நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: திருவாசக நினைவுகள் – சந்தியா நடராஜன்

 நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: திருவாசக நினைவுகள் – சந்தியா நடராஜன்

ன் மகன் படித்த கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள நான் இங்கிலாந்து சென்றிருந்தேன். அங்கிருந்த பதினைந்து நாட்களில் சில இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்பது என் கனவாக இருந்தது. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஒன்று.

நான் மாயவரத்தில் ஒரு சாதாரண அ.வ.அ கல்லூரியில் படித்தவன். 45 நாட்கள் மட்டும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்திருக்கிறேன் (அக்கல்லூரியின் சூழல் தாங்காமல் ஊருக்குத் திரும்பிவிட்டேன்). அதனால் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. சென்றபோது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் வழிகாட்டியாக இருந்து எல்லா இடங்களையும் அழகாக விளக்கினார். அவர் பயோ மெடிக்கல் படிக்கும் மாணவர். அவருடைய தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். அவர் பிராட் ஸ்ட்ரீட்டில் இருந்த பேலியோ கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு ஒரு நினைவு வந்தது. அந்தப் பேலியோ கல்லூரியுடன் தொடர்புள்ள நபர்தான் ஜி.யு. போப்.

1939ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்குப் போப் ஒரு கிறித்துவ மத போதகராக வந்தார். அவர் முதலில் திருக்குறளை மொழிபெயர்த்தார். திருவாசகத்தையும் அவரேதான் மொழிபெயர்த்தார். இங்கிருந்து இங்கிலாந்துக்குத் திரும்பிய பிறகு அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். திருவாசகத்தை மொழிபெயர்க்கும் எண்ணம் போப்பின் மனதில் தோன்றிய இடம் பேலியோ கல்லூரி வளாகம். திருவாசகத்தை ஆங்கிலத்தில் தான் மொழிபெயர்க்கத் தொடங்கியது எப்படி என்று தனது ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார் போப்:

ஒரு நாள் நானும் பேலியோ கல்லூரியின் முதல்வர் பெஞ்சமின் ஜோவெட்டும் கல்லூரி வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தோம். நல்ல இரவு நேரம். அவரது கனிவான முகத்திலும் வெண்ணிற தலைமுடியிலும் நிலா தனது ஒளியைப் பரப்பி ஒளிரச் செய்திருந்தது. ஜோவெட் என் தோள் மீது கைபோட்டபடிப் பேசிக் கொண்டு வந்தார். அவர் தமிழ்நாட்டுக் கவிதை, கதைகள், தத்துவங்கள் குறித்துக் கேட்டார். அப்போது நான் அவற்றின் சிறப்பை அவருக்கு விரிவாக எடுத்து விளக்கினேன். அதைக் கேட்ட ஜோவெட், “நீங்கள் ஏன் இதை ஆங்கிலத்தில் வெளியிடக் கூடாது? என்று என்னிடம் ஒரு கேள்வியை முன் வைத்தார். எனக்கு இப்போது வயது 73. எனக்கொன்றும் உயிருக்கு உத்தரவாதம் இல்லையே! இந்த வயதில் இந்தப் பெரும் பணியை ஏற்க இயலுமா?” என்று நான் கேட்டேன். அதற்கு “To have a great work in progress is the way to live long. You will live till you finish” என்று பதிலளித்தார் ஜோவெட் .

நீ நெடுநாள் வாழ்வதற்கு உரிய வழி ஒரு மாபெரும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதுதான். அப்பணியை நிறைவு செய்யும் வரையில் நீ உயிரோடு இருப்பாய் என்ற ஜோவெட்டின் சொற்களால் ஈர்க்கப்பட்டு அல்லது இயக்கப்பட்டு போப் தனது 73ஆவது வயதில் திருவாசகத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்து 80ஆவது வயதில் நிறைவு செய்தார்.

அப்போது ‘இதைச் செய்’ என்று சொன்ன ஜோவெட் இறந்துவிட்டார். அதனால் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெஞ்சமின் ஜோவெட்டுக்கு அர்ப்பணிப்பதாக மிக உருக்கமாகத் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார் போப்.

நான் சென்னை வந்த பின்பு ஜி.யு.போப் எழுதிய திருவாசகத்தைத் திரும்பவும் படிக்க ஆரம்பித்தேன். திருவாசக அறிஞர்கள், திருவாசகத்தைத் துய்த்தவர்கள் சிலர் என இவரது மொழிபெயர்ப்பில் குறை காண்பவர்களும் உண்டு.

 

திருவாசகத்தில் 658 பாடல்கள், 51 பதிகங்கள் உள்ளன. முதலில் சிவபுராணம். இறுதியில் அச்சோப் பதிகம்.

அச்சோப்பதிகத்தின் முதல் பாடல் இது.

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

இந்தப் பாடலுக்கான ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பை நான் படித்துப் பார்த்தேன். ‘மோட்சத்திற்கான வழியென்ன என்று தெரியாமல் மூடனாக இருந்த என்னை இதுதான் உன்னுடைய பாதை என்று காண்பித்து பக்தி வழியில் செலுத்தி, என்னுடைய பந்த பாசங்களை எல்லாம் அழித்து எனக்கு முக்தியளித்த சிவனே!’ என்பது இப்பாடலின் சாரம்.

இதில் முக்தி நெறி, பக்தி நெறி என்று இரண்டு சொற்கள் வருகின்றன. முக்தி என்ற சொல்லுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் ‘எமன்ஸிபேசன்’ (Emancipation), ‘லிபரேஷன்’ (Liberation) எனும் சொற்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், போப், ‘வே ஆஃப் எடேர்னல் பீஸ்’ (Way of Eternal Peace) என்று இதனை விவரிக்கிறார். ‘எடேர்னல் பீஸ்’ சரியான மொழிபெயர்ப்பா? லிபரேஷன் என்பதே சரியான மொழிபெயர்ப்பு. அதுவே முக்தி, மோட்சம். இவர் சொல்லும் ‘எடேர்னல் பீஸ்’ எப்பொழுது கிடைக்கும்? முக்தி கிடைத்த பிறகு. அந்த முழு அமைதி, முக்திக்குப்பின் பிறப்பில்லாத நிலையில் ஏற்படுவது. போப் செயலைக் கூறுவதை விடச் செயலின் விளைவைக் கூறுகிறார். அதன் பயன்பாடு பற்றிச் சொல்கிறார்.

பக்தி என்பதற்கு ‘பயஸ்’ (Pious) என்பார்கள். ஆனால், ‘பயஸ் லவ்’ என்கிறார் போப். கருணை மயமான இறைவனுடன் தன்னை அர்ப்பணிக்கும் செயல் என்ற பொருளில் ‘பயஸ் லவ்’ என்ற சொல்லைப் போப் பயன்படுத்துகிறார். இதுவே என்னைப் போப்பிடம் நெருக்கம் கொள்ளச் செய்கிறது.

 

மாணிக்கவாசகர் பல இடங்களில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். வேதக்கருத்துக்கள் திருவாசகத்தில் பல இடங்களில் இருக்கின்றன. வேத உபநிடதக் கருத்துக்கள் சம்பந்தர் தேவாரத்திலேயே உள்ளன.

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

இது சம்பந்தர் சொல்வது. மாணிக்கவாசகரும் வேத உபநிடதக் கருத்துக்களை உள்வாங்கியிருக்கிறார் என்பதும் திருவாசகத்தில் நன்றாகவே தெரிகிறது.

‘ரிக், யஜூர், சாம, அதர்வண என்கிற நான்கு வேதங்கள் வேறு. தேவார திருவாசகங்களில் குறிப்பிடப்படும் நான்மறைகள் வேறு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பவை’ என்றும் தமிழகத்தில் விவாதிக்கப்படுகிறது. அதாவது வடமொழியில் உள்ள வேதங்களுக்கும் தமிழ்த் திருமுறைகளில் குறிப்பிடப்படும் நான்மறை என்ற சொல்லாடலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது ஒரு சாராரின் முடிவு.

திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணத்தில் உள்ள வரிகள் இவை:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் (====)

புல், பூண்டு, புழு, மரம், விலங்கு, பறவை, மனிதன் என்று வரிசைப்படுத்திப் பிறவிகள் கடந்து வந்ததைச் சொல்லிவிட்டு, ‘தாவரசங்கமத்துள்’ என்கிறார். தாவர சங்கமம் என்பது தாவரக் கூட்டமில்லை. அசையும் அசையாப் பொருள்கள். புல், பூண்டு என்று மனிதர், தேவர் வரை வகைப்படுத்திவிட்டு அனைத்தையும் சேர்த்துத் தாவர சங்கமம் என்று சொல்கிறார். நாம் பத்திரப் பதிவில் தாவர ஜங்கமச் சொத்துக்கள் என்று அசையும் அசையா சொத்துக்களை (Mobile & Immobile) எழுதுகிறோம். அதே சொல்லைத்தான் மாணிக்கவாசகர் பயன்படுத்துகிறார். இது ஒரு வடமொழிச் சொல்.

சமஸ்கிருதம் தெரிந்த ஒரு பேராசிரியரிடம் இந்தச்சொல் குறித்து விளக்கம் கேட்டேன். இந்தப் பொருள் மட்டும் இல்லை. உயிரியக்கமுள்ள, உயிரியக்கமற்ற (Animate & Inanimate) என்ற வேறு பொருளும் இருக்கிறது என்று அவர் சொன்னார். இதையேதான் போப், ‘அனிமேட் அண்ட் இன்அனிமேட் திங்ஸ்’ (Animate and Inanimate Things) என்று மொழிபெயர்த்திருக்கிறார். போப், 658 பாடல்களே உள்ள திருவாசகத்தை ஒரு நாளைக்கு ஒரு பாடல் என்று மொழிபெயர்த்திருந்தால்கூட இரண்டு ஆண்டுகளில் முடித்திருக்கலாம். ஆனால், ஏழு ஆண்டுகள் எதற்காகக் காலம் தாழ்த்தினார்? ஏழு வருடங்கள் போப் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டதற்குக் காரணம் இத்தனை நுணுக்கங்களையும் ஆழ்ந்து அறிந்து செயல்பட்டதே. மேலும், போப்பின் மொழிநடை பழைய ஷேக்ஸ்பியர் நடை போலப் படிப்பதற்குச் சிரமமானதும்கூட.

கிறித்தவ மதம் எப்படி ஒரு மத போதகரான போப்பை திருவாசகத்தை மொழிபெயர்க்க அனுமதித்தது என்பதே வியப்புதான். வரலாற்றில் சமய நூல்களின் மொழிபெயர்ப்பு என்பதே ஒரு ஆபத்தான காரியமாக இருந்து வந்துள்ளது. பைபிள் இலத்தீனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு அதற்குச் சாட்சியாக நிற்கிறது.

வைக்ளிஃப் (John Wycliffe) என்பவர்தான் முதன்முதலில் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். அவர் இதே பேலியோ கல்லூரியில் பணியாற்றியவர். பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக் கூடாது என்பது போப்பாண்டவரின் ஆணையாக இருந்தது. இங்கிலாந்தின் தேவாலயங்களில் இலத்தீன் மொழியே ஆதிக்கம் செலுத்தியது. இலத்தீனிலிருந்து பைபிளைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்கத் துணிபவர்களுக்குக் கடும் தண்டனைகள் காத்திருந்தன. ஹஸ் என்பவர் பைபிளை ஹங்கேரி மொழியில் மொழிபெயர்த்தார் என்பதற்காக எரித்துக் கொல்லப்பட்டார். ஆனால், வைக்ளிஃப் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இறந்துவிட்டார். அதாவது, அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனையை அனுபவிக்காமலேயே இறந்து போனார். எனவே, பிறகு வந்த அரசன் வைக்ளிஃப்பின் கல்லறையை அடையாளம் கண்டு அதைத் தோண்டி வைக்ளிஃப்பின் எலும்புகளைச் சேகரித்து அவற்றை இடித்து எரித்தான். பேலியோ கல்லூரியின் சூழ்நிலையும் இந்தச் சூழலில்தான் இருந்திருக்கும்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கதிர்காமன் மற்றும் நாவலாசிரியரும் எழுத்தாளருமான வேட் பிரகாஷ் மேத்தா (Ved Parkash Mehta) ஆகியோர் அதே பேலியோ கல்லூரி மாணவர்கள்தான்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் சாலையில் மதத்தால் ஏற்பட்ட மரணங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இங்கே கத்தோலிக்கர்கள் கொளுத்தப்பட்டார்கள், இங்கே ப்ராட்டஸ்டண்டுகள் கொளுத்தப்பட்டார்கள் என்ற குறிப்புகள் சாலைகளில் பதிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இத்தகைய ஒரு இடத்தில் பணியாற்றிக் கொண்டுதான் போப் ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் மக்களும் அதற்கு நன்றிக்கடன் செலுத்தியுள்ளார்கள். போப்பின் கல்லறை மீது வைக்கப்படும் நடுகல்லுக்கு (Tombstone) பச்சையப்பன் கல்லூரி செங்கல்வராயன் பிள்ளை நிதி வசூல் செய்து அனுப்பியுள்ளார். போப்பும் என்னுடைய தமிழ் மக்கள் என் நடுகல்லுக்கு நிதியை வழங்கவேண்டும் என்று விரும்பியுள்ளதாகவும் தெரிகிறது. “ஒரு தமிழ் மாணவன் தூங்குகிறான்” என்று போப்பின் கல்லறையில் எழுதி வைத்துள்ளதாக என் தமிழாசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் பற்றிய உண்மை தெரியவில்லை.

ஜி.யு. போப்

ரண்டாவது முக்கியமான விஷயம் போப்புக்குத் திருவாசகத்தில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன என்பதே. அவர் ஜோவெட்டிடம் பேசும்போது ‘திருவாசகம்’ பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் சங்கீதம் (Psalms) என்ற பகுதிக்கு மிக நெருக்கமாக இருப்பதாகக் கூறியதாகத் தனது முன்னுரையில் கூறியுள்ளார். பைபிளின் சங்கீதம் என்ற பகுதியில் உள்ள பாடல்களைப் படித்துப் பார்க்கும்போது போப்பின் பார்வை நமக்குப் புரிய வருகிறது. சங்கீதம் பகுதியில் 150 பாடல்களுக்கு மேல் உள்ளன. இதில் உள்ள பாடல்களை மூன்று பிரிவுகளில் அடக்கி விடலாம்.

  1. Prayer to Lord – Praise the Lord – கடவுளைப் போற்றுதல்
  2. You Present a Prayer before the God – கடவுள் முன்னர் பிரார்த்தனைச் செய்தல்/ ஒரு விண்ணப்பத்தைக் கடவுள் முன் வைப்பது.
  3. Your Prayer is Answered – Thanksgiving – பிரார்த்தனை நிறைவேறியதும் நன்றிக் கடன் செலுத்தல்.

திருவாசகத்தில்

“அருள்நிதி தர வரும் ஆனந்த மலையே” (திருப்பள்ளியெழுச்சி – 2)
“ஆறாத இன்பம் அருளுமலை போற்றி”(சிவபுராணம்)
“குன்றே அனையாய்”(குழைத்த பத்து – 7)
“ஆடகச் சீர்மணிக் குன்றே”(திருச்சதகம் – 11)
“தீதிலா நன்மை திருவருட் குன்றே” (கோயில் திருப்பதிகம் – 9)

இவ்வாறு குன்று, மலை என்றே திரும்பத் திரும்ப மாணிக்கவாசகர் சிவபெருமானை விளிக்கிறார். பைபிளின் சங்கீதத்தில் வரும் வரிகளும், “you are my refuge” (நீரே என் புகலிடம்), “you are my fortress” (நீரே என் அரண்) என ஒன்றுபோல இருக்கின்றன.

“வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;” “நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.” – இவை பரிசுத்த வேதாகம வாசகங்கள்.

சங்கீதத்தின் 91ஆவது பாடல் மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது. I will say of the Lord, He is my refuge and my fortress, My God; in him will I trust. (நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்.)

தமிழ் பைபிளில் இந்த வாசகங்களுக்கான வரிகள்:

நீரே என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன். நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

இதே பகுதியில் உள்ள இன்னொரு வசனம்…

Under his wings you will find refuge; His faithfulness is a shield and rampart.

அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின் கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். (சங்கீதம் 91:4)

அங்கு ஆறாத மலை, அருள் மலை, ஆடகச் சீர் மணிக்குன்று இங்கு ஏறக்குறைய அப்படியே உள்ளது. அடைக்கலப்பத்து என்ற பெயரில் பத்து பாடல்கள் கொண்ட ஒரு பதிகமே திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

You will not fear the terror of the night, nor the arrow that flies by day (இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்து வரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர்) – இது சங்கீதத்தின் வரி (91:5)

இதற்கு இணையான வரிகளைத் திருவாசகத்தின் அச்சப்பத்தில் நம்மால் கண்டுகொள்ள முடிகிறது.

‘புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;’
“வெருவரேன், வேட்கை வந்தால்; வினைக் கடல் கொளினும், அஞ்சேன்;
“கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர் கிறி முறுவல் அஞ்சேன்”
“மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன்”
“வன்புலால் வேலும் அஞ்சேன்; வலக்கையார் கடைக்கண் அஞ்சேன்” – (அச்சப் பத்து)

என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்.

திருவாசகத்தின் ஆரம்பத்தில் இருந்து நாயேன், நாயினும் கடையேன் என்று சொல்லும் மாணிக்கவாசகர் இறுதி நெருங்க நெருங்க “சிக்கெனப் பிடித்தேன்” என்று இறைவனை இறுகப் பற்றிக் கொண்டதாகச் சொல்கிறார். பிறகு எதற்கும் அஞ்சாத மாணிக்கவாசகரை அச்சப்பத்தில் காண முடிகிறது.

 

ன்னொரு விஷயம், போப் தமிழகத்தில் கால் வைக்கும்போது வடலூர் வள்ளலாருக்கு 16 வயது. மாணிக்கவாசகரின் பாடல்களால் வசீகரிக்கப்பட்டுத் திருவாசகத்தைக் கொண்டாடி மகிழ்ந்தவர் வள்ளலார். போப் ஊரைவிட்டுப் போவதற்குமுன் வள்ளலார் இறந்துவிடுகிறார். போப் 1839இல் தூத்துக்குடியில் உள்ள சவேரியார்புரத்தில் இருந்தார். 1881 வரை போப் தமிழ்நாட்டில் இருந்தார். (மொத்தம் 42 ஆண்டுகள் தமிழகத்தில் இருந்துள்ளார்.) வடலூரிலிருந்த வள்ளலாரின் ஆறு திருமுறைகளில் நான்கு திருமுறைகள் 1867 வாக்கில் வெளிவந்துவிட்டன.

வள்ளலாரின் மொழி மாணிக்கவாசகரின் மொழி. வள்ளலார் மாணிக்கவாசகரை அப்படியே பின்பற்றுகிறார். மாணிக்கவாசகரிடம் பேரன்பு கொண்டவராக இருந்திருக்கிறார். வள்ளலாருக்கும் மாணிக்கவாசகருக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. அது வள்ளலாரிடம் இருந்த சமூக உணர்வுச் செயல்பாடு. மாணிக்கவாசகரோ பக்தியில் மட்டுமே திளைத்திருக்கிறார். ஆனால், இருவரின் மொழி நடையும் ஒன்றுபோலவே உள்ளது.

“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”

இப்படி வள்ளலார் மாணிக்கவாசகருக்கு 20 பாடல்கள் பாடியிருக்கிறார். வள்ளலார் மாணிக்கவாசகரை அப்படியே உள்வாங்கிக்கொள்கிறார்.

உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங்கொருபொழுதும்
தரியேன், நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே

என்று எண்ணப் பதிகத்தில் பாடுகிறார் மாணிக்க வாசகர். இதையே வள்ளலார்…

உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.
– ஆறாம் திருமுறை (பிரியேன் என்றல்)

மாணிக்க வாசகரை அப்படியே எழுதுகிறார் வள்ளலார்.

இதுபோல நூறு பாடல்களுக்கு மேல் திரைப்படங்களில் வந்துவிட்டன. கவிதை எழுதுபவர்களுக்கு பக்தி இலக்கியம் எப்படியெல்லாம் பயன்படுகிறது? அரசியல் தலைவர்களுக்கும் பேனர்கள் போஸ்டர்கள் வைப்பவர்களுக்குத் ‘திருவாசகம்’ நிரம்பவே பயன்படும். சிவனை மாணிக்கவாசகர், “முத்தனே! முதல்வா!” என்கிறார். அண்ணா, “அண்ணலே” என்று அழைக்கிறார். காந்தியடிகளுக்கு முன்னால் சிவனை ‘அண்ணலே’

என்று அழைத்துவிட்டார். அரசே, உடலே, உயிரே, அத்தனை, அமலா, ஆதியே, இன்பனே, புனிதா, புனைவே, ஆருயிரே என்று போய்க்கொண்டே இருக்கிறது. இதையே ஒரு தனி நூலகப் போடலாம்.

‘அண்ணா’ என்று குரல் கொடுத்த முதல் தமிழன் மாணிக்கவாசகர்தான். ‘அண்ணாமலை எம் அண்ணா போற்றி’

மாணிக்கவாசகரின் புகழ்பாடும் வள்ளலாரின் இன்னொரு பாடல் இது.

வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!

பறவைகளும் விலங்குகளுமே மாணிக்கவாசகரின் பாடல் கேட்டு மெய்யறிவு அடையும்போது தான் ஞானம் பெறுவதில் வியப்பில்லை என்கிறார் வள்ளலார். மீண்டும் மீண்டும் தன்னைச் சிறுமை செய்துகொள்ளும் மனோபாவம் மாணிக்கவாசகரிடம் இருப்பது போலவே வள்ளலாரிடமும் காண முடிகிறது. மேலும் இவர்களிடத்தில் ஒரு தொடர் மரபையும் காணலாம். அப்பர் சுவாமிகள் பாடுவது மாணிக்கவாசகரிடம் வருகிறது. “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” என்று அப்பர் சொல்வதைப்போலவே மாணிக்கவாசகர், “மன்னரை அஞ்சோம்” என்கிறார். இந்த மரபு வழி வழியாக நிகழவே செய்யும். ஒருவரைத் தொடர்ந்து வாசித்து வரும்போது நம்மையும் அறியாமல் அவர் பயன்படுத்திய பதங்களை நாமும் பயன்படுத்தியிருப்போம்.

அதேபோல, “நெற்றித் தரள நீர் வழிய” என்ற ‘இருவர்’ திரைப்படத்தின் பாடல் வரிகள் சிலப்பதிகாரத்தின் கானல் வரிப்பாடலில் காணப்படும் “வாரித்தரள நீர் வழிய” என்ற அதே வரிகளின் இன்னொரு வடிவம். அந்தச் சந்தமும் சொற்சேர்க்கையும் அப்படியே வருகிறது. இதனை இலக்கியத்தில் நாட்டம் மிகுந்த வைரமுத்துவாலேதான் எழுதமுடியும். இசை அமைப்பாளர் யார் இதில்? கவிஞர் வைரமுத்து தானோ என்று கூடச் சந்தேகம் வருகிறது. அத்தனை பொருத்தமாக இந்த வரிகள் இசையை உடையதாகச் சிலம்பில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. அவ்வாறே மாணிக்கவாசகரின் வரிகள் வள்ளலாரை ஈர்த்துள்ளன.

 

ஜி.யு.போப் எந்த அளவுக்குத் திருவாசகத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம்.

மர்ரே பதிப்பகம் சிறந்த முறையில் பழைய நூல்களைப் பிழையில்லாமல் பதம் பிரித்து வெளியிடும் வழக்கம் கொண்டது. திருவாசகத்தை அவர்கள் பதம் பிரித்து வெளியிடக்கூடாது என்று சைவர்கள் எதிர்த்திருக்கிறார்கள். எதிர்ப்புகளுக்கு இடையே திருவாசகத்தை மர்ரே பதிப்பகம் வெளியிட்டது. அந்த நூலின் வெளியீட்டு விழாவில் மயிலை சுப்பராயர் போப் எழுதிய ஒரு கடிதத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். அந்தக் கடிதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சர்.எஸ்.சுப்ரமணியம் அவர்களுக்கு போப் எழுதியது.

போப் யாருக்குக் கடிதம் எழுதினாலும் கடிதத்தின் மேற்பகுதியில் திருவாசகத்தின் ஒரு வரியை எழுதிவிட்டுத்தான் கடிதத்ததைத் தொடர்வார். அவ்வாறு நீதிபதிக்கு எழுதிய கடிதத்திலும் திருவாசக வரிகளை எழுதியிருக்கிறார். அந்த வரிகள் அவரைக் கண்ணீர் மல்கச் செய்திருக்கின்றன. அவரின் கண்ணீர்த் துளிகள் திருவாசக வரிகளின்மேல் விழுந்துள்ளன. அதனை ஒற்றுத்தாளால் ஒற்றியெடுத்திருக்கிறார் போப். அதனால் கடிதத்தில் மையின் கரை படிந்திருக்கிறது. கடிதத்தில் நீதிபதிக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு கடிதத்தை தொடர்ந்து எழுதியிருக்கிறார். “இக்கடிதத்தைப் புறக்கணிக்க மனம் வரவில்லை. திருவாசகத்தில் எழுந்த கண்ணீரும் போற்றத்தக்கது என்ற எண்ணத்தில் இக்கடிதத்தை அப்படியே அனுப்பியுள்ளேன் – மன்னிக்க” என்று எழுதியிருக்கிறார். இந்த விவரங்கள் நீ.கந்தசாமிப் பிள்ளையின் திருவாசகப் பதிப்பில் (அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு) சொல்லப்பட்டுள்ளன. இதுவே போப் திருவாசகத்தின் மீது கொண்டிருந்த காதலுக்கு ஓர் சாட்சி.

வள்ளலார்

திருவாசகம் ஒரு புலம்பல் இலக்கியம் மட்டுமா? தத்துவப் பதிவு இருக்கிறதா? எப்படி வகுப்பது? வேதத்தை ஏற்கிறதா? உபநிடதக் கருத்துக்களுக்கு இடம் இருக்கிறதா? என்று பல கேள்விகள் எழுகின்றன.

பக்தி, தியானம் என்று இந்துமதத் தத்துவத்தில், இறை உணர்வை இரண்டு விதமாகப் பார்க்கலாம். 99% பக்திதான் கடைபிடிக்கப்படுவது. தியானம் கொஞ்சம் உயர்நிலை. திருவாசகத்தில் நாம் எந்த இடத்தை அடைய முடியும் என்பதைக் கேள்வியாக வைத்துப்பார்க்கலாம்.

ஓசோவின் வாக்கியம் ஒன்று இங்கு மிகப் பொருத்தமாக இருக்கும். When a drop meets the ocean, it becomes the ocean. (ஒரு துளி நீர் கடலில் விழுந்தால் அது கடலாகிறது.)

ஒரு துளி நீர் கடலில் கரைவதுபோல ‘திருவாசகம்’ இருக்கிறது. மாணிக்கவாசகரின் திருவாசகத்தைப் படிக்கும்போது அது நம்மைக் கடவுளிடம் சேர்ந்துவிடுகிறது. மனிதன், கடவுளை நினைந்து நினைந்து உருகி பக்தியில் திளைப்பதே போதுமா என்றால், அது சிவ தரிசனத்துக்கான மெய்யன்பின் ஒரு படிநிலை. அப்படியானால் வெறும் பக்தியாகப் பாராயணம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா? என்றால், இல்லை. தியானம், யோகம் என்ற வழிகளும் உண்டு.

ஓங்காரம் என்ற சொல் இரண்டு இடங்களில் திருவாசகத்தில் வருகிறது. அதற்கு முன்பு மாண்டூக்ய உபநிடதம் சொல்வதை பார்ப்போம். மாண்டூக்ய உபநிடதம், “மனிதன், இறைவன், உலகம் மூன்றும் ஒன்றுதான் என்பதே உலகின் மிகப்பெரிய உண்மை” என்கிறது. எந்த உபநிடதமும் எந்த இறைவனையும் குறிப்பதில்லை. இறையை “அது” என்றே குறிப்பிடுகிறது. ஆண், பெண், சிவன், விஷ்ணு என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. அஃறிணையில் சொல்கிறது. மிக உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறார்கள். எந்த மதக் கருத்துக்களும் அதில் இல்லை.

சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் படைப்பு என்பதை குறிக்கின்றன. படைப்பாக இருப்பது ஓங்காரம். மூன்று காலங்களையும் கடந்தவராக இருப்பவர் இறைவன். அவரும் ஓங்காரம்.

மனித நிலையை நான்காகப் பிரிக்கிறது இது. விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளில் மனித மனம் மாறி மாறி ­­சஞ்சரிப்பதைப் பற்றி இந்த உபநிடதம் விவரிக்கிறது.

அடிப்படை உண்மைகளான உலகம், மனிதன், இறைவன் ஆகிய மூன்றும் ஓங்காரமே, ஒன்றே என்பதையே மாண்டூக்ய உபநிடதம் விளக்குகிறது.

  1. விழிப்பு நிலை – நாம் புற உலகை நமக்குத் தெரிந்த, நாம் காண்கின்ற நமது தூல உடம்பினால் நேரிடையாக அனுபவிப்பது ஆகும். பாடல் கேட்பது, இனிப்பு உண்பது, சொற்பொழிவாற்றுவது போன்ற செயல்களைக் கூறலாம்.
  2. கனவு நிலை – இந்நிலையில் அனுபவங்கள் அனைத்தும் மனவுலகிலேயே நிகழ்கின்றன. ஆழ்மனம் விழித்திருக்கிறது. அந்த மனம் ஒரு புதிய உலகத்தை உருவாக்குகிறது. அதுவே கனவு.
  3. உறக்க நிலை – ஆசைகளோ கனவுகளோ எதுவும் இன்றி ஆழ்ந்து தூங்குகின்ற நிலை.
  4. நான்காம் நிலை – மூன்றும் இணைந்த ஓங்காரம்.

இவற்றையும் கடந்து செல்வதே அமைதி நிலை: இறை நிலை.

“ஆன்மா நான்காம் பரிமாணம். அங்கே பிரபஞ்ச உணர்வு இல்லை. அது அமைதியானது, மங்கலமானது” என்கிறது மாண்டூக்ய உபநிடதம்.

திருவாசகத்தில் இரண்டு இடங்களில் ஓங்காரத் தத்துவம் வருகிறது. “மனவாசகம் கடந்தான்”, “சொற்பதம் கடந்த அப்பன்”, “மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே” என்று வாக்கு, மனம் இரண்டையும் கடந்தவன் இறைவன் என்கிறது திருவாசகம். வேத வித்தகன் என்று சிவனைச் சொல்கிறார்.

துரியமு மிறந்த சுடரே போற்றி
தெரிவரி தாகிய தெளிவே போற்றி!

இதைத்தான் ஓஷோ அடிக்கடி ‘Beyond word and mind’ என்று குறிப்பிடுகிறார்.

‘காசிக்காண்டம்’ என்றொரு நூல் இருக்கிறது. காசியைப் பற்றிய சிறந்த நூல். டயானா ஈக் என்பவர் The City of Lights என்ற பெயரில் காசியைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். 5000 வருடப் பழமையான காசி நகரைப் பற்றிய அருமையான நூல். அதில் காசிக்காண்டத்திலிருந்து சில வரிகளை முதல் பக்கத்தில் எடுத்தாள்கிறார். அதன் முதல் பக்கத்தில் சிவன் யார் என்று விளக்கம் தருகிறார்.

சிவன் பிராமணன் இல்லை. ஏனென்றால் அவன் சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். சிவனிடம் பொருளில்லை. அருளே தருவான் அவன் வணிகனுமல்ல. எப்போதும் யோகத்தில் அமைதியில் இருப்பவன். அதனால் சத்திரியனும் இல்லை. சூத்திரனும் இல்லை. He is beyond all caste and creed.

ஆனந்த் குமாரசாமி டான்ஸ் ஆஃ ப் சிவா என்ற நூலில் “The Conception itself is a Synthesis of the life and the art” என்கிறார். ‘கடவுள் செத்துவிட்டான்’ என்று சொன்ன நீட்சே, “நான் கடவுளை நம்பவேண்டுமானால் அவருக்கு நடனம் ஆடத் தெரிந்திருக்க வேண்டும்” என்கிறார். நடனம் ஆடவேண்டுமானால் நடராஜன் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?

ரோடின் என்ற உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு சிற்பக் கலைஞன் நடராஜரை நேரில் பார்த்ததே இல்லை. அவருக்கு 1913இ-ல் சென்னை அருங்காட்சியகத்திலிருந்த நடராஜரின் வெண்கலச் சிலையின் புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. நடராஜர் உருவம் அவரை ஆக்கிரமிக்கிறது. அவர் தன்னுடைய ‘ரோடின் அண்ட் தி டான்ஸ் ஆஃப் சிவா’ (Rodin and the Dance of Shiva) நூலில் நடராஜரைப் பற்றி இப்படி எழுதுகிறார்.

Viewing The Full Shiva: “In the full bloom of life, the flow of life, the air, the sun, the sense of being simply overflows. This is how the art of the Far East appears to us. From a certain angle, Shiva is a slender crescent. What talent, what pride in the body!” –  Rodin and the Dance of Shiva

இதைச் சொன்னது, ஆத்திகர்கள் அல்ல. ஒரு சிற்பக் கலைஞன்.

பெயரும் உருவமும் அற்ற நிலைக்கு வருவதே துரியம் என்பார்கள். அடையாளம் அழிப்பதே அனைத்து மதங்களின் முக்கிய வேலை. அதைத் ‘திருவாசகம்’ சரியாகச் செய்கிறது. முழுத் திருவாசகமுமே தோன்றுதலையும் மறைதலையுமே சொல்கிறது.

நான் இல்லை என்றால் அவன் தோன்றுவான். எவன் மறைந்தால் எவன் தோன்றுவான்? “நான்” மறைந்தால் “அவன்” தோன்றுவான். அதாவது இறையோடு ஒன்றுவதே சாரம். ரிக், யஜூர், சாம, அதர்வண வேத மகாவாக்கியங்கள் சொல்வதும் இதுவே.

அஹம் ப்ரம்மாஸ்மி – நான் ப்ரம்மாயிருக்கிறேன்
தத்வம் அசி – நீயும் அதுவாகவே இருக்கிறாய்
அயம் ஆத்மா பிரம்ம – இந்த ஆத்மா பரம்பொருள்

இதைத்தான் மாணிக்கவாசகர் சொல்கிறார். இதையே சுருக்கமாக “நான் ஒழிந்தால், அவன் வருவான்” எனலாம். திருவாசகத்தில் திரும்பத் திரும்ப அகம் அழிக்கும் செயலைத்தான் மாணிக்கவாசகர் பாடுகிறார். ‘நாயினும் கடையேன்’ என்று தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார். ‘நாய்’ என்று தன்னைப் பலமுறை சொல்லிக்கொள்கிறார். ஏன் நாய் என்று சொல்ல வேண்டும்? அது நன்னெறி செல்லாது. பாதை விலகக் கூடியது. மாணிக்கவாசகர் நாய், தாய் என்ற இரண்டு கோட்பாடுகளை எடுத்தாள்கிறார். நாய் என்பது தன்னைத் தாழ்த்தி அகம் அழிப்பதற்கு.

நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
தாய்க்குத் தனிஇயற்கை தான்

என்று சொல்கிறார். “தாயினும் சாலப் பரிந்து” என்று இறைவனைச் சொல்கிறார். அப்பன், அத்தன், அச்சன் என்று சொல்பவர், கடைசியில் அச்சோப்பதிகத்தின் கடைசிப் பாடலில் அம்மை என்று முடிக்கிறார்.

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

தன்னை அகமழித்து இறைவனைத் தாயாக, அர்த்தநாரீசுவரராகவே சிவனைப் பார்க்கிறார் மாணிக்கவாசகர்.

சந்தியா நடராஜன் <sandhyapathippagam@gmail.com>

Amrutha

Related post