800 கோடி: மக்கள் தொகை அதிகரிப்பு – ஆபத்தா ஆனந்தமா? – பிரபு திலக்

 800 கோடி: மக்கள் தொகை அதிகரிப்பு – ஆபத்தா ஆனந்தமா? – பிரபு திலக்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நவம்பர் 15 அன்று பிறந்த பெண் குழந்தைதான் ஐநா கணக்குப்படி உலகின் 800 கோடியாவது குழந்தை. இந்தக் குழந்தையின் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாடினார்கள் பிலிப்பைன்ஸ் மக்கள். தங்கள் நாட்டு குழந்தை சரித்திரப் புகழ்பெற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு.

1800ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை நூறு கோடியானது; 1987இல் 500 கோடியை நெருங்கியது; இப்போது 800 கோடியை தொட்டுள்ளது. கடந்த 1974ஆம் ஆண்டில் 400 கோடியாக இருந்த மக்கள் தொகை கடந்த 48 ஆண்டுகளில் இரட்டிப்பாகி இருக்கிறது. இந்த 800 கோடியில் கடைசி 100 கோடியை கடந்த 11 ஆண்டுகளில் இந்த உலகம் கடந்திருக்கிறது. இதே வேகத்தில் போனால் 2030ஆம் ஆண்டில் 850 கோடியாகவும், 2050இல் 970 கோடியாகவும் உலகின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று ஐநாவின் கிளை அமைப்பான World Population Prospects 2022 கணித்துள்ளது.

உலக மக்கள்தொகை ஆயிரம் கோடியை 2057ஆம் ஆண்டில் எட்டக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள். 2014ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வு முடிவு, கொடிய தொற்றுநோய் பேரிடர், பேரழிவு அல்லது உலகப் போர் போன்ற பெரிய உலகளாவிய இழப்பு ஏற்பட்டாலும்கூட, 2100ஆம் ஆண்டு மக்கள் தொகை 1000 கோடியாக உயரும் என்று தெரிவிக்கிறது.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எதியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், டான்சானியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை பெருகும் என்றும், அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மக்கள் தொகை மேலும் அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

 

னால், மக்கள் தொகை இப்படி அதிகரித்துக்கொண்டே போவது சரியா? 1994இல் உலக மக்கள் தொகை 550 கோடியாக இருந்தபோது, கலிஃபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, மனித இனத்தின் சிறந்த அளவு, 150 கோடி முதல் 200 கோடி மக்கள்தொகையே என்று கணக்கிட்டது. அதன்படி, பூமியின் தற்போதைய மக்கள் தொகையே மிக அதிகமாக உள்ளது. இன்னும் அதிகரித்தால் மனித குலத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? இந்த உலகத்தால் சமாளிக்க முடியுமா என்று ஒரு பகுதியினர் கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.

“உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, நாடுகளில் உணவு பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என பல பிரச்சினைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.

மக்கள் தொகை பெருக்கம் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், நலவாழ்வுப் பிரச்சினைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடியும் உருவாகும். காலநிலை நெருக்கடி முதல் பல்லுயிர் இழப்பு, தண்ணீர் பிரச்சினை, நிலம் மீதான மோதல்கள் என்று இன்று நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையும் கடந்த சில நூற்றாண்டுகளில் பெருகிய இனப்பெருக்கத்தின் மூலமே. மக்கள் தொகை பெருக்கத்தால் உணவுக்காக போர்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது” என்பது இவர்கள் வாதம்.

மக்கள் தொகை வேகமாக அதிகரித்த, 1970-2020 காலகட்டத்தில், காட்டுயிர்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு குறைந்ததாக உலக காட்டுயிர் நிதியம் (WWF) கண்டறிந்துள்ளது. மனித ஆதிக்கம் அதிகரிக்கும்போது, பல சுற்றுச்சூழல் மாற்றங்கள் நிகழ்கின்றன என்று சிம்பன்சிகள் பற்றிய தனது ஆய்வுகளுக்குப் பிரபலமான ஆய்வாளர் ஜேன் குடால் முதல் தொலைக்காட்சி தொகுப்பாளரும் இயற்கை ஆர்வலருமான கிறிஸ் பேக்ஹாம் வரை தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 2013ஆம் ஆண்டில் சர் டேவிட் அட்டன்பரோ, “நம் அனைத்து சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் மக்கள்தொகை குறைவாக இருந்தால் எளிதில் தீர்க்கப்படுகின்றன. அதேநேரம், மக்கள்தொகை அதிகமாக இருந்தால் அது மிகவும் கடினமானதாக உள்ளது. சில நேரங்களில் சாத்தியமற்றதாக உள்ளன,” என்று குறிப்பிட்டார்.

மக்கள்தொகை அதிகரிப்பு மக்களிடையே பேதங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளதும் குறிப்பித்தக்கது. “மக்கள் தொகை 800 கோடியை எட்டியுள்ள அதே நேரத்தில் மக்களிடையே பிரிவினையும் அதிகரிக்கும். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையேயான பேதங்கள் அதிகரிக்கும். ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகளைச் சேர்ந்த மக்களின் ஆயுட்காலம் சுமார் 30 ஆண்டுகள் அதிகமாக இருக்கும். இதுபோன்ற வித்தியாசங்களால் பிரிவினைகள் மேலும் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.

இதில் அதிகம் கவலைப்பட வேண்டிய இடத்தில் இருப்பவர்கள், நாம்தான். ஆம், இந்தியாதான். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக தற்போது சீனா உள்ளது. இந்த பெருமையை சீனாவிடம் இருந்து இந்தியா 2023-ம் ஆண்டில் தட்டிப் பறிக்கும் என்று ஐநா கணித்துள்ளது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 20 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை நூறாண்டுகளில் 100 கோடியாகவும், தற்போது 141 கோடியே 23 லட்சமாக உள்ளது. சீனாவின் மக்கள் தொகை 145 கோடியே 25 லட்சமாகவும் உள்ளது. இந்த எண்ணிக்கையை இந்தியா அடுத்த ஆண்டு மிஞ்சிவிடும்.

நிலப்பரப்பில் இந்தியாவைவிட மும்மடங்கு பெரிதாகவுள்ள சீனாவில் மக்கள் நெருக்கமாக வாழும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பில்லை. இந்தியாவோ பரப்பளவில் சிறியது. இதனால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு உணவு, குடிநீர், வாழ்விடம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு நிலையை எட்டினாலும்கூட, மக்கள் தொகை பெருக்கத்தால் ஒவ்வோர் ஆண்டும் அதற்கான இலக்கு அதிகமாகிக்கொண்டே போகும். இதனால்,  உணவுப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படலாம். 2060ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியாக அதிகரித்தால் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் பெரும் அவலத்தைச் சந்திக்கும் நிலைமை ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. இது இந்தியாவுக்கும் பொருந்தும். உணவு மட்டுமல்லாது மின் உற்பத்தியின் தேவையும் அதிகமாகி தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.

 

தேநேரம், நமக்கு இன்னும் அதிகமான மக்கள் தொகை தேவை என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆம், மேலே குறிப்பிட்டவற்றுக்கு தலைகீழாக இருக்கிறது இவர்கள் வாதம். குறைந்து வரும் கருவுறும் விகிதத்தை முக்கிய பிரச்சினையாக இவர்கள் கருதுகிறார்கள்.

“மக்கள் தொகை வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் குறையத் தொடங்கும். 2019ஆம் ஆண்டு பிரிட்டனில் சராசரியாக 1.65 குழந்தைகள் பிறந்துள்ளனர். இது அந்நாட்டின் மக்கள்தொகையை இருக்கும் அளவிலேயே பராமரிக்கத் தேவையானதைவிடக் குறைவான விகிதம். இருப்பினும் மற்ற நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்தவர்களால் அந்நாட்டின் மக்கள் தொகை வளர்ந்து வருகிறது. கனடா போன்ற நாடுகளிலும் இதுதான் நிலைமை.

கடந்த 11 ஆண்டுகளில் மக்கள் தொகை 100 கோடி அதிகரித்துள்ளது என்று பார்த்தோம். இதே நேரத்தில் அடுத்த 100 கோடியைக் கடக்க 15 ஆண்டுகளும் அதற்கடுத்த 100 கோடியைக் கடக்க 21 ஆண்டுகளும் தேவைப்படும். உலகளாவிய அளவில் மலட்டுத்தன்மை அதிகரிப்பது, பிறப்பு விகிதம் குறைவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கும்.

தற்போது 800 கோடியாக உள்ள உலகின் மக்கள் தொகை 2054இல் 890 கோடியை தொட்டு பின்னர் இறங்கத் தொடங்கும். 2100ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 720 கோடியாக இருக்கும். ஆம், இப்போதுள்ள மக்கள் தொகையிலிருந்து 80 கோடி மக்கள் குறைந்துவிடுவார்கள்.

மக்கள் தொகை அதிகமாய் இருப்பதால்தானே பிரச்சினைகள் என்று இத்தனை காலம் கூறிக் கொண்டிருந்தோம், மக்கள் தொகை குறைவது நல்லதுதானே என்ற எண்ணம் எழலாம். ஆனால் மக்கள் தொகை குறைவதிலும் சிக்கல் இருக்கிறது.

உதாரணமாய் இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இப்போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. உலகின் இளமை ததும்பும் தேசங்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக 20லிருந்து 44 வயதுக்குட்பட்டவர்களின் சராசரி சதவீதம் 8.5ஆக இருக்கிறது. 50 வயதுக்குட்பட்டவர்களின் சதவீதம் 4க்குள் இருக்கிறது. 2050ல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் சதவீதம் 6 சதவீதமாகவும் 2100இல் சுமார் 7 சதவீதமாகவும் அதிகரிக்கும். அதே வேளையில் இளைஞர்களின் எண்ணிக்கை சதவீதம் குறைந்து சுமார் 4 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதனால், இந்தியா வயதானவர்களின் நாடாக உருவெடுக்கும்.

உழைக்கும் வயதிலிருப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தால் அந்த நாட்டுக்கு அது பலவீனம். மேலும், வயதானவர்களை கவனிக்க இளைஞர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இருக்க மாட்டார்கள்.

இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் பலவற்றுக்கு இந்தப் பிரச்சினையில் சிக்க போகின்றன. தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், போஸ்னியா, ப்யூர்டோ ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளில் கருத்தரிப்பு தற்போது மிக அதிகமாக குறைந்திருக்கிறது. 2020-2025 காலகட்டத்தில் இந்நாடுகளில் கருத்தரிப்பு சதவீதம் ஒன்றுக்கும் கீழ் குறைந்துவிடும். மற்ற உலக நாடுகளுக்கும் அடுத்த சில ஆண்டுகளில் இதே நிலைதான் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை விகிதம் சீராக இருக்க வேண்டும். பிறப்பும் இறப்பும் சரி விகிதத்தில் இருந்தால்தான் வளர்ச்சி, முன்னேற்றம் கிடைக்கும். இறப்பு குறைந்து பிறப்பும் குறையும் சீரற்ற மக்கள் தொகை நாடுகளுக்கு சிக்கலைதான் ஏற்படுத்தும்.

இப்போது சீனா அந்தப் பிரச்சினையைதான் எதிர் கொண்டிருக்கிறது. ஒரு காலகட்டத்தில் அதிக மக்கள் தொகை வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் நாமிருவர் நமக்கு ஒருவர் போன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வந்து மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியது, சீனா. இதனால், கடந்த வருடம் சீனாவின் மக்கள் தொகை எத்தனை லட்சம் அதிகரித்தது தெரியுமா? 4 லட்சத்து 80 ஆயிரம் புதிய வரவுகள்தாம். வருடத்துக்கு 70 லட்சம், 80 லட்சம் என்று அதிகரித்துக் கொண்டிருந்த சீனாவின் மக்கள் தொகை பெருக்கம் இந்த அளவு குறைந்திருக்கிறது. இதனால் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து ஓய்வு பெற்ற மக்களின் நாடாக மாறிவிடுவோம் என்ற அபாயத்தை உணர்ந்த சீனா இப்போது அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள மக்களை வேண்டுகிறது. வீடு வீடாக கதவைத் தட்டி, புதிதாக திருமணமானவர்களை கண்காணித்து, “ஏன் இன்னும் கருவுறவில்லை; சீக்கிரம் கருவுறுங்கள்” என அதிகாரிகள் கெஞ்சுகிறார்கள். சீனாவின் இந்த நிலை இந்தியாவுக்கும் அடுத்த முப்பது ஆண்டுகளில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்கள் இவர்கள்.

மேலும், “பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மக்கள்தொகை பெருக்கம் ஆபத்து அல்ல, நல்ல விஷயமே. அதிகமான மக்கள் இருந்தால், அதிகமான பொருட்களை உற்பத்தி செய்யலாம், அதிகமான சேவைகளை வழங்கலாம். அவர்கள் அதிக நுகர்வையும் மேற்கொள்வார்கள். எனவே மக்கள்தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சியின் சிறந்த நண்பன்” என்றும் கூறுகிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் முதல் தரப்பினர், “குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியால் எப்போதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதில்லை. ஜப்பானில் 1966ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் 1.6 ஆகக் குறைந்தபோதும் பொருளாதார வளர்ச்சியில் அது வீழ்ச்சியடையவில்லை” என்கிறார்கள்.

சரி, இதற்கு என்னதான் தீர்வு? அதிக குழந்தைகள் பெற வேண்டுமா குறைவாக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா?

குழந்தைப் பெற்றுக்கொள்வோம், அளவாய்.

திட்டமிடப்படாத கருவுறுதல், கல்வியறிவின்மை போன்றவற்றாலேயே மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை பெருகுகின்றது. எனவே, குடும்பத்தை திட்டமிடல், பாலின சமத்துவம், அன்னையர் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி ஒவ்வொருவருக்கும் மக்கள் தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

Prabhu Thilak

 

Amrutha

Related post