பாவமன்னிப்பு – ப. கவின் கார்த்திக்

 பாவமன்னிப்பு – ப. கவின் கார்த்திக்

கிறிஸ்துமஸ் வர இன்னும் இரு வாரங்களே இருந்ததால் தேவாலயத்தை சுத்தப்படுத்தும் பணியில் டேவிட் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தான். கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன.

வார இறுதி நாட்களுக்குள் வேலைகளை முடித்தாக வேண்டும். பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. அப்போது தேவாலயத்தைச் சுற்றியிருக்கும் அறைகளுக்கு பெயிண்ட் அடித்த நபர்களில் ஒருவருக்கு தேவாலயத்திற்கு பின் அமைந்துள்ள தோட்டத்திலிருந்து ஒரு பழைய டிரங்க் பெட்டி ஒன்று கிடைத்தது. அவர் அதை அப்படியே டேவிட்டிடம் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது அவன் வேலையில் கவனமாக இருந்ததால் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

“பழைய பெட்டிதானே! என்ன இருக்கப் போவுது; கொண்டு போய் கர்த்தர் படத்துகிட்டயே வைங்கண்ணே. அப்புறம் தொறந்து பாத்துக்கலாம்” என்றான்.

அன்று வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டுத் தூங்குவதற்கு முன் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்துவிட்டு செல்ல வந்தபோதே அந்த பெட்டி மீண்டும் அவன் கண்களில்பட்டது. அது மிகவும் துருப்பிடித்துப் போயிருந்தது. பெட்டியின் மேலிருந்த தூசியை கையால் தட்டியபோது நாசியில் காரமேறி அவனுக்குத் தும்மல் வந்தது.

திறந்த பார்த்தபோது, அதில் ‘புத்துயிர்ப்பு’ என்ற ஒரு புத்தகமும் சில கடிதங்களும் இருந்தன. அந்த பெட்டி, உள்ளிருந்த புத்தகம், கடிதங்கள் என யாவும் அழுக்கடைந்து போயிருந்தன. புத்தகத்தின் இரண்டாம் பக்கத்திலிருந்த ஃபாதர் மேத்யூ என்ற பெயரைப் பார்த்தபோது அவன் ஒரு நிமிடம் கண்கலங்கி நின்றான்.

ஃபாதர் மேத்யூ இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. டேவிட்டை இந்த தேவாலயத்திற்கு அழைத்து வந்தது அவர்தான். அவர் இறந்த துக்கத்திலிருந்து அவன் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் எதற்காக அவரை ஞாபகப்படுத்தும் இந்தப் பெட்டி இப்போது அவன் கைகளுக்கு கிடைத்திருக்கிறது என்று குழம்பியபடியே மீண்டும் பழைய நினைவுகளுக்குள் மூழ்கத் தொடங்கினான்.

 

ஃபாதர் இறந்த அன்று அதை முதலில் பார்த்தது டேவிட் தான்.

அன்று ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தரான ஜோஹன் மோசஸின் குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்யும் விழா ஃபாதர் மேத்யூவின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற இருந்தது. மேலும் திருச்சபை சார்பிலேயே விழாவிற்கு வரும் அனைவருக்கும் அன்று மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட வேண்டியிருந்ததால், டேவிட் அதிகாலையிலேயே எழுந்து பிரார்த்தனை முடித்த கையோடு, சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரக் கிளம்பினான். அப்போது காலை அறு மணி இருக்கும்.

வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடும் பழக்கம் ஃபாதருக்கு இருந்ததால், அன்று ஆறு மணியாகியும் அவர் தன் அறையை விட்டு வெளியே வராததைப் பற்றி டேவிட் சற்று தயக்கத்துடனே சமையல்கட்டிலிருந்த லூர்த்துசாமி அண்ணனிடம் போய் சொன்னான்.

“என்னனு தெரியலேயப்பா. . வழக்கமா இந்நேரம் எழுந்து பிரார்த்தனைலாம் முடிச்சுருவாரே. விழாவுக்கு வேற நேரமாகிப் போச்சு. எழு மணிக்கு எல்லாரும் வந்துருவாங்க. நீ எதுக்கும் ஃபாதர் அறை கதவை தட்டி பாரு” என்றார்.

“ஃபாதர் ஃபாதர்” என்று டேவிட் மெதுவாக அறைக் கதவைத் தட்டிய போது எதிர்முனையிலிருந்து எந்த பதிலுமில்லை. சற்று நேரத்தில் லூர்த்துசாமி அண்ணனும் அவனுடன் இணைந்துகொண்டார். கதவைத் தட்டும் ஓசை ‌அதிகரித்துக்கொண்டே‌ செல்ல ‌தேவாலயத்தை சேர்ந்த அனைவரும் ஃபாதர் மேத்யூவின் அறை முன்பு கூடினர். இறுதியில் டேவிட் அவரின் அறைக் கதவை உடைத்தாக வேண்டியிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது அவரின் இடது கை மணிக்கட்டை அறுந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. வலது கையில் இயேசுவின் மாலை ஒன்றை வைத்திருந்தார். அவரின் வலது கை பக்கத்தில் ஒரு சிறிய கத்தி உலர்ந்து போன ரத்தக்கறையுடம் இருந்தது.

அந்த காட்சியைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளதவனைப் போல அல்லது அது உணர்த்த முயலும் செய்தியை நம்ப மறுக்கும் ஒருவனாக டேவிட் ஃபாதர் மேத்யூவின் சடலத்தை பார்த்தபடியே உறைந்த போய் நிற்க, “ஐயோ ஐயோ, என்ன கொடுமை இது ஏசப்பா. என்ன கொடுமை, ஏன் இப்படி நடந்துச்சு… என்னாச்சு இவருக்கு….” என லூர்த்துசாமி அண்ணன் தான் முதலில் சத்தமாகக் கதறி அழுது அந்த செய்தியை உண்மையாக்க முயன்றார். அவரை தொடர்ந்து அங்கிருந்த அனைவருமே அதைச் செய்தனர். இறுதியில் டேவிட்டும்.

இறப்பு செய்தி அவர்களை முழுவதுமாக ஆட்கொண்டிருந்த வேலையில் ஜோஹன் மோசஸ் மற்றும் அவரின் மனைவி லிஸி ஆண்டனி தங்களின் குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்ய வேண்டி தங்கள் உற்றார் உறவினரோடு படையெடுத்து தேவாலயத்திற்குள் வந்திருந்தனர். மகிழ்ச்சியுடன் உள்ளே வந்தவர்களுக்கு இந்த செய்தி தெரியவர, அவர்கள் அனைவரையும் சற்று நேரத்திலேயே நிலைகுலைந்து போயிருந்தனர்.

வழக்கமாக தேவாலயத்திற்குள் நிலவும் அமைதியும் இனிமையும் அன்று அறவே தொலைந்து எங்குமே கவலை தோய்ந்த முகங்கள். பயம், பதட்டம் என அசாதாரணமான சூழ்நிலை. அவரின் தற்கொலை ஏற்படுத்திய அதிர்வலையை அங்கு குழுமியிருந்த அனைவரின் முகத்திலுமே காண முடிந்தது.

ஃபாதர் இறந்த சில விநாடிகளுக்குள்ளாகவே காவல்துறைக்குத் தகவல் சொல்லப்பட்டிருந்தது. அவர்கள் அங்கு வந்த நேரத்தில் ஃபாதர் இறந்து இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகியிருக்கக் கூடும். பிறகு வழக்கமான காவல்துறை செயல்முறைகள் அரங்கேறின. அவரின் அறையில் அவர்கள் துப்பு துலக்கியபோது அறையெங்கும் இயேசுவின் படங்கள், பழைய மற்றும் புதிய ஏற்பாடு புத்தகங்கள், சபை நடவடிக்கைகள் குறித்த கையேடுகள், பாமாலை பாடல் தொகுப்புகள் – இவை மட்டுமே இருந்தன. தன் இடது கை மணிக்கட்டை அறுத்துக்கொள்ள அவர் பயன்படுத்திய அந்த சிறிய கத்தியைத் தவிர அந்த அறையில் வேறெந்த சந்தேகத்திற்குரிய பொருளும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மேற்படி விசாரணைக்காக கத்தியை கவனமாக எடுத்துக்கொண்ட பின், ஃபாதர் இறந்த இடத்தைச் சுற்றி சாக்பீஸால் மார்க் செய்தனர். அவர்களின் உரையாடல், விசாரணையை அவர்கள் மேற்கொண்ட விதம் அனைத்தும் நடந்தது தற்கொலைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் படியாகவே இருந்தது.

ஆம்புலன்ஸ் வர செய்யப்பட்டு ஃபாதரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காவல்துறையுடன் டேவிட்டும் லூர்த்துசாமி அண்ணனும் மருத்துவமனைக்கு சென்றனர்.

பிரேதப் பரிசோதனை முடிவுகளில் ஃபாதர் அதிகாலை மூன்று முப்பது மணியிலிருந்து நான்கு முப்பது மணிக்குள் தன் உயிரை மாய்த்து கொண்டிருக்கக் கூடும் என்று சொல்லப்பட்டிருந்தது. அவர் தற்கொலையைப் பற்றிய இதுபோன்ற இன்னபிற செய்திகள் அனைத்தும் அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரின் தற்கொலைக்கான காரணத்தைத் தவிர.

காவல்துறை தரப்பில் அனைத்து சம்பிரதாயங்களும் நிறைவடைந்த பின், ஃபாதர் மேத்யூவின் உடல் தேவாலயத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

டந்தது தற்கொலைதான் என்று எல்லா வகையிலுமே உறுதி செய்யப்பட்ட பின்பும், சில கேள்விகளுக்கான பதில் வேண்டி காவல்துறை தரப்பினர் தேவாலய பணியாளர்களிடம் ஒரு சிறிய விசாரணை நடத்த எண்ணினர்.

‘இதெல்லாம் ஜஸ்ட் ஒரு ஃபார்மாலிட்டிதான், உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க’ என்கிற ரீதியிலேயே அவர்களின் அணுகுமுறை இருந்தது.

முதலில் தேவாலயப் பணியாளர்களில் முக்கிய நால்வரான டேவிட், லூர்த்துசாமி, ஸ்டெல்லா மற்றும் எஸ்தர் ஆகியவர்களிடமிருந்தே தங்களின் விசாரணையை அவர்கள் தொடங்கினர். டேவிட்‌டின் முன்கதை கூட அவர்களின் இந்த திடீர் சந்தேகத்திற்கும் விசாரணைக்கும் காரணமாக அமைந்திருக்கலாம் என அவர்கள் நால்வருமே நினைத்தனர். டேவிட்டுமே அப்படித்தான் எண்ணினான்.

தேவாலயத்திற்கு வெளியே இருந்த ஒரு சிறிய அறையில் ஒவ்வொருவரிடமும் தனியாக விசாரணை செய்யத் தொடங்கினர். டேவிட் எதிர்பார்த்ததைப் போலவே முதலில் அவனே அந்த அறைக்குள் சென்றான்.

“நீ எத்தன வருஷமா இங்க வேலைசெய்யுற?”

“ஐஞ்சு‌ வருஷமா சார்.”

“அதுக்கு முன்னாடி என்ன ஜெயில்ல இருந்தியா?”

“ஆமா சார்.”

“என்ன பண்ணிட்டு உள்ள போனா?”

அவன் இப்போது அமைதியாகவே இருந்தான். ஏனெனில் அவனுடைய ஒவ்வொரு பதிலுக்கும் கேள்வி கேட்கும் அந்த போலீசாரின் குரலில் அதிகாரத் தோரணை உயர்ந்துகொண்டே போனது.

“சொல்லு. என்ன பண்ணிட்டு உள்ள போனா?” என இப்போது சற்று கண்டிப்பான குரலில் மீண்டும் கேட்டார்.

“ஒரு கொலை பண்ணிட்டேன் சார். பணத்துக்காக தான். தனிப்பட்ட காரணம் ஒன்னும் இல்ல.” அவனின் குரலில் சுய அதிருப்தியும் அருவருப்பும் ஒருசேர இருந்தது.

“உனக்கு எப்படி இறந்து போன இந்த ஃபாதர் பழக்கம்?”

“ஜெயில்லருக்கும் போது எங்கள மாதிரி கைதிகள பாக்க மிஷனரி மூலமா அப்பப்போ ஃபாதர்கள் வருவாங்க சார். அங்கருக்க கைதிகள் அவங்ககிட்ட மனசு விட்டு பேசலாம், அழலாம். யாராச்சும் பாவமன்னிப்பு கேட்க விரும்புனா, அவங்ககிட்ட கேட்கலாம். அப்படிதான் ஒருநாள் நா ஃபாதர் மேத்யூவ சந்திச்சேன் சார். அவர்தான் எனக்கு பாவமன்னிப்பு கொடுத்தாரு. மனசுவிட்டு நா பேசுற எல்லாத்தையும் கேட்டாரு. அவர்கிட்ட பேசுற நேரத்துல மட்டும்தான் என்னோட குற்றவுணர்ச்சி கொஞ்சம் ‌மறையும்.

தண்டனை முடிஞ்சு எங்க போறதுனு தெரியாமா இருந்தப்போதான் அவர் ஞாபகம் வந்து, இங்க‌ வந்து அவர பாத்தேன். இங்கேயே தங்கி தேவாலயத்துக்கு தேவையான உதவிகளை செய்யச் சொன்னாரு சார்” என்றான்.

அவனின் பதில் அந்த அதிகாரியை சற்று அசைத்துப் பார்க்கவே செய்தது. அவர் தன்னுடைய அதிகார தோனியை இப்போது முற்றிலுமாகவே கைவிட்டிருந்தார்.

“சரி. உன்ன ஃபாதர் இங்க தங்க சொன்னப்போ மிஷனரி ஆளுங்க ஒன்னும் எதிர்ப்பு சொல்லலயா?” என்று இறுதியாக ஒரு கேள்வியை கேட்டார்.

“வேண்டாம்னு எல்லாரும் ஃபாதர் கிட்ட சொல்லதான் சார் செஞ்சாங்க. ஆனா, ஃபாதர்தான் எல்லார்கிட்டயுமே எனக்காக பேசி சம்மதிக்க வச்சாரு. அதுல சிலருக்கு இன்னுமே கூட நா இங்க இருக்கதுல விருப்பம் இல்ல சார். ஒரு கொலகார‌ பயலுக்கு என்ன தகுதியிருக்குனு அவங்க சொல்லுறதுலயும் தப்பில்லதானே” என்றான். அதற்கு பிறகு அவர் அவனிடம் எதுவுமே பேசவில்லை.

பின் எஸ்தர், ஸ்டெல்லா இருவரிடமுமே அடுத்தடுத்த விசாரணை நடந்தது. இருவருமே தேவாலயத்திற்கு வெளியே மெழுகுவர்த்திகள் விற்பனை செய்யும் நிலையத்தின் பணியாளர்கள்.

இருவரில் முதலில் எஸ்தரிடமிருந்தே தொடங்கினர்.

“கருணை நிறைஞ்ச மனசு அவருடையது. மிஷனரி மூலம் படிக்கும் குழந்தைகளுக்கு நிறைய உதவிகள் செஞ்சுருக்காரு. இங்க பிரார்த்தனைக்காக வரும் வசதி படைச்சவுங்ககிட்ட எடுத்துப் பேசி சுத்தியுள்ள கிராமங்கள்ல கஷ்டப்படுற நிறைய பேருக்கு அன்றாடம் நலத்திட்ட உதவிகள் செஞ்சுக்கிட்டே இருப்பாரு. அப்படி ஒரு குணம் பார்க்கவே முடியாது. அவருடைய சாந்தமான முகத்தை பார்த்தாலே கவலைலாம் மறைஞ்சிடும். அவரு ஏன் இப்படி பண்ணிக்கிட்டாருனு தான் புரியல” என்று எஸ்தர் கவலையுடன் கூறினார்.

அடுத்ததாக வந்த ஸ்டெல்லா கூறியதும் இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இருந்தது. சொற்றொடர்கள் மாறியிருக்கலாம். ஆனால், சாராம்சம் எஸ்தர் கூறியவற்றிலிருந்து விலகாமல் ஃபாதர் மேத்யூவின் மேன்மைகளை எடுத்துக்துரைக்கும் வகையிலேயே இருந்தது.

கடைசியாகத்தான் லூர்த்துசாமி அண்ணன் உள்ளே வந்தார்.

“நீங்கதான் இருபது வருஷமா இந்தச் சர்ச்சுல வேலை செய்யுறீங்க. உங்களுக்கு ஃபாதர் மேத்யூ ஏன் இப்படி செஞ்சுக்கிட்டாருனு எதாச்சும் ஐடியா இருக்க?”

“எனக்குமே அது இன்னும் புதிராதான் சார் இருக்கு. ஒன்னும் பொடிபடல.”

“தற்கொலைக்கு முன்னாடி அவர் கடைசியா வெளியே எங்க போனார்?”

வார நாட்கள்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு போய் வருவார். ஒருநாள் சிறை கைதிகள பாக்க, ஒருநாள் முதியோர் இல்லம், அப்பறம் மனநல காப்பகம்னு அது மாறிட்டே இருக்கும். அவர் இப்படி நிறைய இடங்களுக்கு போறது நிறைய பேர சந்திச்சு அவங்களோட மனக் கவலைகளை கேட்டறிஞ்சு அதை முடிஞ்ச அளவுக்கு சரிசெய்யதான்.

அவர் இறக்குறதுக்கு முன்னாடி நாள் மனநல காப்பகம்தான் போனாரு. எங்கிட்ட சொல்லிட்டுதான் போனாரு சார். அந்த காப்பகம் கூட இங்க பக்கத்துலதான் இருக்கு. செவ்வாய்க்கிழமைகள்ல அவர் அங்க போறதுதான் வழக்கம். அங்க போய் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக பிரார்த்தனை செய்யுவாரு.

இது மாதிரியே அவர் சிறைக்கு போனப்போ அவருக்கு பழக்கமானவன்தான் டேவிட்.”

“தெரியும். அடுத்து நா அததான் கேக்க வந்தேன். அவன் எப்படி?”

“அவனோட பழைய கதை என்னனு உங்களுக்கே தெரிஞ்சுருக்கும் சார். ஆனா இங்க வந்தப்பறம் அவனுக்கு இது மறுவாழ்வுதான். ஃபாதர் பேச்ச கேட்டு நல்ல மனுஷனா மாறிட்டான். ஃபாதர் அவனப் பத்தி என்கிட்ட பேசும்போது ரொம்ப நல்ல விதமா பேசுவார். புத்துயிர்ப்பு, அடிக்கடி அவனுடைய புது வாழ்க்கைய பத்தி பேசும்போது அவர் பயன்படுத்துற வார்த்தை. அதுக்கேத்த மாதிரிதான் அவனும் இங்க இருக்கான் சார்.

“எனக்கு சமையல் வேலையில முழு உதவியா‌ இருப்பான். தேவாலயத்த தினமும் தூய்மைபடுத்துற பணியையும் அவனே விரும்பி செய்யுறான்” என்றார்.

“சரி, அவருக்கு யார் மேலயாச்சும் இல்ல அவர் மேல யாருக்காச்சும் மனவருத்தம் இருந்துச்சா?”

“அப்படி எதுவும் இருந்த மாதிரி எனக்கு தெரியல சார்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

டேவிட்டின் கடந்து காலத்திற்கும் ஃபாதர் மேத்யூ திடீரென இறந்ததற்கும் எதாவது தொடர்பிருக்குமா என்கிற கேள்வியே இந்த விசாரணைக்கு அடிப்படையாய் இருந்ததால், லூர்துசாமி அண்ணன் கூறிய பதில் அவர்களின் சந்தேகத்தை களைத்து அந்த விசாரணையை முடிவுறச் செய்தது.

இறுதியில் அவர்கள் தேவை ஏற்பட்டால் மீண்டும் விசாரிக்க வருவோம் என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

ஆனால், அதற்குப் பிறகு அவர்கள் யாரும் வரவேயில்லை. ஊர் மக்களும் மெல்ல இந்த இறப்பு செய்தியை மறக்கத் தொடங்கியிருந்தனர். லூர்துசாமி அண்ணனும் இந்த சம்பவம் நடந்த வருடத்திற்குள் மஞ்சள் காமாலை நோய் தாக்கி இறந்துபோனார்.

 

நினைவுகளிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டவனாக டேவிட் ஃபாதர் மேத்யூவின் பெயர் எழுதியிருந்த அந்த புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் அந்த பெட்டிக்குள் இருந்த கடிதங்களை எடுத்தான்.

அப்போது அந்த கடிதங்களுக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் சிறிய புகைப்படம் சட்டெனக் கீழே விழுந்தது. பழைய புகைப்படம் என்பதால் அதன் ஓரத்தில் பழுப்பேறியிருந்தது. ஆனால், அவற்றுக்கு நடுவிலும் அந்த பெண்ணின் முகம் பாந்தமாகவும் அழகாகவுமே தெரிந்தது.

யார் இந்த பெண்? எதற்காக இந்த பெண்ணின் புகைப்படத்தை இவ்வளவு காலம் பாதுகாத்து வைத்திருக்கிறார்? என்று மீண்டும் அடுக்கடுக்கான கேள்விகள்.

மொத்தம் நான்கு கடிதங்கள் இருந்தன. அவை அனைத்துமே கறைபடிந்து பழுப்பேறிப் போயிருந்தன. எழுத்துக்கள் யாவும் மறைந்து கொஞ்சமே அவன் கண்களுக்கு புலப்பட்டன.

அதில் ஒரு கடிதம் மட்டுமே படிப்பதற்கு ஏதுவாக இருந்தது. எழுத்துக்கள் மறைந்து மங்கலாகத் தெரிந்த அந்த வாக்கியங்களைக் கொண்டு அவன் படித்த செய்தியானது பின்வருமாறு,

அன்புள்ள மேத்யூ,

நம் காதலைக் குறித்து எங்கள் வீட்டில் நான் தெரிவித்த மறுகணத்திலிருந்தே எனக்குத் திருமணம் செய்துவைக்க எங்கள் வீட்டார் தீவிரமாக முயன்று வருகின்றனர். என்னை வீட்டைவிட்டு எங்கேயும் தனியாக செல்ல அவர்கள் அனுமதிப்பதில்லை. கிட்டத்தட்ட ஒரு சிறை கைதி வாழ்க்கை. இனிமேலும் இங்கு என்னால் இருக்க முடியாது. நாளை இரவு என் வீட்டிலிருந்து வெளியேறி உங்களுக்காக பேருந்து நிலையத்தில் வழக்கமாக நாம் சந்திக்கும் இடத்தில் காத்திருப்பேன். எப்படியாவது வந்துவிடுங்கள். நாம் கிடைக்கும் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி பயணம் செய்து நம் புது வாழ்க்கையைத் தொடங்கலாம். நாளை நம்முடைய புதிய தொடக்கத்தை எண்ணி இன்று நிம்மதியாக உறங்கச் செல்கிறேன்.

இப்படிக்கு,

தங்களின் பாவை.

இந்த கடிதத்தை அவன் படித்த மாத்திரம் அவனுக்குள் சொல்லமுடியாத பல எண்ணங்கள் வேர்விடத் தொடங்கின. ஒரு சிறிய கடிதம் எத்தனை கலவையான உணர்வுகளைத் தாங்கி நிற்கிறது. இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் பாவை. எவ்வளவு பொருத்தமான பெயர். ஃபாதர் மேத்யூவின் உயிருக்குயிரான பாவை. ஆனால், ஏன் இவர்கள் காதல் கைகூடவில்லை? அன்று இரவு ஃபாதர் மேத்யூ அங்கு செல்லவில்லையா? பாவை அந்த பேருந்து நிலையத்தில் என்ன முடிவு செய்தார்? அதற்குப் பிறகு எங்கு சென்றார்? இப்போது எங்கே இருக்கிறார்? இருக்கிறாரா? அதற்கு பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டார்களா இல்லையா?

இது ஒருபுறமிருக்க, அத்தனை வருடங்கள் கழித்து ஃபாதர் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்? ஒருவேளை அதற்கு முந்தைய நாள் அவர் பாவையைப் பார்த்திருப்பாரோ? இவற்றை யோசிக்கும்போதே அவனுக்குள் மனநல காப்பகத்தில் எல்லாமும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் பாவையின் உருவம் தெளிவில்லாமல் தோன்றியது. அந்த தோற்றத்தை உடனடியாக களைத்து மீண்டும் இந்த கேள்விகளை எண்ணிப் பார்த்தான்.

ஆனால், இப்போது அவன் விடை தேட முற்படவில்லை. மாறாக ஃபாதர் மேத்யூவை புரிந்துகொள்ள முயன்றான். எத்தனையோ மனிதர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கிய மனிதர் இத்தனை ஆண்டுகள் தன் கவலைகளையும் தன்னுடைய பாவங்கள் எனக் கருதும் விஷயங்களையும் மனதினுள் புதைக்கொண்டே வாழ்ந்திருக்கிறார். அதனால் தானோ என்னவோ இந்த பெட்டியைத் தேவாலயத்திற்கு உள்ளே கொண்டு வராமல் வெளியிலேயே இவ்வளவு காலம் பாதுகாப்பாக மறைத்து வைத்திருக்கின்றார். தன் வாழ்நாள் முழுவதையும் தேவாலயத்திலேயே கழித்தும்கூட அவரால் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள முடியவில்லை.

குற்றவுணர்வு என்பது ஒரு சிறை. அதிலிருந்து ஒரு சிலரே மீண்டு வெளியே வருகின்றனர். தன்னை அப்படியான ஒரு சிறையிலிருந்து ஃபாதர் மேத்யூதான் முன்பு மீட்டெடுத்தார். ஆனால், காலம் அவரையே அந்த சிறைக்குள் தள்ளி இறுதிவரை அவர் அதிலிருந்து விடுபட முடியாதவாறு செய்திருக்கிறது. அவர் வாழ்வில் ஒரு மேத்யூ இல்லாமல் போனது காலம் செய்த பிழை. இறுதியில் மரணமே அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கி அவரை அந்த சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்திருக்கிறது.

இவற்றை யோசித்தவாறே அவன் கண்கலங்கி நிற்க, மேலிருந்த இயேசுவின் திருவுருவத்தில் அவரின் கண்கள் மீட்பின் அடையாளமாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“ப. கவின் கார்த்திக்” <kavinkarthik555@gmail.com>

pa. kavin karthik

Amrutha

Related post