ஆழியாள்: கவிதை எழுதும் கூர்ப்பின் கை – முபொ

 ஆழியாள்: கவிதை எழுதும் கூர்ப்பின் கை – முபொ

ழியாளின் முதல் கவிதைத் தொகுதியான, 2000இல் வெளியான, ‘உரத்துப் பேச’ என் கைகளுக்கு கிட்டியதும் அதன் பக்கங்களைத் தட்டி மேலோட்டமாகச் சில கவிதைகளை நோட்டம் விட்டபோது எனக்குள் சின்ன மகிழ்ச்சியின் சிலிர்ப்பு. காரணம் அவை வேறுபட்ட, வழமைக்கு மாறான எடுத்துச் சொல்முறையில் உயிர்ப்புற்றிருந்ததே.

இவ்வேளை நான் 1986இல் யாழ்ப்பாணம் ஆய்வு வட்டத்தால் ‘சொல்லாத செய்திகள்’’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பெண்கள் கவிதைத் தொகுப்பை வாசித்திருந்த ஞாபகம் வருகிறது. ஈழத்து தமிழ்ப் பெண் கவிஞர்களான அ. சங்கரி, சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசுறா ஏ.மஜீட், ஔவை, மைத்ரேயி, பிரேமி, நேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துக் கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பே அது. இக் கவிதைத் தொகுப்புக்கு அறிமுகவுரை எழுதிய மௌ. சித்திரலேகா பின்வருமாறு கூறி அதை நிறைவு செய்கிறார்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் கவிஞர்களின் சகல கவிதைகளும் இத் தொகுதியில் அடங்கவில்லை. பார்வைக்கு எட்டியவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளின் தொகுதியே இது. இவற்றை விடச் சிறந்த கவிதைகளை யாராவது எழுதி வைத்திருக்கலாம். இத் தொகுதி அவர்களுக்கு உந்துதல் அளிப்பதுடன் இலக்கியத்தில் பெண்நிலை நோக்கு உருவாகுவதற்கும் உதவும் என எதிர்பார்க்கலாம்.

உண்மை. மேற்படி சித்திரா அவர்களின் கூற்றை மெய்ப்பிப்பது போலவே ஆழியாளின் ‘உரத்துப் பேச’ அமைந்திருக்கிறது என்பேன். இக்கவிதை நூல் வெளியான காலத்திலேயே – அதாவது இருபது வருடங்களுக்கு முன்னர் நான் அக்கவிதை நூல் பற்றி ஒரு அறிமுக விமர்சனத்தை ‘மூன்றாவது மனிதனில்’ எழுதினேன். பின்னர் அக்கட்டுரை, எனது ‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்ற நூலின் அறிமுக விமர்சனம் என்ற பிரிவில் உள்ளடக்கப்பட்டு வெளிவந்தது.

இதன் பின்னர் ‘துவிதம்’ (2006), ‘கருநாவு’ (2013), ‘பூவுலகைக் கற்றலும் கேட்டலும்’ (2017) அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு, ‘நெடுமரங்களாய் வாழ்தல்’ (2020) ஆகிய கவிதை நூல்களை ஆழியாள் வெளியிட்டதோடு ஈழத்துப் பெண்கவிஞர்கள் மத்தியில் தனது அடையாளத்தையும் தனித்துவத்தையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளார்.

 

‘சொல்லாத சேதிகள்’ என்னும் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதை நூல் 1986இல் வெளிவந்த காலத்திலேயே ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டமும் கொம்பு சீவி விடப்பட்ட காளை மாதிரி போர் முனைப்போடு பேரெழுச்சி கொண்டெழுந்தது. போர் முனையில் ஆண்களுக்கு நிகராக பெண் போராளிகளும் தம் ஆற்றலை வெளிப்படுத்தி வரலாறு படைத்தது நாம் அறிந்ததே. இவ்வாறு போராளிகளாக மாறிய பெண்கள், தந்தை வழிச் சமூகம் தம்மேல் திணித்திருந்த அர்த்தமற்ற ஒழுங்குகள், அடக்குமுறைகள் ஆகியவற்றை தமது சுயவிச்சாப் போக்கிலேயே புறக்கணிக்கத் தொடங்கினர். பெண்ணியம், ஆண்நிலை ஆதிக்கம் என்பவை பற்றி எதுவும் அறியாமலேயே இத்தகைய செயலூக்கத்தைப் பெற்றனர். மேலும் அவர்களோடு இயங்கிய சக புத்தி ஜீவிப்பெண் போராளிகளும் அவர்களுக்குப் பின்வருமாறு கூறி ஆற்றுப்படுத்தினர்:

“உலக வளர்ச்சிக்கான உழைப்பில் அரைவாசிக்கும் மேலாக பங்களிக்கும் பெண்கள் இன்றுள்ள ஆணாதிக்க முனைப்புக் கொண்ட அரசியல், சமூக, பொருளாதார நோக்கால் பின்தள்ளப்படும்போது, அதற்கெதிராகத் திரண்டெழ வேண்டாமா? உண்மையில் இப்படி ஆண் வர்க்கத்தால் படுபாதகமாகச் சுரண்டப்படும் பெண்கள் தங்களை இப்படி ஒரு சக்தியாக உருவாக்கி போராடுவது அவசியமல்லவா?” என்று அவர்கள் இவர்களை ஆற்றுப்படுத்திய செயல் நுண்மை மிக்க கலை இலக்கியச் செயற்பாடுகளுக்குள்ளும் புகுந்தன.

இக்காலத்தில் பல்கலைக்கழக மாணவிகள் பலர் கவிதை எழுதுவதில் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதாரணமாக, ‘ஏன் இனிய தோழிகளே, இன்னுமா தலை வாரக் கண்ணாடி தேடுகிறீர்?’ என்று சிவரமணி கூறும் வார்த்தைகளும் ‘தோழி எழுந்து வா, இன்னும் என்னடி இருட்டினில் வேலை?’ என்னும் ஔவையின் அறைகூவலும் மற்றும் ‘எனக்கு முகமில்லை, இதயமும் இல்லை, ஆத்மாவும் இல்லை, அவர்கள் பார்வையில்

இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை – இவைகளே உள்ளன

என்று குமுறும் சங்கரியின் வார்த்தைகளும் நான் ஏற்கெனவே கூறிய பெண்ணிய கருத்துருவாக்கத்தின் ஆரம்ப அருட்டல்களே.

இதே காலத்தில் ஒருவகைச் சாய்வு நிலைப்பட்ட அதாவது பல்வகைப்பட்ட மனித உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் ஒரே வகையான ‘பாட்டில் விழுந்த’ ‘சந்தத்தில்’ கவிதை எழுதும் போக்கு ஈழத்தில் தலைகாட்டியது. இதே காலத்தில் தமிழ்நாட்டிலும் அம்பை, ஜோதிர்லதா கிரிஜா, குட்டி ரேவதி போன்றவர்கள் பேசுவதற்கு ஒறுப்பாகிய (Taboo) ஒழுக்கரீதியான விஷயங்களை உடைத்தெறிந்து எழுதத் தொடங்கினர்.

இதே காலத்தில் ஒருவகைச் ‘சாய்வு’ நிலைப்பட்ட, அதாவது பல்வகைப்பட்ட மனித உணர்வுகளைப் பொருட்படுத்தாமல், ஒரே வகையான ‘பாட்டில் விழுந்த’ சந்தத்தில் கவிதை எழுதும் போக்கு ஈழத்தில் தலைகாட்டிற்று. இவ்வகைக் கவிதைகளைக் காலஞ் சென்ற சுதாகர் சந்திரபோஸ் எழுதினார். அதில் அவர் வெற்றி கண்டதற்கு உதாரணமாக அவரது கவிதைகள் உள்நாட்டு, வெளிநாட்டு சஞ்சிகைகளில் பிரசுரமாயின. இதனால் அவரால் பாதிக்கப்பட்டு கலா, அனார், ஃபஹிமா ஜஹான், பெண்ணியா ஆகிய பெண் கவிஞர்கள் எழுதினர். அனார், சோலைக்கிளியாலும் பாதிக்கப்பட்டவராக இருந்தார். மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து எழுதிய அகிலனும் இதே வகைக் கவிதைகளையே ஆரம்பத்திலிருந்தே எழுதினார். காதல், வீரம், காமம், வெற்றி, தோல்வி, குதூகலம் என்கிற எண்ணிறைந்த உணர்வு நிலைகள் எல்லாம் இந்த ‘ஒற்றைப் பரிமாண’ கவிதைகளுள் அடக்குவது என்பது அபத்தமே. இது பற்றி நான் எனது விமர்சக நண்பர் ஒருவரோடு கதைத்தபோது, அதற்கு அவர், “நீங்கள் குறிப்பிடும் கவிஞர்கள் எல்லாரும் சுற்றிச்சுற்றி காதல், சோகம், பிரிவு, சாதல், இழப்பு எங்கிற ஒற்றைப் பரிமாண நிலைக்குள் நின்று எழுதுவது மட்டுந்தான் கவிதைகள் என்று நம்புகிறார்கள். அதைவிட்டு அவர்கள் வெளியே வருவதில்லை” என்று சொன்னது மிகச்சரி என்றே எனக்குப் பட்டது.

இச் சந்தர்ப்பத்தில் நான் இன்னொன்றையும் சொல்லவேண்டும். அதாவது எனது ‘வாசிப்பதும் வாசிக்கப்படுவதும்’ (2012) என்னும் நூலில் மேலே குறிப்பிட்ட பெண் கவிஞர்களோடு ஆழியாளின் பெயரையும் குறிப்பிட்டிருந்தேனாயினும் அவரை மட்டும் தனியாக வித்தியாசப்படுத்தி பின்வருமாறு எழுதினேன் என்பது மிக முக்கியமானது.

இவர்களுள் ஆழியாள் எளிமையான, ஆனால், தனக்கே உரிய, பிறரால் பாதிக்கப்படாத தனித்துவத்தோடு எழுதுபவர். இதற்கு இவரது ‘தடைதாண்டி’, ‘நிலுவை’ ஆகிய கவிதைகள் உதாரணம்.

 

னி ஆழியாளின் ‘உரத்துப் பேச’ (2000) கவிதை நூல் உட்பட பின்னர் வந்த ‘துவிதம்’ (2006), ‘கருநாவு’ (2013), ‘பூவுலகைக் கற்றலும் கேட்டலும்’ – அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள் மொழிபெயர்ப்பு (2017), ‘நெடுமரங்களாய் வாழ்தல்’ (2020) ஆகிய கவிதைத் தொகுதிகளில் உள்ள கவிதைகள் பற்றி சிறிது பார்ப்பதும் அவசியமாகும்.

இவரது ‘துவிதம்’ நூலுக்கு, ‘பெண்மொழி – கவிதை: மொழிசார் சாலைப் பயணம்’ என்ற தலைப்பில் முன்னுரை எழுதிய மதுசூதனன், ‘பெண்மொழி என்று கவிதையில் தனியாக அடையாளப்படுத்த சில தெளிவுகளும் அதற்கான கோட்பாடும் உருவாக வேண்டியிருக்கிறது. பெண் பாலுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளையும் ஆணை நோக்கிய பாலியல் விழைவுகளையும் எழுதினால் பெண்மொழி உருவாகி விடாது’ என்று சரியாகக் கூறுகிறார். பெண்மொழி என்பது தனக்குரிய அரசியல் வயப்பட்ட சமூகம், குடும்பம், தன் அடையாளம் என்று வேரோடுவது என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து செயற்படுதலே பெண்மொழி உருவாக்கத்தை நோக்கிய நகர்வாகும். ஆத்மீக நோக்கில் உலகில் அனைத்து உயிர்களும் ஆத்மா என்ற பேரியல்பின் ஊடகமாகவே இயங்குகின்றன என்றும், அங்கே எந்தவித ஏற்றத் தாழ்வுக்கும் – அற்ப உயிருக்கும் உலகை ஆளும் அரசனுக்கும் இடையே – இடமில்லை என்றும், ஏற்றத்தாழ்வு ஏற்படுவதற்குக் காரணம் ஒவ்வொன்றும் தமக்குள் இருக்கும் பேரியல்பைப் பயன்படுத்தும் முறையிலேயே உள்ளது என்றும் கூறப்படுகிறது. இருக்கலாம். ஆனால், இன்றைய உலக நடைமுறை எவ்வாறு உள்ளது என்பதே முக்கியம்.

இன்று எங்கும் பெண்கள், ஆண் நிலை ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர். சமூகவியலாளர்களின் கருத்துப்படி ஆதிப் பொதுவுடமைக் காலத்தில் பெண்களின் தலைமையிலேயே இந்தச் சமூகம் வாழ்ந்தது என்பது உண்மையே. இதற்குக் காரணம் ஆண் என்பவன் வேட்டையை நம்பியே இருந்தான். ஆனால், அவன் வேட்டையில் தோல்வியுற்று வெறுங்கையோடு வருவதே அனேகமாக இடம்பெறுவது. அப்போது பிள்ளைகளையும் கணவனையும் காப்பாற்றுவதோ, தாயானவள் நிலத்தைக் கிண்டி எடுத்து வைத்திருந்த கிழங்குகளும் மரத்திலிருந்து பறித்து வைத்திருந்த பழங்களுமே. இதிலிருந்து பயிர்ச் செய்கைக்கும் காரணமாய் இருந்தவள் பெண்ணே என்பதே ஆய்வாளர்களின் முடிவு. ஆனால், கால ஓட்டத்தில் ஆண்களின் தலைமை மேலோங்கியதும் அதனோடு ஒட்டிவந்த ஆண் தலைமையைப் பேணுவதற்கும், தம்மைத் தக்க வைத்துக்கொள்ளும் வருவாய்க்குரியதுமான சடங்குகள் பெண்களை ஒதுக்கி வைத்தன. உதாரணமாக தமிழ்ச் சமூகத்துள் ஆத்மீகம் என்ற பேரில் பிராமணியம் தன் வருவாய்க்காகத் திணித்த கற்பு, உடன்கட்டை, தீட்டு, தீண்டாமை என்னும் திரிபுபடுத்தப்பட்ட ஒழுக்கக் கோட்பாடுகளும், இவற்றோடு கிளைவிட்டுப் படர விடப்பட்டிருக்கும் எண்ணிறைந்த உபவிதிகள் யாவும் பெண்களை நோக்கியவையாகவே உள்ளன.

இந்நிலையில் ஆழியாள், பெண்ணொருத்தி தன்னைப் பற்றிக் கூறுவதாக வரும் பின்வரும் கவிதையில் ஆணிலிருந்து பெண்ணைப் பிரித்து வைக்கும் ஒன்றைப் பச்சையாக உரித்து வைப்பதோடு, நான் மேற்குறிப்பிட்ட பெண்களை கரிக்கோடு போட்டுக் கட்டிவைக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் எட்டி உதைப்பது போலவே அமைகிறது:

உயரும்
மலையடிவார கும்பிகளுக்குள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்

பள்ளங்களின்
ஆழப் புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்களும்
உண்டு இங்கு

சுவருக்கு செவிகள் உண்டு
இருளுக்கு கூர் விழிகளும் உண்டு
பீறிக் கசியும் இரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று –
அவளுக்கு!

இங்கு இறுதி வரியில் வரும் ‘பீறிக்கசியும் இரத்தமாய் மேலும் உண்டு இன்னொன்று அவளுக்கு’ என்று ஆணி அறைந்தாற்போல் வரும் சொற்றொடர்கள் ஆணையும் பெண்ணையும் வெவ்வேறு பிறவிகளாய் பிரித்துப் போட்டுவிடுகிறது! பூப்பூநீர் வார்த்த சிறுபராயத்திலிருந்து, கல்லூரி வாழ்க்கை, கலியாணம், குழந்தைப்பேறு, ஒருவேளை கணவன் இறந்துவிட்டால் விதவைக்கோலம் என்று ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பெட்டிப்பாம்பு வாழ்க்கை, அவள்முன் விரியும் காலத்துக்கேற்ப மகுடி ஊதப்படும்போது, அதற்குள் அவள் சிக்கி அடைக்கப்படுகிற கொடுமை!

இன்றுள்ள பெண்களின் குரல் என்பது இந்த அவலத்துக்கு எதிரானதாக இருக்காவிடின் அது இன்னொரு கொடுமையாக மாறிவிடுமென்ற உணர்வு உள்வாங்கப்பட்டதன் தீவிரத்தையே, இன்றுள்ள ஈழத்துப் பெண் கவிஞர்களின் எழுச்சிமிக்க கவிதைகள் பறைசாற்றுகின்றன. இவ்வெழுச்சியின் முக்கிய பங்களிப்புக்குரியவையாகவே ஆழியாளின் கவிதைகள் உள்ளன என்பதோடு அதைத்தாண்டியும் போவனவாய் உள்ளன என்பதே முக்கியம்.

இவர் பெண் விடுதலை பற்றிப் பேசுவதோடு அதையும் தாண்டியும் போகிறார் என்றேன். அதனால், அதையும் விளக்குவதும் அவசியமாகிறது. இவரது கவிதைகள் மனிதம் என்றும் மனிதாபிமானம் என்றும் மிகுந்த அக்கறை கொள்கிறது. அந்த அக்கறை கொள்ளலின் ஒரு கிளைதான், பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் தமிழர், விடுதலை பெற்றெழவேண்டும் என்ற பேரவாவாகவும் இவர் எழுத்துகளில் உயிர்ப்புறுகிறதெனலாம். அனேகப் பல்கலைக்கழகப் பெண்ணெழுத்தாளர்கள் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடிய இயக்கத்தவர் மீது வெறுப்புற்றவராகவே இருந்ததைப் பார்த்திருக்கின்றோம். இதற்குக் காரணம் அதன் தலைமையை விட, அதன் கீழியங்கிய உபதலைமைகள், உளவுப்பிரிவினர் புரிந்த அடாவடித்தனங்களும் கொடுமைகளுமே! (பார்க்கவும் எனது ‘சங்கிலியன் தரை’ – நாவல்)

‘குற்றவுணர்ச்சி’ என்ற கவிதையில், நனவோட்டப் பாணியில் பின்வருமாறு ஓடும் சில வரிகள் எமக்குள்ளும், எமக்குரிய நினைவடுக்குகளில் படிந்துள்ளவற்றை உயிர்ப்பிப்பது போல்

‘அகன்ற வீதியைக் குறுக்கறுத்து/ உருண்டோடும் குட்டி முள்ளம்பன்றி/ அது கடந்து போகக் காத்திருக்கும் கார்கள்/ பூச்சி பிடிக்கும் பறவைகள்/ பெயர் தெரியாத வண்டுகளின் கூச்சல்/ அமைதியான இரவுகள்/ அள்ள முடியாத நட்சத்திரங்கள்/ வீதி வளைவில் உட்கார்ந்து இயற்கையை வரையும்/ யாரோ ஒரு சித்திரக்காரி/ அம்மாவின் பொட்டுப் போல்/ பென்னம் பெரிய நிலவு’ என்று இதமாக ஓடும் வரிகள் பின்வருமாறு முடிவுக்கு வருகின்றன.

‘படுக்கையில் நீண்டு உடலைக் கிடத்தி/ கால்களை பரப்பியபடி/ ஆழத் தூங்க முடிவதென்பதோ கண்களுக்கு/ இங்குதான்/ அன்றைய தினம் அபோக்கள் ஒருவரைத் தன்னும் காணாதவரையில்’

இத்தகைய நினைவுமீட்டல்களோடு ‘அப்பாடா’ எனப்படுக்கையில் வீழ்ந்து கால்களைப் பரப்பியபடி ஆழ்துயில் கொள்ளக்கூடினாலும் அது ‘அபோக்கள்’ (அபோரிஜினல்) என்று அழைக்கப்படும் ஆதிக்குடிகளைச் சேர்ந்த ஒருவரைத்தன்னும் காணாத நாளாக இருக்கவேண்டும் என்று கவிஞர் கூறுகிறார். இங்கேதான் இவரது மனம் மனிதம், மனிதாபிமானம் என்பவற்றுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாய் இருப்பதால் அமைதியை இழந்து எவ்வளவு துன்புறுகிறது என்பது தெரியவருகிறது.

இவரது இந்த ஆதிக்குடிகளுக்கான உள இசைவோ மகத்தானது. இதுவே அவுஸ்திரேலியாவில் கன்பெரா மாநிலத்தில் வாழும் இக்கவிஞரை அதே மாநிலத்தைச் சேர்ந்த ஆதிக்குடிகளான ‘நனவால்’ இனத்தைச் சேர்ந்த அனைத்து முன்னோருக்கும் இன்றிருக்கும் மூத்தவர்க்கும் தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவிக்கச் செய்து கவிதை எழுதுகிறது. அதன் உருப்பெற்ற வெளியடையாளமாக – எமது கைகளால் அளையக் கூடியதாகவும் உளத்தால் பட்டுணரக் கூடியதாகவும் இருக்கும் இவரது ‘பூவுலகைக் கற்றலும் கேட்டலும்’ (2017) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு உள்ளது. ஆனால், நான் மேலே மேற்கோளாகக் காட்டியுள்ள கவிதை வரிகளோ ‘குற்றவுணர்ச்சி’ என்ற தலைப்பில் ‘துவிதம்’ தொகுப்பில் (2006) காணப்படும் கவிதை என்பது கவனத்துக்கு உரியது.

ஆழியாளின் கவிதைகள் ஏனைய தமிழ்ப் பெண் கவிஞர்களின் ஆக்கங்களிலிருந்து வேறுபடுவது பற்றி ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். அதற்குரிய காரணம், பெண்கள் உரிமைக்காகவும் பேசுகிறார், அதே நேரத்தில் தம் உரிமை இழந்த ஆதிக்குடிகளுக்காகவும் பேசுகிறார். ஈழத்தில் இனவாதிகளால் ஒடுக்கப்படும் தனது தமிழ் மக்களுக்காகவும் பேசும் இவர் அதே தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சிங்கள மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்காகவும் அவர் குரல் ஒலிக்கவே செய்கிறது (பார்க்கவும், என் அண்ணன் லசந்தவுக்கு அவர்கள் கூறியதாவது). மேலும் நம் முன்னே இவை போக நாளாந்தம் நடைபெறும் புறக்கணிப்புகள், காட்டிக்கொடுப்புகள், கழுத்தறுப்புகள், கைவிடப்படுத்தல்களென்று அடியோடிய அழுக்காற்றின் வழி வெளிப்படும் குரோத, குணவேறுபாடுகளுக்கு ‘அடையாளம்’ நல்ல உதாரணம். அத்தோடு ‘கலாசாரம்’ என்ற பேரில் தன்னைத்தானே முடக்கி வைத்திருக்கும் மனிதர் பற்றிய எள்ளுதல் நம்மைச் சிரிக்கவும் வைக்கிறது.

இவரது மூன்றாவது தொகுப்பான ‘கருநாவு’ முன்னவற்றிலிருந்து பல்வகையில் வேறுபடும் விஷயங்களை உள்ளடக்கியதாக இருப்பது கவனத்துக்குரியது. இத்தொகுப்பில் உள்ள ‘கொப்பித்தாளில் கிடந்த (பான்கி மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது? என்ற கவிதை இலங்கையில் கோர முகத்தோடு திரியும் இனவாதத்தை தோலுரித்து வைக்கிறது. எப்படி? அதுதான் முக்கியம். இனவாதத்தின் கோரமுகத்தை அவர் தோலுரித்து வைக்கும் முறைதான் இதுகாலவரை எவரும் செய்யாத, கையாளாத பாணியில் இடம் பெறுகிறது. சிரித்துச் சிரித்து அழும் குழந்தை போல கவிதை எடுத்துச் சொல்முறை விளங்குகிறது. இறுதியாக,

இப்ப
பென்னம் பெரிய உலகத்தில் இருக்கிறேன்
நான் என்போல் நிறையச் சிறுவர்களோடு.
எங்களைச் சுற்றி முள்வேலி
கண்டுபிடி எங்களைக் கண்டுபிடி
கண்டுபிடி எங்களைக் கண்டுபிடி

கண்ணைக் கட்டி பிள்ளைகள் பிடித்து விளையாடுவது போல் முடியும் இக்கவிதை, எத்தனையோ நிகழ்வுகளை ஞாபகமூட்டியவாறும் (Allude), ஓர உணர்வுகளை (Fringe Thoughts) எழுப்பியவாறும் செல்கிறது. அதுமட்டுமல்ல கவிதையைத் தொடங்கும்போதும் பலரின் தோள்களில் கைபோட்டவாறு வலமும் இடமும் நேராகவும் பார்த்து கதை சொல்லிச் செல்லும் ஒருவர் போல் செல்லும் இவர், அவர்களுக்கு விழுந்த அடியை பிட்டுக்கு மண்சுமந்த சிவனைப் போல் தன்முதுகில் வாங்கி ஈற்றில் முழுத்தமிழினத்தின் முதுகிலும் ஏற்றி விட்டிருக்கிறார் முள்வேலிக்குள் வாழும் சிறுவர்களாகவும் மாறி!

அடுத்து இன்னொன்று வருகிறது ‘வெற்றிவாகை’ என்ற தலைப்பில். ‘போர்களில் நாங்கள் எப்போதும் வென்றோம்’ என்று ஆரம்பிக்கும் இக் கவிதை இவ்வாறு முடிகிறது.

இன்று களப்பு பேட்டருகே
தன் சின்னண்ணன் எறிந்த
மண்டையோட்டை
காய்ந்து வழுவழுக்கும் கால் எலும்புத் துண்டால்
திருப்பியடித்துக்
கிரிக்கெட் விளையாடுகிறாள்
சின்னஞ் சிறு மகள் ஒருத்தி
வெற்றி நமக்கே!

இரு தரப்பு வெற்றிகள் பற்றி அங்கதப் பாணியில் பெரிய பட்டியல் போட்டுக் காட்டுகிறது கவிதை. இறுதியில் அந்த வெற்றிகள் எல்லாம் எப்படி முடிந்தன என்பதை அதே அங்கதப் பாணியில் சொல்லி முடிக்கிறது.

ஏன் இந்த அவலமுடிவு?

‘மக்கள் போராட்டம், மக்கள் போராட்டம்’ என்று பேருக்குச் சொல்லிக்கொண்டு மக்களை வெறும் பார்வையாளர்களாக வைத்துக்கொண்டு தம் வீரப் பிரதாபங்களை மட்டுமே காட்ட முனைந்ததன் விளைவா இது?

 

னி 2017இல் வெளியான அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றியும் 2020இல் வெளியான ‘நெடுமரங்களாய் வாழ்தல்’ பற்றியும் நமது கவனத்தைச் சிறிது குவிக்காவிடின் நாம் கவிஞரின் கவிதை வளர்ச்சியையும் அதன் கூர்ப்பையும் அறிய முடியாது போய்விடும் என்றே நினைக்கிறேன்.

ஒரு கவிதையானது வாசிக்கும் தரமான வாசகர் எவரையும் ஈர்க்கும் தன்மையுடையதாய் எழுந்து நிற்பதற்குரிய காரணம் என்ன? இங்குதான் ஒவ்வொரு கவிஞனும் நிற்கும் தளமும் அத் தளம் கோரும் சொற்களும் அவற்றின் பாவிப்பு முறையும் என்று கலை நிலை வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இது மட்டுமல்ல ஒரு கவிஞனது உள அமைவு பற்றியும் கவனிக்க வேண்டும். ஒரு கவிஞன் தன் கவித்திறனை கண்ணுக்குரியதாகவோ (Visual), காதின் ஓசைக்குரியதாகவோ (Rules Of Rhyme), கருத்துக்குரியதாகவோ (Philosophical) வளர்த்துள்ளான் என்பதையும் கவனிக்க வேண்டும். கண்ணுக்குரியதைத் தேர்பவன் படிமம், குறியீடு, நினைவூட்டல் (Allusion) போன்றவற்றின் மூலம் தன் கருத்தை வெளிப்படுத்துகிறான். காதுக்குரியவன் ஓசை மூலம் தன் உணர்வலைகளை எழுப்ப முயல்கிறான். கருத்துக்குரியவன் சொல்லும் முறையில் தன் கருத்தை ஈர்ப்புக்குரியதாக்குகிறான். இவன் சொல்லும் கருத்து ஏற்கெனவே நமக்குத் தெரிந்ததாய் இருப்பினும் அவன் அதைச் சொல்லும் முறையின் புதுமையே கலையையும் கவித்துவத்தையும் தோற்றுவிக்கலாம்.

இவை அனைத்துக்கும் மேலானதாக நான் கருதுவது சொற்பதங் கடந்ததைச் சொல்ல முயலும் ஆத்மார்த்தத் தன்மை வாய்ந்த (Metaphysical) கவிதைகளையே. அதாவது புலங்களுக்கு எட்டாது நழுவி நழுவி ஓடும் உள்ளுணர்வின் பாற்பட்ட (Intuitive) அறிதலால் உள்ளுணர்ந்து அதற்குரிய மந்திரம் போன்ற சொற்களால் உருவேற்றப்பட்ட கவிதையே நான் கூறுவதாகும். இந்த வகைக் கவிதைகளையே நான் ஆத்மார்த்தக் கவிதைகள் என்கிறேன்.

மேலே கூறியவற்றின் துணையுடன் ஆழியாளின் ‘பூவுலகைக் கற்றலும் கேட்டலும்’ மற்றும் ‘நெடுமரங்களாய் வாழ்தல்’ ஆகியவற்றில் காணப்படும் கவித்துவ வீச்சை அதாவது ‘எளிய சொற்களின் ஒளிர்தலின் உயிர்ப்பை’ ஏற்றும் நுட்பத்தை அறிவது மிக முக்கியமானது. இதன்மூலம் நமது கவிதை ஆய்வும் மேன்மையுறும்.

‘நெடுமரங்களாய் வாழ்தல்’ தொகுப்பில் உள்ள ‘உப்பு’ என்னும் தலைப்புடைய முதற்கவிதையே எளிமையான சொற்களால், எளிமையான சிந்தனையால் ஆழமான உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது.

‘எந்தக் கடற்கரை/ அழகு அற்றிருக்கிறது/ எந்தக் கடல்/ அலைகள் இன்றித் தவழுகிறது/ என் நாட்டுத் தொடுவானத்தை/ கடல் தொடாதிருக்கிறது/ எத்தீவின் கடல்/ கரைகளை ஆரத் தழுவாமல் போகிறது/ எவ் அலையின் நுரைகள் கரைக்கு/ வெண்முத்துச் சங்கிலிகளை/ அணிவிக்காமல் திரும்புகின்றன…’ என்று அடுக்கிக் கொண்டே போகும் கேள்விகளில், உள்ளதிரும் கலைத்துவத்தை மென்று ரசித்துக்கொண்டே செல்கையில் கவிதை மற்றொரு இறுதிக் கேள்விக்கு வருகிறது.

எந்தத் தாய்
தன் குழந்தைகளை
போருக்காகப் பெற்றெடுக்கிறாள்?

என்று கேட்கப்படும் கேள்விக்கு, ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்குரிய நேர்மறையான பதில், இதற்கும் உரியதாய் உள்ளிருக்கிறதா? வாசகரே தீர்மானிக்கட்டும்.

அடுத்துவரும் ‘களையெடுப்பிற்குப்பின் மறக்கக் கூடாதவை’ என்ற தலைப்புடைய கவிதை, வித்தியாசமான முறையில் சொல்லப்படும் ஆழமான கவிதை. ‘செடிகளோடுதான்/ களைகள் வளர்கின்றன’ என்று தொடங்கி

களைகளின் வாழ்வு
செடிகளின் வேரிலே
நட்பின் கால்மண்ணே
துரோகங்களின் உரமாகும்

என்று முடியும் இக் கவிதையில், துரோகிகள், காட்டிக் கொடுப்போர் என்போரை களைகளோடு ஒப்பிட்டு எடுத்தாளப்படும் சொல்லடுக்குகள் இறுதியில், ‘களைகளின் வாழ்வு செடிகளின் வேரிலே’ எனக் கூறிவிட்டு ‘நட்பின் கால்மண்ணே துரோகங்களின் உரமாகும்’ என்னும் போது நாம் எங்கெல்லாமோ எடுத்துச் செல்லப்படுகிறோம். நம்முன்னே நண்பர்களாக நம் பார்வையையே பிறழ்வுற வைத்து சந்தர்ப்பம் வரும்போது காட்டிக்கொடுப்புகள், துரோகங்கள் என்பவற்றின் கூட்டு மொத்த வியாபாரிகளாய் மாறிக் கொட்டமடித்த எத்தனை முகங்கள் எம்முன்னே!

இன்னும் பல்வேறு நினைவுகளை இழுத்துவரும், சில இதமான கவிதைகள்: ‘நம்பிக்கை என்னும் நீர்வர்ணக் கோட்டோவியம்’ என்னும் கவிதை மரக்கறிப் பாத்திகளைச் செப்பனிட்டுக் களைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தவளின் மூலம் தரப்படும் உணர்வலைகள் நெஞ்சை நெருடுவதாய் உள்ளது.

‘செம்மரச் சீவல் படுக்கையை மீறி/ மைனஸ் 8.7 எதிர்ப்பாகைக் குளைரையும் மீறி/ மிக மெதுவாக அசைகிறது/ ஒரு வித்திலைப் பிஞ்சுப் புல்/ ஓர் நீர்வர்ணக் கோட்டோவியம் போல்/ பிடுங்க முடியவில்லை!’ என்று கூறிவரும் கவிஞர் அவரது பாத்தியில் ஒரு அற்ப புல், எத்தனையோ தடைகளை மீறி ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது, அற்ப ஆயுளில் மறைந்துபோன கவிஞர் சிவரமணி நினைவு அவரது நெஞ்சை உறுத்துவது தெரிகிறது.

‘மனது கசிகிறது/ சிவரமணி! நீ இருந்திருக்கலாம்’

இவ்வாறே கொலை செய்யப்பட்ட ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய நோபேட் பற்றியும், ராஜினி திரணகம பற்றியும் கூறியபோது, ‘மனசாட்சியை/ மீண்டும், மீண்டும் நள்ளிரவில் எழுப்பும்/ கதவின் பின்னால்/ நோபேட்டினதும், ராஜினியினதும் கைகள்/ இன்னமும் சோர்ந்துவிடவில்லை’ என்று முடிக்கிறார்.

எவ்வாறு ஒரு ஆற்றலுள்ள படைப்பாளி, நுட்பமான முறையில், தனக்குள் இருந்தெழும் நுண்ணிய உணர்வுகளை பற்பல கோணங்களில் வெளிக்காட்டுதல், எம்மையும் அவரோடு இழுத்துச் செல்கிறது.

இவர் தீவுகளைப் பற்றிச் சொல்லும்போது ‘பெண்கள் தனித்த தீவுகள்’ என்கிறார். ‘கோபக்காரியின் நடையைப் போல தோட்டம் நீண்டு கொண்டே போகிறது’ என்றும் ‘சுவரேறிக் குதிக்கும் கோபம்’ என்றும் ‘வெயிற் பூக்களை அள்ளிச் செல்வோர் இல்லை’ என்றும் விடுபட்ட ரசிப்புக்குரிய சொல்லாடல்கள். இன்னும் ‘எனக்குத் தெரிந்தவர்கள்’ கவிதையானது கவிதை பற்றி எதுவும் தெரியாதவரையும் கூட ரசிக்க வைக்கும் என்பது நிச்சயம்.

 

விதையின் கூர்ப்பு என்பது என்ன?

இதைச் கொண்டே ஓர் இனத்தின் அகப்பண்பாட்டை, அதன் விடுதலை உணர்வை, சுருக்கமாகச் சொல்வதாயின் அதன் நாகரீகத்தை உணர்ந்து கொள்ளலாம்.

கவிதை என்பது மனிதன் தொடங்கிய காலந்தொட்டு அவன் கனவாக, அவனோடு மிதந்து வந்தது. அவன் மனக்குகைகளில் மிதந்து வந்த இந்தக் கனவு, அவன் மலைக்குகைகளில் வாழ்ந்தபோது ஊமை ஓவியங்களாக குகைச்சுவர்களில் கண்சிமிட்டிற்று. அவன் வாய், பேச்சு மொழியை மிழற்றத் தொடங்கியபோது இக்கனவு, வாய்மொழிக் கவிதைகளாய் (பாடல்களாய்) அவன் வாயில் தத்தித் தத்தி ஓசையில் மிதந்தது. பின்னர் அவன் எழுத்தறிந்து எழுதத் தொடங்கியபோது, அவன் கனவு யாப்பமைவற்ற ‘ஆதிப் பொதுக்கவிதையாய்’ அல்லது ‘ஆதிப் புதுக்கவிதையாய்’ சிறகடித்தது. இதன் பின்னர் இக்கவிதைகளின் உயிர்ப்பறிந்து இலக்கணம் வகுக்கப்பட்டு, அவற்றுக்கு யாப்பு என்ற அதிகாரம் போடப்பட்டதும் கனவாக மிதந்த கவிதையின் சுதந்திரச் சிறகுகள் கொய்யப்பட்டு மண்ணோடு பிணைக்கப்பட்டு ஆண்டானுக்கு சேவகம் செய்யத் தொடங்கிற்று.

ஆனால், கூர்ப்பென்பது இவ்வாறு எவருக்கும் அடிபணிந்து போகவிடுவதில்லை. ஆண்டானுக்குச் சேவை செய்த கவிதையும் தூக்கி எறியப்பட்டு புதுக்கவிதை தோன்றலாயிற்று. இந்த புதுக்கவிதை கூட வெற்று ஓசை சத்தங்களாய், ‘நாங்கள் கோடியிலே கிடக்கின்றோம், நீங்கள் மாடியிலே இருக்கின்றீர்கள்’ என்று வானம்பாடி கவிதைகளும் ஒதுக்கப்பட்டன. இவற்றை ஒதுக்கிய புதிய சொல்லாக்கங்கள், புதிய எடுத்துச் சொல்முறைகளோடு நிமிர்ந்த கவிதைகள் ஒரு புறம், அவற்றோடு படிமம், குறியீடு, உருவகம் என்ற இன்னொருவகை. மேலும் பாரதி, வோல்ட் விற்மன், றொபேர்ட் ஃபுரொஸ்ட், டி.எச். லோரன்ஸ் வழிவந்த எளிமையும் இனிமையும் கொண்டவை வேறு. இவற்றோடு புதைந்து போன நமது நினைவு அடுக்குகளை மேலெழுப்பி பீதி, ஆற்றாமை அடியோடும் ஆத்மீக உணர்வுகளை மேலாட வைத்து விளையாடும் கவிதைகள், மேலும் டி.எஸ் எலியட் கையாளும் மெய்யியலும் யதார்த்தமும் பின்னிப் பிணைந்தோடும் மொழியாளுகை சார்ந்த கவிதைகள் எழுந்து இன்று நம் தமிழை மேன்மைப்படுத்தியுள்ளன. இவற்றுள் ஒன்றாகவும் வேறாகவும் நிற்கும் அற்புதமான கவிதையொன்று ‘நெடுமரங்களாய் வாழ்தல்’ தொகுப்பில் ஆழியாள் தந்துள்ளார் ‘தூக்கம்’ என்ற தலைப்பில். இக் கவிதை தொடங்கும் முறையே தனியானது.

‘இவர்கள்/ இருளின் எந்த இழைகளில் கால்வைத்து/ எந்தக் கால்த்தடங்களைப் பின்பற்றி/ கனவின் வழியே/ என்னைத் தொடர்கிறார்கள்…….’

இக்கவிதையை நான் பலதடவைகள் படித்துவிட்டேன். படிக்கும் ஒவ்வொரு முறையும் அது வேறாக மாறிக்கொண்டு, வேறான நினைவடுக்குகளை மேலாட வைத்து, எங்கோ எனக்கும் இந் நிகழ்வுகள் நடந்தது போன்ற உணர்வுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் காஃப்கா ரக கதைகளைப் படிக்கும் ஒருவன் உண்மையா பொய்யா என்று தடுமாறுவது போல் இங்கே ஆழியாள் இக் கவிதை மூலம் எம்மைத் தடுமாற வைப்பதோடு ஒரு கையறு நிலைக்குள் எமை இருத்தி கைதட்டி சிரிப்பது போன்று இருக்கிறது. இக் கவிதை நாம் வாசித்திருக்கும் பல விஷயங்களின் ஓர உணர்வுகளை நினைவூட்டி, எம்மை உரசிப் பார்த்த வண்ணமே உள்ளன. வேறு சிலருக்கு இது ஒன்றுமே அற்ற, ஏதுமேயற்ற ஒன்றாகவும் இருக்கலாம். அதற்கு நான் பொறுப்பாளியல்ல. வாசித்துப் பாருங்கள் ‘தூக்கத்தை’ உங்கள் சிலருக்கு தூங்க முடியாமல் போகலாம், அதற்கும் நான் பொறுப்பாளியல்ல!

“Mu.Ponnambalam” <mupoo1@hotmail.com>

mu. ponnambalam

Amrutha

Related post