ஒரு விடுமுறை பயணம் | பிபுதிபூஷண் பந்தோபாத்யாய் | தமிழில்: அருந்தமிழ்யாழினி

 ஒரு விடுமுறை பயணம் | பிபுதிபூஷண் பந்தோபாத்யாய் | தமிழில்: அருந்தமிழ்யாழினி

வெற்றிலைப் பெட்டியையும் கூடவே புகையிலையையும் அலுவலகத்திலேயே மறந்து வைத்துவிட்டார் கோபி கிருஷ்ணபாபு. போபஜாரின் நடைபாதையை கடக்கும் போது தான் குடையையும் மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. மழை வராது என்று அவர் நினைத்தது தவறென்று தோன்றியது. அந்த மத்திய சாலையிலுள்ள கட்டிடங்களை பெரும் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.

வெற்றிலைப் பெட்டி இல்லாமல் இருப்பதென்பது அவருக்கு சாத்தியமில்லாத ஒன்று. மேலும் அது எளிதில் யார் வேண்டுமானாலும் திருடிச் செல்லக்கூடிய பொருளும் கூட. எனவே, அவர் திரும்பவும் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாதபோதும் கூட அந்த அலுவலகத்தின் பொறுப்பதிகாரி மிகவும் முனைப்புடன் வேலை செய்து கொண்டிருந்தார். அது சர்வநிச்சயமாக மேலதிகாரியை ஈர்ப்பதற்காகவே என்பது அப்பட்டமாக தெரிந்தது. ‘நாசமாய் போ’, என நினைத்துக்கொண்டார் கோபி கிருஷ்ணா.

ஒரு நாளைக்கு ரூ.150க்கான வேலையை அவர்கள் ஒவ்வொருவரும் செய்திருக்கவேண்டும். இல்லையேல் உயரதிகாரியால் வேலையைவிட்டு அனுப்பப்படலாம். யாருக்குத் தெரியும் காலம் இவ்வளவு கடினமாக இருக்குமென்று? சம்பளம் 50 ரூபாயோடு நின்றுவிட்டது. அதற்குப் பிறகு ஊதிய உயர்வு என்று ஒரு பைசா கூட அதிகமாக வரவில்லை. அதிக நேரம் வேலை செய்தால் காசு கொஞ்சம் கூட வரும்தான். ஆனால், அதற்கு சில பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இதில் ஒரு நல்லது என்னவென்றால் அவர்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை அந்த அலுவலகமே தந்துவிடுகிறது. இல்லையேல் அவர்கள் குடும்பம் எப்பொழுதோ பசியால் செத்துப் போயிருக்கும்.

அவருக்கு மிகவும் பசித்தது. தெருவில் ஒரு விற்பனையாளர் சூடாக கச்சோரி தயார் செய்து கொண்டிருந்தார். அதன் விலை நிச்சயமாக நான்கு பைசாவாவது இருக்கும். அவருக்கு அதை வாங்க வேண்டுமென்றிருந்தது. ஆனால், அந்த சூழ்நிலையிலா அவர் இருக்கிறார்? அதற்கு பதில் வேறு ஒரு தேநீர் கடையில் அரை கோப்பை தேநீரும் இரண்டு பைசாக்கு ஒரு சிகரெட்டையும் வாங்கி அவர் பசியை மறக்க முயற்சி செய்தார்.

அருகில் இருக்கும் அந்த சிவப்பு நிற கட்டிடம் ஒரு காலத்தில் தங்கும் விடுதியாக இருந்தது. 50/2, தன்வந்திரி போஸ் தெரு. கோபி கிருஷ்ணா அப்படியே கணக்கு போட ஆரம்பித்தார். அது எப்படியும் 33 வருடத்திற்கு முன்பு இருக்கும். அப்போது அவர் பங்கபாஸி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர். அந்த காலம் அடடா! எத்தனை நண்பர்கள்… பிபின், கண்ணு, பினோத் பாபு, ஷீல், மோத்தி, கங்லா, ஸ்குவிண்டி ஷம்பு, சுஷோபன் மித்ரா என எவ்வளவு நட்பு, எவ்வளவு அன்பு, எவ்வளவு கருத்துப் பரிமாற்றம்.

பெரும் இலட்சியம் அவர்களுக்கு இருந்தது. வீட்டில் இருப்பவர்களை பற்றிய நினைப்பில்லாமல் மும்பைக்கு சென்று அதிக லாபமீட்டக்கூடிய வேலையில் அமரவேண்டும். ஒரு அழகான பார்சி பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு ஒரு வெள்ளைக்கார முதலாளி போல இருக்க வேண்டுமென்றெல்லாம் கனவு கண்டார். ஆனால், எதற்காக ஒரு பார்சி பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென நினைத்தார்? அது சரி… ஒரு வேளை ஈடன் கார்டன் அருகில் எந்த பார்சி பெண்ணையோ பார்த்ததின் விளைவாக இருக்கலாம். அதோடு இங்கிலாந்து செல்ல வேண்டுமென்றெல்லாம் அவர் கனவு கண்டார். அது நிச்சயம் நடக்க கூடிய ஒன்றல்ல. ஆனாலும் அது ஒன்றும் காரணமே இல்லாத ஆசையும் இல்லை. அவரின் மொத்த வாழ்வும் அப்போது அவர் முன்பு இருந்தது. ஒரு வேளை ஏதாவது அதிசயம் நடக்கும் போல.

 

ஸ்குவிண்டி ஷம்பு (ஷம்பு சக்ரவர்த்தி M.B. ஹோமியோ – கோல்ட்டு மெடலிஸ்ட் – ஏழைக்கு இலவச சிகிச்சை) கோபி கிருஷ்ணனின் நண்பர். நீண்ட காலமாக அந்த போபஜார் சந்திப்பில் மருத்துவமனை வைத்துள்ளார். அது அதிக வருமானம் தரக்கூடியதாக இல்லை. கோபி கிருஷ்ணா வீட்டிற்கு போகும்போது அடிக்கடி அங்கு செல்வதுண்டு. அங்கு போனால் தேநீர் இலவசமாக கிடைக்கும். ஒரு இரண்டு பைசாவை சேமிக்கலாம். அதோடு நிறைய நோயாளிகளும் அங்கு இருக்கமாட்டார்கள். எனவே, அது இன்னும் வசதியாய் போய்விட்டது.

அன்று நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார் ஷம்பு. “வா வா உட்கார். இன்னைக்கு நியூஸ் பாத்தியா? ஜப்பான் திரும்ப ஆறு மைல் போய்ருக்காங்க…” என தன் நண்பனை வரவேற்றார்.

“ஐயோ உன் நியூஸ்ஸ கொஞ்சம் விடுறியா… மத்த நாட்டுல என்ன நடக்குதுன்னு பாத்துட்டே இருக்க அளவுக்கு நம்ம வாழ்க்கை ஒன்னும் அவ்ளோ அதிக நாள் இல்ல. டீ குடிச்ச?”

“இன்னும் இல்ல. வா உட்காரு, நான் வாங்கிட்டு வர சொல்றேன்.”

“ஏன் உன் ஸ்டவ்கு என்ன ஆச்சி?”

“பின் செட்டாகல. வாங்க முடியல. என்ன ஆச்சினு தெரியல. நேத்துல இருந்து இம்ச பண்ணிட்டு இருக்கு. ஏ மது…”

அங்கு வேலை செய்யும் மது இரண்டு கோப்பை தேநீரை ஒரு பிடிகலனில் கொண்டு வந்தார். அவர்கள் குடித்த பிறகும் தேநீர் கொஞ்சம் மிச்சமிருந்தது. அதை பிறகு குடிக்கலாமென வைத்துக்கொண்டார்கள். தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போதே பயணம் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு பேரும் பயணங்களில் அதிக விருப்பமுள்ளவர்கள். பயணம் செய்வதில் அவர்களுக்கிருக்கும் விருப்பம், எந்த இடம், என்ன நேரம் சிறப்பானது என்றெல்லாம். ஆனால், குடும்பம், மனைவி, பிள்ளைகள் என சிக்கிக் கொண்டிருப்பவர்கள். அந்த அளவிற்கு செலவு செய்யும் சூழலும் அவர்களுக்கு இல்லை. இருந்தாலும் அதைப்பற்றி பேசுவது அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. ஷம்பு ஒரு முறை மகராவிற்கு சென்றிருக்கிறார். தன் அத்தையின் வீட்டிற்கு. கோபாலகிருஷ்ணன் அதை விட கொஞ்சம் தாண்டி பர்தமான் சென்றிருக்கிறார் அவ்வளவே. இரண்டு பேருக்குமான நீண்ட பயண அனுபவமென்றால் இவைதான்.

ஆனால், ஒவ்வொரு ஆண்டு ஆயுத பூஜை விடுமுறைக்கு முன்பும் பயணத்திற்கான எல்லா திட்டங்களையும் போட்டுவிடுவார்கள். “நிஜமா இந்த வருடம் எங்கயாவது போறோம்… நான் என்ன சொல்றேன்னு புரியுதா? நாம எது எதுக்கோ செலவு பன்றோம், ஒரு 40 ரூபாய் இதுக்காக சேர்த்துவச்சா காசி போகலாம்.”

காசியா, கயாவா இல்ல சண்டால் பர்கனா? என இருவருக்கும் விவாதம் தொடங்கும். அப்போதைக்கு அந்த திட்டங்களை ஒத்தி வைப்பார்கள். அடுத்த நாள் அதே கேள்வி தொடரும். “என்ன சொல்கிறாய்? பஹல்பூரை முடிவு செய்து விடலாமா? நாம் இதுவரை மலை பிரதேசத்திற்கு சென்றதே இல்லை. பஹல்பூரில் மலைகள் இருக்கின்றனவா? அது எனக்கும் உறுதியா தெரியாது. சீக்கிரமாகவே பூஜை நாளும் வருகிறது.”

அந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே அருகிலும் தூரமும் உள்ள நிறைய இடங்களை பற்றி பேசுவார்கள். பேஷ்வர் கஷ்மீர், டெல்லி, ஜெய்ப்பூர் பிருந்தாவன் ஷில்லாங், பிர்ப்ஹம் மாவட்டத்தில் உள்ள நல்ஹாட்டி வரை. இவ்வளவு திட்டம் தீட்டியும் இறுதியில் எங்கும் செல்லாமல் அவர்கள் திட்டம் முடியும். ஒன்று ஷம்பு அவருடைய நில உரிமையாளரால் மூன்று மாதம் வாடகை தராமல் இருப்பதற்காக மிரட்டப்படுவார். அல்லது கோபி கிருஷ்ணாவின் இளைய மகன் டைபாய்டு நோயினால் பாதிக்கப்படுவான். அவ்வளவுதான் இப்படி அவர்களின் எல்லா திட்டங்களும் காற்றில் கரைந்துவிடும்.

இது பல வருடங்களாக தொடர்வது. இருந்தாலும் அந்தப் பயண விரும்பிகள் அவர்களுடைய கனவை விடுவதாக இல்லை. அவர்களுடைய திட்டம் பருவ காலத்தில் தொடங்கி பூஜை விடுமுறை முன்பு வரை தொடரும். திட்டம் போடுவதால் செலவா ஆகி விடப்போகிறது? ரயில் அட்டவணையை பார்ப்பது, தூரப் பிரதேசத்தின் பெயர்களை கண்டுபிடிப்பது அவர்களுக்குள் மிகப்பெரும் மகிழ்ச்சி உருவாக்கியது.

 

ன்று கோபி கிருஷ்ணா தேநீர் அருந்திக்கொண்டே, “ஆயுத பூஜைக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது” என்றார். “இந்த முறை நிச்சயமாக நாம் எங்காவது செல்ல வேண்டும். இன்னைக்கு முடிவு செய்துவிடலாம். என்ன சொல்கிறாய்? அட்டவணையை தயார் செய்துவிட்டாயா? இதோ அட்டவணை தயாராகிவிட்டது.”

யாரும் எங்கும் போகாவிட்டாலும் அட்டவணை எப்போதும் தயாராக இருக்கும். ஷம்பு அவருடைய மூக்கு கண்ணாடியை அணிந்து ஒவ்வொரு பக்கங்களாக திருப்ப ஆரம்பித்தார்.

“சித்ரகூட் நல்ல இடம் என்று கேள்விப்பட்டேன். உனக்கு அதைப் பற்றி ஏதாவது தெரியுமா?”

இது கிட்டத்தட்ட ஒரு கண் தெரியாதவர் இன்னொரு கண் தெரியாதவரை வழி நடத்துவது போலதான்.

“ம் ஆமாம் அது ஒரு நல்ல இடம்” கோபி கிருஷ்ணன் சொன்னார்.

“எவ்வளவு செலவாகும் என்று பார். இந்த முறை தயவுசெய்து இல்லை என்று சொல்லாதே சித்ரகூட்டிற்கு செல்லலாம்.”

அவர்கள் பயணங்களில் ஏற்படும் தொய்விற்கு கோபி கிருஷ்ணனின் கருத்து மட்டுமே காரணம் அல்ல என்பதை அவரால் எளிதாக சொல்ல முடியும். ஆனால், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அவர்கள் ரயிலினுடைய பயணச்சீட்டு தொகையை கண்டுபிடித்துவிட்டார்கள். “இருபது ரூபாயை தங்குவதற்கும் பான், சிகரெட் செலவிலும் சேர்த்துவிடு. இது போர்க்காலம், உனக்கு நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதல்லவா?”

“ஆமாம்… நிச்சயமாக, நிச்சயமாக.”

“பிறகென்ன நாம் தயாராகிவிடலாமா? என்ன சொல்கிறாய். ஆயுத பூஜை வெகு தொலைவில் இல்லை.”

இதெல்லாம் ஒரு முடிவுக்கு வரும் வரை இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் அந்த இரண்டு நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். காசை மிச்சப்படுத்துவதற்காக வீட்டிலிருந்தே உணவு கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். எல்லாமே விலை அதிகமாக இருந்தது. ஷம்பு அந்தப் பட்டியலில் இன்னும் கொஞ்சம் சேர்த்தார். “கொசு வலை, தலையணை…”

கோபி கிருஷ்ணன் பொறுமையற்றவராய் அவரை நிறுத்தினார். “சரி, சரி நீளமா சொல்லிட்டே போகாத. எல்லாத்தையும் எழுது. நாம முடிவு செய்ய வேண்டும். சரி, கொசு வலை, தலையணை வேறு என்ன? போர்வை…”

“போர்வை?”

“எடை குறைவானது…”

“இது மருத்துவமனையா?” அவர்கள் பேசுவதற்கு இடையில் வெளியில் இருந்து யாரோ ஒருவர் கேட்டார்.

“ஆமாம், ஆமாம் உங்களுக்கு என்ன வேண்டும்?”

“ஹோமியோபதி?” அந்த மனிதர் கேட்டார்.

“ஆமாம். சிறப்பான ஹோமியோபதி. யாருக்காக? யாருக்கு உடம்பு சரியில்லை?”

“யாரும் சுகவீனமாக எல்லாம் இல்லை. சும்மா கேட்டேன்…”

இந்த மனிதன் சென்றுவிட்டான். ஷம்பு எரிச்சல் அடைந்தவராய் திரும்பி பட்டியல் எழுத சென்றார். “அந்த மனுஷன பார்த்தியா தேவை இல்லாம… நேரத்த வீணடிச்சிக்கிட்டு…”

“சரி விடு கனமில்லாத போர்வைனு சொல்லிட்டுருந்த இல்ல அடுத்து?”

நேரம் பத்து மணிக்கு மேல் ஆனதால் அதோடு நிறுத்திவிட்டு அடுத்த நாள் மாலை தொடரலாம் என்று முடிவெடுத்தார்கள்.

bibhutibhushan bandopadhyay
பிபுதிபூஷண் பந்தோபாத்யாய்

கோபி கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றார். இரவு உணவு முடித்துவிட்டு படுக்கைக்கு சென்றார். ஆனால், அந்தப் பயணம் தொடர்பான திட்டமிடுதலின் பரவசம் அவரை தூங்க விடவில்லை. சித்ரகூட் எவ்வளவு தொலைவிருக்கும்? ஒருவேளை நிறைய காடு மலைகளுக்குள் பயணிக்க வேண்டும் போல. ஒருவேளை அது நீண்ட தொடர் வண்டி பயணமாக இருக்கும். அவர்கள் இருவரும் நிறைய மகிழ்ச்சியாக இருக்க போகிறார்கள். ஆமாம் அவர் ஒரு நல்ல சிகரெட் பெட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும். விலையுயர்ந்தது? இருக்கட்டுமே அதற்கென்ன. காசை அதிக மதிப்பில்லாதவற்றுக்கெல்லாம் செலவு செய்கிறோமே. இது அவர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணம். அவர்கள் மலைகளைப் பார்ப்பார்கள். கோபி கிருஷ்ணன் தன் வாழ்நாளில் இதுவரை மலைகளை பார்த்ததேயில்லை.இன்னும் பூஜைக்கு எத்தனை நாட்கள் இருக்கிறது?

கோபி கிருஷ்ணா படுக்கையில் இருந்து எழுந்து நாட்காட்டியை பார்க்க வேண்டியதாக இருந்தது. இன்னும் 26 நாட்கள்தான். அதற்குள் தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோபி கிருஷ்ணன் மனைவியின் பெற்றோர் கொலஹட்டிற்கு அருகில் வசிக்கிறார்கள். அவருடைய தம்பிகளுள் ஒருவருக்கு ராணுவத்தில் வேலை கிடைத்து கான்பூருக்கு சென்றுவிட்டார். பெற்றோரை பார்ப்பதற்காக திரும்பி வந்திருக்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக கோபி கிருஷ்ணனின் மனைவி அவரை நச்சரித்துக் கொண்டிருந்தார். “நாம் ஏன் இந்த பூஜை விடுமுறைக்கு கோலஹட்டிற்கு சொல்லக்கூடாது? அப்படியே தம்பியையும் பார்த்தது மாதிரி இருக்கும்ல.”

கோபி கிருஷ்ணனுக்கு எரிச்சலாக இருந்தது,

“ஆமா அந்த பழங்கால கிராமத்திற்கு போய் உன் தம்பியை பார்க்கிற அளவுக்கு எனக்கு எந்த வேலையும் இல்லாம இருக்கு பாரு” என்றார்.

அவருடைய மனைவியும் கொஞ்சம் தெளிவாகவே பதில் சொன்னார். “அவங்க பண்டைய காலத்து ஆளுங்களாவே இருந்தாலும், என்னுடைய தம்பி, உங்களை விடவும் அந்த ஹோமியோபதில தண்ணி விக்கிற உங்க ஃப்பிரண்ட விடவும் நல்ல வேலையில தான் இருக்கான். அவனாச்சும் 150 சம்பாதிக்கிறான். ஆனா நீங்க? கல்யாணமான காலத்துல இருந்து 60 ருவாவோடயே நிக்குது. இரண்டு பேர் மட்டும் பெல்லூர் போனா கூட செலவு பண்ண முடியல உங்களால.”

கோபி கிருஷ்ணன் திரும்பி கண்களை மூடிக்கொண்டார். அவளுடன் விவாதம் செய்வதில் எந்த பயனும் இல்லை.

அடுத்த நாளும் தன்னுடைய நண்பனை அலுவலகம் முடிந்து சந்தித்தார் கோபி கிருஷ்ணன். அதே தேநீர். மீண்டும் விவாதம் அதே பயணத்தை பற்றி தொடர்ந்தது. இப்போது ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால் யார் எவ்வளவு பணம் கொண்டு வருவது என்பது. “நேற்று நீ சென்ற பிறகு அஷீ ஷன்யால் வந்திருந்தார். அவர் நிமிஹட்னு ஒரு நிலையத்தை பற்றி சொன்னார். நம்முடைய பயணத்தை அங்கே நிறுத்தினால் பரேஷ்நாத் மலையை ஏறலாம். நாம் ஏன் அப்படி செய்யக்கூடாது? அப்படி செய்தால் ஒரே பயணத்தில் இரண்டு இடங்களை பார்க்க முடியும்” என்று சொன்னார் ஷம்பு.

“பரேஷ்நாத்?”

“ஆமாம். வங்காள சமவெளியின் மிக உயர்ந்த மலைச் சிகரம்.”

“சரி சரி, அது நல்ல யோசனையாக தான் தோன்றுகிறது, செய்யலாம்.”

“சரி இப்போது அதற்கு ஆகும் பணச்செலவை பார்க்கலாம்… பயணச்சீட்டு, கூடவே உணவு…”

“எதிர்பாராத செலவு…”

“பொருள் எல்லாம் வாங்குனா அதுவே பாதி காசை சாப்டுடும். அதெல்லாம் ஓரமா வை. இப்போதைக்கு முக்கியமானதை கணக்கு போடு.”

அந்த மாலைப்பொழுதும் இவ்வாறாகவே செலவழிக்கப்பட்டது.

அடுத்த மாலை பயண சாமான்களைப் பற்றி தொடங்கியது. கொசு வலையை எடுத்து செல்லலாமா வேண்டாமா என. “அதெல்லாம் அந்த நாளே முடிவு செய்யக்கூடிய ஒன்றல்ல. அங்கு கொசு இருக்கிறதோ இல்லையோ கொசு வலையை எடுத்துச் செல்வது புத்திசாலித்தனமானது. மலேரியா ஃபிலேரியானு நிறைய நோய் வரும். அதனால கொசு வலை ரொம்ப முக்கியமானது” என்றார் ஷம்பு. ‘மேற்கு வங்காளத்தின் மலைப் பகுதியில் கொசுக்களே இல்லை. அது ஒன்றும் மற்ற பகுதியை போல் சதுப்பு நிலமோ ஈரப்பதம் கொண்டதோ இல்லை. எதற்கு தேவையில்லாமல் சுமந்து செல்ல வேண்டும்’ என்பதே கோபி கிருஷ்ணணின் எண்ணமாக இருந்தது. மணி பத்தானது அந்த நாளுக்கான விவாதத்தை முடித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு சென்றனர்.

அடுத்த நாளுக்கான விவாதம் எந்த உணவை எடுத்துச் செல்வது என்பதை பற்றியதாக தொடங்கியது. வீட்டில் செய்த பரோட்டாவும் உருளைக் கிழங்கு மசியலும் ரயில் பயணத்திற்கு சரியாக இருக்குமென இருவருமே முடிவெடுத்தனர். ரயில் நிலையங்களில் உணவு விலைமிக்கதாக இருந்தது. ஒரு ரூபாய் கொடுத்து வாங்கும் உணவு கூட வயிற்றிற்கு போதுமானதாக கூட இருக்காது.

இப்போது விவாதம் லூச்சி எடுத்து செல்வதா இல்லை பரோட்டா எடுத்து செல்வதா என ஆரம்பித்தது. உருளைக்கிழங்கை வேண்டுமானால் விட்டுவிடலாம் ஏனெனில் அதுதான் விலை அதிகமாக இருக்கிறது. பூசணிக்காய் சப்ஜி எடுத்து சென்றால் என்ன?

இந்த மாதிரியான பேச்சுகளாக சில நாட்கள் சென்றது. அதே சமயம் பூஜை விடுமுறையும் நெருங்கிக்கொண்டே வந்தது. கோபி கிருஷ்ணனை அவரின் முதலாளி அழைத்திருந்தார். “நான் இப்போவே இதை சொல்லிடுறேன். இந்த வருடத்திற்கான பூஜை போனஸ் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை” என்று சொன்னார்.”

“ஏன் இல்லை சார்?”

“ஏனென்றால் போன வருடம் நீங்களும் இன்னும் சிலரும் வாங்கினீர்கள். அதனால் அதை சமன்படுத்துவதற்கு இந்த வருடம் யாரெல்லாம் வாங்கவில்லையோ அவர்களுக்கு தருகிறோம்.”

“ஆனால், சார், இது சரியில்லை. போன வருடம் நாங்கள் செய்த சிறப்பான பணிக்காக தானே வெகுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த வருடம் நாங்கள் என்ன தவறு செய்தோம்?”

ஆனால், வழக்கம்போல்தான் வங்காள அலுவலகங்களில் முதலாளியின் முடிவே இறுதியானது. அவர்களோடு விவாதம் செய்வது எந்த வகையிலும் உதவாது. கோபி கிருஷ்ணனுக்கு அந்த மாதத்திற்கான ஊதியம் மட்டுமே கிடைத்தது. ஆனால், மற்றவர்களுக்கோ ஒன்றரை மாதத்திற்கான ஊதியம் வெகுமதியாக கிடைத்தது. அதே நாள் முன் பணத்திற்காக வேண்டி பதிவு செய்தார் கோபி கிருஷ்ணன். ஆனால், 15 ரூபாய் மட்டுமே கிடைத்தது. அவரது சொந்த ஊரிலிருந்து வந்த ஒரு கடிதத்தால் அதையும் அவரால் வைத்திருக்க முடியவில்லை. கொஞ்ச காலமாக சொத்து வரி கட்டாததால் இடத்தை பறிமுதல் செய்யப்போவதாக மிரட்டுகிறார்கள் எனவும் ஆறு கால தவணையாக 8 ரூபாய் 13 அணாவை உடனடியாக கட்ட வேண்டும் எனவும் கோபி கிருஷ்ணனின் அத்தை அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்ததும் கோபி கிருஷ்ணனுக்கு முதலில் கோபம் தான் வந்தது. “அவர்கள் அதை பறிமுதல் செய்யட்டும். நான் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை. மண்டிய புதரும் களையும் கொசுவும் இடிந்துபோனதுமான அந்த இடத்துக்கு நான் ஏன் கவலைப்படனும். அந்தத் தோட்டத்துல வர பழங்கள் எல்லாம் அவங்க அனுபவிப்பார்களாம். ஆனா வரி கட்ட மாட்டார்களா? நான் ஏன் கட்டனும்? நானா அங்க வாழுறேன்?”

அத்தை வயதாகி இறந்த பிறகு கோபி கிருஷ்ணன் தான் அந்த இடத்திற்கு சொந்தக்காரர். ஆகவே, அத்தை மட்டுமே வரி செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது சரியாக இருக்காது என கோபி கிருஷ்ணனின் மனைவிதான் அவரை சமாதானப்படுத்தினார்.

அன்று மாலை கோபி கிருஷ்ணன் ஷம்புவின் மருத்துவமனைக்கு சோர்வோடும் மன அழுத்தத்தோடும் சென்றார். அதே மனநிலையோடுதான் அவர் நண்பரும் இருந்தார். தேநீர் மட்டும் அருந்தினார்கள். பயணம் பற்றிய எதையும் பேசவில்லை. கோபி கிருஷ்ணன் தான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து, “ம்… பயணம் பற்றிய யோசனை ஏதாவது இருக்கிறதா?” என கேட்டார்.

ஷம்பு பெருமூச்செறிந்தவராய், “நான் சம்பாதித்த அனைத்தும் வீட்டில் உள்ளவர்களுக்கு துணி வாங்கவும் பரிசு பொருட்கள் வாங்கவுமே சரியாகிவிட்டது. ஒரு புடவை 43 ரூபாய் என்றால் உன்னால் நம்ம முடியுதா? எல்லாம் எவ்ளோ விலையேறிடிச்சி பார். ஆனால், இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. ஒருவேளை கடினமான ஏதாவது ஒன்று வரலாமோ என்னவோ” என சொன்னார்.

பிறகு கோபி கிருஷ்ணன் தன்னுடைய நிலையை சொன்னார். அவர்கள் இருவரின் நம்பிக்கையும் அந்த ஐந்து நாட்கள் மேல் நிலைக்கொண்டது. அவரது நண்பரை போலல்லாமல் இந்த ஐந்து நாட்களுக்குள் எந்த பணத்தையும் ஏற்பாடு செய்ய முடியாது. அவ்வளவு ஏன் லாட்டரி சீட்டில் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை என கோபி கிருஷ்ணனுக்கு தெரிந்தே இருந்தது.

“சித்ரகூட்டிற்கு போகமுடியாவிட்டாலும்… அவ்வளவு தூரம்…” என ஷம்பு ஆரம்பித்தார். “அந்த அட்டவணையில் அருகில் இருக்கும் இடங்கள் உள்ளது. முனிவர் ரிஷ்யாஷ்ரிங்கா ஆசிரமம் இருக்கிறது. கஜ்ரா நிலையத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தான். இங்கு இயற்கை காட்சிகள் நன்றாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. என்னுடைய மச்சினிச்சியும் பரேஷ்நாத் மலைகள் பற்றி சொன்னார். நிமக்ஹட் நிலையத்திலிருந்து ஒரே வழிதான் அது கொஞ்சம் செலவு குறைவு. அங்கு போகலாமா?”

திரும்பவும் 10 மணி வரை இதே பேச்சு தொடர்ந்தது. ரிஷ்யாஷ்ரிங்கா அல்லது பரேஷ்நாத்? எது செலவு குறைவாக இருக்கும் என. அந்த அட்டவணையோடு ஒப்பிட்டு கணக்குபோட்டு பார்த்ததில் ஒருவருக்கு 25இலிருந்து 30 ரூபாய் தேவையாயிருந்தது. அதுதான் இருப்பதிலேயே குறைவானது.

“எப்படியாவது சமாளிச்சிக்கலாம்” என உறுதியாக சொன்னார் ஷம்பு.

ஆச்சரியமாக கல்கத்தாவில் அப்போது குறிப்பிடும்படி நோய்களும் நோயாளிகளும் குறைந்து இருந்தார்கள். முன்பெல்லாம் ஷம்பு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு ரூபாயாவது சம்பாதித்து விடுவார். ஆனால், இப்போது 5 அணா மதிப்புள்ள Nux- vomika மருந்து விற்பது கூட கடினமாக இருந்தது. அங்கு நோயாளிகள் மட்டுமல்ல மருந்து வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கூட வரவில்லை.

இது போதாதென்று கிராமத்தில் வாழ்கை சிரமாயிருக்கிறதென்று ஷம்புவின் தம்பியும் அவன் மனைவியும் அவரின் உதவியை நாடி வீட்டிற்கு வேறு வந்துவிட்டார்கள். ஏனெனில் ஷம்புதான் பிரபலமான மருத்துவராயிற்றே. அவரால் எப்படி அவர் தம்பியை ஏமாற்றமுடியும்.

கோபி கிருஷ்ணனுக்கும் காலம் சற்று கடினமாக தான் இருந்தது. அவருடைய தம்பி மகளும் அவள் கணவனும் அவரை பார்க்க வரும்போது ஐந்து ரூபாய்க்கு ஹில்சா மீனை வாங்கிவந்துவிட்டார்கள். கோபி கிருஷ்ணணின் மனைவிதான் அவர்கள் திரும்பி செல்லும் போது அதற்குண்டான பணத்தை தந்து அனுப்புமாறு நினைவு படுத்தினார்.

“நான் எதற்காக கொடுக்க வேண்டும்? அவ்வளவு விலையில் உயர்ந்த மீனை நானா வாங்கி வர சொன்னேன்? ஏன் அது இல்லைனா பசியோடவே இருந்துடுவோமா நாம?” என கோபத்தில் கத்தினார் கோபி கிருஷ்ணன்.

“ஷ்ஷ்ஷ்… நீங்க அப்படி எல்லாம் பேசக்கூடாது. என்ன இருந்தாலும் அவர் உங்க மருமக புள்ள. அவருக்கு திரும்பிக் கொடுத்து தானே ஆகணும். அவர் மட்டுமா சாப்பிட்டாரு. நம்மளும் தான சாப்பிட்டோம்?” என சமாதானப்படுத்தினார் கோபி கிருஷ்ணனின் மனைவி.

“அதனால் என்ன? அதுக்கு ஒரு ஐந்து அணாவுக்கு கெண்ட மீன் வாங்கிருக்கலாம். ஐந்து ரூபாய்க்கு இதை வாங்கி என்ன கிடைச்சது?”

வழக்கம் போல தான் அந்த விவாதங்களால் எந்த பயனும் இல்லை. விருந்தினர்கள் கிளம்பும்போது மருமகனின் சட்டைப்பையில் ஐந்து ரூபாயை திணித்தார் கோபி கிருஷ்ணன். அவர் எட்டு ரூபாயை சேமிக்கலாம் என நினைத்திருந்தார். ஆனால், ஐந்து ரூபாய் வீணாய் செலவானது.

 

ந்த இரண்டு நண்பர்களும் ஷம்புவின் மருத்துவமனையில் பேசிக்கொண்டிருந்தார்கள். பயணம் பற்றி எந்த திட்டங்களும் இல்லை. எனெனில் அவர்களுக்கு தெரிந்துவிட்டது இந்த வருடமும் எந்த பயணமும் போவதில்லையென. அவர்கள் இப்போது தாவரவியல் பூங்கா பற்றி பேசிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் ஆயுத பூஜையின் முதல் நாள்.

கோபி கிருஷ்ணன் அவசரமாக தன் சட்டை பையில் இருந்து ஒரு காகித அட்டையை வெளியே எடுத்தார். கொஞ்சம் தயக்கத்தோடு, “நான் என்ன சொல்ல வரேன்னா, என் அலுவலகத்திலிருக்கிற பங்க்கு ஷங்கர் இதை என்னிடம் கொடுத்தார். அவரோட சொந்த ஊர் லங்கல்போட்டாவில் பூஜை செய்கிறார்கள் இது அதற்கான அழைப்பிதழ். இரண்டு இரவும் இராமாயணம் பாடுறது, மந்திரம் படிக்குறது அப்புறம் இன்னும் நிறைய இருக்கும். அங்க போகலாமா? ரொம்ப தூரம் கூட இல்ல. பரசத் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தான். அது நகரத்தில் இருந்து கொஞ்சம் வெளியே. நாம திட்டம் போட்டபடி பூஜைக்கு நகரத்திலிருந்து வெளியே இருப்போம். அதோட அது நல்ல இடம்னு அவரும் சொல்லி இருக்கார். பசங்கலெல்லாம் ஒன்னா சேர்ந்து ரோடு போட்டு களையெல்லாம் எடுத்துனு நிறைய பண்ணுவாங்களாம். அதோட அங்க ஒரு பழைய சிவன் கோயிலும் இருக்காம். அங்க போகலாம். விடியற்காலையில டட்டாபுகர் லோக்கல் ட்ரெயின் 7 மணிக்கு சீல்டா ஸ்டேஷனிலிருந்து கிளம்பும். அது சுலபமா கிடைச்சுரும். அது கண்டிப்பா ஒரு அற்புதமான பயணமா இருக்கும்” என சொல்லி முடித்தார்.

“இது ஒரு அற்புதமான செய்தி! சரி, சரி போகலாம். நான் சரியான நேரத்துக்கு அங்க இருப்பேன்” என பரவசத்தோடு சொன்னார் ஷம்பு.

அடுத்த மூன்று நாட்களும் அந்த நண்பர்கள் லங்கல்போடாவில் சந்தோசமாக பொழுதைக் கழித்தார்கள்.

பழங்கால சிவன் கோவில், சௌதரியின் பழமையான குளம் என உண்மையாகவே அங்கு பார்ப்பதற்கு பல அழகான இடங்கள் இருந்தன. அந்த கிராமத்து மக்களே தங்களுக்கான சாலையை அமைத்திருந்தார்கள். சனி மற்றும் ஞாயிறுகளில் கத்திரிக்காய், சுரக்காய் உருளைக்கிழங்கு என கிராம சந்தையில் நிறைய விற்றார்கள். பூஜையில் மூன்றாவது நாள் விடிய விடிய இராமாயணம் பாடினார்கள். அடுத்த நாள் கிருஷ்ணனுடைய நாடகம் இருந்தது. உணவும் அவ்வளவு அற்புதமான இருந்தது. அவர்களை அழைத்த பங்க்கு ஷங்கரின் உபசரிப்பும் மெச்சிக் கொள்வதாய் இருந்தது.

அந்த வருடம் கோபி கிருஷ்ணனும் மருத்துவர் ஷம்புவும் சிறப்பான பயணத்தை மேற்கொண்டார்கள்.

அருந்தமிழ்யாழினி <aruntamilyazhiniaravindan@gmail.com>

Arunthamizh Yazhini

Amrutha

Related post