பிளிறல்

சுப்ரபாரதிமணியன்
பழைய வலைசைப் பாதையில் நடமாட முயலும் யானைகள் படும் தொல்லைகள் ஏராளம். அவற்றைப் பார்த்து மிரண்டு போய் தொல்லை தரும் மனிதர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவைகளை விரட்டவும் விரட்டுவதை ஜல்லிக்கட்டு போல் நினைத்து நம் இளைஞர்கள் மல்லுக்கட்டி விளையாடுவதையும் பார்க்கும்போது சங்கடமாகவே இருக்கிறது. அப்படி, திருப்பூர் – உடுமலைப் பகுதியில், 2021 மே மாத விடுமுறைக் கொண்டாட்டமாய் சில இளைஞர்களும் சுற்றுலா மனப்பான்மையில் அவற்றை அணுகும் சிறு வயதாளர்களும் யானைகளுக்கு கொடுத்த சிரமங்களையும் விளையாட்டையும் கொண்ட காணொளிகள் வைரலாகப் பரவின.
2021 மே மாத இரண்டாம் வாரத்தில் அஸ்ஸாம் காடுகளில் மின்னலால் பாதிக்கப்பட்டு 20 யானைகள் ஒரே சமயத்தில் இறந்தன. தீவிர கால நிலை நிகழ்வு என்று இந்தியாவில் நடப்பதைச் சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் அறிஞர்கள். இவ்வகை தீவிர கால நிலை நிகழ்வுகளால் உயிர் துறப்போரில் மின்னல் தாக்கி இறப்போர் இந்தியாவில் அதிகம் என்று சொல்லப்படுகிறது
கோவைப் பகுதிகளில் தொடர்வண்டிப் பாதையில் யானைகள் இறப்பது சமீபமாய் குறைந்திருப்பது ஆறுதல் தரும் செய்தி. ஆனால், பாலக்காடு வழித்தடத்தில் இந்த விபத்துகள் நிகழ்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 20 யானைகள் தொடர்வண்டி மோதி இறந்துள்ளன. இதனால் இந்தியாவில் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு யானை இறந்து வருகிறது
முதுமலைக்கு ஒருதரம் நண்பர் ஆட்டனத்தியுடன் சென்றிருந்தேன். அவரிடம் யானைத் தாவளம் செல்லலாம் என்றேன். அவர், “என் பணியில் யானைகளின் இயல்பைக் கவனித்ததுண்டு நிறைய. நீங்கள் போய் வாருங்கள்” என்றார்
யானைக்கு செடி கொடிகளோடு ராகி, கொள்ளு, அரிசிச் சாதம் என உணவும் தண்ணீரும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மெல்ல மெல்ல அதற்குப் பழக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டேன். யானையின் நான்கு கால்களும் பலமான இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டே இருந்தது. சுற்றுலாவாசிகளைக் கவர்வதற்காக சில விளையாட்டுகளையும் செய்தார்கள்.
முதலில் யானையை மண்டியிட வைக்கும் பயிற்சி… மாவூத் கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு கட்டளைகளை இட… மாவூத்தின் கட்டளைக்கு அடிபணிகிற யானைக்கு ஒரு கரும்புத் துண்டைக் கொடுத்தார்கள். இன்னொரு கரும்புத் துண்டை அதன் பார்வையில் படும்படியாக இருந்தது. கரும்பின் ருசிக்கு மயங்குகிற யானை இன்னொரு கரும்புத் துண்டுக்காக ஏங்க ஆரம்பிக்கும்.
இதைப் பார்த்த ஒரு பார்வையாளர் சொன்னார்: கட்டளைகளை ஏற்காத யானைகளுக்கு மாவூத்தின் குச்சியால் அடி விழும். ஒவ்வொரு அடிக்குப் பிறகும் ஒரு கரும்புத் துண்டு வழங்கப்படும். அடிக்கடி கிடைக்கிற கரும்பின் ருசிக்கு அடிமையாகிற யானை, தான் யானை என்கிற நிலையை மறக்க ஆரம்பிக்கும். கரும்பைக் காட்டி இரும்பை உருக்குகிற சாதாரண வேலை வெகுவாக வேலை செய்ய ஆரம்பிக்கும்போது, மாவூத்தின் குச்சியை எடுக்கும் இரண்டாவது பயிற்சியை வழங்குவார்கள். இதற்கு இடையில் வெல்லத்தையும் உணவாகக் கொடுப்பார்கள். யானை மாவூத்தை முழுதாக நம்ப ஆரம்பிக்கும். அப்போது வரை மாவூத்தை நெருங்க விடாத யானை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க விடும். பொதுவாக யானை கூச்ச சுபாவம் கொண்டது என்பதால், யானையின் கூச்சத்தை போக்க கம்பிகளால் செய்யப்பட்ட பிரஷ்ஷை வைத்து யானையின் உடலெங்கும் தேய்ப்பார்கள். ஏனெனில், யானையின் கூச்ச சுபாவம் அகன்றால் மட்டுமே யானையைச் சுலபமாகத் தொட்டு, அதன் மீது ஏற முடியும். யானையின் உடல் நகர முடியாதபடிக்கு கட்டைகளால் அடைபட்டிருக்கும்பொழுது கூச்சத்தைப் போக்கும் பயிற்சி தொடங்கும்.
அப்போது, “இதற்கெல்லாம் மதம் பிடிக்குமா” என்றேன்.
“ஆரோக்கியமாக இருக்கிற ஒவ்வொரு யானைக்கும் வருடத்துக்கு ஒரு முறை மதம் பிடிக்கும். பெண் யானையோடு இணை சேர முடியாத ஆண் யானை மாவூத்தின் கட்டுப்பாட்டிலிருந்து முதலில் விலக ஆரம்பிக்கும். ஒரு முறை அழைத்தாலே திரும்பிப் பார்க்கிற யானை, எட்டு முறைக்கு மேலும் அழைத்து ஒன்பதாவது அழைப்பில், “இரு வரேன்” என அலட்சியமாக நடக்க ஆரம்பிப்பது, மதம் பிடிப்பதில் முதல் அறிகுறி. இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அடுத்து முகாமில் நடப்பது எல்லாமே அசம்பாவிதங்களாக மட்டுமே இருக்கும். மதம் பிடித்தால் யானை பக்கத்தில் யார் இருந்தாலும் எது இருந்தாலும் இழுத்துப் போட்டு சாத்திவிட்டுப் போய்க்கொண்டே இருக்கும்” என்றார் பயிற்சியாளர்.
`ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன் ஒரு முறை. “யானை ஒரு காட்டு விலங்கு. என்னதான் நாம் அதைப் பழக்கப்படுத்தி வளர்த்தாலும், அது ஒருபோதும் வீட்டு விலங்காகாது. அதற்குள் ஒரு காட்டுத்தன்மை இருந்துகொண்டே இருக்கும்.
அதே சமயம் யானைகளைப் பழக்கி, மனிதர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே நம் நாட்டிலிருந்து வருகிறது. தமிழர்களைப் பொறுத்தவரை, போர்களுக்கு பயன்படுத்தி வந்த வரலாறு இருக்கிறது. யானை வளர்ப்பு என்பது தனித்துவமான கலை. அனைவராலும் அதை வளர்த்துவிட முடியாது. அதற்கு ஒரு பாரம்பர்ய அறிவு வேண்டும்.
தமிழ்நாட்டில், பழங்குடியின மக்களான குரும்பர் மற்றும் மலசர்கள்தான் வனத்துறை கேம்ப்களில் யானைப் பாகன்களாக இருந்து வருகிறார்கள். இந்தியாவில் காட்டு யானைகளைப் பிடித்து வளர்ப்பவர்கள், அங்குசத்தைக் கொண்டு யானைகளைத் துன்புறுத்தித்தான் பழக்குவார்கள். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்கள் வெறும் தடியை வைத்துத் துன்புறுத்தாமலே கட்டுப்படுத்துகிறார்கள். எவ்வளவு உயரமான காட்டு யானையையும் பிடித்து, பழக்கிவிடுவார்கள். இவ்வளவு நிபுணத்துவம் வாய்ந்த பாகன்கள் இருப்பதால் முகாமில் இருக்கிற யானைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
யானைக்கு மதம் பிடிப்பது என்பது அதன் நோய் அல்ல… இயல்பு. ஆரோக்கியமான, பருவத்துக்கு வந்த ஆண் யானைக்கு, ஆண்டுக்கு ஒருமுறை மதக்காலம் வரும். இந்தக் காலத்தில் ஆண் பாலுணர்வு சுரப்பிகள் மிகுந்து சுரக்கும்போது ஒருவித பரவச நிலையை அடையும். அந்த நேரத்தில் பல பெண் யானைகளுடன் உடலுறவு கொள்ளும். ஒருவித குறுகுறுப்போடு அலையும். மதக்காலம் பதினைந்து நாள்கள் முதல் மூன்று மாதங்கள் வரை இருக்கும். அதற்குப் பிறகு இயல்புநிலையை அடைந்துவிடும். மதக்காலத்தில் ஆண் யானைகளின் கண்களுக்கு மேல் மதநீர் சுரக்கும். அதைவைத்து நாம் தெரிந்துகொள்ளலாம். பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை. ஆனால், பாலுணர்வுச் சுரப்பிகள் சுரக்கும்போது இயல்புநிலையிலிருந்து சிறு குறுகுறுப்போடு இருக்கும்” என்றார்.
“ஆட்டனத்தியிடம் யானைகள் ஏன் தேவை” என்று கேட்டு வைத்தேன்.
“யானைகள் பழங்கள், செடிகளை விரும்பும். அவை சிதைக்கும். செடிகள், மீந்துபோன பழங்களைத் தின்ன விலங்குகள் வரும். யானைகளால் மரக்கிளைகள் உடைந்து போவதால் சூரிய ஒளி அடர்த்தியான காடுகளில் ஊடுருவி புற்கள் வளர ஏதுவாகும். சிறு பறவைகள், பிராணிகளுக்கு இந்தப் புற்கள் தேவை. எப்படியோ பல உயிரினங்கள் வாழ வளர இயற்கைச் சூழல் தேவை என்பதால் யானையும் அதில் முக்கிய இடம் பெறுகிறது.”
அந்த அனுபவங்களை வைத்து நான் பிளிறல் என்ற சிறுகதையை எழுதியுள்ளேன். அந்தப் பெயரில் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறேன். ‘மாயாறு’ என்ற ஆதிவாசி கவிதைகள் தொகுப்பும் அந்த முதுமலைத் தங்கல் அனுபவத்தில் விளைந்ததுதான்.
சுப்ரபாரதிமணியன் <subrabharathi@gmail.com>