சிறுகதை: மீண்டும் ஓர் அடைக்கலம் தேடி – எம்.டி. வாசுதேவன் நாயர்

 சிறுகதை: மீண்டும் ஓர் அடைக்கலம் தேடி – எம்.டி. வாசுதேவன் நாயர்

தமிழில்: தி.இரா. மீனா

 

ன்னொரு பயணம். மீண்டும் ஓர் அடைக்கலம் தேடி. மீண்டும் அந்த ஆறு.

ஆறு கிராமத்தை நோக்கி வளைந்து திரும்புகிற இடத்தில் வெகு காலத்திற்கு முன்னால், ஒரு சுற்றுலாப் பயணியர் பங்களா இருந்ததும் காலியான தார் பீப்பாய்கள் குவிக்கப்பட்டிருந்த அந்த முற்றத்தின் விளிம்பில் புல் ஏராளமாக மண்டிக் கிடந்த காட்சியும் நினைவிற்கு வந்தது. பின்னணியில் செவ்வரளி மரத்தைச் சுற்றிப் பூத்திருந்த பூக்கள், மறையும் சூரியனின் கதிர்களைக் கிழக்கில் கூடப் பிரதிபலித்தன. இது, வெகுகாலத்திற்கு முன்னால்.

தூரத்திலிருந்து அந்த இடத்தைப் பார்த்த போது, அந்தி சிவப்பிலான செவ்வரளி பூக்கள் காணாமல் போயிருந்தன. பாதையின் வளைவிலேயே அவனால் ஆற்றைப் பார்க்க முடிந்தது. அது என்ன மாதம்? மலையாள நாட்காட்டியின் மாதங்களும் நாட்களும் பல காலத்திற்கு முன்பே அவன் மனதிலிருந்து மறைந்துவிட்டன.

ஆற்றின் மையப் பகுதியில் தண்ணீர் இருந்தது. கீழிருந்த படகு, எதிர்க்கரைக்குப் போய்விட்டது. ஒரு காலத்தில் கொதி மணலின் விரிவாக்கமாக ஆறு மாறியிருந்ததைப் பார்த்து வருத்தப்பட்டவன் இப்போது மகிழ்ந்தான்.

சிதைந்த பழைய கோவில், தாறுமாறாக வளர்ந்திருந்த முட்செடிகளுக்கு இடையே நின்றது. காதோலைகளைப் போல இருந்த மெல்லிய முட்களோடு, வெளிர் ரோஜா நிறத்திலிருந்த அந்தச் செடிகளின் பெயரென்ன? வேலி போலப் பயன்படும் அந்தச் செடியின் பெயர் அவனுக்குத் தெரியும். தன் உடம்பில் அவை பட்டுவிடாதபடி முட்களை ஒதுக்கி, அச்செடிகளினிடையே அவன் தவழ்ந்திருக்கிறான். ‘என் செடிகளை நடுவதற்காக, ஒதுக்கிய என் நேரங்கள்… என் மாதங்கள்….’ என்று நினைத்தான்.

ஆற்றுப் படுகையை ஒட்டிய சாலையில் இறங்கி நடந்தான். எதிர்புறத்தில் இருந்து ஓர் அரசாங்க ஜீப் வந்தது. செம்மண் சாலையில் தார்ரோடு போடப்பட்டிருந்தது. புழுதியேயில்லை. அதிகமான ஜனங்களோடு கூடிய ஒரு பஸ் அவனைக் கடந்தது.

அவன் வழி தவறிவிட்டானா? அரச மரம் அங்கில்லை; தலைச் சுமையை இறக்கி வைப்பதற்காகப் போடப்பட்டிருந்த கல் பெஞ்சும் அங்கில்லை. அந்தியில் வயலை விட்டு வரமறுக்கும் தெரு ஆடுகளும் இல்லை.

படகு மறுபக்கம் திரும்பிப் போவதைப் பார்த்த ஒருவர், அவனிடம் வந்தார்: “அனிதா போய்விட்டாளா?”

யார் அனிதா? அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“கே.பி.டி. பஸ் இல்லை. அனிதா கொஞ்சம் சீக்கிரம் வரும்” என்று யாரோ சொன்னார்கள்.

பஸ்சைப் பற்றிப் பேசுகிறார் என்று புரிய அவனுக்குச் சில கணங்களானது.

“எனக்கு தெரியாது.”

அறிமுகமில்லாத பல முகங்களைக் கடந்து, ஆற்றின் இரண்டாம் வளைவிலுள்ள சிறிய பஜாரை அடைந்தான். கிழக்கு வானத்திலிருந்து உறுமல் சத்தம் எழுவதைக் கேட்டான். மூடியிருந்த ஒரு சிறிய கடை அருகே நின்று அந்த சத்தத்தைக் கூர்மையாகக் கவனித்துக் கேட்டான். மீண்டும் வானில் மெதுவான சத்தம்.

“வடக்குப் பருவமழை, விருச்சிகம் மாத நடுவிலா?” கிழக்கு வானத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவர் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை, அவர் பதிலை எதிர்பார்க்கவுமில்லை.

அந்தக் குறுகிய சந்தில் இருள் படர்ந்தது. விளக்குக் கம்பங்களும் தெரு விளக்குகளும் இப்போது வந்திருக்கின்றன. ஆனால், யாரும் அவற்றை போடவில்லை. கூரை வேயப்பட்டிருந்த சில கடைகளிலிருந்து இங்கும் அங்குமாய் சில மஞ்சள் விளக்குகள் லேசாய் மின்னின. மூடியிருந்த கடையின் வெளி வராந்தாவிற்குள் நுழைந்து, அங்கிருந்த மரக்கட்டையில் சாய்ந்து நின்றான். இரண்டு பக்கங்களிலும் உள்ள கடைகளுக்கு வந்து போகிறவர்கள் யாரும் அவனைக் கவனித்ததாகத் தெரியவில்லை.  அவன் மேலே நடக்க முடிவு செய்தான். இந்தச் சாலை எங்கே முடிகிறது?  சொல்லுங்களேன், எங்கே முடியும்?

ஒரு காலத்தில் அவனுக்கு அது தெரியும். ஆனால், அந்தச் சாலை இப்போது மாறியிருந்தது. முகங்கள் மாறி இருந்தன. அவனைக் கடந்து நடந்தவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் நின்று திரும்பி அவனை கவனித்தார்கள். அவனருகில் தயக்கத்தோடு வந்தார்கள். “ஒரு வழிப்போக்கர்”, என்று அவர்களில் யாரோ ஒருவர் சொல்வதை அவனால் கேட்க முடிந்தது.

“யாரது?”

அவன் புரியாத வகையில் முனகினான்.

“நீங்கள் எங்கே போகிறீர்கள்?”

பதிலை எதிர்பார்க்காமல், “இன்று பஸ் எதுவுமில்லை” என்று அவர்களில் ஒருவர் சொன்னார்.

அவன் தொலைந்த தன் குரலையும் வார்த்தைகளையும் மீட்டான்: “எனக்கு ஓர் இடம் வேண்டும்” என்றான்.

ஓர் இடம்.

அவர்கள் சிறிது தள்ளி நின்று, தங்களுக்குள் மிக மெல்லிய குரலில் பேசினார்கள். பின்பு அவனருகே வந்தனர்.

“வழிப்போக்கர்கள் தங்க….” மீண்டும் அங்கே அமைதி. “இங்கு ஹோட்டல்கள் எதுவுமில்லை. இது நகரமில்லை.”

“இங்கிருந்து நான்கு மைல் தொலைவில் ஒரு பயணிகள் பங்களா இருக்கிறது.”

“நான் விசாரித்தேன், அது காலியாகயில்லை” என்றான் அவன்.

குரல் ஏதாவது வித்தியாசமாக ஒலித்ததா? அவர்கள் ஆச்சரியத்தோடு அவனது அடுத்த வார்த்தைக்காகக் காத்திருப்பது போலிருந்தது.

“எனக்கு வாடகைக்கு இடம் வேண்டும்.”

“எவ்வளவு நாட்கள்?”

“சில நாட்களுக்கு. எத்தனை நாட்கள் வேண்டுமென்று…. எனக்கே சரியாக தெரியவில்லை.”

அறியும் ஆர்வம் வெளிப்பட, இப்போது கிராமவாசிகளின் முகத்தில் லேசாக ஒரு மரியாதை தெரிந்தது.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எங்களிடம் சொல்லவில்லையே?”

பதில் சொல்வதற்கு பதிலாக அவன் ஒருவித சப்தம் எழுப்பினான். தைரியமானவர் போல தோற்றமளித்த ஒருவர் அவனருகில் வந்தார். அவன் தோளிலிருந்த பையை அவர் கண்கள், அந்த இருட்டிலும் ஆழமாய் ஊடுருவின.

“உங்கள் சாமான்கள்?”

“அவை விரைவில் வரும்.”

அவர்கள் தங்களுக்குள்ளே ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். பல குரல்கள்.

“–விற்பனை இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும். கொத்தம்மாவிடம் கவனமாக இருக்க சொல்ல வேண்டும்.”

“–இல்லை. சி.ஐ.டி. அதிகாரியாக இருக்க வேண்டும். அப்படியெனில்….”

“–ஒரு வழிப்போக்கனை நம்பி விடக்கூடாது. இந்த நாட்களில் திறமையான கொள்ளையர்கள்….”

“–திருடர்கள் இவ்வளவு தைரியமாக இருப்பார்களா?”

கிராமவாசிகள் அருகில் வந்தார்கள்.

“உங்களுக்கு வீடா வேண்டும்? ஒரு நாள், இரண்டு நாள் என்றால்..”

“எனக்கு ஒரு வீடு வேண்டும்.”

என்னைச் சுற்றி ஒரு வீட்டின் சுவர்கள் சூழ்ந்திருக்கும். படுத்துத் தூங்குவதற்கு ஒரு தரை. வானத்திற்குக் கீழே ஒரு சிறிய கூரை.

“ஏமானின்– எஜமானனின் வீடு மட்டும் காலியாக இருக்கிறது. அவருடைய மானேஜர் இப்போதுதான் புறப்பட்டுப் போனார்.”

“ஏமானா? யார் அது?”

அவர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

“உங்களுக்கு தர்மன் முதலாளியைத் தெரியாதா? என்ன அதிசயம்?”

தர்மன். அவன் அந்தப் பேரைக் கேள்விப்பட்டதேயில்லை. அப்பு, அப்பா,  அப்புண்ணி, குட்டி நாராயணன், குட்டி சங்கரன்.. பழைய பெயர்கள் எல்லாம் மாறிவிட்டன.

தர்மன் யாராக இருக்கும்?

“நீங்கள் முதலாளியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க வேண்டும்.”

அவன் முணுமுணுத்தான். அந்தச் சத்தம் எந்த அர்த்தத்தையும் தரலாம்.

“அவரைப் பற்றிய கேள்விப்படாதவர்கள் என்று யாருமிருக்க முடியாது. அவர் செல்வந்தர்.”

யாரோ விளக்கு கொண்டு வந்தார்கள். அருகிலுள்ள ஒரு கடையிலிருந்து இரண்டு பேர் உட்காரக்கூடிய பெஞ்சை ஒருவர் கொண்டு வந்தார்.

“உட்காருங்கள்.”

வேறு யாருக்கோ தங்குவதற்கான இடம் பற்றிப் பேசுகிறார்கள் என்ற பாவனையில், அவன் விருப்பமில்லாமல் அவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்தான். திருமேனியின் அவுட் ஹவுசிலிருந்து மானேஜர் வெளியே வந்ததை பார்த்ததாக ஒருவர் சொன்னார். அவர்கள் அனுப்பி வைத்த முதல் மனிதர் திரும்பி வந்து தான் செய்தியைச் சொல்லிவிட்டதாக சொன்னார். சிறிது நேரத்திற்குப் பின்பு இரண்டாவது மனிதர் பதட்டத்தோடு வந்து “அவர் வருவார், மானேஜர் வருவார்” என்றார். அப்படியானால் அவன் ஏமானைப் பார்க்க வேண்டாமா?

“நீங்கள் அவரைப் பிறகு பார்க்கலாம்.”

பின்பு அவர்கள் கிராமத்தைப் பற்றிய குறைகளை அடுக்கினார்கள். வழிப்போக்கர்கள் வந்தால், அவர்களுக்கு சாப்பிட ஹோட்டல்களில்லை. அவர்கள் தூங்க இடமில்லை. பயணிகள் பங்களாவில் எப்போதும் ரெவென்யு அல்லது அரசு அதிகாரிகள்தான் தங்கியிருப்பார்கள். அவை மட்டுமில்லை. அனிதா பஸ் சர்வீஸ் இருக்கிறது. ஒரு நாள் கூட அது சரியான நேரத்திற்கு வந்ததில்லை.

ஒரு எதிர்பாராத கேள்வி அவனைத் தாக்கியது. “நீங்கள் ட்யூட்டியில் வந்திருக்கிறீர்களா, இன்ஸ்பெக்டர்?”

அவன் தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டு, தனக்குள்ளே மிக மென்மையாக சிரித்தான். வேர்வை நிறைந்த, சாயம் போன ஆடைகள். இன்ஸ்பெக்டர், சூபர்வைசர், மேற்பார்வையாளர்… கிராமவாசிகள் அவன் பதவியை நிமிடத்திற்கு நிமிடம் மாற்றிக் கொண்டிருந்தார்கள். விசாரணை செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். தன் முகத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்ட மண்ணின் முகத்தில், தெரியாத பாதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்

அவனுக்காக அவர்கள் பேசினார்கள், அவன் சார்பில் முயற்சிகள் எடுத்தார்கள். அவன் காத்திருந்தான். இப்படிக் காத்திருப்பது அவனுக்குப் புதியதில்லை, யாராவது வந்து அவனுக்கு தெரியாத ஏதாவது ஒன்றைக் காட்டுவார்கள். இப்போது அவன் ஒரு பார்த்தேயிராத வாடகை வீட்டிற்காக, முதலாளியிடம் வேலை பார்க்கும் மானேஜருக்காகக் காத்திருக்கிறான்.

தெற்கிலிருந்து ஒரு நாய் ஓடிவந்து, அங்கிருந்தவர்களை முகர்ந்தது. பின் அவனருகே வந்து, நிச்சயமின்றி நின்றுவிட்டு, வடக்கு திசையைப் பார்த்து ஓடியது.

கடைசியில் ஒருவழியாக மானேஜர் வந்தார். அவன் மீண்டும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்…. பதில் தெரியாத கேள்விகளுக்குத் தடுமாறியாக வேண்டும் என்னும் பயம் அவனுக்கு.

அரிக்கேன் விளக்கு சாலையின் இருட்டைக் கிழிக்க, மானேஜர் அவனை நோக்கி நீண்ட எட்டுகள் எடுத்து வைத்து வந்தார். கூடியிருந்தவர்கள் அவருக்கு மரியாதை காட்டும் வகையில் ஒதுங்கி நின்றனர்.

“என்னிடம் சாவி இருக்கிறது,” மானேஜர் எல்லாரையும் பார்த்து சொன்னார்.

அவர்கள் ஆச்சர்யமடைந்தனர்: “நிஜமாகவா? உங்களால்தான் அது முடியுமென்று எங்களுக்குத் தெரியும்.”

“கிராமத் தலையாரி போய்விட்ட பிறகு, அந்த வீட்டை வாடகைக்கு விடப் போவதில்லை என்று அவர் அந்த இடத்தை இழுத்து மூடிவிட்டார். எவ்வளவு பேர் விசாரித்திருக்கிறார்கள்! அவர் கேட்பாரா? உங்கள் சாமான்கள்….?”

“அவை விரைவில் வரும்.” கிராமவாசிகள் பதிலளித்தனர்.

“மாடியில் எலிகளும் வௌவால்களும் நிறைந்திருக்க வேண்டும். கீழ்ப்பகுதி அவ்வளவு மோசமாயிருக்காது.”

“ஒருவருக்கு அவ்வளவு இடம் தேவையிருக்காது.” கிராமவாசிகள் சொன்னார்கள்.

“சாமான்கள் கொண்டு வரும் ஆட்களுக்கு வழி தெரியுமா?” கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை.

கிராமவாசிகள் உதவிக்கு வந்தார்கள். “கடைக்காரர்கள் உதவியோடு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.”

நல்லது.

அவன் மானேஜரின் கையிலிருந்த விளக்கொளியைத் தொடர்ந்தான். நான்கு கிராமவாசிகள் அவனைத் தொடர்ந்தனர். மோப்பமிட்டு மீண்டும் தம்மை நோக்கி ஓடிவந்த நாயை ஒருவர் விரட்டினார். வயலை கடக்கும் பாதைகள் ஈரமாயிருந்தன. வானத்தில் மீண்டும் உறுமல். வெளிச்சத்தில் இருள் மறைய, திறந்த வெளியில் நடந்து, அவர்கள் பூட்டிய வீட்டை அடைந்தனர்.

சித்திரப் பதிவு ஒரு காலத்தில் மரக் கதவில் இருந்திருப்பதை அவன் மங்கிய ஒளியில் உணர்ந்தான். மானேஜர் கதவைத் திறந்தார். வலியில் தாழ்ப்பாள் கீரிச்சிட்டது.

“பொறுங்கள். உள்ளே ஒரு லாந்தர் இருக்க வேண்டும்.”

அரிக்கேன் விளக்கோடு மானேஜர் உள்ளே போனார். உள்ளே பல கதவுகள் திறக்கும் சப்தம் கேட்டது. பிறகு மாடிப்படிகள் கீரிச்சிட்டன. மானேஜர் இன்னொரு லாந்தரை ஏற்றி வந்து முகப்பில் வைத்தார்.

“உங்கள் சாமான்கள்?”

“வரும்.” கிராமவாசிகள் சொன்னார்கள்.

“சாப்பாடு.”

“நான் வரும் வழியில் கொஞ்சம் சாப்பிட்டு விட்டுத்தான் வந்தேன்.”

“கிணறு இங்கேயிருக்கிறது, வாளியும் இருக்கிறது,” மானேஜர் சுட்டிக் காட்டினார்.

அதற்குப் பிறகு தான் நீண்ட நேரம் அங்கு தனியாக இருப்பது போல உணர்ந்தான். இருட்டான வீடு, புகைகிற அரிக்கேன், துருப்பிடித்த சாவி ஆகியவை அவன் வசமாகி விட்டன.  உச்சியிலிருந்து விழுந்த கரையான் அரித்த மரத்தூளை ஊதி விட்டு, தலையை முழங்கையில் வைத்துப் படுத்துக்கொண்டு, வெளியில் தெரிந்த இருட்டை வெறித்தான்.

வாடகை மற்றும் பிற விஷயங்களை விவாதிக்க அடுத்த நாள் வருவதாக உறுதி சொல்லிவிட்டு மானேஜர் விடை பெற்றார். வெகு தொலைவாக தெரிகிற நாளைய தினத்தில் நடக்கப் போகும் ஒரு சந்திப்பு. மறந்துவிடலாம்– அவன் நினைத்தான். கடைசியில் அவனுக்கு ஒரு வீடு கிடைத்து விட்டது. வௌவால்கள் மாடியில், கதவுகளை அரித்து பொடியாக்கிய கறையான்கள் கீழே. அலைந்து திரிந்த நாட்களில் அவன் கற்பனை செய்து வைத்திருந்த அடைக்கலம் தரும் ஒரு வீடு. ஆமாம், என் சிநேகிதர்களே, இங்கே நானும் அடைக்கலம்.

m.d. vasudevan nair
எம்.டி. வாசுதேவன் நாயர்

காலையில் பஜாரில் முதலில் திறக்கப்படுகிற தேநீர்க் கடையில், ஜனங்கள் அந்த வழிப்போக்கனைப் பற்றி அறியும் ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.

புதியதாக வாடகைக்கு வந்திருக்கும் அந்த நபரைப் பார்க்க வருகிற மானேஜருக்காக காத்திருந்தனர். வாடகையைப் பற்றி அவர் எதுவும் பேசியதாகத் தெரியவில்லை. கடனாளியாக ஆகி விட விரும்பவில்லை எனச் சொல்லி அவன் முன் பணத்தைக் கொடுத்துவிட்டான். வீட்டை சுத்தம் செய்ய ஆட்களைத் தேட வேண்டும்.

“ஏமான் தனி மனிதர் யாரையும் தொந்தரவு செய்யமாட்டார். ஆனால், சில சமயங்களில் கிறுக்கன் போல நடந்துகொள்வார். சில சமயங்களில் வீட்டை யாருக்கும் வாடகைக்கு விடப்போவதில்லை என்பார், சில சமயங்களில் வீட்டை இடித்து விட்டு புதியதாகக் கட்ட வேண்டுமென்பார்.  சில சமயங்களில்….” இப்படி மானேஜர் சொல்லிக்கொண்டே போனார்.

“எஜமான் எப்போதும் அப்படித்தான்,” கிராமவாசிகள் ஒப்புக்கொண்டனர்.

புதியதாக வந்திருக்கும் மனிதனைப் பார்த்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் மனிதர்கள் வீட்டிற்குள்ளே வராமல் அந்த வீட்டைச் சூழ்ந்து நின்றனர்.

முற்றம் சுத்தம் செய்யப்பட்டு விட்டது. வேலி உயரமாக இருக்கவேண்டும் என்று சொல்லி வேலையாட்கள் பழைய செவ்வரளி மரங்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய கன்றுகளை நட்டனர். பையிலிருந்து சாக்கை எடுத்து அவன் தரையைத் துடைத்துவிட்டு அதைக் காய வைப்பதை பார்த்ததும், “உங்கள் சாமான்கள் வந்து விட்டதா?” என்று கேட்டனர்.

“வந்துவிட்டது.”

அவன் சொன்னதும் அந்த பதிலில் திருப்தியானவர்களாக அவனை பார்த்து சிரித்துவிட்டு, அவர்கள் போனதில் நிம்மதியானான். சாமான்கள் எப்போது அல்லது எப்படி வந்தன என்று யாரும் கேட்கவில்லை.

அடுத்த கட்ட கிராமவாசிகள் வருவதற்கு முன்னால் அவன் சிலந்திக் கூடுகளை நீக்கி, ஒட்டடை அடித்துச் சுத்தம் செய்தான். சந்தைக்குப் போயிருந்த வேலையாட்கள் மளிகைச் சாமான்களோடும் வீட்டிற்குத் தேவையான பொருட்களோடும் திரும்பினார்கள். வௌவால்களை விரட்டினார்கள்.

ஜன்னல்களில் இருந்த பனையோலைகளை நீக்கிய பிறகு வீட்டிற்குள் வெளிச்சம் பரவியது. ஊசல் வாடை மெல்ல மெல்ல மறைந்தது. உடைமையாளன் என்ற பெருமிதத்தில் அவன் வீட்டிற்குள்ளும் வெளியேயும் நடந்தான்.

தன் பயணத்தை தொடங்கிய நாளில் அவன் தூங்கிய அந்த அறையின் ஞாபகம் மெல்ல மங்கிப் போயிருந்தது. வேலையை முடித்து விட்டு களைத்து படுத்த போது அதை நினைவில் கொண்டு வர முயன்றான்.  பானை செய்யும் சக்கரத்தோடு சுற்றுவதால் மென்மையாகத் தெரியும் ஈரக் களிமண் சட்டிகள், சூளையின் எரியும் மணம், எங்கு பார்த்தாலும் விதவிதமான களிமண் வடிவங்கள், சாணி மணத்தோடு ஒரு பூ, சிறுநீர் சேரும் சாக்கடை துர்நாற்றம், எப்போதும் கண்ணில் படும் எரியும் சூளை…. அந்த அறையிலிருந்துதான் அவன் தன் பயணத்தை ஆரம்பித்திருந்தான்.

புழுதிகளிலும் காய்ந்த இலைகளிலும் நடந்த அவனது பாதங்கள் எந்த சுவட்டையும் கடந்த காலங்களில் ஏற்படுத்தவில்லை. அதற்குப் பிறகு… ஒழுகும் மழைத் தண்ணீரோடு கூடிய வராந்தாக்கள், புழுதியும் வேர்வையும் சேர்ந்த கரையான பெஞ்சுகள், முடிவற்ற பாதைகள், கொடூரக் கனவுகள்..

மாலையில், வேலையாட்கள் கொண்டு வந்திருந்த ரோஜாக் கன்றுகளை முற்றத்தில் நட்டான். புதிய தொட்டிகளை இருட்டு விலகிய அறைக்குள் வரிசையாக வைத்தான். ராத்திரி மானேஜர் லாந்தரோடு வந்தார்.

“நன்றாக இருக்கிறீர்களா?”

“உம்.”

“எந்த தொல்லையும் இல்லையே?”

“இல்லை.”

முற்றமும் காம்பவுண்டு பகுதியும் சுத்தப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து கொஞ்சம் பயந்தார். யாருக்கோ சொந்தமான ஓர் இடம். ஏமான் அவனை காலி செய்யச் சொன்னால் செய்து விடவேண்டும். அதனால் அவன் பணத்தை வீணாகச் செலவழிக்க வேண்டாமென்று மானேஜர் சொன்னார். அவர் புறப்பட்டுப் போனதும் அவன், ‘நான் காலி செய்யமாட்டேன், இந்த வீட்டை விடமாட்டேன்’ என்று தனக்குள் உறுதியாக சொல்லிக்கொண்டான்.

சுற்றியுள்ளவர்களோடு நட்பு கொண்டான். வேலியின் அருகேயுள்ள மூங்கில் கொத்தில் உள்ள மஞ்சள் பறவைகளை அவனால் அடையாளம் காண முடிந்தது. பாக்குச் செடியினருகே வந்து புல்லைக் கொத்துகிற அந்தச் சிறு பறவைகளும் அவனை அடையாளம் காணத் தொடங்கி இருந்தன. என்ன அதிசயம், தூக்கணாங் குருவிகள் மேற்கு பக்கத்து அறையில் கூடு கட்டத் தொடங்கியிருந்தன. சுவர்க் கோழியின் ஒலி இரவு நேரத்தில் தாளத்தோடு ஒலிப்பது போலிருந்தது.

“எவ்வளவு நாட்கள் இந்த வீட்டில் இருக்க முடிவு செய்திருக்கிறீர்கள்?”

கிராமவாசிகளில் ஒருவர் கேட்டார்.

“நான் இங்கிருந்து போகப் போவதில்லை.” அவன் அமைதியாக சொன்னான்.

அவர்கள் அதிர்ந்தனர்.

“எல்லாத் தூண்களும் ஆட்டம் கண்டுவிட்டன. அவர்கள் இதை இடித்து விட்டு புதியதாக கட்டப் போகிறார்கள்.” ஏமானையும் மானேஜரையும் அறிந்த ஒருவர் சொன்னார்.

தன் அமைதியின்மையை மறைத்துக்கொண்டு அவன் முணுமுணுத்தான்.

“இது யாருக்கும் பிடிக்காத ஓர் இடம்.. இப்போது ஒருவர் வாடகைக்கு என்று வந்திருக்கிறார். எஜமானனுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்” என்றார் ஒருவர்.

மழை பெய்வதற்கு முன்னால் மானேஜர் வந்தார். ஏமான் மேல் கூரை வேயப் போவதில்லையெனவும் ஒழுகி, விழுந்தாலும் பரவாயில்லை என்று சொன்னதாகவும் சொன்னார்.

மானேஜர் முன் பணத்தை வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், அவன் அதைக் கொடுத்து விடுவதில் உறுதியாக இருந்தான்.

 

ழை தொடங்கிவிட்டது. காற்று விசில் ஒலியோடு வயல்களில் பரவி, பாக்கு தோட்டத்திற்கும் வந்தது. மழை பெரியதாகி, வடிகால்களில் நீர் சேர்ந்தது. வாழை மரங்களும் பாக்கு இலைகளும் காற்றில் நடுங்கி,  நீரில் மூழ்கின. மழைத் தண்ணீர் இடிந்த மண் சுவர்களின் விரிசல்களைப் பொத்துக்கொண்டு வீட்டிற்குள் பொங்கி வருவதை வீட்டிற்குள் உட்கார்ந்தபடி அவன் பயத்தோடு பார்த்தான்.

வீட்டுச் சொந்தக்காரர் விரும்பியதைப் போல எல்லாம் இடிந்து நொறுங்கப் போகிறதா? வராந்தா முழுவதும் வைக்கோல் சிதறியது. கூரையின் இடைவெளிகளிலிருந்து கறைபட்ட சிவப்பு நீர் கொட்டியது. மழையில் அவன் வெளியே போய், களிமண்ணை உருண்டையாக்கி சுவர்களில் தெரிந்த விரிசல்களை அடைக்க முயற்சித்தான். கூரையிலிருந்து கொட்டும் நீரைப் பிடிக்க வரிசையாக பானைகளையும் தொட்டிகளையும் வைத்தான். காற்றின் வேகத்தால் உள்ளே வந்த நீரை துடைத்தான்.

அந்தச் சீற்றமான மழை ஒரு வழியாக நின்றது. காற்றின் கடைசி மூச்சு குழந்தையின் சிணுங்கலாய் இழைந்து நின்றது.

மானேஜர் திரும்பவும் வந்தார். அவர் சிரிக்கவோ அல்லது உட்காரவோ இல்லை. ‘இங்கே பாருங்கள், நான் ஓட்டைகளை அடைத்துவிட்டேன்.  கூரையைச் சரி செய்துவிடுவேன். இந்தப் பழைய வீடு இடிந்து விடாமல் பார்த்துகொள்வேன். நான் காலி செய்யமாட்டேன்’ என்று முகத்தை கடுமையாக வைத்திருந்த அந்த மனிதனிடம் அவன் சொல்ல விரும்பினான்.

யாரிடமோ கோபம் கொண்டவர் போல மானேஜர் உட்கார்ந்திருந்தார்,

குடிசைப் பகுதிகளிலுள்ள வேலையாட்களை அவர் அழைத்து வரப் போயிருந்த நேரத்தில், அருகிலுள்ள பனை மர ஓலைகளைப் பறித்து கூரையின் இடைவெளிப் பகுதிகளை அடைத்து விட்டான். மழையின் தாக்கத்தால் சூரிய ஒளி இன்னும் ஈரமாகவே இருந்தது.

 

நீங்கள் இந்த வீட்டை விட்டு போய் விட வேண்டுமென்று ஏமான் சொல்கிறார். இந்தாருங்கள், நீங்கள் தந்தது” என்று கையிலிருந்த பணத்தை அவனை பார்க்காமலே தந்தார், மேனேஜர். அவன் அதை வாங்கவில்லை.

“இது என்னுடைய தவறில்லை. எஜமானனின் இயற்கை அதுதான். அவர் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்.”

மானேஜர் பணத்தை இருக்கையில் வைத்துவிட்டுக் கிளம்பினார். கேட் அருகே சென்று திரும்பிப் பார்த்தார்.

“நீங்கள் போய் விடுவது நல்லது. உங்களால் வேறு என்ன செய்யமுடியும்? ஏமானின் விருப்பத்திற்கு மாறாக யாரும் நடந்து கொண்டதேயில்லை.”

கிராமவாசிகள் வந்தார்கள். அவர்களும் அவன் கண்களைப் பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் முகத்தில் இரக்கம் தெரிந்தது.

“நீங்கள் போவது எங்களுக்கு வருத்தம் தருகிறது. வேறு என்ன செய்ய முடியும்? இது எஜமானனின் வீடு. அவர் சொல்லும் போது நீங்கள் போய்த்தான் ஆகவேண்டும்.”

மூன்று நாட்கள் கழித்து மானேஜர் வந்தார். “உங்கள் பொருட்களை வெளியே எடுத்து வீசிவிட்டு, உங்களை வெளியேற்றப் போகிறார்கள். எனக்கு எதுவும் தெரியாது. நான் போகிறேன்.”

அவன் உள்ளேயிருந்த சிறிய அறைக்குப் போனான். கதவைத் தாளிட்டுக் கொண்டான். அவர்கள் வருவார்கள், தர்மன் முதலாளியின் வேலைக்காரர்கள் வருவார்கள். அவன் விளக்கை ஏற்றவில்லை. வயல்களுக்கிடையேயான பாதைகளை அவனால் ஜன்னலின் வழியாகப் பார்க்க முடிந்தது. ஜன்னலை இழுத்து மூடினான். மிக மிகப் பக்கத்தில் வந்த குரல்களைக் கேட்க முடிந்தது.

‘யாரது?” என்ற தொடக்கம். அவர்கள் ஏமானின் பணியாட்கள்.

அவன் எதுவும் சொல்லவில்லை. முழுங்குவதைக் கூட கடினமாக உணர்ந்தான். தொட்டிகளும் சட்டிகளும் வீசியெறியப்படும் சப்தம் கேட்டது. பின்பு வீட்டை உடைக்கும் சப்தம்.

“நாங்கள் உங்களுக்கு எதிரானவர்களில்லை. எஜமானன் செய்யச் சொன்னதைச் செய்கிறோம். அவ்வளவுதான். நாங்கள் கூரையைப் பிய்த்து கொண்டிருக்கிறோம். பிறகு சுவர்களை உடைப்போம். கடைசியில் நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறையின் சுவரை உடைப்போம். ஏமான் வரும் வரை நீங்கள் அங்கே உட்கார்ந்திருக்கலாம்.”

“அவர் வருவாரா?”

“அவர் வருவார். வருகிறேன் என்று சொன்னால் வருவார், அவர் வருவார்.”

இன்னொரு கட்ட காத்திருப்பு. ஜன்னலின் வழியே பார்த்தான். வழி எங்கும் தொடிகளும் சட்டிகளும் சிதறிக் கிடந்தன. தன் பயணத்தின் போது அவன் சேகரித்த பொருட்கள். வயல்கள் இன்னும் காலியாகவே இருந்தன. ஒரு வேளை….. அவன் பிரார்த்தித்துக் கொண்டான்.

‘எஜமானன் தன் மனதை மாற்றிக்கொள்ளலாம். நான் அவரை எஜமானன் என்றே அழைப்பேன். நான் எப்போதும் அப்படியே அழைப்பேன். அவர் முன்னால் விழுந்து வணங்குவேன். அடைக்கலம் தாருங்கள். நான் கண்டுபிடித்த கடைசியான அடைக்கல இடம் இது. என்னால் பொறுக்க முடியாது. அழுக்கான உடைகளோடு, ஒரு முடிவில்லாமல் பயணிகள் காத்திருக்கின்றனர். அறைகள் மிக மோசமான நாற்றத் தொகுப்பாக, வியர்வை வேகத்தோடு. சூளைகளின் எரியும் மணம். என்னால் போக முடியாது, அங்கே திரும்பவும் என்னால் போக முடியாது.’

தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவனாக, இன்னமும் நின்று கொண்டிருந்த நான்கு சுவர்களை உள்ளடக்கிய அறைக்குள் நடந்து கொண்டிருந்தான்.

பாருங்கள், மண் படிந்த மழை நீர் இனி ஒருபோதும் கூரையின் இடையே நுழையாது. மழையும் காற்றும் பனைக் கூரையின் வழியாக வராது —பாருங்கள்.

அமைதியாக இருக்கும்படி தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டு அவன் படுத்தான். மாலை வெளிச்சம் மங்கத் தொடங்கிய போது, அவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது. எஜமானனைப் போல இருட்டு அவனுக்குள் படர்கிறதா?

ஓடிப்போவதற்கு எந்த இடமுமில்லை. அந்த சப்தம் எங்கேயிருந்து வருகிறது? அவை குளம்புகளா அல்லது மனிதக் காலடிகளின் ஒலியா? ஆடு, மாடுகள் வீட்டிற்குத் திரும்புகின்றனவா? அழுக்கான உடைகள் ஒரு மூட்டையாக நெஞ்சைச் சுற்றியிருக்க அவன் காத்திருந்தான்.

அச்சம் தரும் சப்தங்கள் அவனருகே நெருங்கிய போது அவன் பயமாக உணரவில்லை. முதல் படி, வராந்தா என கனமான காலடிகள் அருகே கேட்டன. அந்த மூட்டையை தலையில் வைத்துக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டு படுத்தான். உள்ளே வரும் வழியைக் காண்பிக்கும் கதவுகள் திறக்கப்பட்ட போது, அவை அழுவதாகத் தெரிந்தன.

‘வாருங்கள், எஜமானனே, வாருங்கள்.’


ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. மலையாளத்திஇல் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு: வி. அப்துல்லா; Kuttiedathi And Other Stories, Orient Black Swan

தி.இரா. மீனா” <meenmix@yahoo.com>

Amrutha

Related post