Stan and Ollie: ஒத்திகைப் பார்ப்பதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

 Stan and Ollie: ஒத்திகைப் பார்ப்பதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

ராம் முரளி

 

யர்லாந்தை நோக்கி அந்த கப்பல் பயணம் செய்துகொண்டிருந்தது. புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான லாரல், ஹார்டி தங்களது மேடை அரங்கேற்றத்திற்காக அதில் பயணிக்கிறார்கள். 1927ஆம் வருடத்தில் இருந்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்த லாரல், ஹார்டி தங்களது இறுதியான மேடை நிகழ்வுக்காக அயர்லாந்து செல்கிறார்கள். வயோதிகம் அவர்களை களைப்படைய செய்திருக்கிறது. கப்பலின் மேல்தளத்தில் அருகருகே அமர்ந்தபடியே, அடுத்து நடிப்பதாக இருக்கும் ’ராபின் ஹூட்’ திரைப்படம் ஒன்றைப் பற்றி விவாதிக்கிறார்கள். கதையில் தங்களை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம் என்பது அவர்களது விவாதமாக இருக்கிறது. உடல் சோர்வையும் மீறி திரைப்படம் சார்ந்த உரையாடல் அவர்களை உற்சாகமூட்டுகிறது.

உண்மையில், ‘ராபின் ஹூட்’ திரைப்படம் அப்போது கைவிடப்பட்டிருந்தது. இருவரும் அதனை அறிந்தே வைத்திருந்தனர். நிதிப் பற்றாக்குறையால் கைவிடப்பட்டதாக, தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. ஆனாலும், லாரலும் ஹார்டியும் அந்த சுற்றுப்பயணம் முழுவதிலும் அதற்கான ஒத்திகைகளை செய்துகொண்டே இருந்தார்கள்.

கப்பல் மேல்தளத்தில் லாரல் தன்னருகில் அமர்ந்திருக்கும், தனது இணையான ஹார்டியிடம், “படம் கைவிடப்பட்டதை தெரிந்த பிறகும், நாம் ஏன் ஒத்திகைகளை செய்துகொண்டே இருக்கிறோம்?” எனக் கேட்கிறார். இரு நொடிகள் அமைதியாக அவரையே ஆழ்ந்துப் பார்க்கும் ஹார்டி, ஒரு விரக்தியான புன்னைகையுடன், “ஒத்திகைப் பார்ப்பதை தவிர நம்மால் வேறு என்னதான் செய்ய முடியும்?” என்கிறார். நெகிழ்வூட்டும் இசை பின்னணியில் ஒலிக்க, கேமிரா அவர்களது முகங்களில் இருந்து விலகிச் செல்கிறது.

 

ஜான்.எஸ். பேர்ட்டால் உருவாக்கப்பட்டிருக்கும் Stan and Ollie திரைப்படம் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான லாரல், ஹார்டியின் இறுதி தினங்களை பதிவு செய்திருக்கிறது. புதிய இளம் கலைஞர்கள் பலர் கண்டெடுக்கப்பட்டு, ஹாலிவுட் திரைத்துறையை ஆக்கிரமித்திருந்த காலமொன்றில் லாரல், ஹார்டியின் நிலை எவ்வாறிருந்தது என்பதை இத்திரைப்படம் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. அப்போது ’பழைய’ முதல் தலைமுறையை சேர்ந்த லாரல், ஹார்டிக்கான திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்தன. அதனால், இறுதி காலத்தில் மேடை நாடகங்களில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அத்தகைய பயணம் ஒன்றின் அனுபவங்களின் வழியே இவர்களது உறவை ஆராய்கிறது Stan and Ollie திரைப்படம்.

A.J.Marriot எழுதிய ‘Laural And Hardy – The British Tours’ எனும் புத்தகத்தை தழுவி ஜெஃப் போப் திரைக்கதை அமைத்திருக்கிறார். எந்தவிதமான அவசியமற்ற சேர்ப்புகளும் இல்லாமல், மிக எளிமையாக திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

கிட்டதட்ட நூறு படங்களுக்கு மேலாக இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். மெளன படமான The Second Hundread Yearsல் (1927) தொடங்கிய அவர்களது பயணம், பின்னர் பல்வேறு குறும்படங்கள், முழு நீளத் திரைப்படங்கள், பேசும் படங்கள், மேடை அரங்கேற்றங்கள் என முப்பது வருடங்களுக்கும் மேலாக நீண்டிருந்தது. சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன் போன்ற திறன்மிகுந்த நகைச்சுவை நடிகர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த அதே காலகட்டத்தில்தான் லாரல், ஹார்டியும் தங்களுக்கென தனித்ததொரு பாதையை கட்டமைத்து பயணித்திருக்கிறார்கள்.

இருவருமே தனித்தனியாக சாப்ளின் உடனும் தொடக்க காலங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அமெரிக்க நடிகரான டிக் வான் டைக் (Dick Van Dyke) சாப்ளினை விடவும் லாரல் மிகச் சிறந்த நடிகர் என்று குறிப்பிடுகிறார். ”சாப்ளினிடம் யுத்திகள்தான் பெரிதும் வெளிப்படுகின்றன. ஆனால், லாரல் வெறும் யுத்திகளால் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறவர் இல்லை” என்பது அவரது வார்த்தைகளாகும்.

இப்போது வரையிலும் லாரல், ஹார்டியின் நகைச்சுவையை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 2005ஆம் வருடம் பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட தலைச் சிறந்த நகைச்சுவை நடிகர்களுக்கான கருத்து கணிப்பில் லாரல், ஹார்டிக்கு ஏழாவது இடம் கிடைத்தது. சாப்ளின் அப்பட்டியலில் பதினெட்டாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Stan and Ollie திரைப்படம் மிகச் சரியாக லாரல், ஹார்டி பிரபலமாக இருந்த ஒரு காலத்தில் தொடங்குகிறது. அது 1937ஆம் வருடம். Way Out West எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அப்போது நிகழ்கிறது. லாரலும் ஹார்டியும் ஒப்பனை அறையில் இருந்து பல்வேறு விஷயங்களைப் பற்றி உரையாடியபடியே படப்பிடிப்பு தளத்துக்கு நடந்துச் செல்கிறார்கள். ஒற்றைய நீண்ட காட்சிப் பதிவாக அவர்களது உரையாடல் படம்பிடிக்கப் பட்டிருக்கிறது.

பொருளாதார நிலை, பெண்களுடனான உறவுநிலைகள், சாப்ளின் மற்றும் கீட்டனின் அபாரமான வளர்ச்சி என அவர்களது உரையாடல் நகர்ந்தபடியே இருக்கிறது. லாரலுக்கு தாங்கள் இருவரும் ஸ்டுடியோவின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி சுயமாக இயங்க வேண்டும் எனும் விருப்பம் இருக்கிறது. அப்போதுதான் தங்களால் சாப்ளின் அளவுக்கு பெரும் புகழ்பெற முடியும் என கருதுகிறார். தங்களது திறன்களால் பயனடைவது தயாரிப்பாளர் ஹால் ரோச்-தான் என்பது அவரது வாதம்.

ஒன்று சம்பளத் தொகையை உயர்த்த வேண்டும் அல்லது ஒப்பந்தத்தில் இருந்து இருவரும் விலகிவிட வேண்டும் என லாரல் நினைக்கிறார். ஹார்டிக்கு பணம் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தாலே போதும் என்றிருக்கிறது. எதையும் அனுசரித்து நடந்துகொள்ளும் இயல்பு கொண்டவர் ஹார்டி. அதனால், லாரலிடம் இந்த பிரச்சினையை பெரிதுப்படுத்த வேண்டாம் என்கிறார்.

படப்பிடிப்பு தளத்தை அடைந்தவுடன் ஹால் ரோச் அவர்களுக்கு முன்னால் எதிர்படுகிறார். லாரலுக்கும் அவருக்கும் இடையில் உடனடியாக வாக்குவாதம் தொடங்குகிறது. ஹால் ரோச்சுக்கு லாரலின் மீது அதிருப்தி உண்டாகிறது. உண்மையில், ஹால் ரோச்சுக்கு தேவையானவர் ஹார்டி மட்டும்தான். ஏனெனில், பெரிதான உருவம்கொண்ட ஹார்டியின் பாவனைகள்தான், இந்த இருவர் இணையின் பிரதானமான அம்சம் என்பது அவரது எண்ணம். தொடக்கத்தில், அவர்கள் இருவரையும் ஒருங்கிணைத்ததே ஹால் ரோச்தான். அதனால், லாரலை அவர் பொருட்படுத்துவதில்லை.

லாரலுக்கு மாற்றாக அடுத்தடுத்த திரைப்படங்களில் வேறொரு நடிகரை பயன்படுத்தப்படுத்த ஹால் முடிவு செய்கிறார். ஒப்பந்தத்தில் இருப்பதால், ஹார்டியால் அவரை மறுத்து பேச முடிவதில்லை. வேறொரு இணையுடன் சேர்ந்து நடிக்கத் தொடங்குகிறார். இதனால், பெரிதும் அவநம்பிக்கைக்குள்ளாகிறார் லாரல். அதன்பிறகும், அவ்வப்போது இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் என்றாலும், முன்புபோல அவர்களது உறவு சீரானதாக இல்லை.

அக்காலத்தில் வெளியான பெரும்பாலான நகைச்சுவை திரைப்படங்களில் பருமனான உடல்கொண்ட ஒரு நடிகரை பயன்படுத்தப்படுவது வழக்கமாகவே இருந்தது. அவரைச் சுற்றியே கதை நகர்ந்து கொண்டிருக்கும். அவர்களது இயலாமை, களைப்பு, அசைவுகள், அசட்டுத்தனங்கள், நடனம் இயல்பாகவே பார்வையாளர்களிடத்தில் சிரிப்பலையை கிளர்த்திவிடும். ஹார்டி இதற்கு மிக கச்சிதமான பொருந்தக்கூடியவர். மேலும், அவரது நடிப்புதிறனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இருவர் இணையில், தனது உருவத்தின் காரணமாகவும் அவர் தனியே தெரிந்தார். அதனால் ஹார்டியை ஹால் ரோச் தக்கவைத்துக்கொண்டார்.

லாரலை பொருத்தவரையில், அவர் இனி சுயமாக இயங்க வேண்டியிருந்தது. இருவர் கூட்டணி உருவாவதற்கு முன்பிருந்தே லாரல் தனித்து நடித்திருக்கிறார் என்றாலும், சாப்ளினைப் போலவோ அல்லது கீட்டனைப்போலவோ அவரால் ஒரு அலையை உருவாக்க முடியவில்லை. அவரது நகைச்சுவை பெரிதும் சம்பவங்களால் கட்டமைக்கப்பட்டிருந்ததே அன்றி, தனிநபரை பிரதானப்படுத்தும் அம்சம் எதுவும் இருக்கவில்லை. ஹார்டியுடன் இணைந்துதான் தனது பிம்பத்தையும் லாரல் கட்டமைக்க வேண்டியிருந்தது.

 

ஹாலின் நடவடிக்கையால், லாரல் கடும் மன வேதனைக்கு உள்ளாகிறார். ஹார்டியும் தனக்கு ஆதரவாக இல்லை என்பது மேலும் அவரை துயரத்தில் ஆழ்த்துகிறது. இருவரது இணையில் ஏற்பட்ட விரிசலில் பெரிதும் பாதிக்கப்பட்டது நிச்சயமாக லாரல்தான். “நேற்று வரையில் ஹாலிவுட்டில் நான் பிரதான நட்சத்திரம். இன்று நான் யாருக்கும் தேவையானவன் இல்லை” என்று லாரல் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

ஹார்டியை தன் பக்கம் இழுக்க நினைத்த லாரலின் முயற்சிகள் எதுவும் கைக்கூடவில்லை. பெரும் சிரமத்துக்கு இடையில் லாரலின் காலம் உருண்டோடியது.

பல வருடங்களுக்கு பிறகு, இருவரும் லண்டனுக்கு தங்களது வயதேறிய காலத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார்கள். பல்வேறு மேடைகளில் நிகழ்வுகளை நடத்துகிறார்கள். சிறுக சிறுக அவர்களது மீள்வருகை மக்கள் மத்தியில் வரவேற்பை பெருகிறது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கிறது. அரங்கத்தில் ஆரவாரம் பெருகுகிறது.

இந்த நிலையில், ஒரு விருந்தின்போது லாரலும் ஹார்டியும் கடந்த காலத்தைப் பற்றி உரையாடுகிறார்கள். லாரல், “நீ நமது நட்புக்கு பெரும் துரோகம் இழைத்துவிட்டாய். நான் நம்மை மிகவும் நேசித்தேன்” என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்த, ஹார்டியும் உணர்ச்சி வேகத்தில், “நாம் நண்பர்கள் என்று யார் சொன்னது? ஹால் நம்மை சேர்ந்து நடிக்கச் செய்ததால், நாம் ஒன்றாக பயணிக்க வேண்டியிருந்தது. மற்றபடி நமக்குள் எந்த நட்பும் இல்லை. நீ லாரல் & ஹார்டியைதான் நேசித்தாய். ஆனால், ஒருபோதும் என்னை நேசித்திருக்கவில்லை” என்று கலங்கிய கண்களுடன் பேசிவிட்டு நகர்வார்.

லாரல் உணர்ச்சிவசப்பட்டு, தனது தொப்பியால் அவரை தாக்க, அவரும் பதிலுக்கு தாக்குவார். மனதை நெகிழச் செய்யும் அக்காட்சியின்போது சுற்றி இருக்கும் அனைவரும், அவர்களுக்குள் நிகழ்ந்த இந்த சிறு முரணைப் பார்த்து வாய்விட்டு சிரிப்பார்கள். அவர்களை பொருத்தவரையில், லாரல் & ஹார்டி எது செய்தாலும் அது நகைப்புக்குரியதுதான்.

இந்த தருணத்திற்கு பிறகு, ஹார்டியின் உடல் மேலும் மேலும் களைப்புறுகிறது. நோய்மையில் வீழ்கிறார். அவர் இனி மேடையில் நடிக்கக்கூடாது என மருத்துவரால் அறிவுறத்தப்படுகிறார். இதனால், இப்போது ஹார்டிக்கு மாற்றாக வேறொரு பருமனான நடிகரை பயன்படுத்தலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்கிறார். ஹார்டி இல்லாத மேடையில் தானும் இனி நடிப்பதில்லை என்று நிகழ்ச்சியை ரத்து செய்துவிடுகிறார் லாரல்.

தனது அறையில் போர்வைக்குள் சுருண்டிருக்கும் ஹார்டியை பார்க்க லாரல் வருகிறார். அருகில் அமர்ந்து, உடல் நலத்தை விசாரித்துவிட்டு, “அன்று என்னை உன் நண்பன் இல்லை என்று சொன்னது பொய்தானே?” எனக் கேட்கிறார். ஹார்டி நெகிழ்வுடன் தலையசைத்துவிட்டு, லாரலின் கைகளைப் பற்றிக்கொள்ள, இருவரும் உறைந்த நிலையில் அப்படியே அமர்ந்திருக்கிறார்கள். ஒருவர் மீதான மற்றவரின் ஆழமான நேசிப்பு வெகு அழகாக இக்காட்சியில் வெளிப்படுகிறது. ஹார்டிக்கு மீண்டுமொருமுறை லாரலுடன் இணைந்து மேடை ஏற வேண்டும் என்கின்ற ஆசை இதன்பிறகு உண்டாகிறது.

நோய்மையையும் மீறி லாரலுடன் இணைந்து மேடை ஏறுகிறார் ஹார்டி. உடல் வலியெடுக்கும் நிலையில் மக்களின் முன்னால் தனது அசட்டுத்தனமான நடனத்தால் சிரிப்பை உண்டாக்குகிறார். தங்களது முப்பது வருட நட்புக்கான ஒரு சிறிய பாராட்டு போல இருக்கிறது அரங்கத்தில் ஹார்டியின் வெளிப்பாடு. அவர்களது அனைத்து ஆக்கங்களுக்கும் எதிர்வினை புரிந்ததைப்போலவே, அப்போதும் சிரித்து கொண்டாடுகிறார்கள் பார்வையாளர்கள். லாரலும் ஹார்டியும் இறுதி இறுதியாய் உயிர்ப்புடன் மக்கள் முன்னிலையில் இருந்து விடைபெறுகிறார்கள். கேமிராவில் பதிவாக்கப்பட்டிருக்கும் அவர்களது செய்கைகள் மட்டுமே லாரல், ஹார்டியின் திறன்களை காலகாலமாய் முன்னகர்த்திக்கொண்டே இருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்கு பின்னர், இருவருமே திரைப்படங்களிலோ அல்லது மேடை அரங்கேற்றங்களிலோ பங்கேற்கவேயில்லை. அந்த சுற்றுப்பயணம்தான் லாரலும், ஹார்டியும் இணைந்து பங்கேற்ற கடைசி நிகழ்வு.

முப்பது வருடங்கள் லாரல், ஹார்டி என்கின்ற ஒற்றைய பிம்பத்தை இருவரும் பகிர்ந்திருக்கிறார்கள். பின்காலத்திய பல கலைஞர்களுக்கு உந்துதலாக திகழ்ந்திருக்கிறார்கள். படத்தின் ஒரு காட்சியில், “காலங்களை தாண்டியும் நம்மை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்” என்பார் லாரல். இன்றும் நாம் லாரல், ஹார்டி என்றே அவர்களை இணைத்துதான் அடையாளப்படுத்துகிறோமே தவிர, தனித்தனி கலைஞர்களாக அல்ல.

லண்டன் சுற்றுப் பயணத்திற்கு பின்னர் நான்கு வருடங்களுக்கு பிறகு ஹார்டி மரணம் எய்திவிட, லாரலும் நடிப்பில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிட்டார். அந்த குறிப்பிட்ட வருடங்களில் எந்தவொரு நடிப்பு செயல்பாட்டையும் அவர்கள் இருவரும் செய்திருக்கவில்லை. உருப்பெறாத ஒரு நிகழ்வுக்கான ஒத்திகைகளிலேயே அவர்களது காலம் கழிந்திருக்கும்.

திரைவெளியில் பல்வேறு கதாப்பாத்திரங்களை தங்களின் மீது நிகழ்த்தி காட்டும் கலைஞர்களின் சுய வாழ்க்கை அலைகழிப்புகளையும் போராட்டங்களையும் எவரொருவரும் அறிந்திருப்பதில்லை. நாம் அவர்களை திரையின் மீது படரும் பிம்பங்களாகவே பாவிக்கிறோம். அல்லது யதார்த்த வாழ்க்கையில் இருந்து துண்டிக்கப்பட்ட உச்ச நட்சத்திரங்களாக கருதி மோகிக்கிறோம். வூட்டி ஆலன் ஒருமுறை, “திரைப்படங்களில் நான் நகைச்சுவையாக தோன்றுவதைப்போலவே, யதார்த்ததிலும் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்றார். ஆனால், அனைத்துவிதமான புறயுலக சவால்களையும் எதிர்கொள்ளும் எளிய உயிர்கள்தான் திரையுலக கலைஞர்களும் என்பதை இதுபோன்ற அரிதான சில திரைப்படங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

Stan and Ollie பெரும் சலனத்தை உருவாக்கிய இரண்டு அற்புத கலைஞர்களை நினைவுப்படுத்துவதோடு, கூடுதல் நெருக்கமாக அவர்களை உணரவும் வழிவகை செய்கிறது.

 

“ராம் முரளி” <raammurali@gmail.com>

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *