தமிழ் சினிமாவில் பைத்தியங்கள் – சஃபி

 தமிழ் சினிமாவில் பைத்தியங்கள் – சஃபி

கண்ணாம்பா, மங்கையர்கரசி, 1949

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 

தமிழ்நாட்டில் ஃப்ராய்ட்

தமிழ்ப் படங்களில் மனநோயானது எப்படிச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது என்று, கதைகளின் வகைமைகளை உருவாக்கியதில் அசாதாரணமான கதைக்களனைக் கொண்ட நாலைந்து திரைப்படங்களில், குறிப்பிடத்தக்க படமாக பி.யூ. சின்னப்பாவும் கண்ணாம்பாவும் நடித்து, 1949இல் கவிஞர் சுரதா வசனத்தில் வெளிவந்த ‘மங்கையர்க்கரசி’ இருந்தது.

நல்ல தங்காள் கதை, மதுரைவீரன் கதை, காத்தவராயன் கதை, ஆரவல்லி சூரவல்லி கதை போன்ற நாட்டார் கதைகள் சினிமாவானது போல, ‘மங்கையர்க்கரசி’ படத்தின் கதையும் பெரிய எழுத்து, பட்டி விக்கிரமாதித்தன் கதைகளில் பதுமை ஒன்று சொன்ன கதையை அடிப்படையாகக் கொண்டது.

விக்கிரமாதித்தன் கதைகள் சொல்லப்படும் உத்தி சுவாரஸ்யமானது. அதில் திரைச்சீலை கதை சொல்லும். சொல்லுமென்றால் பாதிக் கதையைத்தான் திரைச்சீலை சொல்லும், மீதிக் கதையானது தனக்குத் தெரியாது சரவிளக்குக்குத்தான் தெரியும் என்று கதையை அது முடித்துவிடும். மீதிக் கதையை சரவிளக்கானது சொல்லிக்கொண்டு வரும்போதே தனக்கும் பாதிக்கதைதான் தெரியும், மீதிக் கதையானது தலையணைக்குத் தெரியும் என்று கதையை பாதியில் நிறுத்தி விடும். மீதியை தலையணைக்குள் புகுந்த வேதாளமானது சொல்லி முடிக்கும்.

மேலே சொன்ன நாட்டார் கதைகள் திரைப்படங்களான போது அடைந்த மாற்றங்கள் கவனம் கொண்டு ஆராயப்பட வேண்டிய விஷயங்களாகும்.

ஏலாகரம்பை பதுமை சொன்ன கதையின் சுருக்கம்….

நூறு மனைவிகள் இருந்தும் ஆள்வதற்கு வாரிசில்லாத கவலையோடு வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ராஜா, பூஜை புனஸ்காரம் செய்ய, அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. இளவரசனுக்குத் தக்க பிராயம் வந்ததும் ஓர் இளவரசியை மணமுடித்து, ஏழடுக்கு மாளிகையில் தம்பதிகளை குடி வைக்கிறார் அந்த ராஜா. ஏழாவது உப்பரிகையில் வாசஞ்செய்வது தம்பதிகளின் வழக்கம். ஒருநாள் நீராடுவதற்கு பூமிக்கு வரும் வானத்து சப்த கன்னிகைகள் ஏழுபேர், மஞ்சத்தில் உறங்கும் இளவரசனின் அழகில் மயங்கி, அவனைத் தூக்கிக்கொண்டு போய் தன்னுடன் வைத்துக் கொள்கின்றனர்.

இளவரசனின் மனைவியின் மேல் அனுதாபங்கொண்டு, சப்த கன்னியர்கள் இடையிடையே, இளவரசியினருகே தாங்கள் தூக்கிக்கொண்டு வந்த அவளது கணவனை கொஞ்சநேரம் போட்டுவிட்டு, விடிவதற்கு முன்பாக இளவரசனை தங்களுடன் மேலோகம் கொண்டுசெல்லுவதை வாடிக்கையாக்கிக் கொண்டனர் அந்த தேவகன்னிகையர்கள்.

இந்த சங்கதியானது எதுவும் அரண்மனையில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது. அந்தப் பரிதாபமான இளவரசிக்கும் கூட தெரியாது.

ஒவ்வொரு நாள் காலையில் இளவரசன், அரண்மனையில் மனைவியோடு காணப்படாததால், இளவரசன் தொலைந்து போய்விட்டான் என எல்லோரும் நினைத்துக்கொள்கிறார்கள். காலம் போகப்போக, இளவரசனின் மனைவி கருத்தரிக்கிறாள்.

கணவன் இல்லாமல் கருத்தரித்துவிட்டாள் என்று அவதூறு சொல்லி, அவளை அடித்துத் துரத்தி விடுகிறார்கள் அரண்மனைக்காரர்கள். காட்டுக்குள் தன்னை மாய்த்துக் கொள்ளப்போன இளவரசியை, பெற்ற மகளை இழந்த ஒரு தாசி ஆறுதல் சொல்லி தன்னுடன் வைத்து பராமரிக்க ஆரம்பிக்கிறாள்.

சூலியாக தன்னிடம் வந்தவள், ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அப்புறப்படுத்தி விடுமாறும் பெண் குழந்தை பெற்றால் தன்னிடம் கொண்டுவருமாறும் மருத்துவச்சியிடம் சொல்லித் தாசி அனுப்புகிறாள். இளவரசியும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். மருத்துவச்சி. குழந்தையைக் கொல்ல மனமில்லாமல் மனமிரங்கி, ஐந்துதலை நாகம் வசிக்கும் புற்றினருகே போட்டுவிடுகிறாள். ஐந்து தலை நாகமோ, குழந்தையைப் பராமரித்து காளிகோயிலில் போட்டு விடுகிறது.

காளிகோயிலுக்கு தினமும் விஜயம் செய்யும் காளி பக்தரான குழந்தையின் தாத்தா, கோயிலில் அழுது கொண்டிருக்கும் குழந்தையை தனது பேரனென்று தெரியாமலேயே எடுத்துப்போய் அக்குழந்தையைச் சீரும் சிறப்புமாக வளர்த்து ஆளாக்குவார்.

வளர்ந்து ஆளான அந்த ராஜகுமாரன் ஒருநாள் நகர் வலம் வரும்போது, தாசி வீட்டின் முன்னால் ஒரு பெண் நிற்பதைப் பார்க்கிறான். நிற்கும் பெண்ணானவள், தனது தாய் என்று தெரியாமலேயே, அவளை ஒரு தாசி என்று நினைத்து இச்சை கொண்டு அவளருகே செல்கிறான். அந்தப் பெண்ணும் தேடிவருபவனின் ரூபசாயலானது கணவனைப் போலிருக்கிறதே என்று எண்ணி, தொலைந்து போன தனது கணவன்தான் வருகிறான் என்று நொடிநேரம் எண்ணி அசந்து போவாள்.

அன்றிரவு ராஜகுமாரன் பகலில் பார்த்த அந்தத் தாசி வீட்டுக்குப் போகும்போது, வீட்டின் வெளியே கட்டப்பட்டிருக்கும் காராம் பசுவையையும் அதன் கன்னுக்

P.U. CHINNAPPA, KANNAMPA, MANGAYARKARASI
பி.யு. சின்னப்பா, கண்ணாம்பா, மங்கையர்கரசி, 1949

குட்டியையும் தாண்டிக்கொண்டு போகையில், அந்தக் கன்னுக்குட்டி, தாயிடம், “என்னை அலட்சியமாக தாண்டிக்கொண்டு போகிறான் பார்” என்று புகார் செய்யும்.

அதற்கு, “தாயைப் பெண்டாளப் போகிறவன் இதுவும் செய்வான், இன்னமும் செய்வான்” என்று காராம்பசு தனது கன்றுக்குப் பதில் சொல்லும்.

மிருகபாஷை தெரிந்த ராஜகுமாரன் அதைக்கேட்டு குழப்பமடைந்து பின்பு அதை அலட்சியப்படுத்திவிட்டு தாசி வீட்டுக்குள் போவான். அங்கே தாயின் மார்பில் பால் சுரந்து ராஜகுமாரன் மேலே பீச்சியடிக்கும். ராஜகுமாரனும் அதிர்ச்சியடைந்து தாசி வீட்டை விட்டு வெளியே பதறியவாறு ஓடிவந்து விடுவான்.

நிஜத் தாய் மகனுக்கு இணையாக, காராம் பசுவையும் அதன் கன்றையும் வைத்து, விதிமீறலையும் அது தவிர்க்கப்படும் விதத்தையும் நாட்டுப்புற கதைசொல்லும் அழகோடு அந்தக் கதையானது நகரும்.

அதிர்ச்சியடைந்து ஒடி வந்த ராஜகுமாரன், தன்னை வளர்த்த தாத்தாவிடம் தனது நிஜமான தந்தை யார்? என்று கேள்வி கேட்டு தன்னைப் பற்றிய பூர்வகதையின் ரகசியத்தை அறிந்துகொள்வான்.

விக்கிரமாதித்தன் கதையிலுள்ள பல அம்சங்களை எடுத்தாண்டு ‘மங்கையர்க்கரசி’ படம் உருவாகியிருக்கிறது. ஆனால், பசு கன்றுக்கிடையே நடக்கும் உரையாடலாக, தாய்க்கும் மகனுக்கும் இடையில் உருவான, நெருடலான சந்திப்பைத் திரைப்படம் கையாண்ட விதம் சுவாரஸ்யமானது.

விக்கிரமாதித்தன் கதைகளின் ஒன்றான இந்தக் கதைக்கு முன்னோடியாக கி.மு. காலத்திலே ஈடிபஸ் (Oedipus) என்ற ஒரு கிரேக்க புராணமுண்டு. அதைத் தழுவி கிரேக்க நாடக ஆசிரியரான சோபக்ள்ஸ் (Sophocles B. C 496) ஈடிபஸ் ரெக்ஸ் என்ற நாடகத்தை எழுதியுள்ளார். அந்த நாடகத்தின் கதையில் ஈடிபஸ், ஊழின் வினையால் தனது தந்தையை, தந்தை என்று தெரியாமலே கொன்றுவிட்டு, ஒரு அந்நிய தேசத்திற்கு அரசனாகிவிடுவான். விதவையாகிப் போன அந்நாட்டு ராணி ஜொகாஸ்டாவை மணமுடித்துக்கொள்வான். நிஜத்தில் ஜொகாஸ்டா அவனைப் பெற்ற தாய். அதன் பிறகு பார்வையிழந்த தனது நாட்டு ஞானியின் வழியாக, தனது கதையைத் தெரிந்துகொண்டு தனது கண்களை குருடாக்கிக் கொண்டு தன்னைத் தண்டித்துக் கொள்வான் ஈடிபஸ்.

இயக்குநர் பசோலினி (Pasolini), ஈடிபஸ் ரெக்ஸ் (Oedipus Rex) கதையைக் கையாண்டு படமாக்கியுள்ளார். ஆனால், படைப்பூக்கத்துடன் அவர் சில புதுமைகளைச் செய்தார். ‘மங்கையர்கரசி’ படம் ராஜாராணி காலத்துப் பின்னணியுடன் இருக்கும். பசோலினியின் படமோ, ஈடிபஸ் கதையானது, நவீன காலத்துக்கும் பொருந்தும் என்ற வகையில் நவீன வாழ்க்கைப் பின்னணியில் தொடங்கி, முந்திய கிராமத்து கிரீஸ் வழியாகப் பயணித்து, பின்பு மீண்டும் நவீன காலத்துத் தெருவில், கண்ணிழந்த ஈடிபஸ் இசைத்துக் கொண்டு போவதைக் காட்சிப்படுத்துவதோடு முடியும்.

விக்கிரமாதித்தன் கதைக்கருவின் சாயலைக்கொண்ட கதைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. ஆலன் டன்டிஸ் (Aland Dundes) என்ற நாட்டுப்புற ஆய்வாளர் தனது சகாவோடு உலகமுழுக்க பரவியிருக்கும் ஈடிபஸ் கதையின் வேறுவேறான வடிவங்களை எல்லாம் Oedipus Casebook (1983) என்ற நூலில் தொகுத்துள்ளார்.

விக்கிரமாதித்யன் கதையில், மகன் தனது தாயை ஒரு தாசியாக, தவறாக அடையாளங்கண்ட நெருக்கடியான நிலை, பசுவிற்கும் அதனுடைய கன்றிற்கும் இடையே நடக்கும் உரையாடலாக வெளிப்பட்டு, தாய் மகன் சந்திப்பானது தவிர்க்கப்படும்.

கதையில் குறிப்பிடப்படும் அந்தக் குறிப்பிட்ட நெருக்கடி நிலையானது, சினிமாவானபோது, ‘மங்கையர்க்கரசி’ படத்தில் ஒரு கனவுக்காட்சியாக, தாய் தனது மகனுக்கு அறிவுரை சொல்லும் விதமாக, கனவு வேறு நிஜம் வேறு என்பதைச் சுட்டும் விதத்தில், கனவுக்காட்சியாக ஆக்கப்பட்டிருக்கும்.

மகன், ‘காந்தர்வ மோகினியே உன்னைப் பார்த்தால் பசிதீரும்’ என்று பாட, மகனுக்கு அறிவுறுத்தும் விதமாக, ‘மகனே உனது சீல முகத்தைப் பார்த்தால் பசிதீரும்’ என்று முகம் பார்க்கும் சுவர்ச் சித்திரத்திலிருந்து தாயானவள் பாடி, மகனின் எண்ணத்தைத் தணிக்கை செய்வதாய் அக்காட்சி இருக்கும். அதுவும் பழைய திரைப்படங்களில் கனவுக்காட்சிகளை சித்தரிக்க வழமையாக பயன்படுத்தப்படும் ஒரு உடலிலிருந்து உடல் பிரிவதுபோலவே அக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு கிரேக்க புராணமாக ஈடிபஸ் கதையானது, மக்களிடம் வழங்கியிருக்கிறது. சோபக்ள்ஸின் கரத்தில் காலங்கடந்து நிற்கும் நாடகமாகவும் ஆகியிருக்கிறது. திரைக்கலைஞர்களினால் திரைப்படமாகவும் பரிமளித்திருக்கிறது.

உளப்பகுப்பாய்வளாரான ஃப்ராய்ட்டுக்கு ஈடிபஸ் கதையானது புதிய சிந்தனைகளை உண்டாக்கியது. மனித நாகரீகம் தோன்றியதற்கான உளவியல் கோட்பாடுகளை உருவாக்கக் காரணமாக அது அமைந்தது. தனது சிந்தனைகளை ‘குலச்சின்னமும் விலக்கமும்’ (Totem and Taboo) என்ற நூலில் 1913இல் வெளியிட்டார். சுமார் 150 பக்கங்களில் நான்கு அத்தியாயங்களாக அமைக்கப்பட்ட நூல். பல தடவைகள் வாசிக்க வேண்டிய நூல். மொழியியல் சம்பந்தப்பட்டு, பல புதிய வெளிச்சங்களைக் கொண்ட நூல்.

அந்த நூலின் உபதலைப்பு, ‘தொல்குடி சமூகத்தினருக்கும் மிதமான மனநோய்களுக்கும் காணப்படும் சில பொருத்தப்பாடுகள்’ (Some Points of agreement between the Mental Lives of Savages and Neurotics) என்பது. தாய்/தந்தை – மகன்/மகள் ஏன் தங்களுக்குள் மணவினை புரிந்துகொள்ளக்கூடாது என்பது – The Horror of Incest – என்பது தொல்குடி சமூகத்திலிருந்து தொடங்கி, நாகரீகத்தில் முதிர்ச்சி அடைந்த சமூகம் வரை தொடர்ந்து வருகிறது  என்பதற்கு Totem and Taboo-வில் தனது மருத்துவ அனுபவத்தையொட்டி அனுமானங்களைக் கைகொண்டார் ஃப்ராய்ட்.

ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். நமக்குப் பரிச்சயமான மனநல மருத்துவத்துறை (Psychiatry) என்பது வேறு, ஃப்ராய்ட் ஸ்தாபித்த உளப்பகுப்பாய்வு (Psychoanalysis) என்பது வேறு. இரண்டு துறைகளின் அக்கறைகளும் வேறு. மனநலத்துறை சுருக்கமான எல்லைகள் கொண்டது, உளப்பகுப்பாய்வு ஒரு கலாச்சாரக் கோட்பாடு. அதன் கோட்பாடுகள், மொழியியலைப் பற்றி பேசும். தவிர, கலை இலக்கியங்கள், ஜோக்குகள், கனவுகள் என்று அதன் அக்கறைகள் பரந்தது. அறிவியல் கேட்கும் ஸ்தூலமான, கறாரான நிரூபணங்களை உளப்பகுப்பாய்வு தராது. இருந்தும் உளப்பகுப்பாய்வின் சிந்தனைகளில் பெறுமதியுண்டு என்று அந்தப் பாதையில் பயணிக்கும் சிந்தனையாளர்கள் இருக்கின்றனர்.

அப்புத்தகம் மனநோய்களை விவரிக்கும் மனநல அறிவியல் புத்தகம் கிடையாது. கிட்டத்தட்ட அது ஒரு மானிடவியல் புத்தகம். சமூக உருவாக்கத்தை குறித்துப் பேசும் புத்தகம் என்று சொல்லலாம். சட்ட திட்டங்கள் உருவானதற்கு ஃப்ராய்ட் சொன்ன சாத்தியமுள்ள ஒரு தொன்மக்கதை (Mythology) என்று சொல்லலாம்.

சஃபி <safipsy69@gmail.com>

Safi

 

Amrutha

Related post