லிங்கம்: ஆன்மீகமா ஆயுதமா

 லிங்கம்: ஆன்மீகமா ஆயுதமா

மாலதி மைத்ரி
ஓவியம்: Hanna Barczyk

 

ரண்டாண்டுகளுக்கு முன், ‘சதை முதலீடும் உலக ஆயுதச் சந்தையும்’ கட்டுரைத் தரவுகளுக்காக, அமைப்பாக்கப்பட்ட பாலியல் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் நேர்காணல்களைத் தேடும்போது, ஜப்பான் கவாசகியில் கொண்டாடப்படும் ‘ஆண்குறித் திருவிழா’ ஆவணப்படம் காண நேர்ந்தது. நவீன முதலாளித்துவ ஆட்சிக் கோலோட்சும் முதலுலக நாடுகளில் ஒன்றான ஜப்பானில், இன்றும் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தின் எச்சமான ‘ஆண் பாலுறுப்பு வழிபாடு’ தொடர்வது வியப்பையளித்தது.

ஆண்-பெண் பாலுறுப்புகளை வழிபடும் கலாச்சாரத்தை உடையக் கீழைத்தேயத் தேசங்களின் சமய நம்பிக்கையை தமிழ்ச் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாய் தங்கள் வாழ்வியல் வழிபாட்டு முறையாக்கிக் கொண்டுள்ளன. இந்தியா, நேபாளம், கம்போடியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் ஆண்-பெண் உடலுறவு பிரதிமையான ஆவுடைலிங்கம் ஆயிரமாண்டுகளாக வழிப்பாட்டுத் தளங்களிலும் வீட்டின் பூசை மாடங்களிலும் சிலையாக, படமாக வைத்து வணங்கப்படுகிறது.

பூட்டான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நேரடியான ஆண் பாலுறுப்பை குலச்சின்னக் குறியீடாக, வெற்றியின் அடையாளமாய் வழிபடுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். பண்டையக் கிரேக்க முடியாட்சிக் காலத்தில் ஆண் தலைமைத்துவத்தைத் கொண்டாடிய வழிபட்ட புராதன ‘ஆண்குறி திருவிழாவின்’ நவீன வடிவமிவை.

பூட்டானில், விதைப்பையுடன் கூடிய விந்துப் பீச்சியடிக்கும் ஆண் பாலுறுப்பு வளமையின் குறியீடு, காவல் தெய்வத்தின் குறியீடு என்னும் கதை இதன் பின்புலமாக கொள்ளப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் நேரடியான ஆண் பாலுறுப்பு வழிபாட்டை த்ருக்பா குன்லே புத்தப் பிக்கு?! (இத்துறவி 5000 பெண்களைப் புணர்ந்தவன் என்ற கதை வழக்கிலிருக்கிறது. 8000 பெண்களைப் புணர்ந்தவன் என்ற சிவனின் சிவப்புராணக் கதையும் இங்கே ஒன்றாக இணைகிறது) உருவாக்கியதாக வரலாறு சொல்கிறது. பூட்டான் மக்கள் தங்கள் வீட்டின் சுவர்களில் ஆண் பாலுறுப்புப் படங்களைத் தீட்டி அலங்கரிப்பது தீமைகளிலிருந்துக் குடும்பத்தைக் காப்பதாக நம்பப்படுகிறது (தற்போது நகரங்களில் இவ்வழக்கம் நடைமுறையிலில்லை). நாடு முழுதும் மர, உலோகச் சிற்பங்களாய், நினைவுப் பரிசு பொருட்களாய், கழுத்து டாலர்களாய், கையடக்கச் சாவிக்கொத்துகளாய் ஆண் பாலுறுப்புகள் கிடைக்கின்றன பூட்டானில். நம் நாட்டில் சிவ வழிப்பாட்டாளர்கள் கழுத்திலணியும் உருத்திராட்சக் கொட்டை ஆண் விதைப்பையின் குறியீடாக இருக்கலாம். சிவனின் கண்கள் அல்லது கண்ணீர் துளிகள் உருத்திராட்சமென்ற சிவப்புராணக் கதை பொருந்தவில்லை. சிவனின் மூன்றாவது கண்ணின் பதிலிலியாய் நெற்றியில் திலகமணியும் வழக்கமிருக்கிறது.

பதினேழாம் நூற்றாண்டு ‘எடொ’ காலத்திலிருந்து ஆண் பாலுறுப்பு வழிபாடு ஜப்பான், கவாசகியில் ‘கனமரா மட்சுரி’, கோமகியில் ‘ஹோனென் மட்சுரி’ எனக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வசந்தம் தொடங்கும் போதும், அறுவடை கொண்டாட்டமாகவும் ஆண்குறி திருவிழாவை நடத்துகிறார்கள் இவ்விரு பிரதேசங்களிலும். பிரமாண்ட ஆண் பாலுறுப்பு சிலையை ஊர்வலம் எடுத்தல், வேண்டுதலாக ஆண்குறியை காய்கறியில் செதுக்கி, மாவுகளில் உருவாக்கி காணிக்கையாகச் செலுத்துதல் போன்றவை இத்திருவிழாவின் பிரதான நிகழ்வுகள். திருவிழா சந்தையில் உணவுப்பொருட்கள், இனிப்புப் பண்டங்கள், பலூன்கள், சிற்பங்கள், பென்சில் ஸ்டான்டுகள், கீசெயின்கள், தொப்பிகள், விளையாட்டு சாமான்கள், நினைவுப்பரிசுப் பொருட்கள் அனைத்தும் ஆண் பாலுறுப்பு வடிவத்தில் விற்கப்படுகின்றன. ஜப்பானில் ஆண் பாலுறுப்பு வளமையின், தீமையை ஒழிக்கும், இல்லற மகிழ்ச்சியின் குறியீடாய் வணங்கப்படுவதாக கதையுள்ளது. இவ்விரு நாடுகளின் வழமைகளிலிருந்து சிறிது மாறுபட்டு நம் நாட்டில் 365 நாளும் வீதிக்கு வீதி பொதுவெளியில் நின்று ஜிப்பைத் திறந்து மூத்திரத்தைப் பீச்சியடித்து ஆண்குறித் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

 

ந்தியாவில் வணங்கப்படும் ஆவுடைலிங்கம் ஆண்-பெண் புணர்ச்சி குறியீட்டின், உயிர்களின் தோற்றத்தைப் போற்றும் வழிபாடாய் ஆய்வாளர்கள் ஒரு கருகோளையும், சைவச் சமயம் சிவலிங்க வழிப்பாட்டுக்கானச் சிவப்புராணக் கதைகளின் வழி வேறொரு கதையையும், இந்துமதம் கட்டமைத்தாலும் தாந்திரிக, சாக்தேய வழிபாட்டு மரபின் சக்தியின் குறியீடான யோனி அடையாளம் புறந்தள்ளப்பட்டு, மறைக்கப்பட்டு ஆண் மைய்ய சமய வழிபாட்டை முன்னெடுக்க, ஆவுடைலிங்கம் என்ற அடையாளம் வழக்கொழிக்கப்பட்டது. சிவலிங்கமாக, ஆண் மைய்ய சமயமாக, ஆண்மைய்யப் பெருந்தெய்வ வழிபாட்டுமுறையாக, ஆண் மைய்யச் சமய அரசியல் ஆயிரமாண்டுகளுக்கு முன்பே பேரரசுகளின் தோற்றத்தோடு பேரரசுகளின் அங்கீகாரத்துடன் நிறுவனமயமாக்கப் பட்டிருக்கிறது.

பெண் தெய்வ வழிபாட்டுமுறை நடைமுறையில் இருக்கும் கோயில்கள் பெண்நிலையை அங்கீகரித்து, உரிமையளித்து கொண்டாட இடமளித்திருப்பதால், மதத்திலும் பக்தியிலும் வழிபாட்டிலும் பெண்களுக்கு சமத்துவம் பேணப்படுவதாக மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. நிறுவனமயப்பட்ட இந்துமதப் தெய்வ வழிபாட்டுமுறைக்குள் முரண்படும் பெண்ணிருப்பை மட்டுப்படுத்தப் பெண்களின் பக்தி நுகர்வு வணிகத்தை ஆண்கள் கையகப்படுத்த மேற்கொண்ட உத்தியவை. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வழிபாட்டுமுறை பெண்களை முன்னிறுத்திச் செய்வதாக இருந்தாலும், ஆண் நிறுவனப்படுத்தப்பட்ட இந்துமதத்தின் தொங்குசதையாக பெண்கள் அங்கு ஆட்டுவிக்கப்படுகிறார்கள். ஆயிரமாயிரம் பெண் தெய்வங்களை உருவாக்கி வைத்திருக்கும் இந்தியச் சமூகம் பெண்ணை சக மனிதராக சக உயிரியாக தனது அடிப்படையாக ஏற்றதில்லை.

 

தொல்குடி மனித சமூகத்தில் தோன்றிய வழிபாட்டு முறைகளை மூன்று வகைப்படுத்தலாம். 1. இயற்கையை வழிபடுதல், 2. தீமைகள், அழிவிலிருந்து காத்தவற்றை வழிபடுதல் மற்றும் இயற்கை உற்பத்திக்கும் மறுஉற்பத்திக்கும் உதவும் அனைத்தையும் வழிபடுதல். 3. தீமையை, அழிவை உருவாக்கியவற்றை வழிபடுதல்.

இயற்கையை வழிபடுதல்: உலகம் இயங்கவும் ஜீவராசிகளின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் மூல காரணியான பஞ்ச பூதங்களையும் இயற்கையையும் மனிதக்குலத்துக்கு நன்மையளிக்கும் விலங்குகளையும் தாவரங்களையும் வணங்குதல், நன்றி செலுத்துதல்.

தீமைகள், அழிவிலிருந்து காத்தவற்றை வழிபடுதல் மற்றும் இயற்கை உற்பத்திக்கும் மறுஉறுப்பத்திக்கும் உதவும் அனைத்தையும் வழிபடுதல்: இயற்கை-செயற்கைப் பேரிடர் அழிவிலிருந்துக் காத்த இயற்கை வளங்களை, மனிதர்களை, உயிரினங்களை வணங்குதல் மற்றும் நோய், பகைவர்களிடமிருந்துக் காத்த மனிதர்கள், உயிரினங்களையும் வணங்குதல், நன்றி செலுத்துதல் (நடுகல் வழிபாடு இவற்றுள் அடங்கும்).

தீமையை, அழிவை உருவாக்கியவற்றை வழிபடுதல்: பாம்புக் கடித்து அதிக உயிரிழப்புகளை சந்தித்த தொல்குடிச் சமூகம் பாம்பைக் கண்டு பேரச்சம் கொண்டனர் (பாம்பை நேரடியாக பார்த்திராத சூழலில் பிறந்தவர்கள் கூட பாம்பின் வரைபடத்தை, புகைப்படத்தைக் கண்டு அஞ்சுவது குறித்து பாம்பைப் பற்றிய உயிரச்சம் மனிதகுலத்தின் அடிப்படை உள்ளுணர்வாய் மரபணுவில் பதிவாகியிருப்பதன் வெளிப்பாடாய் அறிவியலாளர்கள் விளக்கியிருக்கிறார்கள்). உயிரச்சத்தை உருவாக்கும் பாம்பை வழிபட்டால் பாம்பைச் சாந்தப்படுத்தி விசப் பாம்புகளிடமிருந்துத் தப்ப முடியுமென்ற நம்பிக்கையின் அடிப்படையில் பாம்பை வணங்கும் வழக்கம் தோன்றியது (மதுரைவீரனை தங்கள் தலைவனாக, காவல் தெய்வமாக, குலதெய்வமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வழிபடும் மரபும், மதுரைவீரனைக் கொன்ற ஆதிக்கச் சமூகத்தினர் மதுரைவீரனின் சாபத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் தங்கள் குலத்தை, சந்ததியைக் காத்துக்கொள்ள, மதுரைவீரனைச் சாந்தப்படுத்தக் குலதெய்வமாக வழிபடும் முரண்பட்ட மரபும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கன).

வெண்கலக் காலத்தில் தாய்வழிச் சமூகம் வீழ்த்தப்பட்டு தந்தைவழிச் சமூகம் தோற்றம் பெற்றிருக்கக் கூடுமென வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இயற்கை உற்பத்திச் சக்தியை, மறு உற்பத்திச் சக்தியை, ஆண் தலைமைத்துவச் சமூகம், ஆண்களின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தக் காலகட்டத்தில், சிலைவழிபாடு, உருவ வழிபாடு தோன்றியிருக்கிறது. இக்காலகட்டத்தில்தான் ஒரு ஆவுடைலிங்க சுடுமண் வடிவம், லிங்க வடிவ சின்னங்கள் சில சிந்துசமவெளி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆதாரம் காட்டுகிறார்கள். இவற்றுடன் நிறையப் பெண் உருவச் சிலைகள் கிடைத்திருக்கின்றன. அவை சிந்து சமவெளி சமூகத்தில் வணங்கப்பட்ட ‘வளமைத் தேவதைகள்’ உருவங்களாக இருக்கலாமென்று ஆய்வாளர்களின் கருத்து. சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்த, அதற்கு பிந்தைய கீழடி அகழ்வாராய்ச்சியில் இதுபோன்ற எவ்வித உருவ வழிபாட்டுச் சின்னங்களும் கிடைக்கவில்லை என்பதும் ஆய்வுக்குரியவை.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சித்தூர் குடிமல்லம் பரசுராமேஷ்வரர் கோயிலில் சிவனின் உருவத்துடன் இருக்கும் சிலை ஆண் பாலுறுப்பு வடிவில் நிற்கிறது. குடிமல்லத்திலிருக்கும் ஆண் பாலுறுப்பு வடிவம் இந்தியக் கோவிலிலிருக்கும் மிகப் பழைமையான சிவலிங்கச் சிலை.

மதுராவில் கந்தரவர் வழிபடும் புடைப்பு மரச்சிற்பத்தில் ஆண் பாலுறுப்பு வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இதன் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு என்று வரையறுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் குசானர்கள் வழிபடும் காட்சியாய் கற்பாறையில் செதுக்கிய புடைப்புச் சிற்பத்தில் மேடைமேல் நிற்கும் ஆண்குறி வடிவம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டை சார்ந்தது. பிற்காலச் சோழர் காலத்துத் தாராசுரம் கோயிலில் சிவனின் உருவத்தை உள்ளடக்கிச் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்ப லிங்கங்கள் ஆவுடை நீக்கிய ஆண்குறி வடிவங்களே.

 

ண் பாலுறுப்பு வடிவத்தை நேரடியாக வழிபடும் முறை இந்தியத் துணைக் கண்டத்திலிருந்ததை வரலாற்று ஆதாரங்கள் சுட்டுகின்றன. சமண சமயத் தீர்த்தங்கரர், திகம்பரர்கள், சைவச் சமய அகோரிகளின் அம்மணக் கோலம் ‘அதிகாரத் துறப்பு-பற்றுத் துறப்பு’ சமய ஆன்மீகக் குறியீடாக முன்வைக்கப்பட்டாலும், ஆணின் முற்றதிகாரத்தை வலியுறுத்தும் ஆண் மேலாதிக்கப் பேரரசியலின் சமூகக் குறியீடு ஆண் நிர்வாணம்.

சமண, பௌத்தச் சமயத்தை வீழ்த்திய பின் இந்தியத் துணைக்கண்டத்தை ஆண்ட மன்னர்கள், சைவச் சமயத்தை மக்கள் மதமாக மாற்ற முன்னெடுத்த சமய அரசியலில், சிவனின் ஆண் பாலுறுப்பு பிரதிமையை பொது வழிபாட்டுச் சிலையாக நிறுத்தி வழிபடத் தகாது என்பதால், மனிதக்குல தோற்றத்தின் கலை வடிவமாய் நிற்கும் ஆவுடைலிங்கம், சைவச் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கிய பேரரசர்களின் வழி சைவச் சமய எழுச்சிக்காக மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்தியா உள்ளிட்ட கீழைதேய நாடுகளில் வழிபடப்படும் ஆவுடைலிங்கங்கள் அனைத்தும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டவையாகவே கிடைக்கின்றன. கீழைத்தேய நாடுகளில் பெண்ணினத்தை வெற்றி கொண்டதன் குறியீட்டு வழிபாடாக ஆண்கள் லிங்கத்தை வழிபடுகிறார்கள். லிங்கத்தின் கோபத்துக்கு ஆளாகிவிடாமல் ஆண் மேலாதிக்கத்தின் அதிகாரக் குறியீடாய் நிற்கும் லிங்கத்தைச் சாந்தப்படுத்த, தங்கள் அடிமைத்தனத்தை ஒப்புக்கொடுக்கப் பெண்களும் வழிபடும் முறைத் தோன்றியிருக்கலாம்.

இரு இனக்குழுக்களுக்கிடையிலான, இரு சிற்றரசுகளுக்கு இடையிலான, இரு பேரரசுகளுக்கு இடையிலான போர்கள், உலக நாடுகளுக்கு இடையிலான உலகப் போர்கள், காலனியாதிக்கப் போர்கள், விடுதலைப் போர்கள், இரு மதங்களுக்கிடையிலான யுத்தங்கள், இரு சாதிகளுக்கிடையிலான சண்டைகள் அனைத்திலும் ஆதிக்கத்தை எதிர்க்கும் மக்களை அல்லது தோற்கும் தரப்பைச் சார்ந்தவர்களை ஒடுக்க, அடிமையாக்க அங்கிருக்கும் பெண்கள் மீது ஆண்குறியை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள்.

சைவத்திருமறைகள் பாடிய நாயன்மார்கள், மாற்று மதப் பெண்களை ‘கற்பழிக்க’ அருள்வாய் திருவுளமே என்று சிவனை நோக்கிப் பாடும் மதப் பயங்கரவாதத்தை, நாம், சைவ மதம் அமைதி மார்க்கத்தைப் போதிப்பதாக பக்தியைப் போதிப்பதாகப் பொய் பரப்பிக் கொண்டிருக்கிறோம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஆயிரமாயிரம் பெண்கள் ஆண்குறி ஆயுதத்தால் தாக்கப்பட்டார்கள். சுதந்திர இந்தியாவில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இன்றும் தங்கள் இனவிடுதலைக்குப் போராடும் சிறுபான்மையினப் பெண்களை இந்திய வல்லரசுப் படைகள் ஆண்குறி ஆயுதங்களால் வேட்டையாடுகிறார்கள். குஜராத் கலவரத்தில் இஸ்லாமியப் பெண்களை வன்புணர்ந்து சிதைத்தார்கள் இந்துத்துவா குண்டர்கள். தமிழகத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் வாச்சாத்தியில் பழங்குடியினப் பெண்கள் மீது சீருடைக் காவலர்களால் நிகழ்த்தப்பட்ட பாலியல் தாக்குதல் திராவிட அரசியலின் அவமானம். ஈழவிடுதலைப் போரில் சிங்கள ராணுவமும் இலங்கையில் இறங்கிய இந்திய ஐபிகேஎப் ராணுவப்படையும் ஈழத் தமிழ்ப் பெண்களை நிர்மூலமாக்க ஆண்குறியாயுத்தையும் பயன்படுத்தினார்கள்.

இந்தியாவை ஆளும் இந்துத்துவா பாசிச அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (NRC, CAA) எதிர்த்துப் போராடிய வடகிழக்கு தில்லி பகுதி இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி 50க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்தச் சங்கிக் குண்டர் படை, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆடையை அவிழ்த்து ஆண்குறியைக் காட்டி அச்சுறுத்தியதாக உண்மையறியும் குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார்கள் இஸ்லாமியப் பெண்கள்.

பெண்ணின் நிர்வாணம் அழகியலாய், ரசிக்கத்தக்கதாய், போற்றத்தக்கதாய் வியாபாரமாய் உலகில் நுகரப்பட்டாலும், ஆபாசமென ஒதுக்கினாலும், இங்கு பெண் பாலுறுப்பை ஒட்டுமொத்தச் சமூகத்தையோ தனிநபரையோ அச்சுறுத்தும் ஆயுதமாக எப்போதும் பயன்படுத்த முடியாது.

ஆனால், ஆணின் நிர்வாணம்-அம்மணம் இங்கு அச்சுறுத்தலுக்கான, பெண்கள் மீது வன்முறை செலுத்தும் ஆபத்தான ஆயுதமாக்கப்பட்டிருக்கிறது. இந்திய சமூகத்தில் ஒரு சிறுமி மட்டுமல்ல, ஒரு சிறுவன்கூட ஆணின் நிர்வாணத்தைக் கண்டால் அஞ்சுகிறார்கள். அது, வாழ்நாள் முழுதும் தாங்கள் எதிர்கொண்ட விரும்பத்தகாத அருவெறுக்கத்தக்க நிகழ்வாக மனபதிவாகி துன்புறுத்துகிறது அவர்களை.

மக்கள் தன்னைச் சுற்றி நிகழும் விளைவுகளைப் புரிந்துகொள்ள முடியாத காரணங்களால் அச்சமடைகிறார்கள். இவ்வச்ச உளவியல் மனிதசக்தியை மீறிய புறசக்தி மீதான நம்பிக்கை நோக்கி நகர்த்துகிறது மனிதக்கூட்டத்தை. இவ்வச்சத்தை மூலதனமாக்கி மக்களின் அறியாமையின் மீது கட்டப்பட்ட நிறுவனம் மதம். கடவுள் இங்கு கேள்விக்குட்படுத்த முடியாத லாபம் கொழிக்கும் முதலீடு சரக்கு. மத வியாபாரம் குவிக்கும் மூலதனம் வழி கட்டியெழுப்பப்படும் அரசுகள் பின்பு, அரசே கேள்வி கேட்க முடியாத ஒரு மதமாகிறது. கடவுளை, மதத்தைக் கேள்வி கேட்பது அரசத் துரோகம்-தேசத் துரோகம் (ராமனைக் கேள்வி கேட்பவர்கள் மட்டுமல்ல ராமன் பெயர் உச்சரிக்காதவர்களும் இன்று தேசத் துரோகிகளாக்கப்படும் அரசியலை இதன் பின்னணியில் உள்வாங்கிக்கொள்ள முடியும்). எல்லையற்ற அதிகாரமுடையவனாக ஆணை கலாச்சாரம் உருவாக்கி, பின் கடவுளாக உருவகிக்கப்பட்டு, ஆண் பாலினத்தை நிறுவனமயமான மதமாகிவிட்டது ஆணாதிக்க சமூகம். அவன் செயல் அனைத்தும் தெய்வச்செயல்கள் என்றும் ஆணின் பாலியல் வன்முறைச் செயலுக்கு பொறுப்பேற்கத் தண்டிக்கக் கோருவது குடும்பத் துரோகமாக, சமூகத் துரோகமாக, தேசத்துரோகமாக ஆக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் அதிகமாகக் கூடும் பொதுவெளிகள், பெண்கள் பள்ளி, கல்லூரி வாசல்களில் தனது ஆணுறுப்பைத் திறந்துகாட்டி தன்னால் அச்சுறுத்த முடியும் என்று இதன்வழி ஒரு ஆண் பலம் பெற்றான். இதற்கான துணிவை மதம், சமூகம், அரசு வழங்குகிறது. ஆணை பெற்று வளர்க்கும் பெண், ஆண்களுடன் இல்லறம் நடத்தும் பெண், ஆவுடைலிங்கத்தை ஆயிரமாண்டுகளாக வழிபடும் பெண், தன்னுடைய இணை ஆண் அல்லாத பிற ஆணின் அம்மணத்தை எதிர்கொண்டால் ஏன் அச்சமடைய வேண்டும்? தன்னை அவமதித்துவிட்டதாய் தன் சுயமரியாதைத் தாக்கப்பட்டதாய் ஏன் உணர்கிறார்கள்? ஆண் குறியைப் பெண்களுக்கு எதிரான ஆயுதமாக உபயோகித்த, உபயோகிக்கும் வரலாற்று அச்சத்தின் உளவியல் தாக்கமிவை.

பாலியல் பலாத்காரக் குற்றவாளியைக் காப்பாற்ற அவனது குடும்பத்தின் பெண்கள், தன் வீட்டு ஆண் நிரபராதி என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகின்றனர். உற்றார், ஊர், காவல்துறையினர், நீதித்துறையினர், அரசியல்வாதிகள், மடாதிபதிகள் வரை பாதிக்கப்பட்ட பெண்ணைத்தான் குற்றவாளியாக்குகின்றனர். சீருடைத் தரித்த அரசு காவலர்களின், இராணுவத்தினரின் பாலியல் குற்றங்கள் ‘தேசபக்தி ஆப்ரேசனாக’ பாராட்டப்பட்டு விருதுகளும் பதிவிவுயர்வும் அரசால் அளிக்கப்படுகிறது. ரேப்பிஸ்ட் காவலர்களை, இராணுவத்தினரைக் குற்றவாளி என்பவர்கள் தேசத்துரோகிகள்.

தனிநபர் வார்த்தை சண்டையில் பெண்ணைத் தாக்க அல்லது ஒருவனை நிலைகுலையச் செய்ய, பெண்ணை வன்புணரும் வசைச் சொல்லாயுதம் யதார்த்தமாக பிரயோகிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகளில் ‘Fuck You’ பொது வசை ‘Love You’ போல அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. அதற்கு இணையா இங்கு ‘Mother Fucker – ங்கோத்தா’ தாய் இழிவு வசையை மகிழ்ச்சி, துக்கம், கோபம், எதிர்ப்பை வெளிப்படுத்த தமிழ் நாக்குகள் உச்சரித்து உச்சமடைகின்றன. தாய்மொழியில் தாயைக் கொன்று புதைத்துவிட்டு பெண் விடுதலை பற்றி பேசுகிறோம். மொழி வெளி முழுதும் பெண்ணை ரேப் செய்து கிடத்தி மகிழும் பெண்ணிழிவு வக்கிர மனநோய் கொரோனா கிருமியைவிட மிக ஆபத்தான, ஒழிக்க முடியாத தொற்றாக பல்கிப் பெருகி பரவிக்கொண்டிருக்கிறது.

பொது சமூகம் மட்டுமல்ல மனிதவுரிமை பேசும், பெண்ணியம் பேசும், புரட்சி பேசும் பெண்களும் எதிர்த்தாக்குதலாகவும் அரசை எதிர்க்கவும் தாய் இழிவு வசையை, பெண்ணிழிவு வசையைப் பயன்படுத்துவது முள்ளை முள்ளால் எடுப்பது என்கிறார்கள். முள்ளை முள்குத்திய இடத்தில் எடுக்காமல் தாயின் யோனியில் எடுக்கும் வன்முறை புரட்சி அரசியலாகுமா.

 

பெண்கள் தங்கள் எதிரிகளின் கூடவே ஒரே கூரையின் கீழ் வாழ்கிறார்கள். இதனைப் பெண்களால் அடையாளம் காண முடியாமல் ஆயிரமாயிரமாண்டுகளாகத் திணிக்கப்பட்ட ஆணாதிக்க சார்பு கருத்தியலால், ஆணாதிக்கயேற்பு அடிமை உளவியலால் பெண்களின் மூளைகள் நஞ்சூட்டப்பட்டிருக்கின்றன. ஆண், உன் தகப்பன் உன் சகோதரன் உன் கணவன் உன் மகன் அவன் எப்படி எதிரியாவான் என்று மூளைச்சலவை செய்யப்பட்டிகிறார்கள்.

பெண் உனது தாய் உனது சகோதரி உனது மனைவி உனது மகள்; பெண் உன் எதிரி இல்லையென்றால் ஏன் பெண்ணின் உரிமைகளைப் பறித்து வைத்திருக்கிறாய்; பெண்ணை கொத்தடிமையாய் நடத்துகிறாய். சொந்த தகப்பன், சகோதரன் சொத்தில் பங்குத் தரவில்லை என்றால் ஆண்களுக்குள் வெட்டிக் கொன்று கொள்கிறார்கள். குறைந்தபட்சம் பெண் எப்போதாவது சொத்தில் பங்குத் தராதத் தந்தையை சகோதரனைக் கொன்ற வரலாறு உண்டா. பெண் கண்ணுக்குத் தெரிந்த பொருளாதார உரிமைகளை வன்முறையாக மட்டுமில்லை, சட்ட வழியாகக்கூட மீட்க முடியாத பாசவுணர்வுக்குக் கட்டுப்பட்ட உழைப்பு, உணர்வுச் சுரண்டலுக்குள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறாள். பிறகெங்கு அவள் கண்ணுக்குத் தெரியாத அதிகார உரிமைகளைக் கேள்வி எழுப்ப முடியும் போராடிப் பெற முடியும். எதிரிகளைப் பெற்று ஊட்டி (பாம்புக்கு பால் வார்க்கும் தெய்வ நம்பிக்கை போல) வளர்க்கும் நிறுவனமயப்படுத்தப்பட்ட கொத்தடிமைகளாகத் தொடர்கிறது பெண்களின் வாழ்வு.

குடும்பத்திற்குள் பெண் கண்ணிவெடிகள் சூழ வாழ்கிறாள். பொதுவெளிக்கு வந்தால் நாலாபுறமும் தாக்கும் ‘வார் சோனாக’ இருக்கிறது. யுத்தக்காலத்தில் சொல்லப்படும் ‘நோ பயர் ஜோன்கள்’ போல் ‘சேப் ஜோன்கள்’ இவ்வுலகின் பெண்களுக்கு பாதுகாப்பளிக்குமிடமாக குடும்பத்திற்குள்ளுமில்லை என்பது பெண்குலத்துக்கெதிரான அதி பேரரச்சுறுத்தலாக எழுந்திருக்கிறது. ஆண்மைய்ய, ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் அனைத்தும் பெண்களுக்கு எதிரானவையே. அதிலும் ஆணாதிக்க முற்றதிகாரக் குறியீடாய், ஆண் மைய சமயத்தின் குறியீடாய், பெண் ஒடுக்குமுறையின் குறியீட்டின் நேரடியான அர்த்தமுடைய சிவலிங்கத்தை வழிபடும் முறை, பெண் இருத்தலுக்கு எதிரான வழிபாட்டு முறை.

ஆணாதிக்கத்தை வழிபடத்தக்கதாய் வணங்கத்தக்கதாய் உருவாக்கிய அடிமை உளவியலிருந்து வெளியேற வேண்டியிருக்கிறது. ஆண் குறியை உலக முழுதும் பெண்களை அச்சுறுத்தும் உயிராயுதமாக்கி, பெண்களை அழித்தொழிக்கும் ‘பால் போர்’ ‘பனிப் போர்’ யுத்த அரசியலை வீழ்த்தும் நடவடிக்கையை மொழியிலிருந்து தொடங்க வேண்டுமா? மதத்திலிருந்துத் தொடங்க வேண்டுமா? அரசியலிருந்து தொடங்க வேண்டுமா? சமூகத்திலிருந்துத் தொடங்க வேண்டுமா? கருப்பையிலிருந்துத் தொடங்க வேண்டுமா?

 

“மாலதி மைத்ரி” <anangufeministpublication@gmail.com>

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *