ஒரு பறவையின் சிறகு போல அவ்வளவு இலகு! – மணி எம் கே மணி

 ஒரு பறவையின் சிறகு போல அவ்வளவு இலகு! – மணி எம் கே மணி

One Fine Morning (2022), Mia Hansen-Løve

ரு குறையும் இல்லாத இளைஞன் அவன். தன்னிடம் உள்ள எதையும் திருப்தியாக உணரும் இளமை. சலிப்பு இல்லாத அன்றாடங்கள் கூட கொண்டாட்டங்களில் தான் நகர்ந்து மறைகிறது. அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான். தவிர்க்க நினைத்து மென்மேலும் விரும்புகிறான். மூச்சு விட்டுக் கொள்கிற இடைவெளியில் கூட, இடைவிடாமல் தனது காதலால் மோதுகிறான். ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவதில் ஒரு புதுமையும் இல்லை; எனில், அவன் காதல் வசப்பட்டிருப்பது, அவன் காதலிக்க வேண்டியிருக்கிற பெண்ணின் அம்மாவின் மீது.

அவளுக்கு தர்ம சங்கடம் தான். அவள் தன்னை முட்டி மோதித் திணறும் அவனுடைய கண்களை பெரும்பாலும் கனிவோடு பார்த்திருந்தவாறு இருந்து ஒருநாள் அவனை ஆமோதிக்கிறாள். நேரம் தாழ்த்தாமல் அமைதிப்படுத்துகிறாள். இருவரும் பிரிந்து தங்களுடைய வாழ்வின் பின் செல்கிறார்கள். எவ்வளவோ நிசப்தங்களில் அந்தக் காதலும் புதைகிறது.

 

நான் இந்தப் படத்தைப் பார்த்ததும் இதை எதற்காக எடுக்க வேண்டும் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. பாலியல் நோக்கமோ அதன் வழியே வணிக நோக்கங்களோ படத்தின் குறிக்கோளாக இருக்க முடியாது என்பது அந்த கதை சொல்லும் பாங்கில் வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. மலினமான தூண்டுதல்கள் செய்து காட்டி ஒரு துணுக்கிலும் படத்தின் தரத்தை மங்கலாக்கவில்லை. ஏறக்குறைய உலகம் முழுக்க துணுக்குறப் போகிற ஒரு படத்தை எடுத்து நீட்டி முழக்குவானேன்? வெறும் அதிர்ச்சி மதிப்புக்காக எல்லாம் ஒரு சினிமாவை இவ்வளவு செதுக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்புறம் என்ன?

ஒரு காரணம் தான்…

இன்று நிலவ வந்திருக்கிற சினிமாக்காரர்கள் புதிய பார்வைகளை, புதிய அணுகுமுறைகளை, வாழ்வில் இருந்து புதிய சாரங்களை எடுத்துக்கொள்ள முனைந்திருக்கிறார்கள். ஒரு விதமான விடுதலை சாத்தியமாகிக் கொண்டே வருகிறது. திரைப்படத்துறை ஜனநாயகப்படுத்தப்படுவது தூரிதமாவதையும் கவனிக்கலாம்.

Cha Cha Real Smooth (2022), Cooper Raiff
Cha Cha Real Smooth (2022), Cooper Raiff

‘சச்சச்சா, ரியலி ஸ்மூத்’ (Cha Cha Real Smooth (2022), Cooper Raiff) என்று மேலே சொன்ன படைப்பு எனக்குப் பிடித்திருந்தது. யாருக்கும் பிடிக்கும். ஒருவரும் முகம் சுழித்து விடாத சுளுவில், மிகுந்த லாவகத்துடன் இயக்குனர் தன்னுடைய திரை மொழியில் வெற்றியடைந்திருக்கிறார். இந்தக் கதை என்பது அல்ல, பலவற்றை இவரைப் போன்றவர்களால் தாங்கள் கண்டறிந்ததை சொல்ல முடியும். சொல்லியவாறும் இருக்கிறார்கள்.

‘பாரிஸ், தர்டீன்த் டிஸ்ட்ரிக்ட்’ (Paris, 13th District (2021), Jacques Audiard) என்றொரு படத்தில் இன்றைய நவீன வாழ்வின் நெருக்கடிகள் உண்டு. ஒரு மனிதன் தன்னைப் பேணிக்கொள்வதே போதுமானது என்கிற குறுகிய தீர்மானத்தில் உயிர் பிழைத்துப் போகக் கூடிய முட்டு சந்துகளில் தான் படத்தின் கதாபாத்திரங்கள் சந்தித்துக்கொள்கின்றன. கிடைக்கும் சொற்ப அவகாசங்களில் உடல்களின் தேவைகளைத் தணித்துக் கொள்கின்றன. மனம் சார்ந்த உறவுகள் சிறிய கிரீச்சிடல்களில் வெளிறி, பிரிவுகள் நேரும்போது அதையும் பொருட்படுத்த மாட்டார்களோ என்கிற அசைவு பார்வையாளர்களிடம் உண்டாகாமல் முடியாது. கதை மாந்தர்களான அவர்கள் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் கடந்து செல்கிறார்கள். என்றாலும், திருப்பங்கள் நிகழ்கின்றன. படத்தின் முடிவில் தன்னைக் கண்டறியும் விஷயங்கள் கைக்கூடும்போது படம் முடிவடைகிறது.

பிழைப்பின் நிமித்தம், எவ்வளவு ராட்டின வட்டங்களில் பதறிக்கொண்டு சுழல வேண்டியிருந்தாலும், ஒரு கைப்பிடி மனம் தன்னைத் தலை கோதும் ஆறுதலாக இருக்க வேண்டும் என்கிற பரிதவிப்பு இல்லாத உயிர்கள் இருக்க முடியுமா?

இன்றைய காலகட்டங்களின் சினிமாக்கள் ஏற்கனவே இருந்த அனைத்தையும் கொட்டி கழித்து விட்டு புதிய எதையும் நிமிர்த்தி நிறுத்துவதில்லை. நம்மை வந்து சேருகிற சிறிய உண்மைகளை அதன் அத்தனை பரிமாணங்களிலும் ஒளி பாய்ச்சி, அவற்றை முழுமையாக அள்ளிக்கொள்கின்றன.

‘பெர்க்மான் ஐலாண்ட்’ (Bergman Island (2021), Mia Hansen-Løve) என்கிற படம் பழைய, ஆழமான பெர்க்மனின் படங்களின் நினைவுகளைக் கிளறிக் கொண்டிருந்த போதே, மற்றொரு புறத்தில் வரும் கதைகூறல் வாழ்வை மிக எளிமையாக மாற்றிக்கொள்ள முடியும் என்று ஒரு போக்கில் சென்றது. ஆணும் பெண்ணுமான இரண்டு திரைக்கதையாளர்கள் தங்களுடைய திரைக்கதைகளை எழுத அத்தீவிற்கு வருவதில் இருந்து தொடங்குகிறது படம். வாழ்வுடன் அவர்கள் சினிமாவையும் அலசிக் கொண்டிருக்கிறார்கள், பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேர் பிடித்து உறுதியாக முறுகிய அடிப்படைகளில் இருந்த கலையில் இருந்து தாம் இன்றைய சினிமாவும் வந்திருக்கும் என்பது சரி. ஒரு காலத்தில் அதற்கு ஓங்கி உயர்ந்த பிரம்மாண்ட கனவுகள் இருந்தன. மிகப் பெரிய லட்சியங்கள் அவை. உலகப் போர்களும் கொள்ளை நோய்களும் பஞ்சமும் வந்து கடந்த பிறகு வாழ்வைப் பற்றி இருந்த புரிதல்களில் நெகிழ்வு செய்துகொள்ள நேர்ந்தது. மகத்தான கனவுகளுக்கான முழக்க ஊர்வலங்களில் எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருந்தனர். தியாகங்களை வேண்டி விரும்பி செய்தவர் போக, அது அப்புறம் அவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெறப்பட்டது. மெல்ல மெல்ல சர்க்கரை தடவின விஷ ஆக்ரமிப்புகளில் இருந்து கூட்டமாகவும் குழுக்களாகவும் தங்களை விடுவித்துக்கொள்கிற பணி, உயிரை தக்கவைத்துக் கொள்கிற நெடிய போராட்டமாகவே இருந்தது.

அவற்றின் தேவைகள் இன்னமும் முடியாத நிலையில், இன்றைய காலம் வேறு முகம் தரித்து, தனி மனிதனுக்கு சவாலாக நிற்கிறது என்று சொல்ல வேண்டும். அரசு உள்ளிட்ட எல்லா அமைப்புகளும் அவனை விழுங்கி செரித்து ஏப்பம் விட உறுமிக் கொண்டேயிருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் இருந்த இடம் ஆவியாகிப் போகிற பீதியை கரணம் தப்பாமல் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது. தங்கள் குழந்தைகளை எப்படி உயிர் பிழைப்பவர்களாக மட்டும் உருவாக்கி எடுப்பது என்பதில் எந்த நியாய தர்மங்களையும் பார்க்க முடியாது என்பதில் பெற்றோர் உறுதியாக இருக்கின்றனர்.

இந்தக் காலம் இப்படித்தான் இருக்கும் என்கிற விதியை வகுத்துக்கொள்வோம் என்றால், இந்த தலைமுறை படைப்பாளிகள் என்றைக்குமான நீதியை ஆதியோடந்தமாக விளக்கி, படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதில் சோர்வடைந்து விட்டார்கள். குறைந்த பட்சம், அம்மாதிரி பிடுங்கல்களில் இருந்து விலகி நின்று கொண்டு விட்டார்கள். இன்றைய உலகப் படங்களில் பேசுபொருளாக இருக்கிற திருமணம், தனிமை, மரணம் போன்றவைகள் கூட எளிமையாக பரிமாறப்பட்டு விடுகிறது. உலகமெங்கும் மனிதர்களுக்கு வந்து சேரக் கூடிய தனிமை ஒரு பேஷன் போலவே ஆகிவிட்ட நிலையில் அதைப் பற்றின மிக முக்கியமான படங்கள் வந்தவாறே இருக்கின்றன.

Petite Maman (2021), Céline Sciamma
Petite Maman (2021), Céline Sciamma

 

ஒருவேளை சம்மந்தப்பட்டோரை மூச்சடைக்க செய்கிற அந்த நெருக்கடியை இரண்டு குழந்தைகள் கடந்து செல்கிற ஒரு படத்தைப் பார்த்தேன். ‘பெட்டியட் மேமன்’ (Petite Maman (2021), Céline Sciamma), ஒரு பறவையின் சிறகு போல அவ்வளவு இலகு. ‘ஓன் பைன் மார்னிங்’ (One Fine Morning (2022), Mia Hansen-Løve) திரைப்படம் கூட தனிமையைப் பற்றியது தான். காப்பகத்தில் விட்டம் பார்த்து படுத்திருக்கிற அமைதியான அந்த மனதிற்குள் கொந்தளிப்பது என்ன என்று அவரை அறியும் மகள் தான் இப்படத்தின் கதாநாயகி. அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். எதிர்காலத்தின் முன்னால் வழி மறிக்கிற வெறுமையை அவள் நூறு சதவீதம் தன்னுடைய அனுபவத்தால் அறிவாள். அவளால் காதலுக்கு பணியாதிருக்க முடியுமா? எல்லாம் முடிந்து, அவனோடு அவள் சேர்ந்து கொள்ளும்போது அந்தக் காதல் அவளுக்கு மூச்சுக்காற்றாக இருந்து இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இதில் வழக்கமான ஒரு நான்சென்ஸ் லவ் ஸ்டோரி இருப்பது போல தோற்றம் காட்டுவது பிரமைதான். அதில் ஏகப்பட்ட பாடுகளும் பெருமூச்சுகளும் இருந்தன.

இதை இயக்கியவர் ஒரு பெண்.

அதைப் போலவே ‘ஹாப்பனிங்’ (Happening (2021), Audrey Diwan) என்கிற படமும் ஒரு பெண் இயக்கியது என்று தனியாக சொல்ல விரும்புகிறேன். அறுபதுகளில் ஒரு பெண் கர்ப்பமடைந்து விடுகிறாள். அக்காலத்தில் அது எப்படிப்பட்ட பொறி என்பது நமக்குத் தெரியுமில்லையா?

ஒரு பெண் படைப்பாளி மிகுந்த முக்கியத்துவம் பெறுவதே சகஜத்துக்கு வந்திராத பார்வைக் கோணங்கள் வழி, அசல் உண்மைகள் வெளிவந்துவிட முடிகிற சாத்தியங்களுக்காக தான். ஒருவர் ஆணா பெண்ணா என்பதில் ஒன்றுமில்லை; ஆனால், சோம்பலான, முன் முடிவுகளாலான, செரிமானங்களில் கவனமில்லாத ஆணை எதிரொலிப்பது என்பது அங்கீகாரத்துக்கு பாட்டு பாடுவது போலாகிறது. அதிலும் அவனுடைய ஈகோவைக் குவிப்பதற்கு பிரயோகம் செய்யப்படுகிற போலியான மீசை முறுக்கல்களை பிரதி செய்வதை எல்லாம் சொல்லப் புகுந்தால் அது வெறும் அந்தோ பரிதாபம் தான். நான் இந்தப் படத்தில் முகத்தின் மீது அடிக்கிற ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையைப் பார்த்தேன். அவள் வழியாக நாம் கடந்து வந்த ஒழுக்கங்களின் விஷப்பற்களை அறிந்துகொள்ள முடிந்தது.

சுற்றி வளைத்து இடியாப்பம் பிழியாத திரைமொழி. கூட கூட நக்கிக் கொண்டே வந்து சப்புக் கொட்டுவதற்கு சாக்லேட் பட்டைகள் இல்லை. இழுத்து பிடுங்கிப் போடப்பட்ட வயிற்றுக்கரு கழிவறையில் வீழுவது விடவும் யாரும் ஒரு முழக்கத்தைக் கண்டுபிடித்து விட முடியாது.

எவ்வளவு அடங்காத கோபம் இருந்தால் இவ்வளவு ஆழ்ந்த பொறுமையுடன் ஒரு படம் வந்திருக்கும் என்று யோசிக்காமல் முடியாது.

இந்தப் பொறுமையை வேறு ஒரு கதையின் வேறு ஒரு தளத்தில் பார்க்க நேர்ந்தது. படத்தின் பெயர், ‘பிரேயர்ஸ் பார் தி ஸ்டோலன்’ (Prayers for the Stolen (2021), Tatiana Huezo). மூன்று பெண்களைப் பற்றியது. சிறுமிகளாக சிரித்தும் களித்தும் ஒன்றாக வளர்ந்தவர்களின் நாட்கள் ஏதோ மிருகங்களின் கண்காணிப்பில் இருக்கின்றன. பொத்தி, பொத்தி காப்பாற்றிய கனவுகளை சொடக்கு போடுகிற நேரத்தில் மிதித்துப் போட்டு செல்கிறார்கள் அவர்கள் என்று எப்போதும் இருக்கிற அவர்கள்.

நம்மை கொதிக்க வைப்பதற்கு பதில் அவர்கள் நமது துயரார்ந்த மௌனத்தை பதிலாகப் பெறுகிறார்கள். இந்த உலகம் யாருடையதாயிருக்கட்டும்; யாருடைய அதிகாரத்தின் கீழோ வாழ்வை உருட்டுவதாக இருக்கட்டும்; அநீதிகளுக்கு ஒரு முகம் உண்டு. அதை எவ்வளவு இயலாமையுடன் நேர்கொண்டாலும் அதை முழுவதுமாக உள்வாங்கிப் பயணிப்பதில் நமக்குள்ளே இருக்கிற ஒருவன் மெல்ல திடம் எட்டுகிறான். இதற்கு அப்பால் அவன் நிலத்தை விட்டே அகன்று போக வேண்டியிருந்தாலும் உள்ளின் உள்ளே ஒரு தீ கனல் குறையாமல் காப்பாற்றப்படும் என்கிற உண்மை ஒரு கோணத்தில் உலகின் வரலாறு அல்லவா?

கடந்து முடிந்த ஒன்றிரண்டு வருடங்களில் பல நூறு படங்கள் வெளியாகி இருக்கலாம். அதில் சில படங்களை பொறுக்கிக்கொண்டு உண்மையை அடைந்துவிட்டதாக நான் மனப்பால் குடிக்கவில்லை. இவை யாவும் ஒரு பிரமை போலும் முடிந்து போகலாம். ஆனால், இன்றைய சினிமாக்களை அறியும் ஒரு தொடக்கம் இதில் இருக்கலாம் என்பது எனது நம்பிக்கை.

‘லிட்டில் உமன்’ (Little Women (2019), Greta Gerwig) போன்ற படமும் தான் கொண்ட சரளத்தினால் குறிப்பிடத்தக்கது.

மேலும் கொஞ்சம் முயற்சிகள் செய்து அடுத்த கட்டத்துக்கும் போக வேண்டும்.

மணி எம் கே மணி <mkmani1964@gmail.com>

mani m.k. mani

Amrutha

Related post