எஸ். ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’

 எஸ். ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’

பொ. கருணாகரமூர்த்தி

 

எனது இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன்; பக்கங்கள் 550, விலை ₹ 650.00; வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம், டி-1 கங்கை அபார்ட்மெண்ட், 110 எண்பது அடி சாலை, சத்யா தோட்டம், சாலிகிராமம், சென்னை – 600 093; மின்னஞ்சல்: desanthiripathippagam@gmail.com, தொலைபேசி: +91 96000 34659

 

 ந்தியாவின் நீண்ட சரித்திரத்தில் எக்காலகட்டங்களின் எவ்வெச் சம்பவங்களை எல்லாம் எஸ். ராமகிருஷ்ணன் இந்நூலில் தொகுத்துத் தந்திருக்கிறாரோவென்கிற பெரும் எதிர்பார்ப்போடுதான் நூலைக் கையிலெடுத்தேன்.

தீவிர காந்தியப் பிரியரான எஸ். ராமகிருஷ்ணன் முதல் அத்தியாயங்களிலேயே காந்தியைப் பற்றியும் அவரது எளிமையான வாழ்வையும் அவர் சுடப்படுவதற்கான சூழ்நிலைகளையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கின்றார். எம் நாட்டில் விளைகின்ற உப்பை நாமே ஒரு பாளையத்திலிருந்து இன்னொரு பாளையத்துக்கோ ஒரு ஜில்லாவிலிருந்து மறு ஜில்லாவுக்கோ எடுத்துச் செல்லமுடியாதபடி கிழக்கிந்தியக் கம்பனியார் தடுத்தும் உப்பைச் சுதேசிகள் பயன்படுத்த அனுமதிக்காமலும் / அதை நுகர்வோருக்கு வரியும் விதித்தனர். அவ்வநீதிக்கு எதிராகக் காந்தி எவ்வளவு நுட்பமாகக் காய்களை நகர்த்தினார் என்பதையும் அவரது உப்புச் சத்தியாக்கிரகம், சுதந்திரப் போர் வலுவடையச் செய்ய எத்தனை தொலைநோக்குடன் ஊன்றப்பட்ட வித்து என்பதையும் வாசகன் மனதில் அழுத்திப் பதியவைத்து வியக்க வைக்கிறார் எஸ். ராம்கிருஷ்ணன்.

துணைக் கண்டத்தில் அமைதியாக இருந்த, இந்தியாவின் பிராந்திய அரசுகளின் சுதந்திரத்தின் / ஆளுமையின் மீது முகலாயப் படையெடுப்பாளர்களின், கிழக்கிந்தியக் கம்பனிகளின் வல்லாதிக்கமும் அதிகாரமும் அபகரிப்புகளும் கொள்ளைகளும் என கபளீகரங்களுக்கு உள்ளானபோது, காலத்துக்குக் காலம் அவர்களுக்கெதிராக சுதேசிகளில் பலர் அணிதிரண்டு சுதந்திர தாகத்துடன் எப்படிப் போராடினார்கள், அடிவருடிகளும் ஒட்டுண்ணிகளும் எப்படிப் பணிந்து சுயலாபம் பெற்றனர் என்பதின் வரலாற்றையும் நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பதிவு செய்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

இந்தியா 1947இல் சுதந்திரமடைந்த பின்னால், ஆச்சார்ய வினோபா பாவேயின் பூதான இயக்க மூலம், அவர் 1951இலிருந்து தேசம் முழுவதும் ஓயாத நடைப் பயணங்கள் மேற்கொண்டு, நிலச்சுவான்தார்களாயிருந்த பணக்காரர்களையும் ஜமீன்தார்களையும் சந்தித்து, அவர்களிடமிருந்த 3,00,000 ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்று, அவை இலட்சக்கணக்கான விளிம்பு நிலை மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படவும் அந்நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுத் தேசத்தின் தானிய / உணவுப் பொருள் உற்பத்தியில் பெருவளர்ச்சியை உண்டுபண்ணியமையையும் அறிகிறோம்.

இந்தியா எங்கணும் தனியார் வனங்களிலும் முடிக்குரியகாடுகளிலுமுள்ள மரங்களை வெட்டிவீழ்த்த, கிழக்கிந்திய கம்பனியாரிடமும் நிலச்சுவான்தார்களிடமும் அனுமதி பெற்றுக்கொண்டு, வன ஒப்பந்தக்காரர்கள் பலரும் மரங்களைக் கண்டபடி வெட்ட ஆரம்பிக்கையில், பெண்கள் பேரெண்ணிக்கையில் பங்கெடுத்து ஆரம்பித்தது ‘சிப்கோ இயக்கம்’. அவ்வியக்கத்தின் பெண்கள் எல்லோரும் நூற்றுக்கணக்கில் வனங்களுக்குச்சென்று ‘அவற்றைத் தறிக்க விடமாட்டோம்” என்று மரங்களை கட்டிப் பிடித்துக்கொண்டு, மரங்களைத் தறிக்க வந்த ஒப்பந்தக்காரர்களை விரட்டிய நிகழ்வுகள், இந்தியச் சரித்திரத்தில் பதிவாகியுள்ளன. செறிவான எண்ணிக்கையில் மரங்களிருந்த வனங்களின் சொந்தக்காரர்களான நிலச்சுவான்தார்கள் பலரையும் இவ்வன ஒப்பந்தக்காரர்கள் கபடத்தனமாக மதுவையூட்டிப் போதையில் வைத்துவிட்டு, மரங்களை வெட்டிச்செல்ல முயன்ற கபளீகர முயற்சிகள், சுற்றுச்சூழல் இயக்கத்தினரின் அர்ப்பணிப்புடனான போராட்டங்களால் முறியடிக்கப்பட்டன. கிழக்கிந்தியக் கம்பனியார் இந்தியாவின் வளமிக்க இயற்கை வளங்களை அழித்து, பெறுமதி வாய்ந்த மரங்களை கப்பல் கப்பலாகத் தம்நாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள்; எவ்வளவு தானியங்களை, பருத்தியை எடுத்துச் சென்றார்கள் என்கிற நிகழ்வுகள் தொடரும் அத்தியாயங்களில் விலாவரியாக விவரிக்கப்படுகின்றன.

குளிர்பதனப் பெட்டிகள் கண்டுபிடிக்க முற்பட்ட காலத்தில், பொஸ்டன் ஏரிகளிலிருந்து பனியைப் பாளம் பாளமாக அரிந்து, அவற்றை மரப்பெட்டிகளில் வைக்கோல்களின் இடைபொதித்து அடைத்துக் கப்பல்கள் மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவந்து செய்யப்பட்ட வியாபாரத்தில், எப்படி கிழக்கிந்தியக் கம்பனியாரும் சேர்ந்துகொண்டு பெருந்தொகையான பணமீட்டினர் போன்ற விவரங்கள் அடுத்த அத்தியாயங்களில் வருகின்றன.

இந்தியாவின் பல பாகங்களிலும் கிழக்கிந்தியக் கம்பனி அரசின் தரகு முகவர்களாக இருந்த வைஸ்ராய்களினதும் நவாபுகளினதும் அதிகாரிகளினதும் நிர்வாக முறைகேடுகள் பற்றியும் அவர்களின் சீரழிவான ஆட்சிமுறைக்குத் துணைபோன குறுநில மன்னர்கள், நவாபுகள், சிற்றரசர்கள், திவான்கள் பற்றியும் ஏராளம் தகவல்களை அள்ளித் தந்திருக்கிறார்.

கிழக்கிந்தியக் கம்பனியினரில் வேட்டைப் பிரியர்களாயிருந்த சில கவர்னர்களுட்பட்ட வெள்ளையர்கள், தமது பொழுதுபோக்கு விளையாட்டுக்காக இந்தியாவின் யானைகளையும் காண்டாமிருகங்களையும் புலிகளையும் அரியவகைச் சிறுத்தைகளையும் மான், மரை, காட்டு எருமைகளையும் ஆயிரக்கணக்கில் சுட்டொழித்த வேட்டைத் துர்வினைகளை நினைவுபடுத்தும் அரிய புகைப்படங்கள் பலவும் இந்நூலில் இடம்பெறுகின்றன.

 

வெள்ளைக்காரர்கள் என்றால் அவர்களின் கைகள் சுத்தமாகவே இருக்கும் என்பதே பொதுப்புத்தியில் அவர்கள் பற்றிய பிரமையும் மதிப்பீடுமாகும். ஆனால், உண்மை அவ்வாறு இல்லை. இந்தியாவின் அரசியலிலும் நிர்வாக இயந்திரத்திலும் பொதுத்துறையிலும் இருக்கும் ஊழல்களுக்கெல்லாம் முன்னோடிகள் வெள்ளையர்கள்தான். ஒரு சாதாரண எழுத்தராக ஆண்டுக்கு 5 பவுண்ட்ஸ் சம்பளத்தில் இந்தியாவில் காலடி எடுத்துவைக்கும் ராபர்ட் கிளைவ் என்கிற ஆங்கிலேயன் வேண்டியவர்களுக்கெல்லாம் கையூட்டுக் கொடுத்துக் கொடுத்து, கிழக்கிந்தியக் கம்பனியின் பெரிய பெரிய பதவிகளையெல்லாம் பெற்றுக்கொண்டுவிடுகிறான். அப்படியே இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் உறுப்பினரும் ஆகிவிடும் அவன் இந்தியர்களின் பணத்தையெல்லாம் உறிஞ்சி நாடு திரும்பும்போது, அவனது சொத்தின் மதிப்பீடு அக்காலத்தைய 34,000 பவுண்டுகளாம்.

எலிஹு யேல் (Elihu Yale) என்பவர், அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் வாழ்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதிக்கு 1649இல் மகனாகப் பிறந்தார். இளமைக் காலத்தில் கல்வி கற்பதற்காக இங்கிலாந்து சென்ற யேல், அங்கிருந்து கிழக்கிந்தியக் கம்பனி ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றுவதற்காக இந்தியாவுக்கு வந்தார். கம்பனியின் பல பொறுப்புகளையும் வகித்த யேல், வெகு விரைவிலேயே மதராஸின் இரண்டாவது கவர்னராகப் பதவி வகித்தார். இக்காலகட்டத்தில் தன் சொந்த வருமானத்தை அதிகரிக்கச் செய்யப் பலசுரண்டல் உத்திகளைக் கையாண்டார். கிழகிந்தியக் கம்பனிக்காகப் பணியாற்றி, திருட்டுத்தனமாக இந்தியாவைச் சுரண்டிச் சுரண்டிப் பெருஞ்செல்வமாக திரட்டியெடுத்து, அதைக்கொண்டுபோய் அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு பெருநிதியுதவி செய்தார். 1692இல் பல இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவியிழந்த ஒருவரின் பெயரையே இன்னமும் ‘எலிஹு யேல் பல்கலைக்கழகம்’ தாங்கி நிற்பது புவியின் அவமானகரமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

 

பாரத பூமியின் நீள, அகல, உயரங்களை அளந்து அதன் சில வரைபடத்தை வரைந்த சர்வேயர் ஜெனரல் ஆண்ட்ரூ ஸ்காட் வா, கர்னல் வில்லியம் லாம்ப்டன் போன்ற நில அளவையாளர்களும்; இந்தியாவின் குளங்களையும் வாய்க்கால்களையும் தூரெடுத்து, புதிய குளங்களையும் அணைகளையும் கட்டி நீர்ப்பாசனத்தைப் பெருக்கி விவசாயிகளுக்கு பெரு வாழ்வளித்த ஆர்தர் கொட்டன் போன்ற பொறியாளர்களும்; காலராக் காலத்தில் மக்களின் துயரத்தைத் துணிச்சலுடன் நேரில் பார்வையிடச் சென்று கடைசியில் தானும் காலராவுக்கே பலியான தோமஸ் மன்றோ போன்ற மாமனிதர்களும் இம்மண்ணில் வாழ்ந்திருப்பதையும் எஸ். ராமகிருஷ்ணன் இந்நூலில் துலக்கிக் காட்டுகிறார்.

விஜயநகரப் பேரரசின் போது அவர்கள் கிராமத்தின் எல்லைகளைக் குறிக்க, திரிசூலம் அடையாளம் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்களை நட்டுவைக்க, அதையே மக்கள் வழிபடத் தொடங்கியதும் அவர்கள் தம் சிறு தெய்வங்களாக ஆக்கிக்கொண்டதும் சுவாரசியமான வரலாறு.

பிரிட்டிஷ் ஆட்சியாளருடன் நெருக்கமாகப் பழகி அவர்களிடம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு, 1903ஆம் ஆண்டு ராஜஸ்தானின் அல்வாரை தனி அரசாக்கி, அதற்கு அரசராக முடிசூட்டப்பட்ட ஜெய்சிங்கின் பழக்கவழக்கங்கள் விநோதமானவை. இன்னொரு நாட்டின் மீதான படையெடுப்புப்போல 300 குதிரைகள், 50 யானைகளைச் சேர்த்துக்கொண்டு வேட்டைக்குச் சென்று நூற்றுக்கணக்கில் கானுயிர்களைக் கொன்று குவிக்கும் அவன் மிகுந்த ஆடம்பரப் பிரியன்; முன்கோபி. தனக்குக் கோபம் வந்தால் தன் செவிலிப் பெண்ணைத் தூக்கிப் புலிக்கு உணவாகப் போட்டுவிட்டு அவள் உண்ணப்படுவதைப் பார்த்து ரசிப்பானாம். விருந்துக்கென்று திவான்களையும் ஜமீன்தார்களையும் அரசவைப் பிரதானிகளையும் பிரமுகர்களையும் அழைத்துவிட்டு எதுவும் கொடுக்காமல் அவர்களை விருந்து மண்டபத்தில் வைத்துச் சவுக்கால் அடித்து விரட்டவும் செய்வானாம்.

இறந்துபோன காதல் மனைவியின் நினைவாக உலகப்புகழ் பெற்ற தாஜ் மகாலைக் கட்டிய ஷாஜகான் வாழ்வின் இறுதிக் காலம்வரை அவரது மகன் ஔரங்கஜிப்பினால் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். ஆனால், ஷாஜகானின் அன்புமகள் ஜஹானாரா அவருக்குச் செவிலியாகப் பணிவிடை செய்ய அனுமதிக்கப்படுகிறாள். ஔரங்கஜிப்பினால் வயோதிபம் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட அவரது மற்றைய மனைவிகளையும் ஜஹானாராவே அவர்களின் அந்திமகாலத்தில் வைத்துப் பராமரிக்கின்றாள். ஷாஜகானின் மறைவுக்குப் பிறகு ஜஹானாராவும் தனியாக ஒரு அரண்மனையைக் கட்டிக்கொண்டு இல்லற பந்தமெதிலும் இணையாமலே தனிக்கட்டையாக வாழ்ந்து மறைகின்றாள்.

நான் இதுவரை காலமும் நாசிகள்தான், கனமும் கூர்மையுமையுமான உருக்கு அலகொன்றைத் தரைநோக்கி விழவைத்து மனிதனின் தலையைக்கொய்யும் கிலெட்டின் எனும் கொலைக் கருவியைத் தயாரித்தார்களென நினைத்துக் கொண்டிருந்தேன். அது அப்படியல்ல பிரான்ஸின் கொடுங்கோல் மன்னனாகிய 16ஆம் லூயிதான் அதைத் தயாரித்து, பின்னர் வந்த கிளர்ச்சியின் பயனாக அவனே அக்கருவியினால் கொல்லப்படுகிறான் என்கிற தகவலையும் இந்நூலிலிருந்து அறியமுடிகிறது.

இந்திய மண்ணில் பிரிடிஷார் விளைவித்த கஞ்சா, அபின், போன்ற மோஃபீன் கலந்த லாகிரிப் பண்டங்களை சீனத்தினுள் கொண்டுசென்று வியாபாரம் செய்யவொண்ணாது சீனம் தடை பண்ணியதின் எதிர்விளைவாகத்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கம் சீனாவுடன் போர் தொடுத்ததென்பதுவும் அதன் காரணமாகவே ஹொங்கொங்கை வெற்றிகொண்டது என்பதுபோன்ற ஆச்சரியமான தகவல்கள் இந்நூல் முழுவதும் விரவியுள்ளன.

இந்தியாவின் விளை தானியங்கள் அனைத்தையும் காலத்துக்குக் காலம் இங்கிலாந்துக்கே கப்பலேற்றிவிடும் பிரிடிஷாரின் அட்டூழியங்களால் இங்கு ஏற்பட்ட பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் எண்ணிலடங்காதவை. போதாதுக்கு அவ்வப்போது காலரா / கொள்ளை நோய்வந்து ஊரோடு அனைவரையும் பஸ்மீகரணம் பண்ணி, அவர்களுக்கு வைத்திய உதவிகள் செய்யப் போவோரையும் நோயில் வீழ்த்தி, அழித்துவிட்ட அவலங்கள் விவரிக்கப்படுகின்றன.

தொடரிகள், பாரவுந்துகள் இல்லாதவொரு காலத்தில் வட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த ‘பஞ்சார’ அல்லது தென் வழக்கில் ‘லம்பாடிகள்” என வழங்கப்பட்ட அலைந்து திரியும் மக்கள்கூட்டம், எப்படி பொதி மாடுகளில் அரிசி, உப்பு, தானியம் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு தேசம் முழுவதும் கொண்டுதிரிந்து வணிகம் செய்தனர், எப்படி நாடோடிகளாக வாழ்ந்தனர் என்பது போன்ற விடயங்களின் விவரிப்புகளைப் படிக்கும்போது எஸ். ராமகிருஷ்ணனினது புனைகதைகளை படிப்பதுபோன்ற சுவாரசியம் உண்டாகின்றது. இதைப்போல் வஸ்கொடகாமாவின் இந்தியாவை நோக்கிய கடற்பயணமென ஏராளம் தகவல்கள் இந்நூலில் காணலாம்.

 

மயம் எனும் அரண்’ என்கிற 65ஆம் அத்தியாயத்தில் இந்தியாவின் வளமைக்குக் காரணமான சிந்து, கங்கை, பிரமபுத்திரா, ஐராவதி, யாங்சி போன்ற ஆறுகள் இமயமலையில்தான் உற்பத்தியாகின்றன ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, சீனம், பூட்டான், நேபாளம் போன்ற நாடுகளை இணைக்கும்படி இமயமலை இணைந்துள்ளதுபோன்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன

பிரமபுத்திரா தீபெத்தைச் சேர்ந்த இம்மலைப் பகுதியில் ஜனித்தாலும் இந்தியாவுக்குள் அருணாசலம், அஸ்ஸாம் வழியாக ஓடி வங்கதேசத்துள் சென்றே கடலில் கலக்கிறது. மேற்படி விவரங்கள் தரப்பட்டுள்ள பக்கங்களில் வாசகன் பிரதேசங்களையும் மாநிலங்களின் அமைவிடங்களையும் ஆற்றின் வழித்தடங்களையும் இலகுவாகப் புரியும்படியாக சில வரைபடங்களையும் அப்பக்கங்களில் இணைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

கணித ஆர்வலரும் புவியியலாய்வாளருமான வில்லியம் லாம்டன் உடன் ஜோர்ஜ் எவெரெஸ்ட் எனும் நில அளவையாளரும் சேர்ந்து இந்தியாவின் வரைபடத்தை அமைக்கப் பாடுபட்டனர், மத்திய இந்தியாவின் வரைபடம் தயாரானதும் வில்லியம் லாம்டன் காலகதியடைந்துவிடுகிறார். சர்வே ஜெனரலாகப் பதவி உயர்ந்த ஜோர்ஜ் எவெரெஸ்ட், தியோடலைட்டு (Theodolite) போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்தி இமயமலையின் மலைப் பகுதிகளை அளவிடத் தொடங்கினார். அவருடன் சேர்ந்து பணியாற்றிய ராதாநாத் சிக்தார் எனும் இளைஞன், இமாலயத்தின் 15 மலைமுடிகளில் ஒன்றாகியதும் அங்கே நேபாளிகளால் அவர்களின் குலதெய்வம் வாழ்வதாக நம்பப்பட்ட ’கோமோலுங்குமா’ எனும் மலையுச்சியை 1852ஆம் ஆண்டு கண்டுபிடித்தான். நில அளவையியலில் நவீன கருவிகளால் புதுமையாக அளவீடுகளைத் துல்லியமாகச் செய்த தனது சர்வே ஜெனரலின் ஞாபகர்த்தமாக, ‘கோமோலுங்குமா’ மலையுச்சிக்கு அவனே ‘எவரெஸ்ட்’ என்ற பெயரையும் சூட்டினான்.

இவ்வாறு இமாலயத்தின் 15 முடிகளில் ஒன்றாகிய எவெரெஸ்ட்டுக்கு அந்தப் பெயரைத் தந்த நில அளவையாளர் பற்றியும் எதற்காக அப்பெயரைத் தேர்ந்தெடுத்தார் போன்ற விவரங்களையும் அத்தியாயம் 5இல் தனியாகவும் சுவாரசியமாகவும் தரும் எஸ். ராமகிருஷ்ணன், அவ்விவரணங்களை இமாலய மலையைப் பற்றி விவரிக்கப்பட்ட 65ஆவது அத்தியாயத்திலேயே சேர்த்துத் தராமல், எதற்காகச் சிறு ஒரு அத்தியாயத்தை தனியாக எழுதி, அதை ஏன் நூலின் ஆரம்பத்தில் வைத்தார் என்பது தெரியவில்லை.

இந்தியாவைப் பகுதி பகுதியாக ஆண்ட முகலாய மன்னர்களில் ஔரங்கஜிப், முகமது பின் துக்ளக், அலாவுதீன் கில்ஜி, மாலிக்கபூர் இவர்களைப் பற்றியெல்லாம் விவரமாகக் குறிப்பிடும் எஸ். ராமகிருஷ்ணன், அவர்களின் பரம்பரை / பிறப்பு பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்தியாவினுட் பிரவேசித்த முதலாவது மொகலாய மன்னரும் கடந்த நூற்றாண்டில்கூட இத்தனை சர்ச்சைக்குப்பட்டிருக்கும் பாபர் மசூதியைக் கட்டியிருந்தவருமாகிய பாபரைப் பற்றிய விவரிப்புகளை மிகக்குறைவாகவே தந்துள்ளார். அவருடைய முந்தோன்றல்கள் யார், அவர் எங்கிருந்து வந்தவர் (உஸ்பெஸ்கிஸ்தானிலிருந்து) என்பதுபோன்ற தகவல்களையே காணோம்.

இந்தியாவுக்கு மதப்பிரச்சாரத்துக்கே வந்திருந்தாலும் ஜெர்மன் ஹல்லே பல்கலையில் இயற்பியல் பயின்றவரும் இறையியலாளருமான சீகன்பால்க் (Ziegenbalg), புதுச்சேரியில் காணப்பட்ட சாதியமுறையிலான சமுதாய முறைக்கு எதிராகக் குரல்கொடுத்தது ஆச்சரியமான தகவல். அவர் லிஸ்பனில் தனது முதலாவது விவிலியத்தை ‘தம்பிரான் வணக்கம்’ எனும் தலைப்பில் தமிழில் அச்சிட்டு வெளியிட்டார். அவரது பெயர் தவறுதலான இடத்தில் பிரிக்கப்பட்டு, சீகன் – பால்கென குறிப்பிடப்பட்டுள்ளமை தவறாகும். சீகன்பால்க் எனத் தரப்பட்டிருக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் இயக்கங்கள்; பிகாரி போஸ், சுபாஸ் சந்திரபோஸ் இவர்களின் இந்தியத் தேசிய இராணுவத்தின் போராட்ட முன்னெடுப்புக்கள் (1942) போன்றவற்றை எல்லாம் முன்னுக்குத் தந்துவிட்டு, காலத்தால் இவற்றுக்கும் முற்பட்ட சிப்பாய் எழுச்சி (1806), சந்தால் எழுச்சி, பிர்சாமுண்டாவின் போராட்டங்கள், அவை ஆரம்பிப்பதற்கான சமூகச் சூழல்கள் போன்றவை பின்னால் விவரிக்கப்பட்டுள்ளன.

அமிர்தசரஸில் ஜாலியன்வாலாபாக் மைதானத்தில், தனது தடை உயுத்தரவையும் மீறிக்கூட்டம் நடத்திய 1000 – 2000 வரையிலான மக்களை இரத்தக் காட்டேறி ஜெனரல் டயர் தனது படைகளை அனுப்பி சுட்டு வீழ்த்திய கொடூரச் சம்பவம் 1919இல் நடைபெறுகிறது. இதனைத் தனியாக அத்தியாயம் 37இல் விவரிக்கும் எஸ். ராமகிருஷ்ணன் (பக்கம் 208), எட்டு ஆண்டுகள் முன்னால் ஆஷ் எனும் கொடுங்கோலனை வாஞ்சிநாதன் எனும் சுதந்திரப் போராட்ட வீரன் சுட்டுக்கொன்று, 1911இல் உலகையே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த சம்பவத்தை அத்தியாயம் 57இல் விவரிக்கிறார்.

சரித்திரத்திற்குட்பட்ட காலத்து மன்னர்களில் அசோகரே மூத்தவர், கி.மு. 273 காலத்தவர்; கஜனி, பாபர், மாலிக்கபூர் போன்ற ஆக்கிரமிப்பாளர்கள் காலத்தால் அக்பருக்கும் பிந்தியவர்கள். ஆனால், எஸ். ராமகிருஷ்ணனுக்குக் கொஞ்சம் விளையாடத் தோன்றியதோ என்னவோ 1799இல் போரிலிருந்த திப்பு சுல்தான், 1799இல் கழுவேற்றப்பட்ட கட்டப்பொம்மு, 1801இல் தூக்கிலிடப்பட்ட மருது பாண்டியர்கள் இவர்களின் சரித்திரங்களை அத்தியாயம் 11இல் தந்துள்ளார். சரித்திரத்தில் இவர்களுக்கு முந்தியவரான ஷாஜகானின் அரசு 1628 முதல் 1658 வரையில் இருந்ததாகச் சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன. அத்தியாயம் 21இல், தந்தை ஷாஜகானை சிறையிலிட்டுவிட்டு தனக்குத்தானே 1658இல் முடிசூட்டிக்கொள்ளும் ஔரங்கஜிப் 1707இல் இறக்கிறார்; அவருடைய மகள் ஜெப் உன் நிசா, ஷஜகானின் மகள் ஜஹானாரா பற்றிய சரித்திரங்கள் அத்தியாயம் 22இல் இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் 17-18இல் அசோகனைப் பற்றிக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அசோகர், கஜினி முகமது நீங்கலாக மேற்சொன்ன முகலாய மன்னர்கள் எல்லோருக்கும் காலத்தால் முன்னவராகிய பாபரின் (1526) வருகை பற்றி அத்தியாயம் 35இலும்; அதற்கும் முந்தைய அலாவுதீன் கல்ஜியின் படையெடுப்புகள், மாலிக்கபூர் (1296 – 1316) இந்துக் கோவில்கள் மேல் மேற்கொண்ட கொள்ளைகள் பற்றிய நிகழ்வுகள் அத்தியாயம் 44இலும் கூறப்படுகின்றன.

சரித்திர நிகழ்வுகளின் கால நிரல்களுக்கும் இந்நூலின் அத்தியாயங்களுக்கும் சம்பந்தமில்லை. முகலாய மன்னர்களின் ஆட்சிகளைப் பற்றிக் கூறும் அத்தியாயங்களிடையே, பிரிட்டிஷ் அரசால் சுதேசிகளால் உப்பு கடத்தப்படாமல் இருக்க தேசத்துக்குக் குறுக்காகப் போட்ட உப்புத் தடை வேலியைப் பற்றிய தகவல்களை எஸ். ராமகிருஷ்ணன் எழுந்தமானத்தில் காலநிலை பற்றிய பிரக்ஞையின்றியும் தொடர்பற்ற அத்தியாயங்களிடையே கோர்த்துவிட்டுள்ளார்.

எஸ்.ஏ. பெருமாள், தேவதச்சன் போன்ற ஆளுமைகளின் வழிகாட்டுதல்கள் இருந்ததாகவும், ஐ.ஏ.எஸ். பரீட்சைகளுக்காக மாணவர்கள் இந்நூலைப் படிப்பதாகவும் குறிப்பிடும் எஸ். ராமகிருஷ்ணன், காலநிலையில் குழப்பங்கள் ஏற்படாதவகையில் அத்தியாயங்களை இன்னும் செம்மையாக வகுத்திருக்கலாம். இவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்யும் விதமாகக் குறைந்தது மொகலாய மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் நிரலையாவது நூலின் இறுதிப் பகுதியில் நிரற்படுத்தியிருக்கலாம்.

ஒவ்வொரு அத்தியாயங்களின் இறுதியிலும் சரித்திர நிகழ்வுகளுக்கான உசாத்துணை நூல்களின் நிரல் தரப்பட்டிருப்பதைப் போன்று நூலில் முற்பகுதியிலேயே அத்தியாயங்களின் தலைப்புகள் அட்டவணை நிரலாகத் தரப்பட்டிருப்பின் வாசகரின் தகவல் தேட்டத்துக்கு இன்னும் இலகுவாக இருந்திருக்கும்.

 

ராபர்ட் கிளைவ் பற்றிக் குறிப்பிடும்போது, அவன் இந்தியாவைச் சுரண்டிக் கொள்ளையடித்ததுக்கான விலையைத் தந்ததுபோல அவனுக்கான சாவை அவனே தேடிக்கொண்டான் என்று எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். இதுபோல் பக்கம் 208இல், ஜாலியன் வாலாபாக்கில் ஜெனெரல் டயரின் உத்தரவின் பேரின் அவனின் படைகளால் கைகால்கள் முறிக்கப்பட்ட சிறுவர்களின் சாபங்கள் போல அந்திமகாலத்தில் ஜெனெரல் டயரில் கைகால்கள் பாரிசவாதத்தினால் முடக்கப்பட்டு விளங்காமல் போயின என்றும் எழுதுகிறார். இது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போன்ற ஒரு நம்பிக்கையையோ / கர்மாவையோ வழிமொழிவதைப் போலுள்ளது. ஒரு சரித்திராசிரியன் தன் நம்பிக்கைகளை நூலினுள் வைப்பது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.

சிற்றரசர்கள், நவாபுகள் பிரிட்டிஷ் அரசுக்குச் செலுத்தியது திறை; அது திரை, திரையெனச் சிலவிடங்களில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும்படி பொருட்படுத்தக்கூடிய எழுத்துப் பிழைகளோ, தட்டல் வழுக்களோ இல்லாதிருப்பது நூலின் இன்னொரு சிறப்பம்சம்.

எழுவாயோ செயப்படுபொருளையோ பன்மையாகக்கொண்ட வாக்கியங்கள் அனைத்தும் வினைமுற்றுக்களை ஒருமையிலேயே முடிப்பது எஸ். ராமகிருஷ்ணன் பாணி; இங்கும் அதையே தொடர்ந்துள்ளார். ‘ஒப்பு நோக்குபவன்’ எனும் அற்புதமான கதையை எழுதிய எஸ். ராமகிருஷ்ணனுக்கு, தன் படைப்புகளை இன்னொருவரைக் கொண்டு ‘செம்மை நோக்கு’விப்பதில் என்ன மனத்தடையென்று புரியவில்லை.

இதைவிட அழுத்தமான தாளில் நூலைப் பதித்திருந்தால், நூலில் இடம்பெறும் படங்கள் இன்னும் துலக்கமாகவும் தெளிவாகவும் இருந்திருக்கும்.

மேலே குறிப்பிட்ட சில குறைகள் இருந்தாலும் இது முக்கியமான நூல். இவ்வளவு கனதியான விஷயங்களை உள்ளடக்கிய நூலைப் படைத்த எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்தும் பாராட்டும்.

பொ. கருணாகரமூர்த்தி karunah08@yahoo.com

Amrutha

Related post