சில முல்லா நஸ்ருதீன் கதைகள் | தமிழில்: சஃபி

 சில முல்லா நஸ்ருதீன் கதைகள் | தமிழில்: சஃபி

வீடு கட்டுதல்

ஒரு நாள், முல்லாவின் மனைவி மதப் பிரசங்கக் கூட்டத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பினார்.

மனைவியைப் பார்த்து முல்லா, “பிரசங்கி என்ன போதித்தார்?” என்று கேட்டார்.

“சட்ட ரீதியான மனைவியுடன், இரவு நேரத்தில் உறவு கொண்டால், அவருக்காகச் சொர்க்கத்தில் மாளிகையொன்றை இறைவன் கட்டுவான் என்று பிரசங்கி சொன்னார்” என்று முல்லாவின் மனைவி பதிலளித்தார்.

முல்லாவும் மனைவியும் பின்பு படுக்கையறைக்குப் போனார்கள் முல்லா மனைவியைப் பார்த்து, “வா, இருவரும் சொர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுவோம்” என்றார். அப்படிச் சொல்லிவிட்டு இருவரும் உறவு கொண்டனர்.

சிறிது நேரம் கழித்து, முல்லாவின் மனைவி அவரிடம், “உங்களுக்கு மட்டும் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டீர்கள், இப்போது எனக்கும் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும். தயாராகுங்கள்” என்றார்.

அதைக் கேட்டுவிட்டு, “உனக்காக ஒரு வீட்டைச் சுலபத்தில் என்னால் கட்டிவிட முடியும். ஆனால், உன்னுடைய தந்தைக்கும் தாயாருக்கும் கூட வீட்டைக் கட்ட நீ ஆசைப்படுவாயோ என நான் பயப்படுகிறேன். உனது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, உனது மொத்த குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் கூட வீடு கட்ட நேரிடலாம். அதைக் கண்டு நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் கோபப்படக்கூடும். ஒரு வீடே நாமிருவருக்கும் போதும்” என்று களைப்பில் முனகினார் முல்லா.

 

ஊர் வாய்

ஒரு நாள் முல்லாவும் அவரது பையனும் சந்தைக்குச் சென்றனர். அவர்களிடம் ஒரேயொரு கழுதை மட்டுமே இருந்ததால், பையனை மட்டும் கழுதையில் ஏற்றிவிட்டு முல்லா நடந்து சென்றார்.

அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் திகைப்படைந்தார்.

“காலம் போகிற போக்கைப் பாருங்கள். இக்காலத்துக் கல்வி இதைத்தான் கற்றுக்கொடுக்கிறது போலும்! வயதான மனிதன் நடந்து போக, சோம்பேறி இளைஞன் சொகுசாகக் கழுதையிலேறிச் சவாரி போகிறான்” என்று புகார் சொன்னார்.

அதைக் காதால் கேட்டுவிட்ட முல்லாவின் மகன், “நான் முன்னமே உங்களிடம் இப்படி நடக்கும் என்று சொல்லவில்லையா?” என்று சொல்லிக்கொண்டே கழுதையின் மீதிறிருந்து இறங்கி, முல்லாவைக் கழுதையில் ஏற்றி உட்கார வைத்தான்.

கொஞ்ச தூரம் அவர்கள் நடந்தவுடன் அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த சிலர், “கொடுங்கோலா! வளர்ந்த ஆளான நீ சுகமாகக் கழுதையில் போக, பச்சிளம் பையனைப் புழுதியில் தடுமாறி நடக்க வைக்கிறாயே உமக்கு எப்படி மனது வந்தது?” என்று சொல்லி முல்லாவைப் பார்த்துக் கூப்பாடு போட்டு வைதனர்.

அதைக் கேட்ட தந்தையும் தனயனும் சேர்ந்து கழுதையின் மீது ஏறிக்கொண்டனர்.

அடுத்த ஊரை அவர்கள் அடைந்த போது, சில பேர், “இதயமில்லாதவர்களே! உங்களது கனத்த சரீரத்தால் அந்த வாயில்லா ஜீவனைக் கொல்லவா பார்க்கிறீர்கள்?” என்று சொல்லி ஆத்திரத்துடன் அவர்கள் மீது கல்லெறிய முற்பட்டனர்.

ஊரின் கோபத்தை உணர்ந்த பிறகு இருவருமே கழுதையைவிட்டுக் கீழிறங்கி அதன் பின்னாலே மெதுவாக நடக்கத் தொடங்கினர்.

அவர்கள் அடைய வேண்டிய ஊரின் வாயில் நெருங்கிய போது, சில பிச்சைக்காரர்கள், அக் காட்சியைப் பார்த்து, “சரியான முட்டாள்கள்! அவர்களின் கழுதை அவர்களைச் சுமந்து செல்லாமல், அவர்களை வழி நடத்திப் போகிறது!” என்று சொல்லி தந்தையையும் தனயனையும் பார்த்து ஏளனமாக நகைத்தனர்.

 

ஊடாட்டம்

ஒரு தடவை தன்னை மகிழ்வித்ததற்காக அரசர், முல்லாவுக்கு விலையுயர்ந்த ஜாதிக் குதிரைகளில், தேர்ந்தெடுத்து ஓர் ஆண் குதிரையைப் பரிசளித்தார்.

முல்லாவிடம் அந்தக் குதிரை ரொம்ப நாள் தங்கவில்லை. ஒரு தடவைக் கட்டறுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிட்டது.

அதைக் கேள்விப்பட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் முல்லாவிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள்.

“அது உங்களுக்குப் பேரிழப்பாக இருக்கலாம்!?” என்றனர் அண்டை வீட்டார்.

“அது சரியாகவும் இருக்கலாம; அது தவறாகவும் இருக்கலாம்!” என்றார் முல்லா.

ஒரு வாரம் கழித்து காட்டுக்குள் ஓடிப்போன அந்தப் பொலிக் குதிரையானது ஏழு பெண் குதிரைகளுடன் திரும்பி வந்தது.

அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு முல்லாவைப் பாராட்டுவதற்காக அண்டை வீட்டார்கள் அவர் வீடு நோக்கி படை எடுத்தனர்.

“முல்லா நீங்கள் அதிர்ஷடக்காரர். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!” என்று முல்லாவைப் புகழ்ந்தனர்.

“அது சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம்!!” என்றார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்துவிட்டுப் போய் ஒரு நாள்தான் கழிந்திருக்கும். அதற்குள் முல்லாவின் மகன் புதிதாக வந்த குதிரையொன்றின் மேலேறி விளையாடியபோது கீழே விழுந்து தனது கை கால்களை உடைத்துக்கொண்டான்.

அதைக் கேள்விப்பட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் முல்லாவிடம், “விதி உங்களிடம் கொடுமையாக விளையாடுகிறது!” என்றனர்.

அதற்கு, “அது சரியாகவும் இருக்கலாம்!; தவறாகவும் இருக்கலாம்!!” என்றார் முல்லா.

அறுவடைக் காலத்தில் மன்னரின் படைகள் முல்லாவின் கிராமத்திற்குள் நுழைந்தன.

படைக்குப் புதிதாக ஆட்கள் தேவைப்பட்டதால், கண்ணில் பட்ட இளைஞர்களெல்லாம் வீரர்களால் தூக்கிக்கொண்டுப் போகப்பட்டனர்.

முல்லாவின் மகனுக்கு குதிரையிலிருந்து விழுந்து பட்ட காயம் ஆறாமலிருந்ததால் “அவன் நோயாளி படைக்குத் தேறமாட்டான்” என்று படைவீரர்கள் அவனை விட்டுவிட்டனர்.

அதைக் கேட்டு, மகனை, உறவினர்களை, இதர சொந்தங்களைப் போரில் இழந்த துர்பாக்கியசாலிகளான பக்கத்து வீட்டுக்காரர்கள் முல்லாவின் மகன் தப்பித்ததைப் பார்த்துவிட்டு, “முல்லா, எங்கள் எல்லோரையும் விட நீங்கள்தான் கூடுதல் அதிர்ஷடசாலி!!” என்றனர்

“அது சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம்!!” என்றார் முல்லா.

 

வித்தியாசம்

முல்லா புதிய நீதிபதியாக நியமிக்கப்பmullaட்டார். புதிதாகப் பணிக்குச் சேர்ந்த ஆர்வத்தில் முல்லா தனது ஊரில் இருந்த எல்லாத் தவறுகளையும் உடனடியாகச் சரிப்படுத்தத் துடியாய்த் துடித்தார்.

சந்தையிலிருந்து எரிச்சலுடன் திரும்பிய முல்லாவின் மனைவி அவரைப் பார்த்து, “இன்று காலை ஒருவன் பசி மயக்கத்தில் கீழே விழுவதைப் பார்த்தேன். ரொம்ப பலவீனமாக அவன் காணப்பட்டான். இது சரியில்லை!  ஏழைகள், நாளுக்கு நாள் ஏழையாகிக்கொண்டே போகிறார்கள். பணக்காரர்கள், பணக்காரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் சில மக்கள் பசியாலும் கோபத்தாலும் துடிக்க வேண்டும்? ஏன் சில நபர்கள் அதிகம் உண்டு உடலில் கொழுப்பேறிப் போய் நோயால் அவதிப்பட வேண்டும்? நம் காலடியில் இருக்கும் பூமி எல்லோரையும் போஷிக்க வல்லது. காசு மேல் காசு சேர்ப்பதால் என்ன பலன்? நீங்கள் உண்மையான சகோதரர்கள் போலவும் மெய்விசுவாசிகள் போலவும் எல்லாவற்றையும் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை எல்லோர்க்கும் போய் எடுத்துச் சொல்லுங்கள். பயப்படாமல் பிரசங்கம் செய்யுங்கள்” என்று முல்லாவை அவசரப்படுத்தி அனுப்பி வைத்தார்.

முதல் நாள் செய்த பணியை தொடர்ந்து, முல்லா மறுநாள் அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக, வீடுவீடாக சென்று பேசினார். அதுபோக சந்தை, குளிக்குமிடம், சத்திரம், தேநீர் விடுதி, குறிப்பாக பள்ளிவாசலையும் மறக்காமல் சகல இடங்களிலும் மனைவி சொன்ன கருத்தைத் தொண்டை புண்ணாகும் வரை எடுத்துச் சொன்னார்.

இரவு வீடு திரும்பிய முல்லா முகத்தில் திருப்தி நிறைந்திருந்தது.

“அன்பே! பாதிவேலை முடிந்துவிட்டது. எல்லா ஏழைகளிடமும் ஒரே நாளில் எனது கருத்தை அழுத்தமாகச் சொல்லி அவர்களை உடன்பட வைத்துவிட்டேன். பணக்காரர்களைச் சரிக்கட்டுவது மட்டுந்தான் இன்னும் மிச்சமிருக்கிறது” என்றார் முல்லா.

 

கடத்தல்

முல்லா தனது கழுதை மேல் வைக்கோல் பொதிகளை ஏற்றித் தனது தேசத்து எல்லையைத் தாண்டி தினசரி போய்வந்து கொண்டிருந்தார்.

தான் ஒரு கடத்தல்காரன்தான் என்று ஒப்புக்கொண்ட முல்லாவை, இரவு வெகுநேரம் கழித்து களைப்புடன் திரும்பும்போது, எல்லைக் காவலர்கள் அக்குவேறாய் ஆணிவேறாய் சோதனை போட்டனர். அவரது வைக்கோல் பொதிகளைச் சல்லடை போட்டு அலசிப் பார்த்தனர். அதைத் தண்ணீரில் வீசினர். தீயிட்டுக் கொளுத்தினர். இருந்தாலும், அவர்களால் முல்லாவிடமிருந்து களவுக்கான எந்தச் சாட்சியத்தையும் பெறமுடியவில்லை.

முல்லாவும் செல்வந்தராக ஆகிக் கொண்டிருந்தார்.

அப்புறம் முல்லா ஓய்வு பெற்றுக்கொண்டு வேறுதேசத்தில் போய் வசிக்கலானார்.

பல வருடங்கள் கழித்து முல்லாவைப் பழைய சுங்க இலாகா அதிகாரி சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது.

“இப்போது சொல்லுங்கள் நஸ்ருதீன், உங்களைக் கையும் களவுமாக நாங்கள் பிடித்துவிடாதபடி, அப்படி என்னதான் கடத்திக் கொண்டிருந்தீர்கள்?” என்று பேச்சை ஆரம்பித்தார் அதிகாரி.

“கழுதைகள்” என்று பதில் சொன்னார் முல்லா.

 

உண்டு குடித்தல்

முல்லா நஸ்ருதீன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது ஒரு செல்வந்தன் தனது அங்கிக்குள் உணவுப் பதார்த்தங்களை இரகசியமாகத் திணித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார்.

முல்லா பார்த்ததைப் பார்த்துவிட்ட அந்தத் திருடன், “எனது மனைவியால் இந்த விருந்தில் கலந்துகொள்ள முடியவில்லை. நான்தான் விருந்துப் பட்சணங்களை அவளுக்குக் கொண்டு வருவதாகச் சொல்லி வாக்களித்திருக்கிறேன்!” என்று சொல்லிச் சமாளித்தார்.

பதிலுக்கு ஒரு வார்த்தை பேசாமல் ஒரு கோப்பைத் தேநீரை அந்தச் செல்வந்தனின் அங்கிக்குள் ஊற்றினார் முல்லா.

“என்ன செய்கிறாய்?” என்று கத்த ஆரம்பித்தான் அந்தக் கருமி.

“நீங்கள் கொண்டுப் போவதையெல்லாம் சாப்பிட்டு முடித்தபிறகு உங்கள் மனைவிக்குக் குடிப்பதற்கு ஏதாவது தேவைப்படும் அல்லவா!” என்று சொன்னார் முல்லா.

 

இடதா அல்லது வலதா

முல்லா, நீங்கள் சகல விஷயங்களைப் பற்றியும் தெரிந்தவர் என்று பெயர் வாங்கியிருக்கிறீர்கள். பிரேதத்தைச் தூக்கிச் செல்லும் போது நான் இடதுபுறம் நிற்க வேண்டுமா அல்லது வலதுபக்கமாக நிற்க வேண்டுமா என்பதை மட்டும் சொல்லுங்கள்!” என்று கேட்டார் பழுத்த வயதுடைய முல்லாவின் அண்டை வீட்டுக்காரர்.

“எந்தப் பக்கம் என்பது ஒரு பிரச்சினையே கிடையாது. நடுப்பக்கத்திலிருந்து மட்டும் விலகிக்கொள்ளுங்கள்!” என்றார் முல்லா.

 

இயற்கையின் அமைப்பு

“தந்தையே, குறைவாகப் பேசுகிறீர்கள் அதிகமாகப் பிறர்சொல்வதைக் கவனித்துக் கேட்கிறீர்கள். ஏன் அப்படி?” என்று முல்லாவின் மகன் அவரிடம் கேட்டான்.

“எனக்கு ஒரேயொரு வாயும் இரண்டு காதுகளும் இருக்கின்றன. அதனால்தான்!” என்றார் முல்லா.

 

காதுகளுமில்லை குற்றங்களுமில்லை

நீதிபதி சட்ட சிக்கல் மிகுந்த ஒரு வழக்கைப் பற்றி அவரது அறையில் யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கே போனார் முல்லா.

“முல்லா, குற்றவாளியை நான் எப்படித் தண்டிக்க வேண்டும் என்பதற்கு ஒரு உபாயம் சொல்லுங்கள்?” என்று நீதிபதி ஆலோசனை கேட்டார்.

“அவன் பேசும் பொய்களைக் கேட்கும் அனைவரது காதுகளையும் இழுத்து ஒட்ட நறுக்கி விடுங்கள்!!” என்று தனது யோசனையைச் சொன்னார் முல்லா.

 

திருட்டல்லகாப்பாற்றுதல்

முல்லா நஸ்ருதீனைச் சதா வெறுத்து வந்த அண்டை வீட்டுக்காரனை ‘எப்படிக் கோபப்படுத்தலாம்‘ என யோசித்துக் கொண்டிருந்தார் முல்லா. பக்கத்து வீட்டுக்காரன் செல்வந்தன். ஆனால், பெருங்கஞ்சன். எச்சில் கையால் கூட காக்கையை ஓட்டாதவன்.

ஒரு நாளிரவு முல்லா ரகசியமாகப் பக்கத்து வீட்டுக்காரனின் தோட்டத்துக்குள் நுழைந்து அவனது கோழிக்கூட்டிலிருந்து நல்ல பெரிய கோழியை எடுத்துக்கொண்டு நழுவினார்.

காலையில் தனது பொருளிழப்பைக் கண்டு அந்த பணக்காரக் கஞ்சன் கத்திக்கதறுவதை தனது மனதுக்குள் ஓட்டிப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டார் முல்லா.

சிறிது தூரம் நடந்து போனதும் கோழி இறக்கைகளை அடித்துப் படபடத்துக் கூவிக் கதறாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார் முல்லா.

ஒருவேளை கனமான சாக்குப் பைக்குள் கோழியைப் போட்டதால் மூச்சுத் திணறி அது அமைதியாகி விட்டதோ என யோசித்துக் கோணிப்பையை திறந்தார் முல்லா. பையைத் திறந்ததுதான் தாமதம், கோழி தனது தலையைப் பைக்கு வெளியே நீட்டிக் கத்தத் தொடங்கியது.

“ஆமாம், நான் நினைத்தது சரியாகப் போய்விட்டது. நான் பணக்காரனின் பேராசையைக் குறித்து அருவருப்பு அடைந்தது போலவே நீயும் அவனது மோசமான குணத்தைப் பற்றி அதிருப்தி கொண்டிருக்கிறாய். அதனால்தான் பலமாகக் கத்துகிறாய். நான் செய்தது திருட்டல்ல, நான் உன்னைக் காப்பாற்றியது ஒரு அவசியமான நற்காரியமாகும்!” என்று சொல்லி கோழியின் தலையை மீண்டும் பைக்குள் அமுக்கிவிட்டு வேகமாக நடையைக் கட்டினார் முல்லா.

 

இரண்டு காசுகள் மட்டும்

முல்லா நஸ்ருதீன் ஒரு கடைக்காரனிடம் கடன்பாக்கி வைத்திருந்தார். ஒரு நாள் முல்லா தேநீர்க் கடையில் நண்பர்களோடு அரட்டையடித்துக் கொண்டிருந்த போது அந்தக் கடைக்காரன் அங்கே வந்தான்.

அந்தக் கடைக்காரன், “முல்லா உங்களைப் போன்ற முக்கியமான ஒரு நபர், சமூகத்தில் பெரிய மனுஷனாய் இருப்பவர், கடனைச் செலுத்தாமல் வைத்திருப்பது ஆச்சரியமான விஷயம்” என்று பேச்சைத் தொடங்கினான்.

“நான் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்?”

“இருபது தங்கக் காசுகள்.”

“நாளை நான் ஆறு தங்கக் காசுகள் கொடுத்து கடன் அடைத்தால் மிச்சம் எவ்வளவு தர வேண்டியிருக்கும்?”

“பதினான்கு தங்கக் காசுகள்.”

“நாளை மறுநாள் ஆறு தங்கக் காசுகளைத் தந்துவிட்டால் மீதம் எவ்வளவு?”

“எட்டுத் தங்கக் காசுகள்தான் தர வேண்டும்.”

“அதற்கடுத்த நாள் ஆறு காசுகளைக் கொடுத்துவிட்டால் இன்னும் எவ்வளவு தர வேண்டியிருக்கும்?”

“இரண்டே இரண்டு காசுகள்தான்.”

“அப்படியானால் உங்களைப் போன்ற சமூகத்தில் பெரிய மனிதர் இரண்டு காசுகள் தரவேண்டியதற்காக ஒரு தரமான வாடிக்கையாளரைத் தொந்தரவு படுத்துவது அவமானகரமான விஷயமாகும்” என்றார் முல்லா.

(‘என்றார் முல்லாநூலில் இருந்து)

சஃபி <safipsy69@gmail.com>

Safi

 

 

 

 

 


என்றார் முல்லா: முல்லா நஸ்ருத்தீன் கதைகள்தமிழில்: சஃபி; விலை ரூ. ₹160; வெளியீடு: உயிர்மை பதிப்பகம், சென்னை; மின்னஞ்சல்: uyirmmai@gmail.com

 

Amrutha

Related post