யுத்தத்தின் காயங்களும் அவற்றின் வடுக்களும் – தேவ அபிரா

 யுத்தத்தின் காயங்களும் அவற்றின் வடுக்களும் – தேவ அபிரா

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (சிறுகதைகள்) – இளங்கோ; விலை ரூ. 110; வெளியீடு: கயல் கவின் புக்ஸ்

 

ளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ தொகுப்பில் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. இதில் முதலாவது கதை ‘ஹேமா அக்கா’. இக்கதையின் களம் இந்திய இராணுவ காலம். இக்கதை எனக்கு மிகவும் பிடித்த கதை. இது குறித்து இறுதியாகச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கொட்டியா

ஈழத்தில் இளைஞர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதனில் இருந்து விலகிக் கொண்டிருந்த ஒரு இளைஞன் கொழும்புக்கு இடம்பெயர்கிறான். பின் வெளிநாட்டுக்குப் புலம்பெயர்கிறான். அக்கால இடையில் நிகழ்பவைகள் தொடர்பான கதை இது.

கொழும்பில் தங்கி இருக்கும் போது இராணுவச் சோதனை என்ற பெயரில் சிங்கள இராணுவத்தினன் இளைஞன் மீது மேற்கொண்ட பாலியற் சீண்டல், அவனுக்குத் தன் வயதொத்த சிங்களப் பெண்ணுடன் ஏற்படும் நட்பு, அதன் வழி அவள் மேல் வருகிற பாலியல் ஈர்ப்பு, அவளுடனான பாலியல் துய்ப்பு, குறித்த சிங்களைப் பெண்ணின் இவன் மீதான காதல், இதற்கிடையில் புலிகளின் தற்கொலைப் போராளியாக வருகிற குறித்த இளைஞனின் பால்ய காலச் சக பாடசாலை மாணவியுடன் இவர்கள் இருவருக்கும் எற்படும் தொடர்பு, அதன் வழி ஏற்படுகிற பிரச்சினைகள் எனக்கதை பல்வேறு முனைகளை ஒருங்கிணைக்கிறது.

ஒரு கதை சொல்லப்படும் போது அங்கு பல கதைகள் உருவாகின்றன. கதை சொல்லப்படும் முறையும் அதன் மொழியும் வாசிப்பவரின் உலகத்தில் ஏற்படுத்தும் நுண் தூண்டுதல்கள் தான் இக்கதைகளை உருவாக்குகின்றன.

‘குதிரை’ எனப் பாடசாலைக் காலத்தில் விளிக்கப்பட்ட பெண், தற்கொலைக் குண்டுதாரியாகி வெடித்த பின் அவளுடன் தொடர்புடைய இவர்கள் இருவரும் (இளைஞனும் சிங்கள நண்பியும்) பொலிஸ் மற்றும் இராணுவத்தின் விசாரணை வளையத்துட் கொண்டு வரப்பட்டுத் தேடப்படுகிறார்கள். அச்சந்தர்ப்பத்தில் இவனை வேறு ஒரு இடத்தில் வைத்துக் காப்பாற்றும் சிங்கள நண்பி, தான் பொலிஸ் விசாரணைக்குள் அகப்பட்டு விடுகிறாள். எல்லாவிதமான கடுமையான விசாரணைகளையும் எதிர்கொண்ட போதும் அவள் இவனைக் காட்டிக் கொடுக்கவில்லை. இவனைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்காக அவள் தன் இனத்துக்கே எதிராக உளவு வேலையில் ஈடுபடுகிறாள்.

இக்கதையினுள்ளிருந்து வருகிற முக்கியமான ஒரு விடையம் இது. ஆனால், கதையின் ஓட்டம் இவன் எண்ணங்களையும் பாடுகளையும் மட்டும் முதன்மைப்படுத்துவதாக இருக்கிறது.

இன முரண்பாடும் எல்லா அதிகாரங்களினதும் (அரசு மற்றும் போராளிகள்) மானிட விழுமியங்களுக்கு எதிரான செயற்பாடுகளும் கூர்மை அடைத்து இருந்த ஒரு கால கட்டத்தில், சிங்களப் பெண் ஒருத்தி தான் கொண்ட காதலுக்காக தனது தமிழ்க் காதலனுக்காகச் செய்தவைகள் அவளின் காதலின் ஆன்ம ஒளிர்வுகளாகும்.

‘குதிரை’ என விளிக்கப்பட்ட, பாடசாலைக் காலத்தில் தலைசிறந்த ஓட்டப் பந்தைய வீராங்கனையாக இருந்த ஒருத்தி, எவ்வாறு தற்கொலைக் குண்டுதாரியானாள் என்பது இக்கதையில் ஆழ் நிலையில் வைத்து அணுகப்படவில்லை. குதிரை இறந்த பின்னர் அவனின் சிங்கள நண்பியைப் பொலீஸ் விசாரணைக்கு உட்படுத்துகிறது. விசாரணையின் பின் அவளை நிபந்தனையுடன் வெளியே விடுகிறது. அதன் கருத்து அவள் அவர்களின் கண்காணிப்பு வளையத்துள் இருக்கிறாள் என்பதாகும் . இந்நிலையிலேயே அவள் இரத்மலானை விமான நிலையம் தொடர்பில் தகவல்களைத் தனது மாமா மூலம் சேகரித்துப் புலிகளுக்கு வழங்குகிறாள். தன் காதலனுக்காக அவள் எப்பேர்ப்பட்ட ஆபத்தான செயலை செய்திருக்கிறாள் என்பதை அவன் அறிகின்ற வேளையில் அவனின் வெளிப்பாடு மேலோட்டமானதாகவே இருக்கிறது.

அவள் பொலீசால் விசாரிக்கப்பட்டமை கீழ் வருமாறு விபரிக்கப்படுகிறது:

விசாரணைக்கென்று இரண்டு நாள் தடுப்புக் காவலில் வைத்து அவளை ‘எல்லா விதமாயும்’ விசாரித்திருக்கிறார்கள்.

அவளை வெளிநாட்டுக்கு அழைத்தமைக்கான காரணத்தை சொல்லும் பந்தி கீழ் வருமாறு அமைகிறது:

முதல் வெளிநாட்டு முயற்சியின் போது அவளைக் கைகழுவி விட்டுப்போக வேண்டும் என்றிருந்தவனுக்கு, அவள் பிறகு செய்த உதவிகள் எல்லாம் அவன் மனதை மாற்றிவிட்டன. இன்னும் திருத்தமாய்த் தமிழ் செண்டிமெண்டலில் (மென் நய உணர்வில்) சொல்ல வேண்டும் என்றால் இப்போதைய வாழ்வு அவள் இட்ட பிச்சைதான்.

மேற்குறித்த இரு உதாரணங்களும் குறித்த இளைஞனின் மன ஆழத்தைச் சொல்லப் போதுமானவை. சுயநலம் கொண்ட, ஆழமான காதலுணர்வற்ற ஒரு இளைஞன் பாத்திரத்தை உருவாக்குவதில் இக்கதை வெற்றி பெறுகிறது. எதிர் மறையான பாத்திர உருவாக்கம் கதைகளில் கையாளப்படுவதன் மூலம் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்க முடியும். இது அதனில் முழுமையான வெற்றியைப் பெறாவிடினும் முக்கியமான கதை

ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில பழுப்பு இலைகளும்

இக்கதை புலம்பெயர்ந்த சூழலில் பதின்ம வயதுகளில் இருக்கிற தமிழ் இளைஞர்களின் உலகத்தில் நிகழ்பவைகளைக் கூறுகிறது. இவ்விளைஞர்கள் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கிற உலகத்துள் வாழ்பவர்கள். குழு நிலைப்பட்ட சண்டித்தனம், அவற்றுக்கிடையிலான மோதல்கள், குழு உறுப்பினர்களின் இளம் பெண்களுடனான காதல்கள், அதனால் உண்டாகும் போட்டி பொறாமைகள், அவர்கள் மேற்கொள்கிற வன்முறை நிறைந்த காமம், மது மற்றும் போதை மருந்துப் பாவனைகள், சட்டத்திற்குப் புறம்பான நடத்தைகள் எனப் பல்வேறு பிரச்சினைகளை எம் முன் வைக்கிற கதை இது.

இக்கதையின் முதற்பகுதி, மேற்குறித்த உலகத்துக்குள் அகப்பட்டு, அதில் இருந்து வெளிவராமலேயே குடி மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இறந்துபோன ஒருவனைப் பற்றியது. இரண்டாம் பகுதி அத்தகைய உலகமொன்றுக்குள் இருந்து வாசிப்பினாலும் அவனுக்கு கிடைத்த காதலியினாலும் மீண்டு வருகிற இறந்து போனவனின் நண்பனைப் பற்றியதாகவும் உள்ளது. முதலாமவன் காதலியின் துரோகம் அல்லது சீண்டலினால் கோபமுற்றுக் காதலியைச் சார்ந்தவர்களைத் தாக்குகிறான். அந்த வன்முறைச் சம்பவம் அவனை சிறைக்கு செல்ல வைக்கிறது. இரண்டாமவன், தனது காதலியைத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கும் அவளது மாற்றுத் தந்தையைச் தாக்கித் தண்டிக்க முற்பட்டு, அதன் விளைவாகச் சிறைக்குப் போகிறான்.

முதலாமவனுக்கு முதலில் நல்ல காதலி கிடைக்கவில்லை. சிறையில் இருந்து வந்த பின்னர் அவனை உண்மையிலும் விரும்பிய நல்ல காதலி கிடைத்த போதும் அவனது மது மற்றும் சிறையில் பழகிய போதைப்பொருட் பாவனை காரணாக அவளின் பெறுமதியை உணர முடியவில்லை. பிற்பாடு இறந்தும் போகிறான். இரண்டாமவனுக்குக் இடைக்கும் காதலி ஸ்பானிஷ் இனத்தவள். அன்பானவள். நிறையப் புத்தகங்கள் வாசிப்பவள். அவள், அவனைப் புத்தகங்களின் உலகங்களுக்கு அழைப்பவளாக இருக்கிறாள். முதலில் வாசிப்பில் அக்கறையற்று இருந்தவன் பின்னர் சிறையில் இருக்கும் போது சிறையின் கொடூரமான கலாசாரத்தில் இருந்து தப்பிக்கப் புத்தகங்களின் உலகத்துள் நுழைகிறான்.

பெருமளவுக்கு நேர்கோட்டில் செல்கிற கதை இது. இங்கே சொல்லப்படாத கதை என்று எதுவும் இல்லை. கனேடிய ஸ்பானிய மற்றும் தமிழ்க் கலாசார உணர்வுகளின் தளங்கள் கொண்ட இக்கதையைப் போன்ற கதைகள் பன்மைத்துவக் கலாசாரம் இல்லாத நாடுகளிலும் நிகழவே செய்கின்றன.

தாராளவாத கலாசாரம், வளரிளம் பருவத்தின் கட்டுக்கடங்காமை, அடையாளச் சிக்கல்கள், சீரழிவுப் பண்பாடு போன்றவை உலகம் முழுவதிலும் இத்தகைய கதைகளை உருவாக்குகின்றன.

மூன்று தீவுகள்

கியூபாவுக்குக்குக் கனடாவில் இருந்து விடுமுறைக்கு வருகிற இளைஞன் ஒருவனுக்கு அங்கே விடுமுறையைக் கழிக்க வந்த ஒருத்தியுடன் ஏற்பட்ட உறவைச் சொல்கிறது, இக்கதை. அவளின் பூர்வீகம் பண்டைய இலங்கை. அப்பெண்ணுடன் ஏற்படுகிற உறவு, உடல் சார்ந்த தற்காலிக உறவாக முடிகிறது.

விடுமுறைக் காலங்களில் சில நாட்கள் மட்டுமே நீடிக்கிற காதல் – காம உறவுகள் தமிழ்ச் சூழலுக்கு புதியவை. மரபார்ந்த சிந்தனை வழி காதலையும் காமத்தையும் புரிந்து வைத்திருக்கும் தமிழ் வாசகர்களுக்கு இக்கதை சிந்தனைக்கான களத்தைத் திறந்து வைக்கிறது.

மனதைப் புத்துயிர்ப்பாக்கிக் கொள்வதற்குக் கட்டுப்பாடுகள் அற்ற, இருவழிச் சம்மதம் கொண்ட காமமும் அவசியம் என்ற பார்வையை இக்கதை உள்ளீடாக முன்வைக்கிறது. மறுபுறத்தில் இக்கதையின் மையச்சரடாக இருந்திருக்கக் கூடியவற்றை இக்கதை தவறவிட்டு விடுகிறது. அது தவற விட்ட விடையங்கள் கதையின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வருகின்றன. ஆரம்பத்தில்

இனியும் இவர்களின் தழுவல்களின் மொழியைக் கேட்டுக் கொண்டிருந்தால் எதையெல்லாம் மறக்க வேண்டும் என்று கியூபாவுக்கு வந்தேனோ அதை எல்லாம் மீள நினைக்கும்படி ஆகிவிடும் என்ற அச்சத்தில் 24 மணிநேரமும் திறந்து இருக்கும் பாரை நோக்கி நடக்கத் தொடங்கினேன்

என்பது குறித்த இளைஞனின் கூற்றாக வருகிறது.

பிற்பாடு கதையின் இறுதியில் குறித்த பெண் பின்வருமாறு கூறுவாள்:

முதல் உன் தவறுகளை ஒப்புக்கொள் அதன் பிறகுதான் உன்னால் இன்னும் பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்.

இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் தான் இங்கு கூறப்படாத கதை இருக்கிறது. இழந்த உறவின் துயரத்தைக் கரைக்கவே கியூபா வரும் அவன் அது குறித்துப் பேசுவதில்லை. அக்கதையைக் கிளர்த்துவதை விடுத்து, அப்பெண்ணின் பூர்வீகத்தைத் தேடிக் கதை தேவை இல்லாமல் உழல்கிறது.

உடல், உள்ளம், காதல், காமம் என்ற நான்கு முனைகளையும் இணைக்கும் சரடுகளாகப் பின்னிப் பிணையும் உணர்வுக் கொடியாகப் படரவேண்டிய மொழி பல இடங்களில் அங்கதமாக அல்லது மேலோட்டமான பகிடியாகக் குறுகி விடுகிறது.

வார்த்தைகளின் காத்திருப்பு

வாழ்வு பற்றிய ஆன்ம விசாரத்தை வெளிப்படுத்தும் பத்தியாகவே இக்கதையைப் பார்க்கிறேன். மனிதர்களின் அக உலகம் புற உலகுடன் கொள்ளும் முரண்பாடுகளை விளங்கிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இப்பத்தி அமைகிறது.

ஒருவருடைய ஆன்ம விசாரத்தை இன்னொருவருக்குத் தொற்ற வைப்பது என்பது கடினமான காரியம். உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஆன்ம விசாரத்துக்குள் புகாமலேயே வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். ஏனையவர்களுக்கு அவரவர்களுக்கு என்று ஒரு ஆன்ம விசாரம் இருக்கிறது. உலகத்தை எண்ணங்களினதும் உணர்வுகளினதும் திரட்டாக மட்டும் எடுத்துக்கொள்ளும் போதும் உலகத்தைத் தன் சார்ந்து மட்டும் புரிந்துகொள்ள முயலும் போதும் தோன்றுகிற ஆன்ம விசாரம் ஒரு வகையானது. பிரிவு, இழப்பு, துரோகம், துன்பம், நோய், மரணம் போன்ற மனித வாழ்வின் சாரங்களின் போது தோன்றுகின்றவை இவ்வகையானவை. பிரபஞ்சம் உயிருள்ள உயிரற்ற பொருள்களினால் ஆனதும் என்றும் அதனைச் சார்ந்தே மனித உயிரின் செயல்கள் அமைக்கின்றன என்றும் புரிந்துகொள்ளும் போது தோன்றும் ஆன்ம விசாரம் இன்னொரு வகையானது. இக்கதைகளுக்கு முடிவில்லை.

மினி

Elango, Sambal Vanathil Maraium Vairavarஇக்கதையின் நாயகனும் அவன் காதலியும் கனடாவில் இருந்து நீண்ட நாட்களின் பின் இலங்கைக்குச் செல்லுகின்றனர். அங்கு போராளிகளின் வாழ்வையும் வன்னிப் பகுதிகளையும் பார்ப்பதற்குச் செல்லும் ஒரு குழுவுடன் இணைந்து கொள்கின்றனர். அப்போது வன்னியில் நிகழ்பவற்றை அங்கதம் நிறைந்த மொழியில் இக்கதை முன்வைக்கிறது.

வன்னியைப் பார்க்கச் சென்ற குழுவில் இருந்த, வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த, தமிழ் சரியாகத் தெரியாத ஒரு தமிழ் இளைஞனின் (விக்கி) நடத்தையிற் சந்தேகம் கொண்டு, அவனைப் புலிகளை உளவு பார்க்க அல்லது அவர்களைக் கொல்ல வந்தவனாகக் கருதி கொள்கிற கதையின் நாயகன் அதனாற் பதட்டம் அடைகிறார். பதட்டம் மனதுள் வளரப் புலிகள் தன்னையும் சந்தேகிக்க அல்லது கைது செய்யக் கூடும் என்ற மனப்பிராந்தியையும் அடைகிறார். இதனால் வன்னியை விட்டு விரைவிலேயே வெளியேறுகிறார். வெளியேறும்பொழுது தான் சந்தேகப்பட்ட இளைஞரைப் பற்றிப் புலிகளைச் சார்ந்த ஒருவருக்குச் சொல்லி விட்டே செல்கிறார். பிற்பாடு குறித்த இளைஞன் தனது பாட்டியின் பூர்வீகத்தைத் தேடி வந்தவன் என்பதை அறிந்துகொள்கிறார்.

இக்கதையின் பலம் அதன் அங்கத மொழி.

ஆனாலும் இருபக்க இராணுவச் சோதனைகளைத் தாண்டி விக்கி, தனது பாட்டி தாத்தாவைக் கொல்லப் பயன்படுத்திய கத்தியை கொண்டு வந்திருந்தமை நம்பகத் தன்மையற்றது. அல்லது நம்பும்படி கதை சொல்லப்படவில்லை. தனது பாட்டியின் பூர்வீகத்தை அறிவதற்கு இவ்வளவு பூடகமாக அவ்விளைஞன் நடந்து கொண்டிருக்கத் தேவையும் இல்லை.

இவை கதையின் பலவீனங்கள். விக்கி இல்லாத சமயம் அவன் பையைத் திறந்து பார்ப்பது என்பது உளவுதான். ஆனால், போராட்ட அல்லது இராணுவ வாழ்வில் செய்யப்படுகிற தொழில் முறை உளவு என்பது வேறு பரிமாணத்தில் அமைவது. அதன் கனதியும் இதன் கனதியும் வேறு. தன்னை உளவாளியின் பரிமாணத்தில் வைத்துக்கொள்ளும் கதாநாயகனின் நினைப்பு கதைக்கு வலிமை சேர்ப்பதல்ல.

யாழ்ப்பாணியின் சோக வாக்கு மூலம்

இக் கதை இதய ஆழத்துட் சென்று அமர்ந்து விடுகிற கதை அல்ல. ஆனால், புலம்பெயர்ந்த வாழ்வின் பல குறுக்குவெட்டுக்களைக் காட்டுகிற கதை.

கனடாப் பல்கலைக் கழகத்தில் உள்ள இடங்களுக்கு ஊரில் உள்ள இடங்களின் பெயரை வைத்தல், ஊரில் இருந்த வாழ்க்கை முறையை இங்கேயும் பேண முயல்தல், பெண்களை ஆவலோடு பார்த்தல், சாதி பார்த்தல் போன்ற பல பண்புகளை இக்கதை எள்ளலுடன் சுட்டுகிறது.

புலம் பெயர்வானது பல்வேறு பண்பாட்டுக் கோலங்களையும் மனவிரிவுகளையும் எங்கள் முன் வைக்கிறது. அவற்றை அறிந்து உணர்வதனூடாகக் தன்னை விசாலிக்கக் கூடிய சாத்தியம் புலம்பெயர்ந்தவர்களுக்கு அமைகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் இச்சாத்தியத்தைப் பயன்படுத்திக்கொண்டவர்களாக இல்லை. குறிப்பாக ஆண் – பெண் உறவு நிலையில் வரும் பிரச்சினைகளைத் தமிழ் ஆண்கள் யாழ்ப்பாணீய அல்லது தமிழ் ஆண் மன நிலையுடன் அணுகுவதை இக்கதை கிண்டல் செய்கிறது.

சிறகு வளர்ந்த குரல்களுடன் பறந்துபோனவன்

இந்திய இராணுவம் இலங்கைக்குள் நுழைந்து புரிந்த கொலைகளின் பாதிப்பைச் சொல்லும் கதை. தனது கண் முன்னாலேயே இந்திய ராணுவத்தினால் தனது தாய் சுட்டுக் கொல்லப்படுவதைப் பார்த்த சிறுவனுள் ஏற்படும் காயங்கள், பிற்பாடு அவனது வாழ்வைப் பாதித்து, அவனைத் தற்கொலை வரை இட்டுச் செல்கின்றன.

போருக்குப் பின்னான மனக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படாத மனிதர்கள் இன்னும் எமது சமூகத்தில் உள்ளனர். ஒருவர் சிறு வயதில் அடைந்த ஆழமான மனக்காயம் அவர் வாழ்வின் பல்வேறு நிலைகளுக்குள்ளும் செல்லும் போதும் கூடவே சேர்ந்து செல்கிறது. கதையின் நாயகன் பிறந்து வளர்ந்த இடத்தில் வாழ முடியாமற் புலம்பெயர்கிறான். வேற்றுக் கலாசாரம் வேறுமொழி உருவாக்கும் அன்னியத்துள்ளும் கொல்லப்பட்ட அம்மாவின் குரல் அவனுள் பெருகுகிறது. வேலை செய்கிறான், நண்பி ஒருத்தியைக் கண்டடைகிறான், காதலிக்கிறான் ஆனாலும் எல்லா வாழ்வு நிலைகளுக்குள்ளும் அம்மா கொல்லப் பட்டமையும் அவளின் இன்மையும் அவளுடனான உரையாடலும் அவனைத் தொடர்ந்து வருகின்றன.

அவனது ஆரம்ப காலத்தில் ஊரில் அவனது பாடசாலையின் அதிபராக இருந்த ஒருவர் அவனுக்கு அன்றில் இருந்தே ஆதுரம் காட்டி அன்பு செய்கிற ஒருவராக இருக்கிறார். புலம்பெயர்ந்த பின்னும் அவருடன் தொடர்பில் இருக்கிறான். ஆனால், இவை எதுவும் பலன் அளிக்காமல் கடைசியில் அவன் தன்னைத்தானே எரித்துக்கொள்கிறான்.

இக் கதையில், நாயகனின் அக உலகப் போராட்டம் விபரிக்கப்படுகின்றமை முக்கியமான பண்பாகும். மனக்காயங்கள் தொழில்முறை ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதைச் சொல்லாமல் செல்லும் கதை இது.

துரோகி

இக்கதை, சமூகத்தின் விளிம்பு நிலையை அடைகிற இளைஞர்களைப் பற்றியது. அவ்விளைஞர்கள் சண்டைக் குழுக்களாக மாறி வேறு இனச் சண்டைக் குழுக்களுடன் மோதிக்கொள்வதையும் பின்னர் தமக்குள்ளே மோதிக்கொள்வதையும் இக்கதை காட்சிப்படுத்துகிறது. இக் குழுக்களுக்குள்ளே இருக்கிற உறுப்பினர்களுடைய நடத்தைகள் அவர்கள் தம்மையொத்த இளம் பெண்களின் மீது புரிகிற வன்முறையுள் இருக்கிற காமம், காதல் போன்றவற்றையும் இக்கதை முன்வைக்கிறது..

பனி

புலம்பெயர்ந்தவர்கள் பற்றி இருக்கக்கூடிய மாய விம்பங்களை உடைக்கும் கதை இது.

புலம்பெயர்ந்த ஒருவன் உடலும் உள்ளமும் வலிக்க வேலை செய்து, புலம்பெயர்வதற்குப் பட்ட கடன்களை அடைத்துத் தங்கைமார்களுக்கும் வாழ்க்கை அமைத்துக் கொடுத்து, தான் விரும்பிய பெண்ணத் திருமணம் செய்வதைத் தவிர்த்துப் பேசி நிச்சயிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து, அந்த மணவாழ்க்கையும் முறிந்துவிட, வேலை இழந்து வீடிழந்து விளிம்புநிலை மனிதனாகி வீதியில் வாழ்பவனாகி விடுகிறான். கிட்டத்தட்ட இதனை ஒத்த மனநிலை கொண்ட இன்னொருவன் அவனது நிலையைப் பார்த்துத் தெளிவடைந்து வீடு திரும்பிச் செல்கிறான்.

கள்ளி

சன நெருக்கம் நிறைந்த ஒரு இடத்தில் தனக்குள் நுழைந்த நறு மணத்தை அது யாரில் இருந்து வந்திருக்கும் என யோசித்துத் தேடி அத்தேடலிலேயே ஆழப் புதைந்து விடும் ஒருவன் அவனைப் போலவே வாசத்தைத் தேடும் இன்னொருத்தியைச் சந்திக்கிறான். இங்கே வாசம் அல்லது நறுமணம் என்பது ஒரு குறியீடு. மனதுக்குப் பிடித்தமான நறுமணத்தை கொண்டிருக்கக்கூடிய பெண்ணை அவன் தேடத்தொடங்க வாசம் என்பது இக்கதையில் வேறு பல குறியீடுகளை எடுத்துக்கொள்கிறது. மனதுக்குப் பிடித்தமான பெண், மூளைக்குள் பதிந்து விட்ட இளமைக்கால உணவு, வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்த கடந்த காலம், அது நிகழ்ந்த நிலம், அதில் விளைந்தவைகள் போன்றவற்றைத் தேடுவது நினைப்பது எல்லாமே வாசத்தை தேடுதல் என்பதினூடகக் குறிக்கப்படுகிறது.

அவன் சந்தித்த அப்பெண் தொலைபேசியூடாகப் பாலியற் கிளர்ச்சியை விற்பவளாக இருக்கிறாள். அதன் காரணமாகவே அவள் அவளது குடும்பத்தினால் கௌரவக் கொலை செய்யப்படுகிறாள். அவள் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களின் முன் இவனிடம் அடைக்கலம் கோருகிறள். இவனைப்போலவே அவளும் வாசங்களைத் தொடர்பவளாக இருந்த போதும் அவளின் தொழில் காரணமாகவும் அவனுக்கொரு காதலி இருக்கின்றமையாலும் (அதனால் வரக்கூடிய பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு) அவளுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துவிடுகிறான்.

அருமையான இக்கதையின் பலவீனம் சொல்லாமற் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த கதையில் அதனை விளங்கப்படுத்தும் விதமாகப் பல பகுதிகள் வருகின்றன. அவை கதையின் கனதியைக் குறைத்து விடுகின்றன.

கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்

கனடாவில் இருந்து ஊருக்குத் திரும்பிச் செல்கிற ஒருவன் வவுனியாவில் தனது மச்சாளின் வீட்டில் தங்கிச் செல்கிறான். மச்சாளின் கணவன் சிவா பொட்டம்மனின் உளவுப் பிரிவில் இருந்த முக்கியமான முன்னாள் போராளி. மச்சாளின் வீட்டில் தங்கி நிற்கும் போது கணவாய்க் கறி சாப்பிட்டதால் வயிற்றுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. வைத்தியரிடம் செல்கின்றனர். அப்பொழுது கதைநாயகனின் மச்சாள் அவனுக்கு வைத்தியரின் மகளின் காதல் கதையைச் சொல்கிறாள். வைத்தியர் தனது மகளின் தீராக்காதலை முடித்து வைக்க வேறு இடத்தில் திருமணம் பேசி விடுகிறார். இதனை அறிந்த காதலன் கபிலன் கோபமுற்று கோபிகாவின் கால்களை வெட்டுகிறான். அவளின் தாய்க்கு கைகளில் வெட்டு. கபிலன் சாகசம் நிறைந்த காதலன். கோபக்காரன். சுத்துமாத்துக் கதைகளைக் கதைக்கக்கூடியவன். நேரான சிந்தனை அற்றவன். விடுதலைப் போராட்டக்குழு ஒன்றுக்குத் தேவைப்படுகிற தன்மைகள் எதுவும் அற்றவன். ஆனாலும் இவன் இச்சம்பவத்துக்குப் பிறகு புலிகளில் சேர்ந்து விடுகிறான்.

அப்படிப்பட்டவனைக் கண்காணிக்கும் பொறுப்பு அன்று சிவாவுக்கு வருகிறது. பிற்பாடு கபிலன் இயக்கத்திற்குச் சுழித்து விட்டு இந்தியா செல்கிறான். அவனைக் கண்காணிப்பதில் தவறு செய்ததால் சிவாவுக்குத் தண்டனை கிடைக்கிறது. இதற்கிடையில் வைத்தியரின் மகளுக்கு திருமணம் நிகழ்ந்து பிள்ளையும் பிறக்கிறது. ஓர் நாள் வைத்தியரின் மகள் கடிதம் எழுதி வைத்து விட்டுப் பிள்ளையுடன் இந்தியாவுக்குச் சென்று விடுகிறாள். இங்கு முரண்அணி என்ன வென்றால் அவள் கபிலனுடன் இணைந்து வாழவே அங்கு செல்கிறாள்.

கோபிகா, கபிலனுடன் கொண்ட காதலை தமிழ் மக்கள் புலிகளுடன் கொண்டிருந்த காதலுடன் ஒப்பிட்டுக் கதை முடிகிறது. இக்கதையை வாசித்து முடித்துச் சிந்திக்கும் அதன் உள் அடுக்குகள் அழகாகப் பிரிந்தும் சேர்ந்தும் வருகின்றன. விடுதலைப் போராட்டத்தின் மீதான முரணணியான விமர்சனங்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றன.

கதை ஒன்றினுள் வரும் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவும் ஒன்றுகொன்று வலிமை சேர்ப்பவையாகவும் அமையும் பொழுது சிறுகதை என்கிற வடிவம் செம்மை பெறுகிறது. சிலவேளைகளில் கதைகளில் புகுத்தப்படும் சம்பவங்கள் நம்பத்தகுந்தவை போல இல்லாவிடினும் அவை புனைவே என்ற உணர்வுடன் வாசிக்கும் போது அவை நிகழக்கூடிய தர்க்க ரீதியான சாத்தியத்தை மறுக்க முடியாதிருக்கும். ‘கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்’ அப்படியானதொரு கதை.

மாறாக இத் தொகுப்பில் உள்ள சில கதைகளில் வருகிற சம்பவங்கள் அக்கதைகளின் அடி நாதத்திற்கு வலுச் சேர்ப்பவையாக இல்லை. அச்சம்பவங்கள் இல்லாமலும் அக்கதைகள் அவற்றின் ஆழத்தை அல்லது செறிவை அடைந்திருக்க கூடும். உதாரணமாக ‘சிறகு வளர்த்த குரல்களுடன் பறந்து போனவன்’ என்ற கதையில் வரும் கணித வாத்தியார்கள் பற்றிய பகுதி. இலங்கையின் கல்வி முறையை பீடித்திருக்கும் பிரபுத்துவ எச்சங்களையும் மேற்கத்தைய நாடுகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நிலவுகிற சன்நாயக உறவு முறையையும் ஒப்பிடுவதற்காகவே அவர் அப்பகுதியை அங்கே சேர்த்திருக்கிறார்

இறுதியாக முதலாவது கதையான…

ஹேமா அக்கா

ஆரம்பத்தில் பத்து வயதிற்குப்பட்ட சிறுவனின் பார்வையில் இருந்து கதை சொல்லப்பட்டு, இடையிடை கதாசிரியரின் பார்வையாகவும் இறுதியில் பதின்மவயதுச் சிறுவனின் பார்வையிலும் கதை சொல்லப்பட்டு முடிகிறது.

கதை சொல்லியான சிறுவனின் மனதுக்குப் பிடித்த ஹேமா அக்காவின் காதல், வாழ்வு, மரணம் ஆகிய மூன்றும் இக்கதையில் எங்கள் முன் வைக்கப்படுகின்றன. இக் கதையை வாசித்து முடிக்கும் போது ஏற்படும் அதிர்வு பெரியது. ஹேமாவின் காதல் வளர்ந்த வகைமையையும் அதற்கு இடையூறு வந்த போது அவர் செய்த தற்கொலை முயற்சியையும் அவர் காப்பாற்றப்பட்ட வகைமையையும் பின்னர் இந்திய இராணுவம் ஊருக்குள் நுழைந்த போது அவருக்கு நிகழ்ந்த கொடுமையையும் அம்பனை என்ற கிராமத்தின் பின்னணியில் வைத்துச் சிறுவனின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது.

ஹேமா அக்காவின் சசியுடனான காதல் மறுக்கப்பட்டபோதும் இந்திய இராணுவம் போன பின்னர் மீண்டும் சசி (ஹேமா அக்காவின் காதலன்) வந்து ஹேமாவைப் பெண் கேட்கிறார். குடும்பத்தினர் மறுக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஹேமா தான் காதலித்த சசியுடன் ஓடிப்போய்த் தனது வாழ்க்கையைக் கிளிநொச்சிக் கிராமத்தில் அமைத்துக்கொள்கிறார்.

1995 நிகழ்ந்த இடப்பெயர்வின் போது பதின்ம வயதடைந்த கதைசொல்லியான சிறுவனும் அவனது அம்மாவும் கிளிநொச்சிக்குச் செல்கின்றனர். ஹேமா அக்காவுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுகிறது. ஹேமா அக்காவின் சிறுவனின் மீதான அன்பும் வாஞ்சையும் முன்புபோலவே இருக்கின்றன. சிறிய வயதில் எங்கள் மனதுள் தங்கி விடுகிற அக்காக்கள் பற்றிய நினைவுகள் எப்பொழுதும் எங்களுக்குள் உயிர் வாழ்பவை. ஹேமா அக்கா வீட்டிற் சில காலம் தங்கிப் பின் வேறு ஒரு வீட்டிற்குப் போனாலும் அச்சிறு வாலிபன் அவர்களுடன் உரையாடுபவனாக இருக்கிறான்.

அரசியல் நிலைப்பட்டு இந்திய இராணுவ வருகையைத் தமிழர்கள் தமது வாய்ப்பாக்கி இருக்க வேண்டும் என நினைக்கிற சசி அண்ணனுடன் ஏற்பட்ட அரசியல் வாக்குவாதமொன்றில் கடும் கோபமுற்று ஹேமாக்காவைக் கெடுத்த இந்திய இராணுவத்துக்குச் சார்பாக இருக்கிறியளே எனச் சொல்லி விடுகிறான். ஹேமா தனக்குளேயே புதைத்து வைத்திருந்த பெரும் கொடுமையை, துன்பத்தை எடுத்து அவளின் கணவனின் முன் சிறுவன் அவனையும் அறியாமலேயே வைத்து விடுகிறான். சிறுவனின் இந்திய இராணுவத்தின் மீதான வெறுப்பின் மூலமும் அதுதான். அது அவனுக்குள்ளும் உறைந்து கிடந்த கொடூரம். தான் நேசித்த தனது அக்காவுக்கு நிகழ்ந்த கொடூரம் அது.

ஹேமா, இந்திய இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டமையை அவர் யாருக்கும் சொன்னதில்லை. சசியுடன் வாழ்ந்த காலத்தில் அவர் அதைச் சசிக்குக் கூடச் சொல்லவில்லை. யாருக்கும் சொல்லக்கூடிய ஒரு விடையமாக அது அன்றைக்கு இருந்ததும் இல்லை. பெண்கள் மீது சுமத்தப்பட்ட கற்பு, தூய்மை போன்ற பண்பாட்டுச் சுமைகளை மீறி இத்தகைய விடையங்களை உடல் உளக்காயங்களாக மட்டும் பார்க்கும் அளவுக்கு அன்று சமூகம் வளர்ந்திருந்ததா? சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத துயரத்தைத் தாங்கி ஹேமா அடைந்த மனவலிமை எத்தகையது! வாழ்தலைத் தேர்ந்தெடுத்த அவரது துணிவு எப்பேர்ப்பட்டது! அவ்வளவு கால அவரது மனப் போராட்டம்தாம் என்ன? இது போன்ற பல கேள்விகள் எங்களுக்குள் உணர்வுப் போராட்டமாக எழுகின்றன.

சசி மீதான காதலைக் குடும்பம் மறுத்த போது தற்கொலை செய்ய முயன்ற ஹேமாவுக்கு, இந்திய இராணுவம் அவரைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி உண்டாக்கிய காயத்தை சசியுடனான காதலுடன் மீண்டும் வாழ்வதன் மூலம் ஆற்றிக் கொண்டதாக நினைத்திருந்த ஹேமாவுக்கு, “இந்திய இராணுவம் உம்மைக் `கெடுத்ததை` ஏன் எனக்குச் சொல்லவில்லை” எனச் சசி கேட்ட போது வாழ்க்கை முடிந்து போகிறது. இப்பொழுது குளத்துள் விழுந்து தற்கொலை செய்கிறார்.

ஹேமா, பாலியல் வன்முறைக்குட்பட்டதில் இருந்து சசியுடன் வாழ்ந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்ட காலம் வரையும் அவர் அடைந்திருக்கக் கூடிய எல்லா வகையான உணர்வுகள் குறித்தும் ஒரு சொல் கூடக்கதையில் இல்லை. அவ்வாறு ஒரு சொல் இருந்திருந்தாற் கூட இக்கதை வலுவிழந்திருக்கும். சொல்லாமல் விடப்பட்டு எமக்குள் கிளர்த்தப்படுவதுதான் கதை.

இக்கதையின் ஆழத்தைக் இன்னும் கூட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தைக் கதாசிரியர் தவறவிட்ட இடம் ஒன்றும் இங்கே உள்ளது. ஹேமாவின் காதலை அவரது குடும்பம் மறுத்ததற்குக் காரணம் சாதிதான் என்பதைக் கதாசிரியர் தகவலாக எங்கள் முன் வைக்கிறார். இதனைக்கூடச் சொல்லாமற் சொல்லக்கூடிய வாய்ப்பு ஒன்று கதையின் ஆரம்பத்தில் வருகிறது. ‘எங்கள் ஊரின் சனம் சாதி பாக்கிற மாதிரி, எங்கள் ஊரின் மண் சனத்தைப் பிரித்துப் பார்ப்பதில்லை’ என்று ஒரு வரி வரும். அந்த வரி தந்த மனப்பதிவை வளர்த்துத் தூண்டுவதன் மூலம் சாதிப் பிரச்சினையையும் இக்கதையுள் வலிமையாகப் பொதித்திருக்க முடியும்.

பத்து அல்லது அதனை அண்டிய வயதுடைய சிறுவனின் பார்வையிற் கதை சொல்லப்படும் போது அவனின் எண்ணங்களின வீச்சு எல்லை குறித்த கவனம் கதாசிரியருக்கு இருந்திருக்கலாமோ என நினைக்கும் இடங்களும் உள்ளன.

மொழிப் பிரயோகம்

‘ஹேமாக்கா வாங்கோ! வெளியே வாங்கோ! வெளியே வாங்கோ! என்று நாங்கள் கிணத்துக் கட்டைச் சுற்றிக் குஞ்சைப் பருந்திட்டை பறிகொடுத்த கோழி மாதிரிக் கத்திக் கொண்டிருந்தோம்.’ அழகான மிக எளிமையான ஆனால், ஆழமான உணர்வைத் தரும் வசனம். தாய்க் கோழியின் பரிதவிப்பை உவமானமாகும் வரிகள்.

‘மலைகளும் நதிகளும் இல்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள்தான் நீர் சார்ந்த தேவைகளுக்கு அமுதசுரபி’ என்றொரு வரி வருகிறது. ‘மலைகளும் நதிகளும் இல்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தான் அமுத சுரபி’ என மட்டும் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். யாழ்க்குடா நாட்டில் அன்றைக்கு இருந்த பெரும்பாலான கிணறுகள் பங்கு கிணறுகள் அல்லது அனுமதியுடன் பலரும் பயன்படுத்தும் கிணறுகள். பல கிணறுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்ட பொதுக் கிணறுகளாக இருந்திருக்கின்றன. கிணற்றடி வைரவர் கிணற்றடிப் பிள்ளையார் எனக் கிணறுகளை அண்டிச் சிறு வழிபாடுகளும் நிகழ்ந்தன. இக்கிணறுகளைச் சுற்றிப் பல பண்பாட்டுக் கோலங்கள் இருந்தன. காதல், காமம், பங்குச் சண்டை தற்கொலைகள், கொலைகள் எனப் பலவிடையங்கள் இக்கிணறுகளைச் சூழ நிகழ்ந்தன.

‘அடுத்த நாள் விடிய அம்மா, “டேய் தம்பி எழும்படா ஹேமாக்கா குளத்துக்குள்ள குதிச்சிட்டா எண்டு சனம் சொல்லுது. ஓடிப்போய் என்ன நடந்ததெண்டு பாத்திட்டு வா” பட பட வென்று கையால தட்டி எழுப்புகிறா. நான் முன்பு வோர்டன் என்னப் பிடிக்க முயன்ற பொழுது ஓடியதை விடவும் வேகமாக ‘என்ன நடந்தது’ என்று அறிய சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடுகிறேன். ஹேமாக்காவுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாதென எங்கள் ஊர் வைரவரை நேர்ந்த படி சைக்கிளை உழகுகிறேன்.’

என்ன நடந்தது என்று அறிதல் ஒரு வகையான விடுப்பு பார்த்தல் என்னும் உணர்வைத் தருவது. அவ்வரியை விடும் போது பந்தி தரும் கருத்தின் ஆழம் அதிகரிக்கிறது.

பொதுவில் இளங்கோவின் கதைகளில் வெளிப்படுகிற…

சில முக்கியமான அம்சங்கள்

விடுதலைப் போராட்டம் பற்றி அதீத காட்டுருக்கள் எதுவும் இல்லை. ‘கொட்டியா’ கதை முழுவதும் போராட்டத்தில் இருந்து அந்நியமான ஒருவனைப் பற்றியதுதான். போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்திலே அதில் இருந்து அன்னியப்பட்ட மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது சொல்லப்படுவது முக்கியமானது. தமிழர்கள் எல்லோருமே புலிகள் என்ற காட்டுரு நிலவிய காலத்தில், தான் அப்படியானவன் அல்ல என்பதை இக்கதையின் கதாநாயகன் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

மேலும், காமம் துய்த்தல் முதன்மைப்படல்; உறவுகளிடம் இருந்த தன்னை அந்நியப்படுத்தல்; ஆங்கில கலாசாரத்துக்கு வெளியே உள்ள பெண்கள் மீதான ஈர்ப்பு; அங்கதம் அல்லது கிண்டல் தொனியுடன் கூடிய மொழி நடை – இது சில சந்தர்ப்பங்களில் கதைகளின் ஆழத்தைக் குறைப்பததாகவும் சில சந்தர்ப்பங்களில் கதைக்கு வலு சேர்ப்பதாகவும் உள்ளது.

யாழ்பாணீயம் மற்றும் தமிழ்ப் புத்தி மீதான கிண்டல்கள் பலகதைகளிலும் விரவிக் கிடக்கின்றன.

ஆண் மனநிலையை தூக்கிப் பிடிக்கும் பாத்திரங்கள் பேசும் வகை. உதாரணமாக… ‘உன்னை அவமானப்படுத்தியவனுக்கு அடுத்த அறையில் வைத்துப் பதிலடி கொடு.’ ‘உடலின் மூலைகளுக்குள் ஒடுங்கியிருந்த காமத்தின் அரும்புகளைக் கிளர்த்தி என்னுடன் தன் உடலைப் பகிர்ந்தவள் அவள் என்கிற உணர்வை தன்னுள் பத்திரப்படுத்திக்கொண்டான்.’ ‘கட்டிலில் தன் திருவிடையாடலைக் காட்டினான்.’

ஈழத்தமிழர் வாழ்வின் இரண்டு முக்கியமான அதிர்வு மையங்களாக இருப்பவை விடுதலைப் போராட்டமும் புலம் பெயர்வும் ஆகும். இவ்விரண்டு மையங்களிலும் இருந்து எழுந்த கருக்களில் இருந்துதான் இக்கதைகள் பிறந்திருக்கின்றன.

மூன்று தலைமுறைகளாக நிகழ்ந்த யுத்தத்தின் காயங்களும் அவற்றின் வடுக்களும் இன்னும் பல தலைமுறைகளுக்குக் காவிச் சொல்லப்படப் போகின்றன. அது போல் புலம்பெயர்வு தரும் சமூக பொருளாதார மற்றும் அடையாள அதிர்வுகளும் தலைமுறைகள் கடந்தும் நீடிக்கவே செய்யும். இப்பின்னணியில் இளங்கோவின் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தேவ அபிரா <thevaabira@gmail.com>

Theva Abira

Related post