செத்தால்தானே சுடுகாடு தெரியும் – ராஜ்ஜா

 செத்தால்தானே சுடுகாடு தெரியும் – ராஜ்ஜா

மேரி எலிஸபெத் ஃபிரை

‘இன்று இவர், நாளை நீங்கள்’ என்று சொல்லாமல் சொல்லும் சுடுகாடு. இங்கு வந்து செல்வோரின் முகங்களைப் பார்க்க வேண்டுமே. ஈ கூட ஆடாது, கொசுவும்தான். அவ்வளவு பரிதாபமாக இருக்கும். சுடுகாடு என்பது தன்னை அறியும் இடமாக இருக்கும்.

சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டு சுடுகாட்டுக்குள் செல்பவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்டிருக்கிறீர்களா? நான் கேட்டிருக்கிறேன். கேட்க முடியாத தருணம் ஒரு நாள் வரும். வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் பூமி தாங்குமா? இப்போதே பாரம் தாங்காமல் பூமி விழி பிதுங்கிப் போய் உருண்டு கொண்டிருக்கிறது.

மேல் உலகம் நாலு பேருக்கு விசா அனுப்பினால், கீழ் உலகம் நாற்பது பேருக்கு பாஸ்போர்ட் கொடுத்து விடுகிறது. பூமிக்கு பாரம் ஏறிக்கொண்டு போகாமல் என்ன செய்யும்?

புராண கால கிரேக்க நாட்டில் அட்லாஸ் என்று ஒரு சக்திமான் இருந்தார். அவருக்கு வேறு பெயரும் உண்டு. அதுவே ஹெர்குலிஸ். பூலோகத்தையே தன் தோளின் மீது சுமந்து திரிந்தவர் அவர். அது புராண காலம். இப்போதோ கலிகாலம். ஹெர்குலிஸை எங்கு போய் தேடுவது? அப்படியே தேடி கண்டுபிடித்தாலும் பூமியைத் தாங்கும் பலம் இருக்குமா அவருக்கு? சந்தேகம்தான்.

பாரதியார் வாழ்ந்த காலத்திலே ஜனத்தொகை கணக்கு கொடுத்திருக்கிறார். ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்று இந்தியத் தாயை பாடிச் சென்றிருக்கிறார். அவர் மரித்து ஒரு நூற்றாண்டு தான் ஓடியிருக்கிறது. நூறு கோடி ஜனத்தொகை எகிறிவிட்டது. இந்த காலத்திலும் இருபத்து ஏழு பிள்ளைகள் பெற்ற தாய் இருக்கத்தானே செய்கிறாள். தாய் மீது தந்தைக்கு அவ்வளவு கொள்ளைப் பிரியம்.

மக்கள் எல்லோரும் விரும்புவது மரணமில்லா பெருவாழ்வு வாழத்தான். ரோமாபுரி நாட்டிலே சிபில் என்றொரு பெண் இருந்தாள். தீர்க்கதரிசி. நாஸ்ட்ரோடேமஸ் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். பின்னால் நடக்கப் போவதையெல்லாம் முன்னால் தெரிந்துகொள்ளும் கலையில் அவளுக்கு நிகர் அவளே என்றாகிப் போனதாலே, படைத்தவர் அவளுக்கு ஏதாவது வரம் கொடுக்கலாம் என்று நினைத்து, “சிபில்! என்ன வேண்டும் கேள்”, என்றார். அந்தப் பாவி மகளோ, ‘நான் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும்” என்று கேட்டுவிட்டாள். வரம் கொடுக்க வந்தவரும், “இதானே! உன் பெயரையே உயிர் வாழ்பவரின் பட்டியலில் இருந்தே எடுத்துவிடுகிறேன். வாழ்ந்து அனுபவி,” என்று சொல்லிவிட்டு புஷ்பக விமானம் ஏறிப் போய்விட்டார்.

மரணமில்லா பெருவாழ்வு தனக்குக் கிடைத்துவிட்டதை நினைத்து பெருமிதமடைந்த சிபில் மற்றவர்களுக்கு ஏற்படும் விநோத மரணங்களைப் பார்த்து ரசித்தாள். எதுவுமே தனக்கு நடக்காதவரை வேடிக்கைதானே. அவளை மரணம்தான் நெருங்கவில்லையே தவிர, நரை, திரை, மூப்பு எல்லாமும் ஒன்று ஒன்றாக நெருங்கி வயோதிக உருவத்தை நூறு வயதைக் கூட தாண்டாத பருவத்திலே கொடுத்துவிட்டது. உடல் நொந்து போனது. மனமோ வெந்து போனது. ஆண்டுகள் கூடக்கூட உடல் சிறுத்துப்போனது.

கால்களை நீட்ட முடியவில்லை. கைகளை மடக்க முடியவில்லை. மடக்கினால் நீட்ட முடியவில்லை, நீட்டினால் மடக்க முடியவில்லை. அடச்சீ! இதெல்லாம் வாழ்க்கையா? ரத்த ஓட்டம் சீராக இருக்கும் வரைதான் வாழலாம். ரத்தம் சுண்டச் சுண்ட… வந்த இடமே போன இடமாகிப் போக வேண்டும். இல்லையென்றால் சிபிலின் கதிதான். அவளது இயலாமையைக் கண்டு, பலர், “என்ன வேண்டும்?” என்று உதவி செய்யும் நோக்கோடு கேட்க, சிபிலோ எப்போதுமே ஒரே பதிலைத்தான் சொன்னாள்: “நான் சாக வேண்டும்.”

சிபில் இன்னும் சாகமுடியாமல் பல சிரமங்களுக்கு ஆளாகிக் கிடக்கிறாள் என்றுதான் ரோமாபுரி மக்கள் நம்புகிறார்கள். இன்றும் அவளைப் பற்றிப் பேசத்தான் செய்கிறோம். உலக இலக்கியத்தில் அழியாப் புகழை பெற்றுவிட்டாள் அல்லவா! அவளை புகழின் உச்சாணிக் கிளையில் உட்காரவைத்து அழகு பார்த்தவர், பெட்ரோனியஸ் என்ற லத்தீன் மொழி எழுத்தாளர்தான். இவர் நீரோ மன்னரின் அரசவைக் கவிஞர். இவர் எழுதிய ‘சாட்டிரிக்கன்’ என்ற புத்தகம் சிபிலைப் பற்றி விலாவாரியாகச் சொல்கிறது.

சிபில் ஒருவகையில் கொடுத்து வைத்த பெண்மணிதான். மெத்தூஸலா என்பவர் 969 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகச் சொல்கிறது விவிலியம். சுக்கில உடலைவிட்டுப் பிரிந்து சூட்சும உடம்பில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்போரும் உள்ளனர். ராமலிங்க சுவாமிகளும் மற்றும் பல சித்தர்களும் சிறந்த எடுத்துக்காட்டு.

இக்கருத்தை மிக அழகாகவும் தெள்ளத் தெளிவாகவும் சொல்கிறது ஒரு கவிதை. இதை எழுதியவர் மேரி எலிஸபெத் ஃபிரை (1905-2004) என்கிற அமெரிக்க கவிஞர். வாழ்க்கையில் எழுதியது ஒரே ஒரு கவிதைதான். அந்த ஒன்றே ஒன்றுதான் அவருக்கு மரணமில்லாப் பெருவாழ்வை கொடுத்துவிட்டது. இந்த அம்மையாரும் தனது 99ஆவது வயதில்தான் காலமானார்.

 

னது மூன்றாவது வயதிலேயே பெற்றோரை இழந்த மேரி எலிஸபெத் பூ விற்று வாழ்க்கையை நகர்த்தி, பின்னர் ஃபிரை என்பவரை மணமுடித்து குடும்பஸ்தியாகிப் போனார். குடும்பத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்திய இந்தப் பெண் கவிதை எழுத வேண்டும் என்று நினைத்தது கூட கிடையாதாம்.

இருந்தும் ‘ஆகச் சிறந்த கவிதையின் பிறப்பிடமே சோகமயமான சூழ்நிலைதான்’ என்று ரொமாண்டிக் கவி ஷெல்லி சொன்னதைப் போல, தான் குடும்பத்தில் ஒருத்தியாகிப் போன மார்கரெட் ஷ்வார்ஸ்கோஃப் என்ற ஜெர்மனிப் பெண்ணின் உள்ளார்ந்த சோகம் மேரியை வாட்டி எடுத்திருக்கிறது.

தாய் ஜெர்மனி நாட்டில் படுத்த படுக்கையாய்க் கிடக்க, அவள் இறந்து போவதற்கு முன் ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்ற தனது அவாவை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்று மார்கரெட் புலம்பிக் கிடக்கிறாள். ஜெர்மனிக்கு போனால் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்ற நிலை. யூதர் இனத்தைச் சார்ந்தவளாயிற்றே அவள். ஹிட்லரின் ஏகாதிபத்தியம் அவளை வரவேற்குமா?

‘சோகம் என்றுமே தனியே வராது; அது தன் படைக்கு தலைமை தாங்கிக் கொண்டுதான் வரும்’ என்று ஷேக்ஸ்பியர் சொல்லி வைத்ததைப் போல, தாய் இறந்துவிட்டாள் என்ற செய்தி சில தினங்களில் வந்து சேர, கடைசி காலத்தில் கூட தன் தாயோடு இருந்து அவளுக்கு பணிவிடை செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு, அவள் உடலின் அருகில் இருந்து கொண்டு ஒரு துளி கண்ணீரைக் கூட காணிக்கையாக்க முடியவில்லையே என்ற துன்பமும் கைகோர்த்துக் கொண்டது. மனபாரம் தாங்காமல் மேரியிடம் சொல்ல, மேரி உடனே கையில் கிடைத்த காகிதப் பையின் மீது மார்கரெட் தன் மீது இறக்கி வைத்த மனபாரத்தை ஒரு பேனாவின் துணை கொண்டு இறக்கி வைத்தாளாம்.

நிலையற்ற வாழக்கையையும் நிலையில்லா மரணத்தையும் இணைத்து எழுதப்பட்ட மேரி எலிஸபெத்தின் கவிதை எந்த பத்திரிகைக்கும் அனுப்பப்படாததால் அது பிரசுரிக்கப் படாமல் போயிற்று. இருந்தும் பல நண்பர்களும் உறவினர்களும் படித்து ரசித்துப் பாராட்டப்பட்ட அக்கவிதை, அது எழுதப்பட்டு எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈமச்சடங்கு செய்யும் போது உரக்கப் படிக்கப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. பல கல்லறைகளில் வாசகமாகவும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

 

க்கவிதை புகழ் பெற்றதற்குக் காரணம் சோகத்தால் பாரமாகிப் போன மனதிற்கு ஆறதல் கூறும் வகையிலே இருப்பதால்தான். அதனால் தான் இன்று காடு கடந்து, கடல் கடந்து, மலை கடந்து பல்வேறு நாடுகளுக்கு கண்ணீர் துடைக்கும் வகையிலே போஸ்ட் கார்டுகளிலே அச்சேற்றி அனுப்பப்படுகிறது. ஆக எழுதியவரும், எழுதப்பட்டவரும் மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதோ மேரி எலிஸபெத் ஃபிரையின் ஆங்கிலக் கவிதை… (என் மொழியாக்கத்தில்}

என் கல்லறை முன் நின்றால் அழாதே.
நான் தான் அங்கே இல்லையே.
நித்திரை கொள்ளவும் இல்லையே.
வீசும் ஆயிரம் தென்றலிலும் நான்…
பனிமலை மீது கண்ணைப் பறிக்கும் வைர ஒளியிலும் நான்…
முற்றிய கதிரின் மீது வீசும் கதிரவனிலும் நான்.
இலையுதிர் கால மென்மழையிலும் நான்.
அதிகாலை நிசப்தத்தில் நீ கண் திறக்கும் போது
சிறகடித்து மேலெழுப்பி வட்டமிட்டுச் செல்லும்
இறக்கைகளின் ஓசையிலும் நான்.
இரவில் ஒளி பரப்பும் விண் மீன்களிலும் நான்.
என் கல்லறை முன் நின்றால், அழவே அழாதே.
நான் அங்கு இல்லை
நான் தான் மரணிக்கவே இல்லையே.

ராஜ்ஜா <rajbusybee@gmail.com>

Rajja

 

Amrutha

Related post