தி ஹியூமன் ஃசெண்டிபெட்: மரண தேவதையின் ஃபாசிஸம்!

 தி ஹியூமன் ஃசெண்டிபெட்: மரண தேவதையின் ஃபாசிஸம்!

சாதனா

 

ரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்ட இடம், ஆசுவிட்ஸ். துன்புறுத்தலென்றால் வெறும் அடி, உதை அல்ல; இதைப் போன்றொரு மனித அவலம் இனி இந்தப் பூமியில் நடந்தேறிவிடுமா என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு அந்தத் துன்புறுத்தல்கள் இருந்திருக்கின்றன. சமீபத்தில் அங்கு சென்றிருந்தபோது யூதர்களின் நெஞ்சைப் பிளக்கும் ஓலங்கள் என் காதுகளுக்குள் ஊடுருவிய படியிருந்தன.

போலந்தில் ததேயுஸ் என்கிற முப்பத்து மூன்று வயது இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன். தான் குடியிருக்கும் வீட்டுக்கு என்னை அழைத்துப் போனார். பரந்து விரிந்த பிரமாண்டமான வீடு. அந்த வீட்டின் சமையலறையில் ஒரு நிலவறை இருந்தது. ஆறடி அகலமும் ஆறடி உயரமும் கொண்ட மிகச்சிறிய அறை. ஒரு பேச்சுக்குத்தான் அதை அறை என்கிறேனே தவிர உண்மையில் அதுவொரு குழி. உள்ளே இறங்கி, கதவையும் மூடிக்கொண்டால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும்.

இரண்டாம் உலகப்போரின்போது ‘ஸ்கோசிலாஸ்’ என்கிற ஆறுபேர் கொண்ட யூத குடும்பம், நாசிக்கள் வரும்போது அந்தக் குழிக்குள் இறங்கியே தங்களை நாசிக்களிடமிருந்து மறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒருதடவை, இந்த வீட்டுக்கு அருகிலிருந்த ஒருவர், ஸ்கோசிலாஸ் பற்றியும் அவர்களின் மறைவு வாழ்க்கை பற்றியும் நாசிக்களிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார். படையெடுத்து வந்த நாசி அதிகாரிகள் வீட்டின் ஒவ்வொரு பகுதிகளாக சல்லடை போட்டுத் தேடுகிறார்கள். இறுதியில் சமையலறையில் இருந்த குழியிலிருந்து ஸ்கோசிலாஸின் குடும்பத்தை நாசி அதிகாரிகள் கண்டுபிடிக்கின்றார்கள். அடுத்த நிமிடமே, அந்த வீட்டின் பின்புறமாய் அவர்கள் தீயிலிட்டு கொளுத்தப்படுகிறார்கள்.

ததேயுஸ் இவை யாவற்றையும் என்னிடம் சொல்லி முடித்தபோது எனக்கு என் தேகமானது சில்லிடுமாற்போல் படவே ஒருதடவை என் உடலை உதறி மீண்டும் ஒருக்களித்து அமர்ந்தேன்.

ஸ்கோசிலாஸின் குடும்பம் பற்றி மேலும் அறிய ஆவலாக இருந்தது. ஸ்கோசிலாஸின் குடும்பத்தில் தப்பிப் பிழைத்தவர்களென யாருமே இல்லையா என்று கேட்டேன். அதற்கு ததேயுஸ், “ஏன் இல்லாமல், நானும் ஸ்கோசிலாஸின் குடுப்பத்தைச் சேர்ந்தவன்தான். என்னுடைய தந்தையான பெட்ராவ்ஸ்க்கி, நாசி அதிகாரிகள் தங்களைத் தேடி வரும்போது பக்கத்திலிருந்த பன்றிப் பண்ணையில் வைக்கோல்களுக்கு மேலாகத் தன்னை மறைத்துக்கொண்டு அவர்களிடமிருந்து தப்பினார்” என்றார்.

நான் அந்தக் குழிக்குள் இறங்கி கதவை மூடிக்கொண்டபோது ஸ்கோசிலாஸ் குடும்பத்தின் மூச்சுக் காற்று இன்னமும் அந்தக் குழியில் மிச்சமிருப்பதாய் எனக்குத் தோன்றியது. சுண்ணாம்புக் கற்களிலான சுவரை ஸ்பரிசித்தபோது ஸ்கோசிலாஸ் குடும்பத்தினர் ஒவ்வொருவருடைய முகங்களும் நினைவில் வந்து போயின. அதற்கு மேலும் அந்தக் குழியில் இருக்கப் பிடிக்காமல் நான் குழியை விட்டு வெளியேறலானேன்.

 

‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ (The Human Centipede) திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மேற்குறிப்பிட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது. மூன்று பாகங்களைக் கொண்ட இத் திரைப்படத்தின் முதலாவது பாகம், 2009இல் ‘முதலாவது சீக்வன்ஸ்’ என்ற பெயரிலும்; இரண்டாவது பாகம், ‘முழுமையான சீக்வன்ஸ்’ என்ற பெயரில் 2011இலும்; மூன்றாவது பாகம், ‘இறுதி சீக்வன்ஸ்’ என்ற பெயரில் 2015இலும் வெளியாகின.

பலரை அழைத்து வந்து, நாய்களைப் போல் வரிசையாக நிற்கப் பண்ணி, முன்னால் இருப்பவர்களின் குதத்தையும் அடுத்திருப்பவர்களின் வாய்களையும் ஒன்றோடொன்று இணைத்துத் தைத்து விடுகின்றார்கள். வலியில் கதறக்கூட முடியாது. ஒரு பூரானைப் போல் ஊர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு பசியெடுத்தால் வாயில் குதத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பவரின் மலமே ஆகாரம். வயிற்றைப் புரட்டினால் வாந்தி எடுக்கவும் முடியாத நிலை. நினைத்துப் பார்க்கவே பயமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறதல்லவா? இதுதான் ‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ திரைப்படத்தின் கதை.

இப்படத்தை எடுத்த டாம் சிக்ஸ் 1948ஆம் ஆண்டு பிறந்தவர். நெதர்லாந்தில் அறியப்பட்ட ஓவியர். சிறுவயது முதலே திரைப்படம் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒருதடவை, நெதர்லாந்து தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பட்ட நகைச்சுவை நாடகமொன்றில் சேட்டைக்கார குழந்தையைத் தண்டிப்பதற்காக அதன் வாயில் தன் குதத்தைக் கொடுத்து மலம் கழிக்கிறான் ஒருவன். ஆரம்பத்தில், அது அவருக்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும் பிற்பாடு, அதையே தன் திரைப்படத்துக்கான கருவாக எடுத்துக்கொள்கிறார்.

டாம் சிக்ஸ்

புனைவுத் தன்மையுடைய திரைப்படங்களை இயக்குவதிலோ அல்லது யதார்த்தத்துக்கு மீறிய மீபுனைவுத் தன்மையுடைய திரைப்படங்களை இயக்குவதிலோ டாம் சிக்ஸ் ஆர்வம் கொள்வதில்லை. ‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ மூன்று பாகத்திலும் அரசியல் கலந்த, அதேநேரம் அங்கத மொழியில் கூறப்பட்ட யதார்த்தத் தன்மையை உணர முடியும். ‘இறுதி சீக்வன்ஸ்’ முழுக்க முழுக்க அங்கதத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவகையில், தன் படைப்பில் ஒரு தனித்துவமாக ‘இதை’ டாம் கையாளுகிறார் எனவும் கொள்ளலாம்.

1975இல், இத்தாலிய இயக்குநரான பியர் பாலோ பசோலினி என்பவரால் எடுக்கப்பட்ட ‘சாலோ’ (Salo Or The 120 Days Of Sodom) திரைப்படம் தன்னுள் மிகப்பெரும் அதிர்வலைகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகக் கூறும் டாம், அதன் நீட்சியாகவே ‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ திரைப்படத்தை எடுத்தேன் என்கிறார். டாமின் படங்கள் பசோலினியின் படங்களைப் போலவே மனித உடல் மீதான அதீத வன்முறைகளையும் பாலியலையும் உடலை நடுக்கச் செய்யும் அருவருப்பையும் கொண்டன. ‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ மூன்றாவது பாகத்தில், கைதி ஒருவனின் விதைப்பையை அறுத்து, இரண்டு கொட்டைகளையும் அவித்துச் சாப்பிடுவார் சிறை வார்டனான பெல்.

டாமின் படங்கள் பார்வையாளர்களின் இன்பத்துக்காக, புனைவையோ யதார்த்தத்துக்கு மீறிய தன்மையையோ கொண்ட படங்களோ கிடையாது. மாறாக, மனித இனம் அதே மனித இனத்தின் மீது ஏதோவொரு காலகட்டத்தில் கொட்டித் தீர்த்த காழ்ப்புகளையும் வன்மத்தையும் குரோதத்தையுமே நிகழ்த்திக் காட்டுகின்றன.

ஆம், ‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாசிக்களால் யூதர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் திரைவடிவம். அதிகாரம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் குரூரம் மிக்கவனாக மாற்றி விடுகிறது என்பதை தன் திரைப்படத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார், டாம்.

 

மீறிய அதிகாரமும் தன்னை எதிர்ப்பதற்கு யார் இருக்கிறார்களென்கிற சிந்தனையும்தான் ஒரு மனிதனைக் கட்டற்ற ஃபாசிஸவாதியாக உருவாக்கிவிடுகிறது என்பதை என் அனுபவத்திலிருந்தே எடுத்துக்காட்ட முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், பாரிசில், இத்தாலிய உணவுச்சாலை ஒன்றில் எச்சில் கோப்பைகளைக் கழுவிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வதிவிட உரிமையும் கிடையாது; வேலை செய்வதற்கான பத்திரமும் கிடையாது. இன்னொருவரின் அடையாள அட்டையை என்னுடையது எனக் கூறி வேலை செய்துகொண்டிருந்தேன். இந்த விஷயம், எப்படியோ செஃப்புக்கு – செஃப் என்றால் ஃபிரஞ்சில் சமையற்காரர் – தெரிந்துவிட்டது. நாயை விடவும் கேவலமாக நடத்தினார். என்னை அழைப்பதே கெட்ட வார்த்தை சொல்லித்தான். (பன்றியோடு புணர்ந்ததால் பிறந்தவனே; கழுவுகிறாயா தூங்குகிறாயா?) இரண்டு பேர் பார்க்கும் வேலையை நான் ஒருவனே செய்யும்படி சொன்னார். மீறும்போது கரண்டியால் அடித்தார்.

நாம் நினைப்பது போன்று வெள்ளைக்காரர்கள் எல்லோருமே நல்லவர்கள் கிடையாது. குரோதம், வன்மம், காழ்ப்பு, பொறாமை என்பது அடிப்படை மனித உணர்வுகள். அது கீழைத்தேய மனிதர்களாக இருந்தாலும் சரி, மேலைத்தேய மனிதர்களாக இருந்தாலும் சரி. எல்லா மனிதர்களிடமும் அவ்வுணர்வுகள் பொதுவானவையாக இருக்கின்றன. ஒருவனின் நிலை சார்ந்து அவ்வுணர்வுகள் மறைக்கப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் விடுகின்றன. என்னிடம் அதிகாரமிருக்கிறது. அவன் நிர்கதி நிலையிலிருக்கிறான் என்கிற வன்ம உணர்வே என் மீதான அந்த இத்தாலிய செஃப்பின் வன்முறைக்கு அடிப்படை.

 

‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ திரைப்படத்தை லண்டனில் திரையிட்டபோது சிலர் வாயிலெடுத்தார்கள். அரங்கத்தைவிட்டே காலி செய்தார்கள். காரணம்: மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் பிறந்த குழந்தையைக் குரூரமாகக் கொலை செய்கிறார் என்பதுடன் உடலை நடுங்கச் செய்யும் அளவுக்கு அருவருப்பு நிரம்பிய பாலியல் காட்சிகளால் திரைப்படம் நிரம்பியிருந்தது என்பதும்தான். சிலர், ‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். டாம் சிக்ஸை கொலை செய்து விடுவோமென மிரட்டினார்கள். இதனால், இங்கிலாந்து திரைப்படத் தணிக்கைத் துறை ‘குறிப்பிட்ட’ காட்சியைப் படத்திலிருந்து நீக்கி விடுகிறது.

படத்தில், மருத்துவர், ஜோசப் ஹெய்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த டைட்டர் லேசர், ‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ திரைப்படத்தைப் பற்றி பேட்டி ஒன்றில் கூறுகிறார்: “நான் நாசி அதிகாரியான ஜோசப் மெங்லெயின் கதாபாத்திரத்தில் நடித்தபோது என்னை நான் மெங்லெயாகவே உணர்ந்தேன். நிஜமாகவே யூதர்கள் மீது ஃபாசிஸ வன்முறையை நிகழ்த்துவதாகக் கனவு கண்டேன். இதனால் உண்மையாகவே நான் மாபெரும் குற்றவுணர்வுக்கு உள்ளானேன்.”

 

ஜோசப் மெங்லெ, 1911 மார்ச் 11ஆம் தேதி ஜெர்மனியில் பாவாரியா என்கிற ஊரில் குடும்பத்தில் மூத்த குழந்தையாகப் பிறந்தார். அயலவர்களால் புத்திசாலியான சிறுவன் எனவும் துடிப்பானவன் எனவும் அறியப்பட்ட ஜோசப் மெங்லெ முனிச்சில் தத்துவமும் பின்னர், பிராங்க் போர்ட்டில் மருத்துவமும் படித்தார். 1937 வாக்கில், ஹிட்லரின் நாசி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட மெங்லெ, அதன் பின்னர், அதாவது, 1938இல் எஸ்.எஸ்.சில் இணைந்தார். எஸ். எஸ். என்பது Schutzstaffel என்பதன் சுருக்கிய வடிவம். ஹிட்லர் காலத்தில், ஜெர்மனியில் பணிபுரிந்த பாதுகாப்புப் படை வீரர்களை இப்படி அழைத்தார்கள். ஆங்கிலத்தில் Protective Squadron.

மெங்லெ ஒருதடவை ரஷ்யாவில் போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது காயமடைந்தார். இதனால், அவர், கடமையாற்ற தகுதியற்றவரென நாசி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டார். இது ஜோசப் மெங்லேயின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. சிறிது காலம் எதிலும் தன்னை இணைத்துக்கொள்ளாத மெங்லெ பின்னர், யூதர்கள் மீதிருந்த அதீத வெறுப்பின் காரணமாகவும் வன்மத்தின் காரணமாகவும் போலந்திலுள்ள வதை முகாமுக்குச் செல்கிறார்.

அங்கு, எண்ணிலடங்காத யூதர்களை சித்ரவதைக்கு உட்படுத்தி கொலை செய்கிறார். சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், பைத்தியக்காரர்கள், தொழு நோயாளர்கள், வயதானவர்கள் என்று, குழந்தைகளைக்கூட விட்டு வைக்காமல் அத்தனை பேரையும், அவர்களனைவரும் யூதர்கள் என்கிற ஒரே காரணத்துக்காகக் கொன்று குவிக்கிறார். யூதர்களை சித்ரவதை செய்யும்போது அவர்கள் எழுப்பும் மரண ஓலம் மெங்லெயை குதூகலிக்க வைக்கிறது.

ஒருதடவை, மெங்லெயிடம் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் அகப்பட்டுக் கொள்கிறார்கள். மெங்லே அவர்களிருவரையும் பிரித்துவிடச் சொல்லி கட்டளையிடுகிறார். இரண்டு நாசி வீரர்கள் தாயையும் மகளையும் பிரிக்க முயலும்போது தாய் கோபத்தில் ஒரு நாசி வீரனின் முகத்தை விரல் நகங்களினால் பிறாண்டி விடுகிறாள். தன் கைக் துப்பாக்கியை எடுத்துக்கொள்ளும் மெங்லே அந்த இடத்திலேயே தாயையும் மகளையும் சுட்டுக் கொல்கிறார். அப்போது ஜோசப் மெங்லெக்கு வெறும் முப்பத்து இரண்டு வயதுகளே ஆகியிருந்தன.

இன்னொரு தடவை, நாசிக்கள், யூதக் கைதியொருவனை அழைத்து வந்து அவன் உடலின் தோலை உரித்தெடுக்கின்றார்கள். வலியில் கதறும் யூதனைப் பார்த்து நாசிக்கள் கொண்டாட்டமடைகிறார்கள். அப்போது, ஜோசப் மெங்லெ சக நாசி அதிகாரியொருவரின் பதினான்கு வயது மகனை அழைத்து, அவன் கையில் கத்தி ஒன்றைக் கொடுத்து தோலுரிக்கப்பட்ட யூதனின் இருதயத்தில் சொருகும்படிக்குக் கட்டளையிடுகிறார். சிறுவனும் அச்சொட்டாக அதையே செய்கிறான். யூதனின் இருதயத்திலிருந்து குருதி தண்ணீரைப் போல பிசிறியடிக்கிறது. சுற்றியிருந்த நாசிக்கள் அனைவரும் கைகளை உயர்த்தி கோஷமிடுகிறார்கள். விடிந்ததும், தோலுரிக்கப்பட்ட யூதனின் உடல் நாசி அதிகாரிகளின் நாய்களுக்கு உணவாகப் போடப்படுகிறது.

மெங்லெயின் கொலைகளைக் கேள்விப்பட்டு அவரைத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்கிறார் ஹிட்லர். யூதர்களை விதவிதமாக கொலை செய்வதைப் பார்த்து அவருக்கு ‘மரண தேவதை’ என்கிற பட்டத்தையும் வழங்குகிறார். இதனால், அகங்காரம் கொள்ளும் மெங்லெ, ஒரு கட்டத்தில் தன்னை ஹிட்லருக்கு நிகரான ஒருவராக நினைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார். ‘மனிதப் பூரான்’ என்னும் புதிய சித்ரவதை வடிவத்தைக் கண்டுபிடிக்கிறார்.

அடிப்படையில் மருத்துவரான மெங்லெக்கு யூதர்களை மனிதப் பூரனாக்கும் பரிசோதனையில் வெற்றி கிடைக்கிறது. முதலில் மூன்று யூதர்களிலிருந்து ஆரம்பித்தவர் அந்த குரூரச் சித்திரவதையின் மூலம் மதம் பிடித்தவர் போலாகிறார். முடிவில், ஒரு யூத கூட்டத்தையே மனிதப் பூரனாக்குகிறார்.

மெங்லெயால் பாதிக்கப்பட்ட திபியின் சகோதரர் மெங்லேயைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மருத்துவர் மெங்கல் எப்போதும் திபியின் மீது அதிக அக்கறை கொண்டிருந்தார். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை; ஒருவேளை அவர் பழைய இரட்டையர் என்பதால் இருக்கலாம். மெங்கல் பல நடவடிக்கைகளை திபியின் மீது மேற்கொண்டார். அவரது முதுகெலும்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை என் சகோதரரை முடக்கியது. அவரால் அதன்பின்னர் நடக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் அவரது பாலியல் உறுப்புகளை வெளியே எடுத்தனர். நான்காவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் திபியைப் பார்க்கவில்லை. நான் எப்படி உணர்ந்தேன் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதை வார்த்தைகளில் கூறுவது சாத்தியமில்லை. அவர்கள் என் தந்தை, என் அம்மா, என் இரண்டு மூத்த சகோதரர்களை எடுத்துக்கொண்டார்கள்; இப்போது, என் இரட்டை…”

1948இல் நாசிகளுக்கு எதிரான பனிப்போர் ஆரம்பமாகிறது. நாசி வீழ்கிறது. ஜோசப் மெங்லெ ஜெர்மனியை விட்டுத் தப்பிச் செல்ல முடிவெடுக்கிறார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இவரும் இன்னும் மூவரும் நீர்மூழ்கிக் கப்பலொன்றின் மூலம் தப்பிச் செல்கிறார்கள். இதில் மெங்லெயைத் தவிர மற்ற மூவரும் பிடிபட்டு விடுகிறார்கள். ஆரம்பத்தில் அர்ஜெண்டினாவுக்கு செல்லும் மெங்லெ அங்கு நாசிகளுக்கு ஆதரவான அலையொன்றை உருவாக்குகிறார். தன்னுடைய தந்தையான கார்ல் என்பவரின் தொழிலை எடுத்து நடத்துகிறார். தன்னைப் பிடிக்க ஐசிஆர்சி அதிகாரிகள் வருவது தெரிந்து அர்ஜெண்டினாவிலிருந்து தப்பி பிரேசிலுக்குப் போகிறார். அங்கு முப்பத்தைந்து வருடங்கள் மறைவு வாழ்க்கையை வாழ்கிறார்.

தன் இனத்தின் மீதே கட்டற்ற வன்முறைகளையும் பரிசோதனைகளையும் குரூரத்தையும் நிகழ்த்திய ஈவு இரக்கமற்ற அந்த மனிதர் ஒருநாள் கடலில் குளித்துக் கொண்டிருக்கிறார். பிறகு அவரின் உயிரற்ற உடல் கரையைத் தொடுகிறது.

 

“சாதனா” <sathanaa@icloud.com>

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *