ஐயா, இந்த டயல் சுத்தினா அப்பிடியே நிக்கி! – விட்டல்ராவ்

 ஐயா, இந்த டயல் சுத்தினா அப்பிடியே நிக்கி! – விட்டல்ராவ்

தொலைப்பேசி அறிமுகமானபோது அழைப்புகளைப் பெறுவதும் பிறருடன் தொடர்புகொள்ளுவதும் டெலிபோன் ஆபரேடர்களின் மூலமாகத்தான்.

“ஆபரேடர் ஸ்பீகிங், நம்பர் ப்ளீஸ்…”

பெண்களே அந்தப் பணியைச் செய்வார்கள். வாடிக்கையாளரின் உரையாடலை ஒட்டுக் கேட்பார்கள். அந்தரங்க உரையாடல்கள் ஆபரேடர் பெண்களால் களவாடப்படும் என்ற சந்தேகமும் பயமும் கோபமும் இருந்தே வந்தது; பிறகு வந்த ‘மேக்னடோ’ டெலிஃபோனும் மக்களுக்கு பேஜாராகப் போனது. அந்தகாலகாரர்களை கிளப்புவதற்கு கிராங்கை வைத்துச் சுற்றுவது மாதிரி டெலிபோனோடு இணைத்த கிராங்கை வேகமாகச் சுற்றினால், மறுமுனையிலுள்ளவரும் இதே போல சுற்றி ரிசீவர்களை எடுத்துப் பேசிக் கொள்ளலாம்.

வெகு காலத்துக்கும் இந்திய ரெயில்வே ஸ்டேஷன்களில் இவ்வித ‘மேக்னடோ’ தொலைப்பேசி கருவிகள் உபயோகத்திலிருந்து வந்ததை உங்களில் சிலர் பார்த்திருக்கக் கூடும். வரவேண்டிய ரயில் வண்டி அடுத்த நிலையத்திலிருந்து கிளம்பியாயிற்றா என்பதை அறிந்துகொள்ள ஸ்டேஷன் மாஸ்டர் ‘மேக்னடோ’ டெலிபோனின் கிராங்கைச் சுழற்றிப் பேசுவார். உரையாடல் முடிந்தபோதும் முன் மாதிரியே கிராங்கைச் சுற்றிவிட்டே வைக்கவேண்டும்.

பிறகுதான் தானியங்கி தொலைப்பேசி எக்ஸ்சேஞ்சு, டெலிபோன், டயல் என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.

டயலின் கண்டுபிடிப்பு டெலிபோன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சுதந்திரத்தையும் நிம்மதியையும் தந்தது. இதைக் கண்டறிந்து உலகுக்கு அளித்தவர் அல்மன் ஸ்ட்ரோவ்ஜர் எனும் அமெரிக்க வர்த்தகர். இந்த புதிய ஆட்டோமேடிக் டெலிஃபோன் அமைப்புக்கு அதைக் கண்டுபிடித்தவரின் பெயரைக்கொண்டே ‘ஸ்ட்ரோவ்ஜர் முறை’ எனப் பெயர் வழங்கலாயிற்று.

டயல் கண்டுபிடித்தது சுவையான விஷயம். ஸ்ட்ரோவ்ஜர், அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் சவப்பெட்டி செய்து விற்கும் வியாபாரி. அத்தோடு சவ அடக்கத்துக்கு வேண்டிய சகலத்தையும் செய்து வந்தவர். 1880இல் அந்நகரின் முதல் தொலைப்பேசி வாடிக்கையாளரே அவர்தான். தொலைப்பேசி,  மோட்டார்கார், விவாகரத்து – இம்மூன்றையும் அமெரிக்காவில் இப்படி சொல்லிக் கொள்ளுவதுண்டு: “இந்த பரந்த அமெரிக்க நாட்டில் ஒவ்வொரு ஏழு மனிதர்களுக்கும் ஒரு மோட்டார்காரும், ஒவ்வொரு ஏழு மனிதர்களுக்கும் அவர்களின் திருமணத்தில் ஒரு விவாகரத்தும் உண்டு.”

ஆனால், “ஹலோ பெண்கள்” எனக் கிண்டலாக அறியப்பட்ட டெலிஃபோன் சுவிட்சுபோர்டு ஆபரேடர்களுக்கும் ஸ்ட்ரோவ்ஜருக்கும் வாய்ச்சண்டை தொடர்ந்து இருந்துகொண்டே வந்திருக்கிறது. டெலிஃபோன் ஆபரேடர் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல. அவரது வாய்ச் சண்டைக்குத் தகுந்த எதிர்வினையாற்றுவார்கள். எப்பொழுதெல்லாம் அவரது தொலைப்பேசிக்கு அழைப்புகள் வருகின்றதோ, அப்போதெல்லாம், தொடர்பு கிடைக்காதபடிக்கு, அவரது தொலைப்பேசி ஏற்கனவே உரையாடலில் இருக்கும்போது (Engage) கிடைக்கும் பிஸி ஒலியை (Busy Tone) அப்பெண்கள் உண்டாக்கி வைப்பார்கள்.

அதன் காரணமாகச் சவப்பெட்டி ஆர்டர்கள் மற்றும் சவ அடக்கப் பணிகள் வேண்டி அழைப்புகள் வராமல் ஸ்டோவ்ஜர் தன் தொழிலில் நஷ்டமடைந்து வந்தார். தம் மகனோடு அவர் யோசித்து ஆராய்ச்சி செய்து 1891இல் ஆட்டோமேடிக் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சை டயல் சாதனத்துடன் கண்டுபிடித்தார். இந்தியா, லண்டனிலிருந்து பெற்றுக்கொண்டபோது, நாமே எண்களைச் சுழற்றி, இருப்பதில் தேவைப்பட்ட எண்ணை டயலில் சுற்றி, தொடர்புகொண்டு பேசத்தொடங்கினோம்.

நான் பணியிலிருந்த காலத்தில் (60, 70, 80களில்) எங்களுக்கு வரும் தினசரி புகார்களில் நிச்சயம் இருபதுக்கு ஒன்றாவது டயல் குறித்து இருக்கும். ஒரு எண்ணை டயல் செய்தால் தவறாக இன்னொரு எண் கிடைப்பதிலும் டயலின் பழுது சம்மந்தப்பட்டிருக்கும். ஒரு டயலைச் சுழற்றினால் அது படுவேகத்தில் போகும். இன்னொன்று அசமந்தமாய் மந்த கதியில் நகரும்.

ஒருநாள் புகார் பகுதியைக் கவனித்த சமயம் மறுமுனையில் பேசியவர் சொன்னார்: “ஐயா, நம்ம டயல சுத்தினா, அது அப்படியே நிக்கி.”

“நிக்கியா?”

“ஆமாங்க, நிக்கி.”

அவர் ஆலந்தூர் கடைத்தெருவில் மளிகைக் கடை வைத்திருக்கும் சங்கரலிங்க நாடார்.

தண்டபாணி லைன்மேனின் ஏரியாவுக்குள் இருப்பது பஜார் பகுதி. மாலை நான்கு மணிக்கு அந்த கம்ப்ளெயிண்டோடு புறப்பட்டுப் போன லைன்மேன் தண்டபாணி ஒரு மணி நேரங்கழித்து எக்ஸ்சேஞ்சுடன் பேசினார்.

“டயல் மாத்தணும் சார். ஸ்டோர் மூடியிருப்பாங்க பெண்டிங்கு வச்சிடுங்க. காலைல மத்திடறேன்.”

அப்படியென்று ரிப்போர்ட் எழுதி அந்தப் பழுதை வைத்தேன்.

மாலை ஆறுமணிக்கு, தொலைப்பேசி இன்ஸ்பெக்டர் அல்லது ஜீனியர் எஞ்சினியர், ஒருமுறை தொடர்புகொண்டு அன்றைய தினத்தில் பழுது பார்க்கப்படாமல் மறுநாளைக்கு பார்க்க வேண்டிய புகார்களைக் கேட்டு எழுதிக்கொள்ளுவார்கள். அப்படியாக ஜே.இ. ஒருவர் பஜார் பகுதி புகார்களில் தேங்கி நிற்பனவற்றைக் கேட்டு எழுதிக்கொண்டு போனார். அவற்றில் சங்கரலிங்கம் நாடாரின் டயல் பழுதும் ஒன்று.

டயலைப் பொறுத்தளவு ஒரு சில பழுதுகள் உண்டாகும். எண்களைச் சுற்றினால் டயல் ஸ்பிரிங்கு இயங்கி எக்ஸ்சேஞ்சிலுள்ள செலக்டர்கள் எனும் சுவிட்சுகளை இயக்கம்கொள்ளச் செய்யும். படிப்படியாக அடியெடுத்து டயல் செய்த எண்ணை எட்டும். இந்த டயல் ஸ்பிரிங்கின் இறுக்கத்தன்மையைப் பொறுத்தது டயலின் சுழற்சி, இன்ன காரணத்தால் பழுது என்று கண்டறிந்த பின், லைன்மேன் அல்லது பிற டெக்னிஷியன்கள், டயல் ஸ்பிரிங்கின் டென்ஷனை கூட்டியோ குறைத்தோ பார்ப்பார். இல்லாவிடில் டயல் ஸ்பிரிங்கையோ டயலையோ புதியதாக மாற்றித் தருவார்.

ஆரம்பத்தில் முற்றிலும் உலோகத்தாலான உள்-வெளி பாகங்களைக் கொண்டிருந்த டயல் பிறகு பிளாஸ்டிக்கானது. சில லைன்மேன்கள் பழுது பார்க்கப்பட்டு நல்ல நிலையிலுள்ள ஓரிரு டயல்களைத் தம்மிடம் வைத்திருப்பார்கள். தேவைப்படும்போது வாடிக்கையாளர்களின் தொலைப்பேசி கருவிகளில் மாற்றித் தருவார்கள். இதற்காக அவர்கள் எதாவது பணம் கேட்பார்கள். அவசரம், அவசியம், தேவை கருதி வாடிக்கையாளர்களும் கேட்டதைத் தருமுன் பேரத்தில் ஈடுபடுவார்கள். போகப் போக இந்தப் பழுதை சரிபார்க்க இவ்வளவு, இந்த உபரி பாகத்தை மாற்றித் தர அவ்வளவு என்று ரேட் நிர்ணயித்துக்கொண்டு பேரம் பேசி முடித்துக் கொடுத்தார்கள்.

ஆரம்பத்தில் இத்தகைய இலாகா – இலவச சேவைகளுக்கு வாடிக்கையாளர்களே மனமுவந்து கொடுத்து வந்த ‘பக்‌ஷீஸ்’ஐ இனாமாக பாவித்துப் பெற்றுக்கொண்டிருந்தது, போகப்போக ‘கையூட்டாக’ உருவான அவலத்தை வரப்போகும் பக்கங்களில் பார்க்கலாம்.

லைன்மேன் தண்டபாணி, காலையில் டாணென்று எட்டு மணிக்கெல்லாம் தொலைப்பேசி எக்ஸ்சேஞ்சோடு தொடர்புகொண்டு, தன் பகுதியில் முன் தினம் முடிக்காமல் தேங்கிய புகார்களோடு இன்றைய புதிய புகார்களையும் கேட்டு எழுதிக்கொண்டு, சந்தோஷமாய்ப் புறப்பட்டார். அவரிடம் நல்ல நிலையிலுள்ள இரண்டு டயல்கள் இருந்தன. பஜார் தெரு நாடார் பேரமே பேசமாட்டார்.

இந்நேரம் பரங்கி மலையடிவாரத்திலுள்ள மத்தியாஸ் நகர் சேரியில் அங்கம்மா நேற்றிரவு வந்து சேர்ந்த புதுச்சரக்கு நிரம்பிய பிளாஸ்டிக் கேனுடன் தண்டபாணியை எதிர்கொள்ளுவாள். ஏழெட்டு ரூபாயில் அன்றைய காலை நேரம் சூடாகவும் தெம்பாகவும் அவனுக்கு அமைந்து, நாளெல்லாம் சைக்கிள் மிதித்து மற்ற புகார்களையும் பழுதுகளையும் கவனித்து முடிக்க ஏதுவாயிருக்கும். வீட்டுக்குப் போகும்போது எப்படியும் ஓர் இருபத்தைந்து ரூபாயாவது ‘மால்’ சேர்ந்திருக்கும். எல்லாம் இன்று ஆகும் ‘போணி’யைப் பொறுத்தது.

சரியாகப் போணியாகவில்லையென்றால் நாள் முழுவதுமே நாசமாகிவிடும் என்ற யோசனையோடு சைக்கிளை மிதித்தான் தண்டபாணி.

“வணக்கம் நாட்டார்ரே” என்றவாறே கடை முன்னால் இறங்கிய தண்டபாணியை வியப்போடு பார்த்து விட்டு, “என்னே..?” என்றார் சங்கரலிங்கம்.

“ஸ்டோர்ஸ் தொறக்கறதுக்கு நேரமாகவிட்டது. மாத்திப்பிடலாம்”, என்றார் லைன்மேன்.

“அதான் மாத்தியாச்சேப்பா, பாரு புது டயலு, எப்பிடி ஓடுது பாரு” என்றார் மளிகைக் கடைக்காரர்.

தண்டபாணியும் அதை சோதித்துப் பார்த்தார். புத்தம் புதிய ஐடிஐ டயல். ஆச்சரியம், ஏமாற்றம், எரிச்சல் கோபமெல்லாம் ஒரு சேர, “யாரு வந்து மாத்தினது?”, என்று கேட்டார் லைன்மேன்.

”ஒங்க ஜே.இ. சார் வந்தாரு, ஏழுரை மணிக்கெல்லாம் வந்து மாற்றி குடுத்துட்டுப் போயிட்டாரு.”

“என்ன நாடார், ஒனக்கோசரம் ஸ்டேர்ஸ்ல சொல்லி வச்சி வாங்கியாந்திருக்கேன். ஸ்டோர்காரனுக்கு இருபது ரூபா கொடுத்தேன். டயலுக்கு டிமாண்டு ஜாஸ்திங்க” என்றார் தண்டபாணி.

“அதுக்கு நா என்ன செய்யறது, வேறே ஆருக்காச்சி போட்டுக் குடுத்து காசு வாங்கின்னா. ஜே.இ. முந்திகிட்டாரு. ஒனக்கு குடுக்கறதத்ததான் அவருக்கு குடுத்தேன்”. சொல்லிவிட்டு உறவைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமென்று ஓர் இருபத்தைந்து ரூபாயை எடுத்து தண்டபாணியின் கையில் வைத்து அமுக்கினார் கடைக்காரர்.

தொலைப்பேசி வலைதளம் என்று அன்றைய முறையச் சொன்னால், அதன் பல்வேறு அங்கங்கள் உங்களுக்குப் பரிச்சயமான அளவில்… வெளியில் தெரியும் கம்பங்கள், அவற்றின் வழியாக வாடிக்கையாளரின் வீட்டையடையும் நீண்ட தூரம் பயணித்த கம்பிகள், வாடிக்கையாளரின் வீட்டுக்குள் இருக்கும் கருவிகள் என்பன.

வாடிக்கையாளரின் தொலைப்பேசியுடன் இணைந்த பூமிக்கடியில் செலும் கேபிள்; இணைப்பகத்தில் அமைந்த சுவிட்சுகள்; டயல்டோன், பிஸிடோன் முதலான ஒலிகளை நமக்கு உண்டாக்கித்தரும் ரிங்கர் – இவை எல்லாம இயற்கை உபாதைகளினின்று பாதுகாக்கப்படுவது முக்கியமான காரியம். ஒவ்வொரு வாடிக்கையாளரின் தொலைப்பேசி கருவியும் அப்பகுதியிலுள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் பொருத்தப்பட்ட சுவிட்சுகள் – செலக்டர்கள் முதலான விலையுயர்ந்த முக்கிய இயந்திரங்களால் ஆளப்படுபவை. அதைக் கருத்தில் கொண்டே டெபாசிட், வாடகை முதலான தொகை வசூலிக்கப்படுகிறது.

“ஐயோ, இந்த டெலிபோன் ஒண்ணுக்கா இவ்வளவு வாடகை? இது எங்கள் வீட்டுக்குள்ளதானே இருக்கு?” என்று பல அன்பர்கள் கேட்டதுண்டு. செலக்டர்கள், சுவிட்சுகள், ரிங்கர் ஆகிய விலையுயர்ந்த – அதிமுக்கிய டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சு இயந்திரங்கள் அதீத மின்சார பாய்ச்சலால் முற்றிலும் சேதமடையக் கூடும் என்பதால் அதை தடுக்க அங்கங்கே தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. எக்ஸ்சேஞ்சுக்குள் அதீத மின்சக்தி தாக்கினால் இயந்திரங்களைப் பாதுகாக்க ஃப்யூஸ், ஹீட்காய்ல், கார்பன் அரெஸ்டர்கள் என்பவை ஒவ்வொரு தொலைபேசிக்குமாய் பொருத்தப்பட்டு, இவை ஓவ்வொன்றாக செயலிழந்து முக்கிய இயந்திரங்கள் சேதமடைவதைத் தடுக்கும்.

இதே விதமாய் ஒரு காலக்கட்டத்தில் வாடிக்கையாளரின் வீட்டுக்குள்ளும் தொலைப்பேசி கருவிக்கு சற்று தூரத்தில் எல்.டி. பாக்ஸ் (Lightning Device Box) என்று ஒன்றிருந்தது. இடிமின்னல் மற்றும் மிக அதிகமான மின்சாரம் திடீரென வந்து தாக்கும்போது டெலிபோன் சாதனம் செத்து விடாதிருக்கும்படி இந்த ஏற்பாடு. நான் சென்னை தொலைபேசிக்குள் காலெடுத்து வைத்த நாளிலேயே அது பெரும்பான்மையான வீடுகளில் தென்படவில்லை.

எல்.டி. பெட்டியில், சிறிய கண்ணாடி ஃப்யூஸ் காரியர் ஒன்னும் சிறிய பச்சை நிற ஹீட்காய்ல் ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பச்சை நிற ஹீட்காய்லோ, கண்ணாடி ஃப்யூஸோ அதிகபட்ச மின்சக்தி வருங்கால் துண்டிக்கப்படும். எனவே, தொலைப்பேசி கருவி சேதமடையாது. எக்ஸ்சேஞ்சில் இருந்த ஹீட்காய்ல்கள் சற்றே அளவில் பெரியதும் சிவப்பு நிறத்திலும் கருப்பு நிறத்திலுமானவை.

நான் 60களின் ஆரம்பத்தில் இலாகாவில் அடியெடுத்து வைத்த சமயம், அனேகமாய் வாடிக்கையாளர் வீடுகளில் இருந்த எல்.டி. பெட்டிகள் அகற்றப்பட்டிருந்தன.

தொடரும்

Amrutha

Related post