இந்த தீ பரவக்கூடாது! – பிரபு திலக்

 இந்த தீ பரவக்கூடாது! – பிரபு திலக்

து நடந்துவிடக்கூடாது என நினைத்து இவ்வளவு நாளும் பயந்திருந்தோமோ அது நடக்கத் தொடங்கியிருக்கிறது. நமது பக்கத்து வீடான கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை முன்வைத்து நடைபெறும் சர்ச்சை மாணவ சமூகத்தையே கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது. ஹிஜாப் அணிந்த மாணவிகள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை; அனுமதித்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். மெல்ல மெல்ல தென்னிந்தியாவிலும் மதக் கலவர அலை தொடங்குகிறது. நாளை தமிழ்நாட்டுக்குள்ளும் இது புகலாம்!

நாடு ஒரு அசாதாரண நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. வரும் நாட்கள் ஆபத்தானதாகத்தான் இருக்கப்போகிறது; விழிப்புடன் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

சரி, அப்படி என்னதான் பிரச்சினை?

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ஹிஜாப் அணிவது தங்கள் உரிமை என்று கூறி, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, ஆறு மாணவிகளும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கும், பள்ளி வளாகத்தில் அமர்ந்திருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.

அவர்களில் ஒருவர் ஊடகத்தினருடன் பேசும்போது, “ஆண்டு முழுவதும் ஹிஜாப் அணிந்துதான் பள்ளி, கல்லூரிக்கு வர அனுமதிக்கப்பட்டோம். இந்நிலையில், கல்லூரியில் பெண்கள் பகுதியில்கூட ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று இப்போது திடீரென கூறுகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து, உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில மாணவர்கள் காவி சால்வையைத் தோளில் போட்டுக்கொண்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவிகளில் சிலர் காவி நிற தாவணியுடன் வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக வலதுசாரி மாணவர் குழுக்கள் களத்தில் குதித்தன.

இதேபோல, ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு ஆதரவாக சிறுபான்மையினர் நல அரசியல் இயக்கங்கள் களமிறங்கின. இப்படி இந்த விவகாரம் மத ரீதியிலான பிரச்சினையாகத் தீவிரம் அடைந்தது. இரு தரப்பு ஆதரவாளர்களும் பரஸ்பரம் முழக்கங்களை எழுப்பியதுடன் கல் வீச்சிலும் ஈடுபட்டனர். சில இடங்களில் கல் வீச்சு சம்பவங்கள் கடுமையாக இருந்தன. ஒரு காணொளியில் மாணவி ஒருவரின் பெற்றோரும் கற்களை வீசுவதைப் பார்த்தேன்.

சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டனர். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஹிஜாப் அணிய அனுமதி கோரியதுடன், ஹிஜாப் அணிவது தங்களுடைய அரசியலமைப்பு உரிமை என்றும் கூறியிருந்தனர். அவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத பகுதியாகும். அதேபோல் ஒருவர் என்ன உடை அணிவது என்பது தனியுரிமைக்கான உரிமையின் ஒரு பகுதியாகும். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப், சிலுவைகள் போன்றவை நேர்மறை மதச்சார்பின்மையின் பிரதிபலிப்பு ஆகும்.

இந்து மதத்தினர் தங்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்குச் செல்கிறார்கள். அது பொது ஒழுங்கை பாதிக்கும் என்று ஒரு பள்ளி சொல்ல முடியுமா அல்லது சீக்கியர் அணிந்திருக்கும் தலைப்பாகை பொது ஒழுங்கை பாதிக்கிறது என்று அரசால் கூற முடியுமா? அதுபோல் இஸ்லாமிய நம்பிக்கையின் ஒரு பகுதிதான் ஹிஜாப்” என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. ஹிஜாப் அணிந்தபடி கல்லூரிக்குள் ஒரு மாணவி நுழையும்போதே காவி துண்டு அணிந்த மாணவர்கள் கூட்டம் அவளை சூழ்ந்தது. சுற்றி நின்று மாணவர்கள் மிரட்டும் தொனியில் கூச்சலிடுகிறார்கள்; ஆனாலும் அவள் நடையில் துளி தயக்கமில்லை, கண்களில் துளி அச்சமில்லை. பதட்டமோ படபடப்போ துளியுமின்றி “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டவாறு அவள் சென்றாள்.

ஒற்றை கல்லூரி மாணவியைச் சுற்றி இத்தனை மாணவர்கள் கோஷம் போட்டு அச்சுறுத்தியது அராஜகம், அநீதி, அக்கிரமம். வெட்கக்கேடு.

முஸ்கான் என்ற அந்த பெண் ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் என்னுடைய அஸைன்மெண்டைக் கொடுக்கத்தான் கல்லூரிக்குச் சென்றேன். நான் எப்போதுமே ஹிஜாப், புர்க்காவுடன்தான் கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறேன். வகுப்புக்குள் அவற்றை அணிவதில்லை. அன்று என்னைப் பார்த்து அவர்கள் ஜெய் ஶ்ரீராம் என்று கூச்சலிட்டனர். பின் தொடர்ந்தனர். நான் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டேன். கல்லூரி முதல்வரும் ஆசிரியர்களும் என்னைப் பாதுகாத்தனர். கூச்சலிட்டவர்கள் பெரும்பாலோர் வெளி ஆட்கள். 10 சதவீதம் பேர் எங்கள் கல்லூரி மாணவர்கள். ஒரு துண்டு துணிக்காக எங்கள் கல்வியைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்” என்று சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது

ஆம், அவள் போராடுவது உண்மையில் அந்த துண்டுத் துணிக்காக இல்லை; தங்கள் கல்வி கற்கும் உரிமையை காப்பாற்றிக்கொள்ள. அந்த துண்டு துணி இல்லாமல் அவள் வீட்டை விட்டுக் கிளம்ப முடியாது. அந்த துண்டுத் துணி இல்லாமல் அவள் பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்ல முடியாது. எனவே, அந்த துண்டு துணியை அணிந்துகொண்டுதான் இந்த சமூகத்தில் அவள் வெற்றியடைய முடியும். தனது இலக்கை அடையவே போராடுகிறாள்.

‘அல்லாஹ் அக்பர்’ என்பதை ஒரு முழக்கமாக மாற்றியுள்ளார் அவர். ‘அல்லாஹ்’ என்பது இறைவன் என்பதைக் குறிக்கும் அரபிச் சொல். ‘அல்லாஹ் அக்பர்’ என்பதன் உண்மையான பொருள் ‘அல்லா பெரியவன்’ என்பதல்ல; உண்மையில் அதன் பொருள் ‘இறைவன் பெரியவன்’ என்பதே. அந்த இறைவன் அனைத்து இறைகளையும் குறிக்கும்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஹிஜாப் அணியும் பெண்களுக்கு ஆதரவாக, சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் குரல் கொடுத்துள்ளார். “படிப்புகளுக்கும் ஹிஜாபுக்கும் இடையே தேர்வு செய்ய நம்மைக் கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. குறைவாகவோ, அதிகமாகவோ – தங்களுடைய ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்குச் செல்வதை மறுப்பது பயங்கரமானது” என்று கூறியுள்ளார், மலாலா.

கல்விக் கூடங்களுக்கு வரும் மாணவ மாணவிகள் மத அடையாளங்களையே தரித்துக் கொள்ளக்கூடாது என்றுதான் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்படுகிறது. சரி, விபூதி பூசுவது, பொட்டு வைத்துக் கொள்வது என்பதெல்லாம் கூட மத அடையாளங்கள்தான். அதையெல்லாம் இப்படிச் சொல்லித் தடுத்துவிட இயலுமா?

தாலியும் மத அடையாளம்தான்; திருமணமான பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்; படிக்கவோ பணிக்கோ செல்லக்கூடாது என்று சொல்வது காலத்தில் பின்னோக்கி செல்வதாகாதா?

சந்தனப்பொட்டும் திருநீறும் உத்திராட்சைக் கொட்டையும் மத அடையாளம்தான்! சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலையிட்டு அதோடு அரசு நிறுவனங்களுக்கு வருவது மத அடையாளம் இல்லையா! கடவுள் படங்களை அரசு நிறுவனங்களில் மாட்டி வைத்திருப்பதும் மத அடையாளம்தானே! அரசு நிறுவனக் கட்டிடங்களுக்குப் பூமி பூஜை போடுவதும், அரசு நிகழ்ச்சிகளில் குத்துவிளக்கு ஏற்றுவதும் மத அடையாளம்தானே! சேலையே மத அடையாளம்தான்!

இதையெல்லாம் தடுத்துவிட முடியுமா?

கர்நாடக சம்பவங்கள் மீள இயலா ஆழத்துக்கு நம்மைக் கொண்டு சென்றுள்ளது. அங்கே எரியும் தீ பரவி அத்தனையையும் எரித்துவிடும் நாள் நெருங்கி வருவதை உணர முடிகிறது. இதற்கு நாம் ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். அந்த தீ மேலும் பரவாமல் தடுக்க வேண்டும்.

என்ன சாப்பிட வேண்டும் என்பதில் தொடங்கி, என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதாக வளர்ந்து, இப்போது அடுத்தாக என்ன கேட்க வேண்டும், என்ன பார்க்க வேண்டும் என்பதிலும் தலையீடு தொடங்கியுள்ளது. சென்ற மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மீது தேச ஒற்றுமையை சீர்குலைத்தாக வழிக்கு பதிவு செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இரவு முழுவதும் தங்கவைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிங்காய் முராவன் கிராமத்தைச் சேர்ந்த நயீம், முஸ்த்கிம் என்கிற 16, 17 வயதுள்ள அந்த இரண்டு இஸ்லாமிய சிறுவர்கள் ஒரு பாகிஸ்தானிய பாடலை கேட்டுள்ளனர், அதுவும் வெறும் 40 வினாடிகளுக்கு மட்டுமே. அருகிலிருந்தவர்கள் இது பாகிஸ்தான் பாடல் என்றவுடன், அதை நிறுத்திவிட்டு மன்னிப்பும் கேட்டுள்ளனர். இருந்தாலும் அருகில் இருந்த ஆஷிஷ் என்கிறவர் காவல் நிலையம் சென்று புகார் அளித்து அந்த சிறுவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பாடலை பாடக் கூடாது, கேட்கக் கூடாது என்று சட்டம் எதாவது இருக்கிறதா?

நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது?

prabhu thilak

Amrutha

Related post