முயங்கொலிக் குறிப்புகள் – 2 | கயல்

ஓவியம்: நடேஷ்
6
கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாகவேண்டும்
‘பொண்ணு சூசியா இருந்தா
உங்களுக்கெல்லாம் ஆச்சரியமா இருக்கு’
திருமண வெப்சைட் விளம்பரம்
தொலைக்காட்சித் திரையிலோட,
டேம், மிஸ்ட்ரிவைப், லயணஸ், அன்பௌண்ட்….
பார்த்துப் பார்த்துக் கவனமாய்த்
தெர்ந்தெடுத்த ப்ராண்டட் துணைகளைப்
பயணப் பெட்டியில்
நேர்த்தியாக அடுக்குகிறாள்.
‘உடல் எப்படி
முன்பு இருந்தப்படி;
மனம் எப்படி
நான் விரும்பும்படி…’
சீழ்க்கையடித்துக்கொண்டே கிளம்புகிற இவளுக்கிருப்பது,
பகலில் கால்மிதியாய்த் தாழ்ந்து
இரவில் படுக்கையாகி உடலதிர வாழ்ந்து
மறுநாள் காலை
மறக்காமல் தலைக்குக் குளித்துக்
காலணா நெற்றிக் குங்குமம் தரித்த
முன்னாள்
மங்கையர்குல தெய்வங்களின்
இன்றைய முகம்.
7
காலம் எனும் காமக் கொல்லி
முயங்கும் வேட்கை
காட்டுத் தழலெனச்
சடசடத்துப் பரவ
படுக்கையைக் கைநீட்டித்
துழாவுகையில் அவனை
வேற்றூரில் இருக்கவைக்கிறது.
இறுக்கக் கட்டிக்கொள்ளவேண்டும்
என்று இருவரில் யாருக்குத் தோன்றினாலும்
அதில் ஒருவர்
விடுபட இயலா பணிவலைக்குள்
சிக்குண்டிருப்பதைத் தவறாமல்
பார்த்துக்கொள்கிறது.
குரல்மட்டும் கேட்டால்கூடப் போதும்
என்கிற சமாதானத் தழையூட்டி
மனதைப் பசியாற்றும்போது
சர்வநிச்சயமாக
அலைபேசியைத் தொடர்புகடந்த
எல்லையில் வைத்துவிடுகிறது.
ஏமாற்றங்கள் தவிர்த்து
எதிர்பார்ப்புகள் குறைத்து
சில நிமிடச் சந்திப்பு,
ஆழ்ந்த நீண்ட அகன்ற நெடிய
முத்தம் என்ற பிசிறில்லாத் திட்டத்தில்
இருவரையும் போக்குவரத்து
நெரிசலில் இருத்துவது.
ஒரு எழவும் வேண்டாம்
என்று ரகசியமாய் நீலப் படம் பார்த்து
நிறைந்து பொங்கி வழிகிற
துல்லிய நொடியில்
இணையை வீடியோ காலில் அழைக்கவைப்பது.
இப்போது
மறுபடி முதலில் இருந்து…..
8
உடலெங்கும் பரவிப் படர்கிற
குருதியோட்டம் எனது காமம்;
உதடுவழி மட்டுமே அனுமதிக்கிற
உணவு உன் கிளர்ச்சி.
நினைவுத் தீக்குச்சி உரசலிலேயே
கங்குகள் நெக்குவிடும் தாவரம் என்னுடல்;
சாமத் திரி அமர்த்தி பிறை கீழிறங்கும் வரை
நடக்குமுன் ஊடல்.
அதன் பிறகு நிகழ் சாத்தியமுள்ள
கலவி
பருவந் தவறிய வசந்தமாகக்
கிளைகளைக் குழப்பி
நிறம் வெளிறிய மலர்களையே
புஷ்பிக்கிறது.
ஹலோ மிஸ்டர்
இஃதொரு பெண்ணின் துயரப் பாடல்
என்று கண்டுகொள்ளாமல் கடந்துசெல்லாதே
இதில் ஒலிப்பது உன்னுடைய
குரலும்தான்.
9
புணர்ச்சி விதிகள்
திசைப் பெயர்ப் புணர்ச்சி –
யாரிடமோ ஏதோ சொல்லும் சாக்கில்
செல்லங் கொஞ்சிக் கிடப்பேன்.
இயல்புப் புணர்ச்சி –
நீ ஊரிலிருந்து விரைவில் வருமொழி
கிறங்கடிக்கிறது அலைபேசிச் செய்தி.
பக்கத்தில் அத்தையின் நிலைமொழி
எந்தச் சலனமும் ஏற்படுத்தாததாய் என்னை வெறுமனே
ம் சொல்லவைக்கிறது.
வந்தேவிட்டாய் – தோன்றல்
உன்னைப் பார்க்கக் கூடமெங்கும்
கசகசவென ஆட்கள்
தனிமை – திரிதல்
நண்பர்கள் வீடுகளுக்கெல்லாம் பொருள் தரச் சென்று
நாட்களைக் கழிப்பது காமம் – கெடுதல்.
உடன்படுமெய்
நீ
சாடையில் ரகசியமாய்
உதடசைத்திருந்தாலும்
பிழிந்த துணி உதறாமல்
ஓடி வந்திருப்பேன்.
நீ
15 நாட்கள் விடுப்பில்வந்து
ஊருக்கே உழைத்து
14ஆம் நாள்
யாமத்தில் இழுக்க
கோபத்தில் நான் மறுத்து
மழைக்குத் துள்ளுகிற தவளையொலியாய்
பாய் முறுக்குப் பிரிவது
விகாரப் புணர்ச்சி.
பெரும்பகுதி
விதிக்கப்பட்ட புணர்ச்சிகளே,
வேறென்ன.
10
தளிர் வயதில்
மோக நதிகளின் சலசலப்பென எழும்
யாமக் கிசுகிசுப்புகள் கேட்டு வளர்ந்தவள்.
மூடிய கதவுகளின் காதுகளில்
விழாமல்தான் அவளுடைய முத்த ரதமும் நகர்ந்தது
முதல் இரவு தொடங்கி.
திருவிழாக்களின் சாமியாடிகள் நாக்கின்வழி ஒலிப்பது
உள்ளுக்குள் நகர்ந்துகொண்டிருக்கும்
யாரும் கேட்க வாய்க்காத
சொல் மரவட்டைகளின் குரல் போலிருக்கும் அவளுக்கு.
வாக்குவாதங்கள் இழவு வீடுகள்
தெருச் சண்டைகளில்
அதிர ஒலிக்க அனுமதிக்கப்படுகிற அவளுடைய குரலுக்கு
இருந்துகொண்டே இருக்கிறது
இந்தக் கேள்வி.
பூம் பாறைகளினிடையே வழியும்
மலைச் சுனையளவும்
ஓசை எழக் கூடாதா
தன் ஆயுளையே ஒப்படைத்த ஒருவனை ஆரத் தழுவி
சொக்கப் பனையென தகித்துப்
பின்
குளிர்ந்து
உள்மூச்சு மெல்லத் தணிந்து எழுகையில்
தொடரும்
கயல் <dr.kayalvizhi2020@gmail.com>