ஹவி கவிதைகள்

1. இரை தேடும் புள்
மழை ஓய்ந்து துலங்கிய
புலர் காலையில்
உறக்க கலக்கத்தில் இருக்கும்
அவளையும் ஏந்தியபடி
மிதந்து அகல்கிறது
வெளிர் சாம்பலில் நல்லூர்
சரம் சரமாக வந்து
கவிகிறது தனிமையின்
ஈரம் கனத்த குளிர்
தொடு வானில் சரியும்
கலக்கத்தின் செவ்வரி
மெல்ல சோம்பல் முறிக்கும்
அசதி பறவை
திறக்க போகும் தினத்தை
தியானத்தபடி சிறகு கோதும்
தனிமையின் பேரிரைச்சலோடு
உரத்த ஹார்ன் ஒலி எழுப்பி
வட திசை நோக்கி பயண
சுருள் விரிக்கும் தொடர் வண்டி
முடிவற்ற காட்சிகளை உதிர்க்கும்
ஜன்னல் கண்ணாடி மெல்ல
வளைகிறது கண்ணீர் கோளமாய்
கைமறதியாய் வீட்டில் விட்டு வந்த
ஆசுவாசம் தோள் பையாய்
கனக்கிறது மனதில் இன்னும்
பசிய வயல்கள் பின் தங்க
வாழ்வின் நிலக் காட்சிகளை
இரக்கமே இன்றி
விரைவாக மாற்றும் தினம்
இன்றின் தொடக்க சித்திரங்களை
தீட்டுகிறது இவ்விதமாக
2. பயண காலை
இப்படியாக…
முன்னொரு நாளில்
அனைவருக்கும் படியளக்க
அழகன் குதிரையில்
வந்திறங்கிய
வையைக் கரையில்
வேர் கொண்டிருந்தது
அவன் வீடு
பின்னொரு நாளில்
அனைத்தையும் பறித்து எடுக்க
கும்பினிக்காரன்
வந்து இறங்கிய
கூவம் முகத்துவாரத்தின் கரையில்
முதிர்ந்த கான்கிரீட் மரக்கிளையில் இருக்கிறது
இப்போது அவன் அறை
வேரிலிருந்து கிளை
பல நூறு மைல்கள்
தொலைவில் காற்றில் அல்லாடும்
இரைக்காக வேர் கொண்ட நிலத்துக்கும்
உயிர் விருத்திக்காக
அறை தொங்கும் கிளைக்கும்
சதா பறக்கிறான்
பறத்தலில் யுகங்கள் கரைகின்றன
அவன்போலவே பேராயிரம் பறவைகள்
நித்தமும் சிறகடிக்கின்றன
நிலம் பாவிய வேரோ
வெளி ஏகிய கிளையோ
பழுத்து உதிரும் கனியோ
படபடக்கும் பட்சியோ
தழைக்கச் செய்வது நதிதான்
தோன்றிய இடம்
திருவூறலோ வேள்குன்றமோ
வையையும் கூவமும் பாய்ந்து
செல்வது கீழைக்கடலை நோக்கித்தான்.
3. மிச்சமிருக்கும் பொழுதுகள்
கதவருகே நிற்கும்
காலா என் அருகே வாடா
உன்னை எட்டி உதைக்க மாட்டேன்
ஆரத் தழுவுகிறேன்
வந்திருப்பவர் காலனானாலும்
கடனாளியானாலும்
வாயிலில் நிற்க வைப்பது
எமது மரபல்ல
கோடிக் கணக்கானோரின் வீடுகளுக்கு
கால் கடுக்கச் சென்று களைத்திருப்பாய்
சற்றே உள்ளே வந்து இளைப்பாறு
எருமையை கொல்லைப்புறத்தில் கட்டி
தண்ணீர் காட்டு
இந்த நாற்காலியில் உட்கார்
அந்த மின் விசிறியை இயக்கவா
கூடுமெனில்
என் வீட்டு சிறு ஒலி அரங்கில்
நான்கு பருவங்களையோ
காற்றை தவிர வேறு ஒன்றுமில்லை யையோ
கேட்டு கொண்டிரு
அதற்குள் உனக்கு
தித்திப்பான வையை நீரால்
பானகரமோ நீர் மோரோ தயார் செய்கிறேன்
அழகரை தரிசிக்க
கால் கடுக்க நடந்து வரும்
கிராமத்து அன்பர்களுக்கு இதை தருவது எம் வழக்கம்
மிச்சமிருக்கும் பொழுதுகளில்
நீ பறித்து வந்த
கோடிக் கணக்கான உயிர்களின் கதைகளைச் சொல்
லேசாக காய்ச்சல் அடிக்கிறது
அதை கேட்டபடியே சற்றே கண்ணயர்கிறேன்
காலா என்னருகே வாடா
உன்னை ஆரத் தழுவுகிறேன்
வந்திருப்பவர் யாரானாலும்
வாயிலில் நிற்க வைப்பது எமது மரபல்ல.
4. பறவைகளை போல மனிதர்கள்
வாழ்வெனும்
அந்தி வானில் மறைகின்றனர்
அடி வானை இருள் சூழ்கிறது
அப்போது
மௌனம் ஒரு நத்தையாக மாறி
ஆயுளின் கரைகளில் ஊர்கிறது
அதை வாரி அணைக்க
கடல் எப்போதும்
தன் அலைக் கரங்களை
வீசியபடி இருக்கிறது
அலையும் ஓய்வதில்லை
நத்தையும் ஓய்வதில்லை
அலைக்கும் நத்தைக்கும் நடுவில்
முடிவின்றி தொடர்கிறது ஆட்டம்
கரையில் அலைகள் வரைந்த கோடுகளை குறுக்காகக் கீறி
கடக்கிறது
நத்தையின் வழித்தடம்
தன் போக்கில்
அதுவே ஞானம்
அதுவே இருப்பு
அதுவே காத்திருப்பு
5. சந்நதம்
வில் ஏந்தியபடி
பாயும் குதிரையில்
சிலையாக நிற்கும்
அவ் வளாகத்தை விட்டு
வெளியேறும் சமயம்
உயிரின் வெட்டுண்ட தலை
முற்றத்து முன்பில் வைக்கப்பட்டது
கண்களில் இன்னும் ஆவி போகவில்லை
தன் குலம் காக்க
வேண்டிய
கூட்டத்தார் திரண்டனர்
யந்திர மணிகளும் முரசமும்
விடாது ஒலிக்க
நம்பிக்கையுடனும்
அசிரத்தையாகவும்
பணிந்து நின்றனர்
மிருகம் தெய்வமாகவும்
தெய்வம் மனிதனாகவும்
மனிதன் மிருகமாகவும்
மாறும் கணத்தில்
முடிய கண்களுக்குள்
சொட்டு சொட்டாக
இறங்குகிறது உயிர்
யாரோ ஒருவரின்
அலைபேசி மணியை கேட்டு
இயல்புக்கு திரும்பியது சனம்