இமையத்தின் அரசியலும் இலக்கியமும் 4

 இமையத்தின் அரசியலும் இலக்கியமும் 4

தேவகுமாரனின் பேரொளி

நெப்போலியன்

 

வாசிப்பென்பது ஒரு கலை. இமையத்தை வாசித்தல் என்பது ஒரு பயிற்சி. கதைக்களம் – கதைக்கரு – கதைவடிவம் – கதைமுறை – கதைக்கனம் – கூராய்ந்து கற்றல் என இமையத்தின் படைப்புகள் ஒரு தேர்ந்த வாசகனுக்கும் – வளரும் படைப்பாளிக்கும் இருவேறு தளங்களில் நின்று ஆச்சர்யமூட்டுபவை.

இமையத்தின் நாவல்கள் பெரும்பாலும் சமூக அவல நிலைகளை நோக்கிய பார்வைகளுடன் எழுதப்பட்டவையே. மனித உணர்வுகளின் எல்லை மீறல்களையும் ஆணவப் படுகொலைகளையும் சாதிய அரசியலையும் அரசியலில் சாதியையும் எண்ணற்ற மனித உணர்வுகளின் அந்தரங்க மனிதக் கேவல்களையும் தனது எழுத்தால் இலக்கியம் ஆக்குபவை.

இமையத்தின் புனைவிலக்கிய விவரணைகளில், கதை நிலம் சார்ந்த உணவு, சடங்கு, வழக்கு, சொல்லாடல், உறவுமுறை, உடுப்பு, காடு, தாவரம், இயற்கை, சாமி, கோவில், மனுச மனம், மனிதர்களின் பழகுமுறை, வேண்டல், ஊர்க் கட்டுப்பாடு, அயோக்கியத்தனம், உடல் வேட்கை, பாலியல் கெக்களிப்பு, பண்பாட்டு முரண், மரணம் என பல்வேறு கூறுகளை கோர்த்திணைத்துவிடும் அழகியல் திறன் நுட்பம் பெரும்பலம். இதை வாசிப்பு ஈடுபாட்டைத் தாண்டி நாவலாசிரியரின் செய்நுட்பம் என்பதனை படித்து முடித்தவுடன் உணரும்பொழுதுதான், இமையத்தை கொண்டாட ஆரம்பிக்கிறோம்.

குறிப்பிட்ட சமூகம் சார்ந்து தொடர்ச்சியாய் வந்துகொண்டிருக்கும் பல்வேறு திரைப்படங்களில், இமையத்தின் படைப்புகளிலிருந்து அப்படியே முழுமையாகவும் அடி நாதமாகவும் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் எனவும், தமிழ் சினிமா, இமையத்திற்குத் தெரிந்தும் தெரியாமலும் அவருடைய படைப்புகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதற்குக் காரணம் இமையத்தின் பெரும்பாலான நாவல்கள் காட்சிமை இயல்புடன் பொருந்திப் போகக்கூடிய வல்லமையும நேர்த்தியும் கொண்டவை. ஒரு தேர்ந்த திரைக் கலைஞனால் மிகச்சிறப்பாக உருவாக்கிவிடக்கூடிய திரைக்கதை அமைப்பை தன்னகத்தே கொண்டவை.

துயரத்தின் வலியையும் நேசிப்பின் உச்சிதத்தையும் தனி மனித குரோதங்களையும் சல்லித்தன நிகழ்வுகளையும் மறுக்கப்பட்ட தேவைகளையும் நிறப்பிரிவின் தோலுரித்தலையும் சாதிய ஒடுக்கு முறையையும் தொடர்ந்து உற்று நோக்கி, தன் படைப்பின் வழி அதனை எழுத்தாக்குவது அவ்வளவு எளிதல்ல… எனவேதான் இமையத்தின் எழுத்துகள் யாராலும் எழுதிவிட முடியா ஒன்று.

குறிப்பாக ‘கோவேறுக் கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘செல்லாத பணம்’, ‘வாழ்க வாழ்க’ ஆகிய நாவல்கள்; ‘பத்தினி இலை’, ‘ஆகாசத்தின் உத்தரவு’, ‘திருட்டுப்போண பொண்ணு’, ‘சாவுசோறு’, ‘பணியாரக்காரம்மா’, ‘நறுமணம்’, ‘மண்பாரம்’, ‘கொலைச் சேவல்’, ‘வீடியோ மாரியம்மன்’ ஆகிய சிறுகதைகள். ‘பெத்தவன்’ நேர்மையான படைப்பாளிக்கு சவாலான படைப்பு. ‘எங் கதெ’ இமையத்தின் மொத்தப் படைப்புகளிலுமிருந்து வேறுபட்ட இன்னொரு தளம்.

‘ஆகாசத்தின் உத்தரவு’ போன்ற கதைகள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அபூர்வம். களவிற்குச் செல்லும் முன் கடவுளிடம் வாக்கு கேட்டு உரையாடும் திருடனின் பிரார்த்தனைப் படலம். ‘பரிசு’ போன்ற சிறுகதைகளின் முடிவு, நாள் முழுவதும் நம் மனதைக் கனக்க வைத்துவிடும்.

‘அரசுப்பள்ளியில் மதில் சுவரற்று பன்றிகள் மேயும் அவலக்காட்சியும் ‘பொட்ட புள்ளங்க படிக்கிற எடத்தில ஒரு கக்கூஸ் ரூமுகூட இல்லெ’ என்ற கேவலமும்; “கீழ்சாதிக்காரன் கூட ஒடிப்போனா முலய அறுப்பாங்க. எம் மவ முலய அறுக்கத்தான் எம் புருஷனும் என் மவனுகளும், சாதி சனத்தோட ஊர் ஊரா தேடிக்கிட்டு அலயுறாங்க. முலதான பொட்டச்சிக்கு மூஞ்சி”, “எல்லாம் பாத்துக்கிறேன். நீ போடா. இல்லன்னா ஒன் கிளியப் புடிச்சி அம்மீயில வச்சி அரச்சிப்புடுவன்” (கிளி என்பது சொலவடையாய் இங்கே ஆண்குறி பொருள்) போன்ற வரிகளும்.

‘ராணியின் காதல்’ நிறைவேறாக் காதலின் நிச வடிவம். இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் திருமணம் நடந்தேறிய வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் தருணம். வாழ்வாதாரப் பிரச்சனை பணம். “நீ எங்க கூப்புட்டாலும் வர்றன், லாட்ஜ் மட்டும் வேண்டாம்” என முன்னாள் காதலி ராணி சொன்னவுடன், ராஜன் எடுக்கும் முடிவுதான், இமையம் எனும் அறம் சார்ந்த மனிதனின் எழுத்து.

புனைவெழுத்தில் காரணங்களற்ற கதைக் கருவிற்கு இடமுண்டு. இமையத்தின் புனைவுலகு காரணங்களாலேயே கருவாகி காரணமற்ற சமூக அவலங்களின் தலைகளில் கொள்ளி வைக்கின்றது.

இமையத்தின் படைப்பின் வழி நாம் காணும் தரிசனம், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தில் நாம் யார் எனும் கேள்வி, ஏன் இப்படி எனும் கோபம், இதனால் ஏற்பட எது காரணம் எனும் புரிதல், யதார்த்தத்தின் பயங்கரம் இப்படியா எனும் அச்சம் – ஒரு நல்ல இலக்கியம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கான அறிகுறிகள்.

“உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்” என்பது தேவகுமாரனின் வார்த்தை. அதை இமையத்தின் எழுத்துகளில் காணலாம்.

Amrutha

Related post