தென்னிந்தியா ஒருபடி மேல்!

 தென்னிந்தியா ஒருபடி மேல்!

ராமச்சந்திர குகா

தமிழில்: மணி வேலுப்பிள்ளை

 

நேருவின் பதவிக் காலத்தில் ஆஸ்திரேலியாவின் தூதராக இந்தியாவில் பணியாற்றியவர் வால்டர் குரொக்கர் (Walter Crocker, 1902-2002); நேருவை நயந்துவந்து, அவருடன் ஒட்டி உறவாடியவர். அதேவேளை கோவா படையெடுப்பு, காஷ்மீர், ஐந்தாண்டுத் திட்டம் குறித்து நேருவைக்

கண்டித்தவர். நேரு மறைந்த பிறகு எழுதிய நூலில் குரொக்கர் கூறுகிறார்:

“இந்தியக் குடியரசில் தென்னிந்தியா பெறும் முக்கியத்துவம் மிகவும் குறைவு. இது இந்தியாவுக்கு ஓர் இழப்பு; தென்னிந்தியாவுக்கு இழைக்கப்படும் ஓர் அநீதி. தென்னிந்தியா சில முக்கிய துறைகளில் மேம்பட்டு விளங்குகிறது: அங்கு வன்முறை நிகழ்வது குறைவு; முஸ்லீம்களை வெறுப்பது குறைவு; பல்கலைக்கழகங்களில் ஒழுங்கீனமோ நெறி பிறழ்வோ கிடையாது; கல்வித் தராதரங்கள் சிறந்து விளங்குகின்றன; சிறந்த ஆட்சியும் துப்புரவும் பேணப்படுகின்றன; ஊழல் குறைவு; இந்து மறுமலர்ச்சி வாதம் தென்னிந்திய மக்களுக்கு இனிப்பதரிது.” (Walter Crocker, Nehru: A Contemporary’s Estimate, Oxford, 1966).

அரை நூற்றாண்டு கழித்து சாமுவேல் போல், கலா சீதராம் ஶ்ரீதர் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய நூலில், தென்னிந்தியா பொருள்வளத்தில் மேம்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் கொண்டு நிறுவியுள்ளார்கள் (Samuel Paul & Kala Seetharam Sridhar, The Paradox of India’s North-South Divide, Sage, 2015).

1960இல் தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உத்தரப் பிரதேச தனிநபர் வருமானத்தை விட 51% அதிகமாய் இருந்தது. 1980 தொடக்கத்தில் அந்த வேறுபாடு 39% ஆக குறுகியது. எனினும் பின்வந்த தசாப்தங்களில் தமிழ்நாட்டு தனிநபர் வருமானம் விரைந்து பெருகியது. 2005இல் சராசரி தமிழ்நாட்டுவாசியின் வருமானம் சராசரி உத்தரப் பிரதேசவாசியின் வருமானத்தை விட 128% அதிகமாய் இருந்து, 2021இல் ஏறத்தாழ 300% அதிகமாய் உயர்ந்துள்ளது!

அதேவேளை வட இந்திய மாநிலங்களையும் தென்னிந்திய மாநிலங்களையும் ஒப்பிடுமிடத்து, 1960இல் 39% ஆக இருந்த தனிநபர் வருமான வேறுபாடு, 40 ஆண்டுகள் கழித்து, 2000ஆம் ஆண்டில் 101% ஆக அதிகரித்து, 2021இல் 250% அதிகரித்துள்ளது. தற்பொழுது வட மாநிலங்கள் நான்கிலும் ஒருவரின் சராசரி ஆண்டு வருமானம்: US $4,000; தென் மாநிலங்கள் நான்கிலும்: US $10,000!

தென்னிந்தியாவில் தொழிற்கல்வி, மின்வள உற்பத்தி, வீதியமைப்பின் தரமும் பரிமாணமும் அதிகம். உற்பத்தித் துறையில் ஆக்கத் திறனும் வினைத்திறனும் ஓங்க அது வழிவகுத்துள்ளது.

தெற்கில் அரசாங்கப் பாடசாலைகள் திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன. மாணவர்கள் கல்வியை இடைநிறுத்துவது குறைவு. மருத்துவசாலைகளில் மருத்துவர்களும் மருந்து வகைகளும் அதிகம். தூய குடிநீர் வசதியும் நகர்ப்புற சேரிகளில் துப்புரவான கழிப்பறைகளும் அதிகம்.

1960இல் கிராமப்புற வறுமை உத்தரப் பிரதேசத்தை விடத் தமிழ்நாட்டில் அதிகமாய் இருந்தது. 1980 முதல் 1990 வரையான காலப்பகுதியில் தமிழ்நாட்டில் கிராமப்புற வறுமை குன்றிவிட்டது.

1991இல் இந்தியப் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபொழுது, மிகுந்த தேர்ச்சியும் உடல்நலமும் வாய்ந்த தென்னிந்தியா அத்தகைய கொள்கை மாற்றத்துக்குத் தயாராகவே இருந்தது. 1990 முதல் 2000 வரை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் ஆலைகளும் எந்திரவியல் கல்லூரிகளும் கணினி மென்பொருள் வலயங்களும் மருந்தாக்க நிலையங்களும் பல்கிப் பெருகின.

இன்று இந்தியாவின் பொருள்வளத்தில் தென்னிந்தியா பெருமளவு பங்கு வகிக்கிறது. தென்னிந்திய சமூக, பண்பாட்டு மேம்பாடே அதற்கான காரணம். அதாவது தென்னிந்தியா கல்வியிலும் ஆளுகையிலும் கவனம் செலுத்தியமை ஒரு காரணம்; இந்துத்துவ மறுமலர்ச்சி வாதத்தில் புலன் செலுத்தாமை மறு காரணம்.

தென்னிந்திய விருத்திக்கு இந்து – முஸ்லீம் அமைதி துணை நிற்கிறது. உத்தரப் பிரதேசமும் பீகாரும் இடைவிடாமல் இன மோதல்களிலும் சாதி மோதல்களிலும் ஈடுபட்டிருந்தன. இந்துத்துவ கொடூரங்களை ராம்ஜன்மபூமி இயக்கம் கட்டவிழ்த்துவிட்டது. தென்னிந்தியாவில் அது எடுபடவில்லை. இந்திய – பாகிஸ்தானியப் பிரிவினையின் கொடூரங்களைத் தென்னிந்தியா பட்டறியவில்லை; கடுப்பும் கசப்பும் மிகுந்த பிரிவினையின் பின்விளைவுகளிலிருந்தும் தென்னிந்தியா தப்பிக்கொண்டது.

தென்னிந்திய சமூக சீர்திருத்தமும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்தணரின் ஆதிக்கத்துக்கு எதிரான முழக்கம் வேளைக்கே தென்னிந்தியாவில் எழுந்துவிட்டது. ஶ்ரீ நாராயண குரு, பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் சாதி, பால்மை விடயங்களில் பெரிதும் சரிநிகரான அணுகுமுறை ஓங்க வழிவகுத்தார்கள். உழுகுலத்தின் உள்ளிருந்து கூட தொழில்முனைவோர்கள் உதித்தார்கள். பெருந்தொகையான பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இது ஒன்றும் தற்செயலாக நிகழவில்லை; நெடுங்கால சமூக சீர்திருத்த இயக்கங்களின் பெறுபேறாகவே நிகழ்ந்தது.

வடக்கை விட தெற்கில் ஆயுட்காலமும் பெண்களின் கல்வி அறிவும் அதிகம்; சிசு இறப்பு குறைவு. பொருள்வளத் துறைக்கு உகந்த உடல்நலமும் கல்வியறிவும் மிகுந்தவர்கள் தென்னிந்தியாவில் அதிகம்.

ராமச்சந்திர குகா

“இந்தியாவில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடைப்பட்ட பாரிய வேறுபாடு பால்மை உறவிலேயே காணப்படுகிறது” என்கிறார் அலிஸ் எவன்ஸ் (Alice Evans) என்னும் சமூகவியலர். “தென்னிந்தியப் பெண் குழந்தைகள் உயிர்தப்பி வாழ்வதும்; கல்வி கற்பதும் தமது கணவரைத் தாமே தேர்ந்தெடுப்பதும்; காலந்தாழ்த்தி மணம் முடிப்பதும்; கணவருடன் ஒட்டி உறவாடி, பிள்ளைகளை குறைத்து, சொத்தினைப் பெருக்கி, சீதனத்தைக் கட்டுப்படுத்துவதும்; பிறருடன் நட்புக்கொண்டு, தத்தம் சமூகத்தவரிடையே தாராளமாக உறவாடுவதும்; ஆண்களுடன் சேர்ந்து பணியாற்றுவதும் அதிகம்” என்கிறார் அவர்.

வட இந்தியாவை விட தென்னிந்தியாவே தேசிய பொருளாதாரத்துக்கும் இந்திய ஒன்றிய அரசிற்கும் பெருந்தொகை அளித்து வருகிறது. தென்னிந்திய மக்கள் உடல்நலம், நல்லுணவு, வாழ்க்கை வளம், உயர்கல்வி வாய்ப்புகளுடன், அரச சேவைகளை எளிதில் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வடமாநில மக்கள் கூட அதை எல்லாம் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆதலால்தான் அவர்கள் தெற்கு நோக்கி நகர ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.

நான் வாழும் பெங்களூரில் இந்து – கங்கை சமவெளியைச் சேர்ந்தவர்கள் தொழில்முனைவோர்களாக விளங்குகிறார்கள். வடபுல லக்னோ மாநகரில் தமிழ், கன்னட, மலையாள தொழில்முனைவர்கள் எவரும் நிலைகொண்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. மத்திய வகுப்பினரும் தொழிலாளரும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பெயர்வதே அதிகம்; தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பெயர்வது மிகக்குறைவு.

தென்னிந்தியாவின் சிறப்பினை புரிந்துகொள்வதற்கு, வெறுமனே கடந்த தசாப்தங்களை நோக்குவதை விடுத்து, கடந்த நூற்றாண்டுகளை நோக்க வேண்டும்: தென்னிந்தியா கடல் சூழ்ந்த ஆள்புலம்; வெளிநாட்டவர்கள் அதைக் கைப்பற்றுவோராக வரவில்லை; வணிகராகவும் பயணிகளாகவுமே வந்தார்கள்; அவர்களைத் தென்னிந்தியா இன்முகம் கொண்டு வரவேற்றது.

எனினும் தென்னிந்தியா முழு நிறைவானதல்ல; தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அதன் மாநில, அரசியல் பண்பாட்டுக்கு இழுக்குண்டாகும் வண்ணம் தலித்துக்கள் கொடுமைகளுக்கு உள்ளாகின்றார்கள். கர்நாடகாவில் சமூக, அரசியல் வாழ்வில் இந்துத்துவம் உறுதிப்பட ஊடுருவி வருகிறது. அதன் விளைவுகள் கசக்கின்றன. 1960இல் தென்னிந்தியாவில் ஊழல் குறைவாகவே இருந்தது. இன்று சுரங்க அகழ்வு மற்றும் கீழ்க்கட்டுமான ஒப்பந்தங்கள் செய்வதில் ஐதராபாத், பெங்களூரு, சென்னை மாநகர அரசியல்வாதிகள் வடமாநில அரசியல்வாதிகளைப் போல், அல்லது அவர்களை விட அதிகமாக, இலஞ்சம் வாங்கி வருகிறார்கள்.

இந்தியக் குடியரசின் அரசியல் வாழ்வில் தென்னிந்தியா வகிக்கும் பங்கு தொடர்ந்தும் தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகிறது. இனி அது மேலும் தாழக்கூடும். இந்திய மக்களவைத் தொகுதிகளை குடித்தொகையின்படி மீட்டியமைக்கும் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. அவ்வாறு மீட்டியமைக்கப்பட்டால், தத்தம் மக்களுக்கு ஓரளவு நற்பணியாற்றும் கேரள, தமிழ்நாட்டு மாநிலங்கள் இந்திய ஒன்றிய அரசின் கொள்கைகளிலும் முதன்மைத் திட்டங்களிலும் கொண்டுள்ள அற்பசொற்ப செல்வாக்கு மேலும் குன்றிவிடும். மறுபுறம், தத்தம் மக்களுக்கு ஏனோதானோ என்று வெறுக்கத்தக்க விதமாகப் பணியாற்றும் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் இந்திய ஒன்றிய அரசின் கொள்கைகளிலும் முதன்மைத் திட்டங்களிலும் ஏற்கெனவே கொண்டுள்ள வலுத்த செல்வாக்கு மேலும் பெருகும்.

அத்தகைய ஏற்றத்தாழ்வினால், ஏற்கெனவே நொந்துபோயுள்ள இந்திய இணைப்பாட்சி முறைமை மேலும் பளுவுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாகும்.

 

நன்றி: ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​Ramachandra Guha, Ahead of the Curve, The Indian Telegraph, 2021-06-19

 

மணி வேலுப்பிள்ளை <manivelupillai@hotmail.com>

Amrutha

Related post