எதிர்ப்பு நாகரிகம் – இந்திரா பார்த்தசாரதி

 எதிர்ப்பு நாகரிகம் – இந்திரா பார்த்தசாரதி

சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லி சென்றிருந்தேன்.

’லௌஞ்சி’ல் ஒரு நாள் குர்த்தா, பைஜாமா அணிந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் என்னிடம் வந்து ‘நமஸ்தே’ என்றார். அவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் அப்பா ஒரு ஹிந்தி எழுத்தாளர். ‘எமர்ஜென்சி’யின் போது எழுதுவதை நிறுத்திவிட்டு ‘பான்’ கடை வைத்து, ‘இச்சூழ்நிலையில் என்னால் எழுத முடியாது’ என்று தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை, இந்திரா காந்தி உள்பட. பிறகு போலந்து போயிருந்தபோதுதான் இத்தகைய எதிர்ப்புக்கு என்ன பெயர் என்று தெரிந்துகொண்டேன்.

‘Internal Immigration’ என்ற ஒரு புது சொல்லாட்சியை நான் போலந்தில் இருந்தபோது (1982-86) கேட்டேன். அப்பொழுது போலந்தில் ராணுவச் சர்வாதிகார ஆட்சி. பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ இல்லை. பிரபலக் கலைஞர்கள் (எழுத்தாளர்கள் உள்பட) ‘Internal Immigration’ நிலையில் இருப்பதாக என் வார்ஸா பல்கலைக்கழகப் பேராசிரிய நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். இதன் அர்த்தத்தையும் எனக்கு விளக்கினார்கள்.

ராணுவ அரசாங்கம், ‘இன்னதுதான் எழுதலாம், இன்னது எழுதக்கூடாது’ என்று ஆணையிடலாமேயன்றி, ஓர் எழுத்தாளரை அவர் எழுதித்தான் ஆகவேண்டுமென்று கட்டளையிட முடியாது. ஓவியர்களைப் படம் வரைய வற்புறுத்த இயலாது. பாடகர்களைப் பாடும்படியாகக் கட்டாயப் படுத்தல் கடினம். இக்கலைஞர்கள் தம் தம் கலை ஆற்றலைத் தமக்குள் ஒடுக்கிக்கொண்டு, அவர்களுடைய திறமைக்குச் சம்பந்தமேயில்லாத பணிகளில் இருப்பதுதான் ‘Internal Immigration’. எழுத்தாளர்கள் வாடகை வண்டி ஓட்டினார்கள்; ஓவியர்கள் முடிவெட்டினார்கள்; பன்றி மாமிசம் விற்கும் கடையில் வேலை பார்த்த, பியானோ அருமையாக வாசிக்கும் ஒரு மிகப் பிரபல இசைக் கலைஞரை என் பேராசிரிய நண்பர் ஒருவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்பொழுது எனக்கு அந்த ஹிந்தி எழுத்தாளரின் எதிர்ப்பு நினைவுக்கு வந்தது. பாவம், பாரத புண்ணிய பூமியில் அவரை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

ஆனால், போலிஷ் அரசாங்கத்தைப் போலிஷ் கலைஞர்களின் இவ்வெதிர்ப்பு, தார்மீக மனச்சங்கடத்துக்கு உள்ளாக்கியது போல் தெரிந்தது. நேரடியாக அரசாங்கக் கொள்கைகளைத் தாக்கும் கட்டுரைகளுக்கும் விவாதங்களுக்கும்தான் அரசாங்கக் கட்டுப்பாடுகள், மற்றபடி, இக்கட்டுப்பாடு கலைகளுக்கில்லை என்று விதிகள் தளர்த்தப்பட்டன. மாஸ்கோ கரடி அணைப்பிலிருந்த மற்றைய கம்யூனிஸ்ட் நாடுகளில் போலல்லாமல், போலந்தில் ‘மனித முகமுடைய கம்யூனிஸ்ட் அரசாங்கம்’ என்று சொல்லப்படுவது வழக்கம். ராணுவ ஆட்சி அமுலுக்கு வந்ததும், தொலைப்பேசியில் கருவியை எடுத்ததும், நான் கேட்ட அறிவிப்பு: “நீங்கள் பேசுவது பதிவு செய்யப்படுகிறது. கவனமாகப் பேசுங்கள்” என்பதுதான். அதாவது, ‘அரசாங்கத்துக்கு எதிராக ஏதாவது சொல்லி, உங்களைக் கைது செய்யும் தர்ம சங்கடத்துக்கு எங்களை உள்ளாக்காதீர்கள்’ என்று அரசு மன்றாடுவது போலிருந்தது.

இக்கால கட்டத்தில்தான், மிகச்சிறந்த போலிஷ் படைப்பாளியாகிய ஸ்லாவொமிர் மிரோசெக்க்கின் ‘Meta-Theatre’ வகையைச் சார்ந்த அரசியல் அங்கத நாடகங்கள் மீண்டும் மேடையேறத் தொடங்கின. ’Striptease’ என்ற அவருடைய நாடகம் குறிப்பிடத்தக்கது.

‘அ’ என்பவன் ஓர் இலட்சியவாதி, ‘ஆ’ என்பவன் யதார்த்தவாதி. இருவரும் அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இருவரும், சந்தர்ப்பவசத்தால், ஜன்னலில்லாத ஓர் அறையில், கண்ணுக்குத் தெரியாத ஓர் ஆளும் சக்தியினால் அடைக்கப்படுகின்றனர். சிறிது நேரம் மனச் சங்கடத்துக்குள்ளாகிய இருவரும், பிறகு விவாதிக்கத் தொடங்குகின்றனர்.

அவர்கள் விவாதித்த தலைப்பு: ‘நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திர உணர்வு’, ‘பய உணர்வு’ ஆகியவற்றைப் பற்றியது. அப்பொழுது ஒரு ராட்சசக் கை அவர் அறைக் கதவருகே தோன்றி, அவர்களுடைய உடைகளைத் தரும்படிக் கேட்கின்றது. விவாதச் சூட்டில், அவர்கள் தங்களுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக, டை, கோட், சட்டை, பனியன், பான்ட் என்று கழற்றித் தன்னிச்சையாகத் தந்துகொண்டே இருக்கின்றனர். அதே சமயத்தில் அவர்கள் விவாதத்தை நிறுத்தவில்லை. (நாட்டில் அக்கிரமம் நடக்கும்போது, செயல்பாடு ஏதுமின்றி, நம் நாட்டில் இப்பொழுது காட்சி ஊடகங்களில் நடக்கும் சூடான விவாதங்களை நினைவுறுத்தக் கூடும்!)

திடீரென்று அவர்களுக்கு அப்பொழுதுதான் உறைக்கின்றது. இருவரும் நிர்வாணமாக இருக்கிறார்கள்! இது ஒரு புது விவாதத்துக்கு அடிகோலுகின்றது. “நான் மனதளவில் கோட்பாடுகளால் நிறைந்திருப்பதினால், உடலைப் பற்றிய நிர்வாணம் ஒரு பெரிய விஷயமில்லை. என் உடைகளிலா என் சுதந்திர உணர்வு இருக்கிறது?” என்கிறான், இலட்சியவாதியாகிய ‘அ’.

‘ஆ’ கூறுகிறான்: “இந்தச் சூழ்நிலையினின்றும் தப்பித்துக் கொள்வதைத்தான் நான் விரும்புகிறேன். இதற்கு எது வேண்டுமானாலும் செய்ய நான் தயார்.”

‘அ’ சொல்லுகிறான்: “சுதந்திரம் என்றால் என்ன? எனக்கு வெளியே போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற என் சுதந்திரத்தை உணர்வதுதான். ஆனால், அப்படி வெளியே போய்விட்டேனானால், போய்விடுதலாகிய செய்கை, போகமுடியும் என்று தொடர்ந்து உணர்ந்துகொண்டே இருக்கின்ற என் கட்டுப்பாடற்ற மன நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதால், இதுவே என் மனச் சுதந்திரத்தின் தளையாகி, நான் போய்விடுதலாகிய என் செய்கைக்கு அடிமையாகி விடுகின்றேன். ’சுதந்திரம்’ என்பதைச் சுதந்திரமில்லாத நிலையில்தான் ஒருவனால் உணர முடியும்.”

“நான் என் அகத்தைப் பற்றிய சுதந்திரத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. நான் இப்பொழுது வெளியே போக வேண்டும். இதுதான் புற மயமான என் சுதந்திரம்” என்கிறான் ‘ஆ’.

அப்பொழுது ஒரு ராட்சசக் கை தோன்றி இருவர்களுடைய கைகளுக்கும் விலங்கிடுகிறது. அகச் சுதந்திரம், புறச் சுதந்திரம் இரண்டும் பறி போன நிலையில், இருவர் தலைகளிலும் கோமாளிக் குல்லாய் போடப்பட்டு, மேடையில் அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதுதான் இறுதிக் காட்சி!

தொலைக் காட்சி மூலம், மாஸ்கோவின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, ‘Committed Writing’, அதாவது, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைச் சார்ந்த படைப்புக்களின் அவசியம் அடிக்கடி வலியுறுத்தப்பட்டது. ஆனால், அது எப்படி நடைமுறையில் செயல்படுத்தப் படுகின்றது என்பதைப் பற்றி அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. அப்பொழுது தொலைக்காட்சியில் ஒரு நாடகத்தில், ஆதாம் வாஷ்கின் கவிதையை ஒரு கதாபாத்திரம் மேற்கோள் காட்டியது, அந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியும் அளித்தது.

அக்கவிதை…

நம் தலைவர் அன்றே சொன்னார்
நம் ஆட்சியில் கடல் அமுதமாய் இனிக்குமென்று.
கடல் நீரைக் குடித்து விட்டு
‘அமுதம்’ ‘அமுதம்’ என்று கோஷமிடக்
கற்றுக் கொண்டோம்!
சித்தாந்தம் வாழ்க! சித்தாந்தம் வாழ்க!’

அவர்கள் கோஷமிட்டுக் கொண்டே
நம்மிடம் சொன்னார்கள்,
சித்தாந்த ஆட்சியில் விரலை வெட்டிக் கொண்டாலும்
வலிக்காதென்றார்கள்
வெட்டிக்கொண்டோம்.
வலித்தது.
மரணம் சம்பவித்தது,
சித்தாந்தத்துக்கு!

 

இந்திரா பார்த்தசாரதி <parthasarathyindira@gmail.com>

Amrutha

Related post