வேலை கிடைச்சாச்சு – விட்டல் ராவ்

 வேலை கிடைச்சாச்சு – விட்டல் ராவ்

1

கூடிய சீக்கிரம் டெலிபோன் டிபார்ட்மெண்டில வேலை கிடைச்சு, நான் போயிடுவேன்” என்று நான் சொன்னதும் வயதில் மூத்தவர் தேவசகாயம் என்னைத் தட்டி கேட்டார்.

“தகவல் தொடர்புக்கு ரொம்ப ரொம்ப வேகமான விஷயங்கள் மூணு உண்டு, என்ன சொல்லு பாக்கலாம்?” நகைச்சுவையோடு நக்கல் பிடித்த அங்கிள் அவர்.

“ரெண்டு தெரியும், மூணாவது எது?” என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தேவசகாயமே பதிலளித்தார்.

“TELEGRAMME, TELEPHONE, TELL A WOMAN”. உடனே கிளாரா மேடம், “தாத்தா, கொழுப்பா?, என்று பாய்ந்தாள்.

“ஒங்கிட்ட சொன்னா, ஒடனே எல்லார்கிட்டயும் சொல்லிடுவியே”, என்றார்.

இந்த தகவல் தொடர்பு சாதனம் – தொலைபேசி இலாகாவில் நான் முப்பத்தெட்டு வருடங்கள், ஆறு மாதம், பத்தொன்பது நாட்கள் பணியாற்றிவிட்டு பணியிலிருந்து ஓய்வுபெற்று பதினேழு வருடங்களை கழித்திருக்கிறேன். இவ்வளவு நீண்ட சேவைக் காலத்தில் – பேசுவதும், பேசுவதைக் கவனித்து கேட்பதுவே – பயிற்சி நான் முதலாக ஓய்வு பெற்றது வரை – தொழிலாகக் கொண்ட என்னைப் போன்ற சக தோழர்களுக்கும் எனக்கும் பொது மக்களோடு பல்வேறு விதமான தொடர்பு ஏற்பட்ட நிலையில் நிறைய சுவையான தொடர்பு ஏற்பட்டிருக்கின்றன.

தகவல் தொடர்பு சாதன வகையில் தபால் சேவையையடுத்து வந்த தந்தித் துறை தபாலையும் சார்ந்திருந்ததால் தபால் தந்தி இலாகா என்றானது. பின்னால் தோன்றிய தொலைபேசி துறையும் ஆரம்பத்திலிருந்து நீண்டகாலம் தபால் தந்தி (போஸ்ட் அண்டு டெலிகிராஃப்) என்பதற்குள்ளேயே ஒளிந்திருந்து, பின் அதன் ராஜ்ஜியம் ஊதிப் பெருக்கவும், தகவல் தொடர்பு இலாகா (டிபார்ட்மெண்ட் ஆஃப் டெலிகாம்) என்றானது. சில வருடங்களுக்கு முன் சர்வதேச அளவில் தந்தியமைப்பு முற்றிலுமாய் நிறுத்தப்பட்டு, தந்தி சேவை இந்தியாவிலும் நிரந்தர ஓய்வு பெற்றது. அதில் பணியாற்றியவர்கள், தொலைபேசி சேவையில் இணைந்தனர்.

உலகமயமாதல், டெக்னாலஜி முன்னேற்றங்களை அடுத்து, தொலைபேசியுலகம் வெகு வேகமாய் பரந்து விரிந்து முன்னால் போய்க்கொண்டிருக்க, எனக்கும் உங்களுக்கும் பரிச்சயமான பழைய தொலைபேசி தொடர்பு, தொடர்பகம், தொலைபேசி கருவிகள், அந்த சேவை, அதன் பணியாளர்கள் அனைத்தும் ஒரு முடிவை நோக்கிய பயணத்திலிருப்பதாகப் படுகிறது. எனக்கு அனுபவ மேற்பட்ட பல்வேறு சம்பவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளுமுன், சென்னைத் தொலைபேசியைக் குறித்து மேலும் ஓரிரு தகவல்கள்…

 

தொலைபேசி சேவை இந்தியாவில் தன் நூற்றாண்டை ஜனவரி மாதம் 1982ல் நிறைவுற்று நாடு முழுவதும் கொண்டாட வைத்தது. அது சமயம் சென்னைத் தொலைபேசி நூற்றாண்டு மலர் ஒன்றை அதி சிறப்பாகத் தயாரித்து வெளியிட்டது. அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கீழ்க்கண்ட வரிகள் முக்கியமானவையாக அடிக்கோடிடப்பட்டன.

“Communication in today’s world plays an important role. Without it neither democracy can function, nor can progress be made.” – திருமதி இந்திரா காந்தி.

பாஸ்டன் யூனிவெர்சிட்டி பேராசிரியர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் 1876இல் கண்டுபிடித்த டெலிபோன் ஐந்து வருடங்களுக்குள் சென்னைக்கு 1861இல் வந்து விட்டது. லண்டனைச் சேர்ந்த ஓரியண்டல் டெலிபோன் அண்டு எலெக்டிரிக் கம்பெனி என்ற தனியார் ஸ்தாபனத்தின் ஏஜெண்டுகளாய் செயல்பட்ட அர்புத்னாட் அண்டு கம்பெனியின் மேற்பார்வையில் சென்னையில் தொலைபேசி சேவை தொடங்கியது.

நவம்பர் பத்தொன்பது 1981இல் ஒரு சனிக்கிழமை; விஷேச அழைப்பின் பேரில் கொஞ்சம் வெள்ளைக்கார சீமாட்டிகளும் சீமான்களும், கம்பெனியின் பரந்த அலுவலகத்தின் மாடியறையில் வியப்போடும் ஆர்வத்தோடும் வந்து குழுமியிருக்க, கம்பெனியின் அதிகாரி திரு. க்ளே (Clay) என்பவரால் பதினேழு தொலைபேசிக் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. தந்திக் கம்பிகளால் இணைக்கப்பட்ட இந்த டெலிபோன்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த இராணுவ அதிகாரிகளின் மெஸ் அறையில் இராணுவ மேஜர் கேய்சரின் உபயோகத்துக்கென வைக்கப்பட்ட ஐந்து டெலிபோன்களோடு இணைக்கப்பட்டிருந்தன. அங்கும் சீமாட்டிகளும் சீமான்களும் கொஞ்சம் பேர் அழைக்கப்பட்டிருந்தனர். கவர்னரின் சிறப்பு பாண்டு வாத்திய இசை நிகழ்ச்சியோடு ஆரம்பமானது.

1924இல் பொதுமக்கள் உபயோகம் கருதி பொதுத் தொலைபேசிக் கூண்டுகள் (PCO) சென்ட்ரல் ஸ்டேஷன், எக்மோர் ஸ்டேஷன், சென்னை ஹார்பர், உப்பளம் (சால்ட் கோட்டார்ஸ்) மற்றும் டெலிபோன் கம்பெனி அலுவலகமிருந்த எர்ரபாலு செட்டி தெரு என ஐந்து இடங்களில் வைக்கப்பட்டன. பிறகு இவை பெருகி வளர்ந்தன. நான் சேவைக்கு வந்த அறுபதுகளின் தொடக்கத்தில் நகரின் சாலைகளிலும் தெருக்களிலும் மூலைக்கு மூலை சிவப்பு நிறத்தில் கண்ணாடியிட்ட பெரிய டெலிபோன் பூத்கள் இருந்தன. சென்னை வெயிலில் ‘‘பிசிஓ’’ கூண்டுக்குள் நின்றுகொண்டு பேசுவது கொடுமை. மழைக்காலத்தில் மழைக்கு ஒதுங்க ஏற்ற இடம். மூன்று பேர் தாராளமாக உள்ளே நிற்கலாம். ரெயில்வே ஸ்டேஷன், தலைமை தபாலாபீசு, ஆஸ்பத்திரிகளில் இருந்த பொதுத் தொலைபேசிகள் எப்போதும் ஆள் நிறைந்திருக்கும்.

அப்போதெல்லாம் தொலைபேசியில் பேசுவதற்குக் கால வரம்பு இல்லை. ஓர் அழைப்பில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். சில சமயம் அவசரத்துக்கு கிடைக்காது. யாராவது பேசிக்கொண்டேயிருப்பார்கள். கல்லூரி மாணவர் விடுதிகளிலிருந்த ‘பிசிஓ’ பூத்களிலும் பகல் – இரவு எந்நேரமும் கூட்டமிருக்கும். அப்போது சதுர வடிவ இரண்டணா நாணயத்தை, நாணயப் பெட்டியின் (Coin Box) சாமி உண்டி போலிருக்கும் துவாரத்தினுள் செலுத்தினால், அந்நாணயத்தின் வடிவம், எடை, பருமன் அளவுக்கு ஏற்றார்போல் பொருத்தப்பட்ட லீவர் விலகி டயல் டோன் கிடைத்து சுழற்றினால், வேண்டிய தொலைபேசி எண் சம்பாஷணையில் இல்லாமலிருந்தால் – பழுதின்றியிருந்தால் மணியடித்து கிடைக்கும். சாலையில் ஓடும் பஸ், கார் போன்ற வாகனாதிகளின் ஓசையும் பொதுத் தொலைபேசிகளில் அழைப்புகளில் காதில் கேட்கும்.

காய்ன் பாக்ஸை சாவி போட்டு திறக்க வேண்டும். திறந்தால் அதற்குள் இரண்டணா நாணயங்கள் நிறைந்த பெட்டி ஒன்றிருக்கும். அதை கழட்டியெடுத்து எக்ச்சேஞ்சிலுள்ள மீட்டரில் கணக்கிடப்பட்டிருக்கும் அழைப்புகளின் எண்ணிக்கைக்கு சமமாக நாணயங்கள் இருக்கிறதாவென எண்ணிப் பார்த்து உரிய அதிகாரியிடம் சேர்க்கவேண்டும்.

வெகுநாட்கள் வரை ‘பிசிஓ’ பூத், காய்ன்பாக்ஸ் முதலான சகல பொறுப்பும் டெலிபோன்ஸ் இன்ஸ்பெக்டமிருந்து வந்தது. காய்ன் பாக்ஸ் சாவியும் அவர்களிடமே இருந்தது. ஒரு போன் இன்ஸ்பெக்டரின் பொறுப்பில், அவருக்கான ஏரியாவில் நிறைய பொதுத் தொலைபேசி கூண்டுகள் இருந்தன. மாதக் கடைசிகளில் காய்ன் பாக்ஸ் வசூலிலிருந்து காபி டீ செலவுக்கு போன் இன்ஸ்பெக்டர்கள் எடுத்துக்கொண்டதாக பேசிக்கொள்ளுவார்கள் – உஷ்! காய்ன் பாக்ஸ் சாவிகள் டெலிபோன் இன்ஸ்பெக்டரிடம் இருக்கும். காலப்போக்கில் டெலிபோன் இன்ஸ்பெக்டர் என்ற பதவி ஒழிக்கப்பட்டதும், இந்த பொறுப்புகள் ஜீனியர் எஞ்சினியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இரண்டணா நாணயத்தின் வடிவம், எடை, பருமனைக் கொண்ட உலோகத் தகட்டை தயாரித்து உண்டிக்குள் விட்டதில், சில சமயம் அழைப்பு கிடைக்கப்பட்டதால், பல காய்ன் பாக்ஸ்களைத் திறந்த போது அசல் நாணயங்களுடன் இத்தகைய உலோகத் தகடுகளும் எள்ளோடு சேர்ந்த எலிப் புழுக்கையாய் கிடைத்தன. அதனால், எக்ஸ்சேஞ்சு மீட்டரில் அந்த காய்ன் பாக்ஸுக்கான மீட்டர் ரீடிங்கும், பெட்டியிலுள்ள நாணயங்களின் எண்ணிக்கையும் நிச்சயம் சமமாக இருக்காது. சில சமயம் காய்ன் பாக்சில் நாணயங்களோடு சேர்ந்து சினிமா டிக்கட், மின்சார ரயில் டிக்கட், பீடீ சிகிரெட் துண்டுகளும் கிடைத்ததுண்டு.

நம் நாட்டில் பொதுமக்கள் உபயோகத்துக்கான பல்வேறு வசதிகளும், பொதுமக்களில் சிலராலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அவ்வசதிகள் மற்றவர்களுக்கு சரிவர கிடைக்காமற் போகின்றன. சட்டக்கல்லூரி

சட்டக்கல்லூரி மாணவர் விடுதியின் வாசலில் நின்றிருந்த பொதுத் தொலைப் பேசியின் காசுப் பெட்டிதான் அதிக வசூலைக் காட்டியது.

 

டெலிபோன் இன்ஸ்பெக்டர்களில் மிகவும் புகழ்பெற்றவர் மேஜர் சுந்தரராஜன். நாடகங்கள் மூலமாக நடிப்பில் முன்னுக்கு வந்து திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களை ஏற்று திரையில் பிரகாசித்தவர். ‘ மேஜர் சந்திரகாந்’தில் நடித்து முத்திரை பதித்தால் மேஜர் சுந்தரராஜன் என்றானார். ஃபோன் இன்ஸ்பெக்டராக பணியில் இருக்கையில் பணக்கஷ்டத்தில் உழன்றவர். உஸ்ஸென்று வெயிலுக்கும் வியர்வைக்கும் பெருமூச்சு விட்டபடி டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்குள் வந்து ஏர்கண்டிஷனில் உட்கார்த்து, “எங்கே, நாகராஜன் இல்லையா?”, என்று கேட்பார்.

“தோ வர்ரேம்பா, இங்கே கொஞ்சம் வேலை”, என்று கூறிவிட்டு வாட்டசாட்டமாய், உயரமாய், சிவப்பாய். முழுச் சொட்டைத் தலையோடு நாகராஜன் வந்து நிற்பார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் மிகவும் வசதிமிக்க குடும்பத்திலிருந்து படித்துவிட்டு வேலைக்கு வந்தவர். மிகவும் நகைச்சுவையாகப்  பேசும் (பச்சையாகவும் பேசுபவர்) நாகராஜன், இடது சாரி சிந்தனையாளர். கலை இலக்கியம் தெரிந்தும் சில சமயம் தெரியாமலும் பேசுவார். ஜெயகாந்தன் மோகி. தொலைபேசி தொழிற்சங்கத்தில் முக்கிய புள்ளி. மாவட்ட பொருளாளராயிருந்தவர். சுந்தரராஜன் சினிமாவில் முன்னுக்கு வருமுன் நாகராஜனின் சிறுசிறு பொருளாதார கைத்தாங்கலில்தான் நடைபோட்டார்.

பெரும்பாலும் மாதக் கடைசியில் அஞ்சு பத்துக்கு போன் செய்துவிட்டு வருவார் என்பதை நாகராஜன் என்னிடம் கூறுவார். ஒரு நாள் நானும் நாகராஜனும் தேநீர் விடுதியின் வெளியில் நின்று குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது நந்தனம் சிக்னலில், முத்துராமலிங்கத் தேவர் சிலை வைக்கப்பட்டிருக்க வில்லை. செயிண்ட் மேரீஸ் சாலையிலிருந்து மெதுவாக வந்த ஒரு கார் சிக்னலில் தாமதித்தது.

“என்னாப்பா, இங்க நிற்கிறது தெரியில்லையா”, என்றார் நாகராஜன். காரை ஓட்டி வந்த சுந்தரராஜன் இள நகையோடு கையை அசைத்துவிட்டு வேகமாய் காரைக் கிளப்பிச் சென்று மறைந்தார்.

“இதே டீ கடையில எத்தனை வாட்டி ரெண்டு பேரும் டீ குடிச்சிருப்போம். ம், இப்ப ஆள் வேறே, வாழ்வு வந்தாச்சு, வலக்காலை இழுக்குது”, என்றார் நாகராஜன்.

எங்கள் என்.எஃப்.பி.டி.இயின் வட்ட மாநாடு மவுண்ட்ரோட்டிலிருந்த மகாஜன சபாவில் நாலு நாட்கள் நடந்த சமயம். திடீரென மாநாட்டுக்குள் தோன்றிய ‘மேஜர் சுந்தரராஜன். “பாயிண்ட் ஆஃப் ஆர்டர், நான் பழைய உறுப்பினன், ஒரு விஷயம் பேசணும்”, என்றார். தலைவர் ஜெகன் பெரிதாகச் சிரித்தபடியே, “என்னது?”, என்றார்.

“தொழிற்சங்கத்துக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவியளிக்கிறேன்”, என்று கூறிவிட்டு காசோலையைப் பொருளாளர் வி.டி. சிவராஜிடம் அளித்தார், மேஜர் சுந்தரராஜன்.

டெலிபோன் இலாகாவில் – சென்னைத் தொலைபேசியில் – சுந்தரராஜன் என்ற பெயரில் யார் இருந்தாலும் – நடிப்புக்கும் அவருக்கும் எவ்வித ஸ்நான பிராப்தியுமில்லாவிட்டால்கூட –  சுந்தரராஜன் என்று பெயர்கொண்ட ஒரே காரணத்துக்காக, அவரை சக ஊழியர்கள், “மேஜர் சுந்தரராஜன்” என்றே குறிப்பிடுவதும், “மேஜர் வாங்க”, என்றே அழைப்பதும் ஒரு வழக்கமாயிருந்தது. அப்படியொரு மேஜர் சுந்தரராஜன் பரங்கிமலை டெலிபோன் எக்ஸ் சேஞ்சிலிருந்தவர்.

தொலைபேசி இலாகாவில் மேஜர் சுந்தரராஜனை அடுத்து கலை இலக்கியவாதிகள் வெவ்வேறு மையங்களில் பணியாற்றி கலை இலக்கியத்தில் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். சினிமாவிலும், நாடகத்திலும், தொலைக்காட்சியிலும் சிறப்பாக நடித்தவர்களில் திலக்ஜி என்ற ராஜ்திலக், மோதிராவ், வெங்கட்ராவ், வெங்கட்ராமன், கீதா ஆகியோரும்; நாடகம், தொலைக்காட்சி தொடர் என்பதில் பங்காற்றிய வசீகரன் எனும் தவமணியும் முக்கியமானவர்கள். இலக்கியவாதிகளில் பாவண்ணன் என்ற பாஸ்கரன், சுப்ரபாரதி மணியன் எஸ். சங்கர நாராயணன், விட்டல்ராவ் எனும் விட்டல் ரா. சேஷாத்ரி, ஜெயமோகன், லதா ராமகிருஷ்ணன் (ரிஷி), இலந்தை சு.ராமசாமி ஆகியோர் என் நினைவுக்குத் தெரிந்து பிரபலமானவர்கள்.

 

பால் தந்தி என்று மொத்தமாகப் பார்த்தோமானால், கோமல் சுவாமிநாதன், கோமதி சுவாமிநாதன், ரஸவாதி, அப்துல் வகாப், ஜோதிர்லதா கிரிஜா, எஸ். குமார், பார்த்திபன், முடவன் குட்டி முகம்மது அலி ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு சந்தர்ப்பத்தில் சந்தியா நடராஜன், “கவர்ன்மெண்ட் ஆபிசுகளிலே வேலை ரொம்ப குறைவுனு நினைக்கிறேன்” என்றார் சிரித்துக் கொண்டே (சந்தியா நடாஜனும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி)

Vittalrao
விட்டல்ராவ்

Amrutha

Related post