எல்லாவற்றையும் சமமானதாக மாற்ற, நமக்கு இன்னும் 500 ஆண்டுகால கடுமையான போராட்டம் காத்திருக்கிறது! | ஈவா ஹுசன்

 எல்லாவற்றையும் சமமானதாக மாற்ற, நமக்கு இன்னும் 500 ஆண்டுகால கடுமையான போராட்டம் காத்திருக்கிறது! | ஈவா ஹுசன்

தமிழில்: ராம் முரளி

 

போர் நிகழும் நிலங்களிலும் சூழல்களிலும் பெண்களின் இருப்பு எத்தகைய அபாயங்களுக்கு உள்ளாகிறது என்பதையும் எத்தனையோ இழப்புகளுக்குப் பிறகும் தம்மை ஒடுக்கும் அதிகாரத் தரப்பினரைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சில பெண் போராளிகளைப் பற்றியுமான உண்மைச் சம்பவங்களை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘Girls of the Sun’. ஃபிரான்ஸை சேர்ந்த இயக்குநர் ஈவா ஹுசன் மத்திய கிழக்கில் உள்ள குர்திஸ்தான் நிலபரப்புக்குள் பயணம்செய்து, அங்கு நிலவும் பதற்றச் சூழல்களை இரண்டு ஆண்டுகள் களப்பணி செய்து, இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்படும் குர்து இனப் பெண்களின் துயரக் கதை இத்திரைப்படத்தின் மையமாக இருக்கிறது.

கணவனையும் தந்தையையும் பிள்ளைகளையும் பறிகொடுத்துவிட்டு, பாலியல்ரீதியாகச் சுரண்டப்படுதல், அடிமையாக விற்கப்படுதல் போன்ற பல்வேறு அவலங்களுக்கு அப்பெண்கள் உட்படுத்தப்படுகிறார்கள். உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியங்கள் குறுகிய அளவிலேயே இருக்கும் அத்துயரச் சூழலைத் தமது அசாத்தியமான மனவலிமையால் எதிர்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்கிறார்கள். பின்னர் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள ஆயுதமேந்தி அதே தீவிரவாதிகளுடன் உக்கிரமாகப் போர் புரிகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர் தாக்குதலை முதன்மைப்படுத்தும் இத்திரைப்படம் அத்தகைய போராட்டத்தில் அவர்கள் பங்கேற்க காரணமாக அமைந்த அவர்களுடைய உணர்வுப்பூர்வமாக முன்கதைகளையும் வலியுடன் நமக்கு கடத்திவிடுகிறது. ‘பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல, தமது ஆற்றலை அவர்கள் முழுமையாக உணர்ந்து எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கிளர்ந்து எழ வேண்டும்’ எனச் சொல்லும் ஈவா ஹுசன் இத்திரைப்படத்தின் உருவாக்கப் பின்னணி குறித்து பகிர்ந்துகொண்ட நேர்காணலின் தமிழாக்கம் இது.

உங்களுடைய ஒரு நேர்காணலில், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஃபாசிஸத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்திருக்கிறீர்கள். ‘Girls of the Sun’ திரைப்படத்தை இயக்க ஏன் தேர்வுசெய்தீர்கள்?

ஸ்பெயினில் எனது தாத்தா தனது 16ஆவது வயதில் ஃபாசிஸத்தை எதிர்த்து போராடுவதற்காக இராணுவத்தில் இணைந்தார். அவர் ஒரு ஸ்பானியர். அதோடு, அவரொரு கம்யூனிஸ்ட்டும் கூட. ஃபிரான்சுக்கு எதிராக 1939இல் நடைபெற்ற போரில் குடியரசு கட்சியினர் தோல்வியுற்றதற்குப் பிறகு அவர் அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து அவர் ஃபிரான்சுக்கு நடைவழியாகவே அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு, ஃபிரான்சில் இருந்த ஒரு வதைமுகாம்தான் அவருக்கான வாழ்விடமாக மாறியிருந்தது. இவையெல்லாம் எனது குடும்பத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிகழ்வுகளாகும். உங்கள் அகத்தில் இத்தகைய அழுத்தமான வரலாறு பொறிக்கப்பட்டிருக்கும்போது, உங்கள் கற்பனையிலும் சிந்தனையிலும் பிற்காலத்தில் நீங்கள் செய்யும் காரியங்களிலும் அது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. அதனால், எனது திரையுலகப் பயணத்தில் ஏதோவொரு புள்ளியில் ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் குறித்த ஒரு திரைப்படத்தை நிச்சயமாக உருவாக்குவேன் என்கிற உணர்வு எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது.

குர்து இன மக்களின் போராட்டம் குறித்து வாசித்துக் கொண்டிருந்தபோது, அங்கு பலவந்தமாகச் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்கள் அச்சிறைக்கூடங்களில் இருந்து தப்பித்ததும் பிறகு போராளிகளாக மாறியதும் எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யத்தையும் தாக்கத்தையும் ஒருங்கே உண்டாக்குவனவாக இருந்தன. ஏனெனில், அங்கு நிகழ்ந்திருந்தவை யாவும் நான் முன்பே அறிந்திருந்த ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்துடன் பல விதங்களிலும் ஒத்துபோவதாகவே இருந்தன. 1936இல் ஸ்பெயினில் என்ன நடந்ததோ அதனை நினைவூட்டுவதாகவே குர்து இன மக்களின் போராட்டம் எனக்குத் தோன்றியது. இதன்மூலம், குர்து இன மக்களது போராட்டம் எனக்குள் ஒருவிதத்திலான சகோதரத்துவத்தை உண்டாக்குவதாகவும் இருந்தது. தாங்கள் ஒடுக்கப்படுவதை ஏற்க முடியாமலும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் நிலையை மறுதலித்தும் ஆயுதமேந்தி கிளர்ச்சியில் ஈடுபடத் துணிந்திருக்கும் இந்தப் பெண்கள் குறித்து தொடர்ந்து வாசித்தபோது இதுவொரு உலகளாவிய கதையாக எனக்குத் தோன்றியது. இது குர்து அல்லது யெஸிதி (Yezidi) அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு உரிய பிரச்சனை மட்டுமே அல்ல. இது உலகளாவிய பெண்களின் கதையைத் தெரிவிப்பதாக இருந்தது என்பதே இக்கதையை நான் சொல்லத் தேர்வுசெய்ய காரணமாகும்.

ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் குறித்துத் தீவிரமான அறிதலைப் பெற்றிருக்கிறீர்கள். அது தொடர்பாக ஏதேனும் திரைக்கதை அமைத்திருக்கிறீர்களா?

உண்மையில், எனது முதல் திரைக்கதையே ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் குறித்ததுதான். எனது தாத்தாவைப் போல யுத்தத்தின் முடிவில் ஃபிரெஞ்சு வதைமுகாம்களில் அடைக்கப்படும் சில கதாபாத்திரங்களை மையப்படுத்தி முழு திரைக்கதையையும் நான் எழுதி நிறைவு செய்திருந்தேன். ஆனால், 2007இல் இதைப் படமாக்க முயற்சி செய்தபோது அதைத் தயாரிப்பதில் யாருக்கும் ஆர்வமில்லை என்பதும் யாரும் இதை விரும்பவில்லை என்பதும் எனக்குப் புரிந்தது. ’ஐரோப்பாவில் உள்ள வதை முகாம்களில் அடைக்கப்படுவதா, அதெல்லாம் இனி ஒருபோதும் உலகில் நடக்கச் சாத்தியமில்லை’ என அவர்கள் கருதினார்கள். யாரும் அதைத் தயாரிக்க முன்வர மாட்டார்கள் என்பதால் என்னுடைய முதல் திரைப்படமாக அது இருக்காது என்கிற புரிதல் விரைவிலேயே எனக்கு வந்துவிட்டது. அதன்பிறகு குர்து மற்றும் யெஸிதி பெண்கள் குறித்துக் கேள்வியுற்றபோது அது முழுமையாகவே நான் நன்கு உணர்ந்திருக்கும் எனக்கு பரீட்சயமாகியிருக்கும் ஓர் உலகாக எனக்குக் காட்சியளித்தது. ஏனெனில், போர் குறித்தும் தங்களது சிந்தனைகளை முன்னிறுத்தி போரிட்டு தோல்வியுற்றவர்களைக் குறித்தும் நானொரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அதில் உள்ளவைதான் இப்போது குர்து சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக, சர்வதேசச் சமூகமும் ஐரோப்பாவும் நடந்துகொள்ளும் விதம் குறித்து முற்றிலுமாக வெட்கப்படுகிறேன். பணத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் குறுகிய கால நோக்கங்களுக்கும் அவை தன்னை ஒப்புக்கொடுத்து விட்டிருக்கின்றன. இச்செயல்பாடுகள் நம் அனைவருக்கும் மீளாத் துயரத்தையே உண்டுபண்ணியிருக்கிறது.

girls of the sun, eva husson

Bang Gang’ எனும் உங்கள் முதல் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாலியல் தொடர்பான செயல்களை ஒழுங்கமைக்கும் ஸ்விங்கிங் கிளப்பைத் தொடங்கத் தீர்மானிக்கும் சில ஃபிரெஞ்சு இளைஞர்களைப் பற்றியது அத்திரைப்படம். முற்றிலும் வித்தியாசமான அத்தகைதொரு கதைக்களத்தை இக்காலத்தில் இயக்குவதற்கு நீங்கள் தேர்வு செய்ததன் காரணம் என்ன?

அரசியல் சூழலில் நிலவிய வெறுமைதான் காரணமாக இருந்திருக்கும் எனக் கருதுகிறேன். முதலில், இக்கதையின் உண்மைப் பின்னணியை 2000-2001ஆம் ஆண்டில் எனது 20ஆவது வயதில் கேள்வியுற்றேன். அப்போது எனக்குள் அது சில அதிர்வுகளை உண்டாக்கியது. 2009இல் இதற்கான திரைக்கதையை எழுதத் தொடங்கியபோது எனது இளமைப் பருவத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தேன். அது என்னை அரசியல் களத்தில் நிலவும் வெற்றிடத்தைக் குறித்தும் இலட்சியங்களே இல்லாத இன்றைய சூழல் குறித்தும் யோசிக்கச் செய்தது. இத்திரைப்படம் அவை குறித்து உரையாடுவதே ஆகும். அது வெறுமனே புணர்ச்சியைப் பற்றியது மட்டுமே அல்ல. புணர்ச்சி என்பது எப்போதுமே உடல் கிளர்ச்சியையும் கடந்து வேறு சிலவற்றையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அதன்பிறகு, Girls of the Sun திரைப்படத்தை இயக்குவதற்கான உரிய நேரம் வந்திருப்பதாக தோன்றவே அதன் பணிகளில் செயல்படலானேன்.

இவ்விரு திரைப்படங்களின் கருபொருளும் முற்றிலும் வேறு வேறானவை. என்றாலும், இரண்டுமே பெண் மையத் திரைப்படங்கள் என்பதால் இவற்றுக்கிடையிலே ஏதேனும் ஒப்புமைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

திரையில் பெண்களாகிய நாங்கள் மிகக் குறைவாகவே முன்னிலைப்படுத்தப்படுகிறோம். இது நிஜ வாழ்க்கையில் பெண்கள் தங்களை எப்படி உணர்கிறார்கள் என்பதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதுகிறேன். பெண் கதாபாத்திரங்கள் அனைத்தும் பின்னணியில் அமிழ்ந்திருக்க.. வெகு சாதாரண நிகழ்வுகளில் கூட திரைப்படங்களில் ஆண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. பிரதிநிதித்துவம் குறித்து பேசுகின்ற இடங்களிலும் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே பங்குபெறுகிறார்கள். இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையற்றத் தன்மையை வளர்ப்பதாகவே உணர்கிறேன். நமது முக்கியத்துவத்தை நாம் அறிந்திருப்பதில்லை. வரலாற்றில் எங்குமே எங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. அதனால், பிரதிநிதித்துவம் எனும் ஒரு பெருஞ்சுவரில் என் கையில் கிடைத்திருக்கும் சிறிய செங்கல் ஒன்றைப் பொருத்த முயற்சித்திருக்கிறேன். இதுவொரு கூட்டழைப்புதான். தடைகளைக் கடந்து பல பெண்கள் முன்வந்து தமது கதைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும், தங்களுக்கான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பது எனது பெரு விருப்பம். அதில் பங்குகொள்வதே முக்கியமானது. பிரதிநிதித்துவம் பல்குரல்களை உள்ளடக்கியதாக மாறும்போதுதான் அதன் ஒற்றைத்தன்மை குறையத் தொடங்கும்.

யெஸிதி பெண்களையும் போராளிகளையும் எப்படி அறிந்துகொண்டீர்கள்?

குர்து இனப் பெண்களைப் பற்றி முன்பே எனக்குச் சிறிதளவில் தெரியும். என்றாலும், நான் அடிப்படையில் ஃபிரெஞ்சு தேசத்தவள் என்பதால் எனது அறிதல் வரையறைக்குட்பட்டதாகவே இருந்தது. அதனால், முடிந்த வரையில் மேலும் தீவிரமாக அவர்களைக் குறித்து வாசித்தறிவதில் எனது மிகுதியான நேரத்தைச் செலவிட்டேன். ஒருவிதத்தில் இதுதான் அவர்களுடனான எனது முதல் தொடர்பு என்று சொல்லலாம். ஏராளமான புத்தகங்களைத் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்தேன். யெஸிதி பெண்கள் குறித்த புத்தகங்களையும் வாசித்தேன். அதன்பிறகு, குர்திஸ்தானுக்கும் எர்பில்லுக்கும் டூஹொக்குக்கும் மஹ்மோருக்கும் ஷாரியாவில் இருந்த அகதிகள் முகாமிற்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் நேரடியாகச் சென்றேன். சிறைப்பிடிப்பில் இருந்து தப்பி வந்திருந்த பல பெண்களை இந்தப் பயணங்களில் சந்தித்தேன். அவர்களுடன் உரையாடி அவர்களது அனுபவங்களைப் பதிவு செய்துகொண்டேன். யெஸிதி இனத்தவர்கள் வலுவாகக் காலூன்றியிருக்கும் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் கூட சென்று அங்கு வசித்துவரும் அம்மக்களையும் சந்தித்தேன். அவர்களிடமிருந்தும் பல தகவல்களையும் போர் குறிப்புகளையும் பெற்று திரும்பியதும் அவை அனைத்தும் முழுமையாக எனது பணியிடத்தில் அமர்ந்து ஆய்வுசெய்தேன். இப்படித்தான் அவர்களுடனான தொடர்பை வளர்த்துக்கொண்டேன்.

ஏன் கோல்ஷிஃப்தே ஃப்ராஹானியை (Golshifteh Farahani) முதன்மைக் கதாபாத்திரத்திற்குத் தேர்வுசெய்தீர்கள்? குர்து அல்லது யெஸிதி பெண்ணைக்கூட நீங்கள் தேர்வுசெய்திருக்கலாமே?

நேர்மையாக உங்கள் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால், இந்தத் திரைப்படத்தைச் சாத்தியமாக்கக்கூடிய ஒரு பெண் நடிகையைக் கண்டடைவது மிகச் சிரமமானதாகவே இருந்தது. திரைத்துறை எப்படிச் செயல்படுகிறது என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். திரைப்படம் உருவாக்க பெருமளவிலான பணம் தேவைப்படுகிறது. அதனால், மக்களோ நிதி வழங்குநர்களோ அறிந்திருக்காத ஒரு நடிகரைத் தேர்வுசெய்தால் பண உதவியைப் பெறுவது மிகச் சிரமமான பணியாக மாறிவிடும். ஃபிரான்சில் வாழும் கோல்ஷிஃப்தே ஃப்ராஹானியால்தான் இந்த இடைவெளியை நிரப்ப முடிந்தது. அவர் இல்லாமல் இந்தத் திரைப்படம் உருவாகியிருக்க சாத்தியமே இல்லை. ஹனீர் சலீம் (Huner Saleem) போன்ற அற்புதமான சில குர்து இயக்குனர்களே கோல்ஷிஃப்தே ஃப்ராஹானியின் நடிப்பாற்றலை அங்கீகரித்து அவரை குர்து மொழித் திரைப்படங்களில் நடிக்கச் செய்திருக்கிறார்கள். அதனால், அவருடைய நடிப்புத் திறன் குறித்தோ அவர் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்துவாரா என்பது குறித்தோ சந்தேகம் கொள்வதற்கு எனக்கு எவ்விதமான அவசியமும் ஏற்படவில்லை.

தற்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கதையை உங்கள் திரைப்படத்தில் சொல்லியிருக்கிறீர்கள். யெஸிதி பெண்களையோ போராளிகளையோ பற்றி பேசும்போது அவர்களைக் குறிக்கும் அடையாளச் சின்னங்களை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். பெஷ்மெர்காவின் சின்னங்களையும் என்னால் திரைப்படத்தில் பார்க்க முடியவில்லை; அதேப்போல குர்திஸ்தானில் உள்ள நிலங்களின் பெயர்களையும் படத்தில் நீங்கள் தவிர்த்துவிட்டிருக்கிறீர்கள், இதற்கான காரணம் என்ன?

குர்திஸ்தானுக்கு நான் சென்றபோது, 1936க்கும் 1939க்கும் இடைப்பட்ட காலத்தில் ஸ்பெயினில் என்ன நிகழ்ந்ததோ அதற்கு ஒத்ததாகவே அங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற எண்ணம் மீண்டும் மீண்டும் எனக்குள் எழுந்தபடியே இருந்தது என்பதை முன்பே குறிப்பிட்டேன். ஸ்பெயினில் அப்போது பல குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களுக்கு இடையிலான முரண்களும் அடர்த்தியாகவே இருந்தது. அவற்றை முழுமையாக உணர்ந்துகொள்வது மிகச் சிரமமானது என்கிற புரிதல் எனக்கு உள்ளது. எனது தாத்தா ஒரு கம்யூனிஸ்ட், எனது மாமா ஓர் அனார்கிஸ்ட். அதுவொரு சிக்கலான சூழலாகத்தான் இருந்தது. அதனால், முதலில் இந்தப் படத்தை உருவாக்கும் முறைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது நிஜமான அடையாளச் சின்னங்களையோ சீருடைகளையோ தவிர்க்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே முடிவுசெய்துவிட்டேன். அதோடு, ஒருவேளை உண்மைத்தன்மைக்காக அசலான உடைகளை மாதிரிகளாகக் கொண்டு சீருடைகளை வடிவமைக்க முடிவுசெய்திருந்தாலும்கூட, அவற்றைத் தயார் செய்வதற்குத் தேவையான பணம் எங்களிடம் இல்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சீருடைகள் அனைத்தும் கடன் மூலமாகக் கொணரப்பட்டவையே.

இந்தப் போராட்டங்களின் சூழல் குறித்த உணர்வை ஆழ்தளத்தில் கட்டமைத்துவிட்டு, ஒரு புனைவார்த்தமான உலகைத் திரைப்படத்தில் உருவாக்கும்போது நாங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு மட்டுமே ஆதரவாக அதனை உருவாக்கியிருப்பதாக யாராலும் எங்களைக் குற்றம்சாட்ட முடியாது. இந்தத் திரைப்படத்தை உருவாக்க எனது முதன்மை நோக்கமாக இருந்தது பெண்கள்தான். யெஸிதி பெண்கள் குறித்தும் அதன் மக்கள் குறித்தும் காட்சியமைக்கும்போது என்னால் இயன்ற வரையில் விவேகமான ஒரு முறைமையைக் கையாள வேண்டும் என்பது எனது தீர்மானமாக இருந்தது. ஏனெனில் நான் அந்நிலத்திற்குச் சென்று அங்கிருந்த போராளிகளிடம் உரையாடியபோது, அவர்களும் அத்தகைய ஒரு விவேகமான அணுகுமுறையையே எனது திரையாக்கத்தில் எதிர்பார்த்தார்கள். முழுமையாகவும் நேரிடையாகவும் அவர்கள் வெளிப்படுத்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அந்த உணர்வை நான் மதிக்கிறேன். அதனால் என்னுடைய அணுகுமுறை அவர்களை எவ்விதத்திலும் காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறேன் எனச் சொல்லி, அவர்களையும் என் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையையும் அர்த்தமற்றதாக மாற்றிவிடக்கூடாதல்லவா?!. அந்த வகையில், கலாச்சார ரீதியாக நான் சில பிழைகளைச் செய்திருப்பினும் நான் முன்வைக்க விரும்பிய கருத்துகளில் நான் சமரசம் செய்துகொள்ளவில்லை. திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் உலகையும் புவியியல்ரீதியாக இந்தச் சிக்கல்கள் எங்கு நடக்கின்றன என்பதையும் பற்றிய புரிதலைப் பெற்றிருப்பவர்களால் இதில் உள்ள மக்களும் பெண்களும் யார் என்பதை எவ்விதச் சிரமமுமின்றி மிக வெளிப்படையாகவே புரிந்துகொள்வார்கள். குறிப்பிட்டு அதைச் சொல்வதை விடவும் சாரம்சப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நோக்கமும்கூட.

முதன்மைக் கதாபாத்திரத்தை அத்தனை தீவிரமாக இயங்கச் செய்யும் உந்துவிசை என்ன?

தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஒரு முதன்மைக் கதாபாத்திரம் படத்தில் தாழ்மையாகவும் சக மனிதர்களிடம் அன்பாகவும் நடந்துகொள்வதை நாம் அரிதாகவே பார்க்கிறோம். இக்கருத்தினால், அவள் தானொரு பெண் எனும் நிலையைத் தொடர்ச்சியாகத் திரைப்படத்தில் வலியுறுத்தி அதன்மூலமாக, இரக்கத்தை கோருகிறாள் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. படத்தில் அப்படி நிகழ்வதில்லை. ஆண் – பெண் சமத்துவம் குறித்துப் பேசும் அதிகச் சுவாரஸ்யமூட்டும் சூழல்களை என்னால் நிறையவே பார்க்க முடிகிறது. சிக்கலைத் தட்டையானதாக மாற்றவே இத்தகைய அவசரத்தன்மையிலான அணுகுமுறைகள் முயல்கின்றன. எனது திரைப்படத்தில், பங்குகொண்டிருக்கும் பெண்களுக்குப் பதவிகளை வகிப்பதற்கும் அதிகாரத்தில் இருப்பதற்குமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது பாரம்பரியமாகப் பெண்நிலை என்னவாக இருந்தது என்பதைப் பற்றியதல்ல. அவர்கள் முன்னுள்ள தடைச் சுவர்களை உடைப்பது குறித்தது. நிஜத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த பெண் ஒருவர் எழுதிய உரையில் இருந்து உந்துதல் பெற்று இத்திரைப்படத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. “இங்கு உங்கள் இருத்தலே வெற்றியைச் சுட்டுவதுதான்” என அந்தப் பெண் குறிப்பிடுகிறார். இதுபோன்ற தன்மையை நாம் பெண்களிடத்தில் அரிதாகவே பார்க்கிறோம். அதாவது, இதுபோன்ற தலைமைத்துவத்தைப் பற்றி குறிப்பிடுகிறேன். பெண்களின் இத்தன்மையைக் காட்டுவதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக அந்தத் தருணத்தை கருதினேன்.

பெண்களான நாம் பல இன்னல்களை அனுபவிக்கிறோம் என்றாலும், அவையெல்லாம் பெரியளவில் எங்கும் விளக்கப்பட்டிருக்கவில்லை. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்களிடத்தில் இத்தன்மை மாறத் தொடங்கியிருப்பதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதும் பெண்ணின் பார்வையில் இப்போது வரை அனைத்தும் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதும் சமூகம் அவர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறது என்பதுடன் தொடர்புடையது. பெண்களுக்கான வரையறைக்குள் அவர்களை அமுக்கச் செய்யும் முயற்சியாகவே அது இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் இருந்து பார்வையாளர்கள் எத்தகையை உணர்வைச் சுமந்துசெல்ல வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல; அவர்கள் வலிமையானவர்கள், போராளிகள். பெண்கள் ஒருபோதும் இதுகுறித்து ஐயம்கொள்ளக்கூடாது. திரையிடல் முடிந்ததற்குப் பிறகு என்னைச் சந்தித்த சில பெண்கள் திரையில் பெண்களை வலிமையானவர்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தங்களுக்கு எத்தகைய பலத்தைக் கொடுத்தது எனத் தெரிவித்தார்கள். புனைவுகளில் பெண்களுக்குக் குறைவான முக்கியத்துவமே அளிக்கப்படுவதால், அவர்களுடைய உலகத்தையே நாம் மெல்ல மெல்ல நமது நினைவுகளில் இருந்து தொலைத்துவருகிறோம். அதனால், இப்படி அழிக்கப்பட்ட நினைவுகளுக்கு எதிராகப் பெண்கள் மீண்டும் தாங்கள் வலிமையானவர்கள்தான் என்பதை உணர்வதற்கான செயல்முறையில் இறங்க வேண்டும். திரையில் வலிமையான பெண்களைப் பார்க்கும்போது அது தன்னியல்பாக உங்களையும் பலமிக்கவராக உணரச்செய்துவிடுகிறது. அவ்வுணர்வு ஏற்கெனவே உங்களுக்குள் இருக்கும் அகப் பலத்தின் விழிப்புநிலையாகவே இருக்கிறது.

ஓர் ஆண் இயக்குநருக்கு இத்திரைப்படத்தை உருவாக்கக் கிடைக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்குதான் உங்களுக்குக் கிடைத்ததாக ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். திரையுலகில் நீங்கள் எதிர்கொண்ட தடைகள் என்னென்ன?

உங்களை எப்போதும் குறைவாகவே மதிப்பிடுவார்கள். ஓர் ஆணை விட இருமடங்கு உங்களை நீங்கள் நிரூபிக்கப் போராட வேண்டியிருக்கும். இது சோர்வும் அவநம்பிக்கையும் அளிக்கக்கூடிய ஒரு போராட்டமாகும். பெண்களாக நாங்கள் எல்லா நேரங்களிலும் அவநம்பிக்கைக்குள் தள்ளப்படும் நிலையிலேயே இருக்கிறோம். சில நேரங்களில் அது அதீதக் கோபத்தைக் கிளர்த்துவதாகவும் இருக்கிறது. இந்தக் கோபத்தை நமது செயலூக்கத்திற்கான ஆற்றலாக மாற்றிக்கொண்டால் தவிர நமக்கு வேறு வழி இருக்கப்போவதில்லை. நான் எதிர்கொண்ட சிரமங்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால், போர் மையத் திரைப்படத்தை ஒரு பெண்ணால் உருவாக்க முடியாது என்று நிதியளிப்பாளர்கள் பின்வாங்கினார்கள். போர் திரைப்படங்களை இயக்குவது தொடர்பான ஆண்களுடைய திறனை ஒருபோதும் யாரும் சந்தேகிப்பதில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால்: கவனமாக இருங்கள், ஆணாதிக்கத்தின் நடைமுறை இயல்புகள் உங்களைச் சிதைத்து நிர்மூலமாக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். எப்போதும் தலைநிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஒரு பெண் என்பதால் சமூகம் உங்களுக்கு இந்த இயல்புகளை வழங்காது என்றாலும் தீரத்துடன் அதைக் கைக்கொள்ளுங்கள். இத்தனை ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு, இப்போது இந்த அமைப்புமுறையின் இறுக்கம் சற்றே தளர்ச்சியுறத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இதுமட்டுமே போதாது. பெரும்பாறையைச் சிறு உளியால் உடைக்கத் தொடங்கியிருக்கும் தொடக்கச் செயல்பாடு மட்டுமே இது எனக் கருத வேண்டும். நான் நினைக்கிறேன், எல்லாவற்றையும் சமமானதாக மாற்ற, நமக்கு இன்னும் 500 ஆண்டுகால கடுமையான போராட்டம் காத்திருக்கிறது.

ராம் முரளி <raammurali@gmail.com>

raam murali

Amrutha

Related post