாழ்க்கையைப் பிரதிபலித்தஉணர்ச்சி மிகுந்த கவிதை (இக்கவிதை இங்கே மொழிபெயர்த்து தரப்படுகிறது.)சரித்திரமும் அரசியலும் சில்வியாவைக் கவர்ந்த பேசுபொருட்களாய் இருந்தன. புத்தக அறிவுக்கு அப்பால் வாழ்க்கை ஏற்படுத்தித் தந்த அனுபவங்களின் சாரம் அவள் கவிதைகளை மெருகேற்றியது. கற்பனை கலக்காத யதார்த்தம், சுவாரஸ்யமற்ற புரிதல் என்று கருதிய சில்வியா மனிதர் மீதான கட்டுப்பாடுகளையும் வதைகளையும் ஒருவர் புரிந்துகொண்டு அனுபவச் செழுமையுடன் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

டெட் ஹியூஸ் தொகுத்த ‘ஏரியல்’ என்னும் சிறந்த கவிதைத் தொகுப்பில் ‘டாடி’. ‘லேடி லாசரஸ்’ என்ற இரு கவிதைகளும் இடம்பெற்றன. இத் தொகுப்பு சில்வியாவை வழிபடும் ஒரு வாசகர் கூட்டத்தை உருவாக்கிவிட்டது. ஏரியல் பற்றி ‘நியூயார்க் டைம்ஸ்’ விமர்சகர்,‘சில்வியாவின்கவிதைகளில் அயராத நேர்மையை ஒருவர் காணமுடியும்.வார்த்தைகளின் தீவிரத்தைச் சொற்களில் ஏற்றிவிட்ட இக்கவிதைகளில் எவரையும் கவரவல்ல காந்த சக்தியை உணரலாம்’ என்று எழுதினார்.சில்வியாவின் மரணத்துக்குப் பிறகு டெட் ஹியூஸ் கொண்டு வந்த ‘தி கலெக்டட் போயம்ஸ்’ என்னும் நூலுக்குப்புலிட்சர் பரிசு கிடைத்தது. இறந்த எழுத்தாளருக்கு புலிட்சர் பரிசு கொடுக்கப்பட்டது அதுதான் முதல் தடவை.

 

1960 முதல் 1963 வரை (இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரை) எழுதப்பட்ட சில்வியாவின் கடிதங்கள் அவள் இறந்து ஐம்பத்தி நான்கு வருடங்கள் கழித்து இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டன. அவள் பதினோரு வயதிலிருந்து, தான் எழுதிய கடிதங்களை சஞ்சிகையாகக் கருதி வைத்திருந்தாள். எந்தவித ஒளிவு மறைவின்றி, அவளது எண்ணங்கள் அப்பட்டமாகவும் தீர்க்கமாகவும் வெளிப்பட்ட கடிதங்கள் இவை. ஆனால், இவற்றை டெட் ஹியூஸ் எரித்துவிட்டார் என்று ஒரு செய்தி பரவியது.

மேற்குறிப்பிட்ட இரண்டு பாகங்களில் வெளிவந்த கடிதங்கள் சில்வியா தனது மருத்துவரான டாக்டர் ரூத் பர்ன்ஹவுசுக்கு எழுதியவை. ஹியூஸ் மற்றொரு பெண்ணுடன் தொடர்புகொண்டது தெரியவந்த பின் எழுதிய பதினான்கு கடிதங்கள்தாம் இத்தொகுப்பின் முக்கால்வாசி இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஒரு கடிதத்தில் ஹியூஸ் அவளைக் கடுமையாக அடித்ததினால் அவளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது என்று தெரிய வருகிறது. ஆனால், இது முட்டாள்தனமானசெய்திஎன்று ஹியூஸ் தரப்பிலிருந்து மறுத்து ஓர் அறிக்கை வெளியாகியது.

சில்வியாவின் வாழ்க்கையைச் சிதைத்து அவளைத் தற்கொலைக்கு இழுத்துச் சென்றவராக ஹியூஸைப் பற்றி நினைத்து கோபங்கொண்ட சில்வியாவின் வாசகர்கள், அவளது கல்லறையில் பொறிக்கப்பட்டிருந்த சில்வியா பிளாத் ஹியூஸ் என்ற பெயரில் உள்ள ஹியூஸின் பெயரை உடைத்து எறிந்துவிட்டார்கள்.

 

“ஸிந்துஜா” <weenvy@gmail.com>

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *