டேவிட் புல்லர்: பிரித்தானியாவின் திருடன் மணியன் பிள்ளை – சு. கஜன்

 டேவிட் புல்லர்: பிரித்தானியாவின் திருடன் மணியன் பிள்ளை – சு. கஜன்

வக்கிடங்கு ‘அசுரன்’ என அழைக்கப்படும் நான்கு பிள்ளைகளின் தந்தையான, 67 வயதான டேவிட் புல்லர் (David Puller) என்பருக்கு பிரித்தானிய நீதிமன்றம் கடந்த வருட இறுதியில் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது. கடந்த ஒரு வருடமாக நடைபெற்ற இவ்வழக்கில், “இறந்தவர்களுக்கு எதிராக இந்த அளவில் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை எந்த பிரித்தானிய நீதிமன்றமும் இதற்கு முன் பார்த்ததில்லை” என நீதிபதி தனது இறுதிக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.

33 வருடங்களாக சட்டத்தின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சர்வ சாதாரணமாகத் திரிந்த புல்லர் கடந்த வருடம் மாட்டிக்கொண்டார். இந்த வழக்கைக் கையாள்வதற்காகச் சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் 150 பேர் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் 2.5 மில்லியன் பவுண்டுகள் வரை செலவிடப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது. டேவிட் புல்லர் ஒரு கேவலமான நோய்வாய்ப்பட்ட ஒரு விலங்கு எனவும், மனிதாபிமான செயல்கள் அனைத்துக்கும் எதிரானவன் எனவும், இறந்தவர்களின் கண்ணியத்தை மதிக்கத் தெரியாதவன் எனவும், புல்லரினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர். இவ்வாறு திட்டித் தீர்க்கும் அளவுக்குப் புல்லர் என்ன செய்தார்? யார் இந்த டேவிட் புல்லர்? எதற்காக இவருக்குப் பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது?

புல்லர் 1989ஆம் ஆண்டுமுதல் பிரித்தானியாவின் கென்ட் என்னும் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் மின்சார இயந்திரங்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். இறுதியாகக் கைது செய்யப்படும்போது டன்பிரிட்ஜ் வெல்ஸ் என்னும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தார்.

பிரித்தானிய வைத்தியசாலையில் மின் பழுது பார்ப்பவராகவும் மின்பராமரிப்பாளாராகவும் கடமையாற்றி வந்த புல்லர், வைத்தியசாலை பிணவறையில் உள்ள சடலங்களுடன் புணர்வதும் அவற்றை சட்ட விரோதமாக வீடியோ மற்றும் புகைப்படமாக எடுப்பதையும் பல வருடங்களாக செய்து வந்திருக்கின்றார்.

சிறுமிகள் உட்பட 102 பெண்களின் உடல்களை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்திருக்கின்றார். அதில் ஒன்பது வயது சிறுமி, பதினாறு வயது சிறுமி உட்பட நூறு வயது வயோதிப பெண்ணும் அடங்குவர்.

மின் பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்ததனால் அவர் அடிக்கடி பிணவறைக்கு சென்று வருவதை மருத்துவமனை ஊழியர்கள் யாரும் சந்தேகப்படவில்லை. அதிலும் குறிப்பாக பெரும்பாலான மருத்துவமனை ஊழியர்கள் மாலை நேரம் வீட்டுக்கு சென்ற பின்னரே புல்லர் பிணவறைக்கு சென்று தனது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். டேவிட் புல்லர் இந்தக் குற்றங்களை நீண்டகாலமாக செய்து வந்துகொண்டிருந்தமையானது ஒரு தேசிய ஊழல் என ஊடகங்களால் அழைக்கப்படுகின்றது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், பிரித்தானியக் காவல்துறையினர் புல்லரை அவரது இல்லத்தில் வைத்து, 1987இல் இடம்பெற்ற வெவ்வேறு இரு கொலைகள் தொடர்பான குற்றத்திற்காகக் கைது செய்தபோது, 2008 முதல் 2020 வரையான காலப்பகுதியில் சடலங்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த காட்சிகளை வீடியோ ஒளிப்பதிவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்து வைத்திருந்த குறும் தட்டுக்களையும் நெகிழ் வட்டுகளையும் (Floppy Disk) கைப்பற்றியிருந்தனர். அதன் பின்னரே, புல்லர் பல வருடங்களாகச் சடலங்களைத் துஷ்பிரயோகம் செய்து வந்திருக்கின்றார் என்ற தகவல் வெளி உலகிற்குத் தெரிய வந்தது.

புல்லர் 1987ஆம் ஆண்டு வெண்டி நெல், கரோலின் பியர்ஸ் என்னும் இரு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தபின் அவர்களைக் கொலை செய்துள்ளார். அந்தக் காலத்தில் ‘பெட்ஷிட் கொலைகள்’ (Bedsit Murders) எனப் பிரபலமாகப் பேசப்பட்ட இந்த வழக்கின் குற்றவாளி யார் என்று தெரியாமல் வழக்கு கிடப்பிலேயே போடப்பட்டது. கொலையாளியின் இரத்தம் தேய்ந்த கைரேகை மற்றும் டி.என்.ஏ, கொலை நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட போதும், அந்தக் காலத்தில் டி.என்.ஏ. தொழில்நுட்பம் அவ்வளவாக முன்னேற்றகரமாக இல்லாததால் கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.

மேம்படுத்தப்பட்ட டி.என்.ஏ தொழில்நுட்பம் தற்பொழுது உள்ளதால் அதனைப் பயன்படுத்தியே, 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலையைப் புல்லர்தான் செய்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. வெண்டி நெல் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளையும் புல்லரின் டி.என்.ஏ மாதிரிகளையும் பரிசோதித்த போது ஒரு பில்லியன் மடங்கு ஒத்துப்போயிருந்தன எனவும், கரோலின் பியர்ஸ் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள், புல்லரின் டி.என்.ஏ. மாதிரிகளுடன் 160,000 மடங்கு ஒத்துப் போயிருந்தன எனவும் கண்டறியப்பட்டது. இதன் பின்னரே பிரித்தானியக் காவல்துறை புல்லரைக் கைது செய்யும் முடிவுக்கு வந்தது.

இதுதவிர 1973 முதல் 1977 வரையான காலப்பகுதியில் புல்லர் நாற்பதிற்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டிருக்கின்றார்; எனினும் போதிய ஆதாரமின்மையினால் அவர் கைது செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

திருடன் மணியன் பிள்ளை போல் இவரது திருட்டுக்கள் நுட்பம் நிறைந்ததாகவும் சாகசத்தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது. எனினும் மணியன் பிள்ளை போல் இவர் எந்த திருட்டுக்கும் மாட்டுப்படவில்லை. அத்தோடில்லாமல் மணியன் பிள்ளைக்கு ஒரு படி மேலே சென்று இவர் கொலை, பாலியல் வன்புணர்வுகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்.

பிரித்தானியாவில் டி.என்.ஏ. தொழில்நுட்பமானது எண்பதுகளில் அவ்வளவு மேம்பட்டதாக இருக்கவில்லை. 1995ஆம் ஆண்டுதான் டி.என்.ஏ. தரவுத்தளம் (DNA Database) உருவாக்கப்பட்டது. அதன் பின்னரே பிரித்தானிய மக்களின் டி.என்.ஏ. பற்றிய தகவல்கள் டி.என்.ஏ வங்கியில் (DNA Bank) சேகரிக்கப்பட்டது. ஆகவே, 1995க்கு முன்னரே பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த புல்லரைக் கண்டுபிடிப்பது பிரித்தானியக் காவல்துறைக்கு அந்தக் காலத்தில் சிரமமாக இருந்தது.

இரட்டைக் கொலை, திருட்டு, நூற்றிற்கும் மேற்பட்ட இறந்த பெண் உடல்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போது அவரை சுற்றியிருந்தவர்களே கதிகலங்கிப் போனார்கள். ஏனெனில், குழந்தைகள் மீது அன்பு காட்டுபவராகவும் நண்பர்களுக்கு உதவி செய்பவராகவும் பறவைகளைக் கண்காணிக்கும் இயற்கை ஆர்வலராகவும் ‘அங்கிள் டேவ்’ என செல்லமாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் அழைக்கப்படுபவராகவும்தான் அவர்களுக்கு அவர் தெரிந்திருந்தார். புல்லரின் உண்மை முகத்தைப் பற்றித் தெரிந்த பொது அவரை சுற்றியிருந்தவர்கள் சற்று ஆடித்தான் போனார்கள்.

குற்றவியல் துறையில் உடைந்த ஜன்னல் கோட்பாடு அல்லது உடைந்த சாளரக் கோட்பாடு (Broken Window Theory) என்று ஒரு கோட்பாடு காணப்படுகின்றது. பிலிப் ஜிம்பார்டோ மேற்கொண்ட பரிசோதனைகளில் இருந்து வில்சன் மற்றும் கெல்லிங்க் ஆகியோரால் 1982ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக் கோட்பாட்டின் பிரகாரம் சிறு கொள்ளை, திருட்டு போன்ற சிறு குற்றங்கள் அல்லது குற்றத்திற்கான அறிகுறிகள் ஆரம்பத்தில் கண்டிக்கப்படாவிடில் அவை வளர்ந்து மிகப் பெரும் குற்றச் செயல் செய்வதற்கு ஊக்கமாக அமைந்துவிடும் எனக் கூறுகின்றது. டேவிட் புல்லரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டிருந்தால் இத்தகைய பெரும் குற்றங்களில் ஈடுபட்டிருக்கமாட்டார் என்பதே நிதர்சனம்.

டேவிட் புல்லர் Necrophilia (நெக்ரோபிலியா) என்னும் ஒரு வித நோயால் பாதிக்கப்பட்ட நபர் என்றே கூறப்படுகின்றது. இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்த உடல்கள் மேல் பாலியல் ரீதியில் ஈர்க்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு என உளவியலாளர்கள் கருதுகின்றனர். தமது துணையால் நிராகரிக்கப்பட்டவர்கள், அதீத தனிமை உணர்விலிருந்து விடுபட முனைபவர்கள், சடலத்தின் மீது அதிகாரத்தை செலுத்துவதன் மூலம் ஒருவித திருப்தியை அடைபவர்கள், உயிருடன் இருக்கும் பெண்ணுடன் உறவு கொள்வது பாவம் என்ற நம்பிக்கை கொண்டவர்கள், நரம்பியல் கோளாறு உடையவர்கள் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அத்துடன் மருத்துவமனை ஊழியர்கள், அதுவும் குறிப்பாக பிணவறை ஊழியர்கள், சுடுகாடு அல்லது கல்லறையில் வேலை செய்பவர்களிடம் இந்தக் கோளாறு உருவாகும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. ஏனெனில், தொழில் நிமித்தம் பிணங்களுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணி வருவதால் இக்கோளாற்றுக்கு இலகுவில் ஆட்படக்கூடும். அத்துடன் இவர்கள் மரணம் அல்லது கொலையால் ஈர்க்கப்பட்டவராகவும், வன்முறையை விரும்புவர்களாகவும் காணப்படுவர்.

‘ஸ்பைடர்’ திரைப்படத்தில் வரும் எஸ்.ஜே சூர்யாவின் கதாபாத்திரமும் கிட்டத்தட்ட இதை மனநிலையில்தான் காணப்படும். நெக்ரோபிலியா என்னும் நோயானது மனிதர்களிடம் மட்டுமல்ல சில பறவைகள், தவளைகள், ஊர்வன போன்றனவற்றிடமும் காணப்படுகிறது.

1987ஆம் ஆண்டு செய்த இரட்டைக் கொலைகளுக்காக புல்லர் தற்பொழுது கைது செய்யப்படவில்லையெனில் கடைசி வரையும் அவர் சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கமாட்டார், அவரின் பிணவறை மோசடியும் வெளிவந்திருக்காது.

இங்கிலாந்தின் பல நகரங்களில் பல விசித்திரமான குற்றச் செயல்கள் நடைபெற்றபோதும், காவல்துறை வரலாற்றில் இதுபோன்ற குற்றம் செய்த மனிதனை இதற்கு முதல் கண்டதில்லை எனக் கூறுகிறது, இங்கிலாந்து காவல்துறை. பிரித்தானியக் குற்றவியல் வரலாற்றில் மிகக் கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களில் டேவிட் புல்லரும் ஒருவர் என்றே வரலாறு அவரை பதிவு செய்து வைத்திருக்கின்றது.

‘குற்றவாளிகளாலும் குற்ற வாசனை உள்ளவர்களாலும் நிம்மதியாகத் தூங்க முடியாது’ என்கிறார் திருடன் மணியன் பிள்ளை. டேவிட் புல்லர் இதுவரை நிம்மதியாகத் தூங்கினாரோ இல்லையோ இனிமேல் நிம்மதியாகத் தூங்கமுடியாது என்பதே உண்மை.

சு.கஜன் < gajan2050@yahoo.com>

kajamugan

 

Amrutha

Related post