திரைப்படமாகும் இலக்கியம்: முரசொலி மாறனை மறக்க முடியுமா? – தினகரன் ஜெய்

 திரைப்படமாகும் இலக்கியம்: முரசொலி மாறனை மறக்க முடியுமா? – தினகரன் ஜெய்

லக்கிய படைப்புகள், குறிப்பாக நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படுவது தமிழ் சூழலில் தற்போது கவனம் பெற்று வருகிறது. பூமணியின் ‘பிறகு’ நாவலை வெற்றிமாறன் திரைப்படமாக எடுத்துள்ளார். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். வெற்றிமாறனின் ‘விசாரணை’, தற்போது வெளியாகவுள்ள ‘விடுதலை’ இலக்கிய படைப்புகளை தழுவி எடுக்கப்பட்டவைதான். சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல்களையும் வெற்றிமாறன் திரைப்படமாக எடுக்க உள்ளார். சு. வெங்கடேசனின் ‘வேள்பாரி’ நாவலை ஷங்கர் திரைப்படமாக எடுக்கிறார். தமிழ் திரைப்பட வரலாற்றில் இப்படி இலக்கிய படைப்புகளை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களை நோக்கும்போது, முக்கிய பங்களிப்புகளை செய்துள்ளவர்களில் ஒருவராக கவனம் பெறுகிறார், முரசொலி மாறன்.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் சினிமா என்ற ஊடகத்தை ஆக்கிரமித்த அத்தியாயம் சுவாரசியமிக்கது. சினிமா என்ற ஊடகத்தின் மூலம் பிரச்சாரத்தை முன்னிறுத்தி சாமர்த்தியமாக வெற்றி கண்டவர்கள் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் மட்டும்தான். மேலும், திரைப்படத் துறையில் அவர்களின் பங்களிப்பு மதிக்கக் கூடியதும்கூட. புராணங்களும் பக்தி இலக்கியங்களும் படமாகி கொண்டிருந்த தமிழ் சினிமாவில் 50களின் தொடக்கத்தில் சமூக கதை படமாகிய தருணத்தை கவனப்படுத்தி திராவிட இயக்க எழுத்தாளர்கள் சினிமாவை திறனோடு பயன்படுத்தினர். அதிலும் குறிப்பாக அறிஞர் அண்ணாவும் கருணாநிதியும், தன் சொல் வன்மையால் ரசிகர்களை மயக்கினர்.

அமெரிக்கரான எல்லிஸ் ஆர். டங்கனும் லண்டனில் படித்த ஏ.எஸ்.ஏ. சாமியும் திரைப்படங்களை உருவாக்கிய தருணத்தில்தான் இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் சினிமாவில் நுழைந்தார்கள். ஏ.எஸ்.ஏ. சாமிக்கு உதவியாளராக 2 ஆண்டுகள் திரைத்துறையில் எழுதிக் கொண்டிருந்த கருணாநிதிக்கு ‘பராசக்தி’ திரைப்படம் ஓர் முழுமையான கவன ஈர்ப்பை கொடுத்தது. அதேபோல ‘நல்லதம்பி’ படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு எழுத வந்த அண்ணாவும் மேலைநாட்டு நாவல் இலக்கியங்களின் பாதிப்பால் திரைப்படங்களில் எழுத ஆரம்பித்தார். மு.கருணாநிதியும் அண்ணாவும் பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தை பெற்றிருந்தனர். காப்பியங்களை தழுவி படைப்பை உருவாக்கினாலும் இவர்கள் இருவரும் கொள்கை கோட்பாட்டை பிரதிபலிக்கிற வசனங்களை எழுத தவறுவதே இல்லை. இந்த பண்பு தான் எளிய மக்களிடம் இவர்களை கொண்டு சேர்த்தது.

தமிழ் சினிமாவில் மணிக்கொடி எழுத்தாளர்களான இளங்கோவனும் பி.எஸ். ராமையாவும் வசனகர்த்தாவாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றதற்குப் பிறகு அண்ணா, கருணாநிதி இருவர் மட்டுமே வசனத்திற்காகவே கவனிக்கப்பட்ட படைப்பாளியாக இருந்தனர். மேற்குலக ஆங்கில இலக்கியங்களை தழுவி தமிழுக்கு தகுந்தாற் போல எழுதுவதில் அண்ணாவும், காப்பியங்களை சமகால சமூக சூழலுக்கு ஏற்ப திரைப்படங்களாக உருவாக்குவதில் கருணாநிதியும் தேர்ந்த படைப்பாளியாக இருந்தனர். இதனாலேயே சினிமாவில் வசன ஆதிக்கம் மேலோங்கி இருந்ததற்கு இவர்களே காரணம். ஹாலிவுட் படங்களின் தாக்கத்தினால் அண்ணாதுரை சில திரைக்கதைகளை உருவாக்கினார்.

50க்குப் பிறகு சினிமாவில் திராவிட இயக்கச் சிந்தனையாளர்களின் வருகை அதிகமானது. நீண்ட அடுக்கு மொழியில் எதுகை மோனையோடு வசனம் பேசுவது தான் சினிமாவின் நடிப்பு என்று நம்பப்பட்டது. வசனமே சினிமாவின் பிரதான அம்சமாக பார்க்கப்பட்டது. (அதேநேரம், மேடை நாடக பாணியிலேயே காட்சி ஊடகமான சினிமா தேங்கியும் நின்றதற்கும் திராவிட இயக்க எழுத்தாளர்களே காரணமும் ஆனார்கள். திரைப்பட மொழி என்பதில் எள்ளளவும் கவனமற்றே தமிழ் சினிமா இருந்தது.)

maragatham

புராண, பக்தி இலக்கியங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்த திரையுலகு இவர்களால் திசை திரும்பி சமூகக் கதைகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கிய சூழலில் நாவல்களை படமாக்கும் முயற்சியும் நடந்தேற தொடங்கியது. பிற மொழி இலக்கியங்களை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியும் நடந்தது. அவ்வாறு வங்க மொழி நாவலாசிரியர் பிரபாவதி தேவி சரஸ்வதி எழுதிய ‘Bijila’ என்ற நாவலைத் தழுவி ‘குல தெய்வம்’ என்ற திரைப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு உருவாக்கினர். அப்படத்திற்கு திரைக்கதை – வசனம் எழுதி 1954ல் திரைப்படத் துறையில் அறிமுகமானார் திராவிட இயக்க சிந்தனையாளரும் பத்திரிகையாளருமான முரசொலி மாறன். இவரிடத்தில் மிகச் சிறப்பான மொழி ஆளுமை இருந்தது. தேவையற்ற அடுக்குமொழி வசனங்களை இவர் தவிர்த்தார். கதாபாத்திரத்தின் உளவியலை குதர்க்கமாக வெளிப்படுத்தாத தன்மையில் இவரது வசனம் இருந்தது. இது தான் இவரது சிறப்பு இயல்பு. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை திரைக்கதையாக உருவாக்குவதிலும் முரசொலி மாறன் ஆர்வமாக செயல்பட்டார்.

உத்திர பிரதேசத்தை சேர்ந்த திரைப்பட ஆளுமையான கவிஞர் சுக்ராம் சர்மா எழுதிய கதையை ஒளிப்பதிவாளர் சுப்பாராவ் ‘மனமுள்ள மறுதாரம்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கினார். அந்தப் படத்திற்கு திரைக்கதை – வசனம் எழுதினார் முரசொலி மாறன். பிரபல கன்னட எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி புரானிக் எழுதிய கதையை ‘சகோதரி’ என்ற பெயரில் பீம்சிங் படமாக்கிய போது திரைக்கதை – வசனம் எழுதியவரும் முரசொலி மாறன் தான். இந்திய மொழிகளில் உருவான நாவல் இலக்கியங்கள் மட்டுமல்லாது திராவிட மொழி பேசுகிற எழுத்தாளர்களின் படைப்புகளை திரைப்படமாக உருவாக்கியபோதும் ஒரு திரைக்கதை ஆசிரியராக முரசொலி மாறனின் பங்களிப்பு மதிப்புக்குரியதாகும். தமிழ் திரைப்பட உலகின் புதுமை விரும்பி என்றழைக்கப்படும் டி.ஆர். சுந்தரத்தின் இயக்கத்தில் முரசொலி மாறன் திரைக்கதை – வசனம் எழுதிய ‘தலை கொடுத்தான் தம்பி’ மிக முக்கியமான படமாகும். டி.எஸ். துரை எழுதிய ‘கருங்குயில் குன்றத்துக் கொலை’ என்ற நாவலை ‘மரகதம்’ என்ற பெயரில் படமாக்கிய போது முரசொலி மாறனே வசனம் எழுதினார். ‘மரகதம்’ முரசொலி மாறன் வசனத்தில் மிக முக்கியமானத் திரைப்படமாக கவனிக்கப்பட்டது.

திராவிட கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டவுடன் திராவிட இயக்கச் சிந்தனையாளர்களின் கவனம் அரசியல் களத்தில் முழுமையாக குவிய தொடங்கியது. மு. கருணாநிதியை தவிர்த்து திரைப்படத் துறையிலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக இயங்க கூடியவர்கள் என்று வேறு எவருமில்லை. அந்த வகையில் 1965க்குப் பிறகு திராவிட இயக்கக் கலைஞர்களின் சினிமா பங்களிப்பு குறிப்பிடப்படுமளவுக்கு இல்லை.

‘மரகதம்’ திரைப்படத்திற்குப் பிறகு தமிழக அரசியல் மாற்றத்திற்குப் பிறகு முரசொலி மாறன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து ‘மறக்க முடியுமா’ என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கு திரைக்கதை – வசனம் எழுதியவர் மு. கருணாநிதி. அதனைத் தொடர்ந்து ‘பிள்ளையோ பிள்ளை’ என்று ஒரு திரைப்படத்தை தயாரித்ததோடு முரசொலி மாறன் சினிமா விட்டு விலகி அரசியலில் மட்டுமே கவனத்தை செலுதத் தொடங்கினார்.

தமிழ் சினிமாவில் வசனத்தை கொண்டாடிய காலகட்டத்தில் முரசொலி மாறனின் பங்கும் இன்றியமையாததாகவே இருக்கிறது. மேடை நாடகங்களில் திராவிட இயக்கப் பிரச்சாரத்தை முன்னெடுத்து தன் அரசியல் இயக்கத்தை கட்டமைக்க எந்த அளவுக்கு முயற்சித்தார்களோ அதே அளவுக்கு சினிமாவையும் பயன்படுத்தினர். அதனடிப்படையில் ஏ.கே. வேலன், அண்ணாத்துரை, மு. கருணாநிதி, முரசொலி மாறன் போன்றவர்கள் சினிமாவில் வெற்றியடைந்த ஆளுமைகளாகவே இருக்கிறார்கள்.

தினகரன் ஜெய் <dinakaranjai20@gmail.com>

Dinakaran Jai

Amrutha

Related post