அக்சோலோத் – ஹூலியோ கொர்த்தஸார்

 அக்சோலோத் – ஹூலியோ கொர்த்தஸார்

ஆங்கிலத்தில்: பிளாக்பர்ன்

தமிழில்: சமயவேல்

 

க்சோலோத்களைப் பற்றி நான் அதிகம் யோசித்த ஒரு காலம் இருந்தது. ஜார்டின் டெஸ் பிளான்டஸில் உள்ள மீன்காட்சியகத்தில் அவற்றைப் பார்க்கச் சென்றேன். பல மணிநேரம் அவற்றைப் பார்த்தேன். அவற்றின் அசைவின்மையையும் மந்தமான அசைவுகளையும் கவனித்தேன். இப்போது நான் ஒரு அக்சோலோத்.

குளிர்கால தவக்காலத்திற்குப் பிறகு, பாரிஸ் அதன் மயில்வாலை விரித்துக் கொண்டிருந்த ஒரு வசந்தகாலக் காலையில், தற்செயலாக நான் அவற்றிடம் வந்தேன். இருபுறமும் மரங்கள் நிறைந்த போர்ட் ராயல் நெடுஞ்சாலைக்குக் கீழே நான் சென்று கொண்டிருந்தேன், பிறகு செயிண்ட் மார்செல்லையும் எல்ஹோபிட்டலையும் கடந்து, சாம்பல் நிறத்தில் இருந்த அந்த எல்லாவற்றிற்கும் மத்தியில் பச்சை நிறத்தைக் கண்டு, சிங்கங்களை நினைவு கூர்ந்தேன்.

நான் சிங்கங்களுக்கும் சிறுத்தைகளுக்கும் நண்பனாக இருந்தேன்; ஆனால், மீன்காட்சியகமாக இருந்த இருண்ட, ஈரமான கட்டிடத்திற்குள் சென்றதில்லை. இரும்புக் கம்பிச் சட்டகத் தடுப்பான்களுக்கு எதிராக என் பைக்கை விட்டுவிட்டு டூலிப் மலர்த் தோட்டத்தைப் பார்க்கச் சென்றேன். அங்கே சிங்கங்கள் சோகமாகவும் அசிங்கமாகவும் இருந்தன. என் சிறுத்தை தூங்கிக் கொண்டிருந்தது. நான் மீன்காட்சியத்தைப் பார்க்க முடிவுசெய்தேன். மிக சாதாரண மீன்களை ஆர்வமில்லாமல் சாய்வாகப் பார்த்தேன். எதிர்பாராதவிதமாக, அக்சோலோத்களை எனக்கு உடனே பிடித்துப்போனது. ஒரு மணி நேரம் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, வேறு எதையும் யோசிக்க முடியாமல் கிளம்பினேன்.

செயின்ட் ஜெனெவீவ்வில் உள்ள நூலகத்தில், நான் ஒரு அகராதியைக் கலந்தாலோசித்தேன். அக்சோலோத்கள் என்பது ஆம்பிஸ்டோமா இனத்தைச் சேர்ந்த சாலமண்டர் இனத்தின் லார்வா நிலை (செவுள்களுடன் இருக்கும்) என்பதை அறிந்தேன். அவை மெக்சிகன் என்று நான் ஏற்கனவே அவற்றைப் பார்த்ததும் அறிந்துகொண்டேன். அவற்றின் சிறிய இளஞ்சிவப்பு ஆஸ்டெக் முகங்களையும் தொட்டியின் மேற்புறத்தில் உள்ள தகவல் பலகையையும் பார்த்தேன். வறட்சிக் காலங்களில் வறண்ட நிலத்தில் வாழவும் மழைக்காலம் வரும்போது நீருக்கடியில் தங்கள் வாழ்க்கையைத் தொடரவும் கூடிய அவற்றின் மாதிரிகள், ஆஃப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதாக நான் படித்தேன். அவற்றின் ஸ்பானிஷ் பெயர், அஜோலோத் (Ajolote). மற்றும் அவை உண்ணத்தக்கவை என்றும், அவற்றின் எண்ணெய், காட்-லிவர் மீனெண்ணெய் போலப் பயன்படுத்தப்பட்டது என்றும், ஆனால், இப்போது பயன்படுத்தப் படுத்தப்படுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டேன்.

தனிச் சிறப்புகொண்ட படைப்புகளில் எதையும் பார்க்க நான் கவலைப்படவில்லை. ஆனால், அடுத்தநாள், நான் மீண்டும் ஜார்டின் டெஸ் பிளாண்டஸ் சென்றேன். நான் தினமும் காலையிலும் சில நாட்களில் காலையிலும் பிற்பகலிலும் செல்ல ஆரம்பித்தேன். மீன்காட்சியகத்தின் காவலர் குழப்பத்துடன் சிரித்துக்கொண்டே என் டிக்கெட்டை எடுத்துக் கொண்டார். நான் தொட்டிகளுக்கு முன்னால் உள்ள இரும்புக் கம்பியில் சாய்ந்து நின்று அவற்றைப் பார்ப்பேன். இதில் விசித்திரம் எதுவும் இல்லை. ஏனென்றால், முதல் நிமிடத்திற்குப் பிறகு நாங்கள் இணைக்கப்பட்டுள்ளோம் என்று எனக்குத் தெரியும். முடிவில்லாமல் தொலைந்துபோன, தொலைதூரத்தில் உள்ள ஒன்று, எங்களை ஒன்றுசேர்த்து இழுத்துக்கொண்டே இருந்தது.

அந்த முதல் நாள் காலை, தண்ணீருக்குள்ளிருந்து சில குமிழ்கள் எழும்பியிருந்த இடத்திலிருந்த கண்ணாடித் தொட்டிக்கு முன், என்னைத் தடுத்து நிறுத்தியது போதுமானதாக இருந்தது. தொட்டியில் பாசியாலும் கல்லாலும் ஆன இழிவான குறுகிய (எவ்வளவு குறுகலானது, அவலட்சணமானது என்பதை என்னால் மட்டுமே அறிய முடியும்) தரையில் அக்சோலோத்கள் பதுங்கியிருந்தன. ஒன்பது மாதிரிகள் இருந்தன. பெரும்பான்மையானவை தங்கள் தலையை கண்ணாடி மேல் அழுத்தியிருந்தன. அவை, அருகில் வந்தவர்களை தங்கக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தன. குழப்பமடைந்து, கிட்டத்தட்ட வெட்கமடைந்து, தொட்டியின் அடிப்பகுதியில் குவிந்திருக்கும் இந்த அமைதியான, அசையாத உருவங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை ஒரு அசிங்கமாக உணர்ந்தேன். மனதளவில் நான், வலப்பக்கமும் மற்றவற்றிலிருந்து சற்றே விலகியும் இருந்த ஒன்றை, அதை நன்றாகப் பார்த்து கற்பதற்காக தனிமைப்படுத்தினேன். ஒளி கசியும் ரோஜா நிற சிறிய உடலைக் கண்டேன். (நான் சீனத்து பால் கண்ணாடி உருவங்களைப் பற்றி நினைத்தேன்) சுமார் ஆறு அங்குல நீளமுள்ள ஒரு சிறிய பல்லியைப் போல தோற்றமளிக்கும் இது, நம் உடலின் மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியையொத்த, அசாதாரண சுவையுடைய, மீனின் வாலில் முடிவடைகிறது. முதுகு வழியாக ஒளியூடுருவும் துடுப்பு ஒன்று ஓடியது, அது வாலுடன் இணைந்தது. ஆனால், என்னை மிகவும் கவர்ந்தது, மெல்லிய மனித நகங்களுடன் சிறிய விரல்களில் முடிவடையும் மெல்லிய அழகான பாதங்கள். அதன்பிறகு அதன் கண்களையும் முகத்தையும் கண்டுபிடித்தேன். விவரிக்க முடியாத அம்சங்கள். வேறு எந்தச் சிறப்புப் பண்பும் இல்லை, கண்கள் தவிர; இரண்டு ஊசித் துளைகள், முழுக்க ஒளிரும் தங்கம், உயிரில்லாதவை போல இருந்தன. ஆனால், பார்த்துக் கொண்டிருந்தன. என் பார்வையை ஊடுருவ அனுமதித்தன. இது தங்க நிலையைக் கடந்து பயணித்து, ஒரு மிக மெல்லிய ஒளியூடுருவக்கூடிய உட்புற மர்மத்தில் தன்னை இழப்பதாகக் காணப்பட்டது. கண்ணைச் சுற்றிலும் மிக மெல்லியதொரு கறுப்பு ஒளிவட்டம், இளஞ்சிவப்பு நிற சதையில், ஓரளவுக்கு முக்கோணமாக, ஆனால், வளைந்த, முக்கோணப் பக்கங்களுடன் கூடிய ரோஜாநிறக் கல்லையொத்த தலையில் பதிக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் இது, காலத்தால் அரிக்கப்பட்ட ஒரு சின்னஞ்சிறு சிலையைப்போல இருந்தது. முகத்தின் தட்டையான முக்கோணப் பகுதியால் வாய் மறைக்கப்பட்டிருந்தது. அதன் அளவை மொத்த உருவத்துக்குத் தக்கவாறு நாம் யூகிக்க மட்டுமே இயலும்; வாய் முன்பாக ஒரு மென்மையான பிளவு உயிரற்ற கல்லை வெட்டியது. தலையின் இருபுறமும் காதுகள் இருக்க வேண்டிய இடத்தில், மூன்று சிறிய தண்டுகள், பவளம் போன்ற சிவப்பு, ஒரு தாவர வளர்ச்சி; செவுள்கள் என்று நான் நினைக்கிறேன். அதை பற்றிக் கூறுவதானால், வேகமாக இருந்தது; ஒவ்வொரு பத்து அல்லது பதினைந்து வினாடிகளிலும் தண்டுகள் விறைப்பாக, குத்திட்டு நின்று மீண்டும் தணிந்தன. எப்போதாவது ஒரு கால் அரிதாகவே நகரும், சிறிய கால்விரல்கள் பாசியின் மீது மென்மையாக, அமைதியுடன் அடக்கமாக இருப்பதைக் கண்டேன். “நாங்கள் அதிகம் நகர்ந்து மகிழ்வதில்லை, தொட்டி மிகவும் இறுக்கமாக உள்ளது. எந்தத் திசையிலும் நாங்கள் நகர்வதில்லை. வாலை அல்லது தலையை மற்ற எவர் மீதாவது இடித்துவிடுகிறோம். கஷ்டங்கள் உண்டாகின்றன; சண்டைகளும் சோர்வும். அமைதியாக இருந்தால் நேரம் மெதுவாக நகர்வதுபோல் இருக்கும்.

நான் முதல்முறை அக்சோலோத்களைப் பார்த்தபோது அவற்றின் அமைதிதான் என்னை ஈர்த்துப் பிடித்து அவற்றின் பக்கம் சாய்த்தது. ஒரு அலட்சியமான அசைவின்மையுடன் இடத்தையும் நேரத்தையும் அழிப்பதற்கான அவற்றின் ரகசிய விருப்பத்தை நான் தெளிவில்லாமல் புரிந்துகொண்டேன். நான் பின்னர் நன்றாக அறிந்தேன்; செவுள் சுருங்குதல், கற்களின் மீது மென்மையான பாதங்களைத் தற்காலிகமாகக் கணக்கிடுதல், திடீர் நீச்சல் ஆகியவை (அவற்றில் சில, உடலின் எளிய அலைவுடன் நீந்துகின்றன). அவை மணிக்கணக்கில் நேரத்தை செலவழித்த அந்த கனிம சோம்பலில் இருந்து தப்பிக்க வல்லவை என்பதை எனக்கு நிரூபித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவற்றின் கண்கள் என்னை ஆட்கொண்டன. அவற்றின் இருபுறமும் நிற்கும் தொட்டிகளிலுள்ள வெவ்வேறு மீன்கள், அதிகமும் நம் கண்களையொத்த அவற்றின் அழகான கண்களின் எளிய முட்டாள்தனத்தைக் காட்டின. அக்சோலோத்களின் கண்கள் ஒரு வித்தியாசமான வாழ்க்கையின் இருப்பை, பார்த்தலின் மற்றொரு விதத்தைப் பற்றி என்னிடம் பேசின. கண்ணாடியில் என் முகத்தை அழுத்துகிறேன் (பாதுகாவலர் அவ்வப்போது எரிச்சலூட்டும் வகையில் இருமுவார்). இந்த ரோஜா நிற உயிரினங்களின் மெதுவான, தொலைதூர, எல்லையற்ற உலகின் நுழைவாயிலான, அந்த மிகச்சிறிய தங்கப் புள்ளிகளை, மேலும் சரியாகப் பார்க்க முயற்சித்தேன். அவற்றின் முகத்திற்கு நேராக கண்ணாடியில் ஒரு விரலால் தட்டுவது பயனற்றது; அவை ஒரு போதும் குறைந்த எதிர்வினைகூட ஆற்றுவதில்லை. தங்கக் கண்கள் அவற்றின் மென்மையான, பயங்கரமான ஒளியுடன் எரிந்துகொண்டே இருந்தன; அவை புரிந்துகொள்ள முடியாத ஆழத்திலிருந்து என்னைப் பார்த்தன. அது எனக்கு மயக்கத்தை ஏற்படுத்தியது.

ஆயினும்கூட அவை நெருக்கமாக இருந்தன. இதற்கு முன்பே, ஒரு அக்சோலோத்தாக இருப்பதற்கு முன்பே, நான் இதை அறிந்திருந்தேன். முதன்முறையாக அவற்றின் அருகில் வந்த அன்றுதான் கற்றுக்கொண்டேன். ஒரு குரங்கின் மானுடவியல் அம்சங்கள், அவற்றிடமிருந்து நம் வரையிலான பயணத்தின் தூரம், பெரும்பாலான மக்கள் நம்புவதற்கு நேர்மாறாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன. அக்சோலோத்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையின் முழுமையான பற்றாக்குறை, எனது அங்கீகாரம் சரியானது என்பதை நிரூபித்தது; எளிமையான ஒப்புமைகளுடன் நான் முட்டுக்கொடுக்கவில்லை. சிறிய கைகள் மட்டுமே… ஆனால், பல்லியினத்தைச் சேர்ந்த எஃட், பொதுவான நியூட் ஆகியவற்றிற்கும் இத்தகைய கைகள் இருக்கின்றன. மேலும் நாம் ஒரே மாதிரியாக இல்லை. தங்கத்தின் சிறிய கண்களுடன் கூடிய முக்கோண இளஞ்சிவப்பு வடிவத்திலான அக்சோலோத்தின் தலைகளே வித்தியாசப்படுத்துகின்றன என்று நினைக்கிறேன். அது, பார்த்து அறிந்துகொள்கிறது. அதுவே கோரிக்கை வைக்கிறது. அவை விலங்குகள் அல்ல.

புராணங்களுக்குள் விழுவது எளிதானது, கிட்டத்தட்ட வெளிப்படையானது என்று தோன்றும். மர்மமான மனிதகுலத்தை மீட்டெடுப்பதில் வெற்றிபெறாத உருமாற்றத்தை நான் அக்சோலோத்தில் பார்க்க ஆரம்பித்தேன். அவை, தங்களுடைய உடல்களின் அடிமைகள் என்பதைத் தெரிந்து வைத்திருந்தன என்றும் அதலபாதாளத்தின் மௌனத்திற்கும் நம்பிக்கையற்ற தியானத்திற்கும் முடிவற்ற தண்டனை விதிக்கப்பட்டவை என்றும் நான் கற்பனை செய்தேன். அவற்றின் குருட்டுப் பார்வை, எதையும் தெரிவிக்காத மிகச்சிறிய தங்க வட்டாக இருந்தபோதிலும் பயங்கரமாக பிரகாசித்து, ஒரு செய்தியாக எனக்குள் பாய்ந்தது: “எங்களைக் காப்பாற்றுங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்.” குழந்தைத்தனமான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அறிவுரைச் சொற்களை நானே எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன். அவை அசையாமல் தொடர்ந்து என்னைப் பார்த்தன; அவ்வப்போது செவுளின் ரோஜா கிளைகள் விறைத்தன. அந்த நொடியில் நான் ஒரு முடக்கு வலியை உணர்ந்தேன்; ஒருவேளை அவை என்னைப் பார்த்திருக்கலாம், அவற்றின் ஊடுருவுதல் அசாத்தியமான வாழ்க்கையின் விஷயத்திற்குள் ஊடுருவிச் செல்வதற்கு, என் வலிமையை ஈர்த்திருக்கலாம். அவை மனிதர்கள் அல்ல, ஆனால், என்னுடன் இவ்வளவு ஆழமான உறவை, எந்த மிருகத்திலும் நான் காணவில்லை. அக்சோலோத்கள் ஏதோ சாட்சிகள் போலவும், சில சமயங்களில் பயங்கரமான நீதிபதிகள் போலவும் இருந்தனர். அவற்றின்முன் நான் இழிவாக உணர்ந்தேன்; அந்த வெளிப்படையான கண்களில் ஒரு பயங்கரமான தூய்மை இருந்தது. அவை கூட்டுப் புழுக்கள். ஆனால், கூட்டுப்புழு என்றால் மாறுவேடம், மேலும் மாயத் தோற்றம் என்று பொருள். எந்த உணர்வு வெளிப்பாடும் அற்ற, ஆனால், அடக்கமுடியாத கொடூரமும் கொண்ட அந்த ஆஸ்டெக்1 (Aztec) முகங்களுக்குப் பின்னால், அதனுடைய காலத்தில் என்ன சாயல் காத்திருந்தது?

நான் அவற்றிற்குப் பயந்தேன். அருகில், மற்ற பார்வையாளர்களும் காவலர்களும் இருப்பதை உணராமல் இருந்திருந்தால், அவற்றுடன் தனியாக இருக்கும் அளவுக்கு நான் தைரியமாக இருந்திருக்கமாட்டேன் என்று நினைக்கிறேன். “உங்கள் கண்களால் அவற்றை உயிருடன் சாப்பிடுகிறீர்கள், ஆமாம்” காவலாளி சிரித்துக்கொண்டே கூறினார்; நான் கொஞ்சம் கிறுக்கு என்று அவர் நினைத்திருக்கலாம். அவர் கவனிக்காதது என்னவென்றால், அவை என்னை மெதுவாக தங்கள் கண்களால் விழுங்குகின்றன; தங்கத்தின், நரமாமிசம் உண்ணும் வழக்கம். மீன் காப்பகத்திலிருந்து நான் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அவற்றைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டியிருந்தது. அவற்றால் நான் பாதிக்கப்படுவதுபோல் உணர்ந்தேன். நான் ஒவ்வொரு நாளும் போய்க்கொண்டிருந்தேன் என்ற நிலைமை வந்தது. அவை இரவில், இருளில் அசையாமல் இருப்பதைப் பற்றி நினைத்தேன், மெதுவாக ஒரு கையை வெளியே நீட்டி, உடனடியாக மற்றொன்றை எதிர்கொண்டது. ஒருவேளை அவற்றின் கண்கள் ஆழ்ந்த இரவிலும் பார்க்க முடியுமாக இருந்தன. அவற்றின் பகல், காலவரையின்றி தொடர்ந்தது. அக்சோலோத்களின் கண்களுக்கு இமைகள் இல்லை.

விசித்திரமாக எதுவும் இல்லை, அதாவது, அது நிகழ வேண்டியிருந்தது என்று இப்போது எனக்குத் தெரிகிறது. ஒவ்வொரு காலையிலும் தொட்டியின் முன் சாய்ந்து நின்றதால், அங்கீகாரம் பெருமளவுக்கு இருந்தது. அவை தவித்துக் கொண்டிருந்தன. என் உடலின் ஒவ்வொரு இழைகளும் அந்த மூச்சுத்திணற வைக்கும் வலியை நோக்கி, தொட்டியின் அடிப்பகுதியிலுள்ள விறைத்திருக்கும் வேதனையை நோக்கிச் சென்றன. அவை ஏதோவொன்றுக்காக, அழிக்கப்பட்ட தொலைதூர தனனாதிக்கப் பிரதேசத்திற்காக, உலகம் அக்சோலோத்களினுடையதாக இருந்த சுதந்திர யுகத்துக்காக காத்திருந்தன. அவற்றின் கல் முகங்களில் இருந்த கட்டாய வெறுமையைத் தூக்கி எறியும் ஒரு பயங்கரமான உணர்வின் வெளிப்பாடு. அவை அனுபவித்துக் கொண்டிருந்த அந்தத் திரவ நரகத்தின் வலி, அந்த நித்திய தண்டனையின் ஆதாரம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்த செய்தியையும் கொண்டு செல்வது சாத்தியமில்லை. நம்பிக்கையில்லாமல், என்னுடைய சொந்த உணர்வு, அக்சோலோத்கள் மீது, எங்குமில்லாத உணர்வை வெளிப்படுத்துகிறது என்பதை எனக்கு நானே நிரூபிக்க விரும்பினேன். நானும் அவையும் அறிவோம். அதனால் நடந்ததில் விசித்திரம் எதுவும் இல்லை. என் முகம் மீன்காட்சியகத்தின் கண்ணாடியில் அழுந்தியிருந்தது. கருவிழி இல்லாத அந்தத் தங்கக் கண்களின் மர்மத்தை ஊடுருவிச் செல்ல என் கண்கள், மீண்டும் ஒருமுறை முயன்றன. கண்ணாடிக்கு அருகில், ஒரு அக்சோலோத்தின் அசையாத முகத்தை மிக அருகில் இருந்து பார்த்தேன். எந்த மாற்றமும் ஆச்சரியமும் இல்லை. என் முகத்தை, நான் கண்ணாடிக்கு எதிரில் பார்த்தேன். தொட்டியின் வெளிப்புறத்தில் பார்த்தேன். கண்ணாடியின் மறுபுறத்தில் பார்த்தேன். பிறகு என் முகத்தைப் பின்வாங்கியவாறு, புரிந்துகொண்டேன்.

ஒரே ஒரு விஷயம் விசித்திரமாக இருந்தது: வழக்கம் போல், தெரிந்துகொள்வதற்காக யோசித்துக்கொண்டே செல்வது. முதல் கணம், ஒரு மனிதன் உயிருடன் புதைக்கப்பட்ட தனது தலைவிதிக்கு விழித்திருக்கும் பயங்கரம் போன்றதாக அதை உணர்ந்தேன். வெளியே, என் முகம் மீண்டும் கண்ணாடிக்கு அருகில் வந்தது. நான் என் வாயைப் பார்த்தேன். உதடுகள் அக்சோலோத்களைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் அழுந்தியிருந்தன. நான் ஒரு அக்சோலோத்தாக மாறியிருந்தேன். இப்போது எந்த புரிதலும் சாத்தியமில்லை என்று எனக்கு உடனடியாகத் தெரிகிறது. அவர் மீன்காட்சியகத்திற்கு வெளியே இருந்தார்; அவரது சிந்தனை தொட்டிக்கு வெளியிலுள்ள சிந்தனை. அவரை அடையாளம் கண்டு, அவரே என்பதால், நான் ஒரு அக்சோலோத்தாக என் உலகில் இருந்தேன். திகில் தொடங்கியது. அதே தருணத்தில் நான் கற்றுக்கொண்டேன். ஒரு அக்சோலோத்தின் உடலில் நானே சிறைப்பட்டிருக்கிறேன் என்று நம்புவது; என் மனித மனதுடன் அதற்குள் உருமாற்றம் அடைந்திருக்கிறேன். ஒரு அக்சோலோத்திற்குள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறேன். பிரக்ஞையற்ற உயிரினங்களுக்கிடையே தெளிவுடன் நகர்வதற்கு விதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒரு கால் என் முகத்தை மெல்ல உராய்ந்தபோது அது நின்றது, நான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பக்கமாக நகர்ந்தபோது, எனக்கு அடுத்திருந்த ஒரு அக்சோலோத் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. மேலும் தொடர்பு சாத்தியமில்லை என்று அதற்கும் மிகத் தெளிவாகத் தெரியும். அல்லது அதற்குள் நானும் இருந்தேன், அல்லது நாங்கள் எல்லோருமே, வெளிப்படுத்தும் திறன் இன்றி, மனிதனைப் போல சிந்தித்துக் கொண்டிருந்தோம். மீன்தொட்டி மீது அழுந்தியிருந்த மனிதனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் எங்கள் கண்களின் தங்கமயமான பேரழகுத் தோற்றத்துடன் மட்டுப்படுத்தப்பட்டோம்.

அவர் பல முறை திரும்பி வந்தார். ஆனால், இப்போது அடிக்கடி வருவதில்லை. அவர் வராமல் பல வாரங்கள் கழிந்துவிட்டன. நான் நேற்று அவரைப் பார்த்தேன், அவர் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு விறுவிறுப்பாக வெளியேறினார். இனியும் அவர் நம்மீது அவ்வளவாக ஆர்வம் காட்டமாட்டார் என்று எனக்குத் தோன்றியது. அந்தப் பழக்கத்திலிருந்து அவர் வெளியேறிக் கொண்டிருந்தார். என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம் சிந்திப்பது என்பதால், அவரைப் பற்றி என்னால் அதிகம் சிந்திக்க முடிந்தது. ஆரம்பத்தில் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம், எப்போதையும்விட அதிகமாக அவர் மர்மத்துடன் ஒன்றியிருப்பதாக உணர்ந்தார்; அந்த மர்மமே அவரை உரிமையுடன் எடுத்துக்கொண்டது என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால், அவருக்கும் எனக்கும் இடையிலிருந்த பாலங்கள் உடைந்துவிட்டன. ஏனென்றால் அவரது விடாப்பிடியான எண்ணம் இப்போது, அவரது மனித வாழ்க்கைக்கு அந்நியமான, ஒரு அக்சோலோத். ஆரம்பத்தில், அவரிடம் திரும்பிவிடும் திறமை எனக்கிருந்தது. ஒரு குறிப்பிட்ட வழியில் – ஆமாம், ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே ­- எங்களை நன்றாக அறிந்துகொள்ளும் அவரது ஆசையை விழித்திருக்கச் செய்வது மட்டுமே என்று நினைத்தேன். நான் இப்போது நல்லதொரு அக்சோலோத், நான் ஒரு மனிதனைப் போல் சிந்திக்கிறேன் என்றால், ஒவ்வொரு அக்சோலோத்தாலும் தனது ரோஜாக்கல் தோற்றத்திற்குள் ஒரு மனிதனைப் போல சிந்திக்க முடியும் என்பதால்தான். நான் இன்னும் அவராக இருந்த அந்த முதல் நாட்களில் அவரிடம் எதையாவது தொடர்புகொள்வதில் இவை அனைத்துமே வெற்றிபெற்றன என்று நான் நம்புகிறேன். அவர் இனி ஒருபோதும் வரமுடியாத இந்த இறுதித் தனிமையில், ஒருவேளை அவர் நம்மைப் பற்றி ஒரு கதை எழுதப் போகிறார், அவர் ஒரு கதையை உருவாக்குகிறார் என்று நம்பி, அவர் அக்சோலோத்களைப் பற்றி எழுதப் போகிறார் என்று நினைத்து என்னை நான் ஆறுதல்படுத்துகிறேன்.

——————————————————————————————————————-

  1. ஆஸ்டெக் மக்கள், மெக்ஸிகோவைத் தாயகமாகக் கொண்டவர்கள். மெக்ஸிகோ பள்ளத்தாக்கின் மையத்தில் அவர்கள், ஒரு பெரும் பேரரசை நிறுவியிருந்தார்கள். அந்த அரசை 16ஆம் நூற்றாண்டில் கார்ட்டெஸ்ஸும் அவரைப் பின்பற்றுபவர்களும் தோற்கடித்தார்கள். ஆஸ்டெக்குகள், அவர்களுடைய வேளாண்மை, நிலம், கலை, கட்டிடவியல் ஆகியவற்றுக்காக புகழ் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எழுத்துத் திறமையும் ஒரு காலண்டர் அமைப்புமுறையும் இருந்தன. அவர்கள் கோவில்களை அமைத்தார்கள். தங்களுடைய கடவுள்களுக்கு மனிதர்களைப் பலியிடும் வழக்கம் அவர்களிடம் இருந்தது.

 

இக்கதை குறித்து மொழிபெயர்ப்பாளர் சமயவேல் குறிப்பு:

ஹூலியோ கொர்த்தஸாரின் கதைநாயகன், அக்சோலோத்களை தற்செயலாக சந்தித்தது போலவே நானும் இந்தக் கதையை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. சூழலியல் இலக்கியம் என்பது ஒரு தனி வகைமையாக ஆகிவரும் தற்காலத்தில், 1956இல் கொர்த்தஸாரால் எழுதப்பட்ட இக்கதையின் பின்னால் இருக்கும் உயிரியல் மற்றும் சூழலியல் உணர்வு ஆச்சரியம் அளிக்கிறது. தற்போதைய மெக்ஸிகோ நகரத்தின் அடியில் புதையுண்டுபோன இரண்டு ஏரிகளில் வசித்த சாலமன்டர் இனத்தைச் சேர்ந்த அக்சோலோத்கள் மிக விசித்திரமான பிராணியாகும். லார்வாப் பருவத்தைக் கடக்காமலே முதுமையடையும் துயரம் குறித்தும் அவற்றின் பரிணாம உருமாற்றத்திற்கான ஏக்கம் பற்றியும் பேசுகிறது. அக்சோலோத்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி (Amphibian). ஆம்பிபியன்கள் தங்களுடைய வளர்ச்சிப்போக்கில் உருமாற்றம் நிகழ்ந்து செவுள்களை உதிர்த்துவிட்டு நிலத்தில் வாழ ஆரம்பிக்கின்றன. ஆனால், அக்சோலோத்களில் இந்த உருமாற்றம் நிகழாமல் தொடர்ந்து நீரிலேயே வசிக்கின்றன. மேலும் ஒரு அக்சோலோத்தின் மரபணுத் தொகுப்பின் நிரலொழுங்கு (genome sequence), மனித மரபணுத் தொகுப்பைவிடப் பத்து மடங்கு நீளமானது. அவை தங்களது உறுப்புகளை இழக்கும்போது அவற்றை மறுவுருவாக்கம் செய்யும் வல்லமை கொண்டவை. மருத்துவ உலகில் அக்சோலோத்கள் ‘மாதிரி உயிரிகளாக’ இருக்கின்றன. முக்கியமாக இதய நோய்கள் பற்றிய ஆய்வுகளில் பெரிதும் உதவுகின்றன. தற்சமயம் மிகவும் அருகிப்போன பிராணியாக (higly endangered species) அறிவிக்கப்பட்டிருக்கும் அக்சோலோத்களின் எட்டு மாதிரிகள் ஒரு மீன்காட்சியகத்தின் தொட்டிக்குள் அடைபட்டிருப்பதை வேதனையோடு விவரிக்கிறது இந்தச் சிறுகதை. உயிர்ப் பிராணிகளிடம் மனிதர்கள் கொண்டிருக்கும் அக்கறைகள் எல்லாமும் அவற்றைப் பாதிக்கின்றன என்பதை யாரும் உணர்வதில்லை.

சமயவேல் <samayavelbsnl@gmail.com>

samayavel

Amrutha

Related post