இமையத்தின் அரசியலும் இலக்கியமும் 3

 இமையத்தின் அரசியலும் இலக்கியமும் 3

வரமாகக் கிடைத்திருக்கும் எழுத்து

ஜெ. கல்பனாத்ராய்

 

இமைத்தின் ‘பெத்தவன்’ புத்தகம் 40 பக்கங்கள்தான். 40 பக்கங்களில், ஒரு சூறாவளிக்குள் மாட்டிக்கொண்டது போலிருந்தது.

எவ்வளவோ நவீனத்துவங்கள் பெருகிவிட்ட நிலையிலும், யாராலும் ஒழிக்கப்பட முடியாத, சாதி என்ற அரக்கனுக்குக் கௌரவக் கொலை என்ற பெயரில் பலி கொடுக்கப்படும் இளம் காதலர்கள். அவர்களைப் பெத்தவனின் கொலை / தற்கொலைகளுக்குப் பின்னணியில் உள்ள ஊர், சாதிப் பஞ்சாயத்து என்ற பெயர்களில் நடக்கும் கொடூரங்களை இக்கதையில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் இமையம்.

இருபது வருடங்கள் தவமாய்த் தவமிருந்து, பெற்ற மகளைக் கௌரவத்துக்காகக் கொலை செய்யுமாறு கூறி ஒரு தகப்பனை ஊர்கூடி நிர்பந்திக்கிறது. இருமுறை கொல்லுமாறு கூறியும் கொல்லாததால் அடுத்த முறை ஊரே அக்கொடூரத்தை அரங்கேற்றும் எனவும் அச்சுறுத்துகின்றனர். எந்தெந்த வழியில் கொல்லலாம் என ஆலோசனைகள் வழங்கப்பட்டு அனைத்தும் தயார் செய்யப்பட்டு ஓர் இரவு மட்டும் அத்தகப்பனுக்குக் கெடு வழங்கப்படுகிறது.

அந்த ஓர் இரவுக்குள் அக்குடும்பம் படும் பாடுகளும் அவர்களுக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகளுமே கதை.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அவளின் தாய் உள்ளிட்ட அனைத்துப் பெண்களுமே அவளைக் கொல்வதற்கு உடந்தையாக இருக்கும் மனநிலைக்குப் பெயர்தான் என்ன?

அப்பெண்ணை அத்தந்தை கொல்லவில்லை எனில் சாதிப் பெருமைக்காக, அக்குடும்பமே தீயிட்டுக் கொளுத்தும். அப்பெண்ணையும் அவளின் காதலனையும் ஊர் கூடி சிதைத்துக் கொல்வார்கள். சில நேர்வுகளில் பெண்ணைப் பாசமாக வளர்த்து, கொல்ல முடியாத தகப்பன் எனில் அந்தப் பெத்தவன் ஊராரின் அழுத்தம் அவமானம் தாங்க முடியாமல் தன் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும். இன்றளவும் நடைமுறையில் இருக்கும் இதை நாமும் நாளிதழ்களில் படித்துக் கடக்கிறோம், எதுவுமே செய்ய இயலாமல். எங்கோ ஒரு பெண் தினமும் இத்தனை வதைகளைப் பட்டுக்கொண்டே இருக்கிறாள்.

தன்னைச் சுற்றி நிகழ்காலத்தில் நடக்கும் அநியாயங்களைப் பதிவு செய்து அதன் மூலமாவது தீர்வு வராதா என தேடும் இமைத்தின் எழுத்து காலத்திற்கேற்றது.

 

‘பெத்தவன்’ கதைக்குப் பிறகு இமையத்தின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு அடுத்ததாகப் படிக்கத் தெரிவு செய்த கதை ‘எங் கதெ’.

எந்தச் சீரும் செய்யாத, செய்ய முடியாதவனாக இருந்தாலும், தங்களுக்குத் திருமணமாகி குழந்தைகள் பெற்றுவிட்ட நிலையிலும், தன் புருஷனின் சம்பாத்தியத்திலிருந்து எடுத்த பணத்தை, தம்மக்களுக்கு பொங்கல் பணமாக வழங்குவதற்காகத் தங்கள் அண்ணனின் பாக்கெட்டில் பணம் வைக்கும் பாசமிகு தங்கைகள். தன் முப்பத்து மூன்று வயது வரை எந்தப் பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்காத நல்லதொரு ஆள். தன் ஊர்ப்பள்ளிக்கு வேலை நிமித்தம் வந்த, இரு குழந்தைகள் கொண்ட ஒரு விதவைப் பெண்ணுடன் கொண்ட தொடர்பால், 10 ஆண்டுகள் தன் வாழ்க்கையைத் தொலைத்து, அப்பெண் வேறு ஊருக்கு மாறுதலில் சென்ற போது வேறு ஒருவருடன் தொடர்புவைத்துக் கொண்டதன் காரணமாக, அப்பெண்ணைக் கொன்றுவிடத் துணியும் நிலை வரை அவனுடைய வாழ்க்கையை, அவன் மனப் போராட்டத்தினை அவன் வார்த்தைகள் வழியாகவே சொல்வதே ‘எங் கதெ’.

பத்திரிகைகளில் பரவலாகத் தினந்தோறும் ஒரு செய்தியாக நாம் இக்கதைகளைக் கடந்து வரும் நிலையில், அதன் பின்னே உள்ள ஆண் மனதின் எண்ணங்களை கதை நாயகனே நம்மிடம் பகிர்ந்துகொள்வதாகப் பதிவு செய்துள்ளார்.

ஒரு விதவைப் பெண், இரு பெண் பிள்ளைகளுடன் புதிதாக ஒரு ஊரில் பணிநிமித்தம் குடியேறும் நிலையில் என்னவெல்லாம் பாடுகள் பட வேண்டியுள்ளது என்பதையும் நாயகனின் சொற்கள் வழியாகவே அறிய முடிகிறது. தன் உடல் தேவைக்காகவும் பிற ஆண்களிடமிருந்து தன்னையும் தன் பெண் பிள்ளைகளையும் காத்துக்கொள்ளவும்கூட அம்பலவாணனைப் பயன்படுத்தியிருக்கலாம் கமலா.

ஒரு பெண்ணின் மனதில் என்னதான் இருக்கும் என்று அறியத் துடிக்கும் ஆண்களின் பிரதிநிதியாய்த்தான் தெரிகிறார் அம்பலவாணன். இறுதியில் அதைத் தெரிந்துகொண்டாரா? தெரியாது.

“அப்பத்தான் எனக்குத் தெரிஞ்சிச்சி நான் எறங்குன ஆறுல மறு கரை இல்லங்கிறது.”

“எப்பவும் எங்கம்மா எங்கிட்டெ கண்ணாலதான் பேசும். கண்ணுத் தண்ணியாலதான் பேசும்.”

“விரியன் பாம்புகிட்ட இருக்கிற விசத்துக்கு அதுவா பொறுப்பு?”

“கண்ணுத் தண்ணியால எந்தக் கோட்டை கரையும்? ஒடையும்?”

 

மூன்றாவதாக வாசித்த இமையத்தின் புத்தகம்‌ ‘இப்போது உயிரோடிருக்கிறேன்.’

சம காலத்தில் நம் கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருக்கும், ஆனால், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்களை, நமக்கு நடக்காத வரை எந்தப் பாதிப்பும் இல்லை என கடந்து செல்கிறோம். ஆனால், அந்த விஷயங்களைத் தொடர்ந்து, தன் கதைகள் வழியாகப் பதிவுசெய்து வருகிறார் இமையம். இந்நூலிலும் கதை நாயகன், தனது கதையைத் தானே சொல்வது போலவே அமைத்துள்ளார்.

சொந்த ஊரில் ஒரு ரைஸ் மில்லும் கொஞ்சம் நிலமும் வைத்துக்கொண்டு, “பின்னர் காசு தருகிறேன்” என்று சொன்னால்கூட, முகம் சுளிக்காமல், மறுக்காமல் அரிசி / மாவு அரைத்துக் கொடுக்கும் தந்தை. அவ்விதமான செயல்களுக்காகவும் ரைஸ் மில்லில் மாவரைக்க வரும் அனைத்துப் பெண்களும் தன் கணவனைக் கவருவதாகக் கருதும் மனைவி. ஒரு பதினைந்து வயது பள்ளி செல்லும் சிறுவன். ஒரு பெண் பிள்ளை என சிறிய குடும்பம்.

சிறுவன் ஒருநாள் காய்ச்சல் என்று பள்ளியிலிருந்து வர, வழக்கம் போல மெடிக்கலில் ஊசி போட்டுக்கொண்டு மாத்திரை வாங்கித் தருகிறார் தந்தை. மறுநாளும் இரண்டு, மூன்று ஊசிகள் போடப்படுகின்றன. இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாகியும் காய்ச்சல் சரியாகாத நிலையில், உடல்நிலை சரியாகாமல் வலிப்பு வருகிறது. மருத்துவமனையில் சோதிக்கும் போது, சிறுவனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தது தெரியவருகிறது.

அதனைத் தொடர்ந்து அந்தச் சிறு குடும்பமானது பெருநகரத்தின் மருத்துவமனையில் சந்திக்கும் அவலங்கள், அல்லல்கள் என்ன என்பதை அச்சிறுவன் வாயிலாகவே கூறுவதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், அச்சிறுவனைச் சேர்த்தது முதல் அவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடக்கும்வரையில் அக்குடும்பமும் அந்தச் சிறுவனும் படும் பாடுகளைப் படிக்கும் போது நவீன மருத்துவத்தின் கோரமுகம் நம்மை பயமுறுத்துகிறது.

நவீன மருத்துவத்தில் ஒரு நோயை விரைவில் கண்டறிந்துவிட முடிகிறதேயின்றி, அதைச் சரிசெய்யும் வகையில் விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை எனும் பேருண்மை முகத்தில் அறைகிறது.

பத்து வயது சிறுமி முதல் வயதான முதியவர்கள் வரை டயாலிசிஸ் செய்யவேண்டிய நிலை, பணமிருந்தால் ‘ஏ பிளாக்’ பணமில்லை எனில் ‘பி பிளாக்’. ஆனாலும் சில டெஸ்டுகள் ‘ஏ-பிளாக்கில்’ பணம் கட்டித்தான் எடுக்க வேண்டும். ஏ-பிளாக்கில் ஏசி, பிரம்மாண்ட கட்டடம், உடனடி மருத்துவம். பி-பிளாக்கில் காத்திருந்து மருத்துவம் பார்க்க வேண்டும், இன்பெக்சன் ஆக வாய்ப்பிருக்கும்.

வரும் நோயாளியை ஏ-பிளாக்கில் தங்க வைப்பதற்கென பேசுவதற்காகவே ஒரு பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். ஒரு நோயாளி டயாலிசிஸ் நடக்கும்போது பசித்தால், தன் தாயைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால், நர்ஸ், தலைமை நர்ஸ், வார்டு செயலர், செக்யூரிட்டி வரை சொல்லி, திரும்பவும் அதே வரிசையில் தாண்டித்தான் அந்தத் தாய் தன் மகனைப் பார்க்க வர முடியும். அப்போது டாக்டர் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவர் பார்த்து விட்டுச் செல்லும்வரை இருவரும் காத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது ஆகும் என்ற வரிகளைப் படிக்கும்போது நமக்கே ஆயாசமாக இருக்கிறது.

“சனங்க கிட்ட பேசுவதற்குதானே டாக்டர்க்கு படிக்கிறாங்க, பேசாம இருக்க எதுக்குப் படிக்கிறாங்க?” என்ற வரிகள் தனது மகனுக்கு என்ன நடக்கிறது என்று அறிய முடியாத தந்தையின் வலியை உணர முடியும்.

எதையுமே தெளிவாகச் சொல்லாதது, ஒவ்வொன்றாகச் சொல்வது என, அச்சிறிய குடும்பத்தை ஏகமாக மிரட்டுகிறது நவீன தனியார் மருத்துவமனைச் சூழல். எதையாவது செய்து தன் பிள்ளையைக் காப்பாற்றிவிட மாட்டோமா என்று எண்ணும் தந்தையின் மனப் போராட்டத்தினை மனதைப் பிசையும் வார்த்தைகளில் எழுதியிருக்கிறார்.

தங்கள் சேமிப்பு எல்லாம் மருத்துவமனையில் கரைத்துவிட, ஒரு இளம் பெண் தன் கணவனைப் பற்றிக் கூறும் வார்த்தைகள். “பிழைக்கவும் மாட்டாரு, சாகவும் மாட்டாரு”.

நவீன மருத்துவத்தின் சாபக் கேடுகளில் ஒன்று இந்த மெடிக்கல் வேஸ்ட். ஒரு நாளைக்கு ஒரு நோயாளிக்கு மட்டுமே இவ்வளவு குப்பைகள் என்றால் ஒரு நாளைக்கு டயாலிசிஸ் வார்டில் எவ்வளவு குப்பைகள் சேரும்? ஒரு மாதத்துக்கு? ஒரு ஆண்டுக்கு? எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன் ‘இமயமலை அளவு’. இந்தக் குப்பைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.

“நோயாளியைவிட நோயாளி கூட இருக்கிறது ரொம்பக் கஷ்டம்” என்ற வரிகளில் அந்தத் தாய் தந்தையர் படும் பாடுகள் நம் கண்முன் விரிகின்றன.

“அரசாங்க ஆஸ்பத்திரினா மோசம், அரசாங்க பள்ளிக்கூடம்னா மோசம், அரசாங்க ஆபீஸ்னா மோசங்கிற எண்ணம் எல்லாம் எப்படித்தான் சனங்களோட மனசுல பதிஞ்சுதுன்னு தெரியல.”

“வாழறதுதான் பெரிய பிரச்சினைன்னா சாவறது அதைவிட பெரிய பிரச்சினையா இருக்கு. மண்ணு மாதிரி கல்லு மாதிரி இருந்தா எந்தப் பிரச்சினையும் இருக்காது.”

“தரயில கப்பலு ஓட்டுற மாரிதான். உசுரோட இருக்குறது லேசில்ல.”

“பணம் எவ்வளவு இருக்கோ அந்த அளவுக்கு உசுரோட இருக்கலாம்.”

“உசிரோட இருக்கிறதுக்கும் அதிர்ஷ்டம் வேணும். சீக்கிரம் செத்துப் போறதுக்கு அதைவிட அதிகமாக அதிர்ஷ்டம் வேணும்.”

நாவலில் இப்படிப் பல வாக்கியங்கள் நெஞ்சை உலுக்கும் விதமாக வருகிறது. கதாபாத்திரங்களின் வலிகளையும் உணர்வுகளையும் நமக்குள் கடத்தி நம்மைத் தூங்கவிடாமல், சாப்பிட விடாமல் தத்தளிக்க வைக்கும் எழுத்து இமையத்திற்கு வரமாகக் கிடைத்திருக்கிறது.

J. Kalpanathray

 

Amrutha

Related post