எங்கள் பூமி எங்கள் வானம்

 எங்கள் பூமி எங்கள் வானம்

மாலதி மைத்ரி

 

ருபதாம் நூற்றாண்டு வரை, எழுதப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட கதைகள், வரலாறுகள் அனைத்தும், ஆணை மையப்படுத்தும் முதன்மைப்படுத்தும் பிரதிகள். எனவே, ஆண்மையவாத ஆணாதிக்கச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பெண் வரலாற்றை, பெண் இயக்கத்தை, பெண் எழுத்தை, பெண் அரசியலை இந்தியளவிலும் உலகளவிலும் பேச, ஆவணப்படுத்த, பெண் எழுத்துக்கானப் பதிப்பகங்களை, நிறுவனங்களை உருவாக்க வேண்டுமென்று சிலர் முயற்சிகளை மேற்கொண்டனர். எண்பதுகளில் டெல்லியில் இந்தி -ஆங்கிலம் இருமொழியிலும் பெண் எழுத்துக்கானப் பதிப்பகம் ஒன்று உருவாக்கப்பட்டது. 1984இல் ஊர்வசி புட்டாலியா, ரிது மேனன் இணைந்து உருவாக்கிய ‘Kali For Women’ பெண் எழுத்துக்கானப் பதிப்பகம் இருபது ஆண்டுகளில் 2003இல் ஊர்வசியின் ‘Zubaan Books’ பதிப்பகமாகவும் ரிதுவின் ‘Women Unlimited’ பதிப்பகமாகவும் பிரிந்து, தற்போது பெண் எழுத்துக்களை ஆங்கிலத்தில் பதிப்பித்து வருகின்றன.

பல பாடங்கள் ஏற்கனவே நாம் கற்றதுதான்; என்றாலும், சில நேரங்களின் நம் கண்கள் நம்மை ஏமாற்றிவிடுகின்றன. நம் கண்முன்னே நிற்கும் ஆவணத்தை நம்பிவிடுகிறோம்; அது பெண்ணியம் என்ற பெருஎழுத்துடன் வந்தால் கூடுதலாய். எழுத்து அரசியலின் மாற்று இயக்கப் போக்கு அடையாளத்துடன், செவ்வியல் வடிவமைப்பில் அச்சடிக்கப்பட்டு வந்தாலும், அதில் பாதி உண்மைகள் மட்டுமே கிடைக்கும், மீதி களத்தில் அனுபவத்தில் நாம் தேடிக் கண்டடைய வேண்டும்.

இந்தியத் தலைநகரில் பெண் எழுத்துக்கானப் பதிப்பகங்களை உருவாக்கிய ஆதிக்கச்சாதி பெண்களிடம் செயல்படும் நுட்பமான சாதி வர்க்க, ஆதிக்க வர்ணாசிரம உளவியலை நாம் அடையாளப்படுத்திப் பேசியாக வேண்டும். இன்றைய உலகமய முதலாளித்துவ தாராளவாதம் அளித்த நுகர்வுக் கலாச்சார சந்தையில், இந்தியாவில் இவ்வகை பெண் எழுத்துப் பதிப்பகங்கள் முதன்மைப்படுத்திப் பேசும் பெண்ணியம், பெண் விடுதலை, ஆதிக்கச் சாதி வர்க்க வர்ணாசிரம பெண்களின் நலனுக்கானவை, அச்சாதியப் பெண்களின் வளர்ச்சி மேம்பாட்டுக்கானவை என்பதை அவர்கள் பதிப்பின் வரலாறு உறுதிப்படுத்துகிறது.

ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை பெண் எழுத்துக்களைத் தொகுக்க முனைந்தாலும், அதையும் ஒரு ஆதிக்கச்சாதி மேட்டுக்குடி வர்க்க பெண் தொகுத்தளிப்பார்கள். நாம் படைப்பாளியாக மட்டுமல்ல, குறைந்தபட்சம் விளிம்புநிலை எழுத்துக்களைத் தொகுக்கும் ஒரு தொகுப்பாளர் என்ற அடையாளத்தைக்கூட தர மறுப்பவர்கள். ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலைப் பெண்களை நுட்பமாக புறக்கணிக்கும், ஒடுக்கும் அரசியலை மறைமுகத் திட்டமாக்கி செயல்படுத்தும் நிறுவனங்களிவை.

இந்த ஆங்கிலப் பதிப்பகங்கள் பதிப்பித்த பெண் எழுத்து, பெண்ணிய நூல்களில் ஐந்து சதம்கூட, ஒடுக்கப்பட்ட பெண்கள், விளிம்புநிலை பெண்கள் எழுதிய அல்லது தொகுத்த நூல்கள் அடங்காது. இப்பதிப்பகங்கள், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை பெண்களின் படைப்புகளை முற்றிலும் புறக்கணித்தால், அடையாளப்படுத்தாமல் நகர்ந்தால், முற்போக்கு நடுநிலை அரசியல் சாயம் வெளுத்துவிடும் ஆபத்தை அறிந்து, அரசியல் காய் நகர்த்துபவர்கள். மழைக்கு திண்ணையோரம் வந்து நில், பாதகமில்லை என்பதுபோல் ஒதுங்க இடம் கொடுத்திருப்பவர்கள்.

இவ்வகை பதிப்பகங்கள் பதிப்புத்துறையில் செயல்படத் தொடங்கிய காலக்கட்டத்தில்தான் தலித் பெண் எழுத்துக்கள், விளிம்புநிலை பெண் எழுத்துக்கள் புதுவீச்சில் வெளிவரத் தொடங்கின. மாநில மொழிகளில் மட்டுமே வெளியான அத்தகைய படைப்புகளை ஆங்கிலமாக்கி உலகுக்கு அளித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான தடயத்தை இப்பதிப்பகங்களில் நூற்பட்டியலில் கண்டெடுக்க முடியாது.

டெல்லி வாழ்க்கையில் மனித உரிமைப் போராட்டங்கள், கூட்டங்களில் டெல்லிப் பல்கலைக்கழக இந்தி பேராசிரியர்கள் இருவர் அறிமுகமாகினர். இவர்கள் எழுத்தாளர்கள், பொதுவுடமை சித்தாந்தவாதிகள் மற்றும் மனிதவுரிமைப் போராளிகள். டெல்லியில் நடக்கும் முக்கியமான மனிதவுரிமைப் போராட்டங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் இப்பேராசிரியர்களை பெரும்பாலும் பார்க்கலாம். போராளி அக்டாமிஷியன்ஸ். ‘அணங்கு’ பெண்ணியப் பதிப்பகச் செயல்பாடுகளை அவர்களின் காதுகளில் போட்டுவிட்டு, இந்தியில் எழுதும் பெண் எழுத்தாளர்கள், தலித் விளிம்புநிலை பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பட்டியலும், அவர்களின் நூல்களை அறிமுகப்படுத்தவும் தனித்தனியே கோரிக்கை வைத்தேன். ஒருவர் தரவில்லையென்றால் இன்னொருவர் தருவாரென்ற கணக்கில். மீண்டும் சந்திப்புகள் நிகழும் போது நினைவூட்டவும் தவறுவதில்லை.

பெண் எழுத்தாளர்கள் என்று கேட்டிருந்தால் அம்ருதா ப்ரிதம் தொடங்கி ஒரு பட்டியல் கொடுத்திருந்திருப்பார்கள். தலித், விளிம்புநிலை என்ற இரு சொற்கள் அவர்களை அவமானப்படுத்திவிட்டதாகவோ அல்லது என்னுடைய தரத்தைத் தாழ்த்திவிட்டதாகவோ கருதியிருப்பார்கள் போலும். தருகிறேன் என்றவர்கள் இரண்டு ஆண்டுகளை முழுசா முழுங்கியதுதான் மிச்சம்.

மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு பணி நிமித்தமாக காத்திருக்கும் போது ‘Zubaan’ பதிப்பகத்தின் ‘காபி டேபிள்’ நூல் ஒன்றை பார்த்தேன். இந்திய பெண் ஆளுமைகளை பற்றிய, A4ஐ விட சற்று பெரிய A3ஐ விட சற்று சிறிய அளவில் கெட்டி அட்டையுடன் வண்ணப்படங்கள் நேர்காணலுடன் அறிமுகப்படுத்தும் ‘கனமான’ ஆவணமது. தமிழிலிருந்து சிவகாமியும் வேறொருவரும் இருந்தனர். அந்த வேறொருவரின் சமூகப்பணி, களப்பணி என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி இங்கு?

 

கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து, நீதிவேண்டி பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்கள் தீஸ்தா செதல்வாட், ஆனி ராஜா, ரஜினி திலக் ஒருங்கிணைப்பில் 5.10.217இல் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக வந்து திரண்டோம். குல்தீப் நய்யர் தாமதமாக வந்து சேர்ந்தார். நடக்க முடியாத முதுமையிலும் 93 வயதில் அவர் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தது ஆச்சரியம். நம்மூர் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் போராட்டக்களம் இரும்படிக்குமிடம், ஈக்கென்ன வேலையின்னு வாளாயிருப்பார்கள். டெல்லியில் மூத்தப் படைப்பாளிகள், மூத்தப் போராளிகளை முன்னிறுத்தியும் முன்நின்றும் மக்கள் போராட்டங்களை, நீதிக்கானப் போராட்டங்களை நடத்தும் அறவுணர்வை, சுரணையிருந்தால் தமிழ் அறிவுலகம் வடக்கிலிருந்து தாராளமாகக் கற்றுக்கொள்ளலாம்.

கண்டன உரையாற்றிவிட்டு மேடையிலிருந்து இறங்கிய தேசிய தலித் பெண்கள் இயக்கத்தின் அமைப்பாளர் ரஜினி திலக்கை சங்கபாலி அறிமுகம் செய்து வைத்தார். நீட்டால் கொல்லப்பட்ட அனிதாவின் மரணத்துக்கு நீதிக்கேட்டும் நீட்டை ரத்துச் செய்யக் கோரியும் 2.9.2017இல் இதே ஜந்தர் மந்தரில் நானும் பிரேமும் முன்னெடுத்து நடத்திய போராட்டத்தில் கலந்துக்கொண்டு அறிமுகமான, ஜெஎன்யுவில் படிப்பை முடித்த மாணவி சங்கபாலி. ரஜினி திலக்கிடம் தமிழ் எழுத்தாளர், பெண்ணியப் பதிப்பாளரென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் ரஜினியின் கண்களில் ஆயிரம் சூரியகாந்திகள் விரிவதைக் கண்டேன். தானும் எழுத்தாளரென்று என்னை கட்டி அணைத்துக்கொண்டார்.

தலித், விளிம்புநிலை பெண் எழுத்தாளர்களை இணைத்து ‘தலித் பெண் படைப்பாளிகள்’ அமைப்பை நடத்தி வருவதாகவும் அடுத்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார் ரஜினி திலக். அக்டோபர் இரண்டாம் சனிக்கிழமை ரோகிணி சராயில் கவிஞர். பேராசியர் ரஜினி அனுராகி வீட்டில் நடந்த பெண் எழுத்தாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டேன். நாக்பூரிலிருந்து எழுத்தாளர் சுசிலா தாக்புரே வந்திருந்தார். எழுத்தாளரும் பேராசிரியருமான ரஜினி டிசோடியாவையும் அங்கு சந்தித்தேன். அன்று மேலும் இரண்டு ரஜினிகள் எழுத்தாளராக அறிமுகமாகி என்னைத் திகைப்பிலாழ்த்தினார்கள்.

அடுத்தக் கூட்டம் நவம்பரில் எனது வீட்டில் நடந்தது. அப்போதுதான் ‘அணங்கு’ மூலம் இந்தி தலித் பெண் படைப்புகளைத் தொகுத்து வெளியிட அனுமதிக் கேட்டேன். சிறுகதைகளை சேகரித்துத் தொகுத்துத் தருவதாக மகிழ்ச்சியுடன் ரஜினி திலக் பொறுப்பேற்றுக் கொண்டார். நவம்பரில் ஒரு சனிக்கிழமை யமுனை ஒட்டி அமைத்திருக்கும் வாஷிராபாத் நகரில் ரஜினி திலக்கைப் பார்க்கச் சென்றேன். இரண்டடுக்குகள் கொண்ட சிறிய விடு. ஒரு பெரிய அறையின் மூன்று சுவர்களையும் புத்தகத்தால் மறைத்து நூலகமாக மாற்றியிருந்தார். இந்தியா முழுவதுமிருந்து இந்தியில், ஆங்கிலத்தில் வெளிவந்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகள், சுயசரிதைகள், ஆய்வு நூல்கள், தலித் வரலாற்று ஆவணங்கள், தொகுப்புகள் அவர் சேகரிப்பிலிருந்தன. டெல்லியில் தலித் இலக்கியம், தலித் வரலாறு, தலித் ஆளுமைகளை ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு புதையலிவை.

நான் சென்றிருந்த போது ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலை ஆய்வு மாணவர் ஒருவர் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். தொலைவிலிருந்து தினமும் வந்து செல்ல முடியாத மாணவர்கள் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து வீட்டிலிருப்பதை சமைத்துச் சாப்பிட்டுக் குறிப்பெடுத்துச் செல்லவும் அனுமதியுண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் அறிமுகமான தோழருடன் திருமணமாகி, விவாகரத்துக்குப் பின் தனியே வசிப்பாதாகவும், அவரது மகள் ஜோதி ராஜஸ்தானில் வேலைப் பார்ப்பதாகவும் பேச்சுவாக்கில் சொன்னார்.

அவர் எழுதிய நூல்களைப் பார்க்க விரும்புகிறேன் என்றதும், செடியிலிருந்து பூக்களை பறித்து வைப்பது போல், நூல்கள் அடுக்கிலிருந்து அச்சிறிய மேசைக்கு வந்தன. அச்சரம் அறியாத குழந்தை மாதிரி புரட்டிக் கொண்டிருந்த என்னிடம் ஒவ்வொரு நூலைக் குறித்தும் சின்ன விளக்கம் கொடுத்தார். இந்தி மொழியில் எழுதிய, இந்தியில் மொழிபெயர்ப்பான கதைகள், கவிதைகளை இவர் தேடித் தொகுத்த ‘சமகால பாரத தலித் பெண் படைப்புகள்’ மூன்றுத் தொகுப்புகளும் மிக முக்கியமானவை (Samakalin Bharathiya Dalit Mahila Lekhan, vol.1 – 2011, vol.2 – 2015, vol.3 – 2017).

ரஜினி திலக்கின் முதல் நூல் சாவித்திரிபாய் பற்றி 1998இல் எழுதியது. சாவித்திரிபாய் ஏற்றிய ஒளியில் தன் பாதையை கண்டடைந்திருக்கிறார் ரஜினி. 2017இல் இந்தியில் வெளியிட்ட சாவித்திரிபாய் புலேவை அறிமுகப்படுத்தும் சிறிய கையேடு 10,000க்கும் மேற்பட்ட பிரதிகள் டெல்லி முழுதும் பள்ளிக் குழந்தைகளிடம் சென்றுச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கரின் சிந்தனைகள் தொகுப்பு இவரது மற்றொரு நூல்.

Padchaap (Marching Steps – 2000), Hawa Se Bechain Yuvtiyan (Restless Women – 2015) ரஜினியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள். Apni Zameen Apna Aasman (எனது பூமி எனது வானம்) சுயசரிதையின் முதல் பாகம் 2017இல் வெளிவந்திருக்கிறது. இரண்டாம் பாகம் எழுதி முடித்துவிட்டதாவும் 2018இல் அச்சாகிவிடும் என்றும் சொன்னார். தனது சிறுகதைகள் தொகுப்பும் விரைவில் வெளிவருமென்று செய்தியாக சொன்னார்.

டிசம்பர், ஜனவரி டெல்லிக் குளிரிலிருந்துத் தப்பிக்க புதுவை வந்துவிட்டேன். 2018 பிப்ரவரி டெல்லித் திரும்பியதும் தொடர்புக்கொண்ட ரஜினி தீதி, உத்திரபிரதேசம் ஷரங்பூரில் ‘பீம் சேனா’ தலைவர் சந்திரசேகர் ஆசாத்தின் போராட்டம், அதையொட்டிய கைதுகள், தலித் கிராமங்கள் சூறையாடலென்று அப்பகுதியே போர்களமாக இருப்பதாகவும், இரண்டுமுறை பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துத் திரும்பியதையும், பீகார் தலித்கள் மீது தாக்கூர்கள் நடத்திய வன்முறையில் இருவர் கொல்லப்பட்டதாகவும், உண்மைக் கண்டறியும் குழுவாக சென்று வந்ததாகவும் சொன்னார்.

“ஹரியானா, பானிப்பட்டு அருகிலுள்ள கிராமத்தில் 11 வயது பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொல்ல நாம் குழுவாக செல்வோம் இணைந்துக்கொள் மாலதி” என்றார். ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலை பேரா. ஹேமலதா மகேஷ்வர், டெல்லி பல்கலைப் பேரா. ரஜத்ராணி மீனா, ரஜினி தீதி, நான் அடங்கிய நான்கு பெண்கள் ஒரு வாடகை கார் பிடித்துக்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தோம். பிரதமர், ஹரியானா முதல்வர், மத்திய, மாநில பெண்கள் ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதிகிடைப்பதை உறுதிப்படுத்தக் கோரியும் பெண்களை பாதுகாக்கத் தவறும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மனு அனுப்பி வைக்கப்பட்டது.

பிப்ரவரி இரண்டாம் வாரம் பேராசிரியர் எழுத்தாளர் ரஜினி டிசோடியா வீட்டில் தலித் பெண் படைப்பாளிகள் கூட்டம் நடந்தது. அப்போது நாளை மாலை வீட்டுக்கு வந்து தமிழில் வரவேண்டிய கதைகளின் நகல்களைத் தருவதாக சொன்னார் ரஜினி.

“இங்கு எழுதும் தலித் பெண்களின் படைப்புகள் ஏன் இன்னும் ஆங்கிலத்தில் வரவில்லை, அதற்கான முயற்சிகள் ஏன் எடுக்கப்படவில்லை, உங்களையெல்லாம் விபத்தா சந்தித்துத்தான் அறிந்துகொள்ள முடியுமென்றால் இந்திய அறிவுசூழல், பதிப்பு சூழலின் சாதிய மேலாதிக்கத்தின் பாகுபாட்டிற்கு இதுவே சாட்சி” என்றேன்.

“இங்கு ஊடகம், பதிப்புத்துறை சாதிய புரையோடிய அமைப்புகள் என்பது அறிந்ததுதானே மாலதி. ஊர்வசி புட்டாலியா நல்ல தோழிதான். நிறுவனம் நடத்தும் எல்லாரும் பிராமணவாதிகள் அல்லது பிராமண சிந்தாந்தத்தின் அடிமைகள். நம்மையெல்லாம் உலகுக்கு காட்டாமல் இருக்க காரியம் செய்பவர்கள்” என்றவுடன், “இப்பவே பேசுங்கள் ஒரு தொகுப்பை ஆங்கிலத்தில் கொண்டு வர, என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்” என்றேன்.

என்னெதிரில்தான் தொலைபேசியில் ஊர்வசி புட்டாலியாவுடன் பேசினார். பேசிவிட்டு சொன்னார்: “என்னைத் தொகுத்துத் தரச்சொல்கிறார். கண்டிப்பாக கொண்டு வருகிறாராம். அப்படியே இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாளரைக் கண்டுப்பிடித்து நான் மொழிபெயர்த்தும் தரவேண்டும்” என்கிறார் என்றதும், நான் சத்தமா சிரிக்க, அவரும் சேர்ந்துகொண்டார்.

மறுக்காத மாதிரியும் ஆனது, ஏன் வெளியிடவில்லையென்று கேட்டால் நீங்கள் மொழிபெயர்த்துக் கொடுத்திருந்தால் போட்டிருப்பேன் என்று தட்டிக்கழிக்க வசதியான ஒரு பதில்.

மறுநாள் ‘அணங்கு’க்காகத் தேர்வு செய்த ஒன்பது இந்தி சிறுகதைகளுடன் என் இல்லம் வந்தார். இன்னும் சில கதைகள் கொண்டுவந்து தருவதாக உறுதியுமளித்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். மணவாழ்வின் தோல்வி, முன்னெடுத்தச் சமூகப் பணிகள், போராட்டங்கள், குடும்பப் பின்னணி என்று அனைத்தையும் என்னிடம் சொந்தத் தங்கையிடம் தணித்துக்கொள்வதுபோல் சரசரவென மழை மாதிரிக் கொட்டித் தீர்த்தார். திடீரென்று உருவான முதுகுவலிக்கு ஒரு மாதமாய் பிசியோதெரபி சென்றுவந்து கொண்டிருந்தார். “பயணத்தைக் குறைத்துக்கொண்டு உடல்நலனில் கவனம் செலுத்துங்க தீதி” என்றேன். சர்க்கரை நோய்க்கு மருந்தெடுப்பதையும் சர்க்கரை கட்டுப்பாட்டிலிருப்பதாய் கைவிட்டிருந்தார். “சர்க்கரை வியாதி நமக்குள் வாழும் பல் பிடுங்கிய பாம்பு. சிறிது சிறிதா விசத்தை நம் ரத்தத்தில் கசியவிட்டு உள்ளுறுப்புகளை நாசமாக்கிவிடும். விசத்தைத் முறிக்க சிறிய அளவில் தொடர்ந்து மருந்தெடுப்பது அவசியம். தீதி மருந்தெடுக்காமல் விடக்கூடாது” என்று கண்டிப்புடன் சொன்னேன்.

“இனி கவனமா இருக்கேன் மாலதி, நாம் முன்பே சந்திக்காமல் போனோம். உன் நட்பு கிடைத்தது எவ்வளவு சந்தோசமாக இருக்கு” என்று சொல்லிவிட்டு சென்றது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

நீதிக்கு எதிராக தன்னிச்சையாக களத்தில் உருவாகும் போராளிகள் சமரசமற்று இறுதிவரை கொள்கைக்காக நிற்பார்கள் என்பதற்கு ரஜினி திலக் வாழ்க்கையும் உதாரணம். ஐடிஐயில் தொழிற்கல்வி படிக்கும் பதின்பருவத்தில் மாணவிகளின் உரிமைக்காக அமைப்புக் கட்டி போராட்டங்களை நடத்தி தன்னை ஒரு தலைவராக வளர்த்துக்கொண்டவர். பிறகு முற்போக்கு மாணவர் அமைப்புடன் இணைத்து மாணவர் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். முற்போக்கு மாணவர் அமைப்பில் நிலவிய தலித் விரோத போக்கு சகிக்காமல் கருத்து முரண்பாட்டில் அப்போதே வெளியேறியிருக்கிறார். தன்னை ஒரு அம்பேத்கர்வாதியாக அடையாளம் கண்டப்பின் மறுக்கப்படும் தலித், ஆதிவாசி விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக, சமூகநீதிக்காக, விடுதலைக்காக, சமூகம், அரசு நிர்வாகம், அரசியல் கட்சிகள், கல்வித்துறை, நீதித்துறை, ஊடகத்துறையென எல்லா இடங்களிலும் களத்தில் முன்நின்று போராடிய சமகாலப் போராளி.

தலித்களின் மறுக்கப்படும் உரிமைக்காகக் குரல்கொடுக்க மறுக்கும் வெகுசன ஊடகங்களின் சாதியாதிக்க மேலாண்மையை முறியடிக்கவும், வெகுசன ஊடகங்களில் புறக்கணிக்கப்படும் தலித் ஊடகவியலாளர்கள் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவும், ‘மாற்று தலித் ஊடக’ (Alternative Dalit Media Centre) மையத்தை டெல்லியில் தோற்றுவித்து, தலித் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து, வெற்றிகரமான நிறுவனமாகக் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார். சமகால தலித்களின் சமூக, பொருளாதார, அதிகார, அரசியல், விடுதலை போராட்ட வரலாற்றில் ஆய்வாளர்கள் இதனை மைல்கல்லாக அடையாளப்படுத்துகிறார்கள். இதன்பிறகே தலித்துகளின் பல சுதந்திரமான மாற்று ஊடக மையங்கள் இந்தியாவில் பிற மாநில மொழிகளிலும் தோன்றின.

அரசு ஊழியாராக இருந்து விருப்ப ஓய்வடைந்து தொண்டு நிறுவனம் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே மூடப்பட்டது. அவரது சொற்ப ஓய்வூதியத்தில்தான் தலித் மக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாய் களத்தில் நின்று போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார் ரஜினி. சமூக விடுதலைக் களத்தில், தலித் அரசியல் அதிகாரம், அறிவு, பண்பாடு, பெண்ணியமென அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஆரத்தின் மையமாகவும் வழிநடத்தும் தலைமையாகவும் தன்னையே சக்கரமாக்கி வட மாநிலங்கள் முழுதும் அம்பேத்கர் வழியில் கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் என வாழ்நாளில் 35 ஆண்டுகளையும் முழுதாய் ஒப்படைத்தவர்.

ரஜினி திலக்கின் தங்கை கவிஞர் அனிதா பார்தி. ‘ஜன் சம்மன் பார்டி’ கட்சி தலைவரும், தலித் – ஆதிவாசிகள் விடுதலைப் போராளியுமான அசோக் பார்தி இவரது தம்பி. ஏழை தையற் தொழிலாளியின் மூத்த மகளாக பிறந்து தனது தம்பித் தங்கைகளுக்கு மட்டுமில்லை தலித் அரசியல், படைப்பியல் இயக்கத்திற்கு ஒரு முன்மாதிரியை வழிகாட்டுதலை சமகாலத்தில் உருவாக்கிக் காட்டியவர். எந்தவித வலுவான சமூக, பொருளாதார, அரசியல், பின்னணியுமில்லாமல் தனது தனிப்பட்டப் பிரச்சினைகளைகளால் துயரங்களால் சோர்ந்து முடங்கிவிடாமல் சமூகத்துக்காக தன்னை அர்பணித்தப் பேராத்மா ரஜினி திலக்.

தொடர்ந்து ரஜினியுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன். மார்ச் மூன்றாவது வாரம் ஒரு மதியம் பேசும்போது ஒரு ஆய்வு மாணவர் போனை எடுத்தார். “தீதி முதுகு வலியால் படுத்திருக்கிறார், போனைத் தருகிறேன்” என்றார். வலிமிகுந்த உடைந்த குரலில், “முதுகு ரொம்ப வலிக்கிறது மாலதி, ரெஸ்ட் எடுக்கிறேன்” என்றார்.

“ரஜினி தீதி இவ்வளவு வலியில் வீட்டில் ஓய்வெடுப்பது வேண்டாம்; நாளை உடனே மருத்துவ பரிசோதனைக்குப் போங்கள். நாளை வந்து வீட்டில் பார்க்கிறேன்” என்றேன்.

“நாளை மருத்துவமனைக்கு போய்விட்டு வந்து பேசுகிறேன் மாலதி” என்று போனைத் துண்டித்தார்.

மறுநாள் மதியம் போன் போகவில்லை, போன் அணைந்திருந்தது, மாலையும் இரவும் அணைந்திருந்தது. மறுநாளும் போன் அணைந்திருந்தது. பேராசிரியர் ரஜினி டிசோடியாவைத் தொடர்புகொண்டேன். அவருக்கும் தெரியவில்லை. வீட்டுக்கு போனால் வீட்டில் பூட்டு. பேராசிரியர் ரஜினி அனுராகியைத் தொடர்புகொண்டேன். “தீதிக்கு முதுகுவலி அதிகமாகி இடுப்புக் கீழ் செயலிழந்துவிட்டது, செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மூன்றுநாள் முன் ஆய்வு மாணவர் சேர்த்திருக்கிறார், நேற்று முதுகுத்தண்டில் அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறார்கள், ஐசியுவில் இருப்பதால் யாரும் போய் பார்க்க முடியாது” என்றார்.

“காலை நான் போகிறேன் அனுராகி. மூடப்பட்ட அறைக்கு வெளியே நமது மூச்சுக்காற்றும் காலடி சத்தமும் நாம் அவருடன் இருக்கிறோம் என்று சொல்லும். நாம்தாம் அவரைப் பார்த்துக்கொள்ளனும்” என்றேன்.

இரவு போன் செய்து, “தீதி நிலமை ரொம்ப மோசம்; கோமாவுக்கு போய்விட்டார்” என்று அழுதார் அனுராகி.

நள்ளிரவில் ரஜினி தீதி நம்மைவிட்டு பிரிந்தார் என்ற செய்தி இரவை பனிபோல் உறைய வைத்தது. மார்ச் 30 விடியற்காலையில் நினைவுத் திரும்பாமலேயே, அறுபது வயதில் ரஜினி திலக் நம் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை எழுத்தை நிறுத்திக்கொண்டார். திடீர் சூறாவளியில் தலித் பெண் இலக்கியத்திற்கு நிழல் தந்த ஒற்றை பெருமரம் சாய்ந்து வெறுமை சூழ்ந்தது. இனி அதன் விதைகள் துளிர்க்க காலமெடுக்கும்.

உயிரற்ற உடல் முன்னறையில் கிடத்தப்பட்டிருந்தது. மகள், சகோதரி, சகோதரர்கள், நெருங்கிய உறவுகள், நெருங்கிய தோழிகளென ஒரு ஐம்பது பேர் மட்டுமே வந்திருந்தது அதிர்ச்சியளித்தது. “டெல்லியில் இறந்தவர் உடலை நாள் முழுதும் வீட்டில் வைக்கும் கலாச்சாரமில்லை. சில மணி நேரங்களில் அவரவர் குடும்பச் சடங்கை முடித்து அன்றே எடுத்துச் சென்றுவிடுவோம், அஞ்சலி செலுத்துவோர் நேரே சுடுகாட்டுக்கு வந்துவிடுவார்கள்” என்று அனுராகி சொன்னார்.

யமுனைக்கரையில் அமைந்த டெல்லியின் மிகப்பெரிய காஷ்மீரி கேட் சுடுகாட்டுக்கு பௌத்தக் கொடி போர்த்தி எடுத்துச்சென்றோம். (ராஜேந்திர சச்சார், குல்தீப் நய்யர் இறந்த போதும் லோதி கார்டன் சுடுக்காட்டில்தான் தோழர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினோம்)

தோழர்கள் பலர் அங்கு காத்திருந்தார்கள். சடங்கு மேடையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கில் தோழர்கள் வரத்தொடங்கினார்கள். டி. ராஜா, பிருந்தா காரத் உட்பட ஏழெட்டு பெயர் தெரியாத எம்பிகள், டெல்லி எம்எல்ஏகள், ஊர்வசி புட்டாலியா உள்ளிட்ட பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், தலைவர்கள், பேராசிரியர்கள், பௌத்தப் பிக்குகள், மாணவர்களென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி விடைகொடுத்தனர்.

ரஜினி திலக் தீதி எனக்கு அறிமுகமாகிய ஆறுமாத காலத்தில், திடீரென்று தோன்றி மறையும் விடிவெள்ளி போல், உற்றுப் பார்க்கத் துவங்கும்போதே மறைந்து பேரதிர்ச்சியை கொடுத்தார். எனது பூமி எனது வானம் என்றவர் பூமியை தனது எழுத்துகளால் ஆளவிட்டுவிட்டு வானையாள கிளம்பிவிட்டார்.

எவ்வளவு பெரிய ஆளுமையாக பிரபலமாக இருந்தாலும் பொருளாதார பலமில்லாவிட்டால் யாரும் யாருடனுமில்லை என்ற நிஜம் சுட்டது. கடைசி காலத்தில் ஆத்மார்த்த உறவுகளின் துணையில்லாமல், உடல்நிலையில் கவனமின்றி, நோய்மை முற்றி தனிமையில் மரணிக்கும் அவலம் மிகக் கொடியது. ரஜினி திலக் மாதக்கணக்கில் கொடுந்துயருக்கு ஆளாகவில்லை என்பது மட்டுமே ஒரு ஆறுதல்.

ரஜினி திலக்குக்கு டெல்லி பல்கலைக்கழக இந்தித் துறையில்தான் முதல் அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. டெல்லி பிரஸ் கிளப்பில், இந்தியா இன்டர்நேசனல் அரங்கில், எல்ஐசி ஊழியர் சங்கத்தில் எனத் தொடர்ந்து டெல்லி முழுதும் ஏழெட்டு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ரஜினி திலக்கின் ‘பெஸ்ட் ஆப் கர்வாசௌத்’ சிறுகதைத் தொகுப்பை ‘தலித் பெண் படைப்பாளிகள்’ அமைப்பு முன்னெடுத்து வெளியிட்டு ரஜினி திலக்கின் கனவுக்கு ஒரு மலர் சூட்டியது. அவரது சுயசரிதை இரண்டாம் பாகம் அச்சில் இருப்பதாய் ரஜினியின் தம்பி அசோக் பார்தி இந்த மார்ச் முதலாம் ஆண்டு அஞ்சலிக் கூட்டத்தின் சந்திப்பின் போது சொன்னார்.

 

ந்தியச் சமூகங்களில் பெண் தலைவர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள், பொதுவெளியில் பிரபலமாக சாதி, வர்க்கம், குடும்பப் பின்னணி முதலியன பிரதானப் பங்காற்றுகின்றன. இப்பின்னணியிலிருந்து வரும் ஒட்டுச்செடிகள், மக்கள் பணியாற்றாமலேயே ஆணாதிக்கக் கட்டமைப்புகள் உருவாக்கிய நிறுவனங்கள், இயக்கங்கள், கட்சிகளின் தோளில் ஏறி அரசியல்வாதிகளாய், போராளியாய், படைப்பாளிகளாய் வரலாற்றில் உச்ச வெளிச்சமடைந்துவிடுகிறார்கள். மக்களோடு மக்களாய் தனித்து உருவாகி இந்த ஆணாதிக்க கட்டமைப்பின் புறக்கணிப்பு, அவமதிப்பென அனைத்து வலிகளையும் துயரங்களையும் துரோகங்களையும் சுமந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உரிமைக்காக இயக்கம் கட்டும் களப்போராளிகள், படைப்பாளிகள் வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்படுகிறார்கள்.

‘தனியே ஓடினால் வேகமாய் இலக்கை அடையலாம். சேர்ந்து ஓடினால் லட்சியத்தை அடையலாம்’ என்பது ஆப்பிரிக்க முதுமொழி. தனிமனித இலக்கை அடைய பிழைப்புவாத அரசியல் செய்வோருக்கு மத்தியில், சமூக விடுதலையென்னும் லட்சியத்தை அடைய பயணித்தவர் ரஜினி திலக்.

பெண்களுக்கென இயங்கும் மிகப்பெரிய பதிப்பாளர்கள், மனிதவுரிமை பேசும் – விடுதலையரசியல் பேசும் பொதுவுடமைத் தத்துவவாதிகள் கடைப்பிடிக்கும் நுட்பமான சாதிய அரசியலால், வர்ணாசிரம அரசியலால் புறக்கணிக்கப்பட்ட மிகப்பெரிய ஆளுமையை களத்தில்தான் கண்டெடுத்தேன். பாசிச அரசியலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட மாற்று இயக்க மக்கள் அரசியலுக்குள் செயல்படும் நுட்பமான சாதிவெறியை இனியும் பேசாமல் மௌனிப்பதும் காலம் கடத்துவதும் சாதிய பாசிசத்துக்கு துணைபோகும் அரசியல்.

“கம்யூனிஸ்ட் கணவரின் மனமும் செயலும் பொது மனிதர்களைவிடவும் வேறுபட்டதாக இருக்கவில்லை. ஒவ்வொரு வகையிலும் அடக்குமுறையும் மற்றும் ஆக்கிரமிப்பும்தான் இருந்தது. எந்த வகையிலும் சமத்துவத்தை வழங்க விரும்புவதில்லை. மாறாக, ஒரு அறிவார்ந்த நண்பராக இருந்த இவர் வார்த்தைகளாலும் குதர்க்க சொற்களின் அம்புகளாலும் தத்துவம் என்ற போர்வையில் என்னை நிராயுதபாணியாக்கவே முயன்றார். கணவர் ஒரு பழைமைவாதியாக இருந்திருந்தால், நீ என்னுடையவள் என்று சொல்லியிருப்பார். என்னைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்ய வேண்டாம். அவருடைய தத்துவமும் புரிதலும் அவ்வளவுதான் என்பதால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும். அவருக்கு புரிந்துகொள்ளுவதற்கென எல்லைகள் இருக்கின்றன. ஆனால், முற்போக்கான ஒரு தோழர் தான் ஒரு அறிஞர் என்று சொல்லிக்கொள்வார். உன்னைவிட எனக்கு அதிகம் தெரியும். நான் ஒரு கொள்கையில் உறுதியுடன் இருக்கிறேன். நீ எனக்கும் எனது கொள்கையின் மேலும் பிடிப்புடன் இருப்பது அவசியம். இல்லையெனில் என் தண்டவாளம் தனியாகிவிடும். பிரிந்து இரு. பகலுக்கு இரவு போலவும் இரவுக்குப் பகல் போலவும் இரு என்று சொல்லச் சொல்ல, களைத்துப் போய்விட்டேன். உடைந்து பரவிக் கொண்டிருந்தேன்.

அவர் அடிக்கடி பெண்ணியம் ஒரு மாயை, அம்பேத்கரியம் ஒரு மோசடி என்று கூறுவார். புத்தம் ஒரு தப்பித்தல் கொள்கை. இவை மூன்றுமே புரட்சிக்குத் தடையாக இருப்பவை. தனிமனித சுதந்திரத்தையும் பெண்ணின் இருப்பையும் நசுக்குவது புரட்சிக்கு ஆபத்தானது இல்லையா? தத்துவத்தின் பெயரில் ஒளி கூட்டுவது புரட்சிக்கு ஆபத்தானது இல்லையா? குடும்பங்களை நிலப்பிரபுத்துவ பின்னணியில் வைத்திருப்பது புரட்சிக்கு ஆபத்தானது இல்லையா?” – ரஜினி திலக் (பெஸ்ட் ஆப் கர்வாசௌத், தமிழில்: நாணற்காடன்)

மாலதி மைத்ரி <anangufeministpublication@gmail.com>

Amrutha

Related post