இரண்டு தீர்ப்புகள் – பிரபு திலக்

 இரண்டு தீர்ப்புகள் – பிரபு திலக்

ச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள் தொடர்பாக ஏற்கெனவே இருந்த முக்கிய பார்வைகளை உறுதிபடுத்தியுள்ளன. பேரறிவாளன் விடுதலை, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகிய இரு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள்தான் அவை.

பேரறிவாளன் விடுதலை வழக்கில், அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்யும் உத்தரவை உச்ச நீதிமன்றமே பிறப்பித்துள்ளது. மனிதாபிமான – மனித உரிமை அடிப்படையில் இந்த விடுதலை வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே வேளையில், மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

நமது நீதி அமைப்பில் மன்னிப்பு அளிப்பதைப் பொருத்தமட்டில் கூடுதல் பங்கு மாநில அரசுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. சிறைவாசி தண்டனைக் காலத்தில் எத்தகைய மாற்றம் அடைந்துள்ளார், இந்த காலகட்டத்தில் அவரது நடவடிக்கைகள் எவ்வாறு இருந்துள்ளன மற்றும் அவரது குடும்ப நிலை, குழந்தைகள் நிலை முதலியவற்றைக் கணக்கில் கொண்டு விடுதலை அளிக்கும் உரிமையும் திறனும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால், பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் சார்பாக வாதாடிய ஒன்றிய அரசு இதில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குதான் உண்டு என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது. இந்த வாதத்தை நிராகரித்ததுடன், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 161-இன் கீழ் கருணை காட்டும் அதிகாரத்தை ஆளுநர் தன்னிச்சையாக பயன்படுத்த முடியாது என்றும், மாநில அமைச்சரவையின் ஆலோசனை அவரைக் கட்டுப்படுத்தும் என்றும் நீதிபதிகள் வலிறுத்தியுள்ளனர்.

இதற்காக நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் மாரு ராம் என்ற வழக்கை சுட்டிக்காட்டி உள்ளனர். Maru Ram vs Union of india 1980 என்ற இந்த வழக்கு குற்றவாளிக்கு கருணை காட்டும் குடியரசு தலைவருடைய அதிகாரம் குறித்து பேசக்கூடியது.

ஒன்றிய அரசின் சட்டத்திற்கு எதிராக ஒருவர் குற்றம் இழைத்து தண்டனை பெற்று இருந்தாலும், இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை பெற்று இருந்தாலும் அவர்களுடைய தண்டனையை குறைக்கும் அதிகாரத்தை, அரசியல் சாசன பிரிவு 72 குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கவோ, தண்டனை குறைப்பு செய்யவோ, தண்டனையை இடை காலமாக நிறுத்தி வைக்கவோ, வேறு ஒரு தண்டனையாக மாற்றவோ  குடியரசு தலைவர் உத்தரவிடலாம்.

ஆனால், இதற்காக குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்படும் பொழுது அது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் வழியாக மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்துடனும் கலந்தாலோசிக்க வேண்டும். இவ்வாறு கலந்தாலோசித்து அதற்குப் பிறகு உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு அந்த பரிந்துரையின் அடிப்படையிலேயே குடியரசு தலைவர் முடிவெடுக்க வேண்டும்.

அதாவது, அரசியல் சாசன பிரிவு 72-ஐ பயன்படுத்தி குடியரசுத் தலைவர் கருணை காட்டும் பொழுது, ஒன்றிய அரசாங்கத்தின் அறிவுரையை பெற்று அதன்படி நடக்க வேண்டுமே தவிர தனது சொந்த யோசனையின் படி நடக்க முடியாது. ஒன்றிய அரசாங்கத்த்தின் முடிவிற்கு குடியரசுத் தலைவர் கட்டுப்பட்டவர் ஆகிறார்.

இதே சட்டப்பிரிவை பேரறிவாளன் விவகாரத்தில் பொருத்திப் பார்த்து ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவிற்கு கட்டுப்பட்டவர் என்ற முக்கிய தீர்ப்பை தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு மூலம் மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இது பேரறிவாளன் வழக்கால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் மாநில சுயாட்சி – கூட்டாட்சித் தத்துவத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

 

பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் மாநில உரிமையை உறுதிபடுத்தும் மற்றொரு தீர்ப்பையும் வழங்கியது உச்சநீதிமன்றம்.

குஜராத்தைச் சேர்ந்த மோகித் மினரல்ஸ் எனும் நிறுவனம் கப்பலில் கொண்டுவந்த சரக்கிற்கு 5% ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை குஜராத் அரசு விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்த நிறுவனம், அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. மேலும் பல்வேறு இறக்குமதியாளர்களும் கடல்வழியாக வரும் சரக்கிற்கு ஐஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுச் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில், “கடல்வழியாக வரும் சரக்குகளுக்கு 5% ஐஜிஎஸ்டி வரி விதிப்பது சட்டவிரோதமானது. ஆதலால், அதை ரத்து செய்கிறோம். ஜிஎஸ்டி சபையின் அதிகாரம் என்பது பரி்ந்துரைகளை வழங்குவது மட்டும்தான். அதன் பரிந்துரைகள் ஒன்றிய அரசையோ அல்லது மாநில அரசுகளையோ கட்டுப்படுத்தாது” என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜிஎஸ்டி சபை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில்தான், “ஜிஎஸ்டி சபையின் அதிகாரம் பரி்ந்துரைகளை வழங்குவதும் ஆலோசனைகள் வழங்குவதும் மட்டும்தான். அதன் பரி்ந்துரைகள் ஒன்றிய அரசையோ மாநில அரசுகளையோ கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி சபையின் முடிவு, பரி்ந்துரைகள் என்பது, கூட்டாகச் சேர்ந்து ஆலோசித்து எடுக்குப்பட்ட முடிவுகளின் தொகுப்பு. ஒன்றிய அரசுக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஜிஎஸ்டி சட்டம் இயற்றுவது தொடர்பாக சம அதிகாரம் இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 246ஏ, 279ஏ ஆகிய பிரிவுகளில் 246ஏ பிரிவு ஒன்றிய, மாநில அரசுகள் சமம் என்று குறிப்பிடுகிறது. 279ஏ ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் தன்னிச்சையாக செயல்படமுடியாது எனக் குறிப்பிடுகிறது, ஆரோக்கியமான போட்டிமிகுந்த கூட்டாட்சியை வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு இருக்க வேண்டும் என்று கூறியே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. மாநில நிதியமைச்சர்களும் ஒன்றிய நிதி அமைச்சரும் கொண்ட குழுதான் ஜிஎஸ்டி சபை. இதன் பின்புலத்தில், அதிகாரிகள் கொண்ட நிர்வாக அமைப்பு இருக்கும். அவர்கள் வரி சதவீதங்களை ஆராய்ந்து, சபை எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான தரவுகளை, புள்ளிவிவரங்களை அளிப்பார்கள். இந்தக் குழு பரிந்துரைக்கும் முடிவு ஜிஎஸ்டி சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால், சபையில் ஒன்றிய நிதியமைச்சருக்கு மட்டும் வீட்டோ அதிகாரம் உண்டு. இதனால், பெரும்பான்மை மாநில நிதியமைச்சர்களின் முடிவு வேறாக இருந்தாலும் ஒன்றிய நிதி அமைச்சர் முடிவே வரியாகும். இதனால், ஜிஎஸ்டி சபையில் மாநில நிதியமைச்சர்கள் இடம்பெற்றிருந்தாலும் முடிவு எடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் உள்ளது என்பதே நடைமுறை உண்மை.

இதுபோல் ஜிஎஸ்டி விற்பனை வரியில் கிடைக்கும் நிதி மாநிலங்களின் கஜானாவுக்கும் செல்லும் என்றாலும், வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. இந்த முறையை தொடக்கத்தில், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மட்டுமல்ல மோடி முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தும் கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டின் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, இந்த வரிவிதிப்பு முறை, மாநிலங்களின் வரிவிதிப்பு இறையாண்மையைப் பாதிக்கும் என்னும் அடிப்படையில் மிக வலுவான வாதங்களை முன்வைத்திருந்தார்.

இதற்கு மாற்றாக ஜிஎஸ்டிக்கு ஆதரவான குரல்கள் பெரும் நிறுவனங்களிடம் இருந்து வந்தன. இந்த நிறுவனங்களுக்கு, ஒரே நாடு, ஒரே வரி என்னும் வரிமுறை நிர்வகிக்க இலகுவானது என்பதுதான் ஜிஎஸ்டி வரிவிதிப்புக் கொள்கைக்கு அடிப்படை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த வரிவிதிப்பு முறை இந்தியாவெங்கும் இயங்கும் பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமானவை, குறிந்தொழில்களுக்கு எதிரானவை. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்த நிர்வாக முறைக்குத் தேவையான நிதி ஆதாரங்களும் நிர்வாக முறைகளும் இல்லாமையால், இந்தியா முழுவதும் குறுந்தொழில்கள் நசிந்தன. குறுந்தொழில்கள்தாம் இந்தியாவில் மிக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பவை. இதனையடுத்து குறுந்தொழில்களைப் பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்தன. ஆனால், அவை ஏற்கப்படவில்லை.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்திய மாநிலங்கள், தம் கையில் இருந்த விற்பனை வரியை விதிக்கும் அதிகாரத்தை இழந்து, இன்று உள்ளாட்சி அமைப்புகள்போல மாறிவிட்டன. மாநில அரசுகளை, மைய அரசின் அதிகாரத்துக்குக் கீழ் நிலையில் வைத்து, பலவீனப்படுத்தி விடும் இந்நிலை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.

இந்நிலையில்தான், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்ந்து மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பல்வேறு வழிகளில் பறிக்கப்பட்டு அதிகாரம் முழுமையாக ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்த தீர்ப்புகள் அதற்கு ஒரு தடையை ஏற்படுத்தும்.

இந்த இரண்டு தீர்ப்புகளுமே நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் மற்றும் வரலாற்றில் இடம்பெறத்தக்க முக்கிய தீர்ப்புகள் ஆகும்.

prabhu thilak

Amrutha

Related post