பச்சோந்தி கவிதைகள்

திருவல்லிக்கேணி அக்ரஹாரத்து மாடுகள்
1
பறக்கும் ரயிலின் நிழலில் மாட்டுத் தொழுவம்
சுவரில் துளையிட்ட
கன்றின் கயிறு அறுபடாதிருக்கிறது
பிளாஸ்டிக் கூடைக்குள் முட்டைக்கோஸும் மக்காச்சோளமும்
கொசுக்கள் மொய்க்கும் நீரைக்கொத்தி வானை வெறிக்கும் காக்கை
பாலத்தின் இடுக்கில் தொங்கும் பச்சிலைக்கு நாக்கை நீட்டி
தொண்டை எலும்பை விழுங்கும் மாடு
திருப்பிப் போட்ட கேள்விக்குறிக் கொம்பையும் அசைக்கிறது
2
நொச்சிமரக் கிளையில் ஆம்பல் விற்கிறாள்
மாநகராட்சி வைத்த அதன் வேர்களை
காற்று அசைத்து அசைத்துப் பார்த்திருக்கிறது
பூக்காரிதான் நிமிர்த்திவைத்து நீரூற்றி வளர்த்தாள்
தலைவலியில் தவித்த ஓம்பாளர்கள்
நொச்சியை உருவி உருவிச் சென்றனர்
திதிக்குப் படைத்த பொங்கலை மாட்டுக்கு வைக்கையில்
தெற்கிலிருந்து பாய்ந்த கொம்புகள்
சுடும் இலையைப் பறித்தன
மிரண்ட மாடு
கண்ணை உருட்டி வாயைத் திறந்தபடி
கேமராவுக்குள் என்னை விரட்டுகிறது
3
சிங்காரச்சாரி தெருவின் நடுவில் அசையாது நிற்கிறது மாடு
சூம்பிய காம்புகளைச் சப்பிக்கொண்டே இருக்கிறது கன்று
விரைந்துவந்த வாகனம் அகத்திக் கீரைக்கட்டை எறிந்து செல்கிறது
கிழக்கிலிருந்து வந்த மாடு
விட்டுச் சென்ற தண்டுகளை மோந்து மோந்து பார்க்கிறது
கால்மேல் காலிட்டு வலக்கரம் உயர்த்தியபடி
ஊர்தியில் செல்லும் ஷீர்டி பாபாவை
தன் வால் மயிரால் கன்னத்தில் அறைகிறது
4
தெருகுலுங்க கொம்பசைத்த மாடு
வடக்கிருந்த கறிவேப்பிலையை மேய்ந்தபோது
சூவென்ற சத்தம் விரட்டியது
தெற்கிலிருந்த பீர்க்கங்காயைத் தின்ற போது
கைகள் அடித்து விரட்டின
மேற்கிலிருந்த ஆப்பிள் அருகில் சென்றதும்
கட்டை அடித்துத் துரத்தியது
கிழக்கிலிருந்த பூக்களை இழுத்ததும்
ரப்பர் பைப் அடித்து விரட்டியது
ஓங்கி உயர்ந்த மின்கம்பத்தின் அடியில்
மூக்குத் துளையை நக்கி வாலாட்டும் போது
மின் பெட்டியின் ஓரம் கொட்டிய கேரட்டை
கடைவாய் ஒழுக ஒழுகத் தின்கிறது
அங்காடியை அலைக்கழித்த மாடு
5
வாகன இரைச்சலிலும் உறங்குகிறது
துருப்பிடித்த ஆட்டோவில் கட்டிய கன்று
சுள்ளென்று அடிக்கும் வெய்யிலிலும்
டைல்ஸ் தரைமீது எப்படித்தான் படுத்திருக்கிறதோ
கண்ணாடிக் கதவைத் திறந்து
வாசலை எழுப்பி எழுப்பி விடுகிறாள்
ஏசி காற்றில் வெப்பம் தணிந்ததுதான் மிச்சம்
பச்சை மஞ்சள் குடையின் கீழ் காய்கறி விற்பவள்
வாழைப் பூ இதழ்களைப் பிய்த்துப் பிய்த்து எறிகிறாள்
தின்று முடித்ததும் அவளும் அடித்து விரட்டுகிறாள்
சற்று நிதானித்த கார்
மாட்டின் மோவாயை மோதியபடி நகர்கிறது
அதன் நிழலைப் பற்றியபடி கன்றும்
6
மாலை கோர்த்து எஞ்சிய அறுகம்புல்லை
மேய்ந்துகொண்டிருகிறது மாடு
பூணூல் ஆடியபடி வந்த கிழவன்
கிண்ணத்துக் கீரைக்கடைசலை
நடைமேடை மீது வைத்தான்
உறிஞ்சிக்குடித்த மாடுகள்
நண்பகலின் உயர்ந்த கட்டடத்து நிழலில் இளைப்பாற
கீழ்த்தளத்துப் பணிப்பெண்ணோ
நிழலற்ற மாட்டை விரட்டிக்கொண்டே இருக்கிறாள்
7
வாகனத்தில் தொங்கும் பூமாலையைப் பற்றி இழுக்கிறது மாடு
சிதறும் இலைகளை
கன்று மேய்கிறது
உருண்டோடும் எலுமிச்சையை
வாகனத்தின் அடியில் பதுங்கிய நாய்
விரட்டி விரட்டிச் செல்கிறது
8
ஶ்ரீ ஆதிநாத் ஜெயின் கோயில் மணியோசை ஒலிக்கிறது
சுவரில் மாட்டப்பட்ட சிசிடிவி கேமரா முன்பு
தேங்காய்ப் பருப்புகளைக் கொறித்துக்கொண்டிருக்கிறான்
தெருவிளக்கு வெளிச்சத்தில் மனிதக் கால்கள் தெருக்களை மறைக்க
இன்னும் மாடுகளின் கனசதுர வயிறு குழிவிழுந்தே காணப்படுகிறது
மாட்டின் கழுத்தில் ஊசியைக் குத்தியதும்
கன்றை அவிழ்த்துவிடுகிறான் சிறுவன்
இரண்டொரு சப்புதலுக்குப் பிறகு கயிறு இறுக்கப்பட
CLF பல்பில் பளபளக்கின்றன காய்களும் பழங்களும்
9
ஆட்டோ வெளிச்சத்தில் துள்ளிவருகிறது கன்று
பால்கொடுக்கும் மாட்டுக்கு கஞ்சி வாளியை வைத்து நிற்கிறாள் பாட்டி
மகிழ மரத்தில் தொட்டிகள் தொங்குகின்றன காலங்காலமாய்
பார்த்தசாரதி கோயிலுக்குள் நுழைபவன்
இரண்டு வாழைப்பழங்களை மாட்டுக்கு நீட்டி
குண்டியைத் தொட்டுக்கும்பிடுகிறான்
நழுவி விழும் ஒற்றைப் பழத்துக்கு
சற்று தூரத்தில் நின்றவள் திடுக்கிடுகிறாள்
சக்கரங்களுக்குள் புகுந்து ஓடுகிறது பூனை
10
தொழுவமற்ற மாட்டின் கால்கள்
இருளிலும் ஒளியிலும் அலைகின்றன
கோயில் வாசலில் படுத்திருக்கும் அதன் முதுகின் மீது
ஒரு கல் எறியப்படுகிறது
இடைவிடாது ஹாரன் ஒலிக்கிறது
ஆனாலும் எழுவேனா என்கிறது
முதுகெலும்பின் மீது முழங்கையால் குத்தி விரட்டுகிறவனை
ஆசீர்வதிக்கிறாள் மூதாட்டி
தான் படுத்திருந்த தெற்குக் குளக்கரைத் தெருவையே
சுற்றிச் சுற்றி வருகிறது மாடு