ஹிப்பி – ஆதி பார்த்திபன்

 ஹிப்பி – ஆதி பார்த்திபன்

ஹிப்பி

(குளிர் காடு பெண்ணே- மருதோன்றி வளர் நேசம்)

ஓவியம்: நடேஷ்

 

லேலியை பொறுத்தவரை சீசா ஒரு மனிதப் பிராணி; அப்படித்தான் அவனை வைத்திருந்தாள். அவளை பொறுத்தவரை காதல் ஒரு புனித மலசலகூடம் போன்ற ஒன்று. மிக நூதனமாக காதலை கையாளவேண்டும் என்று சொல்லுவாள். எப்படி என்றால், அதனால்தான் சீசாவிற்கு நேரத்திற்கு உணவை வைப்பதைப்போல, காதலை காட்ட வேண்டும் என்று நினைப்பாள். ஒரு நேர சூசி. அது அவ்வளவு நல்லதில்லை என்று சீசா தெளிவு பெற்ற பிறகுதான் பிரச்சினைகள் ஆரம்பமாகின. இது எப்படியென்றால் ஒரு செல்லப்பிராணிக்கு ஞானம் வருவதைப்போன்றதுதான். அது மிருகம். என்ன செய்யும்? முரட்டுத்தனமாக மாறிவிடும்.

“கடிவாளத்தை தேவையில்லாத ஒரு சுமையாக குதிரை நினைக்குமா” என்று லேலி கேட்பாள். “ஒரு குதிரை ஒரு மனிதனின் எண்ணங்களுக்கு பொறுப்பாக முடியாது” என்று சொல்லுவான் சீசா.

இப்படித்தான் ஒரு மிருகம் பெறும் தெளிவு அபாயகரமானது. சீசா அவ்வளவு ஒன்றும் நல்லவனில்லை. ஆனால், கொஞ்சம் மிருகத்தனத்திலிருந்து தன்னை பாதுகாத்து வைத்திருந்தான். அதையும் வெளிக்கொண்டுவரும் அற்புதமான வேலையை லேலி செய்தாள். “நான் உனக்கு சில நேரங்களை ஒதுக்குவேன், நீ காதலித்து கொள். நான் உனக்கு சில காதல் பழக்கவழக்கங்களை சொல்லி தருவேன், நீ காதலித்துக்கொள். காலை ஐந்து மணி தியானம் செய்யும் நேரம். ஓம் என்று சொல்லுவதற்கு பதிலாக எனது பெயரை உச்சரி. நீ என்னை பார்க்காத போதும் காதல் உன்னில் ஒரு நதியின் சுழலைபோல காத்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் எவ்விதமான மனநிலை இருந்தாலும் அது உன்னை உள்ளிழுத்துக்கொள்ள வேண்டும். என்னை நீ நேரில் சந்திக்க வரக்கூடாது. அது எனது அப்பாவுக்கு பிடிக்காத விசயம். அதை நீ கண்டிப்பாக செய்தால் நான் உன்னைவிட்டு விலகிவிடுவதை தவிர வேறு வழியில்லை. காதலிப்பதை விட இந்த உலகத்தில் முக்கிய பணிகள் உண்டு என்பதை பழக்கப்படுத்திக்கொள். நீ எனக்காக காத்திருக்க வேண்டும். வருடக்கணக்காக என்று நான் சொல்லுவேன். ஆனால், ஒரு யுகமானாலும் நான் சொல்லும் தருணம் மாத்திரம் உனக்கானது. அதை தவிர ஒரு இடையூறு உன்னால் நேர்ந்தாலும் பிறகு உனது விதி அவ்வளவுதான். எனக்குள் இருக்கும் உன்மீதான காதல் செத்துப்போகும் குழந்தாய், முடிந்தது.’

தலையை மேல் கீழாகவோ பக்கவாட்டிலோ அசைக்காமல் பொதுவான ஒரு இயக்க திசையில் அசைத்தான் அவன். “சத்தியம் செய்.” மனத்தினுள்ளே வேறொரு விஷயத்தையும் நேரடியாக அவள் கேட்ட விசயத்தையும் சத்தியம் செய்தான்.

 

வ்வாறு தன்னை பற்றிய சுயசரிதையின் ஆரம்பப் பகுதியை முடித்துக்கொண்டு, “அன்பு என்பது அத்தனை புனிதமான செயலில்லைதான் அன்பே.” பெருவிரல்களால் அழுத்தம் கொடுத்து இடறி கால்களை விரித்தான். “நீ நினைக்கிறாயா நான் அவளை…” “நீ எதுவும் பேசாதே” என்று கனவில் தோன்றும் மலைக்கணவாயை போல இருந்த இரண்டு மார்புகளுக்கும் இடையில் அழுத்தித் தள்ளினாள் ஹிப்பி.

திரும்ப எழுந்து இருக்கும் போது ஒரு மணிநேரம் கடந்திருந்தது. புழிந்து போடப்பட்டிருந்த தோடம்பழ மேற்பகுதியைப்போல வியர்வை கசிந்திருந்தது, முகம் வாடியிருந்தது. படுக்கை விரிப்பின் அருகில் இருந்த முக்காலியை நோக்கி உடலை விழுங்கிய மலைப்பாம்பை போல மெல்ல அசைந்தான். விரல்களால் தடவி கையில் சிக்கிய அந்த பொருளை எடுத்துக்கொண்டான். அது ஒரு தீப்பெட்டி. ஒரே ஒரு தீக்குச்சியை மட்டும் எடுத்து பற்றவைத்து அதை அணைத்து அதன் வெப்பம் மாறாத நிலையில் அவள் நடு மார்புக்கு குறுக்காக ஒரு கோடு, இரண்டு மார்புக்கும் சமாந்தரமாக ஒரு கோடு. குலுங்கி சிரித்தவாறே சொன்னாள், “ஸ்தோத்திரம்.”

ஹிப்பி, ஒரு குளிர்ந்த பழத்தை போன்றவள். சிவலிங்கப்பூவின் அதே வளவளப்புடனான சிவந்த உடல் கொண்டலையும் பெண். வியர்வையில் கரைந்து, கண்களின் இருபுறங்களிலும் கரைந்து வழியும் கறுத்த கண் பூச்சை மீண்டும் துடைத்து, கண்களில் இன்னொரு தடவை பூசிக்கொண்டு வளைந்து, மார்புகளில் விழும் கருநாகத்தின் தோற்றத்தில் ஒத்திருக்கும் தலைமுடியை விரல்களால் ஒரு அபிநயத்தின் லாவகத்துடன் சுழட்டி, தலையில் முடிந்துகொண்டாள். பிறகு தென்றல் காற்றின் மேல் அடிப்பில் எழும் இலவம் பஞ்சின் மென்மையுடன் சீசா மார்புக் காம்பில் தனது ஆட்காட்டி விரலால் ஒரு அழுத்தம் தந்தாள். “உனக்கு தெரியுமா சீசா, ஒரு ஆணின் மார்க்காம்பை சரியாக கையாளத் தெரியாதவள் அழகியல் தெரிந்த பெண்ணே இல்லை” என்று சொல்லிவிட்டு வலது கண்ணை சிமிட்டினாள். உலகின் பேரிருளில் இரண்டு ஜோடி மின்மினிகள் மட்டும் எதிர் எதிராக உயிர்ப்பதைப்போல இருக்கும்.

ஹிப்பியை அவன் ரகசியமாக நேசித்தான். லேலி மீதிருந்த அருவருப்பின் நிழல் ஹிப்பியின் கூந்தலில் புதையுண்டிருப்பதாக நினைத்தான். அதன் பேருண்மையை கண்டறிய மறுபடி மறுபடி அவள் கூந்தலுக்குள் கைகளை நிறைத்து கோதி சேர்த்திழுத்து அவளுடன் முயங்குவது வெகுவாக அவனுக்கு பிடித்திருந்தது.

சீசா, இந்த பூமியை மனநிறைவுடன் எப்பொழுதும் பார்த்ததில்லை. இந்த பூமி அவனுக்கு எதை தந்துவிட்டது? நல்ல நண்பர்களையோ நல்ல காதலிகளையோ நல்ல சமூகத்தையோ என்றால் just fuck என்று முடித்துக்கொள்வான். “ஒரு சிறிய விலங்குக்குள்ள அந்த வெளி என்னிடம் இல்லையே” என்று அங்கலாய்த்து கொள்வான். இந்த பூமியில் எதைக்கொண்டு நிறைத்தாலும் அவனை நிரப்பி வெற்றிகொள்ள இயலாது. அவ்வளவு வெறுமையான மனிதன் தான் இந்த சீசா. ஒரு சமயம் அவனுக்குள் எழும் அன்பின் தாகம் பிரபஞ்சத்தை கொண்டு ஈடுசெய்யவும் முடியாமல் ஆர்ப்பரிக்கும்.

அப்படிபட்டவனை அவள் கண்டடைந்தாள். மிக எளிமையான முக தோற்றத்தை உடைய அவனை இலகுவாக ஒரு மனித மிருகம் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது. அவன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக அவளுக்கு தெரியவில்லை. அவனது முகம் நன்கு பழுத்த துறவியைப்போல இருந்தது. இந்த பூமியில் பார்த்தவுடனே யாராவது ஒருவர் ஏதோ ஒரு காரணத்துக்காக காதல் செய்யப்படுவார் தானே, அந்த காரணம் எது? ஆயிரம் இருக்கும்.

உதடுகளின் கீழ் ஒரு இன்ச் கீழே நாடியின் மேல் ஒரு புள்ளி அளவு மச்சம்/ தூரமாக நின்று பார்க்கும் பொழுது ஒரு பட்டாம்பூச்சியை ரசிக்கும் குழந்தை போல ஒளித்திரிந்த கண்கள்/ பரந்த தரைகளில் சிலகண்ணுக்கும் தெரியாத அங்கிகள் தனது பாதம் பட்டு இறந்து விடுமோ என்ற பயத்தில் அந்தரத்தில் நடக்கும் அன்பே உருவான ஒருத்தி/ இந்த பூமியின் கலவை பாண்ட கலாசாரங்களை உடைப்பதற்கு புரட்சி செய்பவள்/ காற்றுடன் ஆக்ரோசமாக போராடும் அவளின் சுருள் விழுந்த முன் முடி/ இரத்த நரம்புகள் புடைக்கும் ஒருத்தியின் விசாலமான கண்/ வானத்தை நோக்கி அவள் நீட்டி இருப்பாள் தனது நடுவிரலை/ ஒரு பாப் கட் வைத்த பாப் பாடகி/ வியர்வை வழியில் உடலுடன் மண்குடத்தை சுமந்து மைல் கணக்கில் நடந்து நீர் கொண்டுவரும் பெண்/ சொடுக்கினால் தீயை உருவாக்குவதை போல சிவந்திருக்கும் நீண்ட விரல்கள்/ சீன ஆப்பிள்களை போன்ற ஒரு மார்பு/ கனவுகளில் விரல்களால் தடவி இனம்காணும் பித்தளையால் ஆனா கடவுள் சிலையை போன்ற வலிந்து வழுவழுத்த இடை.

இப்படி எதை பார்த்தாவது காதல் கொள்ளலாம். எல்லையை உடைக்கும் காதலும் எல்லைக்கு வெளியே தாவும் காமமும்தான் இந்த வாழ்வின் தத்துவம். இது நீதியானது இல்லை என்றாலும் காதலுக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவனின் மனதில் தோன்றும் காதல் என்பது நீதியானது.

“உனக்கொன்று தெரியுமா ஹிப்பி, எனது அப்பா மிகசிறந்த காதலர். ஆனால், இந்த உலகம் அவருக்கு எதை தந்தது என்றால் எதையும் இல்லை என்றுதான் சொல்லுவேன். அப்பாவிடம் ஒரு நாள் எது காதல் என்றேன். ‘நமக்கு விதிக்கப்பட்டது அவ்வளவுதான் என்று நாம் உறையும் போது வாழ்க்கை ஒரு சூரியனை தரும். அந்த சூரியன் போன்றதுதான் காதல்’ என்றார். நான் அதை புரிந்துகொள்ளவில்லை.

“‘ஒரு பெண் பற்றிய தேடலொன்றை நான் எப்போதும் நிகழ்த்தியதில்லை. அதை உண்மையாகவே ஆபத்தானதாகதான் கருதுகின்றேன். எனக்குள் இருக்கும் பெண் தான் இந்த பூமியின் அனைத்து பெண்களினதும் பிரதிநிதி. அறியாமையில்தான் அவளை நான் எனக்குள் வளர்த்தெடுக்கின்றேன். அவளை நான் உணர்ச்சிகளின் சுருள் என்று எப்போதும் நம்புவதில்லை. அவள் அறிந்து கொள்ளுதலின் எல்லை தாண்டி வளர்ந்து நிக்கின்றாள் எனக்குள். ஆக நம்மால் காதலிக்கப்படும் எந்த பெண்ணையும் நாம் சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கின்றோம் என்றா நினைக்கின்றாய். இல்லை, அவள் ஏற்கனவே நமக்குள் வளர்ந்து நிற்பவள் தான்’ என்றார்.

“இப்போதும் எனக்கு புரியவில்லை. நான் மிகவும் அறியாமையுடன் அவரை பார்த்தேன். அவர் மிகுந்த போதையில் இருந்தார். என்னை அழைத்து அருகில் அமரச் செய்தார். இரண்டு விரல்களுக்குமிடையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. புகையை உள்ளிழுக்காது மிகுந்த சிரமத்துடன் சுவாசித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமாக தொடையில் அடித்து என்னை விழிப்படைய செய்தபின், “இந்த உலகத்திலேயே மிகவும் பெறுமதியான வார்த்தை எது தெரியுமா’ என்றார். நான் அவர் கண்களை பார்த்தேன். மிகவும் இறுக்கமாக ஈரலிப்பே இல்லாமல் வெயில் கால செம்மண் தரையைப்போல இருந்தது. நரம்புகள் வேர்விட்டிருந்தது.

“‘மிகவும் பெறுமதியான ஒரு வார்த்தை இல்லை, ஒரு வாக்கியம்; எந்த சந்தர்ப்பத்திலும் நீ மறக்க கூடாது. உனது தகுதியை அறிந்து கொள். yes இந்த உலகத்திலே பெறுமதியான வாக்கியம் இதுதான். எந்த சந்தர்ப்பத்திலும் அதை நீ ஞாபகம் வைத்துக்கொள். அது உனக்கு எப்பொழுதாவது தற்காப்பொன்றை வழங்கும். அப்பா சொல்லுறன் எண்டதுக்காக இல்லை. ஏனென்றால் நமக்குள் இருக்கும் கருத்துக்கள் மாற்ற முடியாததில்லை. அதை நானே சில சந்தர்ப்பத்தில் மாற்றி விடக்கூடும். நீ யோசிக்காதே. நீ இதை செவிகொடுக்கவேண்டும் என்பது எப்போதும் எனது விருப்பமில்லை. உனது தலைவன் பற்றி உனக்கு எப்போதும் விமர்சனம் எழவில்லை என்றால் நீ சரியான தலைவனை தேர்ந்தெடுக்கவில்லை என்று அர்த்தம்’ என்றார். ‘உனக்கு அது புரியாது. சரியான வயது வரும்போது அதை நான் உனக்கு சொல்வேன்’ என்றார்.

“எனது அப்பாவின் சிநேகிதர்கள் பலர். எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே ஒன்று இரண்டு பேர் இருக்கின்றார்கள். அப்பாவின் சிநேகிதர்கள் பலர் கம்யூனிசம் பேசும் மாற்று இயக்கங்களில் உறுப்பினர்கள். அவர்களது கம்யூனிசம் எதற்கு பயன்பட்டது என்பது எனக்கு தெரியாது. ஆனால், அப்பாவிடம் எப்போதும் பழைய கதைகளை அறியமுடியாது. எதையும் எனக்கு சொல்ல கூடாது என்பதில் தீர்க்கமாக இருப்பார். அதனால்தான் அவர் மிகுந்த போதையில் இருக்கும் போது நான் அவருக்கு அருகில் இருப்பதை விரும்பினேன். எதாவது ஒரு கதையை சொல்லுவார். ஆனால், அவை பெரும்பாலும் சாகச கதைகள் போல் வடிவமைப்பை உடையவை. அதனால் அவற்றை நான் நம்புவதில்லை. எப்படியென்றால், சரி விடு, நீயும் அதை நம்பமாட்டாய்.”

“ஓம் நான் உண்மையாகவே பெரிதாக வாய் வழிக்கதைகளை நம்புவதில்லை. இருந்தாலும் நீ சொல்வதை கேக்க விரும்புகின்றேன்.”

து ஒரு காதல் கதை. அதை கொஞ்சம் அழகுபடுத்தி சொல்லலாம். ஆனால், அவசியமில்லை. டானியல் அவரது மிக நெருங்கிய சிநேகிதன். ஒரு கோவில் திருவிழா காலத்தில் அவளை சந்தித்தான். உடல் ஒரு பிரபஞ்ச வெளியென்றால் காதல் என்ற உணர்ச்சி ஒரு கற்பூர படிகத்தை போன்றது தானே. அந்த காதலின் இடையில் எத்தனையோ தடைகள் அவனுக்கு இருந்தது. திருவிழாவில் ஆரம்பித்த காதல். பின் ஒவ்வொரு வெள்ளி தினங்களிலும் கோவிலுக்கு செல்வதை வழக்கப்படுத்திக் கொண்டான். ஆனாலும், ஒரு கம்யூனிஸ்ட் கோவிலுக்கு செல்வது ஒரு தற்கொலை குண்டுதாரியின் சன நடமாட்டப் பிரதேச விஜயத்திற்கு ஒப்பானது. அந்த கோவிலை சுற்றி நிறைய மஞ்சள் கொன்றைகள். கோவிலின் வலது பக்க தெருவில் பழைய கொன்றை மரமொன்று தனியாக இருக்கும். காலை பூஜைகள் முடிந்தவுடன் அவன் காத்திருக்கும் கொன்றை மர நிழலுக்கு அவள் வந்து சேர்வாள். இப்படி பெரிய விளக்கங்களுடன் எனது நண்பன் இந்த கதையை சொல்லி இருப்பான் என்று நீ நினைக்காதே. இது பின் கண்டுபிடிக்கப்பட்ட டயரிக் குறிப்பு… குறிப்பு மிக தெளிவாக இல்லை. ஆனால், இவ்வளவு தெளிவாக இந்த கதை அமைவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அதை கதை முடியும் போது நீ தெரிந்துகொள்வதற்கே விரும்புகின்றேன்.

 

குறிப்பு 1: நான் உன்னுடன் பேசும் இந்த ஒரு பத்து நிமிடங்களில் தான் எனது காயங்களின் மேல் கட்டியிருக்கும் துணிகள் அவிழ்கின்றன. காற்று அந்த காயத்தில் படும் போது உணர்வோமே ஒரு சிறு சுனைப்பு. உள்ளே அப்படி ஒரு தருணம் நிகழ்கின்றது. அந்த சுனைப்பை விரல்களால் அழுத்தி தேய்த்து சுகம் கொடுப்பதை போல நீ உரையாடுகின்றாய். ஆனால், காயமோ மாறாமல் இன்னும் ஒரு துளி அதிகமாகி கொண்டே இருக்கின்றது.

 

மைதியாக அவள் சிரிக்கின்ற பொழுது சூரிய ஒளி பட்டு தெறிக்கும் கொன்றை மஞ்சள் அவளது முகத்தில் விழும்.

“இது சரியானது இல்லை என்று அவன் சொன்னான். ‘இந்த காதல் நமக்கு பலிக்களம். நீ அதை புரிந்து கொள்ளவேண்டும். பேசாமல் என்னை கருணைக்கொலை செய்துவிடு’ என்றாள் மிக ஆழமாக. “என்னால் தற்கொலை எல்லாம் செய்யமுடியாது. நான் வாழவேண்டும். அந்த தைரியம் என்னிடம் இருக்கின்றது. அதனால், நீ என்னை கருணைக்கொலை செய்.’

“அவளை அவனால் சமாதானப்படுத்த முடியாது. ஏனென்றால் அவள் பெண். நீரைப் போன்றவள். எத்தனை எத்தனையோ கழிவுகளை அவளில் எறிந்தாலும் அவள் தன்னை தெளிவாக வெளிப்படுத்துவாள். அடங்க மாட்டாள். வெறுமையானவள். கொட்டித்தீர்க்கும் அத்தனையும் எடுத்துக்கொள்வாள். சமாதானம் செய்வது வீண்போக்கு. அதை அவன் அறிவான். ஏனென்றால், ஒரு பெண் தீர்க்கமானவள். அவள் அடைந்துகொள்ள எத்தனிப்பதை மீள் பரிசீலனை செய்துகொள்ள அவள் தன்னை அழித்துக்கொள்வதால் தான் சாத்தியம்.

“‘நான் உனக்காக நாளை வரை காத்திருப்பேன். நீ எனது வீட்டுக்கு வா. நீ தைரியமானவன். இதை கடினமாக நினைக்காதே. நான் உனக்காக இந்த குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக காத்திருப்பேன்’ என்றாள்.

“அவனால் வேறெதுவும் சொல்ல முடியாது. கீழாகவோ மேலாகவோ பக்கவாட்டிலோ தலையை ஆட்டாமல் பொதுவான ஒரு திசையில் அசைந்தான்.

“பின் ஒரு நாள் அவளை அவன் சந்தித்தான். அது இறுதித் தீர்ப்புநாள். வானம் கருமேகங்களை அடர்த்தியாக்கும் பொழுது ஒரு சிறுவன் கூரை வீட்டின் முத்தத்திற்கு நடந்து வருவான். நிசப்தம். வானத்தில் ஒரு பறவை ஒரு மௌன அசைவில் சிறகுகளை விரித்து காற்றின் திசையில் கீழிறங்கும். சிறகின் அடிப்பிருக்காது. சிறுவனின் விழிகள் விரியும் மனம் கிறுக்கப்படாத விரிக்கப்பட்ட தாள். தூய்மையான ஒரு விழிப்புணர்ச்சி தான், ஆனாலும் துக்கத்தின் சாயல்.

“வாழ்வின் மொத்த அனுபவங்களையும் இறக்கி வைத்த துறவியின் மனநிலையை போல அன்று எனக்குள் ஒரு மௌனம். ‘அவனை போடப்போறாங்கள்’ என்று சதா சொன்னான். ‘அவன் எங்க போயிட்டான்.’ ‘இப்போது எல்லாம் நடந்து முடிந்திருக்கும்.’ ‘நாயே உனக்கிது முதலே தெரியுமா.’ ‘இல்ல ஆனா கேள்விப்பட்டன்.’ ‘நாயே முதலே சொல்லி இருக்கவேணாமா. வேளைக்கு வா. எங்க போயிருக்க போறான். ஆகமிஞ்சினா கோவிலடி. மோட்டார் சைக்கிளை எடு.’

“‘நின்சாக் கட்டையை எடுத்து சுருட்டி குரொகோடில் ஜீன்ஸ் இடுப்பு பகுதியில் சொருகினேன். ‘போ வேளைக்கு…’ சரியாக மழை. அடர்ந்த மேகம் மெல்லிய கறுப்பை எங்களுடைய மோட்டார் வண்டியின் பின் விரித்துகொண்டு வந்தது. கொஞ்சம் நாங்கள் நிறுத்தியிருந்தாலும் அந்த இருள் எங்களை மூடியிருக்கும். ஆனால், அவ்வாறு ஆகவில்லை rally வகையை சேர்ந்த அந்த மோட்டார் சைக்கிள் தனது வழமையான முறுக்க இசையை பிழிந்தபடி காற்றை கிழித்து வந்து சேர்ந்தது. இரைச்சல் தூரமாய். மணலை தாண்டி மரம் கானல் நீரில் மிதப்பதைப்போல தெளிவில்லாமல் தோன்றியது. அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளை விழுத்திவிட்டு அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கி விரைந்தோம். அங்கே ஜனக்கூடடம் சூழ்ந்திருந்தது. அவர்களை விலக்கி உள்நுழைந்த போது கருமேகம் முதுகில் ஏறிக்கொள்ள அவனது உடல் குப்புறக் கிடந்தது. அவன் சுடப்பட்டான். மணல் திட்டுக்களில் சிதறியிருந்த இரத்தம் காய்ந்து அவனது தலை பகுதியை சுற்றி தெளிக்கப்பட்டிருந்தது. ஜனநெரிசலை விலக்குவதற்காக எனது நெஞ்சாக் கட்டையை சுழற்றினேன். ‘போங்கடா மயிறுகள்.’ எல்லோரும் கலைந்து சென்ற அரைமணிநேரம் நிசப்தம். முழந்தாளிட்டு அவனது முகத்தை பார்த்தேன். அரும்பிய தாடி. நாடிப்பகுதியில் ஒரு குண்டு ஆழமாக இறங்கியிருந்தது. அவன் புன்னகைத்து இறந்தது ஓரளவு விளங்கிக்கொள்ள முடிந்தது. முழுமையாக எச்சிலை முழுங்கிக்கொண்டு வாந்தி உணர்வுடன் கூடிய அந்த வார்த்தையை சொன்னேன். ‘அவன போடவேணும் சதா. இத விட மோசமா.’ ‘ஆனா இப்ப நிலைமை சரியில்லை. அவங்களுக்கு ஆக்களிண்ட செல்வாக்கு எப்பிடி இருக்கெண்டு தெரியும் தானே.’”

 

னது அப்பாவையும் அவர்கள் தான் கொன்றார்கள். ஆனால், அது ஒரு நீதியான கொலை என்றுதான் நினைக்கிறன். ஏனென்றால், அவர் ஒரு தலையாட்டியாக வேலை செய்தார். ராணுவத்தின் ஒற்றன். அவரால் அவர்களில் பலர் காட்டிக் கொடுக்கப்பட்டு சுடப்பட்டார்கள். அதில் மிகவும் அப்பாவியான எனது காதலனும் சுடப்பட்டான்.

“உனக்கொன்று தெரியுமா அவன் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவனில்லை; கிறிஸ்துமஸ் நாளில் நத்தார் வேடம் போட்டவன். நாங்கள் காதலிப்பது ஒரு முறை அப்பாவுக்கு தெரிந்தவுடன் என் பொருட்டு ஒரு தடவை தலையாட்டியதால் அவன் சுடப்பட்டான். நத்தார் ஆடைகளுடன் அவன் துடிதுடித்தான். எனது கண்முன் அது நிகழ்ந்தது. நான்கு தோட்டாக்கள். யாரும் அவனது உடலை உரிமை கோரவில்லை. மூன்றாவது தினம் மழை பெய்து அவனது உடல் உப்பியிருந்தது. ஒரு கிணற்று தவளையை போல அது வளைந்து ஒடுங்கி கிடந்தது. பச்சை ஓலையால் செய்யப்பட்ட பாயினால் சுருட்டி அவனது உடலை அப்புறப்படுத்தியபோது அவனுக்காக அழ யாருமில்லை. கூட்டத்தின் ஒரு திசையில் நின்று ஒரு சிறுமி அழுதாள். அழுது கொண்டு நின்றாள். அவனை போலவே மண்ணிற கண்கள் அவளுக்கு. அவனை போலவே கன்னத்தில் குழிச்சிரிப்பு. ஆக உயிருக்கு உயிர் என்ற கொள்கை நீதியானதென்றே நினைக்கிறன். மேலும் அவர்களை எனக்கு பிடிக்கும். நேசிக்கப்படும் ஒரு கூட்டத்தின் வன்முறைகள் கூட அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. வன்முறையால் எழுதப்படும் வரலாறுகள் பெரும்பாலும் வேறு வேறு உணர்வை தரும் என்று சொல்ல முடியாது. ஆயுதங்கள் உடல் இடம் தான் மாறுபடும். நானும் தான் அது பற்றி படித்தேன் ஆனால், இது வேறு உடல்.”

“…உனது அப்பா மிருகத்தனமாக அவனை கொலை செய்தாரா; அவள் கணவனை, அவள் குழந்தையை.” “yes brutally….. அவன் கொலை செய்யப்பட்டான். ஆனால், இப்பொழுது வரை அவன் வாழ்ந்து கொண்டிருப்பதாக எல்லோரும் நம்புகின்றார்கள்.” “ஆக உனது அப்பா ஒரு கொலைகாரன் என்பது உனக்கு கொஞ்சம் கூட வேதனையாக இல்லையா?” “இல்லை வாழ்தல் என்பதே வன்முறை மீதான புரிதல் தானே. நன்றாக உப்பிட்டு வெயிலில் உலர்த்தப்பட்ட பாகங்கள் சுற்றிவர உள்ள கடற்கரைகளில் யாரும் அறியாது பதப்படுத்தப்பட்ட அவனது உடல், உனக்கு தெரியுமா அது ஒரு மனிதக் கருவாடு என்று அப்பா சொன்னார். சகிக்க முடியாத ஒரு வாடை. மொத்தமாக கெட்டுப்போன கருவாடுகளுடன் அதனை ஒன்றாக்கி பின் உரமாக்கும் தொழிற்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இவ்வாறாக துரோகிகளுக்கு மிக கலைநயமாக ஒரு கொலையை நிகழ்த்துவதில் அவர் திறமைசாலியாக இருந்தார். அதனால்தான் அவரை எல்லோரும் பெரிய தோழர் என்றார்கள்.”

“அப்படியென்றால் அந்த குழந்தையையும் கொன்று விட்டாரா. அதற்கும் இவ்வாறான தண்டனை தான் கிடைத்தது என்கிறாயா?” “இல்லை, இல்லை. அந்த குழந்தை ஒரு சுதந்திர ஆன்மாவாக வளர்க்கப்பட்டது, வளர்க்கப்படுகின்றது. ஒவ்வொரு சுதந்திர ஆன்மாவுக்குள்ளும் எல்லையற்ற வெறிகொண்ட மிருகமும் வளரும். காரணம் அதீத குரூரமும் அதீத அன்பும் கொண்டவன் தான் மனிதன் இல்லையா. நீ நினைக்கின்றாயா நாம் எல்லோரும் ஒரு தருணத்தில் அன்புக்காக மட்டும் பழக்கப்பட்டவர்கள் என்று. உன் மனசாட்சியை தொட்டு சொல். உன்னால் அதிகம் நேசிக்கப்பட்ட மனிதனை விதம் விதமாக கொலை செய்வது பற்றி உனது மனது சிந்திக்கவில்லையா? குறைந்த பட்சம் கழுத்தை நெரிப்பது பற்றியாவது. அந்த கொலைக்கு பின்னால் ஒரு நாள் நான் அறிந்துகொண்டேன்,

“எனது அப்பாவால் கொலைசெய்யப்பட்டது வேறு யாரும் இல்லை. அவர் தான் எனது அப்பா. எனது அம்மாவின் நாட்குறிப்பை ஒரு நாள் வாசிக்க நேர்ந்த போது, அந்த பெண், அவள் எனது அம்மா. இத்தனைக்கும் அமைதியான ஒரு ஆத்மா. அதன் இருப்பை சிதைத்தது அந்த மிருகம். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் உனக்கு தெரியுமா, இன்று காலை வரை அவர்களை விதம் விதமாக கலைநயமாக ரசித்துக் கொல்வது பற்றி சிந்திக்கின்றேன். எனது அம்மாவை, எனது அப்பாவை. அவர்களுடைய ஒவ்வொரு அசைவுக்கு பின்னாலும் அவர்களுடைய சாவு நேர்த்தியாக பத்திரப்படுத்தப்பட்ட ஒரு ரகசிய நிழல் மிருகத்தின் வாலைப் போல பின்தொடர்கிறது. ஒரு தடவை துருவேறிய கூர்மையான கத்தியை எனது அப்பா கண்டுபிடித்தார். அதை நான் பத்திரமாக ஒளித்து வைத்திருந்தேன், அந்த புத்தகத்தின் நடுவில். ஆனால், எப்படி அவருக்கு அந்த புத்தகம் விருப்பத்துக்குரியதாக மாறியது என்று நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். அவரது வாழ்க்கையில் அவர் வெறுத்த காந்தியின் சத்தியசோதனையை திறக்க வாய்ப்பே இல்லாத போது எப்படி சாத்தியம்.”

“உனது உண்மையான அப்பா கொலை செய்யப்படுவதற்கு முழுமையான தகுதியுள்ளவர் தான். ஆனாலும், அவர் உனது அப்பா என்ற சிந்தனை உனக்குள் முழுமையாக சிதைத்திருப்பது உனது அறத்தை இல்லையா? உன்னை அவர்கள் ஒரு பறவை போல சுதந்திரமாக வளர்த்தார்கள் இல்லையா?”

Natesh Art

“இல்லை ஒரு பறவை கொலையை சிந்திப்பதில்லை. மேலும் பறவை போல இல்லை நான். பறவைகள் எல்லாவற்றையும் நேசிப்பதில்லை. பறவைகளின் சுதந்திரத்தை அதன் பறத்தலின் எல்லைகளே தீர்மானிக்கின்றது என்பதை நீ அறிவாயா? பறவைகள் பற்றி சொல்வதென்றால் என்னை பொறுத்தவரையில் பறவைகளை மனிதர்களுடன் மட்டுமே வைத்து பார்ப்பேன். நீ எந்த வகையான பறவை? அதை சொல்வதற்கு நீ எனக்கு பறவைகளை உனது மனதில் எவ்வாறு வைத்திருக்கின்றாய் என்பதை நீ சொல்லித்தானே ஆகவேண்டும்” என்றாள்.

“நான் உனக்கு நான்கே பறவைகளை சொல்கிறேன். முதலாவது கூண்டில் இருக்கின்ற பறவை. அது வானத்தை பார்க்கும் விதம். அதற்கோ இந்த வானம் பூமி எல்லாமே கம்பிகளின் வெளியே மிக தூரத்தில். ஆசையின் உச்சகட்ட உந்துதலையும் அதன் மனம் நிலைத்திருக்கும். அடுத்தது சரணாலயத்தில் இருக்கும் பறவை. அது அதன் கீழுள்ள வனத்தை பார்க்கும் விதம். அதோ தன்னை சுதந்திரம் பெற்றதாக எண்ணிக்கொள்ளும். அது முழுவானத்தையும் முழு பூமியையும் தனது சுதந்திர உணர்வாக எண்ணுவதில்லை. அதன் சுதந்திர உணர்வு அதன் எல்லைக்குள் இருக்கின்றது. ஆனால், அதன் எல்லை அதன் மனதிற்குள் இருக்கின்றது. மூன்றாவது சமுத்திரத்தை கடக்கும் பறவை. அது சமுத்திரத்தை பார்க்கும் விதம், ஆம் அதை நீ சுதந்திரமுள்ளது என்று நினைக்கின்றாயா. இல்லை, அதன் வலிமை தான் அதன் சுதந்திரம். அதன் சுதந்திரத்தின் எல்லையில் அதன் மரணம் காத்திருக்கலாம். நான்காவது பறவை தான் வானத்தை கடக்கும் பறவை. அதன் ஆயுள் முழுதும் அது இந்த பூமியை பார்க்கும் விதம், அது நான், நிச்சயமாக நான் என்கிறேன். எனது சுதந்திரம் எதையும் தீர்மானிப்பதில்லை. எதை நோக்கியதுமில்லை. அது சுதந்திரத்தையே நம்புவதில்லை. அதன் விபரிப்புகளையோ விளக்கங்களையோ நம்புவதில்லை. அது பறந்தலை நம்புகிறது. அதுதான் உண்மை.

“வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் நான் பறந்துகொண்டிருந்தேன். ஹிப்பி உனக்கொன்று தெரியுமா. எனது பயணக் குறிப்புகளே எனது மொத்த வாழ்வுக்கான அடையாளம். நான் எழுதுகின்றேன். அந்த எழுத்தில் எல்லா மனிதர்களும் சொற்கள். வெறும் சொற்கள். எனது தந்தை, தாய், காதலி. எனது தந்தையை நான் கொலை செய்ய முயற்சித்த காலத்தில் ஒரு நாள் அவர் அதை அறிந்துகொண்டார். ‘நீ என்னை கொலை செய்வதற்கான முடிவை தெளிவாக எடுத்திருந்தால் அது எப்போதோ நிகழ்ந்திருக்கும். ஆனால், உனது உள்ளத்தில் இரக்கத்தின் கேவல் மிஞ்சுகிறது. ஒரு நல்ல கொலைகாரனால் ஒரு துப்பாக்கியை ஏந்துவதற்கு அவனது இதயம் முழுமையாக ஒளி பெறவேண்டும். நம்பிக்கையின் ஒளி. நாம் செய்யும் குறித்த செயல்களுக்கு மாத்திரமே நம்பிக்கையின் ஒளியை பலியாக்கிவிடுகின்றோம். அந்த செயல்களை நல்ல செயல்கள் என்ற வரையறைக்குள் வைத்துவிடுகின்றோம்.’”

நேர்த்தியாக அவளது கரங்களை பற்றிக்கொண்டேன். மெழுகிடப்பட்ட கருங்கல் சிலையின் வளவளப்புடன் இருந்தது. ஆனால், கொஞ்சம் உயிர் துடித்துக்கொண்டிருந்தது.

“ஹிப்பி உனக்கொன்று தெரியுமா? ஆத்மார்த்தமாக அவளை நேசித்தேன். அவளது உடலின் வாசனையில் குங்கிலியம் கமழும். அவளது சில்க் புடவையில் எலுமிச்சை வாசம் வீசும், அவளது வியர்வை வாசம். ஒரு நாள் மாலை என்னை அழைத்து எல்லாமே முடித்துக்கொள்ளலாம் என்றாள். எப்படி அது முடியும்? அன்று அவளது பிறந்த தினம். இல்லை முடியாது. உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிப் பார்த்தேன். ஒரு வளர்ப்பு நாய் சேமித்து வைத்திருக்கும் மிருக வெறி அது. எனது கண்களில் நீர் வழிந்தது. மறுகணமே, ‘இல்லை என்னை விட்டுவிடாதே என் உயிரே. இனிமையே, நிறைவே, எனக்கு நீயே எல்லாம். என்னால் உன்னைவிட்டால் எப்படி வாழ முடியும் சொல். please i cant breath my dear. அப்படி சொல்லாதே. please. இல்லை உனது காலில் எத்தனை நாட்கள் தான் நான் விழுந்தே கிடக்க நீ பிரியப்படுகிறாய். ஆக நீயே எனது இறப்பையும் நீயே என்மேலான கருணையையும் முடிவு செய்கிறாய். உனக்கு அத்தனை அதிகாரம் இருப்பதை நீ காதல் என்று சொல்கிறாய். சீ நாயே’ என்றாள். ‘அப்படி இல்லை லேலி. என்னை மன்னித்துவிடு. உன்னை நான் நேசிக்கிறேன். அதனால் நீ என்னை நேசிக்க வேண்டும்.’ ‘சீ மறுபடி.’ ‘இல்லை லேலி, நீ என்னை விட்டு போனால் நமது அந்தரங்க புகைப்படங்களை உனது தந்தைக்கு தபாலில்…’ ‘சீ. ஏன் இப்படி?’ ‘லேலி உறுதியாக சொல்கிறேன், இனியும் உனக்கு நான் அடிமையாக இருக்க முடியாது. முடித்துக் கொள்வோம் ஆனால், நான் ஒரு முற்போக்குவாதியாக இருக்கிறேன் அதனால் நான் ஒரு எழுத்தாளன். அதனால் நாங்கள் புரிந்துணர்வுடன் பிரிந்து விடுவோம். நாங்கள் எமது தோழர்களுக்கு மனமொத்து பிரிந்ததாக அறிவித்து விடுவோம்.’

“சிரித்தாள். என்னை ஒரு புழுவை பார்ப்பதைபோல பார்த்தாள். ஆனால், மீண்டும் அமைதியாக அவளது கண்களில் நீர் ஒழுக என்னை பார்த்து, ‘நீ ஒரு கொடிய மிருகம் தெரியுமா.’ ‘இல்லை லேலி. எனக்கு உனது தோழியை பிடித்திருந்தது. அவளுக்கும் தான். அதனாலென்ன உன் மீதான பிரியங்கள் நோய் கண்டுவிட்டதா என்ன. ஆனால், மனமொரு நோய்.’

“நடுக்கத்துடன் அவளை மீண்டும் அணைக்க முயன்றேன். உந்தித் தள்ளினாள். பின் அணைத்துக்கொண்டாள். நான் முழுமையாக கலங்கினேன். மெல்ல காதில் வந்து கிசுகிசுத்தாள். ‘உனக்கு ஒரு பெண்ணின் பெறுமதி தெரியவில்லை. ஏனென்றால் நீயொரு கீழான மிருகம். நீ என்னவும் செய்துகொள். உன் வன்முறையை உனது கருணையை எதையும். நான் இனி மதிக்கப் போவதில்லை. செல்…’

“ஒரு பெருமூச்சை ஓங்கி இழுத்து விட்டேன்.  ‘சரி போ.’ இப்போது சொல் ஹிப்பி, நான் ஒரு மிருகமென்று நீ நினைக்கிறாயா. ஒரு சுய பரிசோதனை எனக்கு தேவையாக இருக்கின்றதா. நீ சொல்லு ஹிப்பி.”

அவளது கூந்தலில் ஒரு பகுதி எனது மார்பில் வியர்வையில் சலசலத்தது. “இங்கே மிருகத்தனம் என்பது வன்முறையின் வரையறையில்லை. குறிப்பாக எனக்கு உனது மிருகத்தனங்கள் பற்றியோ உனது மேலான கருணை பற்றியோ அக்கறையில்லை.” இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். இரண்டு முழுமையான மார்பும் உடலின் உள்ளே சென்று எனது இதயத்திற்கு ஒன்றும் நுரையீரலுக்கு ஒன்றும் புதைவதைப்போல உணர்ந்தேன். மூளை பிளவுற்று யோனிவழியாக திறந்தது. “ஹிப்பி நானுன்னை நேசிக்கின்றேன். நீயே எனது ஆன்மாவின் சுதந்திரம்.” காதின் அருகில் கிசுகிசுத்தாள், “உனது அன்பு பற்றியோ உனது வார்த்தைகள் பற்றியோ எனக்கு அக்கறையில்லை.”

 

உப கதை – 1

வாழ்தல் என்பது கொண்டாட்டத்தின் மீதான விசாரணை

 

“அடுத்த கிழமை. ஹிப்பியை சுட்டு விட்டார்கள். அன்று காலை நான்கு மணியளவில் வெள்ளைவாகனத்தில் வந்த அவர்களால் அவள் சுடப்பட்டிருந்தாள். சிவப்பு தகர கதவுகளை ஹார்ன் சத்தத்தில் மிகவும் அதிகாலை அவள் ஆர்வத்துடன் திறந்திருக்க வேண்டும். சரியாக நெற்றிப்பொட்டில் ஒன்று அடிவயிற்றில் ஒன்று. இரண்டு தோட்டாக்கள். வீட்டின் முன்னால் குவிக்கப்பட்டிருந்த சல்லிக்குவியலின் மேல் அவளது உடல் குறுகிபோய் கிடந்ததை எந்த ஆணாலும் பார்த்து சகிக்க முடியவில்லை. தொடைகளில் நேர்த்தியற்று சரிந்து கிடந்தது அவளின் பாவாடை. இறுகிபோயிருந்த வாயின் வழியாக அரைவாசி பற்கள் வெளியில் தெரிந்தன.

“இத்தனைக்கும் அவளுக்கு எத்தனை வயதென்று நினைக்கிறீர்கள், இருபது. பழுப்புநிற முகத்தில் கன்றிபோய் கறுப்பு திட்டுகளாக மாற்றம் பெற ஆரம்பித்திருந்தன. பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவளது தாய் கால்கள் முற்றாக செயலிழந்து ஆறு வருடங்களாக படுக்கையில் கிடந்தவள். கைகளால் உந்தி நிலத்தை தள்ளி தள்ளி மெல்ல மெல்ல நகர்ந்து அவளது உடலின் அருகில் வந்து விலகியிருந்த அவளது பாவாடை மற்றும் சடடையை சரிசெய்து விட்டு அவளது காலடியில் தலை கவிழ்ந்தபடி இருந்தாள். ரத்தம் முழுமையான திரவமாக இல்லாமல் புகைப்படிந்ததை போல, கறுத்த நிறம் கலந்த பாகுத்தன்மையுடன், ஒரு கட்டத்திற்கு மேல் வழிந்தோட முடியாமல் நின்றது. தனது பாவாடை தலைப்பினால் முகத்தில் சிதறியிருந்த குருதிவடிவை துடைத்து எடுத்தாள் தாய்.. மழை துமித்து ஈரம் வடிந்திருந்த சல்லிக்குவியல். நாய் மலம் காய்ந்து கறுத்திருந்தது. வேலிகளின் கரையிலெல்லாம் நீல நிற காட்டுப்பூக்கள் பூத்திருந்தன. ஊரில் இருந்த ஆண்கள் எல்லோரும் ஒரு வெள்ளைத் துணியைக்கொண்டு ஹிப்பியின் உடலை போர்த்தினார்கள். இத்தனைக்கும் தாய் ஒரு குரூர மௌனத்துடன் இருந்தாள். மிகவும் கரியதாகவும் வெடித்துபோயும் இருந்த அவளது உதடுகள் துடித்துக்கொண்டே இருந்தன.

“மிகவும் வயதான, வெத்திலை கறை தாடிமயிர்களில் படிந்து முறுகி விட்டிருந்த கிழவர், அருகே வந்து துணியை கீழே இழுத்துவிட்டு, மிக நிதானமாக, அழுக்கடைந்த தனது உடலில் கச்சிதமாக பொருந்தாத வழுக்கி சரிந்த சேர்ட்டின் பொக்கற்றை தனது கைகளால் நெஞ்சில் அழுத்தி தடவியவாறே, எஞ்சியிருந்த ஒரே ஒரு புகையிலை சுருட்டை எடுத்து வாயில் வைத்தவாறு, “அந்தோனி நெருப்பெட்டிய தாடா; வேசைக்கு எத்தின தரம் சொல்லி இருப்பன். நாறிக் கிடக்கிறாள்.” பற்றவைத்த சுருட்டை உறிஞ்சி ஒரு இழுவை இழுத்துவிட்டு வாய்க்குள் தேங்கிய எச்சிலை காறித் துப்பினார். ‘அந்தோனி அந்த பாய கொண்டுவாடா.’ ஓலைப்பாயொன்றை அந்தோனி எடுத்து வந்தான். பாயை உடலின் அடியில் வைக்க சைகை காட்டிவிட்டு, ‘தள்ளி இருந்து தொலை நொண்டிச் சனியனே. வேசைய பாயில போடுடா, நீ இந்தா காலப்பிடி.’ ‘கிழட்டு நாயே அவளிண்ட உடம்ப தொடாத’ என்று பெரிதாக வலுவானவரை கத்தினாள் தாய். சல்லிகளால் இயன்றவரை கிழவனின் மேல் வாரி இறைத்தாள். ‘ஒரு சதம் குடுக்காம எத்தின தடவை அவளோட நீ படுத்திருப்பாய். பிண ஓழி. இப்ப என்னடா உத்தமன் மாதி கதைச்சிக்கொண்டு நிக்கிறாய். போடா. இதுல கிடந்து அவளிண்ட உடம்பு அழுகி நாறினாலும் பரவாயில்லை. உன்ன போல ஒரு தேவடியாள் மகண்ட கை இனியும் அவளிண்ட உடம்பில படக்கூடாது.’ ‘வேச பொத்தடி வாயை’ என்று கிழவர் பதிலுக்கு கத்திவிட்டு உடலை உருட்டி பாயில் படுக்கவைத்து, கால் பகுதியில் கிழவரும் தலைப்பகுதியை அந்தோனியும் பிடித்தபடி வீட்டிற்குள் கொண்டு சென்றார்கள். ஹிப்பி வெட்டபட்ட அவளது முடிகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அசைந்தன.

“ஹிப்பி இறப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன் நான் அவளுடன் இருந்தேன். கொஞ்சம் அவளை பற்றி அறிந்துகொள்ள அவளிடம் பேச்சை குடுத்தேன். ‘நீ யாரையாவது காதலிக்கிறாயா.’ ‘இல்லை அதற்கான எந்த வளமும் எனக்கு என்னை சார்ந்து இருப்பதில்லை. ஆட்களை தேடி கண்டுபிடிக்க வேணும். அது எப்படி. ஒரு பிரமாதமும் இல்லை. மங்குகிற மாலை வேளையில் பேருந்து நிலையம் சென்று நூறு ரூபாவை எடுத்து முகத்தில் விசிறிக்கொண்டு இருக்கும் போது ஏற்கனவே இது பற்றி அறிந்த ஒருவன் கண்டுகொள்வான். ஒரு இரவு கடந்து விடும். இரவுகள் மட்டுமில்லை பகல்களும். உனக்கொன்று தெரியுமா, நான் மிரட்டப்பட்டேன். யாரோ சிலர். நான் கொலைசெய்யப்பட்டு விடுவேனாம். நீ நினைக்கிறாயா நான் இறந்துவிடுவேன் என்று. நீ ஒரு எழுத்தாளனா என்னைப் பற்றி என்றாவது எழுதுவாயா? இல்லை நீ எழுதக்கூடாது. எனது வாழ்கையின் புனிதத்தை அது சிதைத்துவிடும். சிரிக்க போகின்றாயா. இவள் போன்ற ஒருத்திக்கு புனிதமென்ன என்று. நீ நிச்சயம் சிரிக்க வேண்டுமென்றே அதை சொன்னேன். ஒரு மனிதனாவது ஒரு விபச்சாரியை புனிதமுள்ளவளாக நினைப்பானா. ஆனால், புனிதமென்பது உடலின் கொண்டாட்டம். உடலின் புரிதல். உடலின் விடுதலை. மண்ணில் அமிழ்ந்திருக்கும் அமைதி தான் புனிதம். ஒரு உடல் மண்ணுக்கு சமானம். நீ உன்னைப்போன்ற ஒவ்வொருத்தனும் உலகிலேயே மிக அசுத்தம் வாய்ந்த பொருளை கொள்வனவு செய்வானா. ஆனால், பார் மீண்டும் மீண்டும் மனத்தால் அசுத்தம் என்று உணரப்பட்டாலும் நுகரப்படும் ஒரு உடல் புனிதமில்லையா? அசுத்தமென்று உணரப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனம் புனிதமில்லையா.’

“நான் அந்த இடத்தில் அந்த கூட்டத்தில் ஒருவனாக நின்றேன். ஒரு அடி முன்னேற நான் விரும்பவில்லை. இறந்த உடல்கள் கதைகளை உருவாக்குகின்றன. அது ஒரு சாகச கதை. பெரும்பாலும் ஹிப்பிக்கு பிடிக்காத சமாச்சாரம் அது. ஆனால், நான் இதை நான் சொல்லியே ஆகவேண்டும். யாருக்காவது சொல்லியே ஆக வேண்டும். இதற்கு முன்னர் அதை நான் அவளுக்கு சொன்னேன்.

“உனக்கொன்று தெரியுமா லேலி. எனது அப்பா ஒரு கதையை சொன்னார்.” அவளது பாதத்தை எனது தொடையில் எடுத்து வைத்து விரல்களை நீவினேன். “அதில் வந்த பெண் மிக அழகானவள். பதின்மத்தில் அவள் இருந்தாளாம். நீ நம்பாவிட்டாலும் இது உண்மை கதை. ஏனென்றால் அவளை அவர்கள் சுட்டார்கள். அவர்களால் தான் எங்களூரில் விபச்சாரம் குறைந்தது என்று இப்போதும் நம்பப்படுகின்றது.”

“அவள் பேரென்ன?”

“புனிதா.”

ஆதி பார்த்திபன் <aathiabi13@gmail.com>

ஆதி பார்த்திபன்

Amrutha

Related post