பம்பாய் சைக்கிள்

 பம்பாய் சைக்கிள்

அ. இரவி

ஓவியம்: ராபர்ட் காகோஹான்

 

வெள்ளிக்கிழமை; பதின்மூன்றாம் திகதியாக இருக்கிறது; நல்லதற்கல்ல!

ஐந்து மணிக்கே வேலைக்கு வந்துவிட்டேன். உணவு விடுதியின் இருக்கைகள் காலியாக இருக்கின்றன. இப்படி வெள்ளிக்கிழமைக்கு இருப்பதில்லை. வெள்ளி, சனி தினங்களில் உணவு விடுதி நிரம்பி வழிகின்றது என்று சொல்லமாட்டேன். ஆனால், இப்படியல்ல.

“வெள்ளி, சனி என்றல்ல; வியாழன், ஞாயிறு சேர்ந்த நான்கு நாட்களும் இந்த உணவு விடுதி நிரம்பி வழிந்தது” என்று அன்சாரி சொன்னார். அது அப்போ மூன்று வருடங்களுக்கு முன்னர். இந்த உணவு விடுதியின் ஆட்டிறைச்சிக் கறியும் தந்தூரிக் கோழியும் வெண்ணெய் படர்ந்த உள்ளி நாண் றொட்டியும் எப்சம் நகரத்து வெள்ளைக்காரர்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

இந்நகரத்தில் இப்போது எங்களைத் தவிர வேறு கறுப்பர் இல்லை!

“திங்கட்கிழமைகளில் இந்த உணவு விடுதி மூடப்படுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர், திங்கட்கிழமைகளிலும் வெள்ளைக்காரர் வந்து கதவைத் தட்டினர்.” இதைச் சொல்கிறபோது அன்சாரியின் கண்கள் ஒளிர்ந்தன.

முன்னர் இரண்டு வருடங்களாக வெள்ளைக்காரர்களின் ஆய்க்கினை தாங்காமல், “திங்கட்கிழமைகளிலும் உணவு விடுதியைத் திறந்து வைத்தோம்” என்று விகசித்த முகத்துடன் அன்சாரி சொன்னார். “அது எத்துணை அற்புதமான காலம்!” என்று அன்சாரி சொன்னபோது, தலைக்கு மேலிருந்த பாலத்தில் தொடருந்து தடதடத்துப் போயிற்று. பதினைந்து நிமிடத்திற்கு ஒருக்கால் அவ்வாறு போகிறது.

அன்சாரியின் ஒளிர்ந்த கண்களும் விகசித்த முகமும் இப்போ எங்கே போயிற்று என்று தெரியவில்லை.

எலும்பில்லாத ஆட்டிறைச்சி, ஐந்து கிலோதான் ஒருகிழமைக்கென இப்போது வாங்குகிறார் அன்சாரி. முன்னர் பத்துக் கிலோ என்று கிழமைக்கு இரண்டுமுறை வாங்கிய பை, அனாமத்துப்போய்க் கிடக்கிறது. முன்னர் வாங்கிய கோழியிறைச்சியின் அளவு கணக்கை அன்சாரியினால் இப்போது சொல்ல முடியவில்லை. இப்போது வாங்கும் கோழியிறைச்சியின் கணக்கு எனக்கே தெரிகிறது.

தாட்டியான உருவம் அன்சாரிக்கு. அடுப்புக்குள் ஆட்டிறைச்சி வேகிறபோது மாத்திரம் அவரது மூக்கு விடைக்கிறது. அன்சாரி, “சின்னப்பிள்ளையாக இருக்கையில், உயிருடன் ஒரு கிடாயைக் கண்டாலே வாய் ஊறியது” என்றார்.

அன்றைக்குத் தேவையான அளவு ஆட்டிறைச்சியை மாத்திரமே அன்சாரியின் கைகள் வெட்டுகின்றன. சிறிது சிறிதான இறைச்சித் துண்டங்கள். அத்தகைய துண்டங்களில்தான் ஊற வைக்கப்படும் மசாலா, சுவறும் வாய்ப்பு இருக்கிறது.

இறைச்சித் துண்டங்களை வாய் ஒடுங்கிய பானைக்குள் இட்டு அவிக்கிறார். வெறும் நீரினுள் மாத்திரம் அவிபடவில்லை. மஞ்சள் தூள், உப்பு, மிளகு அவற்றுள் இடிபடுகின்றன. கறுவா, கராம்பு, ஏலக்காய் முதலானவற்றையும் கையால் கொத்தாக அள்ளி, பானைக்குள் போடுகிறார்.

அவிபட்டுவிட்டன இறைச்சித் துண்டங்கள் என்ற பிறகு, ஒரு சருவச்சட்டியில் இறைச்சித் துண்டங்கள், இன்னொரு பெரிய சருவச்சட்டியில் இறைச்சி அவிந்த சாற்றுநீர், இரண்டும் அடுப்புக்குப் பக்கத்தில்.

ஆட்டிறைச்சியில் என்ன கறி வேண்டும் என்று யார் கேட்டாலும் அன்சாரி அடுப்புக்கு முன் நிற்கிறார். அது ஒன்றுக்கு மாத்திரமே அவர் நிற்கிறார். ஏனைய கறிகள் எதற்கும் அவர் அடுப்புகளைக் கண்டுகொள்வதில்லை. உடனேயே சிகரெட் பிடிக்க போகிறார், பனி கொட்டும் நேரமென்றாலும்; வெண் பனி!

இந்த உணவு விடுதியின் சிறப்புக்கறி என்றால் ஆட்டிறைச்சிக் கறியையே எல்லோரும் சொல்கின்றனர். அத்தகைய கறிக்குரிய ஆட்டிறைச்சித் துண்டங்கள் இந்த உணவு விடுதிக்குக் கிடைக்கின்றன; அன்சாரியின் கைப்பக்குவத்தையும் இங்கு சொல்லவேண்டும்.

அவித்த ஆட்டிறைச்சியின் சாற்றுநீரை தாச்சட்டிக்குள் சிறிது ஊற்றுகிறார். நெருப்பைக் கூட்டுதல், குறைத்தல் என்று குமிழ் திருகுவேலை. பிறகு என்ன கறி என்பதற்குரிய பதார்த்தங்களை இடுகிறார். அவித்த ஆட்டிறைச்சி துண்டங்களைக் கரண்டியால் அள்ளி தாச்சட்டிக்குள் போடுகிறார். பிறகும் நெருப்பைக் கூட்டுதல், குறைத்தல் என்று குமிழ் திருகுவேலை. சிலசமயம் தாச்சட்டிக்குள் நெருப்புப் படர்கிறது. சிலசமயம் தாச்சட்டியைத் தூக்கி அதனுள் உள்ள கறியை எறிந்து, பிடித்து விளையாடுகிறார்.

அருமையான ருசியுடன் ஆட்டிறைச்சியில் என்ன கறியோ அது தயார்!

 

ட்டிறைச்சியை உணவு விடுதிக்காக வன்னியன் கடை தருகின்றது. வன்னியன், விடிய மூன்று மணிக்கே ஆட்டுப்பண்ணைக்குப் போகிறார். அங்கு நூறு ஆடுகள் நின்றாலும் வன்னியனின் கண் சட்டெனக் கிடாய் ஆட்டில் நிலைக்கிறது. அது எப்படியோ என்று தெரியவில்லை. எல்லா ஆடுகளும் ஒரே மாதிரியாகத்தான் எல்லோர் கண்களுக்கும் தெரியும். வன்னியனுக்குக் ‘கிடாய் இதுதான்’ என்று உறுதிப்படத் தெரிகிறது. ஒருநாளைக்கு இரண்டு கிடாய்களைப் பண்ணைக்காரனிடம் வன்னியனின் கை, சுட்டுகிறது.

அன்சாரியின் ‘பம்பாய் சைக்கிள்’ உணவு விடுதிக்காக, ‘ஹலால்’ ஓதிய கிடாய் இறைச்சி அவ்வாறு வந்து சேர்கிறது.

வெள்ளி பின்னேரத்துக்கும் சனி பின்னேரத்துக்கும் நான் வந்து சேர்கிறேன். ‘உத்தரவுக்கு’ வரும் உணவுத் தேவையை அவ்வவ் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல.

கோடைக்காலத்துக்குத்தான் அவை பின்னேரங்கள், பனிக்காலத்துக்கு இரவென்றும் சொல்லமுடியாது; நள்ளிரவு!

முப்பத்தாறு இருக்கைகள் கொண்ட அன்சாரியின் ‘பம்பாய் சைக்கிள்’ உணவு விடுதியில் ரஹீம், ஒமர், சைமன், தாஹா என்ற நான்குபேரும் வெள்ளி, சனி, ஞாயிறு மாத்திரம் வேலை செய்கின்றனர். ஏனைய நாட்களில் இவர்களில் இருவர் மாத்திரமே. எல்லா நாட்களிலும் தாஹா. ஏனையோர் மாறிமாறி வருகிறார்கள்.

வெள்ளி, சனி தினங்களில் இரவு ஏழு – எட்டு மணிக்குள் முப்பது இருக்கைகளாவது நிரம்பிவிடுகின்றன. அன்சாரிக்கு அது போதும். இரண்டு வீடுகளை வாங்கி, இரண்டு மகள்மாரைக் கலியாணம் முடித்துக் கொடுத்து, அவர்களை தனது நாட்டுக்குச் செல்வச் செழிப்புடன் அனுப்பி, ஒரு மகனை மருத்துவராக்கி… அன்சாரி நிரம்பவும் களைத்து போய்விட்டார்.

களைப்பு யாவும் உணவு விடுதிக்குள் இருக்கும்போதுதான் அவரைப் பற்றிப் பிடிக்கிறது. அதனால் அவர், பனிக்காற்று வீசும் குளிர் இரவாயினும் மழை சிணுங்கும் எந்தப் பொழுதாயினும் சிகரெட் பிடிக்க வெளியே போய்விடுகிறார்.

ஆறு சினிமா மண்டபங்கள் கொண்ட ‘ஓடியன் சினிமா’வைப் பாராமல் அவரால் சிகரெட் பிடிக்க முடிவதில்லை. அவருக்கு சனத்தைப் பார்க்க வேண்டும்; விதம்விதமான சனங்கள்! ஏதோ ஒரு சினிமா மண்டபத்தில் திரைப்படம் முடிந்து வெளியேறும் மக்களைத் தீவிரமாகக் கவனிக்கிறார். அப்போதுதான் சிகரெட்டின் சுவையை, கண்கள் விரிய அவரால் அனுபவிக்க முடியும். அப்போது அவருடன் நானும் ஏதாவது பேசிக்கொண்டு நின்றால் அது அவருக்குப் பேரானந்தம்.

சினிமா மண்டபத்திலிருந்து வெளியேறும் தனித்த, சோடியான எவரும் அன்சாரியின் உணவு விடுதியில் ஏறுவதில்லை. அநேகமானோர் வீதியைக் கடந்து ‘ரேக் எவே’யில் பெட்டி கட்டிப் ‘பீட்ஸா’ கொண்டுபோகிறார்கள். நின்றான நிலையில் ‘கெபாப்’ உண்பவர்களும் உண்டு. சிலரது கைகளில் ‘பாஸ்ரா’ இருக்கிறது.

அன்சாரி இவர்களைத் திருப்தியுடன் இரசிப்பதைப் பார்ப்பதில் எனக்கு ஆனந்தம்! “இஃதல்லவோ வாழ்க்கை!” கன்னத்தில் குழிவிழ அன்சாரி சொல்வார். கடைவாயில் ஓட்டைப் பல் அப்போது தெரியும். கன்னத்தில் குழி, ஓட்டைப் பல்லால்தான் விழுகிறது.

சிலவேளைகளில் இவ்வாறும் நிகழ்வதுண்டு: சினிமாவைப் பார்த்துவிட்டுக் குடும்பமாகவும் சிலர் உணவு விடுதிக்குள் நுழைவர். குடும்பமென்றால் ஆகக்கூடினால் நான்கு பேர்!

தமது வெள்ளைக்கைகளால் நான்கைந்து படபடக்கிற புதுத் தாள்க்காசுகளை அவர்கள் கொடுக்கிறபோது, அன்சாரி பூரித்துப் போய்விடுவார். மீதிப் பணத்தை அவர்கள் வாங்குவதை நான் காண்பதில்லை. பரிசாராருக்கான உபசாரக் காசு அது.

உபசாரக் காசை உண்டியலுக்குள் மறக்காமல் போட்டுவிடுவார், அன்சாரி. மாதமுடிவில் தனக்கென ஒரு பணம் எடாது, அனைவருக்கும் பணத்தைப் பகிர்ந்து கொடுப்பார்.

எனக்குக் கிடைப்பதை என்னிரு பிள்ளைகளுக்கும் நான் பகிர்ந்து கொடுத்திடுவேன். அப்போது மாத்திரம்தான் என் பிள்ளைகளுக்கு நான் ஏதாகினும் வாங்க காசு கொடுக்கிறேன்.

பிரகாசமான விளக்குகள் கொண்ட காரை, விருந்துண்ட குடும்பத்தினர் ஒட்டிச் சென்றபிறகு, பெரிய கிளாசில் ‘பியர்’ நிறைத்து உறிஞ்சுவார், அன்சாரி. ஒன்றுக்கு இரண்டு சிகரெட்டுகள் அவரது வாயில் பொருந்திவிட்டு, விரல் சுண்டுகையில் பின் மீன்போலத் துள்ளிப் பாயும். இந்நேரத்தில் தந்தூரிக் கோழிக்கால் அவருக்குத் திருப்தியில்லை. ஆட்டின் நெஞ்செலும்பு இடையிட்ட இறைச்சித் துண்டங்களைக் காந்துவார்.

இந்நேரத்தில் அவருக்கு முன்னே நான் அமரவேண்டும். ‘டிகாக்சனில்’ கோப்பி கலந்து என் முன் வைப்பார்; கறுப்புக் கோப்பி! “ஒரு கரண்டி சீனியும் அதிகம். கோப்பியின் ருசியை எப்படி நீ அறிவாய்? கசப்பும் நல்ல சுவை என்று நீ உணர வேண்டாமா?”

இதைச் சொல்லிவிட்டு என் கண்களைப் பார்த்தபடி இருப்பார். பிறகு அவரது வாய் முணுமுணுக்கும்: “..முட்டாள்..”

அவர் யாரை முட்டாள் என்று சொல்கிறார் என்பதை நான் அறியேன்! அதற்கு தேவையுமில்லை. அன்சாரி எப்போதும் சொல்கிற கவிதையை அப்போது சொல்வார்:

“அகிலத்தின் அகன்ற ஆகாயம் பிளந்து/ நிலா சூரியன் கோள் கிரகம் தாண்டி/ வானைக் குத்தி புவியைக் கிழித்து/ இறைவனின் புனித இருக்கையைத் தள்ளி/ இதோ நான் எழுந்துள்ளேன்..”

சொல்லியபடி அன்சாரி எழும்பி நிற்பார். அப்போதும் அவரது கண்கள் என் கண்களை உற்றுப் பார்த்தபடி. பிறகு முணுமுணுப்பாகச் சொல்லியபடி இருப்பார்: “…இதோ நான் எழுந்துள்ளேன்…”

இது அன்சாரி எழுதிய கவிதை அல்ல; அது எனக்குத் தெரியும். கவிதை எழுதுகிற முகமா இது! “யார் எழுதிய கவிதை?”  கேட்பேன்.

என் கண்களைப் பார்த்தபடியே சொல்வார்: “.. இதோ நான் எழுந்துள்ளேன்..”  பிறகு அவர் எழும்புவதே இல்லை.

நான் எழுந்து போவதற்கு எனக்கு வேலை வந்துவிடும். எட்டுமணிக்குப் பின்னர் அநேகமாக யாரும் உணவு விடுதிக்குள் நுழைவதில்லை. உள்ளே இருப்போரும் ஒன்பது மணிக்கு முன்னர் அகன்று விடுவர். அவ்வேளைதான் எனக்கு வேலை!

 

ஹீம் துண்டை நீட்டுவான். ‘30, Frenchley Park Road, Epsom, KT19 8LN.’

கையிலிருக்கும் நேவிகேட்டரில் விலாசத்தை இடுவேன். இடம் தெரிந்துவிடும். ஆகமிஞ்சினால் மூன்று மைல்.

உணவுப் பண்டத்தின் பெறுமதி: £36.80. உணவுக் கூடையை எடுத்துக்கொண்டு காரில் புறப்படுவேன்.

Frenchley Park Road, இதோ! முப்பதாம் இலக்க வீடு எங்கு? காரை உருட்டிக்கொண்டு திரிந்தேன். அடுத்தடுத்து இங்கு வீடுகள் கிடையாது. கால் ஏக்கர் இடைவெளிக்கு ஒரு வீடு.

‘வீடு’ என்று அதனைச் சொல்லக்கூடாது. இந்த பணக்காரர்கள் அதற்காக மூக்கு நுனிக்குமேல் கோபித்து விடுவார்கள். நாங்கள் அதைச் சொல்லவேண்டும், எப்படி?

“பங்களா!”

நகரம் தாண்டி ஒருமைல் ஆனாலே பங்களாக்கள்தான்; கால் ஏக்கர் இடைவெளியில்!

காரை உருட்டிக்கொண்டு இலக்கம் தேடக் கண் விடுவதாக இல்லை.

‘கிளினிக்’கில் கண்ணைக் காட்டுவதற்கு அஃது இலவசம்.

காட்டியாயிற்று.

தூரப்பார்வை மங்கல்; கிட்டப்பார்வை கலங்கல்! மூக்குக் கண்ணாடிக்குக் குழி வில்லையையும் குவி வில்லையையும் ஒருசேரச் சட்டகத்தில் பொருத்த வேண்டும். எந்தச் சட்டகமும் நூறு பவுண்ட்ஸுக்குக் குறைந்ததாக இல்லை.

காரை நிறுத்தி, இறங்கி, ஒவ்வொரு வீடு ஏறிப் படலையைத் திறந்து, சுவர்ப்பக்கம் பார்க்கிறேன்.

அய்யய்யோ.. ‘படலை’ என்றும் சொல்லக்கூடாது; “கேட்!”

நான் சுவர்ப்பக்கம் பார்க்கிறேன். என்னைக் கண்ட உடன் ‘சென்ஸர் லைற்’ கண்ணை திறக்கிறது, மிகுந்த பிரகாசத்துடன்! அந்த ஒளிவெள்ளத்தில் நான் ஒரு புள்ளியாகத் தனித்துப்போய். சூழக் கடும் இருள்!

கண்களைப் பூஞ்சிச் சுவரைப் பார்க்கிறேன். அது இலக்கம் 16 என்று சொல்லிற்று.

‘கள்ளன்’ என நினைத்து பதினாறாம் இலக்க பங்களாக்காரர் போலீசுக்கு அறிவிக்கலாம். அல்லது ஓநாயைச் சூக்காட்டி விடலாம். (அங்குள்ள நாய்களை நான் ஓநாய் என்றே நம்புகிறேன்) ஏனெனில், அவர்கள் உணவுப் பண்டத்திற்கு ‘உத்தரவு’ தரவில்லை. ஆகவே வந்தவன் கள்ளன்! ‘உத்தரவு’ தந்தது, பங்களா இலக்கம்: 30!

உணவுப் பண்டமும் சூடு ஆறிக்கொண்டு போகிறது. முப்பதாம் இலக்க பங்களாக்காரரின் பொறுமை எந்தளவு என்று எனக்குத் தெரியவில்லை. கூடையுடன் என் மூஞ்சையில் உணவுப் பண்டத்தை எறிவார்களோ? ‘திருப்பிக்கொண்டு போ’ என்று சொல்லிவிட்டால் அன்சாரிக்கு முன்னே எப்படிப் போய் நிற்பது? ரஹீம், வந்த சிரிப்பை அடக்கி முகம் விடைப்பான். என்மீது அனுதாபப் பார்வையை தாஹா பார்த்தால் என்னால் தாங்க முடியாது.

அநேகமாக இதுதான் நிகழும்: ‘உணவின் சூடு மிகவும் ஆறிவிட்டது. பணம் ஒன்றும் தரமுடியாது. நாங்கள் அங்கு போனில் பேசிக் கொள்கிறோம். உணவைத் தந்துவிட்டுப் போ! இனி எம்மால் சமைக்க முடியாது.’

£36.80. இலேசான காசல்ல. அன்சாரி நொந்து போய்விடுவார். அன்சாரி மனம் கலங்கினால் நான் துடித்துப் போய்விடுவேன். அன்சாரி என் அப்பாபோல இருக்கிறார். அப்பா சுருட்டு; அன்சாரி சிகரெட்! அப்பா இப்போது உயிருடன் இல்லை.

நிகழ்ந்தது வேறு. முப்பதாம் இலக்கத்தில் இரக்கமும் தயவும் கருணையும் வழிந்து கொட்டிக் கிடந்தன. ஆனால், பங்களாவின் முன்னே நின்ற பைன் மரங்களும் ரெட்வூட் மரங்களும் – இரக்கம், தயவு, கருணை – யாவும் இந்த பங்களாவில் இருக்கின்றன என்று எனக்கு சொல்லவில்லை.

முப்பதாம் இலக்க பங்களா கண்டு, வாசல் மணியை அழுத்தினேன். உள்ளே சங்கீதம் பாடியது. திறந்தவர் அறுபது வயது மதிக்கத்தக்க மனையாள். கண்ட உடனேயே என் நெஞ்சைத் தொட்டுவிட்டது, அவரது புன்னகை.

சாடையாக இருண்டிருந்த பங்களாவின் வாசலில் இந்த வார்த்தைகள், மலர்கள் உதிர்வதுபோல உதிர்ந்துகொண்டே இருந்தன.

“பசிக்கிறது. பார்த்துக்கொண்டு இருந்தோம். பரவாயில்லை. ‘பம்பாய் சைக்கிள்’ உணவு விடுதியின் சாப்பாடு மிகருசி. அதற்கு எவ்வளவு நேரமும் காத்திருக்கலாம். இந்த வீட்டைக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமம்! எப்படிக் கண்டு பிடித்தாய்? எங்களுக்கு நீ பெரிய உதவிதான் செய்திருக்கிறாய். மிகமிக நன்றி. வீட்டில் எல்லோரும் உண்ணக் காத்திருக்கிறார்கள். உன்னையும் மினைக்கெடுத்த விரும்பவில்லை. பணம் எவ்வளவு? £36.80ஆ? இந்தா… மீண்டும் மிகமிக நன்றி. ஆண்டவனின் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு. எனது மகளின் பிள்ளைகளுக்கு இன்று நல்ல உணவு கொடுக்கப் போகிறேன். அதற்காகவும் நன்றி. இந்தா.. இது பிரத்தியேகமாக உனக்கு. தயவு செய்து வாங்கிக்கொள்.”

கழுத்தின் தசைகள் கொழிக்க, சொன்ன அந்த மனையாளின் முகம் புளகித்துக் கிடந்தது. அவரின் இரு கைகளையும் பிடித்து என் கண்ணில் ஒற்றவேண்டும்போல. தனது இரண்டு கைகளையும் வயிற்றில் வைத்து, புன்னகைத்தபடி இருந்தார், மனையாளின் துணைவர்.

‘இந்தா..’ என்று முன்னர் தந்தது, உணவுக்கான பணம் நாற்பது பவுண்ட்ஸ். பின்னர் ‘இந்தா..’ என்று எனக்குத் தந்தது, பத்துப் பவுண்ட்ஸ்.

 

தொப்பலாய் நனைந்து வந்தேன். கோலா ஊற்றித் தந்தான், ரஹீம். “கோப்பி கிடையாதோ?”  கேட்டேன்.

“இனிக் கோப்பி மிசினைக் கொதிக்க வைக்க வேண்டுமே.”

“சரி பரவாயில்லை, கோலாவைத் தா.”

சட்டென அருகில் சிகரெட் புகை நாற்றம் நகர்ந்து மூக்கில் ஏறியது. உணவு விடுதிக்குள் சிகரெட் புகையாதே!

இல்லை; அது சிகரெட் நாற்றம். அன்சாரியின் சட்டையிலிருந்து என் அனுமதி இல்லாமல் மூக்கில் நுழைந்துவிட்டது. “இரு இரு”  என்றார் அன்சாரி.

“நான் உனக்குக் கோப்பி வைத்துத் தருகிறேன், குசினிக்குள் போய்த் தலையைத் துடை.”

நான் வேண்டாம் என்று ஏதும் மறுக்கவில்லை. குளிருக்குக் கோலாவா? குளிருக்குக் கோப்பிக்கு நிகர் ஏதும் இருக்கா?

இந்த வெள்ளிக்கிழமைக்கு மழை பொழிகிறது. மழைக்கு, வீதியில் இறங்கவே எவரும் கருதார்; உணவு விடுதியில் ஏறுவரா? இன்று, ‘உணவு கொண்டு வா’ என்று உத்தரவு அதிகம் வரலாம்; வரும்!

வெள்ளிக்கிழமையில் மழையினால் வியாபாரம் பாழாகின்றது. அன்சாரிக்கு அஃதொன்றும் கவலை கிடையாது. வெளியில் மழை; உணவு விடுதியில் சனமில்லை! இவற்றால் அன்சாரியிடம் பியரும் இல்லை.

என் முன்னும் தன் முன்னும் கோப்பி வைத்தார், அன்சாரி. “சாப்”  கூப்பிட்டார். அவ்வளவு சத்தம் வைத்திருக்கத் தேவையில்லை. தொடருந்து தடதடத்துப் போவது ஒன்றைத் தவிர, மழையின் சடசடப்பு உள்ளுக்குள் கேட்காது.

“நீ என்ரை மகன்தானே?”  அன்சாரியின் குரல் மெதுவாக ஊர்ந்து என் காதில் ஏறியது.

மறுபேச்சு இலாது, ஏதொன்றும் யோசியாது, “ஓம்!”  என்றேன்.

“நீ என்னைத் தந்தை என்று நினைக்கிறியோ, எனக்குத் தெரியாது. நான் உன்னை மகன் என்றே நினைக்கிறேன்.”

“ஓம்.”

“எனக்கு ஒரு மகன் இருந்தான். இப்போது அவன் இறந்துவிட்டான். அப்படித்தான் நான் நம்புகிறேன்.”

“ஓம்.”

“அவன் வெள்ளைக்காரியைத் திருமணம் செய்து போய்விட்டான். அது எங்களுடைய பண்பாட்டுக்கு ஒத்துவராது.”

“ஓம்.”

“அவனுக்குப் பன்னிரண்டு வயதில் அவனது அம்மா இறந்துபோனாள். பிறகு அவனுக்கு அம்மா, அப்பா எல்லாம் நான்தான்.”

“ஓம்!”

“அவனைப் பள்ளிக்கூடத்தில் நான் கொண்டுபோய் விடுவேன். அவன் என்னை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குள் போவான். அப்போது என் துக்கம் மிகமிகப் பெரிது.”

“….”

“அவனது அம்மாவாக நான் எப்படி மாற முடியும். அவனுக்கு நான் என்ன செய்ய வேணும். அம்மா இல்லாத மகனை நினைந்து நான் அழாத நாள் கிடையாது.”

“….”

“அவன் இப்ப மருத்துவனாக இருக்கிறான். அப்படி நான் வளர்த்தேன். மருத்துவன். ம்ம்…. மருத்துவன். மக்களின் நோயைத் தீர்க்க அவனுக்கு முடியுது. இந்த அப்பனின்ரை நோயைத் தீர்க்க அவனுக்கு இயலாமல் இருக்கிறதே.”

“….”

“எனது மகள்மார் இங்கிருந்தால் இப்படிச் செய்வார்களா? ம்ம்… உன்னைத்தான் கேட்கிறேன். மகள்மார் இருந்தால் இப்படிச் செய்வார்களா?”

“ம்ம்…”

“இருபது வருசங்களுக்கு மேலாக நான் குசினிக்குள் நின்று சமைத்ததில் என் முழங்காலில் ஓட்டை விழுந்துவிட்டது. ஒரு நிமிசம் என்னால் நிற்க முடிவதில்லை. அதுதான் மகன் போய்விட்டான். என்னுடன் சீவிப்பது கஸ்ரம் என்று அவன் போய்விட்டான். வெள்ளைக்காரியையும் கூட்டிக்கொண்டு போய்விட்டான்.”

“….”

“மகன்… நீ என் மகன்தானே?”

“ஓம்.”

“மகன்… நான் எனது நாட்டுக்குப் போகவேணும். எனது மகள்மாருடன் நான் போய் வாழவேணும். கேட்டியா மகன், எனது மகள்மாருடன் நான் போய் வாழவேணும்.”

எங்கிருந்தோ திடுமென ஒரு குரல் வருகிறது. “எப்படிப் போவாராம். ம்…. எப்படிப் போவாராம்.”

கிளாஸ் கழுவுகிற ‘னிங்…. னிங்….’ ஒலிகளுக்கிடையே, ரஹீமின் குரல்!

“அது நான் போவேன். உனக்கு ஏன் இவ்வளவு பொறாமை. உனக்குரிய பங்கைத் தராமலா போகப்போகிறேன். நிச்சயமாகத் தந்துவிட்டுத்தான் போவேன். உனது வாலைப் போட்டு ஆட்டாதே. நீயே காட்டிக்கொடுப்பாய் போல இருக்கிறது. ஒன்றை தெரிந்துகொள், உனது பங்கும் உனக்குக் கிடைக்காமல் போய்விடும். ம்ம்…. கடைசி எச்சரிக்கை.”

அன்சாரியின் இந்த வார்த்தைகள் எவையும் ரஹீமைத் தொடவில்லை. ‘ஹீ…. ஹீ….’ என்று தொடர்ந்து சிரித்தவண்ணம் இருந்தான்.

குடித்த கோப்பி, அன்சாரிக்கு சிறிது கோபத்தைத்தானும் கொடுக்கிறதாக இல்லை. அரைக்கிளாஸ் பியர் பாய்ந்தாலாவது ஒரு கண் முறைப்புக் கொடுத்திருப்பார். ஒரு பெக் வொத்கா எடுத்திருந்தால் சொல்லவே தேவையில்லை. ரஹீம் எந்தக் கிளாஸையும் கழுவ வேண்டிய தேவை வந்திருக்காது.

கண்ணை மூடி அன்சாரி இருக்கிறார். ஒரு பெருமூச்சு எழுகிறது. கோப்பி, கோப்பையில் ஒரு துளிதானும் இல்லை; முழுவதுமாக உறிஞ்சிக் குடித்துவிட்டார்.

எனக்குக் கோப்பி கசக்கிறது. நூறு துளிகளையாவது கோப்பிக் கோப்பையில் மிச்சம் வைத்திருக்கிறேன். இனிக் குடிப்பேனோவும் தெரியாது.

‘சர்சர்’ என்று சீறுகிறது அடுப்பு. அடுப்பிலும் நெருப்பு; சமைபடும் பதார்த்தத்தின் மீதும் நெருப்பு. உணவை மேலே எறிந்து எறிந்து தட்டில் ஏந்துகிறான், தாஹா. நெருப்புடன் உணவுப் பதார்த்தம், மேலே போய்க் கீழே வருகிறது.

“மகன், நான் உனக்கு ஒன்று சொல்கிறேன்.” என்ற வாக்கியம் திடுமென எனக்குக் கேட்டது. அன்சாரி நித்திரையாகி விட்டார் என்று நினைத்திருந்தேன்.

“மஹ்முத்! உலகத்துக்கு அவர் ஒருவர்தான் தெய்வம். மஹ்முத்! எனக்கு மஹ்முத்தான் உலகம். மஹ்முத்துக்குத் தெரியும், எது சரியென்று. அவர் ஒருவருக்குத்தான் தெரியும், எது நல்லதென்று. அவர் ஒருவரால்தான் யாவற்றையும் தீர்க்கதரிசனமாக பார்க்க முடியும். இந்த உலகத்தில் ஒரேயொரு தீர்க்கதரிசிதான் இருக்கிறார்: மஹ்முத்! ஆனால், அவர் இந்த உலகத்தில் இல்லை; இந்த உலகை பார்த்தபடி இருக்கிறார்.”

இதைச் சொல்கையில் அன்சாரியின் முகம் விகசித்துக் கிடந்தது. தனது கோப்பிக் கோப்பையை ஒருக்கால் தூக்கினார்; ஒன்றுமில்லை என்று வைத்துவிட்டார். என் கோப்பிக் கோப்பையைப் பார்த்தார். கொடுத்தால் மீதியைக் குடித்துவிடுவார்போல் இருந்தது.

“மகன், கேள் இதை. மஹ்முத் இல்லையென்றால் மனிதர்கள் எல்லோரும் நிலத்தை முட்டுமளவுக்குத் தாடி மீசை வளர்த்து காட்டுமிராண்டிகளாக அல்லாடிக்கொண்டு திரிவார்கள். ஓமா இல்லையா?”

எனக்கு இதற்குப் பதில் தெரியவில்லை. என்றாலும் “ஓம்” என்றேன்.

அன்சாரி திருப்திப்பட்டுக் கொண்டார். அவரது கண்கள் தன்பாட்டில் மூடின.

திடீரென விழித்துக்கொண்டு, “மகன் இன்று இன்னும் சிறிது நேரம் நிற்பாயா?” என்று கேட்டார்.

“ஏன்?”

“மழை பெய்கிறது. வீட்டிலிருந்தபடியே உணவுக்கு உத்தரவு தருவார்கள். நீ விநியோகிக்க வேண்டும். எந்தநாள் ஏமாற்றினாலும் வெள்ளிக்கிழமை நாள் ஏமாற்றாது. வெள்ளிக்கிழமை, மஹ்முத்துவின் புனிதத் திருநாள். புரிகிறதா. சிறிது நேரம் நின்றுவிடு.”

“அதற்கென்ன பரவாயில்லை.”

“நல்லது. இன்னும் ஒரு கோப்பை கோப்பி குடிக்கிறாயா?.”

“வேண்டாம்.”

தனக்கு ஒரு கோப்பை கோப்பி கலந்துகொண்டு வந்தார். வந்தவுடன், “மகன் எனக்கொரு உதவி செய்வாயா?” என்று கேட்டார். அதுதான் நிற்கிறேன் என்றுவிட்டேனே! வேறென்ன கேட்கப்போகிறார்?

“மகன், இந்த உணவு விடுதியை எடுத்து நடத்தேன்” என்று திடுமெனச் சொன்னார். என்னுடன் என்ன விளையாடுகிறாரா?

அன்சாரிக்கு எவ்விதப் பிரக்ஞையும் இல்லை, அப்படியே சொல்லிக்கொண்டு போகிறார்.

“இந்த உணவு விடுதியைக் குறைந்த விலையில் உனக்குத் தருகிறேன். நாற்பதினாயிரம் பவுண்ட்ஸ்தான். உடன் அவ்வளவு காசையும் நீ தரவேண்டுமென்று இல்லை. முதலில் பத்தாயிரம் பவுண்ட்ஸினைத் தா. இந்த உணவு விடுதியை உனது பெயருக்கு மாற்றிவிடுகிறேன். இதை வைத்து நீ வங்கியில் கடனுக்கு விண்ணப்பி. எப்படியும் ஒரு மாதத்தில் கடன் கிடைத்துவிடும். நீ என்னிடம் மீதிப் பணத்தைத் தந்துவிடலாம். யோசி. மினைக்கெடுத்தாதே.”

என் மீது இரக்கம் இல்லாது பேசுகிற அன்சாரி என் முகத்தில் பேய் அறைந்ததை கண்டார்.

“நீ இங்கிலாந்தில் எவ்வளவு காலமாகச் சீவிக்கிறாய். பத்து வருசமாக. ம்…? உன்னால் இயலாதா? முதலில் பத்தாயிரம் பவுண்ட்ஸ்தான். பிறகு வங்கி உனக்குத் தேவையான அளவு பணம் தரும். இங்கு வேலை செய்பவர்கள் தொடர்ந்து உன்னுடன் நிற்பார்கள். நீ எதற்கும் அஞ்ச வேண்டாம். ரஹீம்தான் குழப்படி. தாஹா உனது வலது கையாக நிற்பான். எதற்கு யோசிக்கிறாய்.”

எனக்கு முகம் மேலும் மேலும் இருண்டுகொண்டு போயிற்று. வெளியில் மழை பெய்கிறதா, இல்லையா? உள்ளே வியர்வை ஒழுகுவதை உணர்ந்தேன்.

“நாற்பதினாயிரம் பவுண்ட்ஸ். ம். எனக்குள்ள கடன்களைத் தீர்த்துவிட்டு, பத்தாயிரம் பவுண்ட்ஸுடன் ஊருக்குப் போய்விடுவேன். அங்கு சீவியம் நடத்த அது எனக்குத் தாராளம். இரண்டு மகள்மார் வீட்டிலும் மாறிமாறி நிற்பேன். பேரப் பிள்ளைகளுடன்! அது எவ்வளவு சந்தோசம் தெரியுமா? மகன் யோசித்துப்பார். நாற்பதினாயிரம் பவுண்ட்ஸ்தான். மற்றவர்களுக்கு என்றால் ஐம்பதினாயிரம் பவுண்ட்ஸுக்கு மேல்தான் சொல்வேன். உனக்காகத்தான் நாற்பதினாயிரம் பவுண்ட்ஸ்.”

இதைச் சொல்கையில் அன்சாரியின் முகம் பூப்போல் விரிந்தது. கையில், இதோ நாற்பதினாயிரம் பவுண்ட்ஸ் கிடைத்துவிட்டது. இரண்டு மகள்மாரிடமும் போய்விட்டார். அதனால் ஏற்பட்ட திருப்தியை அவர் முகத்தில் கண்டேன்.

“மகன் யோசித்துப் பார்! நாற்பதினாயிரம் பவுண்ட்ஸ்தான்!”

வெளியில் மழை. உணவு விடுதியில் எவரும் இல்லை. யாரினதோ உத்தரவுக்கு தாஹா உணவு சமைக்கிறான். நான்தான் கொண்டுபோக வேண்டும். ஒமர் வரவில்லை. சைமன் தாஹாவிற்கு உதவியாக நிற்கிறான். ரஹீம் எதையோ சுத்தப்படுத்துகிறான். ஆனால், அவனது காதுகள், நாமிருக்கும் மேசையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

ரஹீம் வாயைத் திறந்தான்: “இவர் எப்படி ஊருக்குப் போவார்? இவரால் ஊருக்குப் போக முடியாது!”

“அந்தக் கதை உனக்கு எதற்கு? இங்கு ஒருவருக்கும் தேவையில்லை, அந்தக் கதை” என்று எரிந்தார், அன்சாரி. “அவரவர், அவரவர் பாடுகளை பார்க்க வேண்டியதுதான்” என்று முடித்தும் வைத்தார். அப்போதும் தலைக்குமேலே தடதடத்துப் போனது தொடருந்து.

அன்சாரி எழுந்து மலசலக்கூடம் போய் வந்தார். வெளியில் போய் ஒரு சிகரெட் பிடிக்க மழை விடுகிறதாய் இல்லை. இன்னொரு கோப்பி குடிக்க முடியாது. நாக்குக் கசந்து தடித்துப் போய்விட்டது.

அன்சாரி மேசையில் என் முன்னே வந்தமர்ந்து தலையைத் தொங்கப்போட்டுக் கண் மூடினார். அப்படியே சொன்னார்: “அதெல்லாம் நிறையக் காலம் போய்விட்டது. எவ்வளவு வருடங்கள் ஆய்ச்சு…. ம்.”

அவருக்குக் கைவிரல்களும் கால்விரல்களும் போதவில்லை. “ம்…. ம்….” என்று முனகிக்கொண்டே இருந்தார். பிறகு கொஞ்சம் பெலத்தாகவே அவரது வாய் முணுமுணுத்தது: “எழுபத்தொன்றிலிருந்து எண்பத்தொன்று, பத்து வருசம். தொண்ணூற்றொன்று, இருபது. இரண்டாயிரத்தொன்று… ம்…. முப்பது. ம்… இப்ப முப்பத்தைந்து வருசங்களுக்கு மேலே ஆய்ச்சு. இவற்றையெல்லாம் யார் நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறார்கள்.”

இரண்டு கைகளாலும் முகத்தை மூடிப் பிறகும் சொல்லலானார்: “மேலும் நான் கிழவன்… படு கிழவன்.”

 

நான் ஆறாவது முறையாகக் கேட்காத புதுக்கதை இப்போது என் காதை எட்டுகிறது. அன்சாரி, “உன் வேலையை நீ பார்” என்று ரஹீமை ஏசினார். அதன்பிறகு உணவு விடுதியினுள் ஓசை என்று ஏதுமில்லை. இல்லை, அப்படிச் சொல்லக்கூடாது. பாடல் ஒலிக்கின்றது.

யாவரிடமும் மர்மத்தின் நிழல் கவிந்தாற்போல் நீண்ட மௌனம். எதையும் பார்க்க விரும்பாததுபோல கண்ணை மூடி இருந்தார் அன்சாரி. உணவு விடுதியை நிறைத்துவிடுகிறது வங்காளப் பாடல்!

“அத்தனையும் காதல் பாடல்!” மௌனத்தைக் கீறி அன்சாரி தலையை நிமிர்த்தினார். பாடலின் மெட்டினை அவரது வாய் முணுமுணுத்தது. அப்பாடல் என்ன கவிதை கொண்டிருந்தது என்று ஆங்கிலத்தில் என்னிடம் சொன்னார் அன்சாரி: “என் இதயத்தைச் சுருக்கினாய் / உருகினேன் / எரிந்தாய் / உறங்கினோம். விடிகிறது.”

காதல் பாடலில் அன்சாரியின் நெஞ்சு உருகிக் கொண்டிருக்கிறது போல. அதிலிருந்து மெல்லக் கிளர்ந்து எழுந்தார். இசை அவரது மனசை இளக வைத்துவிட்டது. ‘என்ன புதுக்கதை’ என்று நான் கேட்கவில்லை. அதைச் சொல்ல அவருக்குப் பியரும் தேவையாய் இருக்கவில்லை. மழை தூறிக்கொண்டிருந்தது அவருக்குப் போதுமாய் இருந்திருக்க வேண்டும்.

“‘முக்தி பாஹினி’ தெரியுமா உனக்கு? கேள்விப்பட்டிருக்கிறாயா?” கேட்டார் அன்சாரி.

கேள்விப்பட்ட பெயராகத்தான் இருந்தது. நானொன்றும் சொல்லவில்லை, அவரின் முகத்தைப் பார்த்தபடி இருந்தேன்.

“முக்தி பாஹினி. முக்தி பாஹினி. என்னுடைய உயிரின் இழை அது! எனது மாத்திரமல்ல, என்போன்ற இளைஞர்களின் உயிரிழை அது! எங்கள் தேசத்தின் ஆன்மா; முக்தி பாஹினி! எங்கள் தேசத்தின் – பங்களாதேசத்தின் விடுதலைக்காக. விடுதலைக்காக ஆயுதம் தூக்கி போராடிய இயக்கம் அது: முக்தி பாஹினி! தெரியுமா உனக்கு? ‘முக்தி பாஹினி!’ அந்த இயக்கத்திலிருந்தவன் நான்! ‘முக்தி பாஹினி!’ அந்தச் சொல்லை உச்சரிக்கவே நான் புனிதமடைகிறேன்!”

அன்சாரியின் கண்கள் விரிந்துகொண்டு போகிறது. என்னை உற்றுப் பார்க்கிறார், ஒரு நிமிசம்தான். அவரது கண்கள் என்னை விட்டு அகல்கின்றன. தனது நாடிக்கு வலது கையைக் கொடுத்தார், சொல்லலானார்:

“வன்ம மனமுடைய இரண்டு இலட்சம் பாகிஸ்தான் இராணுவம். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஆண்களென்றால் சூடு; பெண்களென்றால் வன்புணர்வு; சிறுவர், குழந்தைகள் என்றால் கத்திக்குத்து!

அந்த இராணுவத்தை ஊக்குவிக்கக் கொடுங்கோன்மையான சுல்பிகார் அலி பூட்டோவின் பாகிஸ்தான் அரசு! யஹ்யாகான் தொடக்கம் ஷியாவுல் ஹக் வரையும் கொடூரமான இராணுவ அதிகாரிகள். பிரதம மந்திரிக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எந்தப் பேதமுமில்லை.

இவற்றுக்கு முன்னால் நாங்கள் எளியோராய் இருக்கிறோம், மிகமிக எளியோராய்! புரிகிறதா உனக்கு?”

நான் ஒன்றும் பேசாதிருக்கிறேன். கொட்டட்டும் அன்சாரி.

“ஓநாய்களுக்கு முன் வெறும் ஆட்டுக்குட்டிகள் நாங்கள். சின்ன ஆட்டுக்குட்டிகள்!” இரண்டு கண்களிலும் பெருவிரலையும் நடுவிரலையும் வைத்து அமத்தினார், அன்சாரி.

“ஆயினும் அடக்குமுறையை ஏற்காத, அராஜகத்திற்குத் தலை வணங்காத, தியாகத்திற்குத் தயங்காத மக்களை வெறும் துப்பாக்கிகள் மௌனப்படுத்திவிட முடியுமா? எங்கேனும் அது நிகழ்ந்ததா சொல்!

பாகிஸ்தான் இராணுவத்துக்குச் சற்றும் சளைக்காமல் நாங்களும் இராணுவம் அமைத்தோம். ஆனால், அது இராணுவம் அல்ல; விடுதலைப்படை. முக்தி பாஹினி!”

அன்சாரி பெருமிதமாக என்னை நோக்கினார். தொடர்ந்தார்..

“அடிமேல் அடி கொடுத்து பாகிஸ்தான் இராணுவத்தை வலுவிழக்கச் செய்தோம். அவர்களது அகம் அற்றுப் போயிற்று. முள்ளந்தண்டு முறிந்து விட்டது. நாங்கள் அத்தனையும் இழந்தோம்தாம்! ஆயினும் ஒன்றினைப் பெற்றோம்; அது மகா பெரிது; சுதந்திரம்; வீர சுதந்திரம்! தேச மக்களும் தேசத்தின் ஆன்மாவும் விடுதலையான சுதந்திரம்!”

அன்சாரி கண்களை மூடி மனச்சமாதி ஆனார். விடுபட்டன கண்கள்; என் கண்களை உற்று நோக்கின.

“சுதந்திரம். அது வெறும் சொல் அல்ல. அது உணர்வு. அது உரிமை. அது வாழ்வு. அது பிறப்பு. அது எங்கள் மூச்சு! பயமில்லாத ஒரு வாழ்வு! வேறென்ன வேண்டும். ஆ?”

அன்சாரி பிறகு வெகுநேரம் ஒன்றும் பேசவில்லை. தனக்கான கோப்பியை மாத்திரம் கலந்துகொண்டு வந்தார். சைகையால் என்னிடம் ‘வேண்டுமா?’ என்று ஒரு கேள்வி; ‘வேண்டாம்’ என்று ஒரு கை, என் தலையுடன் ஆடியது.

மூன்று மிடறு குடித்தபின், “பயத்துடன் வாழும் வாழ்க்கை உனக்கு புரியுமா?” என்று கேட்டார். நான் மௌனவிரதம் ஏலவே பூண்டுவிட்டேன்.

“எதற்கும் பயம். சின்ன அசைவுக்குக் கூடப் பயம். எலி பாய்ந்து ஓடினாலோ, அதற்கும் பயம். அடக்குமுறையாளர் முதலில் என்ன செய்கிறார்கள் தெரியுமா? மக்கள் மீது பயத்தை விதைக்கிறார்கள். பயத்தை உண்டுபண்ணுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் தமக்கு விரும்பியதை, தேவையானதை அறுவடை செய்கிறார்கள். உனக்குப் புரியுமா அது? உனக்கு அதெல்லாம் எங்கே விளங்கப் போகிறது.”

நான் மனதுள் சிரித்தபடி இருந்தேன். ஆனால், என் முகம் ஒன்றுமே விளங்காத பாவனையிலிருந்தது. அன்சாரி பேசத்தொடங்கி மூன்றாவது தொடருந்தும் ஓடியே ஓடிவிட்டது!

“பயத்திலிருந்து விடுபடல்தான். ம்….” என்று என்னைப் பார்த்தார் அன்சாரி. “ம்… பயத்திலிருந்து விடுபடல்தான் மனித வாழ்வின் உன்னதம் என்பேன். கணவனிடமிருந்து மனைவியோ, பெற்றோரிடமிருந்து பிள்ளைகளோ, ஒரு மனிதரிலிருந்து ஏனைய மனிதர்களோ பயமில்லாத வாழ்வு வாழவேணும். யாரும் யாருக்கும் பயப்பிடக்கூடாது!

பயமில்லாத வாழ்வு வாழலாம் என்று எழுந்த நாளை, காலம் ஈவிரக்கமில்லாமல் கொன்று அழித்தது. அந்த நாளை நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறேன்: 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினாறாம் திகதி! அது ஒரு வியாழக்கிழமை என்பதுவும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அடுத்தநாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை ஒருபோதும் இஸ்லாமியர்களுக்கு வஞ்சகம் செய்யாது. ஆனால், அந்த வெள்ளிக்கிழமையோ…. துக்கத்தில் தோய்ந்து புரண்டு கிடந்தேன் நான். ஏனென்றால்….”

அன்சாரியால் மேலும் பேச முடியவில்லை. நெற்றியை மேசையில் குத்திக் கொண்டார். அவரது கோப்பி தளும்பிற்று.

நிமிர்ந்தார்; என் கண்களை நேரே பார்த்தார்: “உன்னால இதைப் புரியக் கூடியதாக இருக்கிறதா. ஆருக்கும் நிகழக்கூடாது, அந்தக் கொடுமை. விடுதலை வேண்டிநின்ற மக்கள் அப்படியே வீழ்ந்துபட்டிருக்கக் கூடாது. ‘இந்தா சுதந்திரம்!’ என்று தலை நிமிர்ந்த நேரத்தில் கழுத்துக்கு நேரே கத்தி விழுகிறது.”

அன்சாரி விம்மியழுவதை இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன். ரஹீமும் தாஹாவும் சைமனும் சுற்றி வந்து நிற்கிறார்கள். நான் எப்போதும் அதனை உணர்வதுதான்; இஸ்லாமியர் இஸ்லாமியர் பக்கம் நிற்பார். அஃது மெத்தச் சரி!

சிறிதுநேரம் போகட்டும்; கணங்கள் காலத்தைக் கடந்துவிடலாம்.

தாஹா தந்த உணவுக்கூடையைக் கொண்டு நான் வெளிக்கிட்டேன்..

திரும்பி வந்தபோது முகம் கழுவி, சிகரெட் புகைத்து, தெளிவாக இருந்தார் அன்சாரி. அவர் தந்த கோப்பியை நான் மறுக்கவில்லை.

“சொல்லுங்கள்: ‘1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினாறாம் திகதி’ என்ன நடந்தது?”

“சொல்கிறேன், கேள் மகன். எனக்கு அந்த நாள் நிறைந்த ஞாபகம். பாகிஸ்தான் இராணுவம் இந்திய இராணுவத்திடம் சரணடைந்த நாள் அது! அத்தனை ஆயுதங்களையும் கீழே எறிந்துவிட்டு, கைகளை மேலே உயர்த்தியபடி, முகம் குப்புற நிலத்தில் வீழ்ந்து சரணடைந்தது, பாகிஸ்தான் இராணுவம்! யாரிடம் சரணடைந்தது, இந்திய இராணுவத்திடம்!

நீ கேட்கலாம், ‘பாகிஸ்தான் இராணுவம் உங்களது எதிரிதானே, யாரிடம் சரணடைந்தால்தான் என்ன’ என்று. ஓம், ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இன்னும் ஒரு கேள்வி என்னிடம் எஞ்சி இருக்கிறது; இந்திய இராணுவத்துக்கு இங்கு என்ன வேலை? இன்னொரு கேள்வியும் கேட்கவா; எங்களது வாழ்வுக்காகப் பாகிஸ்தான் இராணுவம் இந்திய இராணுவத்திடம் ஏன் சரணடைய வேண்டும்?

காலம் யாவற்றுக்கும் பதில் கூறியது. அப்போது இந்தியாவின் பிரதம மந்திரி இந்திரா காந்தி. அவர் என்ன செய்தார் தெரியுமா? பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஜிபூர் ரஹ்மான் என்பவரை விடுதலை பெறச் செய்து அவரைப் பங்களாதேஷ் நாட்டுக்குப் பிரதம மந்திரி ஆக்கினார்.

மகாத்மா காந்தியின் மகளா இந்திரா காந்தி? யாரோ ஒரு பெரோஸ்கான் காந்தியின் மனைவி இந்திரா காந்தி! மகாத்மா காந்தியின் மகளாக இருந்திருந்தால் கேட்டுக்கேள்வியில்லாமல் இந்திராகாந்தியை நம்பியிருப்போம். இஸ்லாமியர்களுக்காகத் தன் உன்னத உயிரைக் கொடுத்தவர் அல்லவா, மகாத்மா காந்தி!

இந்த இந்திரா காந்தி,. காங்கிரஸ் கட்சி. யார் இவர்கள். ஏன் எங்கள் நாட்டுக்குள் மூக்கை நுழைக்க வேண்டும்?

யாவற்றுக்கும் பிறகுதான்.

அதுவரை நாளும் என் கையில் துப்பாக்கி இருந்தது. ஓம் இருந்தது; அதன் திடத்துடன், உறுதியுடன், இலக்குத் தெளிவுடன் கறுத்துத் திரண்ட துப்பாக்கி என் கையிலிருந்தது. அது வெறுமனே எதிரிகளைச் சுட்டுப் பொசுக்குவதற்கான கருவி அல்ல. அது தன்னகத்தே நிறைந்த அர்த்தத்தைக் கொண்டிலங்கியது. அது என்னிடம் அதிகாரம் வழங்கத் தவறவில்லை; மானுட நேசிப்பிற்கான அதிகாரம்!”

அன்சாரி அப்படியே இரண்டு கைகளையும் கூப்பி மூக்கில் முட்டியபடி இருந்தார். கண்கள் மூடி இருந்தன. இப்போது பதினைந்து நிமிடத்திற்கு ஒரு தொடருந்து ஓடவில்லை. எப்போதோ ஒரு தொடருந்தின் தடதடப்பு.

“முக்கியமாகப் பயமில்லாத வாழ்வைத் தந்தது, மகன்…” என்று திடுமெனச் சொன்னார் அன்சாரி.

நான், “எது?” என்று கேட்டேன்.

“துப்பாக்கி!” என்று அழுத்தமாகச் சொன்னார். தொடர்ந்தார். “எங்களுக்குப் பயமில்லா வாழ்வைத் தந்தது துப்பாக்கி. கையில் துப்பாக்கி இருந்த எல்லாக் கணங்களிலும் நான் எவருக்கும் அஞ்சவில்லை. சரியான பாதையில் போகிறேன் என்கின்ற உறுதி எனக்கு இருந்தது. ‘இலக்கில் தெளிவாக இருக்கிறாயா?’ என்று துப்பாக்கிதான் என்னிடம் எப்போதும் கேட்டது. அப்போதெல்லாம் நான் துப்பாக்கியைப் பார்த்துப் புன்னகைத்தேன். என் நெஞ்சு, துப்பாக்கியைத் தன்னிடம் அணைத்துக்கொண்டது.”

அன்சாரியின் மௌனம் அவ்வளவாக நீடிக்கவில்லை. “என் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு சீறினாலும் அது சுதந்திரத்திற்கான ஒருநாளை முன் நகர்த்தும் சீறலாகவே இருந்தது. அல்லது சுதந்திரத்தை முன்நகர்த்தும் நாளுக்காகவே துப்பாக்கியை நான் வெடிக்க வைத்தேன். ஓர் ஆட்டுக்குட்டி சுதந்திரமாக துள்ளித் திரிவதற்காக ஓநாய்களின் காதுகளிற்கு நான் வெடி வைத்தேன். அப்படி இதை வைத்துக்கொள்! அப்படித்தான் நான் நம்பினேன். ஆட்டுக்குட்டிகள் சுதந்திரமாக திரிவதற்கான வெடி. ஓநாய்களின் காதுகளுக்கு வெடி! ஹா…. ஹா….”

என்னால் நம்பவே முடியவில்லை, அன்சாரியிடம் இப்படி ஓர் ஆனந்தச் சிரிப்பா? இதுவரை நாளில் அவர் சிரித்தே நான் கண்டதில்லை!

பிறகு அவர் குரலில் வருத்தம் தோய்ந்திருக்கிறது. “ஆனால், நான் அணைத்துப் படுத்திருந்த அந்தத் துப்பாக்கி அன்றிலிருந்து என் நெஞ்சையே குறி வைக்க தொடங்கியது. எந்த நாள்? 1971 டிசம்பர் பதினாறாம் நாள்! முதலில் எனது துப்பாக்கி என் நெஞ்சைக் குறிவைப்பது எனக்குத் தெரியவில்லை. உண்மையைச் சொன்னால் அந்த நாளிலிருந்து அத்துப்பாக்கி என்னுடையதே அல்ல. அதைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் விட்டேன்.

ஓம். ஓநாய்களின் காதுகளுக்குக் குண்டு வைத்த அதே துப்பாக்கி, ஆட்டுக்குட்டிகளின் கண்களுக்குள்ளும் குண்டு வைத்தது!

எனக்கு ஒன்றுமாகப் புரியவில்லை. என்ன நடக்கிறது இங்கே? இந்த அழகிய உலகை நரகமாக்குவது யார்? இந்த இனிய நாளை இருட்டுக்குள் தள்ளுவது எவர்?

மஹ்முத், இதுவும் உன் விளையாட்டுதானா?

ஓர் இரவிற்குள்ளாகவே மரத்திலிருந்து அனைத்து இலைகளும் உதிர்ந்துவிட்டால் காலையில் எழுந்து பார்க்கிறபோது உனக்கு எப்படி இருக்கும்? எனக்கு அப்படித்தான் இருந்தது. ஏதுக்கும் அர்த்தம் தெரியவில்லை, எனக்கு!

மஹ்முத், என்ன விளையாட்டு இது?”

என் கண்களைப் பார்த்தபடிதான் அன்சாரி அத்தனையையும் சொல்கிறார். என்னை பார்த்துத்தான் கேள்விகள் கேட்கிறார், ஆனால், கேட்பது மஹ்முத்திடம்!

பிறகும் அவர் கேட்டது என்னிடம்தான்: “நீ என்ன சொல்கிறாய், நான் இங்கு இருக்கலாமா? ஓடுவதா? என்ன செய்வது?”

ஆனால், அவர் என்னிடம் அதைக் கேட்கவில்லை என்று அடுத்தவரி சொன்னது: “நீ என்ன சொல்கிறாய். நான் இங்கு இருக்கலாமா? ஓடுவதா? என்ன செய்வது? மஹ்முத்திடம் கேட்டேன்.”

இப்போது ‘உண்மையிலேயே’ அன்சாரி என்னிடம்தான் கேட்கிறார்: “உனக்குக் கசப்பாக இருக்கிறதா இந்தக் கதை கேட்க?” பிறகு தொடரலானார்: “இனிப்பான கதையென்று எதுவும் என்னிடம் இல்லை. அதனால்தான் கசப்பான கோப்பியை அதிகம் விரும்பிக் குடிக்கிறேனோவும் தெரியாது. நீ இனிப்பான கோப்பி ஒன்று குடிக்கிறாயா? ரஹீம், இரண்டு கோப்பி தருவாயா, தயவுசெய்து? ஒரு கோப்பிக்கு மாத்திரம் சீனியை மூன்று கரண்டி போடு!”

இப்போது கதிரையில் சாய்ந்திருந்தார் அன்சாரி. கதிரையின் நெற்றியில் அவர் தலை மேலும் சாய்ந்தது. அப்படியே சாய்ந்த வாக்கில் சொன்னார்: “அவரவர் தேசத்தில் அவரவர் வாழ்ந்திருக்க வேண்டும். அப்படி வாழமுடியாத வலி உனக்குப் புரியும் என நம்புகிறேன்.”

நான் ‘ஓம்’ எனத் தலையாட்டினேன்.

“மகன், நான் இங்கிலாந்துக்கு வரப் புறப்பட்டேன். இங்கிலாந்தில் எனக்கொரு மாமா இருக்கிறார். அவரை நான் ஒருபோதும் கண்டதில்லை. அம்மாவின் ஒன்றுவிட்ட அண்ணன். அவர் நிச்சயம் எனக்கு உதவி செய்வார். அந்த நம்பிக்கையில் புறப்பட்டேன், கள்ளமாகத்தான்! இடையில் எனக்கு எதுவும் நிகழலாம். சரி, அது ஆண்டவருடைய சித்தம்! இங்கிலாந்துக்கு எப்படி வந்தேன்? சத்தியமாக அது எனக்குத் தெரியாது. ஆண்டவர் என்னை அள்ளித் தூக்கி வந்தார். அதுவும் ஆண்டவருடைய சித்தம்! மஹ்முத், உனக்கு என் மேலான நன்றி!

நான் அங்கு நின்றிருந்தால்? எனது எலும்புக்கூடுகூட உக்கிப் போயிருந்திருக்கும். இப்போது உன்முன்னால் இருந்து பேசுவதற்கு ‘அன்சாரி’ என்ற ஒருவன் இல்லை. ம்ம்….”

அன்சாரி கண்களை மூடியிருந்தார். அப்படியே நித்திரையும் ஆகிப்போய் விடுவார். வெளியே மழை பொழிகிறது. எனது தேகமும் உணவு விடுதியும் சில்லிட்டுப் போயிருந்தன. நான் வீடு ஏகும் நேரத்திற்கு மேலே ஆகிவிட்டது.

“கொண்டு போவதற்கு என்ன சாப்பாடு வேண்டும்?” தாஹா கேட்டான்.

இரண்டு நாண் றொட்டியும் ஆட்டிறைச்சிக் கறியும் அல்லது கோழிப் பிரியாணியும் கோழிக்கறியும் தரப்போகிறான். இதைத்தவிர வேறெதைத்தான் தாஹாவால் தந்துவிட முடியும்?

கேட்டுப் பார்ப்போமா, ‘இன்றைக்கு நான்கு நாண் றொட்டிகள் தர இயலுமா’ என்று. மக்கள்மார் இருவருக்கும் அது மிக ருசிக்கும். ஐந்தாறு நாட்கள் ஆகிவிட்டன, அவர்கள் நல்ல தீன் தின்று. சென்ற சனிக்கிழமை இங்கிருந்து கொண்டுபோனதுதானே, அவர்களது நல்ல தீன்! பிறகு வந்த நாட்களில் அவர்கள் உண்டது வெறும் பாண் துண்டுகள்.

அவர்களது அம்மா, வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்து கருப்பையை வெளியே எடுத்துவிட்டு, கட்டிலில் மருந்துக் கொத்துக்களுக்கு மத்தியில் படுத்திருக்கிறார்!

நான்கு நாண் றொட்டிகள்! கேட்டுப் பார்ப்போமா? ‘நான்கு நாண்றொட்டிகள்’ என்றால் அதற்கு உவப்பான இரண்டு ஆட்டிறைச்சிக் கறிகள்! கேட்போமா?

அதற்கான மேலதிகக் காசு கொடுக்கலாம், கொடுக்கவேண்டும்; வாங்கமாட்டார்கள்.

நான் இதை யோசித்துக் கொண்டிருக்கும்போதே அன்சாரி சொன்னது தாஹாவிடம் போனது: “தாஹா, சாப் கேட்பது எதுவானாலும் கொடு.”

“நான்கு நாண் றொட்டிகள் தரமுடியுமா தாஹா?” கேட்டேன். மீண்டும் அன்சாரியிடமிருந்து குரல்: “தாஹா, சாப் கேட்பது எதுவானாலும் கொடு.”

தாஹா, “நான்கு வெறும் நாண் றொட்டிகள்தானா?” என்று ஆச்சரியப்பட்டான்.

அவன் ஏன் அப்படி ஆச்சரியப்பட்டான் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நாண் றொட்டியில் உள்ளி நாண், பட்டர் நாண், சீஸ் நாண், கீரை நாண். என்று பலவகை உள்ளன. அவை ஒவ்வொன்றும் விலை வித்தியாசப்பட்டு, விலை கூடியவை.

வெறும் நாண் றொட்டி மாத்திரம்தான் கேட்கிறேன் எனத் தாஹா புரிந்துகொண்டான். ஆச்சரியக் குரல் அதனால்தான்.

“இல்லை, நான்கும் வெறும் நாண் றொட்டிகள்தான்” என்ற என் குரலில் அழுத்தம் கூடியிருந்தது.

குரலில் அல்ல; தாஹாவின் முகத்தில் ஆச்சரியம் அலையடிக்க நின்றான்.

சீறும் மழைக்குள் ‘வைப்பர்’ தட்டி, கார் ஓட்டினேன். தன் நெற்றியை ‘வைப்பர்’ஆல் துடைத்துத் துடைத்துக் கார் ஓடியது..

“ஒழும்புங்கோ ராசா. ஒழும்புங்கோ பிள்ளை. சாப்பிட்டுப் படுங்கோ. ஒழும்புங்கோ.”

இன்று வெள்ளிக்கிழமைக்கு மச்சக்கறி ஏதும் வீட்டில் ஆகாது. ஆனால், நாண் றொட்டிக்கு நிச்சயம் ஆட்டிறைச்சிக் கறி. ஆனால், அது பாதகமில்லை. பன்னிரண்டு மணி தாண்டி பத்து நிமிசம் ஓடிவிட்டது. இந்த நாள் சனிக்கிழமைக்குரியது.

சாப்பாட்டுச் சரையை அவிழ்த்து, நான்கு நாண் றொட்டிகளைக் கோப்பையில் வைத்தேன். சாப்பாட்டுச் சரையில் வேறொன்றையும் காணவில்லை. என் கை சரையைத் துளாவித்துளாவித் தேடியது. ம்கூம், ஒன்றுமில்லை!

தாஹா, “நான்கு வெறும் நாண் றொட்டிகள்தானா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டது, கறி ஏதுமில்லாது வெறும் நாண் றொட்டி தருவதற்குத்தானா?

குசினிக்குள் எல்லா ஏதனங்களையும் பார்த்தேன். வெண்டிக்காய்க் குழம்புகூட இல்லை. ஏதும் இருப்பதாக இருந்தால் நான்தானே வைத்திருக்க வேண்டும்.

இரண்டு கோப்பையில் சீனியைக் கொட்டி, இருவர் முன்னும் வைத்தேன்: “சாப்பிடுங்கோ ராசா. சாப்பிடுங்கோ பிள்ளை.”

இருவரும் ஏறிட்டு என் முகத்தைப் பார்த்தனர். நான், “அம்மாளாச்சி” என்று சாமியறைக்குப் போனேன்.

அ. ரவி” <iravi@live.co.uk>

Amrutha

Related post