எம்.ஜி.ஆர். வருகை – விட்டல்ராவ்

 எம்.ஜி.ஆர். வருகை – விட்டல்ராவ்

வர் திரும்பி வருவாரா – என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அவர் திரும்பி வருவது சந்தேகமே என்ற அரை நம்பிக்கை சிலருக்கு, மகிழ்ச்சி கொண்டனர். சிலர் காவடி தூக்கினர். அலகு குத்திக்கொள்ளுவதாக வேண்டுதல்; பெண்கள் மேல்மருவத்தூர் போன்ற அம்மன்களிடம் வேண்டிக்கொண்டு பால் குடம் தூக்கினர். ஹோமங்களும் யாகங்களும் வளர்க்கப்பட்டன. மொத்தத்தில் ஒரு பெரும் சமூகத்தின் ‘பாசிட்டிவ்’ எதிர்பார்ப்பாகவே அவரது நலமும் வருகையும் எதிர்பார்க்கப்பட்டது. அவர் படுத்த நிலையிலேயே விமானத்தில் ஏற்றப்பட்டபோது இருந்த இந்திராகாந்தி அம்மையார் அவர் திரும்பி வருவதற்குள் சுடப்பட்டு மரணமடைய, ராஜீவ் காந்தி பிரதமராகியிருந்தார்.

பிறகு அவர் வருவது உறுதியாயிற்று. பலருக்கும் பல்வேறு விதமான அதிர்ச்சிகளை உண்டாக்கிவிட்டு புனர் ஜென்மமெடுத்து அந்தத் தலைவர் வரப்போகிறார் என்பது உறுதியாயிற்று. விமான நிலையத்துக்கு மிக அருகிலும் அங்கிருந்து அவரது இல்லமிருக்கும் ராமவரத்துக்கும் மிக அருகிலுமாயுள்ள ஓர் வெளியில் அவர் இந்தியா (சென்னை) வந்தடைந்ததும் பொது மக்களுக்குக் காட்சி தருவதற்கு ஏற்ற இடமும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. அவ்விடம் எங்கள் செயிண்ட் தாமஸ் தொலைப்பேசி இணைப்பகத்துக்கு நேர் எதிரே ஜி.எஸ்.டி. சாலைக்கு அந்தப் பக்கமாய் சாலையை நெருங்கியிருக்கும் ராணுவத்தின் மொஹிதே ஸ்டேடியம்.

மொஹிதே ஸ்டேடியம் எனப்படுவது புல்தரைபோல புல் வளர்ந்த பெரிய விளையாட்டு மைதானம். புல்லை அவ்வப்போது லான் மோவரைக் கொண்டு சீராக்கி வைப்பார்கள். மொஹிதே என்பது அமரரான ராணுவ அதிகாரி ஒருவரின் பெயர். இந்த மைதானம் ராணுவத்துக்குச் சொந்தமானது. நாற்புறமும் பெரிய பெரிய மரங்களால் சூழ்ந்து நிழல் பாவிய வெப்பம் தெரியாத பெரிய மைதானம். ராணுவத்தினரின் விளையாட்டுப் போட்டிகளும் அணிவகுப்புகளும் இடம்பெறும்.

ஜி.எஸ்.டி. சாலையில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் தொலைப்பேசி இணைப்பகத்துக்கும் அதையடுத்துள்ள மவுண்ட் தலைமை தபால் அலுவலகத்துக்கும் நேரெதிரே அமைந்துள்ள மொஹிதே ஸ்டேடியத்தில் குதிரை மீது அமர்ந்து விளையாடும் ‘போலோ’ விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும். சாலையிலிருந்தவாறே அரிய போலோ ஆட்டத்தைக் கண்டு களிக்கலாம். ராணுவத்தைச் சேர்ந்த போலோ ஆட்டப் பயிற்சி பெற்ற குதிரைகளும் வீரர்களும் நாட்டின் பல்வேறு ராணுவ கேந்திரங்களினின்றும் போட்டியில் கலந்துகொண்டு விளையாட வருவர். சென்னை கிண்டியிலுள்ள குதிரைப் பந்தைய கிளப்பின் குதிரைகள் சிலவும் போலோ ஆட்டப் பயிற்சி பெற்றவை. அவையும் கலந்துகொள்ளுவது உண்டு. நிறைய டீம்கள் போட்டியிட்டு கோப்பையைக் கைப்பற்ற விளையாடி முயற்சிக்கும் இராணுவ விளையாட்டுப் போட்டிகளின் போது அரிய போட்டியான ‘எக்வெஸ்டிரிய’ எனும் குதிரை மீதமர்ந்து பல உயரமான தடைகளை எம்பி எகிறி தாண்டியோடும் போட்டியும் மொஹிதே மைதானத்தில் நடைபெறும். மைதானத்துக்குச் சற்று தள்ளி மொஹிதே பூங்கா இருக்கிறது.

இந்த மொஹிதே ராணுவ மைதானத்தில்தான் எம்ஜிஆர் விமான நிலையத்திலிருந்து நேராக காரில் வந்து சிறிது நேரம் மக்களுக்குக் காட்சியளித்து விட்டு தன் வீட்டுக்குப் போவதாக முன்னறிவிப்புகள் வந்துவிட்டன. பல்வேறு ஊர்களிலிருந்து மாபெரும் நிகழ்வுக்கு கார்களில், லாரிகளில், பஸ்களில், இதற்கென்றே விடப்பட்ட சிறப்பு பேருந்துகளில் தமிழகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் மக்கள் இருநாட்களாக வந்து சேர்ந்த வண்ணமிருக்கின்றனர். அத்தனை ஊர்திகளும் பேருந்துகளும் கடற்கரையில் நிறுத்தப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களிலுமிருந்து அரசியல்-திரைப்பட ரீதியாக மக்கள் அலைமோதத் தொடங்கினர். ராணுவ மைதானத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய இந்திய அரசிடம் ஒப்புதல் வாங்கியிருப்பதால், ராணுவம் – பாதுகாப்புத் துறைக்கும் தகவல் தரப்பட்டு ஒப்புதலும் பெற்றுவிட்ட நிலையில் ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வந்தன. தொலைப்பேசி இலாகாவின் பங்கிற்கு சில வேலைகள் நடந்தன.

மொஹிதே ஸ்டேடிய மைதானத்தில் பெரிய உறுதிமிக்க மேடை போடப்பட்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து அவரது கார் நேரே மேடையை அடைந்து, தரையிலிருந்து மேடைக்கு கார் சென்றடையும் படிக்கு சரிவுப் பாதையொன்று சாரம் கட்டினாற்போல இரும்பால் கட்டப்பட்டு, காரை கட்டிவும் ஒத்திகைப் பார்த்திருக்கிறார்கள். கொஞ்சம் நேரந்தான் அவர் எல்லோரையும் பார்த்து வணங்கிவிட்டு கிளம்பிவிடுவார். எதையும் பேசப் போவதில்லை. ஆனாலும் கூட இருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் அவசரத்துக்கு பேசுவதற்கென்று நான்கைந்து தொலைப்பேசிகளை மேடையருகில் இருக்குமாறு இணைப்பு கொடுத்து வைக்க ஏற்பாடாகியிருந்தது. அரைமணி நேரத்துக்கொருமுறை அந்த தொலைப்பேசிகளை நாங்கள் ஒருவர் மாற்றி ஒருவராக முதல் நாள் காலையிலிருந்து சோதித்துப் பார்த்தபடியே இருக்கிறோம். ஏராளமான விளக்குகள் ஏற்பாடாகியிருந்தன. நாங்கள் தற்காலிக தொலைப்பெசி இணைப்புகள்தான் கொடுத்திருக்கிறோம். அவர் வந்துவிட்டு போனதுமே இணைப்புகளைத் துண்டித்து விடவேண்டும். கருவிகளைக் காலையில் லைன்மேன் ஒருவரையனுப்பி எடுத்து வரவேண்டும். லட்சக்கணக்கில் மக்கள் வந்தபடியிருந்தனர்.

போலோ மைதானத்துக்கு வெளியில் ஜிஎஸ்டி சாலையின் இருமருங்கிலும் பொதுமக்களின் உபயோகத்துக்கென நூற்றுக்கணக்கான தற்காலிக கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தென்னங்கீற்றுப் படல்களால் நாற்புறமும் மறைப்புகள் வைக்கப்பட்டு உள்ளே குழிதோண்டி புதியதாய்க் கொண்டு வந்த பீங்கான கழிப்பறை சாதனத்தைப் புதைத்திருந்தனர். பந்தோபஸ்து டூட்டியில் ஆயிரக்கணக்கான போலீசாரும் ஹோம்கார்டு ஊழியர்களும் அமர்த்தப்பட்டிருந்தனர். கோவை, சேலத்திலிருந்தும் காவலர்கள் வந்து இறங்கியிருந்தனர். பெண் காவலர்களும் வெளியூர்களிலிருந்து வந்திருந்தனர். பரங்கிமலை தொலைப்பேசி இணைப்பகத்துக்கு வெளியிலும் உள்ளேயும் அவர்கள் சூழ்ந்திருந்தனர். அவசர பணிக்கென சிலரையும் காலை ஷிஃப்டுகாரர்களையும், போக்குவரத்து நெரிசலை முன்னிட்டும் தொலைப்பேசி அதிகாரிகள் முதல் நாள் இரவே எக்ஸ்சேஞ்சுக்கு வந்து விடும்படி உத்தரவு கொடுத்திருந்தார்கள். பாரத் பந்த் போன்ற நாடு தழுவிய போராட்டம், கதவடைப்பின் போதெல்லாம் எங்கள் துறை இப்படி ஆணை பிறப்பித்து காலை ஷிஃப்டு, மாலை ஷிஃப்டு, இரவு டூட்டிகாரர்களை ஏற்பாடு செய்து வரவழைக்கும்.

 

ஜி.எஸ்.டி. சாலையில் குறிப்பிட்ட நாளன்று போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வெளியூரிலிருந்து வரும் வண்டிகாள் வெவ்வேறு மார்க்கங்களில் திருப்பிவிடப்பட்டிருந்தன. அந்த வாரம் முழுக்கவே எனக்கு காலை ஏழு மணி டூட்டி என்பதால், முதல் நாள் இரவே எக்ஸ்சேஞ்சுக்கு வது விடவேண்டுமென்று கூறிவிட்டுருந்தனர்.

புனித தோமய்யர் குன்று தொலைப்பேசி இணைப்பகத்துக்குள் நுழையும் போதே அதிர்ச்சியாக இருந்தது. சைக்கிள் நிறுத்துமிடத்தை ஒட்டி ஆலமரத்தடியில் இரு கூடாரங்கள் காணப்பட்டன. அவற்றுள் சீருடையில் போலீசார் அமர்ந்திருந்தனர். அங்கங்கே நிறைய போலீசார். கட்டிடத்துக்குள் நுழைந்தால் சிருடையில் நிறைய பெண் போலீசார் நடமாடிக் கொண்டிருந்தனர். பெண் போலீசார் எக்ஸ்சேஞ்சுக்குள் அங்கங்கே இருக்கும் தொலைப்பேசிகளை எடுத்து தாராளமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு பெண் போலீஸ் என்னிடம் வந்து கேட்டார்: “சார், இந்த டெலிஃபோன்கள் எதிலயுமே எஸ்.டி.டி. கிடைக்க மாட்டேங்குதே. எஸ்.டி.டி. இருக்கிற ஃபோன் எங்கிருக்கு?”

“மேடம், எஸ்.டி.டி. வசதியிருக்கிற ஃபோன் ரெண்டுதான். ஒண்ணு ரூம்லயுமிருக்கு. அந்த ரூம்களை காலைலேதான் அவங்க வந்து திறப்பாங்க”, என்றேன் நான்.

அவர்கள் யாவரும் கோவையிலிருந்து வந்திருப்பவர்கள் என்பது தெரிய வந்தது. சற்று வயதானவராய்த் தோன்றிய பெண் காவலர் மெதுவாகக் கேட்டார்: “சார் , இந்த எக்ஸ்சேஞ்கில லேடீஸ் டூட்டி பார்க்கறாங்களா?”

“ஊம் மேடம், அவங்களுக்கு நைட் டூட்டி கிடையாது, காலையில ஒம்பது மணி, பத்துமணி டூட்டிக்கு வருவாங்க.”

“ஒண்ணுமில்லீங்க சார், லேடீஸ் ரெஸ்ட் ரூம் இருக்கில்லே?”

“இருக்குங்க மேடம்,” நான் சாவிகள் தொங்கும் கண்ணாடி சட்டமிட்ட சிறு அலமாரியைத் திறந்து லேடீஸ் ஓய்வறையின் சாவியை எடுத்துக்கொண்டு மாடிப் படிக்கட்டுகளில் ஏறி அந்தப் பெரிய அறையைத் திறந்தேன். பின்தொடர்ந்து வந்த அந்த பெண் காவலர் நன்றி சொல்லிவிட்டு உள்ளே நுழைந்து கொண்டார் நான் படிக்கட்டில் இறங்கும்போது இன்னும் கொஞ்சம் பெண் போலீசார் எதிர்கொண்டு பெண்கள் ஓய்வறைக்கு வழிகேட்க, திசையைக் காட்டிவிட்டு நகர்ந்தேன், ஆண்களின் ஓய்வறைகள் இரண்டும், உணவு உட்கொள்ளும் அறையும் ஆண் போலீசார் வசமாயின.

மைதான மேடையில் நாங்கள், இணைப்புக் கொடுத்திருந்த தொலைபேசிகளை சோதித்து லாக் புத்தகத்தில் குறித்து வைத்தேன். விமான நிலையத்தில் இறங்கவேண்டிய விமானங்கள் எங்கள் தொலைப்பேசி இணைப்பகத்துக்கு மேலே சமீபமாகவே பறந்து இறங்கும். எங்கள் கட்டிடத்துக்கு மேலே வருகையில் சில சமயம் சில விமானங்களின் சக்கரங்கள் வெளியே வந்துகொண்டிருக்கும். சத்தம் காதை அடைக்கும். அன்று வரும் ஒவ்வொரு விமானத்தையும் பெருகி நிற்கும் ஜனங்கள் ஆவலோடு ஆர்வத்தோடு கவனித்தனர். இன்னும் இரண்டு மணிநேரமிருக்கிறது. எல்லோரும் மொட்டை மாடிக்குச் சென்று நின்றுகொண்டனர். அங்கிருந்து பார்த்தால் மொஹிதே ஸ்டேடியமும், அந்த மேடையும் நன்றாகத் தெரியும். நானும் இன்னும் நேரமிருப்பதால் சாப்பிட்டு விட்டு வந்து விடுவோமென்று கீழே இறங்கினேன். என் மனைவி எட்டு சப்பாத்திகள் பொட்டலம் கட்டிக் கொடுத்திருந்தாள். நான்குக்கு மேலே சாப்பிடமுடியாது. அங்கு தூரமாய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கேட்டேன்: ”சாப்பாடு ஆச்சிங்களா?”

“இல்லீங்க சார்.”

“வாங்க சாப்புடலாம், சப்பாத்திதான்.”

“வேணாங்க, நீங்க சாப்புடுங்க.”

“இருக்குங்க, வாங்க சாப்புடலாம்.”

அப்பவும் அவர் தயங்கிவிட்டு எழுந்து என் மேஜையருகாக வந்து நின்றார். நான்கு சப்பாத்திகளை டப்பா மூடியில் வைத்து கூட்டை ஊற்றி அவருக்குத் தந்தேன். சாப்பிட்டுக்கொண்டே நன்றி கூறிவிட்டு, “எனக்கு ஈரோடுங்க. என்னைத் தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சிக்கு பந்தோபஸ்து டூட்டியில அனுப்பல்லீங்க சார். ஆனா நாந்தான் பிடிவாதமா என்னை அனுப்புங்கனு கெஞ்சி வாங்கிட்டு வந்தேன்,” என்றார்.

சரி, எம்ஜிஆர் பக்தனாயிருப்பார்; அதனால் தான் இப்படி என்று நினைத்துக்கொண்டேன். அவர் மீண்டும் பேசினார்: “நான் வந்ததுக்கு ஒரு நோக்கமிருக்குங்க.” என்று கூறிவிட்டு தன் பெயர் துரை என்றார். நான் கேட்காமலே தன் கதையைத் தொடர்ந்தார்.

“எனக்கு இவரு தலைவரில்லீங்க. தலைவர்னா அவருதான் தலைவரு. ஆனா இவரு தெய்வம்.”

இந்த சமயம் சுவிட்சு ரூம் பானலில் அலாரமடித்தது. போய் அதை நிறுத்திவிட்டு வந்தேன். அவர் தொடர்ந்தார்.

“அவரெல்லாம் அப்படியில்லே. எப்படினு கேளுங்க, அவரு ஆட்சியில, நான் கான்ஸ்டபுளாயிருந்தப்ப, முன்னூறு ரூபா ஒரு பார்டிகிட்டே வாங்கிட்டேனுங்க. அதுகூட நா கை நீட்டி வாங்கினதில்லீங்க. பார்டியாகவே பாத்து எம் பாக்கெட்ல வச்சிட்டாருங்க. பின்னால அவரே செஞ்ச கேஸ் குடுத்து சாட்சி செட்டப் பண்ணிட்டாருங்க. வேலையிலிந்து டிஸ்மிஸ் ஆயிட்டேன். தலைவரைப் போய்ப் பாத்து கெஞ்சினேன். நடக்கல்லே. ரொம்ப கஷ்டப்பட்டேன் மூணு பசங்க. சம்சாரம் சீக்காளி.

“அப்புறம், இவரு சி.எம்.ஆனாரு. சரி, எல்லாரும் சொல்றாங்களே, போய்த்தான் பாக்கலாம்னு தோட்டத்துக்குப் போனேன். செக்யூரிடி உடமாட்டேங்கறாரு. கேட்டுகிட்டயே உட்கார்ந்திட்டேன். வெளியிலே போயிருந்தவரு வந்தாரு. கேட்டைத் தொறந்தாங்க. கார் உள்ளே போயிடுச்சி, அவரைப் பாக்கனும், ஈரோட்லேருந்து வந்திருக்கேனு கத்தினேன். செக்யூரிடி கேட்டைச் சாத்தறாரு. செக்யூரிடியோட போனுக்கு ஐயாவே பேசறாரு, அவரு போனுக்கு அந்தப் பக்கத்தில பேசறதுக்கு செக்யூரிடி பதில் குடுக்கறாரு. “போப்பான்னா கேட்கமாட்டேங்கறாருங்க. ஈரோடாம்,” என்று என்னைப் பார்த்தவாறே பேசினாரு.

“சரிங்க, வாப்பா” என்று என்னை கூட்டிகிட்டு மாடி மேலே போய் உட்காரச் சொன்னாங்க. கொஞ்ச நேரம் கழிச்சி கூப்பிட்டாங்க. அவரை நேருக்கு நேரா பார்த்தேன்.”

இந்த சமயம் எக்ஸ்சேஞ்சு மஸ்தூர் வந்து தொலைப்பேசியில் என்னை டி.இ. கூப்பிடுவதாகச் சொல்லவும் எழுந்து போய் பேசினேன். மைதான மேடையில் இணைக்கப்பட்டுள்ள தொலைப்பேசிகள் சரியாயிருக்கின்றனவா என்று கேட்டுக்கொண்டார். நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மேஜைக்குத் திரும்பினேன்.

“ஈரோட்ல என்ன செய்யறேனு கேட்டாரு, சும்மாத்தனிருக்கேன். ரொம்ப கஷ்டம்னு சொன்னேன், என் விஷயம் பூரா சொன்னேன். ஒரு மாதிரி பாத்தாரு. கொஞ்சம் வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு செகரட்ரிய கூப்பிட்டு என்னவோ சொன்னாரு. செக்ரட்ரி வந்து என்னோட பேப்பர் எல்லாத்தையும் வாங்கிட்டுப் போனாரு. செகரட்ரி திரும்பி வந்து என் ஃபைலைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ஒரு மாசத்தில வேலைக்கு ஆர்டர் வரும், போங்கள் என்றார்.

“அரை நம்பிக்கையோடத்தான் திரும்பி ஊருக்குப் போனேன்,. சாப்பிடாவிட்டால் சாப்பிட்டுவிட்டு போகும்படி கூறி அந்த இடத்தைக் காட்டியனுப்பினார். உள்ளே போய் கால்லே விழுந்து கும்பிட்டேன். அவர் எதுவுமே பேசல்லே. ரெண்டு மாசம் கழிஞ்சப்ப, ஈரோட்டுக்கே எனக்கு போஸ்டிங்க் ஆர்டர் வந்திட்டது, இவருதான் எனக்கு தெய்வம். தெய்வம் வேறே, தலைவன் வேறே. அதனால தெய்வத்தைப் பாத்தே தீரணும்னுதான் பந்தோபஸ்து டூட்டிய கேட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்,” என்று தன் கதையை முடித்தார் கான்ஸ்டபுள் துரை.

 

மொஹிதே மைதானம் பெரிய பெரிய விளக்குகளால் பகல் போல காட்சியளித்தது. அந்தப் பெரிய கார் மெதுவாக வந்து சரிவுப் பாதையிலேறி மேடையைடையந்தது. அவர் நடித்த ஒரு படத்தில் என்று நினைவு, ஒரு பாட்டு, அது இந்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமானது.

“நான் செத்துப் பொழைச்சவண்டா.”

எங்களுக்கிருந்த கவலையெல்லாம் கடைசி நிமிடம் வரை நாங்கள் அவசரகால நடவடிக்கையாக இணைப்புக் கொடுத்திருக்கும் தற்காலிக தொலைப்பேசிகள் நான்கும் எவ்வித வில்லங்கமுமின்றி இருக்க வேண்டுமே என்பதுதான்.

மோசமான நிலையில் பறந்து சென்று பயங்கர சிகிச்சைக்குப் பிறகு உயர் பிழைத்து தாய்நாடு திரும்பி நடமாடி தன்னைக் காண வந்து கூடியிருக்கும் தன் மீது அபார அபிமானமும் அன்பும் கொண்டுள்ள தன் மக்களைக் காண்பதில் அவர் பெற்ற அதிர்ச்சி கூடிய பெரு மகிழ்ச்சி அழுகையாக வெளிப்பட்டது. அவருக்குப் பேசும் திறன் போய்விட்டிருந்தது. அவர் அழுதார். அது நடிப்பல்ல. பொதுவாக திரைப்படங்களில் அழவேண்டிய காட்சிகளில் அவரால் சரியாக அதைச் செய்ய முடிந்ததில்லை. முகத்தை மூடிக்கொள்ளுவார் என்றும் அல்லது சுவரைப் பார்த்துத் திரும்பிக்கொண்டு முதுகைக் காட்டுவார் என்றும் விமர்சிப்பவர்களுண்டு. அதையே வேற்று மொழியில் நடிகர்கள் செய்கையில், ‘அண்டர்ப்ளே’ பண்ணி நடிக்கிறார் என்று உயர்த்திப் பேசுபவர்களும் உண்டு. ஆனால், இன்று இங்கு அவர் தம் மக்களை அவர்தம் மாபெரும் அன்பைக் கண்டு அழுதார். அது நடிப்பல்ல. அதுதான் அவர். இந்த அழும் முகத்தை அருகாமைக் காட்சியில் சில பிரபல ஆங்கில பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. அவ்வளவு தான் – அரை மணி நேரமோ என்னவோ – ஆட்டம் க்ளோஸ். ஆனால், மக்கள் கூட்டம் கலைந்தும் கலையாது கண்டது கனவா – நனவாவென்று பேசிய படி அசையத் தொடங்கிற்று.

மறுநாள் விடிந்து வெளிச்சம் வந்ததும் ஜி.எஸ்.டி. சாலையில் ‘ஆஷீர்கானா’ பஸ் நிறுத்தப் பகுதியிலும், சாலைக்கு இரு மருங்கிலும் அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறைகளில் புதைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பீங்கான் பேசின்களைக் காணோம். அதுவே அன்றைக்கும் அடுத்த நாளைக்கும் இன்னும் வரும் நாட்களுக்குமான பேச்சாக நிலைத்தபோது, தொலைப்பேசி இணைப்பக ஊழியர் ஒருவர் கேட்டார்: “நாம வச்ச டெம்பரரி டெலிபோனுங்கெல்லாம் பத்தரமா வந்து சேர்ந்தாச்சா?”

“ஆமாம்”, என்று தெம்மின்றி யாரோ முனுமுணுத்தாற்போலிருந்தது.

Vittalrao

Amrutha

Related post