வேல் கண்ணன் கவிதைகள்

ஓவியம்: அபராஜிதன்
1. நினைவின் வலிகள்
அக்கம் பக்கத்தவர்களின் இழப்புகள்
இணை பணியாளர்களின் விபத்துகள்
நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன
அவ்வப்போது துர்மரணங்களும்.
நெடிய தயக்கத்திற்கு பின்பான அழைப்பு
‘Speaking to someone’இன் ‘else’யை
அழுத்துகிறது, பதிலாக
இழவோ, நோய்மையோ,
வந்தவர்கள் உன் செல்போன் மீது ஏறி
அமர்ந்து கொள்கிறார்கள்.
வாரங்கள் கடந்த அழைப்பில்
ஏதேதோ காரணம் சொல்லுகிறாய்
மழை கொட்டுகிறது
யார் இறந்ததாக சொன்னாலும்
நம்பிவிடும் மழை
எனைத் தவிர்த்து சாரல்களைக்
கோர்த்துக் கொண்டிருக்கிறது
2. மாயக் கொம்பு
நிழல்களில் தங்கிவிட்டன
விரும்பிய நிறங்கள்.
முச்சுக் காற்றில்
அர்த்தமிழந்து சுழல்கின்றன
நேசித்த சொற்கள்.
அணைந்ததாய் நினைத்தது
நீருபூத்த கங்குகளில் காத்திருக்கின்றன
இணைந்தே அந்தமடைவோம்
என்றுரைத்த நம்மிடையே
தனித்தனியாக
சிறு மலையொன்று,
மொசக்குட்டியின் மெதுமெதுப்புடன்.
சிறு மலர்த் தோட்டம்,
கையடக்கமான பூக்களுடன்.
’ஜோ’ வென்று கொட்டும் அருவி
மொண்டு குடிக்கும் அளவிலும்
அள்ளிப் பருகும் சுவையிலும்,
சிறியதொரு புத்தகம் முன்பின் பக்கங்களற்ற
படிக்க படிக்க வளரும் கவிதைகளுடன்,
சிறார்கள் கட்டிய மணற்கோபுரம்
நழுவாத இளகிய துகள்களுடன்,
நிலச்சரிவு உருண்டோடி வந்த பாறை
வழுக்காத பளபளப்புடன்
நிலைத்திருக்க சாத்தியமெனில்..
அபஸ்வரத்தில் தொடங்கி
மெளனத்தில் உள்ளடங்கும்
மாயக் குதிரையின் கொம்பு.
3. அந்தரத் தோட்டம்
என்னுள் ஒளிர்ந்து எந்நேரமும்
பிழம்புகளை உமிழ்ந்தபடியே
நிறைமுகம் காட்டுகிறது, சூரியன்.
கனவுக் கதவுகளை அறைந்து சாத்தியபடியே
நொடியில் பிளந்து கொட்டுகிறது, மழை.
கசையடிகள் கொடுத்தபடியே
நித்தியதுவத்தை கடத்த முயல்கிறது, காலம்.
வெள்ளைக் காகிதம் நிரம்ப
எழுதித் தள்ளுகிறது, விழுங்கிய தூக்க மாத்திரைகள்.
நூல் ஏணிகள் அறுபட்டு
மிதக்கும் பாறைகள் நிரம்பிய
என் அந்தரத் தோட்டம்
பூமிக்கு வெளியே
சிதறியபடியே நிகழ்கிறது.
வேல் கண்ணன் <velkannanr@gmail.com>