வெற்றுடல் குளம்

 வெற்றுடல் குளம்

அமுதா ஆர்த்தி

ஓவியம்: இளையராஜா

 

கானல் நீராய் ஓடிய தார்ச்சாலையில், நிழலைத் தே‍டிய அவளின் பாதம், குதிரையின் நடையைப் போலவே. தூரத்திலிருந்து அவளாக இருக்குமோவென பின் தொடர்ந்தேன். அவளது குதிகால்களில் வெடிப்பு. நடையின் இடையிடையே குதிகால் வெடிப்பில் சிக்கும் சேலையின் விளிம்பைத் தூக்கிக்கொண்டாள். பாதங்களிலிருந்து கொலுசின் ஓசையை மட்டும் கழற்றி எறிய முடியவில்லை. கூப்பிட நினைத்தபோது சாலையை கடந்தாள். பெயர் ஞாபகத்திற்கு வரும் முன்பே, அவள் கொலுசு, வருடங்கள் பலகழிந்தும் கண்முன்னே நடந்து திரிகின்றது.

பள்ளி கூடத்தில் முன்வரிசையில் அமர்ந்திருப்பாள். சுமாராக படிக்கவும் செய்வாள். எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள் ஆசிரியர்கள், இவளைப் போன்று பள்ளிக் கூடத்திற்கு சுத்தமாக வரவேண்டுமென்று.

எனக்குக் கடைசி பெஞ்சில் இருப்பது பிடிக்கும். ஆசிரியர்களின் கேள்விகளுக்குத் தப்பித்துக் கொள்ளலாம். என் அருகிலிருக்கும் கோமதி சரியாக வாய் பேச முடியாதவள். வயதைத் தாண்‍டிய வளர்ச்சியோடு வெளுத்த தேகமும் வளமான உடல் பொலிவும் என இளமையின் வசீகரம் மெல்ல எட்டிப்பார்க்கும் பருவம். அவளோடு பழகுவதாலோ என்னவோ அதிகம் பேசாமல் செய்கைகளே எனக்கும் பாஷையாகியது. கண்களை அகலவிரித்து உதட்டைச் சுழித்து, ‘பெருசா இவதான் கொலுசு போட்டுருக்காளாம் பாரு’ என்பாள். அவள் கொலுசின் இடைவெளிகளில்லா முத்துக்கள் பெரும் ஓசையோடு காலின் அசைவிற்கு ஆடும். என் கவனமெல்லாம் அவள் கொலுசின் சத்தத்தோடு.

அவள் கொலுசுக்குக் கால் முளைத்து என் கால்களில் தானாக வந்து மாட்டிக்கொண்ட கனவில், கால்களை வேகமாக ஆட்டும்போது கால்கள் விர்…விர்ரென்று பிடித்து இழுப்பதுபோன்ற உணர்வு. பாட்டி சொல்லுவாள், ‘அது ஒண்ணுமில்ல மக்கா… பெருச்சல் பத்தியிருக்கும்’.

அறுவடை காலங்களில், பள்ளிக்கூடம் செல்லும் வழியெங்கும் சூடடித்த வைக்கோல்களை ஆங்காங்கே வெயிலில் காயப் போடுவார்கள். ஆட்கள் போகிறதுக்கு சிறிது இடைவெளிவிட்டு வழிநெடுக வைக்கோல்களைத் தூவி அவ்வப்போது கிளறிக் கொடுத்துப் பக்குவப்படுத்துவார்கள். வைக்கோலை மிதிப்பவர்களை மிரட்டுவதற்கென பெரிய குச்சி வைத்து ஆட்கள் காவலிருப்பார்கள். ஆளில்லாத நேரம் பார்த்து வைக்கோலில் நடக்கும்போது கொலுசு போட்டு நடப்பதாக நினைப்பு. வைக்கோல்கள் மிதிப்படும் சத்தம் எனக்குக் கொலுசின் ஓசை போன்றே கேட்கும். காய வைத்த வைக்கோல்கள் முடிவுறும் நேரம், திரும்பி பார்த்து, நின்றுபோன என் கொலுசின் சத்தத்தைக் காலில் போட்டுக்கொள்ள நினைக்கும்போது, குச்சியை வைத்து மிரட்டுவார்கள். சரி, சாயங்காலம் வீடு திரும்பும்போது பார்த்துக்கலாம் என காலை சொறிஞ்சிக்கிட்டே பள்ளிக்கூடத்தை வந்தடைவேன்.

மாலையில் வைக்கோல்கள் நிறைந்திருந்த சாலை செறிச்சோடிக் கிடக்கும். தெருக்களில் சேவல், பெட்டைக் கோழிகள், புறாக்களென, உதிர்ந்து கிடக்கும் என் கால் கொலுசின் முத்துக்களை கொத்தி விழுங்கிக் கொண்டிருக்கும். கூட்டிய வைக்கோல்களை ஓரிடத்தில் சேர்த்து, இருபதடி உயரம் வைக்கப் போராகி வளர்ந்திருக்கும். வைக்கோல்களின் வாசனையோடு சிறிதான மழைத்தூறல் வாசனையும் கருமேகம் சூழ்ந்த வானும் சேர்ந்து புதுப்பொலிவை உண்டு பண்ணும். இப்போதும் அந்த வாசனை அந்நினைவுகளைச் சுமந்து வரும்.

கொலுசு போடும் ஆசையைப் பாட்டியிடம் சொல்லும்போது, “கொலுசு பேய்க்கு ரொம்ப பிடிக்கும்… அதபோய் யாரு போடுவா… சும்மா கெட…” அவள் இயலாமையின் வார்த்தைகள் அதிகாரத்தோடேயிருக்கும்.

பயமாயிருந்தாலும் கொலுசொலியின் ஓசை என்னோடு வளர்ந்து கொண்டேயிருந்தது. பாட்‍டி சொல்லித்தரும் புராணக்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போல் எனக்கும் அதிசயப் பிறவி இருக்காதா… சலங்கையோடு பிறந்ததாக சொல்லிக்கொள்ள.

 

கொலுசின் முத்துக்கள் விழாதாவென்று நானும் கோமதியும் பின்னாலே செல்வதைக் கண்டு அவள் அலட்டிக்கொள்வாள். கொலுசின் ஓசையை எனதாக்கிக் கொள்ளப் பலவித யோசனை. இடைவேளை நேரங்களில் அவக்கூடவே நடப்பது. பாட்டியால் வாங்கித் தரமுடியாத, பிடித்தமான அந்த ஓசையை நான்தான் தேட வேண்டும். எங்கே போய் தேடுவது. ஞாபகத்திற்கு சப்பாத்துக்குளம் வந்தது. சிறுவர்கள் குளத்தில் மூழ்கி மண்ணெடுக்கும்போது நாணயங்கள் கிடைக்கும். மத்தியான நேரம் யாரும் வரமாட்டார்கள். அந்நேரம் குளிக்கச் செல்வேன்.

சலனமில்லாத குளத்து நீரைக் காற்று குட்‍டிக் குட்டி அலைகளாய் கரை சேர்க்கும். முதல் அலைகள் கரையை வந்தடையும் முன்னே கரைந்து போய்விடும். ஒதுங்கி நிற்கும் வாத்துக் கூட்டம் பக், பக்கென கனத்த சத்தத்தை எழுப்பி குளத்தின் அமைதியைக் குலைத்துக்கொண்டிருக்கும்;  எனக்குள்ளான அமைதியையும் கூட. துப்பிவிழும் எச்சிலைக் கொத்தித் தின்னக் கூட்டமாய் கும்மாளமிடும் கைலி மீன்கள். அல்லி, தாமரை, நீர்ப் பாசிகளையும் பார்த்திராத வெற்றுடல் குளம்.

மன்றங்கள் சார்பில் நீச்சல் போட்டிகள் வைப்பது சப்பாத்துக் குளத்தில். ஒரு கரையில் சாடி எந்த பக்கம் வேண்டுமானாலும் நீச்சலடிக்கலாம். இரண்டொரு முறை சாடி, நீச்சலடித்து, மூழ்கி மூச்சை சரிசெய்து. நீரின் அடியில் மூழ்கியிருப்பேன். அப்போது காலில் சோப்பு வழுக்குகிறதா, இல்ல பாம்பு வழுக்குகிறதாவன சந்தேகம். நீருக்கு அடியில் கன்னிப் பெண்கள் கொலுசுகளை அணிந்து அங்குமிங்கும் நடப்பது போன்ற சல்… சல்… ஓசை. அது இயற்கையின் வசீகர விளையாட்டு. காது பல கண்களுக்குச் சமமானது. மூழ்கியிருக்கும் வேளை நீர் சொல்லிக்கொடுத்தது.

மூழ்கி மண்‍ணெடுக்கும் வேளை ஒற்றைக் கால் கொலுசு கிடைத்தது. இதில் ஒரே‍யொரு முத்துமட்டும் இருந்தது. அமைதியாக இருந்த ஒற்றை முத்து எனக்கு எரிச்சலூட்டியது. மற்றொரு காலின் கொலுசும் கிடைத்துவிடும் என்ற முயற்சியில் பலமாதங்கள் குளத்தில் மூழ்கியும் கிடைக்கவில்லை.

சத்தமில்லா ஒற்றை கொலுசை என்ன செய்வது. பாட்டியிடம் கொடுத்தேன். அவளோ அதைப் பத்திரமாக வாங்கி, ‘திருப்பியும் ஒண்ணு கிடைக்கட்டும்’ என்று சொல்லி தட்டானிடம் ‍விலைக்கு கொடுத்துவிட்டாள். கொலுசொலி வேர் பிடித்து உறுதியான மரமாகிக் கொண்டிருந்தது எனக்குள்.

பக்கத்து ஊரில் கொடைவிழா. சிறு அருவியாய் குதித்துப் பரந்து ஓடிக் கொண்டிருந்த ஆற்றையொட்டிய கோவில். பெரியப் பாறைகளைத் தகர்த்தெறிந்த பள்ளம் ஓடையாகக் கோவிலின் அருகே. அகாலமான பயத்தை உண்டுபண்ணும். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் உச்ச நேரத்தில் யாரும் அந்தப் பக்கம் போகமாட்டார்கள்.

கொடைவிழா போல் கணியாட்டம் வி‍சேஷம். அரவாணிகள் காலில் சலங்கை கட்டி சுற்றிச் சுற்றி ஆடிவரும் ஆட்டத்தை வேடிக்கை பார்ப்பேன். மாடனின் கதை சொல்லும் பாடலைவிடவும் கணியாட்டத்தில் சலங்கை சொல்லும் கதை, எனக்கான ஓசையில்லை என்றாலும், கால் கொலுசின் மெல்லிய சத்தத்தின் மென்மை இதிலில்லை.

கொடைவிழா முடிந்து வெளியில் போடப்படும் பூமாலைகளிலுள்ள வாடாமல்லி, செவ்வந்தி விதைகள் ஈரமண்ணில் முளை வந்து செடிகளாவி ஆற்றோரங்களெங்கும் பூத்துக் குலுங்கும். ஆற்றில் குளிக்கப் போகும்போது கணியாட்டம் நடந்த மணலில் கால்களை வைத்து துழாவியபடியே செல்வேன். அதில் சலங்கையின் ஒரு முத்து கிடைத்தது. சலங்கையின் ஒற்றை முத்து பெருத்த சத்தத்தைப் போட்டபோது கணியானின் ஆட்டம் கண்முன்னே வந்து போனது.

ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டிக்குக் கட்டிவிட்டால் குதிக்கும்போது அழகான சத்தம் வரும். கோமதியிடம் காட்டினேன்; முத்து எப்படிக் கிடைத்தது என்றாள். மீசையை முறுக்கி, நாக்கை வெளியே தள்ளி, கண்ணை மொறைத்தவுடன், அவளோ பயத்தில் நடுங்கி, ‘முதல்ல நீ அத எடுத்த இடத்தில போட்டிரு… நீ போடல்லன்னா… கனவுல வந்து தொந்தரவு பண்ணி கேக்கும்’ என்றாள்.

பாட்டியிடம் சொன்னேன். ‘அது பொல்லாத எடமாச்சே… என்ன செய்ய நீ கால்ல கிலுக்கிட்டு நடக்கியதுக்கு… அண்ணணாடு பாடு கழியதுக்கே ஒனக்க சித்தி காரணம். அவ சாப்பாட்டுக்கும் ஒனக்க படிப்புக்கும் தருவா… இதெல்லாமா அவகிட்ட கேக்க… அவா தாறதே அவ வீட்டுக்காரனுக்குத் தெரியாது. அவன எப்படித்தான் சம்மாளிக்கியாளோ… சித்தப்பங்காரன் அவள கேள்வி கேக்கியதுல கெட்டிக்காரன்… நீ எடுத்தத கொண்டு போய் தூர நின்னாவது போட்டுக்கிட்டு வந்துரு…’

பாட்டி சொன்னதுபோல போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்துவிட்டேன். இரண்டு நாள் கழித்து வந்த காய்ச்சலுக்கு அந்த முத்தை எடுத்துக்கொண்டு வந்ததுதான் காரணம் என்று சொல்லிப் பல முறை மன்னிப்பு கேட்டாள் பாட்டி. அந்த நேரம் சித்திப் பார்க்க வந்தாள். காய்ச்சலுக்கான காரணம் சொன்னாள் பாட்டி.

‘சரி… அவள கூட அனுப்புமா… ரெண்டு நாள்ல சீட்டு ஒண்ணு முடியுது. அத வாங்கி அவளுக்கு கொலுசு வாங்கி கொடுக்கிறேன்…’ சித்தியிடம் எப்படி சொல்லன்னு தெரியாமல், அவளின் மடி மீது உட்கார்ந்து கட்டிப்பிடித்து தலையைத் தோள்மீது சாய்த்துக்கொண்டேன். என் அணைப்பில் அவள் தாய்மையின் அன்பைக் காட்டினாள்.

சித்தியின் வீட்டுக்கு போகிறதுக்கு ஒரு மைல் தூரம் போக வேண்டும். நடந்து குறுக்கு வழியாக அடிக்கடி நான் போய் வருவதுண்டு. நேரம் கருக்கலாயிட்டதுனால் சித்தி என்னை ரோட்டு வழியாக கூட்டிச் சென்றாள். நெடுந்தூரம் பயணித்த பறவையின் இளைப்பாறுதல். மெல்லக் கொலுசின் பளபளப்பாகக் கால்கள் மாறிக்கொண்டன. ரோட்டின் ஓரமாகச் சித்தியின் கைகளைப் பிடித்து நடக்கும்போது, என்னைப் போலவே கைகளைப் பிடித்து நடப்பவர்களும், எதுவோ ஒன்றை பிடித்திருக்கும் கைகளில் தேடுவதாக.

எனக்கு முன்னே கொலுசு அணிந்த பாதங்கள் நடனமாடியபடி செல்கின்றன. ரோட்டோர ஒன்றிரண்டு கொலுசு கடைகளை ஆவலோடு பார்ப்பதைக் கவனித்த சித்தி, ‘இங்கெல்லாம் எடுக்க வேண்டாம்; நமக்கு டவுண்ல போய் பெரிய கடைப் பார்த்து வாங்கலாம்’ என்றாள். டவுணுக்கு புறப்படத் தயாரானது மனசு. ரோட்டோர தெருவிளக்கில் மோதும் வண்டுகள் போடும் சத்தம்கூட கொலுசின் சிறு அசைவை காட்டுகின்றன. என் பாதங்களுக்கு வழி சொல்லியது கொலுசொலி.

கொலுசு வாங்கும் விஷயத்தை சித்தப்பாவிடம் சொல்லக்கூடாது என்று சொன்னாள், சித்தி. சித்தப்பா எப்போது வேண்டுமானாலும் திட்டலாம் என்கிற முகபாவனையோடு சுற்றி வருவார். பாட்டியிடம் இருக்கும் சந்தோஷம் அங்குக் கிடைக்கவில்லை. நாங்கள் கொலுசு வாங்கக் கிளம்பிக் கொண்டிருந்தோம். சித்தப்பாவுக்கு தெரியாமல் சீட்டுக்காரரை பார்த்து வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னாள் சித்தி.

டீ கடையில் சித்தப்பாவை பார்த்த சீட்டுக்காரர் நேற்றோடு சீட்டு முடிந்த விஷயத்தைச் சொன்னார். டீ கடையிலிருந்து வந்தவர் சித்தியிடம் சொன்னார்: ‘நல்ல இடம் ஒண்ணு பாத்து வச்சிருக்கேன் பாத்துக்க… பத்து பதினைஞ்சி தென்னை மரம் நிக்குது. நாம அதுக்கு அட்வான்ஸ் குடுத்திடலாம். இன்னும் நாலு நாள்ல அந்த ரெண்டு சீட்டும் முடிஞ்சிரும். எல்லாத்தையும் சேத்து எடத்த வாங்கிடலாம்.’

சித்தியின் முகத்தில் எந்த அசைவுமில்லை. சித்தியின் கைகளைப் பிடித்து, ‘வா போகலாம்’ என்றேன். மறைவிடம் நோக்கிக் கூட்டிச் சென்று, ‘ஒன்ன இண்ணைக்கி வீட்டுல கொண்டு விடுகிறேன்’ என்றாள்.

முகத்தில் எங்கேனும் இப்போது வாங்கித்தரும் எண்ணம் இருக்கிறதாவென என்னை அறியாமலேயே அழுதபடியே சித்தியை நோக்கினேன். பலமுறை கேட்டால் எங்க சித்தப்பா தெரிந்து திட்டிவிடுவாரோ. ‘ஒத்தைக்கே ஆத்தங்கரை வழியாக போகிறேன்’ என்றேன். ‘இல்ல…கொஞ்சம் பொறு. அம்மாகிட்ட வந்து நானே ‍வெவரம் சொல்லியேன்’ என்றாள். சித்தி என்னோட வருவதை நான் விரும்பவில்லை.

எனது ஓசை ஆழமான கிணற்றுக்குள் மூழ்கிக் கொண்டேயிருந்தது. கை கால்கள் வியர்த்துச் சிறு நடுக்கத்துடன் இருக்க ஏமாற்றத்தின் உருவம் அழகாகச் சிரித்துக்கொண்டது. கொலுசின் முத்துக்கள் இரண்டாகப் பிளந்து மண்ணில் விழ வழிப்போக்கனின் கால்களில் மதிப்பிட்டு புதையுண்டது. நிறங்களற்ற எண்ணங்கள் ஒரே இடத்தில் வெகு நேரம் தேங்கிப்போனது. கண் பார்க்கும் திசையெங்கும் எனைச் சுற்றிய சுவர்கள் நகர முடியாத நெருக்கம். என் பாதை எங்கே? என் கால்கள், எதற்காக வந்தோம் என்பதையே மறந்து ஆற்றங்கரையோரமாக நடக்கத் துவங்கின.

அமுதா ஆர்த்தி <amuthaarthi7870@gmail.com>

Amrutha

Related post