Killers of the Flower Moon – திரைக்கதை உருவாக்கம் | மார்ட்டின் ஸ்கார்ஸஸி | தமிழில்: ராம் முரளி

 Killers of the Flower Moon – திரைக்கதை உருவாக்கம் | மார்ட்டின் ஸ்கார்ஸஸி | தமிழில்: ராம் முரளி

மெரிக்காவின் ஓசேஜ் மாகாணத்தில் எண்ணெய் வளத்தைச் சூறையாட,  பூர்வகுடிகளின் மீது, 1920களில் நிகழ்த்தப்பட்ட பெரும் இன அழிப்பு சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம், Killers of the Flower Moon. தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான மார்ட்டின் ஸ்கார்ஸஸி இதை இயக்கியிருக்கிறார். எஃப்.பி.ஐ. (FBI) ஏஜெண்ட்டுகளின் பார்வையில் இந்த வரலாற்றை டேவிட் கிரேன் புத்தகமாக எழுந்திருந்தார். அதிலிருந்து இப்படத்திற்கான திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஓசேஜ் பகுதியில் எண்ணெய் கண்டுப்பிடிக்கப்படுவதால், அப்பகுதி மக்கள் திடீரெனச் செல்வந்தர்களாக மாறுகிறார்கள். பெரும் பணம் புழங்கும் நிலமாக அது திகழ்கிறது. இதைச் சுரண்ட திட்டமிடும் வெள்ளையின பெரு முதலைகள், அப்பகுதிகளில் குடியேறி பழங்குடியினரின் நம்பிக்கையைப் பெற்று அவர்களுடன் இரத்த உறவை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். பின்னர், அவர்களுடைய செல்வத்தைத் தமது பெயருக்கு மாற்றி எழுதிக்கொண்டதும், படுகொலை செய்துவிடுகிறார்கள். இதுவொரு தொடர் நிகழ்வாக இருந்திருக்கிறது. இப்படிப் பூர்வகுடிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் இத்திரைப்படத்தில் நம் கண் முன்னால் நிறுத்தப்படுகிறது.

எளியவர்களையும் பாசாங்கு அற்றவர்களையும் அன்பு, காதல், நேசம், ஆறுதலளித்தல் எனப் பல்வேறு கத்திகளைக் கொண்டு வஞ்சித்து உயிரறுக்கும் நிகழ்வுகள் வரலாறெங்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதன் ஒரு அத்தியாயத்தை இத்திரைப்படத்தில் நாம் கண்ணுருகிறோம். குறிப்பாக, எர்னெஸ்ட் – மோலி எனும் தம்பதியினருக்குள் நிலவிய காதலின் வழியே இந்த வரலாறு நமக்கு விவரிக்கப்படுகிறது.

கனமான காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தை  மார்ட்டின் ஸ்கார்ஸஸி அதிகபட்ச நேர்மையுடன் பதிவுசெய்திருக்கிறார். படத்தில் இறுதிக் காட்சியில் திரையில் தோன்றும் அவருடைய முகத்தில் படரும் குற்றவுணர்வே அதை மெய்ப்பிப்பதாக இருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கம் குறித்து New Yorker இதழுக்கு அவர் அளித்திருந்த நேர்காணலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி-பதில்கள் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

– ராம் முரளி

 

Killers of the Flower Moon திரைப்படத்தில் விசேஷமாக ஏதோவொன்று இருக்கிறது.  சிறந்த, தாக்கம் ஏற்படுத்துகின்ற, உணர்ச்சிவயப்பட்ட கதைகளைச் சொல்வது எப்போதுமே உங்கள் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தைப் பொருத்தவரையில் கதையைச் சொல்வதுடன் வேறு சிலவற்றையும் நீங்கள் செய்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட நீங்கள் சாட்சியம் அளித்திருப்பதைப் போன்றதொரு உணர்வு இத்திரைப்படத்தைப் பார்த்து நிறைவுசெய்யும்போது உண்டாகியது. இதை உருவாக்கும்போது இத்தகைய உணர்வு உங்களுக்கும் இருந்ததா? இதன் உருவாக்கத்தில் அவ்விதமான அணுகுமுறை முன்பே திட்டமிடப்பட்டிருந்ததா?

நிச்சயமாக. 1974ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், தெற்கு டகோடாவில் வாழ்ந்த ஓக்லாலா லகோட்டா (சியோக்ஸ்) பழங்குடியினருக்கு மத்தியில் ஓரிரு தினங்களைச் செலவிடுவதற்கு எனக்கு வாய்ப்பு அமைந்தது. அப்போது அந்நிலத்தை மையப்படுத்தி ஒரு படைப்பை உருவாக்கத் தீர்மானித்திருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது கைவிடப்பட்டது. அந்நிலத்தில் நான் செலவிட்டிருந்த தினங்கள் எனக்கு அதிர்ச்சிகரமான அனுபவத்தை வழங்கின. அப்போது நான் மிகவும் இளைய வயதில் இருந்ததால், என்னால் அச்சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அங்கு நிலவிய துயரச் சூழலையும் ஏழ்மையையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் நிரம்பிய எலிசபெத் தெரு, மோட் தெரு, முல்பெரி ஆகிய பகுதிகளில் நிலவிய வேறொரு வகையிலான வறுமைச் சூழலில்தான் நானும் வளர்ந்தேன். அதனால் வறுமை எனக்கு பழக்கப்பட்டதுதான். என்றாலும், இந்தச் சூழலில் நிலவியது போன்ற கொடுந்துயரை நான் ஒருபோதும் பார்த்திருக்கவில்லை. துளி நம்பிக்கையும் இல்லாத அந்தச் சூழல் குறித்து என்னால் விவரிக்கவும் முடியவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் சில பூர்வக்குடி அமெரிக்கர்களை நான் நேரில் சந்தித்தேன். அப்போது மீண்டும் அவர்களைப் பற்றிய ஒரு படைப்பை உருவாக்கும் எண்ணம் உருவாகியது. அதே சமயத்தில், நான் வளர்ந்த காலகட்டத்தில் பூர்வக்குடி அமெரிக்கர்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட சில படங்களையும் பாத்திருக்கிறேன். தவறுகளைச் சரிசெய்தல் எனும் நலநோக்கம் அந்தப் படங்களில் இருந்ததென்றாலும் வெள்ளையின அமெரிக்க ஆண்களே அதில் பூர்வக்குடியினராக நடித்திருப்பார்கள்.

இத்தனை ஆண்டுகளில் நான் வளர்ந்த வறுமைச் சூழலில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட சூழல் அவர்களுடையது என்கிற உணர்வு எப்போதும் எனக்கு இருந்திருக்கிறது. வெஸ்டர்ன் படங்களை இயக்கிய சாம் பெக்கின்பாவுக்குப் (Sam Peckinpah) பிறகு, ஒரு புதிய பிரதேசம் இன்னும் ஆராயப்படாமல் இருப்பதாக எனக்குத் தோன்றியது: ஓர் அமெரிக்கப் பூர்வகுடியின் அனுபவத்தில் இருந்து இதை எப்படிச் சிந்திக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? அவர்கள் உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா? சிறுவயதில், அவர்கள் எங்களுடன் சமமாக இருந்ததாகவும் அவர்கள் நம்மைப்போலவே இருப்பதாகவும் கருதினோம். ஆனால், எனக்கு தெரியவில்லை. அங்குச் சென்று அவர்களுடைய சூழலை முழுமையாக உள்வாங்கிப் பார்த்தறிந்தபோது, அது முற்றிலும் வேறானதொரு அனுபவமாக இருந்தது.

1974ல் இருந்து இப்போது வரையிலான காலகட்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், நாற்பது ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இத்தனை ஆண்டு காலமும் பூர்வக்குடி அமெரிக்கர்களைப் பற்றிய திரைப்படத்தை இயக்குவது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தீர்களா?

நான் அத்தகைய எண்ணத்தில் இருந்து விலகி இருந்தேன். அந்த அனுபவம் எனக்களித்த அதிர்ச்சி தீவிரமானது என்பதால் அவசரப்பட்டு அந்தக் களத்தைக் கையாள வேண்டாம் எனும் நினைப்பில் இருந்தேன். ஒருவகையில், அவர்களுடைய வாழ்க்கையைச் சொல்வதற்கு அழுத்தமான ஒரு கதையும் எனக்குத் தேவையாய் இருந்தது. அதனால்தான் இந்தக் கால தாமதம்.

Martin Scorsese, Killers of the Flower Moon

டேவிட் கிரேனின் (David Grann) புத்தகம் உங்களை எப்படி வந்தடைந்தது? நீங்கள் அதுகுறித்து எப்படி அறிந்துகொண்டீர்கள்?

ஆஹ். ரிக் யான் (Rick Yorn) அந்தப் புத்தகத்தை எனக்குக் கையளித்தார். ரிக் என்னுடைய மேலாளர். அவர் டி காப்ரியோவுக்கும் மேலாளர் ஆவார். Silence திரைப்படப் பணிகளின்போது அவர் எனக்கு இதனை கையளித்தார். பூ நிலா எனும் கருத்தாக்கமும் (அது பெண் தன்மையிலானது), நிலவு குறித்த பிம்பங்களும் ஏசு கிருஸ்துவின் பெண் தன்மையும் (அவருடைய ஆண் பக்கத்தை விட இது மிக முக்கியமானது) ஒன்று கலந்து இதன் மீது எனக்கு ஆர்வத்தை உண்டாக்கின. பூ நிலா, பெண் தன்மை, இவற்றோட ‘பூ நிலாக் கொலையாளிகள்’ என்பதும் அதிலுள்ள மோதலும் என்னை ஈர்த்தன. நான் கற்பனையில் மட்டுமே அனுபவித்திருந்த அந்த நிலபரப்பை ஒருபோதும் நிஜத்தில் நான் உணர்ந்திருக்கவில்லை.

ஒருமுறை அந்தப் பகுதிக்கு நாங்கள் பயணித்தபோது ஒரு சாலையில் மிக நீண்ட நேரம் எங்கள் பயணம் தொடர்ந்தபடியே இருந்தது. அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நாம் ஏன் இவ்வளவு மெதுவாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என எனக்குள் கேள்வியெழுப்பிக் கொண்டேன். அந்தத் தருணத்தில், அந்தச் சாலையில் எங்கள் பயணம் தொடங்கி 45 நிமிடங்கள் ஆகியிருந்தது. நான் வேகக்காட்டியைப் (Speedometer) பார்த்தேன். அது மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதாகக் காட்டியது. அப்போதுதான் உணர்ந்தேன். அந்தச் சாலைக்கு முடிவே இல்லை. இருபுறங்களிலும் மரங்களே இல்லாத சாலை அது. அதனால், நாம் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை நம்மால் உணரவே முடியாது.

நீங்கள் அந்தப் புத்தகத்தை எப்படித் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறீர்கள் என்பதை நினைத்து வியக்கிறேன். பாடம் நடத்துவதில் எனக்கு ஆர்வம் எதுவும் இல்லை. ஆனால், ஒருவேளை புத்தகப் பிரதியைத் திரைக்கதையாக உருவாக்குவது குறித்து நான் எப்போதேனும் பாடம் நடத்தினால், இந்தத் திரைப்படத்தைத்தான் அதற்கான உதாரணப் பிரதியாக எடுத்துக்கொள்வேன். இது உங்களின் மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்று. புத்தகத்தில் உள்ள அனைத்துமே உங்கள் படத்தில் இருக்கிறது, கொடூர நிகழ்வுகளின் விவரங்கள் முழுமையாகவே இதில் இருக்கின்றன, ஆனால், அதை அணுகும் விதத்தில் நீங்கள் மாற்றங்களைச் செய்திருக்கிறீர்கள்.

ஆமாம். மேற்கு மற்றும் அதுதொடர்பானவை குறித்து நானும் லியோவும் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்பினோம். அதில், முதலில் அவர் எஃப்.பி.ஐ. ஏஜெண்ட்டான டாம் வொயிட் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. நான் அவரிடத்தில், சரி, நாம் இதை எப்படிச் செய்யப் போகிறோம்? டாம் வொயிட் நிஜத்தில் மிகவும் வலிமையானதொரு மனிதர். மிக மிக ஒழுக்கமான, நேரடியான, அறப்பண்புள்ள ஒரு மனிதர். வார்த்தைகளை அதிகம் விரயம் செய்யாதவரும் கூட. பேசுவதற்கு அவருக்கு அதிகமாக எதுவும் இருப்பதுமில்லை என அக்கதாபாத்திரம் குறித்து விவரித்தேன். லியோவுக்கும் இந்தக் கதாபாத்திரம் பிடித்திருந்தது. ‘உங்கள் முகம் திரைப்படக் கலைக்கு ஏற்றதொரு முகம், நீங்கள் மெளனப் படங்களில் கூட நடிக்கலாம், வாய் திறந்து நீங்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் கண்களே அனைத்தையும் செய்துவிடும், அதை அசைத்தாலே போதுமானது’ என அவரிடத்தில் நான் பலமுறை தெரிவித்திருக்கிறேன். அவரை வைத்து என்ன செய்ய முயன்றாலும், அதற்குள் நேர்த்தியாக அவர் பொருந்தி வந்துவிடுவார். இருப்பினும், திரைப்படங்களில் பேசி நடிப்பதில் அவருக்கு ஒருவிதமான ஈர்ப்பு இருப்பதும் எனக்கு தெரியும்.

பிறகு, இக்கதாப்பாத்திரம் தொடர்பாக எனக்குள்ளும் சில கேள்விகள் எழுந்தன. யார் இந்தத் துப்பறியும் நிபுணர்கள்? வாஷிங்டனில் இருந்து வரும் இவர்கள், ரயிலில் இருந்து இறங்கி, அந்த நிலத்தில் கால் வைக்கிறார்கள். அங்கு ராபர்ட் டி நிரோவைப் பார்க்கிறார்கள். வேறு சிலரையும் பார்க்கிறார்கள். அதோடு, அங்கேயே, ‘இந்த இன அழிப்பை யார் செய்திருப்பார்கள்’ என்பதை வெகு இயல்பாகவே அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். பார்வையாளர்களும் இதை எளிதில் கணித்துவிடுவார்கள். பார்வையாளர்கள் நம்மை விட அதிகக் கூருணர்வுமிக்கவர்கள். அதனால், இந்தத் துப்பறியும் நிபுணர்கள், முன்பே எல்லோரும் உணர்ந்துவிட்ட ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கும் இரண்டரை மணிநேரத் திரைப்படத்தை நாம் பார்க்கப் போகிறோம் என எனக்குள் ஓர் எண்ணம் உண்டாகியது. அது காவலர்களின் விசாரணை தொடர்பான ஆக்கமாக இருந்தது. புத்தகத்தில் அது சரியாக அமைந்திருக்கிறது. எனினும், காவல்துறையினரின் விசாரணை நடவடிக்கைகளை ஒரு திரைப்படமாகப் பார்க்க முடிகின்ற என்னால் அதை ஒரு கதைச் சூழலாக அமைக்க முடியாது. அதை எப்படிச் செய்வதென்றும் எனக்கு தெரியாது. அதனால், இந்தக் கதையை எங்கிருந்து எழுதத் தொடங்குவது, கதையமைப்பை எப்படி உருவாக்குவது என்று எனக்குத் தெளிவில்லாமல் இருந்தது. இந்தக் கதையில் நாம் என்னச் செய்யப் போகிறோம் என எனக்குள்ளாகவே கேள்வியெழுப்பிக்கொண்டேன். அதனால் இந்தக் கதையைச் சொல்வதற்கு வெவ்வேறு முறைமையை முயற்சித்துப் பார்த்துக்கொண்டே இருந்தோம். இந்தக் குழப்பங்களுடனேயே நாங்கள் எழுதியிருந்த திரைக்கதை இருநூறு பக்கங்களைத் தொட்டிருந்தது. ஓரிரவு நானும் லியோவும் இணை எழுத்தாளரான எரிக் ரோத்தும் எனது மகளும் வேறு சிலரும் இணைந்து ஒன்றாக அமர்ந்து எழுதி வைத்திருந்த திரைக்கதையை வாசித்தோம். முதல் இரண்டு மணிநேரம் எங்களால் திரைக்கதையுடன் ஒன்றிப் பயணிக்க முடிந்தது. ஆனால், அடுத்த இரண்டு மணிநேரம் எங்கள் பொறுமையை திரைக்கதை ரொம்பவே சோதித்துவிட்டது. இது எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாகவும் இருந்தது. கதையின் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் ஆற்றல் அனைத்தும் வற்றியிருக்க, திரைக்கதையை நிறைவுசெய்யும்போது எல்லோரும் சோர்வடைந்திருந்தோம். எனக்கும் அதில் மனநிறைவு உண்டாகவில்லை. இன்னும் இன்னும் அழுத்தமாக, வலிமையாக கதையைச் சொல்ல எனக்கு விருப்பமாக இருந்தது. திரைக்கதையில் மேலும் சில அர்த்த தளங்களை உருவாக்க விரும்பினேன். முழு வட்டத்திற்குள் ஒரு நேர்கோட்டை உருவாக்க விரும்பினேன். ஆனால், அப்படி முதற் பார்வைக்கு நேர்கோடுகளைப் போலத் தெரிந்தவை உண்மையிலேயே சிதறடிக்கப்பட்டவையாகவே இருந்தன.

ஆனால், அதே நேரத்தில் அதிர்ஷ்டவசமாக, ஓக்லஹோமாவுக்குச் சிலமுறை பயணம் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. ஓசேஜ் நேஷனின் பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு அவர்களுடன் இணைந்து கூட்டாக எப்படி இத்திரைப்படத்தை உருவாக்கலாம் என்பது குறித்து ஆர்வத்துடன் இருந்தேன். முதலில், அவர்களுக்கு எங்களை நம்புவதில் சிறிது தயக்கம் இருந்தது. அவர்களைப் பற்றியும் இந்தக் கதை குறித்தும் என்னால் இயன்ற சிறந்த பங்களிப்பை செய்ய முயல்கிறேன் என்பதை அவர்களுக்குப் புரியசெய்தால் அவர்களுடைய நம்பிக்கையை என்னால் ஈட்ட முடியும் எனக் கருதினேன். அவர்கள் என் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள் என்பதையும் ஏன் நம்பிக்கை வைப்பதில் தயங்கினார்கள் என்பதையும் என்னால் முழுமையாகவே புரிந்துகொள்ள முடிந்தது. முற்றிலுமாக அதைப் புரிந்துகொள்ளவும் செய்தேன். இந்த மனத்தடங்கல்தான் இதன் கதையே. இந்தக் கதை என்பது திருமணத்தின் மீதான நம்பிக்கைதான் இல்லையா? அதில் வெவ்வேறு நிலைகள் இருக்கின்றன, வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருக்கின்றன, தவறுகள் இருக்கின்றன, வேறு சிலவும் இருக்கின்றன. ஆனால், நம்பிக்கை அங்கு நிலவவே செய்கிறது. ஓசேஜ் குறித்து நான் கற்றுக்கொள்ளத் தொடங்கியது என்னவெனில், கதையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களும் இன்னமும் அங்கு இருக்கின்றன. தி பர்கார்ட்ஸ் & தி ரோன்ஸ், ஹென்ரி ரோன் ஆகியவை அங்கு உள்ளன. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த இந்தக் காலத் தலைமுறையினர் எங்களிடம் என்ன தெரிவித்தார்கள் என்றால், ‘இதை மறந்துவிடாதீர்கள், எர்னெஸ்ட்டும் மோலியும் காதலில் இருந்தார்கள்’. ஏன் அவள் அவருடன் வாழ்ந்தாள்? ஏன் வாழ்ந்தாள் என்பதை விட எப்படி அவளால் வாழ முடிந்தது? ஏன் ஒரு நபர் மற்றொருவருடன் வாழ்கிறார்? இதற்கான பதில் நமக்கு தெரியாது. ‘ஏன்’ என்பது மற்றொரு சிக்கல், கதையின் மற்றுமொரு கோணம். ‘ஏன்’ என்பதற்கான பதில், இந்தக் கதையில் ‘தன்னையே ஏமாற்றிக்கொள்ளுதல்’ என்பதாகும். இந்த ‘ஏன்’ என்பது அவன் என்ன செய்கிறான் என்பது குறித்த யோசனைகள் அவளுக்கு இருந்திருக்கிறது என்றாலும் கூட அவளுடைய காதல் மிக வலிமையானதாக இருந்திருக்கிறது. தன்னுடைய சந்தேகங்களைத் தனக்குள்ளாக அவள் பொதிந்து வைத்திருந்தாலும் அவள் அவனை நம்பியிருக்கிறாள். அதனால் இதுவொரு காதல் கதையாகிறது. அதன்பிறகு, Zoom மூலம் லில்லியை (Lily Gladstone) நாங்கள் சந்தித்தோம். அவர் நடித்திருந்த ‘Certain Women’ திரைப்படத்தை எலென் லீவீஸ் என்னிடம் காட்டினார். லில்லி அதில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பிறகு லியோவும் அவருடன் Zoom வழியே கலந்துரையாடினார். ஏனெனில், இந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார் என்பதில் லியோவுக்கும் அதிக ஆர்வமிருந்தது. வெளிப்படையாகவே, அவர் பூர்வீக அமெரிக்கராக இருக்க வேண்டிய தேவையிருந்தது. ஓசேஜ் பிரதிநிதிகளும் லில்லியை ஏற்று அங்கீகரித்தார்கள். அவர்கள் அங்கீகரிப்பதற்கு முன்பு லில்லியுடனான உரையாடல் நிறைவுற்றதும் லியோ என்னிடம், “அவர் அற்புதமாகத் தெரிகிறார்” எனக் கருத்துரைத்தார். “ஆமாம் பல காரணங்களுக்காக” என நானும் அதை அமோதித்தேன். அவரிடம் நேர்மையும் நகைச்சுவை பண்பும் நிறைந்திருக்கிறது, அதை உங்களால் திரைப்படத்தில் உணர முடிந்திருக்கும்.

அவரிடம் ஆழமும் முகத்தில் இனிமையும் குடியேறியிருந்தது. எங்களை விட இந்தக் களம் தொடர்பான அவருடைய அறிவு பெரியது என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டாகியது. அதாவது, அவருக்கு அந்த மக்களை நன்கு தெரிந்திருந்தது, அந்தச் சூழலை அவரால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது, குழப்பங்களையும் அவலச் சூழலையும் அவரால் உணர்ந்துகொள்ள முடிந்திருந்தது, அத்துமீறல்களை ஆழமாக உள்வாங்க முடிந்தது. திரைக்கதை வாசிப்பிற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு லியோ என்னிடம் உரையாடினார். கதையில் எர்னெஸ்ட்டுக்கும் மோலிக்கும் இடையில் காதல் இருக்கிறது என்பது எப்போதும் எங்கள் சிந்தனையில் ஊர்ந்தபடியே இருந்தது. உண்மையில், விசாரணை முடிவுறும் வரை அவள் அவனை விட்டு பிரியவே இல்லை. நாங்கள் சில காட்சிகளை வைத்திருந்தோம். அதில் எஃப்.பி.ஐ.ச் சேர்ந்தவர்கள் – “எப்படி அவள் இன்னமும் அவருடன் வாழ்கிறாள்?” எனக் கேள்வி எழுப்புவார்கள்.

உண்மையில், அவர்கள் அதைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவத்தின் நீதிமன்ற விவாதங்களின் குறிப்புகள் எங்களிடமிருந்தன. அவள் அப்போதும் நீதிமன்றத்தில் இருந்திருக்கிறாள். அவளுக்குப் புரியவே இல்லையா? ஆனால், அவர்கள் இருவரையும் ஏதோ ஒன்று ஆழமாகப் பிணைத்திருந்திருக்கிறது. இந்த விசாரணைக்குப் பிறகுதான் அவள் அவரிடமிருந்து பிரிந்து சென்றிருக்கிறாள். நாங்கள் எங்களுக்குள் கேள்வியெழுப்பிக்கொண்டோம். அது என்னவாக இருக்கும்? அதற்கு நான், “அதுவே இந்தக் கதையாக இருந்தால் என்ன?” என்றேன். இந்தக் கேள்விகளையெல்லாம், எர்னெஸ்ட் கதாபாத்திரத்தில் யாரோ ஒருவர் நடிப்பதாகவும் டாம் வொய்ட் இதையெல்லாம் எப்படிக் கண்டுப்பிடிக்கிறார் எனும் சூழமைப்பிலேயே நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காவல்துறை விசாரணை இப்போது இந்தக் கதைக்குச் சற்றே அதீதமாகத் தோன்றியது. ரொம்பவும் பிரத்தியேகமான அகவயப்பட்ட ஒரு கதையை அது அழுத்துவதாகவும் இருந்தது. அதன்பிறகு, லியோ ஒரு வாரத்திற்குப் பிறகு, ஓரிரவில் மீண்டும் என்னைப் பார்க்க வந்தார். வந்தவர், “இந்தக் கதையின் இருதயம் என்ன?” என்றார். “எர்னெஸ்ட்டும் அவளும்தான் இந்தக் கதையின் இருதயம்” என அவருக்குப் பதிலளித்தேன். அதற்கு அவர், “என்னவாகவும் இருந்துவிட்டு போகட்டும், நான் அதே டாம் வொய்ட் கதாபாத்திரத்திலேயே நடிக்கிறேன். நாம் ஏன் இதை டெக்ஸாஸ் ரேஞ்சரின் தன்மையில் உருவாக்கக்கூடாது?” என்றார். அதுபோன்ற படங்களை நாம் ஏற்கெனவே பாத்திருக்கிறோம். அது உண்மையிலேயே சிறப்பானதுதான். ஆனால், அதையே லியோவும் செய்ய வேண்டுமா? நான் எப்படி அதை வேறுபாட்டுடன் அணுகி உருவாக்க முடியும்? நான் யோசிக்க முயன்றேன். ஆனால், என்னால் இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. லியோ என்னை ஆழ்ந்து பார்த்துவிட்டு, “சரி விடுங்கள், வருத்தமடைய வேண்டாம், நான் அந்த எர்னெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும்?” என்றார்.

Martin Scorsese, Killers of the Flower Moon 2

… அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது அவருடைய யோசனையா? அற்புதம்!!!

ஆமாம். அவருடைய கேள்விக்கு, “நீங்கள் எர்னெஸ்ட்டாக நடித்தால் நாம் அந்தக் காதல் கதைக்கு இன்னும் அழுத்தம் கொடுப்போம். அவர்கள் இந்தக் கதையின் இருதயமாக இருக்கிறார்கள். இப்போதுதான் நாம் கதையின் மையப் பகுதிக்குள் நுழைகிறோம். ஏற்கெனவே எழுதி வைத்திருக்கும் அனைத்தையும் கிழித்தெறிந்துவிட்டு மீண்டும் திருத்தி எழுதுவோம். எல்லாவற்றையும் மாற்றுவோம். ஸ்டூடியோவில் நீங்கள் எர்னெஸ்ட்டாக நடிக்கப் போகிறீர்கள் என்று சொல்வோம். லில்லியும் அபாரமான நடிகையாக இருக்கிறார். அதனால் நாம் அனைத்தையும் மீண்டும் மாற்றி எழுதுவோம்” என்றேன்.

ஆனால், ‘திருத்தியெழுதுதல்’ என்பது தவறான வார்த்தை. நாங்கள் முழுமையாக அனைத்தையும் அப்போதுதான் கட்டமைத்தோம். எரிக் ரோத் எனக்கு உதவினார். வேறு சில நண்பர்களும் உதவினார்கள். கேஸினோ திரைப்படத்தின் போதும் இதையேதான் செய்தோம். நானும் நிக் பிலேகியும் சேர்ந்து தொடக்கநிலை குறிப்புகளில் இருந்து ஒன்றாகச் சேர்ந்து எழுதினோம். இந்தப் படத்திற்கான திருத்தியெழுதும் பணியின்போது நான் ஒரு கட்டத்தில், “ஒரு சிறந்த திரைக்கதையை எழுதியிருக்கிறோம்” என்பேன். அதன்பிறகு மற்றொருவர் வந்து, “ஹேய், இதை ஏன் திரைக்கதையில் சேர்க்கக்கூடாது?” என்பார். அதனால் ஒத்திகை வரையிலும் மீண்டும் மீண்டும் திரைக்கதையைத் திருத்தி திருத்தி எழுதிக்கொண்டே இருந்தோம். ஒத்திகையிலும் திரைக்கதை மெருகேறச் செய்தது. ஓசேஜ் மக்களும் எங்களுக்கு நிறைய உதவினார்கள். நிறைய குறிப்புகளை வழங்கினார்கள். ஓசேஜைச் சேர்ந்த வில்சன் எனும் வழக்கறிஞர் ஒருவர் என்னைப் பார்த்து, “உங்களுக்குப் புரியவில்லை, எங்களுக்கென்று ஒரு வாழும் முறை இருக்கிறது” என்றார். அவர் மிகவும் உறுதியானவர், வழக்கறிஞர், களப்பணியாளர். “நாங்கள் இப்படி வளர்ந்தோம், அப்படி வளர்ந்தோம்” எனக் குறிப்பிட்டு நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். அவர் எனக்கு எதிராகத் தனது வாதங்களை முன்வைக்கவில்லை. தனக்காகவும் தனது மக்களுக்காகவுமே அவருடைய வாதங்கள் இருந்தன, “இதுதான் நாங்கள். உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. உதாரணமாக, நான் இளைஞனாக இருந்தபோது, ஒருமுறை திடீரென புயல் வந்தது. நான் அதிலிருந்து தப்பியோட முயற்சித்தேன். அப்போது எனது பாட்டி, ’உட்கார், உட்கார், புயல் நம்மைக் கடந்து செல்லட்டும், நம்மைத் தழுவி விலகட்டும். இது கடவுளின் பரிசு. இது வாஹ்-கோன் டாஹின் பரிசு. புயலிடமிருந்து தப்பி ஓடாதே. அதை உணர்ந்துகொள்’ என்பார். அப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம்” என்றார்.

அதனால், அதை நான் குறித்து வைத்துக்கொண்டேன். இதுபோன்ற பல குறிப்புகள் அங்குமிங்குமெனச் சேகரித்து வைத்துக்கொண்டேன். உணவு மேஜையில் நடைபெறும் ஒரு காட்சி இருக்கிறது. “உனக்கு கொஞ்சம் விஸ்கி வேண்டுமா?” என மோலி கேட்பாள். அதைத் தொடர்ந்து இருவரும் மரு அருந்தத் தொடங்குவார்கள். லியோவை விட மோலி அதிகளவில் மது அருந்தினாலும், அவனைப் போல அவள் போதையில் வீழ்வதில்லை. இதை நாங்கள் எழுதியிருந்தோம். மேலே, வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்த வார்த்தைகளை அசைப்போட்டதன் பிறகு, இக்காட்சியை இன்னும் சிறந்ததாக உருவாக்குவோம் என நான் தெரிவித்தேன். “இந்த இடத்தில் மழை பெய்தால் என்ன? புயல் வீசினால் எப்படி இருக்கும்? அதை அச்சுறுத்தும் விதத்தில் அல்லாமல், புயலின் தீவிரத்தை மட்டுமே உணர்த்தினால் என்ன?  வாஹ்-கோன் டாஹின் பரிசு. இதைச் செய்ய நீங்கள் அமைதியுடன் இருக்க வேண்டும். இருண்மையான உங்கள் சுயத்தை வெளிப்படுத்தக்கூடாது”. இந்த வகையில் அவள் அவனைக் கட்டுப்படுத்துகிறாள். அவன் வெறுமனே அமைதியுடன் காத்திருக்கிறான்.

இப்படித்தான் அது கட்டமைக்கப்பட்டது. இது எங்களுக்கு வேடிக்கையான அனுபவமாக இருந்தது. ஏனெனில், எப்போதும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கண்டுப்பிடிப்பது சுவாரஸ்யமாக இருந்தது, அல்லது யாரேனும் ஏதேனும் குறிப்புகளை எங்களுக்கு வழங்கியபடியே இருப்பார்கள். எங்கள் தயாரிப்பாளர் மேரியான் போவரும் (Marianne Bower) பல சிறந்தவற்றைச் செய்துகொடுத்தார். ஓசேஜ் மக்களுக்கும் எங்களுக்குமான தொடர்பு மையம் அவர்தான். அவர் வெவ்வேறு தொழில்நுட்பக் கலைஞர்களுடன், வெவ்வேறு பிரிவுகளில் இருந்தவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். ஓசேஜ் மக்கள் குறித்த அலோசகர்களுடனும் சேர்ந்து பணிபுரிந்தார். அதனால் உண்மையாகவே இது சுவாரஸ்யமான பணி அனுபவமாகும். “உங்களுக்கு தெரியுமா குடும்பத்தில் ஒரு மூத்த உறுப்பினர் மரணமடையும்போது, குடும்பத்தின் மிக இளைய அங்கத்தினர் அவருடைய சவப்பெட்டியின் மீது நடந்துசெல்ல வேண்டும்” என ஒருமுறை அவர் பகிர்ந்துகொண்டார். இதையும் காட்சிப்படுத்தியே ஆக வேண்டும் எனும் பரபரப்பு எங்களுக்கு உண்டானது.

அதனால் இறுதிச் சடங்கு காட்சி இன்னும் பெரிதாக ஆனது. படத்தில் காட்டப்பட்டிருப்பதை விட அக்காட்சி இன்னும் பெரிதாக இருந்தது. அதை நாங்கள் குறைத்திருக்கிறோம். அதன்பிறகு, சிசிலியர்கள் குறித்த சிறுவயது ஞாபகங்கள் எனக்கு இருந்தன. இதில், ஒரு முக்கிய அம்சம் என்னவெனில், நான் வளரும் காலத்தில் ஏராளமான முதியவர்களின் மரணத்தைப் பாத்திருக்கிறேன். பல இறுதிச் சடங்குகளில் பங்கேற்றிருக்கிறேன். முதிய இத்தாலிய பெண்களும் கறுப்பு உடையில் இருக்கும் சிசிலியர்களும் சாவு சடங்கில் பங்கேற்பார்கள். Salvatore Giuliano திரைப்படம் நினைவிருக்கிறதா? அதுபோன்ற மக்களுடன்தான் நாங்கள் வளர்ந்தோம். அதனால் பூர்வக்குடி மக்களுக்குள் ‘ஒப்பாரி பாடல்களை பாடுபவர்களும்’ இருப்பார்கள் என்றேன் நான். அதனால் அதையும் படம்பிடித்துக்கொண்டோம். “வீட்டின் முன்னால் நின்று நாங்கள் ஒப்பாரி பாடுவோம்” என அவர்கள் தெரிவித்தார்கள். “அற்புதம், ஒரு தொலைதூரக் காட்சியின் மூலம் இதைப் பதிவுசெய்வோம்” என நான் இதுதொடர்பாக முடிவு செய்தேன்.

ஒரு வீட்டையும் வீட்டின் முன்னால் மூன்று நபர்கள் நின்று ஒப்பாரி பாடுவதையும் படமாக்கினோம். அது சிறப்பாக அமைந்திருந்தது. “அண்மைக் காட்சியில் இதைப் படமாக்கிக்கொள்வோமா?” என என்னிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது, நான் வேண்டாம் எனத் தெரிவித்துவிட்டேன். “அண்மைக் கோணம் ஒன்றைப் பதிவுசெய்வோம். ஒருவேளை அது தேவைப்படலாம்” என மீண்டும் வலியுறுத்தப்பட்டபோதும், வேண்டாம் என தவிர்த்து, “காட்சி தொலைதூரமானதாகவும் மேலிருந்து படமாக்கப்படுவதாகவும்தான் இருக்க வேண்டும். அவர்கள் வாஹ்-கோன் டாஹைப் பார்த்து ஒப்பாரி பாடுகிறார்கள். அதை நாம் பார்க்கிறோம். அதோடு, இப்படிக் காட்சி அமைக்கும்போது வீடு மிகச் சிறியதாகத் தெரிகிறது. மனிதர்கள் பரிதாபகரமாகத் தோன்றுகிறார்கள். நாங்கள் எப்படி வாழ்கிறோமோ அதன்படியே காட்சியளிக்கிறோம். நாங்கள் ஒப்பாரி பாடுகிறோம். அது உங்களுக்கு உரத்து கேட்பதில்லை” என்பதாக ஒரு கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.  இப்படித்தான் அது இருக்க வேண்டும்.

உங்களுடைய அண்மைக் காலத் திரைப்படங்களில் அரசியல் நெடி தூக்கலாகவே இருக்கிறது. ‘The Irishman’ திரைப்படத்தைப் பார்த்தபோது, ‘இந்த மதிப்பிற்குரிய சமூகத்தின் அடியாழத்தில் என்னவாக இருக்கிறது என்பதை இதில் பார்க்கப் போகிறீர்கள்’ எனும் உணர்வை அது வெளிப்படுத்துவதாக எனக்கு தோன்றியது. ‘Killers of the Flower Moon’ நெருப்பை ஏற்றி, ‘அதுதான் உண்மையான அமெரிக்காவின் வரலாறு. நீங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்காத வரலாறு. இதன் மீதுதான் நமது சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அதை நேர்கொண்டு பார்க்கும் துணிவு அதற்கு இல்லை’ என்று நீங்கள் சொல்வதாகத் தோன்றுகிறது.

ஆமாம். உண்மைதான். ஏனெனில், தெருவில் நின்று அனைத்தையும் பார்க்கும் சூழலில் இருந்து நான் வளர்ந்ததால் அப்படி இருக்கலாம். நமது உணர்வு சரியானதுதான் என்றும் இதைச் சொல்வதற்கு நாம் தகுதியானவர்தான் என்றும் நம்புவதுடன், எனது இந்த அணுகுமுறை தொடர்புடையது. வெள்ளை புரோடஸ்டண்ட் (ஆங்கிலம், பிரெஞ்சு, டச்சு, ஜெர்மன்) மக்களால் உருவாக்கப்பட்ட இந்த நாட்டில்  இதுகுறித்துதான் கடந்து இருபத்தைந்து – முப்பது வருடங்களாக மெல்ல மெல்ல புரிந்துகொண்டு வருகிறேன். அதனால் நாடும் அந்த வகையிலான சிந்தனை அமைப்பிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. அது ஐரோப்பியத் தன்மையிலானது. கத்தோலிக்கமோ யூத மதமோ அல்ல. ஆனால், புரோடஸ்டண்டுகளின் பணி நெறிமுறையிலானது – அது சிறப்பான ஒன்றுதான் என்றாலும் கூட. அதுதான் அடித்தளம். அதன்பிறகு, அதனுடன் அரசியல் மற்றும் அதிகார அமைப்பு இணைந்து, அதனுடையே நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அதேபோல வளரும் காலத்தில் எனக்கு நெருக்கமாக இருந்த சிலர், தனிப்பட்ட விதத்தில் சிறந்த குணவியல்புகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் சிற்சில குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் சில காவலதிகாரிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் சட்டப்பிரிவைச் சேர்ந்த யாரையும் நம்ப முடியாது என்கிற மனவுணர்வு எனக்கு உண்டாகியிருக்கிறது. சில நல்ல காவலர்களும் இருந்திருக்கிறார்கள். சில மோசமான அதிகாரிகளும் இருந்திருக்கிறார்கள். ஆனால், என்னுடைய தந்தையின் உலகத்தில் இருந்து, அவரது தலைமுறையில் இருந்து பார்க்கும்போது இது முற்றிலும் வேறானதொரு அனுபவம். பொதுச் சேவைக்காகவும் மக்களுக்கு உதவுவதற்காகவும் அரசியலுக்குள் நுழைவது அற்புதமானது. அவர்கள் அப்படி தன்னலமின்றிப் பொதுச் சேவைகளில் ஈடுபட்டால் அது சிறப்பானதுதான்.

அதுகுறித்த ஒரு திரைப்படத்தை உருவாக்குவீர்களா?

எனக்கு தெரியவில்லை. பொதுச் சேவையில் ஈடுபடுகிற ஒருவரைக் குறித்து யோசிக்கும்போது ‘Black Narcissus’-ஸில் வருகிற ஒரு வரிதான் நினைவுக்கு வருகிறது. மதர் சூப்பிரியர் இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்பு டெபோரா கெர்ரிடம் சொல்வது: எல்லோரையும் விட சிறந்த தலைவர், எவரொருவரையும் விட அதிகச் சேவைப் பணிகளில் ஈடுபடுகிறவரே.

ஆஸ்கர் விருதுபெற்ற The Departed’க்குப் பிறகு உங்கள் படைப்பாக்கத்தில் ஏதோவொரு மாறுதல் நிகழ்ந்திருக்கிறது எனும் உணர்வு எனக்கு எழுகிறது. விருதுகள் பெரிய விஷயம் இல்லையென்றாலும் இதற்கு மேலும் யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனும் தன்மையை உங்களிடம் பார்க்க முடிகிறது. அதன்பிறகு நீங்கள் உங்களுடைய படங்களிலேயே மிகச் சிறப்பான மற்றொரு திரைப்படத்தை Shutter Island’-ஐ உருவாக்குனீர்கள். அது உண்மையிலேயே சற்றே கிறுக்குத்தன்மான (நேர்மறையான விதத்திலேயே) படமும் கூட.

ஆமாம். மனிதர்கள் அதில் பிளவுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். நான் அதை விரும்புகிறேன். அதாவது, அத்திரைப்படத்தில் ஒரு வரி வசனம், எண்ணற்ற பல்வேறு பொருள்களை வழங்குவதற்கு வாய்ப்பளிப்பதாகிறது. அது உண்மையிலேயே சுவாரஸ்யமானது. அதைக் கையாள எனக்கு அதிக விருப்பமும் இருக்கிறது. ஆஸ்கார் விருதைப் பொருத்தவரையில், நான் திரைப்படம் உருவாக்கத் தொடங்கியதில் இருந்து முப்பத்து ஏழு வருடங்களுக்குப் பிறகு எனக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்திருக்கிறது. அதுதான் எனக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது. நான் படம் இயக்கத் தொடங்கியபோது இருந்த அகாதெமி குழுவில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட குழு. ஆனால், என்னைப் பொருத்தவரையில் அந்த விருது என்பது கவனக்குறைவால் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன். The Departed ஒருமுறை இயக்கி நிறைவுசெய்வது போன்றதுதான். நான் அதிலிருந்து விலகி சில சிறிய படங்களை உருவாக்க விரும்பினேன். எனக்கு தெரியவில்லை. The Departed சாதாரணமாகத் தொடங்கிவிட்டது. பல காரணங்களால் அதை உருவாக்குவது சிரமமான ஒன்றாகவே இருந்தது. அது முற்றிலும் வேறான ஒரு கதை. ஆனால், எங்களுக்குத் தெரிந்த முறையில் அந்தப் படத்திற்காகப் போராடினோம். இறுதியில், படம் திரைக்கு வந்தபோது மக்கள் அதை விரும்பினார்கள். அது சிறந்த படம் என்றோ மோசமான படம் என்றோ எனக்கெனத் தனிப்பட்ட கருத்து இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஏதோவொன்றை நிறைவுசெய்துவிட்டோம் என்கிற உணர்வுதான் அப்போது எனக்கு இருந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் துளியும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

எனது அடுத்த திரைப்படமாக ‘The Silence’-தான் இருந்திருக்க வேண்டியது. ஆனால், அதற்குள் Shutter Island இடையில் வந்துவிட்டிருந்தது. அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. ஆனாலும் அடுத்த படமாக இது இருப்பதில் பிழை ஏதும் இல்லை என்கிற உணர்வில் அதை உருவாக்கினேன். எனக்கு திரைக்கதை வழங்கப்பட்டது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் சில நிலைகள் இருக்கின்றன என்பதை நான் உணர்ந்திருந்தாலும் அதை எப்படி படமாக்குவது என்று தொடக்கத்தில் தெரிந்திருக்கவில்லை.

ஆனால், The Departed திரைப்படத்திற்குப் பிறகு, இனியும் நான் ஸ்டூடியோவுக்காக திரைப்படங்களை உருவாக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிந்திருந்தது. ஏனெனில், ஸ்டூடியோவில் இருந்தவர்கள் The Departed-ஐ, இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் என எடுக்க விரும்பினார்கள். ஆனால், நான் திரைப்படத்தில் இரு நாயகர்களையும் கொன்றுவிட்டேன். அவர்கள் ஒருவரை வாழ வைக்க விரும்பினார்கள். அந்த வகையில் படமெடுக்க எனக்கு விருப்பமில்லை. அதனால், இதே வகையில் தொடர்ந்து என்னால் திரைப்படங்களை இயக்க முடியாது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அதன்பிறகு, Shutter திரைப்படத்தில் இருந்து எனது அனைத்து படங்களுமே ஏதோவொரு வகையில் சுயாதீனமான படைப்புகளாகவே இருந்துவருகின்றன. பாராமெளண்ட் பிக்சரின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த பிராட் கிரே-தான் என்னைப் பார்த்துக்கொண்டவர். The Departed-ஐ அவர்தான் எனக்கு வழங்கினார். Shutter-க்கு அவர்தான் இசைவு தெரிவித்தார். அதன்பிறகு, அவர் மரணத்தைத் தழுவிவிட்டார். அதிலிருந்து சுயாதீனமாகதான் செயல்படுகிறேன். ஒருபோதும் இனிமேல் என்னால் ஸ்டூடியோவுடன் இணைந்து செயல்பட முடியாது.

ராம் முரளி <raammurali@gmail.com>

raam murali

Amrutha

Related post