மூன்று அநாதைகள் – அ. முத்துலிங்கம்

 மூன்று அநாதைகள் – அ. முத்துலிங்கம்

ப்பிரிக்காவிலுள்ள ஒரு வறிய குக்கிராமம். அங்கே வந்த ஜேர்மன் சுற்றுலாவாசியிடம் கட்டுக்கட்டாக ஜேர்மன் காசு இருந்தது. வயிற்றிலே பசி. சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைத்தால் உயிரைக் காப்பாற்றலாம். ஜேர்மன் காசைக் கிராமவாசியிடம் கொடுத்தார். அவர் அதை தூக்கி சூரியவெளிச்சத்தில் உயர்த்திப் பரிசோதித்துவிட்டு திருப்பிக் கொடுத்தார். கிராமவாசிக்கு அது வெறும் தாள்தான். ஆனால், அதன் மதிப்பு ஜேர்மனியில் 20 பேர் சாப்பிடலாம். மொழியும் அப்படித்தான். எப்படித்தான் கற்றறிந்த விஞ்ஞானியாக இருந்தாலும் உணவு வேண்டும் என்று சொல்வதற்கு அவர் மொழி பயன்படவில்லை. எழுத்து இல்லாத, உலகத்தில் 2,000 பேர் மட்டுமே பேசும் அந்தக் கிராமத்தாரின் மொழிதான் பயன்படும். ஆகவே, அவர்கள் கிராமத்தில் உயர்ந்த மொழி எது? அவர்கள் பேசும் மொழிதான். உலகிலே பசிக்கு மொழி கிடையாது. அந்தப் பசியை எந்த மொழிக்காரரும் ஆற்றலாம்.

பல வருடங்களுக்கு முன்னர் நியூயோர்க் நகரில் நடந்த விழாவில் ஒருவர் இந்தச் சம்பவத்தை விவரித்தார். நாம் அங்கே கூடியிருந்தது முக்கியமாக (ஜோஸ் ஆண்ட்ரெஸ்) Jose Andres என்பவரின் உரையை கேட்பதற்கு. அதி உன்னதமான சமையல் கலைஞர் அவர். உலகின் எந்தப் பகுதியிலும் பேரிடர் நேரும்போது அங்கே உதவி வழங்க முதல் ஆளாக நிற்பார். உணவு வழங்குவதுதான் அவர் செய்யும் தொண்டு. உணவு பக்கெட்டுகளை ஹெலிகொப்டரில் இருந்து கீழே வீசுவதல்ல. அவர் வேலை உணவை சமைத்து வழங்குவது. ஹைட்டியில் புயல் அடித்தபோது அங்கே முதலில் நின்றவர் அவர்தான். அவர் சேவையை பாராட்டி வெள்ளை மாளிகை விருது அளித்திருக்கிறது. உலகத்தின் உயர்ந்த 100 சாதனை மனிதர்களில் ஒருவராக இவரை ‘டைம்’ இதழ் தேர்ந்தெடுத்திருக்கிறது.

அவருடைய பேச்சு இன்னும் மனதில் நிற்கிறது. அவர் மேடையில் ஐந்து நிமிடம் மட்டுமே பேசினார். ’ஒரு மனிதருக்கு ஒரு தட்டு உணவு’ என்றார். பசிக்கு மொழி இல்லை. இனம் இல்லை. சாதி இல்லை. நிறம் இல்லை. எங்கே ஒருவருக்கு பசிக்கிறதோ அதை தீர்க்க வேண்டியது மனிதரின் மேலாய கடமை. You give food, you give life. உணவுதான் மனிதனுக்கு உயிர் கொடுப்பது. இவர் World Central Kitchen (உலக சமையல்கூடம்) என்ற அமைப்பின் மூலம் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

ஒரு வருடம் முன்பு 24 பிப்ரவரி 2022 அன்று உக்ரைன் மீது ரஸ்யா படை எடுத்தபோது அங்கு முதலில் போனது ஹூஸே அண்டெரஸ் மற்றும் அவரின் உலக சமையல்கூடத் தொண்டர்கள்தான். உலகத்தின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக் கணக்கானவர்கள் இணைந்துகொண்டார்கள். இவர்களில் ஒருவர் பெயர் டொன் ஸ்டூவர்ட். இருபது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அவரைச் சந்தித்திருக்கிறேன். உலக சமையல் கூடம் எப்படி இயங்குகிறது என்பதை அறிய இவரைத் தொடர்புகொள்ள முடிவு செய்தேன்.

 

ரு நடுத்தர அமெரிக்க குடும்பத்தில் பிறந்தவன் டொன். அவனுடைய தாயும் தகப்பனும் கார் விபத்தில் இறந்து போக நான்கு வயதிலேயே டொன் அனாதையானான். அவனுக்கு வேறு சொந்தம் கிடையாததால் ஒரு தம்பதி அவனைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். இந்த தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தொண்டு செய்வதில் அர்ப்பணித்தவர்கள். டொன்னையும் சிறுவயதில் இருந்தே சேவை செய்யும் ஆர்வம் கொண்டவனாக வளர்த்தார்கள். பெரியவன் ஆனதும் உலகில் எங்கே எப்படியான உற்பாதம் நடந்தாலும் அங்கே போய் தன்னால் முடிந்த உதவிகளை செய்வான்.

அண்டெரஸ் நடத்திய சமையல் கூடத்தில் டொன் தொண்டராக அவ்வப்போது வேலை செய்தான். ‘பத்திரிகைகள் எழுதுவதுபோல உண்மையிலேயே அண்டெரஸ் உலகத்தின் அதி சிறந்த சமையல்காரரா’ என்று கேட்டேன். டொன் இப்படி பதில் சொன்னார்: ‘எனக்கு தெரியாது. ஆனால், அவர் என்ன சமைத்தாலும் அது சுவையாக இருக்கும். இதைக் கொண்டுவா, அதைக் கொண்டுவா என்று கேட்கமாட்டார். எது இருக்கோ அதை வைத்து சமைப்பார். ஆனால், உணவின் ருசி அபாரமாக இருக்கும். சில உணவுக்கு பெயரே கிடையாது. உடனேயே தனக்கு அந்தக் கணம் தோன்றிய ஒரு பெயரை சூட்டுவார். சிலர் சொல்கிறார்கள் அவர் தண்ணீரும் நெருப்பும் இல்லாமல் சமைப்பதில் வல்லவர் என்று. அப்படி சமையல்காரர்கள் வரலாற்றில் இருந்ததாக நான் படித்ததுண்டு.’

உக்ரைன் போர் தொடங்கியபோது டொன் தான் செய்த வேலையை துறந்தார். வளர்ப்பு பெற்றோரிடமும் நண்பர்களிடமும் பணம் திரட்டிக்கொண்டு உக்ரைனுக்குப் பயணம் செய்து உலக சமையல் கூடத்தில் சேர்ந்தார். அவர் போனபோது அங்கே ஏற்கனவே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்துவிட்டார்கள்.

’உங்கள் தினசரி வேலை என்ன?’ என்று டொன்னிடம் கேட்டேன். ’சமையல் வேலைதான். அதிகாலையில் சமைக்கத் தொடங்கிவிடுவோம். பின்னர் சமைத்த உணவை வரிசையாக வழங்குவோம். உடல் உழைப்பு மட்டும்தான் எங்களுடையது. திட்டமிடுவது எல்லாம் எனக்கு மேலே இருப்பவர்கள். சில சமயம் உணவை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு இன்னொரு உணவு வழங்கும் இடத்துக்கு போக நேரிடும். அது அபாயமான பணி. போகும் வழியில் என்னவும் நடக்கலாம்.’

’நீங்கள் சமைக்கும் இடத்தில் ஆபத்து இல்லையா?’

’ஆபத்து இல்லாத இடம் என ஒன்றுமே இல்லை. கீழே பெரிய பங்கர்கள் இருக்கும். அபாயச் சங்கு ஊதியதும் அங்கே போய் ஒளிந்துகொள்ள வேண்டும் என்பது கட்டளை. மீண்டும் வந்து வேலையை விட்ட இடத்திலிருந்து தொடங்குவோம்.’

’நீங்கள் காலை நேரம் அகதிகளுக்கு சூப் வழங்கும்போது அவர்கள் வரிசையாக வந்து வாங்கிச் செல்வார்கள் அல்லவா? அதில் ஒரு படம் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா?’ என்றேன். அவரும் அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த எனக்கு ஆச்சரியமா அல்லது ஏமாற்றமா என்பதை வர்ணிக்க முடியாது. யார் சூப் வழங்குகிறார்கள், அதை யார் பெறுகிறார்கள் என்பது தெரியவே இல்லை.

அகதிகள் என்றால் கிழிந்த ஆடைகளுடன், கலைந்த தலைமுடியுடன் கசங்கிய மேல்கோட்டு அணிந்து நிற்பார்கள் என்று நினைத்தேன். அனைவருமே சிறந்த ஆடை அணிந்து நல்ல காலணிகளுடன் கௌரவமான தோற்றத்தில் வரிசையில் ஒழுங்காக நின்றார்கள். உணவு வழங்குபவர்களும் நேர்த்தியான ஆடைகளுடன் காணப்பட்டார்கள். எனக்கு ஏமாற்றம்தான். நான் அவருக்கு எழுதினேன், ’இதில் யார் உணவு கொடுக்கிறார், யார் பெறுகிறார்?’ அவர் பதில் அனுப்பினார். இடது பக்கம் இருப்பவர்கள் கொடுக்கிறார்கள். வலது பக்கம் நிற்பவர்கள் அகதிகள்.

World Central Kitchen

’சிகப்பு சட்டை அணிந்து சிரிக்கும் இளம் பெண்ணின் கணவன் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து போர்புரிகிறான். இந்தப் பெண் சமையல் கூடத்துக்கு தினம் வந்து உதவுவார். ஒரு குறிப்பிட்ட நேரம் ஒவ்வொரு நாளும் அவரை கணவன் டெலிபோனில் அழைத்துப் பேசுவார். அந்தக் கணம் அவள் கணவன் உயிருடன் இருக்கிறான் என்பதில் மகிழ்வாள். அடுத்த கணம் சோகத்தில் ஆழ்ந்துவிடுவாள். ஆனால், நேரம் தப்பி ஏதாவது தொலைபேசி வந்தால் கெட்ட செய்தி என்று பதைத்து விடுவாள். தினம் தினம் இந்தப் பெண் செத்துப் பிழைப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.’

’நீங்கள் அங்கே சமையல் செய்த காலத்தில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தை எனக்கு கூறமுடியுமா?’ டொன் அப்பொழுது வேலையில் மும்முரமாக இருந்தார். அடுத்தநாள் அவர் ஓய்வாக இருக்கும் சமயம் அழைப்பதாகச் சொன்னார். ஆனால், அவருடைய அழைப்பு வரவில்லை. அவரை வேறு சமையல் கூடத்துக்கு மாற்றி விட்டார்கள். பின்னர் சிலகாலம் அவரை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

ஒருநாள் மாலை அவரிடம் இருந்து தொலைபேசி வந்தது. ‘நீங்கள் ஒரு சம்பவம் கேட்டீர்களே அது கடந்த வாரம் நடந்தது’ என்று சொல்லத் தொடங்கினார்.

அவர் வாழ்ந்த அதே ரோட்டில் வசித்த ஒரு மூதாட்டி பற்றிய சம்பவம். அந்த வீட்டில் மூதாட்டியும் அவருடைய 10 வயதுப் பேரனும் மட்டுமே. அவர் துணிச்சலான கிழவி. அபாயச் சங்கு ஊதினால் கீழே போய் பங்கரில் ஒளிந்துகொள்ள மாட்டார், ஆனால், பேரனை மட்டும் விரட்டுவார். சிலநாட்களில் அபாயச் சங்கு நாளுக்கு பத்து தடவை ஒலிப்பதும் உண்டு. இவர் ஒருபோது கீழே போனது கிடையாது.

ஒரு நாள் ரஸ்யப் படை ரோட்டிலே அணிவகுத்து போனபோது இவர் நடுரோட்டில் போய் நின்று உக்ரைன் மொழியில் திட்டினார். அவர்கள் எச்சரித்தும் இவர் அசையவில்லை. பீரங்கி வண்டிகளும் ஆயுதம் தாங்கிகளும் படைவீரர்களும் காத்து நிற்க இவர் நடுரோட்டில் நின்று கத்தினார். பக்கத்து வீட்டுக்காரர்கள் பாய்ந்துபோய் அவரை உள்ளே இழுத்து வந்தார்கள். பலமுறை இப்படி நடந்தது. ஏன் அப்படிச் செய்தார் என்று கேட்டால் அவர் சொல்வார். ’இது என் நாடு. என் ரோட்டிலே நான் நிற்கிறேன். என்னைப் போ என்று உத்தரவிட இவர்கள் யார்?’ என்பார். அவரை காப்பாற்றியவர்கள் சொல்வார்கள், ’நீ பெரிய துணிச்சல்காரிதான். உனக்கு உக்ரைன் அரசாங்கம் விருது கொடுக்கப் போகிறது. நீ சுடுபட்டு இறந்தால் உன் பேரனை யார் காப்பாற்றுவார்கள். அதை யோசி.’ அவர் அதைக் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.

ஒருநாள் அபாயச் சங்கு ஊதியது. எல்லோரும் பங்கருக்குள் சென்று பதுங்கிக்கொண்டார்கள். மூதாட்டியின் வீட்டின் மேல் குண்டுவிழுந்து இவர் இறந்துபோனார் ஆனால், பையன் பிழைத்துவிட்டான். ’பையனுக்கு என்ன நடந்தது?’ என்று கேட்டேன். டொன் பிறகு சொல்கிறேன் என்றார். அதன் பின்னர் பலநாள் தொடர்பில்லை. நானும் அடிக்கடி அழைத்து தகவல் விட்டபடியே இருந்தேன்.

பல நாட்களாக அவர்கள் ஊர்விட்டு ஊர் மாறிக்கொண்டே இருந்தார்கள். ஒருநாள் டொன்னிடமிருந்து தொலைபேசி வந்தது. அவர் குரலில் உற்சாகம் இல்லை. ’இங்கே இன்றைக்கு இதுதான் பேச்சாக இருக்கிறது. பக்கத்து ஊரில் நடந்தது. ரஸ்ய படை அந்த ஊருக்குள் புகுந்தது. வழக்கம்போல பீரங்கி வண்டி, ஆயுதம் தாங்கி, யந்திரத் துப்பாக்கி வாகனம் என அணிவகுத்த படை. அந்த வீதியில் ஒரு கிழவர் இருந்தார். பழைய போர்வீரர். தன்னுடைய பழங்காலத்து தானியங்கி துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நடுரோட்டில் வந்து நின்று சுடத்தொடங்கினார். ஒருவருமே எதிர்பார்க்கவில்லை. அந்த அணியில் எரிபொருள் சுமக்கும் வாகனம் ஒன்றும் இருந்தது. அது பற்றி எரிய கணிசமான ஆயுதங்களையும் வீரர்களையும் ரஸ்யப்படை இழந்தது. ஆனால், கிழவர் குண்டு பாய்ந்து இறந்துபோனார். இன்று அதுதான் செய்தி. அந்தக் கிழவரை மக்கள் கொண்டாடுகிறார்கள்’ என்றார்.

நான் அடுத்த கேள்வி கேட்கமுன்னர் அவர் டெலிபோனை வைத்துவிட்டார். பல மாதங்களாக அவரிடமிருந்து ஒரு சத்தமும் இல்லை. 24 பிப்ரவரி 2023 உக்ரைன் போர் தொடங்கி ஒரு வருடம் பூர்த்தியான அன்று அவரை அழைத்தேன். அவர் அமெரிக்காவிற்கு திரும்பிவிட்டார். இன்னும் ஒரு வாரத்தில் தான் மறுபடியும் உக்ரைன் போவதாகச் சொன்னார். வீட்டிலே பெரிய சத்தமும் ஆரவாரமுமாக இருந்தது எனக்கு கேட்டது. நலம் விசாரித்துவிட்டு அந்த பத்து வயதுச் சிறுவனுக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். ’அவன் இங்குதான் என்னோடு இருக்கிறான்’ என்றார். ’நீங்கள் தத்து எடுத்து வளர்க்கிறீர்களா?’ ’ஆமாம், அவனுடன் இன்னும் இரண்டு சிறுவர்களையும் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன். என் வீட்டில் இப்போது மூன்று உக்ரைன் மொழி பேசும் அனாதை சிறுவர்கள்’ என்றார். ’மூன்று அனாதைகளா?’ ’இல்லை, என்னுடன் சேர்த்து நாலு’ என்றார்.

’நான் அனாதையாக வாழ்க்கையை ஆரம்பித்தேன். என்னை தத்தெடுத்த வளர்ப்பு பெற்றோர் எனக்கொரு வாழ்க்கையை அமைத்து தந்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லும் முகமாக இந்தச் சிறுவர்களை நான் வளர்க்கிறேன்’ என்றார். ’உக்ரைன் மொழி பேசும் வளர்ப்பு பிள்ளைகள் இப்போது ஆங்கிலம் பேசுகிறார்களா?’ என்றேன். ’பசிக்கு ஏது மொழி?’ என்றார் அவர்.

’அது எல்லாம் சரிதான். எப்படி அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்தீர்கள்?’ என்றேன். சில நேரம் மௌனம். ’நீங்கள் இலங்கைக்காரர்தானே?’ ’ஆமாம்.’ ’உலகிலே அகதிகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது இலங்கை நாடு. உங்களுக்கு கூடவா தெரியாது?’ என்று சொல்லிச் சிரித்தார். நானும் சிரித்தேன்.

 

நியூயோர்க் நகரில் ஜோஸ் ஆண்ட்ரெஸ் தன் உரையில் உணவு கொடுப்பது ஒருவருக்கு உயிர் கொடுப்பதற்கு சமம் என்று சொன்னது ஞாபகத்தில் வந்தது. You give food, you give life. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் புறநானூறுப் புலவர் ஒருத்தர் ’நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று பாடியிருப்பதை நினைத்தேன். ஸ்பெயின் தேசத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த இந்த மனிதர், உலகத்தில் எங்கே பேரிடர் நேர்ந்தாலும் அங்கே முதலில் நிற்பவர், அவரும் அதையேதான் சொல்கிறார்.

. முத்துலிங்கம் <amuttu@gmail.com>

A. mUTHULINGAM

 

 

 

Amrutha

Related post