சுகிர்தராணி கவிதைகள்
ஓவியம்: காஞ்சன் சந்தர்
1. விதை தேடும் நிலம்
பூத்துதிராத என் முகையிதழே
நீர்க்காணாப் பாறையின் சிறுவெடிப்பில்
சுருண்டிருக்கும் வேராய்
பருவங்கள் பல காத்திருந்து
பாலையின் தோண்டப்படாத பேரூற்றெனக்
கண்டடைந்திருக்கிறேன் உன்னை
மெல்லிய இழையொன்று
என்னிலிருந்து தொடங்கி உன்னை அடைய
சிறிது சிறிதாக
என்நிலம் பூத்துக் களிக்கிறது
உன் வெதுவெதுப்பான மழையில்
நானும் வயலில் திரியும் என் குருவிகளும்
நனைந்து உலர்கிறோம்
எனதன்பே
என்னிதயம் உன் நினைவின் பின்னலால்
ஆனதென்பதை நீ நம்புகிறாயா
உன்மீதான ப்ரியத்தை
எப்படித் தொடங்கி எப்படி முடிப்பது
சொல்லவும் வார்த்தைக் கூடாதிருக்கிறேன்
மழையை மழையென்றும் மழையை நீரென்றும்
உணர்வது உன் விருப்பம் ஆயினும்
நான் உன்னை விரும்புகிறேன்
உன்னிதயத்தை உன் கண்களை
உன் விரல்களின் ஸ்பரிசத்தை
உன் மெல்லிய அணைப்பை
உன் உதடுகள் தராத முத்தங்களை
அத்தனையையும் விரும்புகிறேன்
சித்திரத்தின் மீது மையூற்றி நிற்கும்
சிறு குழந்தையாய்க் கேட்கிறேன்
விதைகளை நிலத்தில் மட்டுமே வீசு.
2. மரணம் ஒரு கலையன்று
குமட்டிக்கொண்டு வரும் வாந்தியைப் போலல்லாது
இந்த இரவு மிகவும் அமைதியாக இருக்கிறது
வானின் நட்சத்திரங்கள்
ஒன்றிரண்டு எரிந்து விழுகின்றன
நீலநீலமாய் மலரும் ஆர்கிட்செடிகளை
நான்தான் பயிரிட்டு வந்திருக்கிறேன்
அந்தக் கல்லறையிலிருந்துதான்
அப்பாவின் குரல் கேட்கிறது
நீ தானாய் இறந்துவிடாதே
மலைகளின் பள்ளத்தாக்குகளில்
காற்று எதிரொலிப்பதைப் போல சிரிக்கிறேன்
அவர் என்னையும் பைத்தியமாக்குகிறார்
யாரால் முடியும்
அகன்ற தெருக்களில் கைவீசி நடமாடும்போது
கருக்குள்ள பட்டயத்தால் தலை வெட்டுப்பட
யாரால் முடியும்
கந்தகத்தை உண்டுசெரித்த காற்றை
எப்போதும் சுவாசித்து சாம்பலாகிவிட
யாரால் முடியும்
வாழ்வின்மீதான நம்பிக்கைகளை
சிந்திக்கொண்டிருக்கும் வனத்தை
வனமின்றிக் கடக்க
யாரால் முடியும்
வெளியெங்கும் இராவிலும் பகலிலும்
இரத்தத்தில் தோய்ந்த உடலும் உயிருமாய்ப்
புணர்ந்து வீசப்பட
இல்லை வேண்டவே வேண்டாம்
மரணம் ஒரு கலையாக மாற வேண்டாம்
என்னை மன்னித்து விடுங்கள் அப்பா
நான் வயது முதிர்ந்தே இறந்து கொள்கிறேன்.
3. மேற்கில் மறையும் வெயில்
வாலில் நீலம் பூசிய குருவியொன்று
உள்ளங்கைப் பள்ளத்து மழைநீரில்
உடலின் சிறகுகளை
மெல்ல நனைப்பதைப்போல
தானியம் விதைக்கப்பட்ட வயலில்
அவள் அமர்ந்திருக்கிறாள்
வெகுகாலமாய் வறண்டிருக்கும் சுனையில்
ஊற்றெடுக்கும் பசுமையென
முளைத்திருக்கின்றன பயிர்கள்
அவற்றை நீவிநீவி
ஊடாடிக் கொண்டிருக்கும் களைகளை
மெல்ல பறித்தெறிகிறாள்
அவற்றை பறித்தபடி
முன்னேறிச் செல்லும்
அவள் தலையில் இறங்குகிறது மேற்கில் மறையும் வெயில்.
4. விடுபடுதல்
ஒவ்வொரு நாளும் உறக்கம் களைந்தெழும்
என் கண்களுக்குக் காணக் கிடைக்கின்றன
தேநீர்க் கறை படிந்த காலிக்கோப்பை
சங்கிலியால் பிணைக்கப்பட்ட கலப்பின நாய்
நீரூற்ற மறந்த ஒரு செடியின் கூம்பிய மொட்டு
பின்புறம் அசைய உடற்பயிற்சி செய்யும் உன் முதுகு
மீண்டும் கண்களை மூடி
காண விரும்புவதெல்லாம்
முத்தத்தின் ஆவிபறக்கும் இளஞ்சூட்டுத் தேநீர்க் கோப்பையை
மழையில் நனைந்து உறுத்தாத நிறத்தில் பூத்திருக்கும் பூவை
ஒற்றைக் காலை உயர்த்தி சிறுநீர் பெய்யும் நாயை
முகத்தோடு முகம் இருத்தி
கன்னத்தை வெதுவெதுப்பாக்கும் உன் மெல்லிய அன்பை
மேலதிகமாக
இந்தக் கவிதையிலிருந்து
உனக்கான விடுதலையை.
5. நெருப்பின் பழம்
ஓடு நீக்கிய ஒற்றைப் புளியம்பழமென
சிவப்பின் பிசுபிசுப்போடு
மெல்ல கீழிறங்குகிறது சூரியன்
குறுக்கும் நெடுக்குமாய்ப் பறக்கின்றன
வலுவிழந்த பறவைகள்
மரம் தன் பூத்தலுக்குத் தயாராகிறது
கம்பிகள் மறிக்கப்பட்ட சாளரத்திலிருந்து
நான் பார்க்கிறேன்
புளிப்பேறிய கள் உண்டவனின்
பாதி திறந்த கண்களைப்போல
கடல்மேல் கிடக்கிறது சூரியன்
அந்தி எத்தனை இரகசியங்களை
வைத்திருக்கிறது
ஒருநொடியில்
மாயக்காரி உடை மாற்றுவதைப்போல
தன் இரகசியங்களை
உரித்து உரித்துப் போடுகிறது
கடலின் அறைக்குள் சூரியன் சென்றிருந்தது
நெருப்புப் பழமெனத் தகித்திருக்கும்
தன் உதடுகளால் யாரை முத்தமிட்டிருக்கும்
தன் செங்காந்தள் உடலை
யாருக்கு ஈந்திருக்கும்
கடல் பொங்குகிறது
கடல் நுரைக்கிறது
கடல் மரிக்கிறது
மிக நீண்ட அமைதிக்குப் பின்
கிழக்கின் அந்தரங்க அறையிலிருந்து
நிர்வாணமாய் வெளிப்படுகிறது சூரியன்
நான் சாளரம் மாறிக் கொள்கிறேன்.
6. சாதியற்றவனின் மரணம்
நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்
ஒருரயில் நிலையத்தில் அமர்ந்துகொண்டு
அதன் நடைபாதையில்
கொட்டிக்கிடக்கும் மஞ்சள் பூக்களை
தூரத்தில்
தாய்ப்பால் புகட்டியபடி
வேர்க்கடலையைப் படிநிறைய
அளந்து விற்கும் பெண்ணொருத்தியின்
தாய்மை பூத்திருக்கும் முகத்தை
சிதிலமடைந்த கற்கோவிலின்
படியிலமர்ந்து உங்கள் முகத்தை நீங்களே ஏந்தி
தொல்பொருளாய்க் காத்திருக்கும்
அந்த ஏகாந்தத்தை
நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்
உங்கள் பண்ணை நிலம் ஊடாக
நடக்கும்போது
நடவு நடும் பெண்ணின்
ரவிக்கைக் கிழிசலை மறைக்க
நீங்கள் வீசி எறிந்த
துண்டின் பெருமையை
வீட்டு முற்றத்தில்
காலைநேர தேநீரை
நீங்கள் அருந்தும்போது
தேநீர்க் கோப்பையின் நிழலில்
இளைப்பாறும் சிட்டுக்குருவியை
நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்
இராக்கால மொட்டைமாடி பொழுதுகளில்
எரிந்துவிழும் நட்சத்திரங்களுக்கிடையே
குளிர்ந்துவீசும் தென்றலை
உங்களுக்கான மரஅலமாரியில் ஒளித்துவைத்திருக்கும்
உங்கள் காதலியுடையதோ காதலனுடையதோ
பழந்துணியின் வாசத்தை
நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்
ஆனால் ஒருபொழுதும்
எழுதிவிடாதீர்கள்
அரிவாளால் வெட்டுண்டு
ஈ மொய்த்தபடி
வாய்பிளந்து கிடக்கும்
ஒரு சாதியற்றவனின் மரணத்தை
சுகிர்தராணி <sukiertharani@yahoo.co.in>