கண்ணீர்த் துளிகளால் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை – தமிழ்நதி

 கண்ணீர்த் துளிகளால் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை – தமிழ்நதி

சைக்கிள் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து இருபத்தேழாயிரம் ரூபாய் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? பச்சைப் பொய் என்று சிரித்திருப்பீர்கள். இதை எழுதும் நான்கூட ஜூலை மாதம், 2022ஆம் ஆண்டு இலங்கையில் இல்லாமலிருந்திருந்தால், அதை மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்றே எண்ணிக் கடந்திருப்பேன். இலங்கையில் எரிபொருட் தட்டுப்பாடு உச்சத்தை அடைந்தபோது, வீட்டுத் தாழ்வாரங்களில் சாத்தி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டிகளுக்கும் அவற்றைத் திருத்தும் கடைக்காரர்களுக்கும் ‘மறுவாழ்வு’ பிறந்தது.

இலங்கையில் ‘கோவிட்’ காரணமாக சுற்றுலாத் துறை வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி, தவறான பொருளியல் நிர்வாகம், தகுந்த கால அவகாசமோ முன்னறிவித்தல்களோ இன்றி இரசாயன உரத்திற்குத் தடைவிதித்து இயற்கை உரத்திற்கு மாறும்படி விவசாயிகளை நிர்ப்பந்தித்தமையால் பயிர்ச் செய்கையில் (குறிப்பாக நெற்செய்கையில்) ஏற்பட்ட பாதிப்பு, அதன் விளைவான விலையேற்றம், ராஜபக்ஷக்கள் பதவியேறியதும் அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய வரிகளைத் தளர்த்தியமை ஆகியனவே பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களெனச் சொல்லப்பட்டபோதிலும், ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல்கள், ஆடம்பரம், சொத்துக் குவிப்பு ஆகியனவும் நாட்டின் வீழ்ச்சியில் வகித்த பங்கைக் குறைத்து மதிப்பிட்டுவிடலாகாது. எல்லாவற்றுக்கும் மேலான அடிப்படைக் காரணமாக அமைந்தது, ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் உள்ளார்ந்தும் வெளிப்படையாகவும் இலங்கைத் தீவில் நிலவிவரும் இராணுவவாதமேயாகும். இந்த இராணுவவாதமானது அரசு மற்றும் சிவில் நிர்வாகத்தில் காத்திரமான செல்வாக்குச் செலுத்தியது; செலுத்தி வருகிறது.

 

2022ஆம் ஆண்டு ஜனவரியில்தான் நெருக்கடியின் தாக்கங்கள் மெதுமெதுவாக வெளித்தெரிய ஆரம்பித்தன. பலியுயிரை மெல்ல நின்று கொல்லும் நோய்போல நிதானமாகவே ஆரம்பித்தது சிக்கல். எல்லாம் வழமைக்குத் திரும்பிவிடுமென்றுதான் நாங்கள் ஆரம்பத்தில் நினைத்திருந்தோம். போரின் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து ஏற்கெனவே பழக்கப்பட்டிருந்ததால், கொஞ்சம் பொறுமையோடிருந்தால் போதுமென்றெண்ணினோம். தவிர, மேலுமொரு விடயம் எங்கள் நம்பிக்கைக்கு வலுச்சேர்த்தது. என்னதானிருந்தாலும், தமது சொந்த இன மக்களை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் தெருவில் அலையவிடமாட்டார்களென்று நாங்கள் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தோம். அவர்களுக்கு வார்ப்பதில் சிறிதளவேனும் தமிழர்களுக்கு பொசியக்கூடுமென்று எண்ணியிருந்தோம்.

அனைத்து நம்பிக்கைகளும் நாளடைவில் பொய்த்துப்போயின!

முதலில் சமையல் எரிவாயு தீர்ந்தது. அதுவும் தற்காலிகமானதென்று நினைத்தோம். எதற்கும் இருக்கட்டுமென, மின்சாரத்தில் இயங்கும் அடுப்பைத் தேடி கடைகள்தோறும் ஏறியிறங்கினோம். “மின்சாரத்தில் இயங்கும் அடுப்பு இருக்கிறதா?” என்ற, ஏற்கெனவே பலதடவைகள் செவிமடுக்கப்பட்ட கேள்விக்கு கடைக்காரர்கள் தலையுயர்த்தாமலே “இல்லை”யென்று சலிப்போடு பதிலளித்தபோது, நாங்கள் பிந்திவிட்டதை உணர்ந்தோம். எங்களது பகுதியிலிருந்த பலசரக்குக் கடை முதலாளியொருவர் வாடிக்கையாளர்களுடன் ‘உடன்படிக்கை’ ஒன்றைச் செய்தார். இத்தனை ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால், எரிவாயு கலனொன்றை (அதுவும் அதிக காசுக்கு) தர பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டார். நாங்கள் அவரது வாடிக்கையாளர்களன்று. ஆயினும், இத்தகைய நெருக்கடி நிலைகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கென்றே காத்திருப்பவர்கள் எங்களுக்குக் கைகொடுத்தார்கள். பதினைந்தாயிரம் ரூபாவிற்கு ஒரு மின்னடுப்பு கிடைத்தது.

அப்படியெல்லாம் ஒரேயடியாக மகிழ்ந்துபோய்விட மின்வெட்டு அனுமதிக்கவில்லை. கறி கொதித்துக் கொண்டிருக்கும்போதே மின்சாரம் அறுந்துவிடும். ஆங்கில எழுத்தாகிய ஏ-யிலிருந்து டபிள்யூ வரை மின் வழங்கு வலயங்கள் வகுக்கப்பட்டிருப்பதையும், அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரங்களின்படி மின்சாரம் வெட்டப்படும் என்பதையும் நெருக்கடி நிலையின்போது அறிந்துகொண்டோம். காலை எட்டு மணிக்கு மின்வெட்டெனில் விடிகாலையிலேயே எழுந்து அரிசியைப் போட்டோம். தொட்டியில் தண்ணீரை நிரப்பினோம். அலைபேசிக்கும் மடிக்கணினிக்கும் மின்னேற்றினோம். சிலசமயம், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு மின்வெட்டு நிகழாமலிருந்து எங்களை ஏமாற்றிவிடுவதுமுண்டு. இது நடந்தது பெப்ரவரியில். காலையில் இரண்டு மணித்தியாலம், மாலையில் இரண்டு மணித்தியாலம் என இருந்த மின்வெட்டு, நேரமும் பொருட்களது விலைகளைப்போன்று படிப்படியாக உயரத்தொடங்கிற்று. ஒருநாள், 13 மணித்தியாலங்கள் மின்சாரம் இடைநிறுத்தப்பட்டது.

மார்ச்சில் நிலைமை மேலும் மோசமாயிற்று. மக்களது ஊடாட்டத்திற்கு ஆதாரமான பெற்றோலும் டீசலும் கிடைப்பது அரிதாயிற்று. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடங்கும் வரிசை கிலோ மீற்றர்களைக் கடந்து நீண்டது. வரிசைகளில் இடம்பிடிப்பதற்காக முதல்நாளிரவே போய் நின்று (படுத்து) அடுத்த நாட் காலையில் பெற்றோல், டீசலை நிரப்பிவருவது அன்றாடச் செயற்பாடுகளில் ஒன்றாயிற்று. அதுவும் ஓராளுக்கு இத்தனை லீற்றர் மட்டுமே வழங்கப்படுமென்ற கட்டுப்பாடு. (பிற்பாடு கியு.ஆர். கோட் எனப்படும் ஒழுங்கு முறைமையைக் கொண்டுவந்தார்கள்.) பெப்ரவரி மாதம் 177 ரூபாயாக இருந்த பெற்றோலின் விலை ஜூலை 2022இல் 470 ரூபாயாக உயர்ந்தது. உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட விலை இது. கள்ளச்சந்தையில் ஒரு லீற்றர் பெற்றோல் 3,500 ரூபாய்வரை எகிறியது. 5000 ரூபாய்க்குக் கூட பெற்றோல் கிடைக்கவில்லை என்று கூறியவர்களுண்டு.

வாழ்நாளில் வரிசையில் நின்றறியாதவர்களும் கறுப்புச் சந்தைக்காரர்களது அறிமுகங் கிட்டாதவர்களுமாகிய சில செல்வந்தர்கள் தம் விலையுயர்ந்த கார்களில் வரிசையில் நின்றார்கள். தவறு, கார்களுள் நாட்களைக் கழித்தார்கள் என்பதே பொருத்தமாக இருக்கும். தோய்க்கப்பட்ட காற்சட்டைகளும் துவாலைகளும் கார் ‘டிக்கி’களில் காயவிடப்பட்டு காற்றிலாடின. அதன் பொருள் அன்றிரவை அவர்கள் அங்கு கழித்திருக்கிறார்கள் என்பதாகும். இங்கொரு புதிய தொழில் வாய்ப்பு உருவாகிற்று. அதாவது, எரிபொருள் வரிசையில் வாகனங்களோடு கூட நிற்பதற்குக் காசு. புகையிரதங்களில் துண்டு போட்டு இருக்கை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு கூலி வழங்குவதுபோல இஃதொரு புதிய தொழில்.

ஒரே வார்த்தையில் சொல்வதானால் அஃதொரு வரிசைகளின் காலம்! பெற்றோலுக்கு, மண்ணெண்ணெய்க்கு, பலசரக்குப் பொருட்களுக்கு எங்கெங்கு காணினும் வரிசைகள். கைக்குழந்தைகளைத் தோளில் சாய்த்துக்கொண்டு மண்ணெண்ணெய் ‘கான்’களுடன் ஏழைத் தாய்மார்கள் வரிசைகளில் நின்றார்கள். காலையில் எழுந்து கணவனை வேலைக்கும் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கும் அனுப்பிவைத்தபின் வீட்டுவேலைகளைத் தொடங்குகிற, வேலைக்குப் போகிற பெண்ணென்றால் தானும் பேரூந்து நிலையத்தை நோக்கி பரபரத்தோடி பின்னேரம் வீடு திரும்புகிற இயல்பு வாழ்வை இந்தப் பொருளாதார நெருக்கடி புரட்டிப்போட்டது.

கேட்ட பொருட்கள் கடைகளில் கிடைக்கவில்லை. ஒன்றைக் கேட்டால் மற்றொன்று இருப்பதாக கடைக்காரர்கள் சொல்லத் தொடங்கினார்கள். பேரங்காடிகளில் பொருட்களை அடுக்கி வைக்கும் தட்டுகளிற் சில வெறுமையாகத் தொடங்கின. ஏனென்று வினவினால், “அரசின் கஜானா காலியாகிவிட்டதாம். டொலர் கையிருப்பில் இல்லையாம். அதனால் பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லையாம்” என்றார்கள். ‘ஓகோ! இத்தனை நாட்கள் பொருட்களை ரூபாய் கொடுத்து வாங்கவில்லை, டொலர்களில் வாங்கிக் கொண்டிருந்தோம்’ என்ற புரிதல் சாமான்யர்களுக்குக் கிட்டியது.

அரசாங்கமானது தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு இப்படி இன்னும் பல ‘புரிதல்’களை வழங்க இருப்பது அப்போது கூட புலனாகவில்லை. பொருட்களது இறக்குமதி டொலர் கையிருப்பின்மையால் தடைப்பட்டது ஒரு காரணமெனில், தமது தேவைக்கு மேலதிகமாக பொருட்களை அள்ளிச்சென்று வீடுகளில் பதுக்கிவைத்த பணக்கார வாடிக்கையாளர்கள் வேறு வலிந்த தட்டுப்பாட்டை உருவாக்கினர். பதினைந்து, இருபது சவர்க்காரங்கள், பால் மா பைகள், ஷாம்பூ போத்தல்கள், கோதுமை மா, மெழுகுவர்த்தி, அரிசி என இதர மனிதர்களைக் குறித்த கூச்சமேயின்றி வாங்கிக்கொண்டு போய் சேர்த்துவைத்தார்கள். அப்படிச் சேர்த்துவைத்த அரிசிப் பைகள் நாட்பட்டதில் புழுக்கள் வாழும் கூடாகி குப்பையில் சேர்ந்தன.

பள்ளிக்கூடங்களிலே பசியினால் மாணவர்கள் மயங்கிவிழும் செய்திகள் வரத்தொடங்கின. நெடுநேரம் வரிசையில் நின்ற களைப்பினால் வீழ்ந்து இறந்துபோன முதியவர்கள்… ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்து, இந்த நெடிய காத்திருப்பின் காரணமாக அந்நோயின் பாதிப்பு அதிகரித்து, அதனால் உயிரிழந்தவர்கள் என உயிரிழந்தவர்களது எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிற்று. வரிசையில் நின்றபோது ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம்கூட நடந்தது. இந்த நெருக்கடியினால் மட்டும் 22 உயிர்கள் அநியாயமாகப் பலியாகினவென்று செய்திகளிலிருந்து அறியக் கிடைத்தது.

மண்ணெண்ணெய், எரிவாயு தட்டுப்பாட்டால் கிராமங்களில் வாழ்ந்தவர்களைவிட அதிகமும் பாதிக்கப்பட்டவர்கள் நகரவாசிகளே. அவர்களது தொடர்மாடிக் குடியிருப்புகளில் விறகுவைத்து நெருப்புமூட்டிச் சமைப்பதென்பது சாத்தியமில்லை. சுவை எவ்வளவுதான் குறைந்தாலும் கடைகளில் சாப்பாட்டின் விலையோ உயரத்தில்தானிருந்தது. எரிவாயுத் தட்டுப்பாட்டால் உணவகங்களுட் பெரும்பாலானவை பூட்டப்பட்டுவிட்ட நிலையில் வீட்டுச் சமையலன்றி வேறு வழியும் இருக்கவில்லை. அடுத்தவேளை உணவுக்கு வழியென்னவென்று அறியாது திகைத்துப்போனார்கள் மக்கள்.

வழக்கம்போலவே காசுள்ளவர்கள் எங்ஙனமோ பிழைத்துக்கொண்டார்கள். குறிப்பாக, வெளிநாடுவாழ் உறவினர்களிடமிருந்து பணவருவாயைப் பெற்றவர்களுக்கு, இலங்கையின் பணவீக்கம் காரணமாக வழக்கத்தைவிட அதிகமான நாணய மாற்று விகிதம் கிடைத்தது. அமெரிக்க டொலர் ஒன்று, நானூறு ரூபாய்க்கு நிகரெனும்படி இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. கனடிய டொலரின் பெறுமதியோ வரலாறு காணாத அளவு- அதாவது, முன்னூறு இலங்கை ரூபாயைத் தாண்டியது. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இதுவொரு சாதகம்போலத் தோன்றினும், எவ்வளவு பணம் கிடைத்தாலும் சமாளிக்க முடியாதளவில் விலைவாசிகள் உயர்ந்துகொண்டே போயின. ஏழைகள் மென்மேலும் கொடிய வறுமையுள் தள்ளப்பட்டார்கள். இரண்டு வேளை சாப்பிடுவதே பெரும்பாடென்றாயிற்று.

வெளிநாடுகள் மற்றும் உலகளாவிய நிதிநிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்ட கடன்கள், மக்கள் நலன்களுக்காகவோ அபிவிருத்திக்காகவோ செலவழிக்கப்படாமல் அரசியல்வாதிகளின் சட்டைப் பைகளுள் சென்று மறைந்தன. ஊழல் பேய் தலையைத் தாறுமாறாக விரித்துப் போட்டுக்கொண்டு ஆடியது. எரிவாயு மற்றும் எரிபொருளை ஏற்றிவந்த கப்பல்கள் கடலில் தரித்துக் காத்திருந்தன. அவற்றுக்குச் செலுத்தவேண்டிய கட்டணத்தைச் செலுத்த அரசின் கஜானாவில் காசில்லை. கப்பல்கள் கடலில் காத்திருந்த ஒவ்வொரு நாளுக்கும் பல்லாயிரக்கணக்கான டொலர்களை தண்டப்பணமாக இலங்கை அரசு செலுத்த வேண்டியிருந்தது. ஆக, அரசு இழைத்த தவறுக்கான தண்டனையை மக்கள் அனுபவிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் இவற்றின் தாக்கத்தை பெரும்பான்மையின மக்கள் உணர்ந்துகொள்ளவேயில்லை. அவர்களையறியாது அவர்களுமேகூட இராணுவவாதத்தின் கட்டுப்பாட்டின் கீழிருந்தார்கள்.

நிதி, நீதி, சட்டம், ஊடகம், சிவில் என அனைத்து சேவைகளிலும் இராணுவ ஆதிக்கம் நிலவியது. நேரடியான பிரசன்னம் அவசியமற்ற இடங்களிலுங்கூட இராணுவம் மறைமுகமான தாக்கத்தைச் செலுத்தியது. அது பெரும்பான்மையினத்தைத் தொந்தரவு செய்யாதவரையில் அவர்களும் அதில் விரும்பியே கட்டுண்டு கிடந்தார்கள். ஆனால், தமது வாழ்வாதாரத்திற்கே ஆபத்து ஏற்பட்ட நிலையில், நாட்டின் வளங்களும், ‘வெற்றிபெற்ற இனம்’ என்ற பெருமிதத்தினூடாக தம் உணர்வுகளும் சுரண்டப்படுவதை கண்டுகொண்டார்கள். முப்பதாண்டு காலமாக நீடித்த உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டுவந்தவர்கள், வெற்றித் திருமகன்கள் என்ற கவசத்தால் நீண்டநாட்களுக்கு ஆட்சியாளர்களைப் பாதுகாக்க முடியவில்லை. தனியொரு குடும்பத்தின் சுரண்டல்களை மக்கள் காலந்தாழ்த்தியே புரிந்துகொண்டார்கள். கொதித்தெழுந்து வீதியில் இறங்கினார்கள். மார்ச் 31ஆம் திகதியளவில் மக்கள் வீதிகளில் இறங்கி ஆட்சியாளர்களுக்கெதிராகப் போராடத் தொடங்கினார்கள்.

“இத்தனை காலமும் நாங்கள் எவ்வளவு வதைபட்டோம். அதைக் கண்ணெடுத்தும் பார்க்காத சிங்களவர்கள் இன்று தமக்கு உணவும் எரிபொருளும் இல்லையென்றவுடன் அரசிற்கெதிராக வீதியில் இறங்கியிருக்கிறார்கள்” என தமிழர்கள் கதைக்கத் தொடங்கினார்கள். தமக்குள்தான்.

பெரும் எண்ணிக்கையிலான பல்கலைக்கழக மாணவர்கள் அரசிற்கெதிரான போராட்டங்களில் இணைந்துகொண்டனர். போராட்டக்காரர்கள், இலங்கையின் தலைநகர் கொழும்பின் மையப்பகுதிகளிலொன்றாகிய காலிமுகத்திடலில் கூடாரங்கள் அமைத்து அங்கேயே தங்கியிருக்கத் தொடங்கினர். அவ்விடத்தை நோக்கி மக்கள் வெள்ளம் பெருகத்தொடங்கிற்று. கலைஞர்கள், மதகுருமார்கள் என அவ்விடத்தை நோக்கி ஒவ்வொருநாட்களும் சனங்கள் செல்லத்தொடங்கினர். 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் திகதி, இலங்கையின் பாராளுமன்றத்தில், அரசகரும மொழியாக ‘சிங்களம் மட்டுமே’ இருக்குமென்ற பிரேரணை முன்வைக்கப்பட்டபோது, அதை எதிர்த்து வெளிநடப்புச் செய்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காடையர்கள் அவர் மீதும் இதர சத்தியாக்கிரகிகள் மீதும் குண்டாந்தடிகளால் தாக்குதலைத் தொடுத்ததோடல்லாமல், செல்வநாயகம் அவர்களைத் தூக்கிக் கடலினுள் எறிந்தனர்.) அவர்களது தலைமையில் எந்தக் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்பட்டதோ அதே காலிமுகத்திடலில், அறுபத்தாறு ஆண்டுகளுக்குப் பின் (2022) சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்களை எதிர்த்து கடலலைகளுக்கு நிகரான மனிதர்கள் திரண்டனர்.

“இனியும் உங்களது ஏமாற்று வேலைகள் மக்களிடம் எடுபடாது. புதவிகளைத் துறந்து நாட்டைவிட்டு வெளியேறுங்கள்.”

“எங்களிடமிருந்து திருடிய பணத்தை எங்களுக்குத் திருப்பிக்கொடு.”

“கோத்தாபாய வீட்டுக்குப் போ.”

“எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்.”

“நீங்கள் எங்களுடைய நாட்டை விற்றுவிட்டீர்கள்.”

என்றெழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் கையிலேந்தியிருந்தார்கள்.

இந்தப் போராட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தமிழர்களே பங்கேற்றனர். அதற்கு, சட்டம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் இனரீதியான பாரபட்சங்கள் குறித்த முன்னனுபவங்களும் எச்சரிக்கையுணர்வும் காரணமாக இருந்திருக்கக்கூடும். ஒரு புகைப்படத்தையோ காணொலியையோ வைத்திருக்கிறோம் என்பதற்காகவே கைதுசெய்யப்படுவோமென்ற ‘பாதுகாப்பான’ சூழலில் எதை, எவரை நம்பி போராட்டத்தில் குதிப்பதென்று பின்னடித்திருக்கக்கூடும். எனினும், பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள், ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்போமெனும் பொது நோக்கத்துடன் தம்மை இணைத்தனர். அவ்விடத்தில் இனவாதம் தற்காலிகமாகவேனும் வலுவிழந்திருந்தது. நல்லிணக்கம் நல்லிணக்கம் என்று கூவித்திரியும் அரசியல்வாதிகளது வெற்றுக்கூச்சல்களை விட, அங்கு இனபேதம் மறந்து கூடியிருந்த இளைஞர்கள் நம்பிக்கை தருபவர்களாகத் தோன்றினார்கள்.

srilanka econamic crisis

லங்கை பொருளாதார நெருக்கடியானது நாடளாவியரீதியில் அனைவரையும் பாதித்தது. எனினும், தமிழர்களுக்கு இத்தகைய சூழல் புதிதன்று. விடுதலைப்புலிகள் வடபகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த காலத்தில், வடபகுதி வாழ் மக்கள்மீது காலத்திற்குக் காலம் ஆட்சிக்கு வந்த இனவாத அரசுகள் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதித்தபோது, தகுந்த பிரதியீடுகளை தமிழர்களால் செய்யமுடிந்திருந்தது. உதாரணமாக சவர்க்காரத்திற்குப் பதிலாக பனங்களியை உபயோகித்தனர். மின்கலங்களை (பற்றரி) அனுமதித்தால், விடுதலைப்புலிகள் அவற்றை வைத்து வெடிகுண்டு தயாரித்துவிடுவார்களென்ற என்ற அச்சத்தில் அரசு மின்கலங்களுக்குத் தடை விதித்தபோது, சைக்கிளின் டைனமோவைச் சுழற்றுவதனூடாகக் கிடைக்கும் மின்சாரத்தில் வானொலிச் செய்திகளைச் செவிமடுத்து நிலைமைகளைத் தெரிந்துகொள்ளமுடிந்தது. தென்பகுதி மக்களோவெனில் ஒப்பீட்டளவில் அரசின் செல்லப்பிள்ளைகளாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.

எனினும், குறித்த இந்தப் போராட்ட காலகட்டத்தில், அரசின் ஊழல்களுக்கும் வெகுமக்கள் விரோத செயல்களுக்கும் பெரும்பான்மையின மக்கள் பொறுப்பாகமாட்டார்கள் என்றவகையில் அவர்கள் மீதில் தமிழர்களுக்கு அன்போ வெறுப்போ இருக்கவில்லை. அதிகார மையங்கள் தகர்க்கப்பட்டபோது மகிழ்ச்சியுற்ற மனம், எளிய மக்கள் தாக்கப்பட்டபோதும் கைது செய்யப்பட்டபோதும் கலக்கமுற்றது. பொதுவில், அரசிற்கெதிரான போராட்டங்கள் தமிழர்களுக்கு உள்ளார்ந்த குதூகலத்தைக் கொடுத்தனவென்றே சொல்லவேண்டும். இந்தக் குதூகலமானது, இனப்படுகொலையை நினைவுகூர்ந்த மே மாதத்தில் உச்சநிலையை எட்டியதெனலாம். சரி, தவறு என்பதற்கப்பால் அதற்கான வரலாற்று நியாயங்கள் இருந்தன. வீழ்த்தப்பட்டவர்களது வெஞ்சினம் அது.

மற்றொருபுறம், போர் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைகளின்போது இயல்பாகவே தலையெடுக்கும் கறுப்புச் சந்தைக்காரர்களுக்குக் கொண்டாட்டமான கொண்டாட்டம்! பொருளாதார நெருக்கடி தொடங்கும்போது ஆயிரம் ரூபாயாக இருந்த சீமெந்தின் விலை 3200 ரூபாயாகிற்று. அதுநாள் வரை சீண்டப்படாமல் கிடந்த சைக்கிள்களுக்கு புது மவுசு பிறந்தது. ஜுலை மாதமளவில் சைக்கிளொன்றின் விலை 1,27,000 என்று மலையில் ஏறியது. ஒரு கிலோ பருப்பின் விலை நானறிய 620 ரூபாய்க்கு விற்றது. ஈழத்தில் பெரும்பாலானோரின் தேநீருக்குச் சுவையூட்டிய ‘அங்கர்’ பால்மா கடைகளது தட்டுக்களிலிருந்து மாயமாயிற்று. பிறகு அது தானாக வெளிவந்து 1200 ரூபாவாக உயர்ந்து, காணாமற்போய் மீண்டும் திரும்ப வந்தபோது அதன்விலை 2150 ரூபாவாக எகிறியிருந்தது. நகர்வாழ் பொதுமக்கள் தமது உணவுப் பொருட்களுக்கு பெரிதும் தங்கியிருக்கிற ‘ஃபூட் சிற்றி’, ‘ஆர்பிகோ’ இன்னபிற பேரங்காடிகள், வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒரு அங்கர் பால்மா பக்கெற் என்ற விகிதத்தில் கொள்வனவில் கட்டுப்பாட்டைக் கொணர்ந்தன.

மீன், மரக்கறி, பழங்களின் விலையோ சொல்லுந்தரமன்று. மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் மீனவர்களால் கடற்றொழிலுக்குச் செல்லமுடியவில்லை. ஒரு கிலோ விளை மீனின் விலை 2000 ரூபாயை எட்டியது. ஒரு கிலோ நண்டின் விலை 2500 ரூபாய். ‘மீன் ரின்’ என விளிக்கப்படுகிற தகரத்தில் அடைக்கப்பட்ட மீனுக்கு மவுசும் விலையும் கூடிற்று. ஒரு கட்டத்தில் மீன் ரின்னும் கருவாடுமே இல்லாதொழிந்தன. அல்லது, கள்ளச்சந்தைக்காரர்களது சேமிப்புக் கிடங்குகளில் பதுங்கின. 600 ரூபாயிலிருந்த கோழியிறைச்சியின் விலை 1,600 ரூபாவாக உயர்ந்தது. வடபகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரிகளில் கணிசமான பேர் தம்புள்ள போன்ற தென்பகுதி நகரங்களிலிருந்து கொணரப்படும் மரக்கறிகளில் தங்கியிருந்தார்கள். எரிபொருட் தட்டுப்பாடு காரணமாக அவை வந்து சேரவில்லை. இந்நிலையும் விலையுயர்வுக்கு வழிவகுத்தது.

தக்காளிப் பழமும் பச்சை மிளகாயும் வரலாறு காணாத அளவிற்கு விலையுயர்ந்தன. ஒரு கிலோ தக்காளிப் பழம் 1000 ரூபாயைத் தாண்டியது. பச்சை மிளகாயின் விலையோ 1200 ரூபாய். பச்சை மிளகாயையும் தக்காளியையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வாங்கமுடியாது துக்கத்தோடு அங்கிருந்து அகன்ற பெண்களை நான் கண்டேன். பெரும்பாலான மக்களின் காலை உணவான பாணின் விலையானது 300 ரூபாயைக் கடந்து, எங்கு சென்று தரிக்குமோ எனத் திகைக்குமளவிற்கு ஒவ்வொரு நாட்களும் ஏறிக்கொண்டே போனது. கோதுமை மாவின் விலையும் அவ்வண்ணமே. மருந்துகளின் விலை 29 சதவீதத்தால் உயர்த்தப்பட்டது.

ஜூலை மாதத்தில் எரிபொருள் நிலையங்களின் முன் வரிசைகள் மேலும் நீண்டுகொண்டே சென்றன. அரசிற்கெதிரான போராட்டங்கள் மும்முரமடைந்தன. வீதிகள் வெறிச்சோடின. தனியார் வாகன சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. பொதுப்போக்குவரத்து வாகனங்களில் கொள்ளளவை மீறி மக்கள் நெரிந்துகொண்டு பயணம் செய்தனர். புகையிரதங்களின் கூரைகள் மீது நெருக்கியடித்து அமர்ந்து பயணம் செய்யும் காட்சிகள் கண்ணிற்பட்டு அச்சமூட்டின. வாகனங்களின் இடத்தை சைக்கிள்கள் பிடித்துக்கொண்டன. எப்போதும் போக்குவரத்து நெரிசலில் திணறிக்கொண்டிருக்கும் வீதிகளில் சைக்கிள்கள் சாவதானமாகச் சென்று கொண்டிருந்ததானது காட்சிப்பிழை போலத் தோன்றிற்று.

எரிவாயு தட்டுப்பாட்டினால் உணவகங்களிற் பல ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டிருந்தன. பாடசாலைகளுக்குச் செல்ல வாகனங்கள் அற்ற காரணத்தால் மாணவர்களது எண்ணிக்கை குறைந்தது. சில பாடசாலைகளது கதவுகள் தற்காலிகமாக பூட்டப்பட்டன. வினாத்தாள்கள் தயாரிப்பதற்கான காகிதத் தட்டுப்பாட்டினால் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டன. மின்சாரக் கட்டணங்களைப் பதிந்து தர காகிதங்கள் இல்லாத காரணத்தால், கடைகளில் வழங்கப்படும் பற்றுச்சீட்டு போலொன்றைப் பெற்றுக்கொள்ளநேர்ந்தது. வங்கி அட்டைகள் காலாவதியானால் அவற்றைப் புதுப்பிப்பதற்கு அட்டைகள் இல்லையென வங்கிகள் கைவிரித்தன. பரபரவென்றிருந்த நகரங்கள் ஆள் நடமாட்டமற்ற சூனியப் பிரதேசங்கள் போலாயின.

கடவுச்சீட்டு விநியோக அலுவலகத்தின் முன் நீண்ட வரிசைகள். எப்படியாவது இந்த நாட்டிலிருந்து தப்பியோடிவிட்டால் போதுமென்ற மனநிலை. 2022ஆம் ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 1500 மருத்துவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டதாக கொழும்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராகிய ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஜூன் மாதத்தில் மட்டும் 449 மருத்துவர்கள் வெளியேறியதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஏறத்தாழ ஒரு போர்ச்சூழல். ஆட்சியாளர்களின் பொறுப்புணர்வற்ற செயற்பாடுகளால் சாமான்ய மக்கள்மீது தொடுக்கப்பட்ட பொருளாதாரப் போர்.

இதற்கிடையில், மூன்று மணித்தியால மின்வெட்டு நேரம் பத்து, பதினைந்து மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படலாம் என்ற செய்தி பரவத் தொடங்கிற்று. வெயிலின் காங்கை தோலைப் பொசுக்கிக்கொண்டிருந்த ஜூலை மாதம். ‘அன்னை மண் போல் சுகமில்லை’ என அதுவரை கூறிவந்த வார்த்தைகளின் சுருதி அவரோகணத்தில் கீழிறங்கத் தொடங்கிற்று. அச்சமயத்தில் எனது பொருட்கள் வவுனியாவிலும் நான் கொழும்பிலும் இருந்தோம். வழக்கமாக வவுனியாவுக்குச் செல்ல பதினெட்டாயிரம் ரூபாய் கேட்கும் ‘ஹையேஸ்’ வாகனச் சொந்தக்காரர் ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டார். அவர் எங்களது குடும்ப நண்பருங்கூட. விமான நிலையத்திற்குச் செல்வதற்கே (ஏறத்தாழ 35 கிலோ மீற்றர்கள்) இருபத்தையாயிரம் ரூபாய்கள் என்றிருந்த நிலையில் அந்தக் கட்டணத்தைக் குறைத்துக் கேட்கவோ குறைகூறவோ நாவெழவில்லை. சென்னை செல்வதற்கான விமானப் பயண சீட்டுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாயாக இருந்தபோது, கொழும்பு விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான கட்டணம் ஒன்றரை இலட்சம் ரூபாயாக இருந்தது முரண்ணகையன்றி வேறென்ன?

எனது வீடிருக்கும் வவுனியாவுக்கு (265 கிலோ மீற்றர்கள்) போனால் திரும்பிவர முடியுமா என்ற ஐயம் எனக்கு. எந்நேரம் என்ன நடக்குமென்பதை எவராலும் எதிர்வுகூறவியலாதபடி இருந்தது நாட்டு நிலைமை. செல்லும் வழியெங்கும் ராஜபக்ஷக்களை பதவி விலகுமாறு கோரியும், எரிபொருள், எரிவாயு வேண்டியும் வீதிமறிப்புப் போராட்டங்கள். எனது பொருட்களை மட்டும் எடுத்துவரும்படி கேட்டுக்கொண்டேன்.

 

மார்ச் 31இல் ஆரம்பித்த போராட்டம் ஜூலை 9இல் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்ததுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகினாலே ஜனாதிபதி மாளிகையிலிருந்து தாங்கள் வெளியேறுவோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்தார்கள். சனங்களோ ஜனாதிபதி மாளிகையின் நீச்சல் குளத்திலிறங்கி நீச்சலடித்தார்கள். தண்ணீரை வாயிலுறிஞ்சி வானத்தை நோக்கி உமிழ்ந்தார்கள். நேர்த்தியாக வெட்டப்பட்ட புற்றரைகளில் படுத்துக் களைப்பாறினார்கள். தற்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். உடற்பயிற்சி உபகரணங்களை உபயோகித்து தமது போராட்ட வலுவைத் தேற்றிக்கொண்டார்கள். அரசிருக்கையில் அமர்ந்து பார்த்தார்கள். ‘மேன்மைபொருந்தியவர்’களது கட்டிலில் படுத்து உருண்டார்கள். மாளிகையெங்ஙணும் காகிதங்கள் பறந்தன. இங்கும் வரிசை. மக்கள் வரிசையில் நின்று மாளிகையைப் பார்வையிட்டார்கள். அதுவோர் அருங்காட்சியகம்போல் மாறிற்று. பார்வையிட வந்தவர்களில் ஒரு சிறுவன் வியப்பு அகன்றிரா விழிகளுடனும் கசந்த சிரிப்புடனும் கூறினான்.

“நாங்கள் சாப்பிட வழியில்லாமல் இருக்கும்போது, இங்கே இவர்கள் குளியலறையில் கூட ஏ.சி. போட்டிருகிறார்கள்.”

ஜூலை மாதம் 14ஆம் திகதியன்று, சிங்கப்பூரிலிருந்தபடி கோத்தபாய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சல் வழியாக சபாநாயகருக்கு அனுப்பிவைத்தார். அந்தச் செய்தியை உலகெங்ஙணுமிருந்த செய்திச் சானல்கள் ஒளிபரப்பின. போராட்டக்காரர்களுக்கு அஃதோர் கொண்டாட்டத்திற்குரிய செய்தி! 2009 மே மாதம் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டபோது, எந்த நகரத்தின் வீதிகள் ஒளிமிகக் கொண்டு துலங்கினவோ, எந்த மக்கள் தமிழர்களது வீழ்ச்சியைத் தமது வெற்றியெனக் கருதி பாற்சோறு பொங்கிப் பகிர்ந்துண்டு பரவசமடைந்தார்களோ அதே நகரத்தில் அதே மக்கள் தமது ‘வெற்றித் திருமகன்’ பதவி விலகலை பேருவகை பொங்கக் கொண்டாடினர்.

இலங்கையின் ஜனாதிபதி (முன்னாளாகிவிட்ட) கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகிய செய்தியை, ரொறன்ரோ நகரத்திலிருந்தபடி, ‘வியன்’ தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு உண்டான மகிழ்ச்சிப்பெருக்கானது போராட்டக்காரர்களது மகிழ்ச்சிக்கு சற்றும் குறைந்ததன்று என்றுரைப்பதானது அவ்வுணர்வைக் குறைத்துச் சொல்வதாகும்.

வார்த்தைகளால் வடித்துவிடமுடியாத உணர்வு அது. அதன் பின்னால் காலத்தால் ஆற்றப்பட முடியாத காயங்களும் காரணங்களும் இருந்தன. மரண பரியந்தம் வரை இருக்கும்.

தமிழ்நதி <tamilnathy@gmail.com>

Thamizhnathy

Amrutha

Related post