தமிழ்ப் பார்வையில் சர்வதேசம் – சமஸ்

 தமிழ்ப் பார்வையில் சர்வதேசம் – சமஸ்

கிழக்கும் மேற்கும் – மு. இராமனாதன்; விலை: ரூ. 290; வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோயில் – 629001; தொலைபேசி: +914652278525; மின்னஞ்சல்: kalachuvadu@sabcharnet.in

 

த்திரிகையில் பணி நிமித்தம் கட்டுரைகளை வாசிப்பதானது சள்ளைபிடித்த வேலை. வாசிப்பில் எவ்வளவு ஆர்வம் உள்ளவரையும் அது இயந்திரம் ஆக்கிவிடும்.

நான், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் குழுவில் இருந்த காலகட்டத்தில் அன்றாடம் நூறுக்குக் குறையாமல் கட்டுரைகள் தேர்வுக்காக வரும். அணியினர் அவற்றில் சில பத்துக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். அவற்றிலிருந்து அடுத்த கட்டத் தேர்வை நான் மேற்கொள்ள வேண்டும். இந்த ஓட்டத்தில் நல்ல எழுத்தைக் காட்டிலும் பல மடங்கு மோசமான எழுத்துகளை வேறு வழியின்றி எல்லோருமே வாசிக்க வேண்டியிருக்கும்.

இப்படி அன்றாடம் பத்தாயிரம் சொற்களுக்குக் குறையாமல் வாசிப்பதும் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளைப் பக்க வடிவமைப்பின் அளவுக்கேற்பச் சுருக்குவதும் படைப்புக்குச் சேதாரம் நிகழாத வண்ணம் திருத்திச் செம்மையாக்குவதுமான பணி ரத்தத்தை உறிஞ்சி, மண்டையிலிருந்து ஆவியை வெளியே அனுப்பிவிடக்கூடியது.

படைப்புகளைத் திருத்துவோருக்கு நம்மூரில் கிடைக்கும் வசையும் சாபமும் கொஞ்சநஞ்சம் இல்லை. பத்திரிகைகளில் பணியாற்றுவோருக்கு எல்லோருடைய எழுத்திலும் வலியக் கைவைக்கும் வியாதி இருக்கும் என்ற எண்ணம்கூட இங்கே சிலருக்கு உண்டு. நிதர்சனம் என்னவென்றால், திருத்தம் தேவைப்படாத அளவுக்கு நேர்த்தியாக எழுதப்பட்டு வரும் பிரதிகளைக் கண்டால், அப்படி அனுப்பும் எழுத்தாளர்கள் வாழும் திசை நோக்கிப் பத்திரிகையாளர்கள் கும்பிடு போடுவார்கள். எந்த ஒரு தீவிரமான விஷயத்தையும் லட்சக்கணக்கான வாசகர்களை மனதில் கொண்டு, குறிப்பிட்ட வரையறைகளுக்குள் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது பெரும் சவால். தேர்ந்த வெகுஜனப் பத்திரிகை எழுத்தும் கலை வெளிப்பாடுதான்.

பலர் ஒரு விஷயத்தை அன்றைய காலப் பொருத்தத்தில் அணுகி, எப்படியோ தன் கருத்துகள் வெளிப்பட்டால் போதும் என்கிற எண்ணத்தோடு எழுதும்போது இப்படி எழுதப்படும் கட்டுரைகள் அன்றைய நாளின் தேவையையும் ‘ஓர் அறிக்கை’ எனும் வடிவத்தையும் தாண்டுவது இல்லை. இத்தகு எழுத்துகள் பத்திரிகையில் வாசிக்கப்பட்ட வேகத்தில் கடாசப்படுவதாக அமைந்துவிடும். சிலர் அதே விஷயங்களைத் தொலைநோக்கோடு அணுகி, கட்டுரைகளின் வழி தாம் சொல்லவரும் கருத்துகளோடு, வெளிப்படுத்தும் மொழியிலும் தொனியிலும் கூடவே கவனம் செலுத்துகையில் அடுத்த கட்டத்தை நோக்கி அவர்களுடைய எழுத்து பயணப்படுகிறது. நண்பர் மு. இராமனாதன் இந்த ரகம்.

 

மோடி அரசு பெரும் ஆரவாரத்துடன் ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ கொள்கையை அறிவித்த சமயம். ஓர் அறிவிப்பின் வழி உலகின் தொழிற்சாலை எனும் இடத்தை நமதாக்கிவிடலாம் எனும் பாவனையை அது உருவாக்க முனைந்தது. அப்போது ‘உலகின் தொழிற்சாலை ஆகுமா இந்தியா?’ என்ற கட்டுரையை அனுப்பியிருந்தார் ராமனாதன். உற்பத்தித் துறையில் சீனாவை விஞ்சும் இலக்கு உண்மையாகவே இந்திய அரசுக்கு இருக்கும் என்றால், எப்படியெல்லாம் அதற்கு இந்தியா தயாராக வேண்டும்; எவ்வளவு காலம் திட்டமிட்டு உழைக்க வேண்டும்; குறிப்பாக மனிதவளத் துறையை எப்படியானதாகச் சிந்திக்க வேண்டும் என்று அந்தக் கட்டுரையில் விவரித்திருந்தார்.

Kizhakkum Mergum, Book Reviewமோடியின் மீதோ அரசின் மீதோ வெற்றுத் தாக்குதல்கள் எதுவும் இல்லை. சொல்லப்போனால், திட்டத்தின் உள் அரசியலையெல்லாம் அவர் பொருட்படுத்தக்கூட இல்லை. நேர்மறையான பாதையிலேயே தரவுகள் அடிப்படையிலான தர்க்கங்கள் வழி இந்திய ஆளும் வர்க்கமானது வெளிப்படுத்தும் ஒவ்வோர் அபத்தத்தையும் அம்பலப்படுத்தியிருந்தார். இந்திய அரசு அப்போது புல்லட் ரயில் திட்டத்தில் தனக்குள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. இராமனாதன் தன் கட்டுரையில் சொல்லியிருந்தார், “சென்னை மெட்ரோ ரயிலின் சரிபாதித் தடம் சுரங்கப் பாதைகளால் அமைக்கப்படுகிறது. நிலத்தின் அடியில் 30 அடிக்கும் கீழே சுரங்கங்களை அமைக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்காக 12 இயந்திரங்களை வெளியிலிருந்து நாம் தருவித்திருக்கிறோம். இவற்றில் ஒரு இயந்திரம் அமெரிக்க நிறுவனத்தினுடையது, மூன்று சீன நிறுவனத்தினுடையது, எட்டு ஜெர்மன் நிறுவனத்தினுடையது; ஆனால், இந்த இயந்திரங்களுக்குள் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லாமே சீனத்தில் உருவாக்கப்பட்டவை.”

எவ்வளவு அநாயசமாக இராமனாதனால் ஒரு விஷயத்தின் அடியாழத்துக்குச் செல்ல முடியும் என்பதை மேலே உள்ள பத்தியின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடியும். அடுத்தடுத்த வரிகளிலேயே இராமனாதன் சொல்வார், “இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 74% பேர். சீனாவில் இது 95%. 1990களிலேயே சீனாவில் கல்வி கற்றோர் விகிதம் இந்தியாவின் தற்போதைய நிலையைக் காட்டிலும் உயர்வாக இருந்தது. இந்தியாவில் சுமார் 29 கோடிப் பேருக்கு எழுத்தறிவு இல்லை. உலகில் எழுத்தறிவற்றோரில் மூன்றில் ஒருவர் இந்தியர். தவிர, இந்தியாவின் கல்வித் தரமும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பெரும்பான்மையினரால் இரண்டிலக்கக் கழித்தல் கணக்கைக்கூடப் போட முடியவில்லை. பொதுச் சுகாதாரமும் இந்தியாவில் பலவீனமாகத்தான் இருக்கிறது. ஒரு சராசரி சீனர் சராசரி இந்தியரைக் காட்டிலும் 11 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார். தன்னுடைய உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.7% தொகையைச் சுகாதாரத்துக்காகச் சீனா செலவிடுகிறது; இந்தியாவில் இது 1.2%.”

இராமனாதன் வெறும் தரவுகளை அடுக்கி, கட்டுரைகளை உருவாக்குபவர் அல்லர். நடைமுறைக் கதைகள் அதில் இருக்கும். கூடவே தரவுகள் இருக்கும். பிரச்சினையின் அடிநாதம் கட்டுரையில் சுட்டப்படுவதோடு, தீர்வுகளுக்கான முன்மொழிவுகளும் இருக்கும். நல்லெண்ணமும் நல்மதிப்பீடுகளும் கட்டுரைகளைக் கோத்துப் பிணைத்திருக்கும். நாங்கள் பத்திரிகை அணியினர் வேடிக்கையாக எங்களுக்குள் பேசிக்கொள்வோம், “இராமனாதன் எழுத்திலும் பொறியாளர், எப்படியிருக்கிறது பாருங்கள் கலவையும் கட்டமைப்பும்!”

இராமனாதனிடம் எனக்குப் பிடித்தமானது அவருடைய எளிமையும் கச்சிதமும்!

 

லவையான வளர் பின்னணி இராமனாதனுக்கு அமைந்தது அவருடைய பார்வைக்கு முக்கியமான காரணம் என்று எண்ணுகிறேன். கிராமப்புறப் பின்னணியில் அரியக்குடியில் பிறந்து வளர்ந்தார். பக்கத்தில் உள்ள நகரமான காரைக்குடி தனித்துவமான அடையாளங்களையும் பண்புகளையும் கொண்டது. பெரும் ஏற்றத்தையும் வீழ்ச்சியையும் பார்த்த தமிழ் நகரம் அது. தமிழ்நாட்டின் தொழில் உற்பத்தி நகரமான கோவையில் அவர் பொறியியல் பயின்றிருக்கிறார். பிற்பகுதியில் பன்மைத்துவப் பண்பாடுக்குப் பேர்போன சென்னை அவர் வாழ்வோடு கலந்துவிடுகிறது. கூடவே உற்ற துணையாக எப்போதும் இலக்கியத்தைக் கொண்டிருக்கிறார். தீவிரமான வாசகர். இத்தகு பின்னணியிலிருந்து, தன்னுடைய சொந்த சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒருவர் வெளிநாடுகளுக்குப் பணியாற்றச் செல்லும்போது, பல நாடுகளுக்கும் பயணிக்கும்போது அங்கெல்லாம் கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் சேர்ந்து எத்தகைய பார்வையை உருவாக்கும்? அதைத்தான் இராமனாதனின் எழுத்துகளில், இந்த நூலில் நாம் பார்க்கிறோம்.

தமிழில் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள், உரையாடல்கள், பகிர்வுகள் மிகக் குறைவு. அதிலும் ஆழ்ந்த பார்வையும் சமநிலை நோக்கும் கொண்டவை மிக அரிது. கூடுதலாக இராமனாதன் எழுத்துகளுக்கு உள்ள தனித்துவம் என்னவென்றால், கால் பதித்த நாடுகள் தொடர்பான விவகாரங்களையே அவர் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்; நேரடி அனுபவங்களின் பின்னணி இந்த நூலுக்கு உள்ள பெரும் பலம். அதிலும் உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாகவும் நமக்கு முன் பெரும் சவாலாகவும் இன்று எழுந்து நிற்கும் சீனா தொடர்பில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் முக்கியமானவை என்று கருதுகிறேன்.

வெளியான காலகட்டத்திலேயே இந்தக் கட்டுரைகளைப் பெருமளவில் வாசித்துவிட்டேன் என்றாலும், நூலாகத் தொகுக்கப்பட்ட பின் வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட எண்ணம் இதுதான்: ‘இராமனாதன் ஏன் தனித்தனித் தலைப்புகளில் புத்தகம் எழுதக் கூடாது? சீனா தொடர்பில் மட்டுமே எவ்வளவு விஷயங்களைத் தொட்டிருக்கிறார்! சீனர்களின் உணவுப் பண்பாட்டிலிருந்து சீனர்களின் புலம்பெயர்வுப் பண்பாடுவரை எவ்வளவு விஷயங்களைப் போகிறபோக்கில் சொல்லிப்போகிறார்! எவ்வளவு விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்!’

வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம். இளையோருக்கு, குறிப்பாகக் குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல வாசிப்புக்கான நூல் என்பதைத் தாண்டி, வழிகாட்டியாகவும் அமையும்.வெகுசிலரே கால் பதித்திருக்கும் இந்தப் பாதையில் இதைத் தொடக்கமாகக் கொண்டு இராமனாதன் மேலும் பயணிப்பார்; விரிவான நூல்களை நமக்குக் கொடுப்பார் என்றால், தமிழ் வாசகர்கள் கொடுத்துவைத்தவர்கள்!

samas

Amrutha

Related post