சீமாட்டி லாசரஸ்
சில்வியா பிளாத்
தமிழில்: ஸிந்துஜா
நான் மறுபடியும் நிகழ்த்தி விட்டேன்.
பத்து வருடங்களுக்கு ஒருமுறை –
சமாளித்தபடி.
நடமாடும் அற்புதம்
என் தேகம். நாஜியின்
விளக்கின் மறைப்பு போலப்
பிரகாசிக்கிறது.
என் வலப் பாதம்
ஒரு பேப்பர் குண்டு.
என் முகம்
ஒரு அவலட்சணமான
யூதத் துணி.
அதை உரித்து விடு.
ஓ, என் எதிரியே,
அச்சமாயிருக்கிறதா?
என் நாசி, என் கண் குழிகள், என் பற்கள்,
நெடிய என் மூச்சு
எல்லாம் மறைந்து விடும் ஒரே நாளில்.
வெகு விரைவில்
என் சமாதி தின்ற
உடலின் சதை என் மீது மறுபடியும் படும்.
புன்னகைப் பெண்ணாய் நான்.
எனக்கு முப்பது வயதுதான்.
பூனையைப் போல எனக்கும் சாவு ஒன்பது முறை.
இது மூன்றாவது.
என்ன ஒரு அசிங்கம்?
பத்தாண்டுக்கொருமுறை
அழிந்து விடுவது என்பது.
பல லட்சக்கணக்கான மெல்லிழைகள் போல
கூட்டம் நெருக்கியடித்து
வந்து பார்க்கிறது.
கட்டப்பட்ட என் கைகால்களை
விடுவித்து.
பெரும் உடை உரிப்பு.
.
குணவான்களே
சீமாட்டிகளே
இவை என் கைகள்.
இவை என் முழங்கால்கள்
சதையும் எலும்புமாய் நான்.
அதே பெண்தான் நான்.
முதல் தடவை நேர்ந்த போது
எனக்கு வயது பத்து.
அது ஒரு விபத்து.
இரண்டாம் தடவை நிகழ்ந்த போது
திரும்ப வர வேண்டியதில்லை என நினைத்தேன்.
மூடப்பட்ட கடல் சங்கு போல ஆனேன்.
அவர்கள் கூக்குரலிட்டார்கள்.
என் மீது ஒட்டியிருந்த புழுக்களை
ஒட்டிக் கொண்ட முத்துக்களென
நீக்கினார்கள்.
எல்லாவற்றையும் போல
இறப்பதும் ஒரு கலைதான்.
அதை நான் திறம்படச் செய்கிறேன்.
அதைச் செய்தால் அது நரகம்.
அது உண்மையாகவும் உள்ளது.
எனக்கு அழைப்பு வந்து விட்டதென
நீங்கள் கூறலாம்.
ஒரு கூட்டுக்குள் அதைச் செய்வது எளிது.
செய்து விட்டு அடங்கி விடலாம்.
ஆனால், பட்டப்பகலில்
திரும்பி வருவது நாடகம் போல.
அந்த இடத்தில், அந்த முகங்கள் காட்டுத்தனமாக
இரைகின்றன:
‘அற்புதம் !’
இது என்னை அடித்துப் போடுகிறது.
என் தழும்புகளைக் காண
என் இதயத்தின் ஒலியைக் கேட்க
என்னுடன் பேச அல்லது தொட
அல்லது கொஞ்சம் ரத்தம்,
அல்லது என் தலை மயிர், என் உடை
எல்லாவற்றுக்கும் வசூல் உண்டு.
மாண்புமிகு டாக்டர் அவர்களே
மாண்புமிகு என் எதிரியே
நான் உங்களின் படைப்பு.
உங்களின் செல்வம்.
தங்கக் குழந்தை
அது ஒரு கூச்சலில் கரைகிறது.
நான் தீய்க்கப்படுகிறேன்.
உங்கள் பரிவை நான்
மதிக்கவில்லை என்று எண்ணாதீர்கள்.
நீங்கள் கிண்டி கலக்குகிறீர்கள்.
சாம்பல், சாம்பல்.
சதை எலும்பு தவிர வேறொன்றும் இல்லை.’
ஒரு சோப்புக் கட்டி
ஒரு திருமண மோதிரம்
ஒரு தங்கச் சரடு
மாண்புமிகு கடவுளே
மாண்புமிகு சாத்தானே
ஜாக்கிரதை.
என் சாம்பலிலிருந்து
சிவப்புக் கேசத்துடன்
எழுகிறேன்.
மனிதர்களைக்
காற்றைப் போல
உறிஞ்சுகிறேன்.
*லாசரஸ், இறந்த நான்காம் நாள் இயேசுவால் உயிர்ப்பிக்கப்பட்டு எழுந்து வந்தவர்.