கருணை உணர்வில் இருந்தே நகைச்சுவை பிறந்திருக்க வேண்டும்!

 கருணை உணர்வில் இருந்தே நகைச்சுவை பிறந்திருக்க வேண்டும்!

சார்லி சாப்ளின்
தமிழில்: ராம் முரளி

 

உலகம் முழுக்க நகைச்சுவை கலைஞர்களுக்கு ஆதர்சமாகத் திகழ்பவர் சார்லி சாப்ளின். கேளிக்கை உணர்வின் பொதுவான பிம்பமாக அவரது நாடோடித் தோற்றமே நிலை பெற்றிருக்கிறது. பசி, வறுமை, கையறுப்பட்ட நிலை, அனாதைத் தோற்றம், சமூக உதிரி என விளிம்பு நிலை மனிதர்களின் பிரதிநிதியாகத் திகழும் சாப்ளின், அந்நிலையில் இருந்து மீளச் செய்யும் முயற்சிகளில் நேரும் சிக்கல்களை, பெரும் பெரும் நகைச்சுவை கதைகளாக உருவாக்கியவர். கேளிக்கையுணர்வே மையம் என்றாலும், அதனைக் கடந்த ஆழமான மனித நேயத்தைத் தொடர்ச்சியாக சாப்ளின் திரைப்படங்கள் பேசி இருக்கின்றன. காலங்களைக் கடந்தும் உலக சினிமாவின் தலைசிறந்த உருவாக்கமாக சார்லி சாப்ளினின் கதாபாத்திரம் இருக்கிறது. 1966ஆம் ஆண்டில் தனது திரைப்படங்கள் பற்றியும், நாடோடி தோற்றத்தின் உருவாக்கம் குறித்தும் திரைப்பட ஆர்வலர் ரிச்சர்ட் மேரிமேனுக்கு சாப்ளின் அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது.

 

இந்த நேர்காணல் முற்றிலுமாக உங்களது கலை பற்றியும், பணி பற்றியும் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. நீங்கள் எவ்விதமாக வேலை செய்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்.

என்னைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் என்பது எனது வேலைகளில் நான் முழு ஈடுபாட்டுடன் இயங்குகிறேன் என்பதுதான். நான் செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் முழுமையான அர்ப்பணிப்புடன்தான் செய்கிறேன். வேறு ஏதாவதொன்றை என்னால் இதைவிடவும் அதிகப்படியான அக்கறையுடன் நெருங்கிச் செல்ல முடியும் என்றால், நான் அதனை செய்திருப்பேன். ஆனால், என்னால் அப்படி சிந்திக்கக்கூட முடியவில்லை.

உங்களது நகைப்புக்குரிய நாடோடி தோற்றம் உருவான கணத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா?

இது மிக அவசரமான ஒரு மனநிலையில் உருவாகி வந்ததுதான். ஒளிப்பதிவாளர் உடனடியாக ஏதாவது ஒரு ஒப்பனையை போட்டுக்கொள்ளும்படி என்னிடம் தெரிவித்தபோது, எனது மனதில் சிறிதளவுகூட இந்த தோற்றம் குறித்த சித்திரம் உருவாகி இருக்கவில்லை. உடைகள் மாற்றும் அறைக்கு வேகவேகமாக செல்லும்போது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் எனது உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன். தொளதொள கால்சட்டை, இறுக்கமான மேல் சட்டை, பெரிய தலை, அதற்கு சற்றும் பொருந்தாத சிறிய தொப்பி என மனதில் இந்த தோற்றம் சிறிய அளவில் உருவாகிக் கொண்டிருந்தது. தொப்பி ஒரே சமயத்தில் நகைப்புக்குரியதாகவும் மேட்டிமைத்தனத்துடனும் இருக்க வேண்டும் என நினைத்தேன்.

எனது முக அலங்காரம் எப்படி அமையப் போகிறது என்று அப்போது முடிவு செய்திருக்கவில்லை. துயரத்தில் ஆழ்ந்த நிலையில், மிகக் கடுமையாக எனது முகம் இருக்க வேண்டும் என்று மட்டும் தெரியும். எனது முகத்தில் படர்ந்துள்ள நகைச்சுவை உணர்வை மறைப்பதற்காக சிறிய அளவிலான மீசையைப் பயன்படுத்தினேன். மீசையின் பயன்பாட்டிற்கு வேறு எந்தவொரு குறிப்பிட்ட அர்த்தமும் இல்லை. ஆனால், முரணாக அந்த மீசை எனது முகத்தை மேலும் வேடிக்கை மிக்கதாகக் காண்பித்துவிட்டது.

உங்களது இந்த நாடோடியின் தோற்றத்தை முதன்முறையாக பார்த்தபோது உங்களது உணர்வு எப்படி இருந்தது?

கேமிராவின் முன்னால் முதன்முறையாக இந்த தோற்றத்தில் நிற்கும்வரையில், பெரியளவில் எந்தவொரு சலனத்தையும் இந்த தோற்றம் ஏற்படுத்தப் போவதில்லை என்றே நினைத்திருந்தேன். எனினும், நான் ஏற்றிருந்த பாத்திரத்திற்கு இது போதுமானது என்கின்ற எண்ணம் என்னிடத்தில் இருந்தது. முழு ஒப்பனையுடன் மெல்ல படப்பிடிப்பு தளத்தை நெருங்கிச் செல்லும்போது பொருத்தமான ஆடையை அணிந்திருக்கிறோம் என்று உணர்ந்தேன். அதோடு, அந்த கதாபாத்திரத்திற்குரிய நடத்தை எனது உடல்மொழியில் தன்னியல்பாக உருவாகியிருந்தது.

‘Mabel’s Strange Predicament’ என்ற அந்த திரைப்படத்தில், எனது காட்சி ஒரு உணவகத்தின் வரவேற்பு அறையில் நிகழ்வதாக இருந்தது. அந்த நாடோடி அவர்களது விருந்தினரைப்போல அங்கு பாவனை செய்கிறான். இதனால், தன்மையான உபசரிப்பும் சிறிது நேரம் ஓய்வெடுக்க ஒரு வசதியான இருக்கையும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறான். அங்கிருக்கும் அனைவரும் அவனை முதலில் விநோதமாக பார்க்கிறார்கள். அவனும் சளைக்காமல் விருந்தினரைப் போலவே பலவிதமான செய்கைகளை செய்து கொண்டிருக்கிறான். பதிவேட்டை பார்வையிடுவது, சிகரெட் பற்ற வைப்பது, சுற்றி நடந்து கொண்டிருப்பவர்களை மேட்டிமைத்தனத்தோடு பார்வையால் தொடுவது என அவனது செய்கைகள் இருக்கிறது. அதோடு அப்போது புகையிலை சாம்பலை தாங்கி நிற்கும் கிண்ணத்தின் மீது லேசாக தடுமாறி விழவும் செய்தேன். இந்த தோற்றத்தில் அதுதான் நான் செய்த முதல் வேடிக்கை நிகழ்வு.

அந்த தருணத்திலேயே அந்த கதாபாத்திரம் பிறப்பெடுத்திருந்தது. இது சிறப்பானதொரு கதாபாத்திரம் என்று மட்டும் நினைத்திருந்தேன். தொடர்ச்சியாக இதே தோற்றத்தில் திரைப்படங்களில் நடிப்பேன் என அப்போது கருதவில்லை.

எனது உடைகளையும் ஒப்பனையையும் பற்றி அதிகம் சிந்திடாத நான், அந்த தோற்றத்தின் ஒரு அங்கமாக இருந்த காயம்பட்ட கால் பாதத்தை மட்டும் தக்கவைத்துக் கொள்வதென்று முடிவுடன் இருந்தேன். அவன் எவ்வளவு உற்சாகமான மனநிலையில் இருந்தாலும், அல்லது பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாலும், அவனது கால் பாதம் எப்போதும் அசெளகர்யமூட்டும் விதத்தில்தான் இருக்க வேண்டும். உடைகளை நிர்வகிக்கும் பிரிவினரிடம் எனக்கு இரண்டு பெரிய பழமையான ஷூக்கள் வேண்டும் என சொன்னேன். ஏனெனில், எனது கால் பாதங்கள் மிக மிக சிறியவை. அதனால், இந்த பெரிய காலணிகளை அணியும்போது இயல்பாகவே ஒருவித கேளிக்கை உணர்வு உருவாகிவிடுகிறது. நான் நயமிக்கவன். ஆனால், பெரிய காலணிகளுடன் குழைவாகவும் வசீகரமாகவும் என்னை காண்பித்துக்கொள்ள முயற்சிக்கையில் அது உண்மையிலேயே வேடிக்கையானது.

Mabel’s Strange Predicament

நாடோடி தோற்றத்திற்கு இன்றைய காலத்தில் மதிப்பு இருப்பதாக கருதுகிறீர்களா?

அதுபோன்ற மனிதருக்கு இக்காலத்தில் இடமில்லை என்றே கருதுகிறேன். உலகம் இப்போது சற்றே கூடுதல் ஒழுங்குடன் இயங்குகிறது. எந்த வகையிலும் உலகம் இப்போது மகிழ்ச்சியுடன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் சில சிறுவர்களைப் பார்க்கிறேன். குட்டை உடையுடனும் நீண்ட தலைகேசத்துடனும் உலவும் அவர்களில் சிலர் ஒரு நாடோடியைப் போல தங்களை மாற்றிக்கொள்வதில் விருப்பமுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களிடத்தில் பணிவு இல்லை. அவர்களுக்குப் பணிந்து செல்வதன் அர்த்தமே புரிந்திருக்காது என்று நினைக்கிறேன். அதனால், இயல்பாகவே அந்த தோற்றம் ஒரு பழமைவாதத்தை எய்திவிடுகிறது.

சாப்ளினது உருவம் இப்போது முன் காலத்தை சேர்ந்ததாகிறது. அதனால்தான், என்னால் இப்போது முன்புபோல இயங்க முடியவில்லை. அதோடு மற்றுமொரு காரணம் – திரைப்படங்களில் சேர்க்கப்படும் ஒலி. உரையாடல் திரைப்படங்களில் நுழைந்தபோது, எனது கதாபாத்திரம் தொலைந்துவிட்டது. அவனுக்குக் குரல் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. அதனால், காலத்தில் அவன் தொலைந்து போவதுதான் நியாயமானது.

உங்களது நாடோடி தோற்றத்தின் சிறப்பு அம்சமாக எதனைக் கருதுகிறீர்கள்?

அவனது பணிவும் ஏழ்மையும்தான். அதைத்தான் இந்த கதாபாத்திர உருவாக்கத்தின் முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். இது எனக்கு பெரும் மகிழ்வை கொடுக்கிறது. அவன் அனைத்தையும் மென்மையாகவும் அதே சமயத்தில் துடிப்புடன் அணுகுகிறான். ஆனால், ஒருபோதும் இந்த நாடோடி கதாபாத்திரம் பிறரால் விரும்பப்பட வேண்டும் என நான் நினைத்ததில்லை. இது என்னுள்ளாக நிகழுகின்ற என்னை வெளிப்படுத்திக்கொள்ள நான் தேர்வு செய்திருக்கின்ற பாணி.

பார்வையாளர்களின் ஆராவாரம் என்னை உற்சாகப்படுத்துகிறது என்பது உண்மைதான் என்றாலும், பார்வையாளர்களிடம் எவ்வகையிலும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது இல்லை. பார்வையாளர்களின் உள் நுழைவு என்பது அந்த குறிப்பிட்ட நிகழ்வு முடிந்ததற்கு பின்பாகத்தான் வருகிறதே தவிர, உருவாக்கத்தின்போது அல்ல. எப்போதும் எனக்குள்ளாக உருவாகின்ற ஒருவித கேளிக்கை உணர்வால் உந்தப்பட்டுதான் என்னை வெளிப்படுத்திக்கொள்கிறேன். அவ்வுணர்வே எனது செய்கைகளையும் பாவனைகளையும் தீர்மானிக்கிறது. இது உண்மையிலேயே வேடிக்கையானது.

ஒரு சிக்கலான சூழலை எப்படி உருவாக்குகிறீர்கள்? அது தன்னிச்சையாக வருவதா அல்லது அதற்கென ஏதேனும் வழிமுறைகள் இருக்கிறதா?

இல்லை. அதற்கென்று எந்தவொரு வழிமுறையும் இல்லை. மிகச் சிறந்த பல யோசனைகள் நெருக்கடியான தருணத்தில்தான் உருவாகிறது. ஒரு நல்ல நகைச்சுவைக்கான யோசனை உங்களுக்குக் கிடைத்துவிட்டதென்றால், அது மெல்ல அடுத்தடுத்த செய்கைகளுக்குத் தானாக உங்களை வழி நடத்திச் செல்லும்.

The Rink

‘The Rink’ திரைப்படத்தில் வரும் ஸ்கேட்டிங் காட்சியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஸூக்களை காலில் அணிந்துகொண்டு பார்வையாளர்களுக்கு மத்தியில் இறங்கிவிட்டேன். எல்லோரும் நான் கீழே விழப்போவதாக நினைக்கிறார்கள். ஆனால், அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாகத் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து, இறுதியில் நிதானமாக ஒற்றைக் காலில் சறுக்கு விளையாடி ஓய்கிறேன். ஒரு நாடோடியால் இதை செய்ய முடியும் என்பதை பார்வையாளர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

‘Easy Street’இல் வரும் தெரு விளக்கு காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். நான் காவல்துறையை சேர்ந்தவனாகவும் ஒரு வலிமையானவனை அடக்குவதாகவும் அமைந்த காட்சி தருணத்தில் உண்டாகிய நகைச்சுவை அது. ஒரு குறுந்தடியால் அந்த வலிமையானவனைத் தாக்குகிறேன். தொடர்ச்சியாக அடித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால், எனது தாக்குதல் அவனில் எந்தவிதமான பதற்றத்தையோ தளர்வையோ உருவாக்கவில்லை. அதுவொரு கெட்ட கனவைப் போல இருக்கிறது. அவன் தனது சட்டையின் கைப் பகுதியை மடித்து விடுகிறான். அதன்பிறகு, என்னை மேலுயர்த்தி கீழே தூக்கி எறிகிறான். அவனது வலிமையை என்னால் உணர முடிகிறது. அவனால், அந்த தெரு விளக்கையே வளைத்து ஒடிக்க முடியும் என்று நினைக்கும் நான், அவனது முதுகின் மீது ஏறி அந்த விளக்கில் அவனது முகத்தைப் பொருத்திவிடுகிறேன். சிறிய சிறிய வேடிக்கையான செய்கைகளின் மூலமாக, இந்த காட்சியை பெரும் நகைச்சுவை மிக்கதாக நான் மாற்றிவிட்டேன்.

ஆனால், பல வேதனை மிகுந்த தினங்களும் இருக்கத்தான் செய்கின்றன. எந்தவொரு யோசனையும் இல்லாமல் வேலையற்று இருந்த பல பெரும்பொழுதுகளும் இருக்கின்றன. என்னுடைய வேலை என்பது பிறரை சிரிக்க வைப்பதுதான் என்றாலும், வேடிக்கையான ஒரு தருணத்தை உருவாக்காமல், நகைச்சுவை உருவாகாது. நீங்கள் கோமாளியைப்போல வேடிக்கை செய்யலாம், முட்டாளைப்போல நடந்துகொள்ளலாம். ஆனால், நிச்சயமாக தருணங்களை உருவாக்குவது முக்கியமானது.

நேரில் பார்க்கும் விஷயங்களை வைத்து இத்தகைய தருணங்களை உருவாக்குகிறீர்களா அல்லது இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக உங்களது கற்பனையில் உருவாகி வருகிறதா?

இல்லை. எங்களது உலகத்தை நாங்களாகவேதான் உருவாக்கி இருக்கிறோம். கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு ஸ்டூடியோவில்தான் எனது நகைச்சுவைகள் படமாக்கப்படுகின்றன. எனது பெரும் மகிழ்ச்சியான நேரம் என்பது ஸ்டூடியோவில் நான் அமர்ந்திருக்கும் நேரம்தான். பல்வேறு யோசனைகளை உருவாக்கி, அவற்றில் சிறந்தவை குறித்து மேலும் தீவிரமாக சிந்தித்து, பிறகு அதனை எனது குழுவினருடன் பகிர்ந்துகொள்ளும்போது உண்டாகும் சந்தோஷம்தான் எனக்கு மிக முக்கியமானது. எனக்கு ஒரு திருப்திகரமான உணர்வெழுச்சி உண்டானதும்தான், அனைத்தும் நிகழத் தொடங்குகின்றன. அதுதான் எனது சிந்தனைகளின் நிறுத்துமிடம். வேடிக்கையான ஒரு தருணத்தை உருவாக்கும் உணர்ச்சி மிக உன்னதமானது. யதார்த்தத்தில் நாம் பார்க்கும் உலகத்தில் இருந்து முற்றிலும் வேறான உலகம் அது. அதில் பெரும் கேளிக்கை நிரம்பியிருக்கும். நீங்கள் அங்கு அமர்ந்திருப்பீர்கள். அரை நாள் ஒத்திகைப் பார்ப்பீர்கள். அதன்பிறகு படப்பிடிப்பு நிகழும். அவ்வளவுதான்!

யதார்த்தவாதமும் உங்களது நகைச்சுவையில் ஒருங்கிணைந்திருக்கிறது அல்லவா?

ஆமாம். நிச்சயமாக. நம்பும்படியாக ஒரு நகைச்சுவையை எப்படி சொல்வது என்றுதான் நான் சிந்திக்கிறேன். உங்களிடம் அபத்தமான, குழப்பம் மிகுந்த தருணம் ஒன்று இருக்கிறது. அதனை கூடுமானவரையில் யதார்த்தமாக நெருங்கி அணுகுவேன். பார்வையாளர்களும் இதனை உணர்ந்திருப்பதால், அவர்களும் தங்களது முழுமையான ஈடுபாட்டை செலுத்துகிறார்கள். இது ஒரே சமயத்தில் யதார்த்த வயமானதாகவும், குழப்பம் மிக்கதாகவும் இருக்கிறது. இதுதான் பார்வையாளர்களுக்குக் கிளர்ச்சியூட்டுகிறது.

பகுதியளவில் உங்களது நகைச்சுவையில் கொடூரமான சில செய்கைகளும் இருக்கின்றன.

அத்தகைய கொடூரமான செயல்கள்தான் நகைச்சுவையின் அடிப்படையே! எது விவேகமானது என நாம் கருதுகிறோமோ அதுதான் உண்மையில் விவேகமற்றது. இந்த கருத்தை மனதில் உறைக்கும் விதத்தில் உங்களால் சொல்ல முடிந்தால் அதனைப் பார்வையாளர்கள் விரும்புவார்கள். வாழ்க்கையில் நிலவும் அபத்தங்களாக அவர்கள் அதனை உணருகிறார்கள். அத்தகைய தருணங்கள் உண்மையில் ஏற்படும்போது, அதனை நினைத்து துயருறாமல் அதனை நினைத்து தற்கொலை செய்துகொள்ளாமல், ஒரு அபத்த கணம் எனக் கருதி கடந்துவிடுகிறார்கள். கள்ளங்கபடமற்ற செய்கை என சொல்லப்படும் இந்த புதிரானவற்றின் மீது எழுப்பப்படும் கேள்வியே இது.

ஒரு முதியவர் வாழைப்பழத்தின் மீது கால் வைத்து, அதனால் மெதுவாகத் தடுமாறி கீழே விழும்போது நாம் சிரிப்பதில்லை. மாறாக, தன்னை மிக உயர்ந்தவனாகக் காண்பித்துக்கொள்ளும் சுய பெருமிதம் கொண்ட மனிதர் இடறி விழுகையில் நாம் சிரிக்கின்றோம். சகித்துக்கொள்ளவியலாதது என நாம் கருதும் அனைத்து தருணங்களும் வேடிக்கையானவைதான். அதனை நாம் எவ்விதமாகக் கையாளுகின்றோம் என்பதில்தான் அந்த வேடிக்கை உணர்வு இருக்கிறது. கோமாளிகள் அரங்கத்திற்குள் வரும்போது எவ்விதமான கீழ்மையான செய்கைகளையும் அவர்களிடத்தில் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், பெருமிதம் மிளிரும் உடல்மொழியுடன் உணவகம் வரும் ஒரு புத்திசாலி வேடமிட்ட மனிதரின் காற்சட்டை அவர் அறிந்திராமல் கிழிந்திருக்கிறது என்றால், நிச்சயமாக அது மிக மிக வேடிக்கையானதுதான்.

உங்களது நகைச்சுவை அனைத்தும் சம்பவங்களால்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது அறிவுபூர்வமானது அல்ல. யதார்த்தத்தில் நிகழ்வது. ஆனால் மிகவும் வேடிக்கையானது.

நான் எப்போதுமே ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள்தான் ஒரு கதையை உருவாக்குகிறது என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பில்லியர்ட் (Billiard) மேசையில் பந்துகளை வைத்து விளையாடுவதைப்போல. ஒவ்வொரு பந்தும் அதில் தன்னளவில் முழுமையானது, ஒரு சம்பவத்தைப் போன்றது. ஒரு பந்து மற்றொரு பந்தைத் தொடும்போது ஒரு முக்கோணம் அந்த மேசையின் மீது உருவாகிறது. அந்த பிம்பத்தை உதாரணமாக வைத்துக்கொண்டுதான் எனது படைப்புகளை அணுகுகின்றேன்.

திரைப்படங்களில் உங்களது இயங்குதலில் அபாரமான ஒரு வேகம் இருக்கிறது. அதோடு, ஒன்றின் பின் ஒன்றாக சில வேடிக்கையான தருணங்களையும் சில கணங்களுக்கு அடுக்குகிறீர்கள். இதுதான் உங்களது பொதுவான குணம் என்று கருதுகிறீர்களா?

எனக்கு அது தெரியவில்லை. நான் வேறு சில நகைச்சுவை நடிகர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களது வெளிப்பாட்டில் சில தளர்வுகள் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். நிதானமாக இயங்குவதை தவிர்த்துவிட்டு, மிக வேகமாக நான் இருக்கிறேன் என்பதை என்னாலும் உணர முடிகிறது. மெதுவாக செயல்படுவதற்கான நம்பிக்கை என்னிடத்தில் இல்லை. அதோடு, நான் செய்யும் செயல்களின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால், செயல் மட்டுமே முக்கியமானது அல்ல. அனைத்திலும் ஒரு வளர்ச்சி நிலை இருக்க வேண்டும். இல்லையெனில், அது யதார்த்தத்தில் இருந்து வழுவியதாகிவிடும்.

உங்களுக்கு ஒரு பிரச்சினை கிடைக்கிறது. பிறகு கூடுமானவரையில் அந்த பிரச்சினையைத் தீவிரப்படுத்துகிறீர்கள். நீங்கள் வலிந்து ஒரு பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதில் இருந்து தொடங்கமாட்டீர்கள். இப்போது இந்த இடத்தில் இருந்து எப்படி நகரப் போகிறோம் என்று உள்ளுக்குள் கேள்வி எழும். இந்த தருணத்தில் இயல்பாக அடுத்தது என்ன நிகழும்? ஏற்றுக்கொள்ளும் வகையிலும், மிக யதார்த்தமாகவும் யோசித்தால் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக அடர்த்தியாகி, பின் மெல்ல ஒருவித கடினமான சூழல் உருவாகும். தர்க்கரீதியாக இவை இருந்தால் மட்டுமே அதியற்புதமான நகைச்சுவை உருவாவதற்கான சாத்தியம் இருக்கும். இல்லையெனில், நகைச்சுவையும் இதில் இருக்கிறது என்பதாக உங்களது செயல் அமைந்துவிடும்.

நீங்கள் மென்னுணர்வு குறித்து கவலைப்படுவீர்களா அல்லது கிளிஷே (Cliche) குறித்து கவலைப்படுகிறீர்களா?

வெளிப்பாட்டுக் கலை வடிவத்தில் இதுக் குறித்தெல்லாம் கவலைப்பட தேவையில்லை என்றே கருதுகிறேன். இதனையெல்லாம் நான் எளிதாக தவிர்த்துவிடுவேன். வாழ்க்கையே கிளிஷேக்களால் ஆனதுதான். அதனால், அதுகுறித்து பயம்கொள்ள தேவையில்லை. ஒவ்வொரு விழிப்பின்போதும் புதிதான குணவியல்புடன் நாம் பிறப்பதில்லை. நாம் எல்லோரும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் காதலில் ஈடுபடுவது அல்லது காதலில் இருந்து வெளியேறுவது போன்ற செய்கைகளுடன்தான் வாழ்ந்து மரணிக்கிறோம். கிளிஷே இல்லாத காதல் கதைகளே இல்லை. ஆனால், அதனை எவ்வளவு சுவாரஸ்யமாக நம்மால் சொல்ல முடிகிறது என்பதில்தான் அதனது ஆயுள் அடங்கியிருக்கிறது.

‘The Gold Rush’ படப்பிடிப்பின்போது காலணியை உண்ணும் செயலை பல முறை செய்தீர்களா?

ஆமாம். இரண்டு தினங்களுக்கு அதே காட்சியை திருப்தியுறாமல் மீண்டும் மீண்டும் எடுத்துக் கொண்டிருந்தோம். அதோடு, அக்காட்சியில் நடித்த முதியவரான மார்க் ஸ்வெய்ன் கடைசி இரண்டு டேக்குகளின்போது மிகவும் தளர்ந்து போயிருந்தார். அந்த காலணிகள் அதிமதுரத்தால் செய்யப்பட்டவை. அவர் அதனை அதிகளவில் சாப்பிட்டுவிட்டார். அதனால், “இனியும் என்னால் அந்த காலணிகளை உட்கொள்ள முடியாது!” என்று சொல்லிவிட்டார். இந்த காட்சிக்கான மூலக்கரு டோனார் பார்ட்டியில் (81 நபர்களுடன் 1846ஆம் ஆண்டு கலிஃபோர்னியா விரைந்து கொண்டிருந்த ரயில், கடும் பனிப் பொழிவால் ஓரிடத்தில் சிக்கித் தவித்தது) இருந்து எனக்குக் கிடைத்தது. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதத்தன்மையை இழந்து மான் தோலை உண்ணும் நிலைக்கு உள்ளானார்கள். அவர்கள் மான் தோலால் செய்யப்பட்ட காலணிகளை உண்டார்களா என்று நான் மிரட்சியுற்றேன். எனினும், இதில் இயல்பாகவே ஒரு நகைச்சுவை இருப்பதாக எனக்குப்பட்டது.

இதனை ஒரு கதையில் விவரிப்பதற்கு உகந்த தருணத்தை உருவாக்க பெரும் நேரத்தை செலவிட்டு அயர்ச்சியில் உழன்று இருந்தபோதுதான், மிக எளிதான ஒரு தீர்வு எனக்கு கிடைத்தது: பசி. ஒரு தருணத்தைக் கையாளுவதற்கு தர்க்கரீதியாகவும் யதார்த்தத்திற்குப் பொருந்துவதாகவும் நிகழ சாத்தியமுள்ளதாகவும் ஒரு யோசனை கிடைத்துவிட்டது என்றால், அதன்பிறகு பல்வேறு யோசனைகள் உங்களுக்குத் தோன்றியபடியே இருக்கும். அந்த திரைப்படத்தில் நிகழ்ந்த மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாக இதனைக் கருதுகிறேன்.

சப்தம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. எனக்கு அதில் அனுபவம் இருக்கிறது என்றாலும், ஒரு கல்வியாக அதனை நான் பயின்றதில்லை. மௌனத்திற்கும் சப்தத்திற்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது. ஆனால், எனது திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வெகு இயல்பாகவே என்னுள் நடிப்புத் திறன் இருக்கிறது என்பதை நம்புகிறேன். சப்தத்தின் மூலமாக என்னை வெளிப்படுத்துவதை விடவும், செய்கைகளின் மூலமாக வெளிப்படுத்துவதே எனக்கு இலகுவானது என்பதும் எனக்குத் தெரியும். நான் ஒரு கலைஞன். அதனால் ஒலிச் சேர்க்கையில் பல விஷயங்கள் மறைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்து வைத்திருக்கிறேன். நல்ல குரல்வளமும் வார்த்தைகளை அழகாக வெளிப்படுத்தும் லாவகமும் பெற்றிருக்கும் எவரும் என்னை மறக்க செய்துவிட முடியும். இவை இரண்டும் பாதி வெற்றியை ஈட்டித் தந்துவிடும்.

யதார்த்தத்தின் மற்றொரு பரிமாணமான சப்தத்தை பயன்படுத்துவது மௌன படம் உண்டாக்குகின்ற கற்பனையான அர்த்தப்படுத்தல்களை கலைத்துவிடும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. நான் எப்போதுமே சொல்லி வருவதைப்போல உணர்ச்சி வெளிப்பாடு என்பது கவிதைபூர்வமானது. அதோடு, சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தால் எவரும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு உலகளாவிய பண்பையும் அது பெற்றிருக்கிறது. ஆனால், உச்சரிக்கப்படும் வார்த்தை ஒரு வழவழப்பான நிலையிலேயே தேங்கிவிடுகிறது. குரல் அழகானதும், அர்த்தங்களை எளிதில் வெளிப்படுத்திவிடுவதும்தான் என்றாலும், எனது கலை அப்படி எளிதில் வெளிப்பட்டு, ஒரு நிலையில் தேங்கிவிடுவதில் எனக்கு விரும்பவில்லை. மாயையை மிக ஆழமாகத் தனது குரல்வளத்தின் மூலமாக உணர்த்திவிடும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், உடல் மொழியால் ஒன்றை வெளிப்படுத்துவது என்பது ஒரு பறவையின் பாடலைப்போல அத்தனை இயற்கையானது. கண்கள் வெளிப்படுத்தும் பாவங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மனிதர்களால் மறைக்க முடியாத அசலான முக பாவனை, நுட்பமாக வெளிப்படுத்தப்படும் அதிருப்தி உணர்வு போன்றவை இனி இருக்க சாத்தியமில்லை. இதனையெல்லாம் மனதில் இருத்திக்கொண்டுதான் படங்களில் பேச ஆரம்பித்தேன்.

City Lights

உங்களுக்கு விருப்பமான திரைப்படம் எது?

‘City Lights’ என்று நினைக்கிறேன். அது செறிவாகவும் நன்றாகவும் உருவாக்கப்பட்டிருந்தது. அசலான நகைச்சுவையும் அந்த திரைப்படத்தில் இருந்தது.

அது வீரியமிகுந்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், எப்படி இன்பமும் துன்பமும் அருகருகே இருக்கிறது என்பதை அது விவரித்திருந்தது.

அது என்னை எப்போதும் ஈர்த்தது இல்லை. அது நாம் எடுத்துக்கொள்ளும் கருப்பொருளைச் சார்ந்தது என்றே கருதுகிறேன். அதனை எப்போதும் உணர்ந்தே இருக்கிறேன். எனது இரண்டாவது இயல்பைப்போல, கூடுதலாகவோ குறைவாகவோ அவ்வெண்ணம் என்னுள் இருக்கிறது. ஒருவேளை அது நான் வாழும் சூழலினால் உண்டானதாகவும் இருக்கலாம். சக மனிதரின் மீது கரிசனமும் அனுதாபமும் இல்லாத ஒருவரால் ஒரு நகைச்சுவைகூட உண்டாக்க முடியாது என்பதே எனது கருத்து.

துயரத்தில் இருந்து தற்காலிகமாக விடுபடுவதற்காகவே நகைச்சுவை தேவையாய் இருக்கிறது என்று கருதுகிறீர்களா?

இல்லை. வாழ்க்கை அதை விடவும் பெரியது. துயரத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்றால், மக்கள் கூட்டம் கூட்டமாகத் தற்கொலைதான் செய்துகொள்வார்கள். வாழ்க்கையில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று நினைப்பார்கள். வாழ்க்கை மிக அரிதான அற்புதமான ஒன்று. நாம் அனைத்துவிதமான சூழ்நிலைகளிலும் வாழ நம்மைப் பழக்கிக்கொள்ள வேண்டும். அதீத துயர் நிலையிலும் வாழ்ந்திருக்க வேண்டும். நான் வாழ்க்கையை எப்போதும் கொண்டாடவே செய்கிறேன். அனுபவத்திற்காகவாவது அனைத்துவிதமான சூழல்களிலும் வாழ வேண்டும். வெறும் அனுபவத்திற்காகவாவது!

நகைச்சுவை ஒருவனை இயல்பானவனாக இருக்கவே பேருதவி செய்கிறது என்று நினைக்கிறேன். அதிகளவிலான துயரத்துடன் வாழ்க்கையில் நம்மால் பயணிக்க முடியும். அது வாழ்க்கையின் ஒரு கூறு. அதே சமயத்தில், எதுவொன்றையும் எதிர்ப்பதற்கும் நம்மிடம் மற்றொன்று இருக்கவே செய்கிறது. துன்பம் வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகவும், அதனை எதிர்கொள்வதற்கான சாத்தியத்தை நகைச்சுவை நமக்கு அளிக்கிறது என்றும் கருதுகிறேன். நகைச்சுவை உலகளாவிய ஒன்று. அது கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கருணையுணர்வில் இருந்தே பிறப்பெடுத்திருக்க வேண்டும்.

 

ராம் முரளி” <raammurali@gmail.com>

Amrutha

Related post