வரலற்றுப் பொய்கள் – இந்திரா பார்த்தசாரதி

 வரலற்றுப் பொய்கள் – இந்திரா பார்த்தசாரதி

திராவிடம்’ என்பது ஓர் இனத்தைக் குறிக்கும் சொல்லா மொழியை உணர்த்தும் சொல்லா? ‘திராமிடோயுபனிஷத்’ என்று ‘திருவாய்மொழியை’ வைணவ ஆச்சார்யர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் குறிப்பிட்டபோது, அதற்குத் ‘தமிழ் உபநிஷதம்’ என்றுதானே பொருள்? இதில் இனம் எங்கிருந்து வந்தது? திருவாய்மொழிக்கு ‘திராவிட வேதம்’ என்று ஏன் பெயர்?

‘பெருந்தமிழன் யான்’ என்று முதல் மூன்று ஆழ்வர்களில் ஒருவர் தம்மைச் சித்திரித்துக் கொள்ளுகிறாரே யன்றி, ‘பெரும் திராவிடன் யான்’ என்று சொல்லவில்லை. ‘நல்ல தமிழ் என்னுள் விளைத்தாய், கற்ற மொழி ஆகிக் கலந்து’ என்கிறார் திருமழிசை. இங்குக் கற்ற மொழி, ‘சம்ஸ்கிருதம்’.

பிரித்தாளும் சூழ்ச்சியிலே வல்லவர்களான ஆங்கில ஆட்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் உதவியுடன், ஆரிய இனம் என்றும் திராவிட இனம் என்று பிரித்ததே அவர்களுடைய அரசியல் சாணக்கியம். அப்பொழுதே மாக்ஸ்முல்லர் இந்த பாகுபாட்டை வன்மையாக மறுத்தார். ‘திராவிடம்’ என்பது மொழி பற்றியதே தவிர, இனம் பற்றியதன்று என்று திட்ட வட்டமாக வரையறுத்தார்.

சிலப்பதிகாரத்தில் சேர செங்குட்டுவன், வட நாட்டு மன்னர்களை ‘வட ஆரியர்’ என்று குறிப்பிடும்போது, ‘சம்ஸ்கிருதச் சார்பு கொண்ட மொழிகள் பேசும் வட நாட்டு மன்னர்கள்’ என்று தான் குறிப்பிடுகிறான். அதே சமயத்தில். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரையும் ‘தமிழ்’ மன்னர்கள் என்று குறிப்பிடுகிறான்; அதாவது, தமிழ் பேசும் மன்னர்கள் என்று.

சங்க இலக்கியங்களில், ‘வட ஆரியர்’ எனும்போது மொழியைச் சார்ந்துதான் குறிப்பிடப்படுகிறார்கள் இனம் பற்றியில்லை. ‘திராவிடம்’ என்று இனம் பற்றிய சொல்லாட்சி பழம்பெரும் தமிழ் இலக்கியங்களில் எங்குமே இல்லை

‘ஆர்ய’ அல்லது மேல்நாட்டினர் உச்சரிப்பது போல் ‘ஏர்ய’ என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இனத்தைக் குறிக்கும் சொல்லாக Joseph Arthur Gobineau என்பவரால் ஆளப்பட்டது. நார்டிக் இனமாகியாகிய இது தூய்மானதென்றும் வேற்றினக் கலப்பற்றது என்றும் உலகை ஆளப் பிறந்ததென்றும் கூறினார். எப்பொழுதோ இருந்ததாகக் கருதப்படும் ‘அட்லாண்டிஸ்’ நிலப் பிரிவினர் ‘ஏரியர்கள்’ என்றும், அவர்கள் தாம் பிற்காலத்தில் ஈரான் வழியாகச் சென்று இந்திய – ஐரோப்பிய வேத காலத்து நாகரிகத்தை உருவாக்கினார்கள் என்றும், எந்தவிதமான விஞ்ஞானப் பூர்வமான ஆதாரமுமின்றி ஒரு புதுக் கருத்து ஐரோப்பாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவத் தொடங்கியது. இங்கிலாந்தில் வசித்த Houston Stewart Chamberlain போன்ற ஜெர்மானியர்கள் இந்தக் கொள்கைக்கு வலு சேர்த்தார்கள். இந்த ‘ஏரிய’ (ஆர்ய) இன மேலாண்மை ஹிட்லரை மிகவும் கவர்ந்து, அவன் ஆரிய இனமாகிய ஜெர்மானியர்கள்தாம் உலகை ஆளப் பிறந்தவர்கள் என்று கூறி நாஸிஸக் கட்சியைத் தொடங்கினான்.

வின்ஸன் ஸ்மித் போன்ற ஆங்கில வரலற்றாசிரியர்கள், இந்த இன வாதத்தை, அரசியல் சௌகர்யங்களுக்காக, இந்தியாவில் ‘ஆரிய’ – ‘திராவிட’ இன வேறுபாட்டை உருவாக்கினார்கள். வட இந்தியாவை ஹிந்து – முஸ்லீம் என்று பிரித்து மக்களுக்குள் மனக் கசப்பை வளர்த்தது போல், தென்னிந்தியாவில், ஹிந்து – முஸ்லீம் வேறுபாட்டை உருவாக்க முடியவில்லை என்ற நிலையில், தென்னாட்டுப் பிராம்மணர்கள் ஆரியர்களென்றும் பிராமணர் அல்லாதார் திராவிடர்கள் என்றும் ஒரு புது வரலாற்றை தோற்றுவித்தனர் காலனிய ஆட்சியைச் சார்ந்த வரலாற்றாசிரியர்கள்.

ஆங்கில ஆட்சியின்போது, சமூக ஏணியில் உச்சப் படியில் இருந்த தமிழ் நாட்டு பிராமணர்கள், கல்விப் பாரம்பரிய அனுகூலத்தினால், மெக்காலேயின் புதுத் திட்டத்தின்படி, அறிமுகமான ஆங்கிலம் கற்று, ஆட்சி அமைப்பில் பெரும் பங்குப் பெற்றார்கள். கல்விப் பாரம்பரியம் இல்லாதவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போயிற்று. பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும் இதனால் உண்டாகி,  விரிந்துகொண்டு போனச் சமூக இடைவெளிக்கு முக்கிய காரணமாக, ஆங்கில வலாற்றாசிரியர்களால் பிரசாரம் செய்யப்பட்ட இந்த ஆரிய – திராவிட இனக் கோட்பாடு பெரிதும் உதவியது.

ஆரிய மொழியாகிய சம்ஸ்கிருதச் சார்பினர் பிராம்மணர்கள் என்றும் பிராம்மணர் அல்லாதார் திராவிட மொழியாகிய தமிழைச் சார்ந்தவர்கள் என்றம் சமூகப் பொதுத் தளத்தில் பரவலான கருத்து உருவாயிற்று. அந்தக் காலக் கல்வித் திட்டத்தின்படி, ஏழாம் வகுப்பில் ஒரு மாணவன் தமிழ் அல்லது சமஸ்கிருத்ததை விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும். பெரும்பான்மையான பிராம்மணச் சிறுவர்கள், பெற்றோரின் (தந்தை என்று படியுங்கள். அம்மாவுக்குப் பெண் என்பதால் கருத்துச் சுதந்திரம் கிடையாது) விருப்பப்படி சம்ஸ்கிருத்த்தைத் தேர்ந்தெடுப்பார்கள். மற்றவர்கள் தமிழ். ஆரிய – திராவிட இனக் கோட்பாடு இதனாலும் வலுப்பெற்றது.

ஹிட்லர் தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொண்டதால், இரண்டாம் உலகப் போரின்போது அவன் வெற்றிக்காகக் கோயிலில் பிரார்த்தனை செய்த பிராம்மணர்களுமுண்டு என்று சொல்வார்கள்.

இந்தியாவை ‘மானுடவியல் சொர்க்கம்’ (Anthropological Paradise) என்பார் மோலியர் வில்லியம்ஸ். வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே அத்தனை இனக் கலப்பு ஏற்பட்டிருக்கிறது. நெக்ரோட்ஸ், ஆஸ்ட்ரிக்ஸ், மங்க்லாய்ட்ஸ், இந்தோ – ஜெர்மனியன், இந்தோ – இரானியன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். வரலாற்றுக் காலத்துக்கு முன்பு நிகழ்ந்த இத்தனை இனக் கலப்பின் விளைவுதான் இன்றைய இந்திய இனம்.

‘‘சம்ஸ்கிருதம்’ என்றால் ‘செம்மையாக ஆக்கப்பட்ட மொழி’ (Cultivated) என்றுதான் அர்த்தம். அக்காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த அறிஞர்கள் தமக்குள் கருத்துப் பறிமாறிக்கொள்ள உருவாக்கிய மொழிதான், பழைய ரிக் வேத காலத்திய இந்தோ-ஜெர்மானிய மொழி; இந்தியாவில் வழங்கிய பூர்வகுடி மொழிகளோடு இணைந்து, இரண்டறக் கலந்து, பல புதிய வடிவங்களை பெற்று பண்பாட்டுக் கலவையின் குறியீட்டு மொழியாகிவிட்டது அதுதான் சமஸ்கிருதம்’ என்கிறார் பி.டி. ஸ்ரீநிவச அய்யங்கார்.

இந்தியா முழுவதும் வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டு அவற்றில் ஒப்பற்ற நூல்களை இயற்றிய கவிஞர்கள் அனைவருக்கும் சம்ஸ்கிருப் பயிற்சி உண்டு. கம்பன், சம்ஸ்கிருதம் தெரியாமல் இராமாயணம் பாடியிருக்க முடியாது.

பழைய ரிக்வேதக் காலத்திய சமஸ்கிருதம் வேறு, பிறகு இந்தியாவில் வெவ்வேறு இனக் கலப்பினால் உருவான சமஸ்கிருதம் வேறு. பழைய ரிக் வேத காலத்து சமஸ்கிருதத்துக்கும் காளிதாசன் எழுதிய சமஸ்கிருதத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சமஸ்கிருத நாடகங்களில் பிரந்திய பிராகிருத மொழிகளின் வழக்கு அதிகம். ஆனால், சமஸ்கிருதச் சார்புடைய பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடும் பிரகிருதம் பேசினார்கள். இதை பரதர் இயற்றியதாகச் சொல்லப்படும் நாட்டிய சாஸ்திரம் மூலம் அறியலாம். சமஸ்கிருத நாடகங்களில் பயின்று வர வேண்டிய பிராந்திய மொழிகளின் பட்டியலை அவர் விரிவாகத் தருகிறார்.

ஆனால், எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம் மக்கள் பேசிய வழக்காற்று மொழியாக இருந்ததே இல்லை.

இந்திரா பார்த்தசாரதி <parthasarathyindira@gmail.com>

indra parthasarathy

 

Amrutha

Related post