சாவித்திரி சரித்திரம்: முத்துமீனாட்சியான கதை
கால சுப்ரமணியம்
தமிழில் நாவல் என்ற நவீன இலக்கிய வடிவம், தமிழ்ச் சிறுகதை வடிவம் தோன்றும் முன்னரே, பலவித எடுத்துரைப்புகளுடன் பிரசுரம் பெற ஆரம்பித்துவிட்டது. தமிழில் நவீன நாவல் தோன்றி, சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பே நவீன சிறுகதை தோன்ற ஆரம்பிக்கிறது. வீரமாமுனிவர் (1680 – 1747) படைத்த ‘பரமார்த்தகுரு கதை’ (அச்சில் 1728, சென்னை கல்விச் சங்கம் 1822), முத்துக்குட்டிப் புலவர் சொன்ன ‘வசன சம்பிரதாயக் கதை’ 1775 (அச்சில்1895), சேஷய்யங்கார் எழுதிய கவிதை நாவலான ‘ஆதியூர் அவதானி’ (1875) நவீனத் தமிழ் நாவலின் முன்வடிவங்கள் எனலாம்.
‘அரேபிய இரவுக் கதை’, ‘கதாசரித் சாகரம்’, ‘விக்கிரமாதித்தன் கதை’, ‘மதனகாமரேஜன் கதை’, ‘டான்குவிக்ஸாட்’, கிறிஸ்தவ சமய நீதிக் கதைகள், சிறார் கல்விக்கான தேவதைக் கதைகள் போன்றவற்றின் கதைப் பாணியில், வேறு சில தமிழ் நெடுங்கதைகளும், புதியமுறையில் கதைசொல்லும் சில முயற்சிகளாகத்தான் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுவதற்கு முன்பு தோன்றியுள்ளன. ஆங்கில நவ இலக்கியக் கதை வடிவைக் கற்றிருந்தாலும், மேல் கூறிய வாய்மொழிக் காவியக் கதை மரபைத்தான் வேதநாயகம் பிள்ளை, ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நவீனமான வளர்த்தெடுத்துப் படைக்கிறார்.
19ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில் தோன்றிய தமிழ் நாவல் வரலாற்றின் ஆரம்பக் கால கட்டம், வாய்மொழிச் சொல்கதை மரபையும் மேலைநாட்டு நவீன இலக்கியத் தாக்கத்தையும் சமூக சீர்திருத்த விமரிசன பிரச்சார நோக்கத்தையும் கருக்கள மையமாகக்கொண்டு வளர்ந்தது.
தமிழின் முதலாவது நாவலாசிரியராகக் கருதப்படும் (1879) வேதநாயகத்துக்கும் இரண்டாவது மூன்றாவது நாவலாசிரியர்களாக வரிசைப்படுத்தப்படும் ராஜமையர் (1896), மாதவையா (1898) போன்றோரின் நாவல்களுக்கும் இடையிலும் தொடர்ந்தும், வாய்மொழிக் கதை மரபின் வழி வந்த வேறு சில நவீனங்களையும் காண முடிகிறது. வளர வளர வெகுஜன நாவல் தன்மை கூடுகிறது.
தி.கோ.நாராயணசாமி பிள்ளையின் ‘சித்திரங்காட்டி சத்தியம் நிறுத்திய கதை’ (1879), ‘விநோத சரித்திரம்’ (1886), ‘மாமி மருகியர் வாழ்க்கை’ (1892); முகமது காசிம் சித்திலெப்பை மரக்காயரின் ‘அசன்பே சரித்திரம்’ (1885), புஷ்பரதச் செட்டியின் ‘அகல்யாபாய்’ (1885), வேதநாயகத்தின் மற்றொரு நாவல் ‘சுகுண சுந்தரி சரித்திரம்’ (1887), சி.ஈ. சுப்பிரமணிய அய்யரின் ‘கற்பின் விஜயம் அல்லது சத்தியாம்பாள் கதை’ (1888), இலங்கை எஸ்.இன்னாசித் தம்பியின் ‘ஊசேன் பாலந்தை கதை’ (1891), சு.வை. குருசாமி சர்மாவின் குறிப்பிடத்தக்க காதல் கதையான ‘பிரேம கலாவத்யம்’ (1893), தி. சரவணமுத்துப் பிள்ளையின் முன்னோடிச் சரித்திர நாவலான ‘மோகனாங்கி’ (1895), ராஜாத்தி அம்மாள் என்ற பெண் எழுத்தாளரின் ‘ஞானப்பிரகாசம்’ (1897), ச. ராமசாமி ஐயங்காரின் ‘கமலினி’ (1897), தி.எல். துரைசாமி முதலியாரின் ‘குணபூசணி’ (1897), சி. அருமைநாயகத்தின் கிறிஸ்தவ நாவலான ‘மீதி இருள்’ (1898), கோவிந்தசாமி ராஜாவின் தழுவல் நாவலான ‘மரகதவல்லி’ (1898), ஏ.கே. கோபாலச்சாரியின் ‘ஜீவரத்னம்’ (1899), பண்டித நடேச சாஸ்திரியின் தமிழின் நான்காவது நாவலாகக் கருதப்படும் ‘தீன தயாளு’ (1900), ஸ்ரீநிவாச ஐயங்காரின் ‘சிவாஜி ரெளஸினாரா’ (1903), எஸ்.கூத்தலிங்கம் பிள்ளையின் ‘மங்கம்மாள்’ (1903), குழந்தைசாமி பிள்ளையின் ‘சத்தியவல்லி’ (1910), தமிழின் ஐந்தாவது நாவலாசிரியராகக் கருதப்படும் திரிசிரபுரம் பொன்னுசாமி பிள்ளையின் ‘கமலாட்சி’ (1910)… இப்படியாக இன்னும் சில…
வரலாற்றில் எழும் சமூகக் கலாச்சார எதிர்ப்புகள், சமய மரபையே கலாச்சார மரபாகக் கொண்ட சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டவர்களும் மனிதாபிமானிகளும், பகுத்தறிவைப் பிரதானமாக்கி சமயத்தை எதிர்த்து நாஸ்திகராகி விடுவதும், அந்நிய மதத்தையும் பண்பாட்டையும் தழுவிக் கொள்ளுவதும், தம் மதத்தைப் பற்றிய பரிசோதனையில் இறங்கித் தம்மைத்தாமே சீர்திருத்தி மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதுமாக வெளிப்படும். ஐரோப்பாவில் அரச எதேச்சாதிகாரத்தையும் கிறிஸ்தவக் கொடுங்கோன்மையையும் எதிர்த்து இவ்வாறான இயக்கங்கள் எழுந்தது போலவே, இந்தியாவிலும் தமிழகத்திலும் இப்படி, கடவுள் மறுப்பு இயக்கமும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதமாற்றமும் ஆரிய சமாஜ, பிரம்ம சமாஜ இந்து மலர்ச்சியும் ஏற்பட்டன. இன்று இவற்றை அடக்கி ஒடுக்கி பழைமையை நிலைநாட்ட நினைக்கும் அடிப்படைவாதங்களாக இந்துத்துவாவும் தேசீயவாதமும் இஸ்லாமியப் பயங்கரவாதமும் எழுந்துள்ளன. இந்த வரலாற்று நியதிகளுக்கும் விஞ்ஞானபூர்வ நடவடிக்கைகளுக்கும் மேலை வரலாற்றிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் பல உதாரணங்களைக் காட்டலாம். அடக்கப்பட்டவர்கள் விழிப்புப் பெற்று, சமூக அநீதியை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்பி, விடுதலை பெற்ற மனித ஜீவன்களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாய நிலையை எதிர்கொண்டே தீரவேண்டும்.
சிப்பாய்க் கலகம் (1857) தொடங்கி, தேச விடுதலைப் போராட்டம் வலிமை அடைந்த (1920) காலத்துக்கு இடையில் இப்படிப்பட்ட எதிர்ப்புகள் தென்னகத்தில் நிகழ ஆரம்பித்துவிட்டன. இச்சமயத்தில் எழுந்த நாவல் இலக்கியம் இவற்றைப் பிரதிபலித்தன, முன்னேற்றத்தைத் தூண்டிவிட்டன. இவ்வகையில் தீர்மானமாகச் செயல்பட்ட எழுத்தாளர்களில் தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதி, அ. மாதவையா போன்றோர் மட்டுமே முதன்மை இடத்தில் வைத்துக் கொண்டாடத்தக்கவர்களாக விளங்குகிறார்கள்.
இந்தியாவின் முதல் நாவலாகப் போற்றப்படும் பங்கிம் சந்திரரின் ‘துர்க்கேச நந்தினி’ (வங்காளி/1865) போலவே, தமிழின் முதல் நாவலாகப் போற்றப்படும் வேதநாயகம் பிள்ளை (1826 – 1889)யின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1879), உண்மையில் 1857ஆம் ஆண்டிலேயே எழுதப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
பெண்களின் நிலையைச் சிறப்பாகப் படைத்துக் காட்டிய தென்னிந்திய நாவல்களாக ஒ.சந்துமேனன் (1847–1899) எழுதிய ‘இந்துலேகா’ (மலையாளம்/1889), குலவாடி வெங்கடராவ் (1844–1913) எழுதிய ‘இந்திராபாய் அல்லது சட்தர்ம விஜயவு’ (கன்னடம்/1899), அ. மாதவையாவின் ‘முத்துமீனாட்சி’ (ஒரு பிராமணப்பெண் சுவ சரிதை) (1904) ஆகிய மூன்றையும்தான் விமர்சகர்கள் முன்மொழிகிறார்கள்.
இவற்றில் இந்திய அளவில் சிறப்பு வாய்ந்ததாக ‘முத்துமீனாட்சி’ விளங்குகிறது என்பதும், அது ‘சாவித்திரி சரித்திரம்’ என்ற பெயரில் 1892ஆம் ஆண்டிலேயே வெளிவந்துவிட்டது என்பதும், அதனால் தமிழ் நாவல் வரலாற்றில் சிறப்புற்ற இரண்டாவது நாவலாகப் போற்றப்பட வேண்டியது என்பதும், தமிழின் முதல் சமூக நாவலும் சமூக சீர்திருத்த நாவலும் இதுதான் என்பதும், பிரச்சாரத் தொனி மிகுந்து இலக்கிய அழகியல் குறைவுபட்டுள்ளது என்று மாதவையாவின் புனைகதைகளுக்குக் கூறப்படும் வழக்கமான பல்லவி விமர்சனம் இந்நாவலுக்கு எடுபடாது என்பதையும்தான் இங்கு கவனத்தில் உறைக்கும்படி எடுத்துக்கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கன்னி கழியாத விதவைப் பெண்களின் (பால்ய விவாகம்) விதவா விவாகத்தை ஏற்றுப் போற்றிய அன்றைய சீர்திருத்தவாதிகள் மத்தியில், முத்துமீனாட்சி போன்ற கன்னி கழிந்த விதவைகளின் விவாகம் பற்றி தைரியமாக மாதவையா பேசுகிறார். ஆண்தான் பெண்ணுக்கு சரிசமத்துவத்தை (பெயர் சொல்லிக் கணவனை அழைத்தல், கல்வி கற்பித்தல், குடும்பக் காரியங்களில் சமபங்கு வகித்தல், சம்பாத்தியம் முதலியவை) கற்பிப்பதாக, மாதவையா படைக்கும் ஆணாதிக்க மனப்பான்மைப் போக்கை பெண்ணிய ஆய்வாளர்கள் விமர்சித்தாலும், அன்றைய நடைமுறைச் சாத்தியத்தில் இதுவே புரட்சிகரமானது. இல்லாவிட்டால், நடைமுறையில் சாத்தியமற்ற அழகியல் குறைபாடுடைய கற்பனாபூர்வ லட்சியவாதச் சித்தரிப்பு என்று ஆகிவிடும். மாதவையாவின் சீர்திருத்தச் சித்தரிப்பைப் பிரச்சார இலக்கியமாக ஒதுக்குபவர்கள் கூறுவதைக் கவனத்தில் கொண்டால்தான் இந்த அவலம் புலப்படும்.
1890இல் வந்த இரண்டாம் பதிப்பில்தான் ‘இந்துலேகா’ நாவல் வெளித்தெரியவந்ததாம். நாயர் பெண்களின் நிலையைச் சித்தரித்த இந்த நாவலின் மூலப்பிரதி எடிட் செய்யப்பட்டே வெளிவந்ததாம். (குறிப்பாக அதன் கடைசி இருபதாவது அத்தியாயம் மிகவும் எடிட் செய்யப்பட்டுள்ளதாம். 1950க்குப் பிறகே இந்த நாவல் பொதுவெளியில் பிரபலமானது. 1913 வாக்கில் இது தமிழில் ‘விவேகபோதினி’ பத்திரிகையில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளதை ஆவணக் காப்பகத்தில் நான் காண முடிந்தது. அது புத்தகமாக வில்லை. கா. அப்பாதுரையும் இளம்பாரதியும் செய்த இரு மொழிபெயர்ப்புகள் இப்போது தமிழில் கிடைக்கிறது.
‘இந்திராபாய்’ எழுதிய குலவாடி வெங்கடராவ், சென்னையில் படித்தவர். போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர். பஞ்ச கொளட பிராமணப் பிரிவில் ஒன்றான சரஸ்வதி பிரமண சாதியைச் சேந்தவர். முதல் கன்னட சமூக நாவல் இது.
வாய்மொழிக் கதை மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஜேன் ஆஸ்டின், சார்லோட்டி பிராண்டி, ஆலிவர் கோல்டுஸ்மித், தாக்கரே, டிக்கன்ஸ் போன்றோரின் ஆங்கில நவீன நாவல்களின் தாக்கத்தோடு தமிழ்ச் சமூக வாழ்வையும் சமூக சீர்திருத்தத்தையும் கருக்களங்களாகக் கொண்டு ராஜமையர், மாதவையா ஆகியோரோடு பலரும் தோன்றுகிறார்கள். சரவணமுத்துப்பிள்ளை, குருசாமி சர்மா போன்றோர் தவிர இவர்களுள் பெரும்பாலானோர் அவ்வளவாக இலக்கியத் தகுதி இல்லாததால் மறக்கப்படுகிறார்கள். இவர்களை அன்றைய நாவல் இலக்கிய வடிவத்தின் காவியத்தன்மை கருதி, நவரச நாவலாசிரியர்களாகவே போற்றவேண்டும். ஜனரஞ்சகத் தன்மைதான் உலகத்து நாவலின் ஆரம்ப வடிவில் அதிகமிருந்தது என்பதுதான் இலக்கிய வரலாறு. இவர்களோடே வளர்ச்சிபெற்ற சுவாரஸ்யமானதும் மர்மங்கள் நிறைந்ததுமான (பின்பு வெகுஜன இலக்கியம் என வளர்ந்த) கதைப் போக்கு, கானன்டாயில் பாணி துப்பறியும் நாவல்கள், ரெயினால்ட்ஸ் பாணி சாகச ரொமான்ஸ்கள், ஹோரஸ் வால்போல் பாணி கோதிக் நாவல்கள் பாணியைப் பின்பற்றி, முன்பே பண்டித நடேச சாஸ்திரி, பின்பு தி.ம. பொன்னுசாமி பிள்ளை போன்றவர்கள் தோன்றுகிறார்கள். இந்தக் காலத்து நாவல்களில் சமூக சீர்திருத்தமும் இலக்கிய அழகியலும் சுவாரஸ்யமும் கலந்துதான் காண முடியும். இவற்றில் எது தூக்கலாக இருக்கிறதோ அதை வைத்துத்தான் நாம் அந்த நாவலை மதிப்பிடுகிறோம், மதிக்கிறோம். இந்தச் சுவாரஸ்யத்தையும் ருசிகரத்தையும் முதன்மையாகக் கொண்டு ஏராளமான தழுவல் நாவல்கள் தமிழில் இறக்குமதியாயின. ஜே.ஆர். ரங்கராஜூ, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் தொடங்கி, பின்பு கல்கி பாணியாக பத்திரிகைத் தொடர்கதைகளாக மாறி, சுஜாதா வரை இந்த வெகுஜன இலக்கிய மரபு வளர்ந்தது. பிரச்சார இலக்கியங்களை ஜனரஞ்சக இலக்கிய மரபில்தான் சேர்ப்பார்கள். இன்றைய நாவல்களோ தீவிர இலக்கிய மரபைச் சார்ந்ததாய் வளர்ந்து, அன்றைய காவிய, நவரச, வெகுஜன, ஜனரஞ்சக பாணிகளிலிருந்து எவ்வளவோ முன்னேறி, நுணுக்கமான சித்தரிப்புகளுக்கு நகர்ந்துவிட்டன.
மாயூரம் முன்சீப் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை (1826 – 1889)யிடம் வாய்மொழிக் கதைப் போக்கையும் நாட்டுப்புற, சுதேசித் தன்மையையும் அதிகம் உணரலாம். அவர் கிறிஸ்தவராக (என்றாலும் சர்வ சமய சமரசக் கீர்த்தனை பாடியவராக), வேளாளராக (ஒரு முதலியாரைக் கதைத் தலைவனாகக் கொண்டு), அரசாங்கத்தை அனுசரித்த உத்தியோகஸ்தராக (பெண் கல்வி போன்ற சமூக முன்னேற்றச் சீர்திருத்தங்களை ஏற்றுப் போற்றுபவராகவும்), தமிழ் மரபு இலக்கியத்தில் புலமையுள்ளவராக (ஆனாலும் நவீன வடிவைக் கண்டடைந்தவராக) மேலைக் கலாச்சாரத்தைக் கீழைக் கலாச்சாரத்தோடு இணைப்பவராக விளங்கியுள்ளார். அநுபவம் மிக்க அவரது முதிய காலத்தில்தான் அவரது முக்கியப் படைப்புகள் வெளிவந்திருக்கலாம்.
பி.ஆர். ராஜமையர் (1872–1898) தம் இருபது வயதில் இரண்டு ஆண்டுகளே ஆசிரியராக இருந்த ‘பிரபுத்த பாரதா’ (Prabudha Bharata) என்ற அத்வைத வேதாந்த பத்திரிகையில் ‘True greatness, or Vasudeva Sastri’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு தமிழ் நாவலை 1896 – 98 வாக்கில் எழுதி வந்திருக்கிறார். அவரது இறப்பினால் அது முடிவு பெறாமல் போனது. அதை லண்டனில் உள்ள Allen and Unwin என்ற பிரபலமான பதிப்பகம் 1925ஆம் ஆண்டில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளது. பிரபுத்த பாரதத்தில் ராஜமையர் எழுதிய அனைத்தையும் Rambles in Vedanta. Madras: Thompson & Co., 1905 என்ற தலைப்பில் தொகுப்பாக அவரது மறைவுக்கும் பின்பு கொண்டுவந்தார்கள். அதில் இந்த ஆங்கில நாவல் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் பதிப்பும் சென்னையில் வெளிவந்தது.
இந்த நாவலுக்கு முன்பே ‘விவேகசிந்தாமணி’ மாசிகையில் தொடர்கதையாக (மாதவையாவின் ‘சாவித்திரி சரித்திரம்’ 1892இல் வந்து, பாதியில் நிறுத்தப்பட்ட பின் சில மாதங்கள் கழித்து) ராஜமையர் ‘கமலாம்பாள் சரித்திரம்’ நாவலை 1893இல் தொடராக எழுதி முடித்தார். பின்பு அது 1896ஆம் ஆண்டில் நூலாகப் பிரசுரமானது. அதன் சிறப்பான படைப்பாக்கம் கருதி அதைத் தமிழ் நாவல் வரலாற்றில் இரண்டாவது முக்கிய நாவலாகப் போற்றுகிறார்கள். எனவே, முன்னோடி நாவலாசிரியர்கள் வரிசையில் இரண்டாவதாக இடம்பெற்றுவிட்டார் ராஜமையர். அதற்குப்பின் வந்த நாவல்களில் சிறப்பானதாக மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்’ (1898-99, இரு பாகங்கள்) அமைந்ததால் அந்த நாவலுக்கும் நாவலாசிரியருக்கும் தமிழில் மூன்றாம் இடத்தைத் தந்தார்கள். ‘பத்மாவதி சரித்திரம்’ பிரசுரத்துக்குப் பின்பு 1903இல் ‘முத்துமீனாட்சி’ வெளிவந்ததன் தொடர்ச்சியாகத்தான் பத்திரிகைகளிலும் தனித்தும் மாதவையா எழுதிய படைப்புகள் நூலுருப் பெறத் தொடங்குகின்றன என்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம். ‘முத்துமீனாட்சி’ நாவலின் இரண்டாம் பதிப்பு இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பின் 1924இல் வெளிவந்த பின்பே அது பரவலாக வாசகர் கவனத்தைப் பெற்றது என்பதையும் தனித்துக் குறிப்பிடவேண்டும்.
ராஜமையரோ மிக இளமையிலேயே, இருபது வயது அளவிலேயே, மிகச் சிறப்பாகப் படைத்து இருபத்தாறு வயதளவில் மறைந்தவர். வேதாந்தத்தில் அவருக்குள்ள புலமை கருதி விவேகானந்தரால் ‘பிரபுத்த பாரதம்’ பத்திரிகையின் ஆசிரியராக்கப்பட்டவர். பிராமண குலத்தவர். அவரது குறையாக வந்த ஆங்கில நாவலில் உள்ள தத்துவவிசாரத்தைவிட ‘கமலாம்பாள் சரித்திர’த்தில் அந்த விசாரம் (நாவலின் பின்பகுதியைவிட முன்பகுதியில்) இலக்கிய அழகியலோடு பின்னிப் பிணைந்துவிட்டது என்பார்கள். தம் நாவலைப் பற்றி இவ்வாறுதான் அவர் கூறியுள்ளார்:
இச் சரித்திரம் எழுதுவதில் எனக்கு கதையே முக்கிய கருத்தன்று. மற்றென்னையோ வெனில், பகவானது மாயா விபூதியாம் பெருங்கடலினுள் ஓர் அலையுள், ஓர் நுரையுள், ஓர் அணுவை யானெடுத்து, அதனுள் என் புல்லறிவுக் கெட்டிய மட்டும் புகுந்து பார்த்து, தூண் பிளந்து தோன்றிய அவனே அங்கும் இருக்கக் கண்டு கைகூப்பி ஆடிப் பாடி, அரற்றி, உலகெல்லாம் துள்ளித் துதைத்த இளஞ்சேயொப்ப யாரும் ஆடிப் பாடி ஓடவேண்டுமென்பதே யன்றி வேறன்று. இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மூலமான ஓர் இன்ப நிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்கம்’ (கமலாம்பாள் சரித்திரம் முன்னுரை).
1893 பிப்ரவரி ‘விவேகசிந்தாமணி’ மாசிகையில் இந்த நாவல் தொடராக வெளிவரலாயிற்று. முதல் இரண்டு இதழ்களில் இந் நாவல் ‘அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்’ என்ற தலைப்பிலும், மூன்றாவது இதழில் இருந்து ‘ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் தலைப்பிலும் தொடர்ந்து வெளிவந்து 1895 ஜனவரியில் நிறைவுபெற்றது. விவேக சிந்தாமணியில் இக்கதை வெளிவந்தபோது பி.ஆர். சிவசுப்பிரமணிய ஐயர் என்ற பெயரிலேயே எழுதினார். தாக்கரே, கோல்டுஸ்மித் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் தாக்கத்தை அவரிடம் காண முடியும்.
முன்னோடித் தமிழ் நாவலாசிரியர்களில் அ. மாதவையா (1871 – 1925) மூன்றாம் இடத்தில் வைக்கப்பட்டதற்கு, முதலில் தோன்றிய சிறப்பான தமிழ் நாவல்களில் மூன்றாம் இடம் அளிக்கப்பட்டுள்ள ‘பத்மாவதி சரித்திரம்’ என்ற நாவலின் ஆசிரியர் என்பதே காரணம். இவரும் இருபது வயதிலேயே எழுத ஆரம்பித்தவர். அத்தோடு அவர் ஒரு சீர்திருத்தவாதியாகவும் பிரச்சாரம் மிகுந்த இலக்கியத்தைப் படைத்த முன்னோடியாகவும் சாதி உயர்வு தாழ்வையும் அதன் சடங்கு சம்பிரதாயங்களை ஏற்காதவராயும் மனித வாழ்வில் மதத்தின் குறுக்கீட்டை மறுக்கும் பகுத்தறிவுவாதியாகவும் முற்போக்குவாதியாகவும் கருதப்பட்டவர். இவற்றையெல்லாம் மீறிய அவரது இலக்கிய சாதனைகளின் முழுமையும் மேதமையும் வெளித்தெரியவர விடாமலேயே அடக்கி வாசிக்கப்படுகிறார்.
அவரே நவீன தமிழ்ச் சிறுகதைகளை முதலில் எழுதியவர். ஆனால், அவை ஆங்கிலத்தில் வெளிவந்து பின்பே தமிழில் தெரிய வந்தன. ‘குசிகா’ (Kusika) என்ற (கௌசிகா என்பதன் மரூ) புனைப்பெயரின் கீழ் ஆங்கிலத்தில் ‘ஹிந்து’ பத்திரிகையில் வாரம் ஒரு சிறுகதையாக 27 சிறுகதைகள், 1910இல் தோன்றின. வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், இக் கதைகளை 2 பாகமாகத் தொகுத்து ‘ஹிந்து’ பத்திரிகையே வெளியிட்டது. தமது சொந்தப் பதிப்பகத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1924இல், தாம் இறப்பதற்கு முந்திய ஆண்டில், ஆங்கிலத்தில் இரு தொகுதிகளையும் மறுபிரசுரமாக வெளியிட்டு, இவைகளில் 22 கதைகளைத் தமிழாக்கம் செய்து, ‘குசிகர் குட்டிக் கதைகள்’ என்ற தலைப்புடன் 3 பாகங்களாக மாதவையா வெளியிட்டார். சமூகச் சீர்திருத்த நோக்குடன் இக்கதைகளைப் படைத்ததாக மாதவையா முன்னுரையில் குறிப் பிட்டுள்ளார். இதில் இடம் பெற்ற ‘திரெளபதி கனவு’, குழந்தை மணத்தையும் கைம்பெண் கொடுமையையும், ‘அவனாலான பரிகாரம்’ என்ற கதை வரதட்சணைக் கொடுமையையும் பேசியுள்ளன. மாதவையா, தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘பஞ்சாமிர்தம்’ இதழிலும் ‘கண்ணன் பெருந்தூது’ முதலிய நான்கு சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘தமிழ்நேசன்’ இதழில் ஒரு சிறுகதையும் குழந்தைக்கான கதைகளும் எழுதியுள்ளார்.
வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1879) என்ற அற்புத நவிற்சி நாவலுக்குப் பின் இரண்டாவதாக எழுதப்பட்ட நவீன சமூக நாவலைத் தமிழில் முதன் முதலில் எழுதியவர் மாதவையாதான். அது ‘சாவித்திரி சரித்திரம்’ (1892) என்ற பெயரில், ‘விவேகசிந்தாமணி’ மாசிகைப் பத்திரிகையில், தமிழின் முதல் பத்திரிகைத் தொடர்கதையாக, இரண்டாம் இதழ் (ஜூன் 1892) தொடங்கி, ஏழாம் இதழ் (நவம்பர் 1892) வரை ஆறு அதிகாரங்கள் (ஒருமாதம் மட்டும் இடைவிட்டு) வெளிவந்து, பத்திரிகை ஆசிரியர் குழுவாலோ வாசகர்களாலோ சாதிப்பற்றாளர்களாலோ அதன் சீர்திருத்தக் கருத்துகளைத் தாங்க முடியாமல் போய் பாதியில் நிறுத்தப்பட்டது. அது முழுமை பெற்று நூலாகவும் வெளிவந்திருந்தால் தமிழின் இரண்டாவது நாவல், தமிழின் முதல் சமூக நாவலாக இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும்.
அவருக்கு ‘பத்மாவதி சரித்திரம்’ (1898 – 99) மூலம் பிரபலம் கிடைத்த பின்பே, இந்த ‘சாவித்திரி சரித்திரம்’ நாவலை, பத்து ஆண்டுகள் கழித்து, பெயர்களையும் இடங்களையும் மட்டும் மாற்றம் செய்தும் சில வரிகளைக் கூர்மைப்படுத்தியும் ‘முத்துமீனாட்சி’ (1903) என்ற பெயரில் முழுமையான புத்தகமாக வெளியிடுகிறார். ஆனால், அதை அவர் பத்திரிகைத் தொடராக வந்த அப்போதே முழுமையாக எழுதி முடித்து வைத்திருந்திருக்கலாம் என்றே படுகிறது.
அவர் பெயர் தமிழ் இலக்கிய உலகத்தில் ஒதுக்கப்பட்டு அல்லது ஓரங்கட்டப்பட்டு, மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு விட்ட இக்காலத்தில், அவருடைய முக்கியப் படைப்புக்களை அவருடைய முதன்மையையும் மேதைமையையும் வெளிப்படுத்த வாசகர் முன் வைக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது சில நூல்கள் மீண்டும் பிரசுரிக்கப்பட உள்ளன. அதில் முக்கியமானது இந்த ‘முத்து மீனாட்சி’. அந்த முந்திய மறக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களுடன், அவையேதான் பின்பு மிகச் சில மாற்றங்களுடன் வெளிவந்திருப்பது அறிந்தும் கூறியது கூறலாகப் போகும் என்று தெரிந்தும், வரலாற்று நோக்கம் கருதி, மீண்டும் முன்னவற்றையும் சேர்த்து இங்கு பிரசுரம் செய்யப் பெறுகிறது.
அப்பாவையா (அநந்தநாராயணய்யர்), மாதவையா (1871-1925), திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த பெருங்குளம் என்ற ஊரில் 1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். தமிழகத்தில் வாழும் அய்யர், அய்யங்கார் என்று அழைக்கப்படும் தமிழ்ப் பிராமணர்களைப் போலவோ கன்னடப் பிராமணர்களைப் போலவோ இல்லாமல், அவர் தெலுங்கு பிராமணர் குலத்தில் பிறந்து, பிற்காலத்தில் தமிழகத்தில் குடியேறிய வடமர் வகுப்பைச் சார்ந்தவர். கௌசிக கோத்ரம் (குசிகர் என்ற புனைபெயருக்கு இது காரணம். பெருங்குளம் அப்பாவையர் மாதவையர், பி.ஏ. என்பதன் சுருக்கமாக Pamba என்ற புனைபெயரை ஆங்கிலத்தில் பயன்படுத்தினார்). பள்ளிப் படிப்பை திருநெல்வேலியில் முடித்துவிட்டு, மேல் படிப்புக்காக சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் சேர்ந்து, பி.ஏ. தேர்வில் சிறப்புடன் தேறினார். பிறகு எம்.ஏ. பட்டத்திற்கு படித்தவாறே, கிறிஸ்துவக் கல்லூரியில் ஓர் ஆண்டு உபாத்தியாயராக வேலை பார்த்தார். எம்.ஏ. பட்டப் படிப்பு முடியும் முன், அரசாங்க உப்புசுங்கத் துறைக்கான அரசுப் போட்டித் தேர்வில் முதன்மையாகத் தேறி, அந்த இலாகாவில் இன்ஸ்பெக்டராக வேலையில் அமர்ந்தார்.
வேலை நிமித்தமாக மாதவையா உப்புக் களங்களுள்ள சிற்றூர்களிலும் கானகங்கள் சூழ்ந்த கிராமங்களிலும் வாழ நேர்ந்தது. இவ்விடங்களில் ஓய்வு நேரத்தில், கெரசின் விளக்கின் ஒளியில், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல படைப்புகளை மாதவையா எழுதியுள்ளார். நாவல் தவிர சிறுகதை, நாடகம், கட்டுரை, கவிதை (மரபுக் கவிதையும் கும்மிப் பாட்டும்), மொழிபெயர்ப்பு, வரலாறு, இலக்கிய விமர்சனம், குழந்தை இலக்கியம் போன்ற பல இலக்கிய வடிவங்களை மாதவையா கையாண்டுள்ளார். ஒவ்வொன்றையும் சிறப்பாகவே தேர்ந்தெடுத்துப் படைத்துள்ளார். மாதவையாவின் படைப்புகளின் விரிவான களங்களும் திறமையும் பிரமிப்பை அளிக்கக் கூடியவை. அக்காலத்தில் பல பத்திரிகைகளில் அவரது எழுத்துக்கள் வெளிவந்துள்ளன.
முதலில் ‘தமிழர் நேசன்’ என்ற பத்திரிகையில் ஓய்வு நேரத்தில் பத்திராதிபராக வேலை செய்த மாதவையா, விருப்ப ஓய்வு பெற்று, பின் சொந்தமாக ஒரு பிரசுராலயம் ஏற்படுத்தி, ‘பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையையும் வெளியிட்டார். இந்தப் பத்திரிகையை வளர்ப்பதில் அவர் கடைசி நாட்களில் கவனமாக இருந்தார். 1925 அக்டோபர் 22ஆம் தேதியன்று தாம் அங்கத்தினராக இருந்த சென்னை பல்கலைக்கழகப் பேரவையில், பட்டப்படிப்பில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்பதைக் கூட்டத்தில் விளக்கிப் பேசிய பின் அமர்ந்தவரின் உயிர் அப்படியே பிரிந்துவிட்டது.
மிக இளம் வயதிலிருந்தே இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடுடைய மாதவையா, அதைப் படிப்பதில் மட்டுமல்லாமல், எழுதுவதிலும் ஆர்வம் கொண்டார். அவருடைய முதல் படைப்பு, சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் நாடகம் பற்றிய அறிமுக மதிப்புரை. 1892இல் ‘விவேக சிந்தாமணி’ எனும் பத்திரிகையில் நான்கு இதழ்களில் இது வெளிவந்தது. அதே வருடம், அதே பத்திரிகையில், அதே இதழ்களில் அவரது ‘சாவித்திரி சரித்திரம்’ என்ற தொடர் நாவலும் வெளிவரலாயிற்று. கட்டுரைகளுக்கு அ.மாதவையர் என்ற இயற்பெயரையும் தொடர்கதைக்கு ‘சாவித்திரி’ என்ற புனைபெயரையும் பயன்படுத்தினார். ஆனால், ஆறு இதழ்களில் வந்த ஆறு அதிகாரங்களுக்குப் பின் ‘சாவித்திரி சரித்திரம்’ நிறுத்தப்பட்டுவிட்டது. ‘விவேக சிந்தாமணி’ மாசிகையின் நிர்வாகக் குழுவில் ஒருவராகவோ அல்லது அதன் ஆசிரியரின் நெருங்கிய நண்பராகவோ இருந்ததால்தான், அப்பத்திரிகை தொடங்கப்பட்டதும் இரண்டாம் இதழில் இருந்து மாதவையா அதற்குக் கட்டுரைகளையும் தொடர்கதையையும் எழுதியுள்ளார். கதையில் தொனித்த தீவிரமான சீர்திருத்தக் கருத்துகளுக்காக அது ஆசிரியராலோ நிர்வாகக் குழுவாலோ வாசகர்களின் எதிர்ப்பாலோ சொல்லாமல் கொள்ளாமல் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, தொடர்ந்து மாதவையா அப்பத்திரிகையில் வேறு எதுவும் எழுதவில்லை. ‘சாவித்திரி சரித்திரம்’ வெளியான பிறகுதான், தமிழில் முதலில் வெளிவந்த சிறந்த இரண்டாவது நாவல் என்று நிர்ணயிக்கப்பட்ட நூலான ராஜமையர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’, அதே ‘விவேக சிந்தாமணி’ பத்திரிகையில் தொடராக ஆரம்பித்தது. நின்று போன “சாவித்திரி சரித்திரம்’ 1903ல் சில மாற்றங்களுடன் ‘முத்து மீனாக்ஷி’ என்ற பெயரில் நூலாகப் பிரசுரிக்கப்பட்டது. 1898இல் ‘பத்மாவதி சரித்திரம்’ முதல் பாகமும் அதற்கு அடுத்த வருடம் இரண்டாம் பாகமும் வெளிவந்தன. அப்பொழுது ஆசிரியரின் வயது 26 – 27தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
‘முத்து மீனாட்சி’யின் முதல் பதிப்பு பார்க்கக் கிடைக்காத நிலையில், திருத்திய இரண்டாம் பதிப்பைத்தான் இன்று நமக்குக் காணக் கிடைக்கிறது. இதைத் தனது ஆசிரியர் அச்சுப் பிரசுராலயம் புஸ்தகசாலை வழியாக 1924இல் கொண்டுவந்தார்.
‘செந்தமிழ் நாவல்கள்: 3. முத்து மீனாக்ஷி (ஒரு பிராமணப்பெண் சுவசரிதை)’ என்ற தலைப்பில் இது வெளிவந்திருக்கிறது. தலைப்பின் கீழ் இச்சிந்தியல் வெண்பாச் செய்யுள் இடம் பெற்றுள்ளது.
தொன்முறை மாறித் துலங்கும் புதுமுறை;
நன்முறை ஒன்றினே ஞாலம் அழுங்காமே
பன்முறையின் ஆளும் பரன்.
இதன் கீழே,
இது ‘பத்மாவதி சரித்திரம்’, ‘விஜயமார்த்தாண்டம்’, ‘குசிகர் குட்டிக்கதைகள்’, ‘உதயலன்’, ‘திருமலை சேதுபதி’, ‘சித்தார்த்தன்’, ‘புத்தசரிதை’, ‘பால ராமாயணம்’, ‘பாலவிநோதக் கதைகள்’, ‘பொதுதர்ம சத்மஞ்சரி’, ‘புதுமாதிரிக் கல்யாணப்பாட்டு’, ‘ஆசாரசீர்திருத்தம்’, ‘பாரிஸ்டர் பஞ்சநதம்’, ‘தில்லைக் கோவிந்தன்’ முதலிய பல பிரபலமான நூல்களின் ஆசிரியரும் ‘பஞ்சாமிர்தம்’ பத்திராதிபருமான மாதவையர் இயற்றியது
என்று பிரதாபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்நூல் வெளிவரும்போது அவரது இவ்வளவு படைப்புகள் அச்சில் பிரசுரம் பெற்றிருக்கின்றன என்பதை அறிகிறோம்.
எனவே 1903இல் முதல் பதிப்பாகவும் 1924இல் திருத்திய இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது அ.மாதவையாவின் ‘முத்துமீனாட்சி’ என்ற ‘சாவித்திரி சரித்திரம்’ என்ற சமூக நாவல். இந்த 1924ஆம் ஆண்டுப் பதிப்புக்குப் பின்பே இந்த நாவல் பரவலான வாசகக் கவனத்தைப் பெற்றிருக்கிறது. எனவே, சாவித்திரி சரித்திரத்தின் நினைவு மறந்தே போனதில் ஆச்சரியமில்லை.
மாதவையாவின் பெயர் பற்றி ஒரு பிரச்சனையைக் கிளப்பினார் ஆய்வாளர் வேதசகாயகுமார். அவருடைய முற்கால நூல்களில் ‘மாதவையர்’ என்றும் பிற்கால எழுத்துகள் சிலவற்றில் மட்டும் ‘மாதவையா’ என்றும் காணப்படுகிறது. இப்பெயர் பிரச்சனை குறித்து மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணன் விளக்கம் கொடுத்திருக்கிறார்:
….பரம்பரையாக ‘ஐயர்’ என்ற பெயர்முடிவுள்ள வம்சத்தில் பிறந்து, தமது தாய் மொழியாகிய தமிழில் அளவில்லாத வாஞ்சையும் பெருமையும் கொண்டிருந்தும், திருநெல்வேலியில் குடியேறிய ஒரு தெலுங்கக் குடும்பத்தாரின் சமீப நட்பால், இளம் பிராயத்திலேயே தமது பெயரை ‘மாதவையா’ என்று மாற்றிக் கொண்டுவிட்டார். அவர் எழுதிய பல தமிழ் புத்தகங்கள், கட்டுரைகளின் தலைப்பில் ‘மாதவையர்’ என்ற பெயரே காணப்படினும், எல்லா சமயங்களையும் வகுப்புகளையும் சார்ந்த அநேக நண்பர்களாலும் அழைக்கப்பட்டபடி, ‘மாதவையா’ என்ற பெயரைக் கொண்டே அவரை இங்கு குறிப்பிடுகிறேன். ( ‘ஆசிரியர் சரிதை’, பத்மாவதி சரித்திரம், தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி பதிப்பு.)
எனவே, மாதவையாவின் மேதைமையான காரியங்களுக்கு மதிப்பளித்துப் பெருமைப்படுத்தும் வகையில் அவரை இப்பெயரிலேயே அழைப்பதுதான் நமது கடமை.
நெல்லையிலும் கிறிஸ்தவக் கல்லூரியிலும் அவருக்கு புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களோடும் மிசனரி சார்ந்தவர்களோடும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் மூலம் தமது ஆங்கில நூல்களை ஆங்கில தேசத்தில் வெளியிடவும் பரவலாக்கவும் முயன்றதுண்டு. அவரது ‘கிளாரிந்தா’, ‘சத்தியானந்தன்’ ஆகிய ஆங்கில நாவல்களில் வரும் கிறிஸ்தவ மதச் சார்பை வைத்து அவரை கிறிஸ்தவ மத மாற்றத்தை ஆதரிப்பவராகச் சிலர் குறை கூறுவதும் உண்டு. ஆனால், தமது ஆரம்ப காலப்படைப்புகளில் தமது இனத்தையும் தேசத்தையும் முன்னேற்றுவதற்குத் தேவையானவற்றை, ஆங்கிலக் கலாச்சாரத்திலிருந்தும் கிறிஸ்தவ சீர்திருத்தக் கருத்துகளிலிருந்தும் நாஸ்திக இயக்கத்திலிருந்தும் பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பிற்காலப் படைப்புகளில் மேலைக் கலாச்சாரத்தையும் மிசனரிகளின் செயல்பாட்டையும் நாஸ்திகவாதத்தையும் விமர்சிக்கும் போக்கைப் பார்க்க முடியும்.
மாதவையா அரசாங்க வேலையில் இருந்ததால் தேசீய இயக்கங்களில் நேரிடையாகக் கலந்துகொள்ளவில்லையே தவிர அப்போதே தேசீயக் கீதங்களை எழுதி வெளியிட்டும் உள்ளார். ஒரு தேசீய கீதப் போட்டியில் அவரது பாட்டுக்கு முதல் பரிசும் பாரதி பாட்டுக்கு அடுத்த பரிசும் கிடைத்ததையும் இங்கு நினைவு கொள்ளலாம் (ஆனால், பாரதி பாடல் இன்றும் வாழ்கிறது, மாதவையா பாடல் மறக்கப்பட்டுவிட்டது என்பது வேறொரு விஷயம்).
அரசாங்க வேலையிலிருந்து கொண்டு அரசை எதிர்கொள்வதில் உள்ள சிக்கலைத் தீர்க்கவே, விரைவில் உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வை பெற்று தன் இஷ்டம் போல் எழுதவும் பத்திரிகை நடத்தவும் வழிவகுத்துக் கொண்டார். (மாதவையாவின் ‘தில்லைக்கோவிந்தன்’ ஆங்கில நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட அவரது மூத்த சகோதரன் வழிப் பேரனான வே. நாராயணன், அதன் பதினாறாவது அத்தியாயத்தை (‘எனது ராஜீயக் கொள்கைகளைக் குறித்தது’) மட்டும் மொழிபெயர்க்காமல் விட்டிருக்கிறார். ஏதும் அரசை ஆதரித்து எழுதியிருப்பாரோ என்று அதை ஆங்கில நூலில் தேடிப் படித்தேன். அப்படியில்லை. அதில் பிற்காலத்தில் அவர் மாறுபட்ட மத விஷயங்களே இருந்தன.)
அவரது குழந்தைகள் முற்போக்கோடு வளர்க்கப்பட்டார்கள். எல்லோரும் எழுத்தாளர்களாகவும் வளர்ந்தார்கள். ‘காசினி’ என்ற பெயரில் பல்வேறு விஷயதானங்களைப் பத்திரிகைக்கு அளித்துப் பெண் எழுத்தாளர்களுள் சிறப்பிடம் பெற்ற வி(ஸ்வநாதன்) விசாலாட்சி அம்மாள் இதில் முக்கியமானவர் (இவரது ‘மூன்றில் எது?’ என்ற பஞ்சாமிர்தம் இதழ் சிறுகதை, புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டது என்று நினைவு. இவரை முதல் பெண் நாவலாசிரியரான பண்டிதை விசாலாட்சி அம்மாளோடு குழப்பிக்கொள்வார்கள். சக்தி கோவிந்தனின் ‘மங்கை’ இதழுக்கு ஆசிரியராக இருந்த விசாலாட்சியும்கூட இவராக இருக்கலாம். உறுதியாக எனக்குத் தெரியவில்லை). கானுயிர் ஆர்வலர் மா.கிருஷ்ணன் என்ற மகன் பிரபலமானவர். (அறிவியல் தமிழை வளர்த்த சகோதரர் மகனான பெ.நா. அப்புஸ்வாமியை அனைவரும் அறிவோம்.) மாதவையாவின் குடும்பத்தினர் சேர்ந்து எழுதிய கதைகளை, பி.ஸ்ரீ.யைப் பதிப்பாசிரியராகக் கொண்டிருந்த தினமணி பிரசுராலயம் ‘முன்னிலா’ என்ற தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.
சாவித்திரி என்ற புராண காலப் பெயரைத் தம் நாவலுக்கு முதலில் குறியீடாகச் சூட்டியிருக்கிறார் மாதவையா. தாய் மீனாட்சி, இளம்வயதிலேயே மறைந்த சகோதரி முத்துலட்சுமி (1860-76), மகள் முத்துலட்சுமி இவற்றை இணைத்து முத்துலட்சுமி என்ற பெயரை நாவலுக்குச் சூட்டினாரா தெரியவில்லை. சாவித்திரி சரித்திரத்தில் உள்ள பெயர்கள் பலவற்றையும் இடங்களின் சில பெயர்களையும் முத்துமீனாட்சியில் மாற்றியுள்ளார். ஒருசில பெயர்கள் அப்படியேயுள்ளன. செங்கமலம் என்ற அழகான பெயரை மட்டும் குட்டியம்மாள் என்று குணதோஷப் பெயராக்கியிருக்கிறார். பெரும்பாலும் சைவப்பெயர்கள் வைணவப் பெயர்களாக்கப்பட்டுள்ளன.
சாவித்திரி – முத்துமீனாட்சி
செங்கமலம் – குட்டியம்மாள்
இலட்சுமியம்மாள் – பார்வதியம்மாள்
சேஷி நாணி – சங்கரி சங்கரி
விசாலாட்சி – விசாலாட்சி
காமாட்சி – காமாட்சி
இலட்சுமி – இலட்சுமி
நடேசன் – சுந்தரேசன்
கோபாலன் – சுப்பிரமணியன்
கிருஷ்ணன் – இராமன்
சுப்பையர் – சங்கரையர்
சுந்தர சாஸ்திரி – இராமபத்ர சாஸ்திரி
சுந்தரமையர் – சுந்தரமையர்
கோவிந்தப்பபுரம் – இராமாபுரம்
இந்த மாற்றங்கள் தவிர, ஒருசில சொற்களையும் வாக்கியங்களையும் செம்மைப்படுத்தியதைத் தவிர, பெரிதாக மாற்றங்கள் ஏதுமில்லை என்பதை ஒப்பிட்டு அறியலாம்.
கதையின் சமூகச் சீர்திருத்தக் கருத்துச் செறிவும் புதுவகையான நவீன கதையாடலும் அக்கால வாசகர்களாலும் பத்திரிகைகளாலும் செரிக்க முடியாத காரணத்தால், தொடக்கத்தில் இந்நாவலுக்கு எதிர்ப்பும் தோன்றியிருக்கிறது. இந்த உண்மையை, நாவலின் ஆசிரியரே, தமது இந்த நாவலின் மறுபதிப்பு முகவுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்:
இந்த நாவல் 21 ஆண்டுகளுக்கு முன், முதலில் வெளிவந்த பொழுது, இதன் கொள்கைகளையும் வாழ்க்கைக் குறிக்கோளையும் ‘ஹிந்து’ பத்திரிகை பழித்துக் கண்டித்தெழுதியது. பின்பு பத்து வருஷங்களுக்குள் அந்தக் கோட்பாடுகளின் விருத்தியுரை என்னலாகும் குசிகர் குட்டிக் கதைகளை, அதே பத்திரிகை தானே பிரசுரித்தது மன்றி, புஸ்தக ரூபமாகவும் திரட்டி வெளியிட்டு நாடெங்கும் பரவச் செய்தது. சிலவாண்டுகளுக்குள் நம்மவர் அபிப்பிராயங்கள் எவ்வளவு திருந்தி முன் வந்திருக்கின்றன என்பதற்கு இதுவே தக்க சான்றாகும். (மாதவையா, 1924)
பிந்திவந்த காலகட்டத்தில்கூட சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் பயப்படும் தீவிர சமுதாயக் கருத்துக்களை அந்தக் காலத்து ஓரிரு நாவலாசிரியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் ஜாக்கிரதை உணர்வுடனும்தான் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். இவர்களிலிருந்த மாறுபட்டவர் மாதவையா.
சமுதாயத்தில் புரையோடி இருக்கும் சில சமத்துவமற்ற வெறும் நம்பிக்கை சார்ந்த தீய மூடப் பழக்கவழக்கங்களைக் கண்டிப்பதும் பேசுவதும் இன்று ஒரு மோஸ்தராகவே கருதப்படுகிறது. ஆனால், அந்தக் காலத்தில் அந்தரங்க சுத்தியுடன் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்ட சிலரில் ஒருவர் மாதவையா. அதுவும் படைப்பாளியாக இவர் தனித்துத் தெரிகிறார். இவர் தாம் எழுதிய புனைகதைகள் மூலம் சமுதாய சீர்திருத்தத்தை முன்னறிவிக்க விரும்பினார்; சமூகப் பழக்க வழக்கங்களிலும் நடைமுறைகளிலும், திட்டமிட்டும் திட்டமற்றும், அறிந்தும் அறியாமலும் புகுந்துவிட்ட சில காலத்துக்கு ஏற்காத சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் தமது விமர்சன பூர்வமான கதைகளால் எடுத்துக்காட்டினார். அதனால், இலக்கியத்துவம் குறைவுபட்டு பிரசாரம் மிகுபடுவதையும் பற்றிக் கவலைப்படவில்லை. மாயூரம் வேதநாயகம் போல தம் கருத்துக்களை அற்புத நவிற்சி தோன்றப் படைக்க நினைக்கவில்லை. பின்வந்த ராஜமையர் போல இலக்கியத்துவத்துக்கு முக்கியம் தந்து தமது வேதாந்தக் கருத்துக்களைத் தந்தது போல் தரவும் நினைக்கவில்லை. அல்லது பண்டித நடேசசாஸ்திரி போலவும் தி.ம. பொன்னுச்சாமி போலவும் சுவாரஸ்யமான சம்பவங்களுக்கும் சஸ்பென்சுக்கும் முக்கியத்துவம்
தந்து ருசிகரம் நிறைந்த பொழுதுபோக்குப் புனைகதைகள் எழுத நினைக்கவில்லை. அன்றைய சிறந்த தமிழ் அறிஞர்கள், கல்வியில் சிறந்த பண்டிதர்கள் ரெயினால்ஸ் பாணிக் கதைகளையே சுயமாகவும் தழுவியும் எழுதியதையும் கைக்கொள்ளவில்லை. இவர்களிடமிருந்து மாறுபட்டு தாக்கரே, கோல்டுஸ்மித், டிக்கன்ஸ் பாணிக் கதைகளைத்தான் மாதவையா தர நினைத்தார் என்றும் சொல்லலாம். ஆனால், முற்றிலும் இலக்கியத்துவத்துடன் டிக்கன்ஸ் தன் பிரச்சாரத்தை ஆழப் புதைத்து எழுதினார். மாதவையாவிடம் அது வெளிப்படையாகவே தெரிகிறது. மற்றவர்கள் யாரும், அன்று மிகுந்த தாக்கத்தைச் செலுத்திய முன் நவீனத்துவவாதிகளான தாக்கரே, டிக்கன்ஸ் பாதிப்பைத் தமிழில் காட்டவில்லை என்றே சொல்லலாம். பாரதி, செல்வகேசவராயர், ராஜமையர் என்ற விதி விலக்குகள் உண்டு. இவர்களில் மாதவையா முன்னேறித் தாக்கும் முன்னணிப் படைவீரராக விளங்கினார்.
சாதி, மதம் பற்றி முற்றாக எதிர்க் கருத்துகளைக் கொண்டிருந்தார் மாதவையா என்று தெரிகிறது. கிறிஸ்தவ மதமாற்றம் பெற்ற பாத்திரங்களைக் கொண்ட ‘சத்தியானந்தன்’, ‘கிளாரிந்தா’ என்ற ஆங்கில நாவல்கள் கிறிஸ்தவ இலக்கிய அமைப்பால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலாக்கப்பட்ட போதும்கூட, அவரது நாத்திகச் சார்பே துலக்கமாக வெளிப்படுகிறது. பெண் கல்வி, இளம் விதவைகள் மறுமணம் போன்றவை சாத்திர விரோதம், நடைமுறைக்கு ஒவ்வாதவை என்று கருதப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது மிக முன்னோடி நாவலான ‘சாவித்திரி சரித்திரம்’ என்ற ‘முத்துமீனாட்சி’. அந்தக் காலத்து நடைமுறைகளையும் சமூக நிலைகளையும் பிரதிபலிப்பதோடு அல்லாமல் விமர்சித்தும் எழுதப்பட்டது.
‘முத்துமீனாட்சி’. ஒரு பிராமணப் பெண்ணின் சுவசரிதை எனினும் உயர்ந்த வகுப்பினர் என்று கருதப்பட்ட மற்ற சாதியினருக்கும் ஏற்றிப் பார்க்கும் வகையில் கதையின் கரு அமைந்துள்ளது. மாமியார், நாத்தனார் கொடுமை, தாய் பேச்சை மீறாத மகன், முதிய வயதில் இளம்பெண்ணை மறுதாரமாக மணந்து அல்லல் படுபவர்கள், கொடூர சித்தம் கொண்ட சிற்றன்னை என்று அந்தக் காலத்தில் தம் பிராமண சமூகத்தில் இருந்த கொடுமைகள் என்ற பிரச்சினைகளைக் கதைக்களமாகக் கொண்டு மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் புனைந்தளிக்கிறார் மாதவையா.
மாதவையாவின் நாவல்களில் சமூக சீர்திருத்த நோக்கம் மிகத் வெளிப்படையாகத் தெரிவது ‘முத்துமீனாட்சி’ கதையில்தான். விதவை மறுமணத்தை ஆதரித்து எழுதப்பட்ட அக்கால இந்திய நாவல்களில் முக்கியமானது இது. பெண்கள் பிரச்சனை பற்றிய முன்னோடி வட இந்திய நாவல்களிலும் சரி ‘இந்திராபாய்’ (கன்னடம்), ‘இந்துலேகா’ (மலையாளம்) ஆகிய தென் இந்திய நாவல்களிலும் சரி ‘முத்து மீனாட்சி’ தன்மைக் கூற்றில் எழுதப்பட்டு, பெண் பிரச்சனைகளை யாரும் சொல்லாத வகையில் சொல்லும் விதத்தில் தனித்து நிற்கிறது என்பதை விமர்சகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். விதவையின் சுய சரித்திரமாக எழுதப்பட்டதும் பெண்ணின் பார்வையில் தன்மைக்கூற்றில் எழுதப்பட்டதும் என அன்றைய இந்திய நாவல்களில் தனித்து நிற்பது முத்துமீனாட்சி என்று இந்திய இலக்கிய விமர்சன ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சாவித்திரி என்ற அவ்விதவையின் துன்பங்களும் அவைகளின் நிவர்த்தியாக அமைந்த அவள் மறுமணமும்தான் கதையின் சாராம்சம். அக்காலகட்டத்தில் இது மிக புரட்சிகரமாக தோற்றியிருக்கும். இத்தகைய கதையை வெளியிடுவது தம் பத்திரிகைக்கே அபாயம் என்று கருதியே பத்திராதிபர் அதன் பிரசுரத்தை நிறுத்தியிருக்கலாம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ‘சாவித்திரி சரித்திரம்’ என்ற பெயர்களையும் இடங்களையும் மாற்றி ஆனால், கதைகருக் களம் மாறாமல் ‘முத்து மீனாட்சி’ நாவலாக வெளிவந்த பின்பும் பிரச்சனை தொடர்ந்தது. புத்தகத்தை எதிர்த்து, ‘ஹிந்து’ பத்திரிகை எழுதியது. ஆனால், இதற்கு விளைவு ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.
புத்தகம் வெளிவந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, மாதவையாவின் மகள் லட்சுமி (1896-1958)யால், ‘முத்துமீனாட்சி’ ஆங்கிலத்தில் ‘Social Reform Advocate’ பத்திரிகையில் தொடராக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. இதர இந்தியப் பிராந்தியத்தவர்களுக்கு ‘முத்து மீனாட்சி’ நாவலின் உட்கருத்து எட்ட வேண்டுமென்பது இம்மொழிபெயர்ப்பின் காரணமாயிருக்கலாம். இது புத்தக வடிவம் பெற்றதாகத் தெரியவில்லை.
அன்றைய எழுத்து வரிவடிவில் ‘முத்துமீனாக்ஷி’ என்றே இந்நாவல் வழங்கி வந்திருந்தாலும், நான் இன்றைய வழக்கில் ‘முத்து மீனாட்சி’ என்று மாற்றியுள்ளேன். தமிழில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் பெரும்பாலும் முதல் எழுத்தாகவும் ஒற்றெழுத்தாகவும் வரும்போது தவிர இடை, கடை எழுத்தாக வரும்போது தமிழின் உச்சரிப்பு இயல்புப்படி தேவையில்லாதவையாக ஆகின்றன. க்ஷ என்ற வரிவடிவம் குறிக்கும் உச்சரிப்பு ட்ச என்பதுதான். எனவே, உச்சரிப்பு மாறும் இடங்களில் மட்டும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.
பழைய உரைநடையில் சொல்களைச் சேர்த்து எழுதுவது இயல்பு. அது இன்றைய வாசகருக்கு அநாவசியச் சுமை. பழம் உரை நடையைச் சந்தி பிரித்து அச்சிடவேண்டியது அவசியம். பழந்தமிழ் இலக்கியத்தையே சந்தி பிரித்து அச்சிட்டுப் படிக்கும் இக்காலத்தில் உரைநடையைச் சந்தி பிரித்து அச்சிடுவதுதான் முறை. கவிதையைச் சந்தி பிரித்தால் மாத்திரை அளவு மாறி யாப்பு மாறுபடும். யாப்பு பற்றிய லட்சியமற்ற இந்த யுகத்தில் மாத்திரை பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. தேவைப்பட்டால் சேர்த்துப் புணர்த்திப் படித்துக் கொள்ளட்டும். எனவே, வாசகர்கள் வீண் சிரமத்தை மேற்கொள்ளாமல் எளிதில் படிப்பதற்கேற்ப, தேவைக்கேற்ப பத்தி பிரித்தும் சேர்த்தெழுதப்பட்ட சொல்தொடர்களைச் சந்தி பிரித்தும் பழைய வரி வடிவ எழுதுகளை மாற்றி புதிய முறையில் அமைத்தும் உச்சரிப்பு மாறாத இடத்தில் கிரந்த எழுத்துகளை மாற்றியும் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பின்பு தோன்றிய இலக்கணங்களின் படி சொல் சேர்க்கைகளை மாற்றி, நவீன அச்சு முறை வசதிக்கு ஏற்ப, தனித் தனியே அடைச் சொற்கள் பிரித்தமைக்கப்பட்டுள்ளன. கட்டாயம் இணைந்து வரவேண்டிய சொற்களைக் கூட இன்றைய அச்சு ஊடகத்தில் பிரித்தே அச்சிடலாம். சேர்த்துப் படித்துக் கொள்வார்கள். இவ்வகை இலக்கண மீறல்கள் தேவை என்பதையும் வழுவமைதிகளாகப் புதிய இலக்கணங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டே, அதாவது இலக்கண நோக்கில் அல்லாமல் மொழியியல் நோக்கில், இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏடுகளில் கல்வெட்டுகளில் பத்திகளுக்கோ அடிகளுக்கோ சொற்களுக்கோ வித்தியாசம் காட்டாமல் தொடர்ச்சியாக எழுதிய காலம் போய் இன்று எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்து எழுதும் காலம் வந்தது என்று கொள்வோமாக.
(முத்துமீனாட்சி (சாவித்திரி சரித்திரம்) – அ. மாதவையா புதிய பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை)
*****
முத்துமீனாட்சி (சாவித்திரி சரித்திரம்)
ஆ. மாதவையா;
பதிப்பு: கால சுப்ரமணியம்
விலை. ரூ. 130
வெளியீடு: தமிழினி
63 நாச்சியம்மை நகர்
சேலவாயல்
சென்னை – 600051.
மின்னஞ்சல்: tamilinibooks@gmail.com
தொலைப்பேசி: +91 86672 55103
“கால சுப்ரமணியம்” <kasu.layam@gmail.com>