ஹென்றி கிசிஞ்சர் 100 | பெரும் குற்றவாளி | ரதன்

 ஹென்றி கிசிஞ்சர் 100 | பெரும் குற்றவாளி | ரதன்

னிதன் நாகரீகமடைந்து, வளர்ச்சிகண்டு, கூட்டமாக அலைந்து, ஒருவர் தலைமை தாங்கி, பின்னர் அரசு, அரசன் என கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபோது, மனித குழுவின் தலைமை அறத்துக்கு முக்கியத்துமளிக்கவில்லை. மாறாக தனது அரசுக்கு எது சாதகமானதோ அதனையே செய்து வந்தது. அரசியலுக்கு அறமேது?

இன்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் அதில் அங்கம் வகிக்கின்றன. அப்படியிருந்தும் ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன. சைப்பிரசில் இரண்டு நேட்டோ நாடுகள் களமிறங்கிய போது, அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கான காரணம் குறித்து செனட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ஹென்றி கிசிஞ்சர் பின்வருமாறு பதிலளித்தார்: ‘சட்டத்தை விட தேசிய நலனே முக்கியம்.’ (There are times when the national interest is more important I than the law)

அமெரிக்காவின் நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய நலனுக்காகவே செய்யப்படுகின்றன என பழமைவாதிகள் வாதிடுகின்றனர். அவ்வாறான ஒரு பழமைவாதியே ஹென்றி கிசிஞ்சர்.

1923இல் பிறந்த ஹென்றி கிசிஞ்சருக்கு கடந்த மே 27 நூறாவது வயது பூர்த்தியாகிவிட்டது. அமெரிக்காவின் மிகச் சிறந்த அரசியலறிஞர் என போற்றப்படுபவர். நிக்சன், போர்ட் ஆகிய ஜனாதிபதிகளுடனும் பின்னர் ஜோர்ஜ் டபிள்யு புஸ் உடனும் பணிபுரிந்தவர். ஜோர்ஜ் டபிள்யு புஸ் இவரை 9/11 விசாரணைக் குழுத் தலைவராக நியமித்திருந்தார். நிக்சன், போர்ட்ன் வெளிவிவகார அமைச்சராகவும் ஆலோசகராகவும் இருந்துள்ளார். நிக்சனுக்கு பின்னர் ஆட்சியல் அமர்ந்த ஜனாதிபதிகள் அனைவரும் இவருடன் தொடர்பிலிருந்துள்ளார்கள். ஆலோசனைகளையும் பெற்றுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் விதிவிலக்கு. ட்ரம்ப் ஆலோசனைகளை கேட்காதவர்.

ஹென்றி கிசிஞ்சரின் சா(வே)தனைகளைப் பார்ப்போம்…

 

1

1968இல் நிக்சனின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உதவி செய்யும் வகையில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன்சன் வியட்நாமுடன் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைகள் பற்றிய விபரங்களை நிக்சனின் தேர்தல் பிரச்சாரக் குழுவிற்கு கிசிஞ்சர் தெரியப்படுத்தினார்.

ஜோன்சனின் சமாதான பேச்சுக்கள் வெற்றியளிக்குமாயின் நிக்சன் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவது ஓரளவிற்கு உறுதியாகவிருந்தது. நிக்சன், குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோன்சனின் அரசில் உதவி ஜனாதிபதியாக இருந்த ஹூபர்ட் ஹம்ப்ரி (Hubert Humphrey) போட்டியிட்டார்.

நிக்சன் தனது தேர்தல் பிரச்சாரங்களில், தான் வெற்றி பெற்றால் தெற்கு வியட்நாமுக்கு அதிகளவு உறுதிகள் வழங்குவேன் என பிரச்சாரம் செய்தார். தேர்தலில் வெற்றியும் அடைந்தார். 43.4 வீதங்களை நிக்சன் பெற்றிருந்த போதும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோர்ஜ் வோலஸ்ம் சுயேட்சையாக போட்டியிட்டு 13.5 வீத வாக்குகளை பெற்றமை நிக்சனுக்கு சாதகமாக அமைந்தது.

வெற்றி பெற்ற நிக்சன் பதிவிக்கு வந்த சில வாரங்களிலேயே Breakfast Plan, Operating Menu ஆகிய இரகசிய பெயர்களைக் கொண்ட தாக்குதல்களை மேற்கொண்டார். ஹோ சி மின்னை இதன் மூலம் அடிபணிய வைக்கலாம் என்ற நோக்குடனேயே வட வியட்நாமின் விநியோகப் பாதைகள் அமைந்துள்ள கம்போடியா, லாவோஸ்-ன் பகுதிகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டார். அமெரிக்காவின் விருப்பத்துக்கு அடிபணிய வைப்பதே நிக்சனின் நோக்கம். நிக்சனை இவ்வாறு செய்யுமாறு ஆலோசனை வழங்கியது ஹென்றி கிசிஞ்சர்.

கிசிஞ்சர் அப்போது ஒரு நிழல் ஜனாதிபதியாகவே செயல்பட்டார். இவர் ஆலோசனை வழங்கி மார்ச் 17, 1969இல் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

B-52 குண்டு வீச்சு திட்டத்தை ‘நியுயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை முதலில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கிசிஞ்சர் பத்திரிகைக்கு செய்திகளை அனுப்பியவர்களை தேடத் தொடங்கினார். இவரது அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள் உட்பட பலரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. இதனைச் செய்யுமாறு கிசிஞ்சரே கூறினார் எனக் கூறப்பட்டது. இதனை நிக்சனும் அறிவார்.

 

2.

ஆர்ஜன்ரீனா, சிலே, உருகுவே. பரகுவே, பொலிவியா, பிரேசில், பெரு, ஈகுவடேர் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மத்திய அமெரிக்க நாடுகளிலும், அமெரிக்க அரசினால், ஆபரேசன் கொன்டோர் (Operation Condor – Eliminating Marxist Subversion) செயல்படுத்தப்பட்டது. இடதுசாரி புத்திஜீவிகள், ஆதரவாளர்கள் ஒழிப்பே இதன் பிரதான நோக்கம். இடதுசாரி சார்பு அரசுகளை தூக்கியெறிந்து, அமெரிக்க சார்பு அரசுகளை ஆட்சியில் இருத்துவதன் மூலம், தொடர்ச்சியான சுரண்டல்களையும் அமெரிக்க செயல்படுத்தி வந்தது. ஜோர்ன்சன், நிக்சன், போர்ட், கார்ட்டர், ரீகன் ஆகிய ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலங்களில், அவர்களது ஆசியுடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

ஆபரேசன் கொன்டோர் திட்டத்தின் மூலதாரி, கிசிஞ்சர் தான்.

கொன்டோருக்கு முன்பாக சிலியின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இடதுசாரி அதிபர் சல்வடோர் அலெண்டேயை பதவியேற்காமல் செய்ய கிசிஞ்சர் முயன்றார்.

அலெண்டே தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவரை சிலியின் காங்கிரஸ் அங்கீகரிக்க வேண்டும். கிசிஞ்சரின் ஆலோசனைப் படி, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களை அலெண்டேயின் வெற்றிக்கு எதிராக வாக்களிக்க தூண்டப்பட்டது. ஆனால், அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை. இரண்டாவது நடவடிக்கை, தீர்த்துக்கட்டுவது. Operation FUBELT என்பதே தீர்த்துக்கட்டும் நடவடிக்கைக்கு பெயர். இத்திட்டமும் வெற்றியளிக்கவில்லை. மாற்றுத் திட்டங்களை கிசிஞ்சர் சிந்திக்கத் தொடங்கினார்.

General René Schneider Chereau அமெரிக்காவின் திட்டத்துக்கு உடன்படாதால், அவரைக் கொலை செய்து இராணுவ புரட்சியை ஏற்படுத்தி, அலெண்டேயை ஜனாதிபதியாகாமல் செய்வதே அமெரிக்காவின் திட்டம். ஜெனரலும் கொலை செய்யப்படுகின்றார். பலி அலெண்டே ஆதரவாளர்கள் மீது சுமத்தப்படுகின்றது.

இதன் பின்னர் அமெரிக்க அரசு, சிலியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிபர் அலெண்டேயுடன் எந்தவித உறவுகளை மேற்கொள்ளாமல் கிசிஞ்சர் பார்த்துக்கொண்டார். இவரது ஆலோசனைகளின் பிரகாரம் நிக்சன் செயல்பட்டார்.

Henry Kissinger
ஹென்றி கிசிஞ்சர்

அலெண்டே 1973 செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்ட பின்னர் இராணுவத் தளபதி அகஸ்டோ பினோசெட் (Augusto Pinochet) ஜனாதிபதியானார். இவரது கொடுமையான ஆட்சிக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டது. கிசிஞ்சர், ‘இவர் இடதுசாரி போராளிகளுக்கு எதிராகவே செயல்படுகின்றார். கம்யூனிசத்தின் ஒரு பலிகடா இவர்’ என்றார். மேலும், ‘அலெண்டேயைக் கொன்றதன் மூலம் மேற்கிற்கு உதவி செய்துள்ளீர்கள்’ எனவும் கிசிஞ்சர் தெரிவித்திருந்தார்.

1976 செப்டம்பர் 21 அலெண்டே ஆதரவாளரும் அகஸ்டோ பினோசெட்-ஐ எதிர்த்தவருமான சிலியின் முன்னால் அமெரிக்க தூதுவர் ஆர்லாண்டோ லெட்லியர் (Orlando Letelier), அமெரிக்க மண்ணில் வைத்தே சிலியின் இராணுவ ஆட்சியினரால் மோட்டார் வாகனமொன்றில் குண்டு வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இக் கொலை நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் சிலியிலும் உருகுவேயிலும் உள்ள அமெரிக்க தூதுவர்கள் கொன்டோர் நடவடிக்கை பற்றிய எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

லெட்லியர், சிலி இராணுவ ஆட்சியினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பொழுது இவரை விடுதலை செய்யுமாறு கோரியவர்களில் கிசிஞ்சர் குறிப்பிடத்தக்கவர். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுவதில் கிசிஞ்சர் கில்லாடி.

1954இல் பரகுவேயில், 1964இல் பிரேசிலில், 1971இல் பொலிவியாவில், 1973இல் உருகுவே, சிலேயில், 1975இல் பெருவில், 1976இல் ஆர்ஜன்ரீனாவில் அரசுகள் தூக்கியெறியப்பட்டு, அமெரிக்க சார்பு ஆட்சிகள் அமைக்கப்பட்டன.

ஓவ்வொரு தடவையும் அமெரிக்க அரசு மனித உரிமைகளை மீறும் அரசுகளுக்கு எதிராக சட்டங்களை இயற்றும் பொழுது கிசிஞ்சர் குறிப்பிட்ட நாடுகளை இதனுள் அடக்காமல் பார்த்துக்கொண்டார்.

 

3.

1971இல் பங்காளதேஷ் இன அழிப்பு நடைபெற்றது. இதற்கு மூலகாரணகர்த்தா அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி முஹம்மது ஜாஜாக் கான் (Agha Muhammad Yahya Khan). இவர் முன்னால் இராணுவத் தளபதி. இவரது ஆட்சியை நிக்சன் – கிசிஞ்சர் தொடர்ந்து ஆதரித்து வந்தனர். ஜாஜாக் கான் அமெரிக்காவின் நல்ல நண்பன் என நிக்சன் கூறினார். இது பங்காளதேஷ் இனவழிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கூறப்பட்டது.

 

4.

இந்தோனேசியாவை 1968இலிருந்து 1998 வரை சுமார் முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்த ஜெனரல் சுக்காட்டோ, ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், இடதுசாரிகளை ஒழித்துக் கட்டுவதில் மும்முரமாக செயல்பட்டார். இவரது கொடுங்கோல் ஆட்சிக்கு கிசிஞ்சர் – நிக்சன் ஆதரவு வழங்கினர். டிசம்பர் 1975இல் இந்தோனேசியா கிழக்கு ரிமோரைக் கைப்பற்றியது. சுமார் 24 வருடங்கள் இந்தோனேசியா கிழக்கு ரிமோரை ஆட்சி செய்தது. சுமார் இரண்டு லட்சம் ரிமோரியர்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்தது, கிசிஞ்சர்.

 

5.

உலகையே ஆட்சி செய்த கிசிஞ்சர் அருகில் உள்ள கியுபாவை விட்டு வைப்பாரா?

கியுபாவின் இராணுவ, கடற்தளங்களை அழிக்க கிசிஞ்சர் கட்டளையிட்டார். எனினும் அமெரிக்காவால் கியுபா மீது கைவைக்க முடியாதிருந்தது. 1975 இலையுதிர் காலத்தின் போது அங்கோலாவிற்கு கியுபா தனது படைகளை அனுப்பி வைத்தது. அங்கு இடதுசாரிகள் அரசமைப்பதற்கு கியுபா உதவி செய்தது. இது கிசிஞ்சருக்கு கோபமூட்டியது. கஸ்ரோவை ‘பிப்ஸ்கீக்’ (Pipsqueak) எனத் திட்டினார். நமீபியா, சிம்பாவேயையும் கியுபா கைப்பற்றலாம் என கிசிஞ்சர் அச்சப்பட்டார். கஸ்ரோவை அழிக்க திட்டங்கள் தீட்டப்பட்டன.

கிசிஞ்சர் தொடர்ச்சியாக கியுபா மீது பொருளாதார அழுத்தங்களை சுமத்தினார். சர்வதேச சந்தையிலிருந்தும் சர்வதேசரீதியான பொருளாதார, அரசியல் தனிமைப்படுத்தல்களையும் கியுபா மீது அமெரிக்கா மேற்கொண்டது. கிசிஞ்சர் நிழல் ஆட்சி செய்த காலங்களிலேயே அதிகளவு அழுத்தங்கள் கியுபாவிற்கு அமெரிக்கா கொடுத்தது.

1984இல் ரீகன் ஜனாதிபதியாகவிருந்த போது U.S. National Bipartisan Commission on Central America அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ஹென்றி கிசிஞ்சரை ரீகன் நியமித்தார். 12 உறுப்பினர்கள் அடங்கிய அமைப்பு இது. ‘மத்திய அமெரிக்காவில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டங்களின் பின்னால் கியுபாவும் சோவியத் யூனியனும் உள்ளன. அதனை கட்டுப்படுத்த வேண்டும். அமெரிக்கா நேரடியாகவே ஆயுதம், நிதியுதவியளித்து கியுப –சோவியத் சார்பு நிலைகளை மாற்றவேண்டும்’ என இக்குழு தெரிவித்திருந்தது

இடதுசாரிகள் அரசுகளில் போராளிகளை அமெரிக்கா பலப்படுத்தியது; வலதுசாரிகள் அரசாட்சி செய்தால் போராளிகளை அழிக்க கிசிஞ்சரின் குழு ஆவண செய்தது.

 

6.

1972 – 1975 காலப் பகுதியில் கேர்ட்ஸ் போராட்டங்களை கிசிஞ்சர் ஊக்கப்படுத்தினார். குறிப்பாக ஈராக் பகுதிகளில் கேர்ட்ஸ்-ஐ தாக்குதல் மேற்கொள்ளத் தூண்டினார். மறுபுறத்தில் அமெரிக்க சார்பு ஈராக்கில் சதாம் உசைனின் கேர்ட்ஸ் போராட்டங்களை நிர்மூலமாக்கினார். ஆயிரக்கணக்கில் கேர்ட்ஸ் போராளிகளும் மக்களும் கொல்லப்பட்டனர். கேர்ட்ஸ்ன் சுதந்திரப் போராட்டம் பின்தள்ளப்பட வேண்டும் என்பதில் கிசிஞ்சர் முனைப்பாகவிருந்து வெற்றியும் கண்டார்.

 

த்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தியவர் என ஹென்றி கிசிஞ்சர் போற்றப்படுகிறார். இஸ்ரேலுக்கும் எகிப்துக்குமான சமாதான பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலுக்கும் சிரியாவிற்குமான பேச்சுவார்த்தைகள் இவர் அமெரிக்க அமைச்சராக இருக்கும் பொழுது ஆரம்பிக்கப்பட்டது. 1979இல் சினாய் பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேறியது. இஸ்ரேலை எகிப்து அங்கீகரித்தது. இதன் மூலம் சுயஸ் கால்வாயினூடாக பயணிக்கவும் முடிந்தது.

கிசிஞ்சர், ஜேர்மனியில் ஒரு பிறந்த ஒரு யூதர். 1954இல் ஹவார்ட் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவரது நோக்கம் முழுவதும் இஸ்ரேல் சார்ந்தே இருக்கும். இவர் ஏற்படுத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகளின் விளைவு இன்று பார்க்கக்கூடியதாகவுள்ளது. அரபு நாடுகள் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன. பாலஸ்தீன நிலத்தில அமைக்கப்பட்ட இஸ்ரேல் படிப்படியாக தனது ஆக்கிரமிப்பினூடாக பாலஸ்தீனத்தை பெருமளவு கைப்பிடித்துவிட்டது. ஒருமித்த அரபு நாடுகளின் ஆதரவு பாலஸ்தீனத்துக்கு இருந்தது. இன்று, பாலஸ்தீனம் ஒரு தலையிடி என்று கூறுமளவிற்கு அரபு நாடுகள் சென்றுவிட்டது.

நிக்சனின் ஆட்சியின் போது சோவியத் யூனியனிலிருந்து யூதர்கள் வெளியேறுவதற்கும் கிசிஞ்சர் உதவி செய்தார். சோவியத் யூனியனில் யூதர்கள் கொல்லப்படலாம் என கிசிஞ்சர் கருதினார்.

 

வியட்நாம் போர் தோல்வியின் பின்னர் அமெரிக்காவிற்கு முக்கியமான நாடு சீனா என நிக்சன் கருதினார். 1972இல் சீனாவிற்கான விஜயத்தை நிக்சன் மேற்கொண்டார். இதற்கு முன்பாக கிசிஞ்சர் சீனாவிற்கு சென்று அப்போதைய பிரதமர் சூ-என்-லாய்-ஐ சந்தித்தார். சீனாவில் நிக்சனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சோவியத் யூனியன், சீன எல்லையில் இராணுவத்தை குவித்திருந்தது. மாவோ சற்று கலக்கமடைந்திருந்தார். கிசிஞ்சர் சரியான நேரத்தில் சீனாவுடன் உறவை ஏற்படுத்தினார். அமெரிக்காவுடனான உறவு அப்போது சீனாவிற்கு தேவைப்பட்டது.

ON China என்ற தனது நூலில் சீனாவின் முக்கியத்துவத்தைப் பற்றி கிசிஞ்சர் எழுதியுள்ளார். சீனாவின் சந்தையை எவ்வாறு கைப்பற்றுவது என்பதனைப் பற்றி கிசிஞ்சர் அறிந்திருந்தார். அதன் முதல் படியே அன்று கிசிஞ்சராலும் நிக்சனாலும் எடுத்து வைக்கப்பட்டது. பின்னர் தனது உரையாடல்களிலும், சீனாவுடன் எவ்வாறு அமெரிக்கா செயல்படவேண்டும் என கிசிஞ்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஊடகங்களை குறிப்பாக தொலைக்காட்சியை எவ்வாறு அமெரிக்க அரசுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என கிசிஞ்சர் தெரிந்து வைத்திருந்தார். அரசின் நடவடிக்கைகள், அராஜகங்கள் அனைத்தையும் அறத்தின் பெயரில் நிரூபிக்கக் கூடியவர். அதாவது பொய்யையும் மெய்யாக்கும் வல்லமை கொண்டவர். தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தவர். நிக்சனின் வோட்டர்கேட் பிரச்சினை காங்கிரசில் வெடித்தபோது, ஒட்டுக் கேட்பதனை பெரிய பிரச்சினையாக்கத் தேவையில்லை என்று கூறினார்.

இன்றைய அமெரிக்காவின் பல நடவடிக்கைகளுக்கு அன்றே அடித்தளமிட்டவர், கிசிஞ்சர். அமெரிக்க அரசின் அமைச்சராக பதவி வகித்த போது அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கும் பல திட்டங்களை முன்மொழிந்தார். சர்வதேச ஒழுங்கை அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும் என்பது கிசிஞ்சரின் கருத்தாகவும் செயலாகவுமிருந்தது. அமெரிக்க சார்பற்ற அரசுகளை மாற்றவேண்டும், இல்லையேல் அது அமெரிக்காவிற்கு பாதகமாக முடியும் என்ற கருத்தில் தெளிவாகவிருந்தார்.

பதவி வகித்த காலங்களிலும் ஆலோசகராகவிருந்த போதும் கிசிஞ்சர் நடவடிக்கைகளால் கொல்லப்பட்டவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை பல இலட்சங்கள். மேற்கின் நான்கு போர்க் குற்றவாளிகளுள் கிசிஞ்சரும் ஒருவர். ஏனையவர்கள் றொபட் மக்நமரா, புஸ், பிளேயர்.

வழமைபோல் அராஜகவாதியான கிசிஞ்சருக்கு 1973இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொதுவாகவே விருதுகள் பொய்யானவர்களுக்கும் அராஜகவாதிகளுக்குமே வழங்கப்படுகின்றது. இதற்கு நோபலும் விதிவிலக்கல்ல.

சிலியின் அகஸ்டோ பினோசெட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை விட்டபோதும், அமெரிக்கா மவுனம் சாதித்தது. கிசிஞ்சரின் சர்வதேச நண்பர்கள் போர்க்குற்றவாளிகளாக தண்டனை பெற்ற போதும், விசாரிக்கப்பட்ட போதும், பெரும் குற்றவாளி கிசிஞ்சர் அமெரிக்காவில் சுகமாக வாழ்ந்தார். நூற்றாண்டுகள் கடந்தும் அவர் தொடர்கின்றார். அமெரிக்காவும் வல்லரசாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ரதன் <rathan100@gmail.com>

Rathan

 

Amrutha

Related post