மூன்று பேர் | முபீன் சாதிகா

 மூன்று பேர் | முபீன் சாதிகா

ஓவியம்: Walter Langhammer

 

மயிலவன்-1

அவன் பெயர் மயிலவன் என்று இருப்பதைக் குறித்து இதுவரை பலரும் அவனிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனர். அதற்கு முருகனின் வேறு பெயர் என்று சொல்லிவிட்டிருந்தான்.

அவனுக்கு இப்படி ஒரு விநோதமான பெயர் இருப்பதைக் குறித்து பெரிய ஆதங்கமே வந்துவிட்டது. பெயர் மாற்றிக்கொள்ளலாமா என்றும் நினைத்தான். ஆனாலும் வேறுபட்ட பெயராக இருப்பதால் நினைவில் வைத்துக்கொள்வது எளிது என்று எண்ணி ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

ஒரு நாள் அவன் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு அவனைத் தேடி ஒருவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவன் யாரென்று பார்க்கப் போனான். தூரத்திலிருந்து பார்த்தால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அருகில் சென்று நின்றான். “என் பெயர் மயிலவன். என்னை எதற்காகப் பார்க்க வந்திருக்கிறீர்கள்” என்று கேட்டான். அவன்,  “எழுந்து வெளியில் சென்று பேசலாமா” என்று அழைத்துச் சென்றான். அருகில் இருந்த உணவு விடுதிக்கு வந்து அமர்ந்தார்கள். வந்தவன் தண்ணீர் அருந்தினான். அங்கே இங்கே பார்த்துவிட்டு தயக்கமாகப் புன்னகைத்தான். “எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை” என்றான். “ஏதாவது சிக்கலா” என்று கேட்டான் மயிலவன். அவன் ஒரு சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்தான். “நீங்கள் என்னை அறியாமல் இருக்கலாம். நான் உங்களை நன்றாக அறிவேன்” என்றான். “எப்படி” என்றான் இவன். “தினம் உங்களைப் பின் தொடர்கிறேன்” என்றான் அவன். “எதற்காக” என்றான் இவன். “உங்கள் பெயருக்காக” என்றான் அவன். “உங்கள் பெயர் என்ன” என்று கேட்டான் மயிலவன். “என் பெயரும் மயிலவன்தான்” என்றான் வந்தவன்.

இவனுக்கு ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்பட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “எதற்காக என்னைக் காண வந்தீர்கள்” என்று கேட்டான். “இப்போது நீங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் இடத்தில் உங்களுக்கு எப்படி வேலை கிடைத்தது” என்று கேட்டான் அவன். “ஏன்” என்று கேட்டான் இவன். “தெரியாதது போல் பேசக் கூடாது. உங்களுக்கும் எனக்கும் ஒரே பெயர் இருப்பதால் எனக்கு சிபாரிசு செய்யப்பட்ட வேலையில் நீங்கள் சேர்ந்துவிட்டீர்கள். அது உண்மைதானே” என்று கேட்டான் வந்தவன். “இல்லை” என்று இவன் தயங்கினான். “பரவாயில்லை. அப்போது எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு பல நாள் மருத்துவமனையில் இருந்தேன். ‘எப்படியும் உங்கள் வேலை எனக்குக் கிடைத்திருக்காது’ என்று நினைத்து மனதைத் தேற்றிக்கொண்டேன். இருந்தாலும் உங்கள் நிறுவனத்தில் வந்து பார்க்கலாம் என்று விசாரித்தேன். அப்போதுதான் நீங்கள் பணிபுரிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதுவும் நான் வரவேண்டியிருந்த அதே நாளில் அதே சிபாரிசுடன் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என்று அறிந்துகொண்டேன். முதலில் உங்கள் மீது கோபம் வந்தது. அதன்பின் உங்களின் ஆள் மாறாட்ட திருட்டை எல்லோரிடமும் வெளிப்படுத்தி உங்களை எதற்காகச் சிக்க வைக்கவேண்டும் என்று தோன்றியது. அதுவும் இல்லாமல் எனக்கு இப்போது வேலையும் தேவை இல்லை. நான் மயிலவன் என்ற பெயர் கொண்டவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறேன். என் வழியை அவன் தீர்மானிப்பான்” என்று ஆகாயத்தை நோக்கி கையைக் காட்டிக் குறிப்பிட்டான் வந்தவன்.

அவன் பேசியதைக் கேட்டு மயிலவனுக்கு அதிர்ச்சி. மேலும், ‘அவன் தன்னை எதுவும் செய்ய வரவில்லை, வெறும் தன் திருட்டுத்தனத்தைச் சுட்டிக்காட்ட மட்டும் செய்திருக்கிறான். அதுமட்டும் இல்லாமல் மயிலவன் என்று தானும் பெயர் கொண்டிருப்பதால் தன்னைச் சந்திக்க ஆர்வம் கொண்டு வந்திருக்கிறான்’ என்று நினைத்தான்.

வந்தவன் மகிழ்ச்சியுடன் எழுந்து புறப்பட்டுப் போனான். மீண்டும் அலுவலகம் வந்து அமர்ந்த மயிலவனுக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. தான் ஒரு திருடன் என்று தன் முன் ஒருவன் கண்ணாடியை வைத்துக் காட்டிவிட்டுச் சென்றுவிட்டான் என்ற எண்ணம் அவனை நிலைத் தடுமாற வைத்தது. வீட்டுக்குக் கிளம்பினான். ‘வேலையை விட்டுவிடலாமா’ என்று யோசித்தான். இரு பெண் குழந்தைகள் உள்ளன. அவற்றை எப்படி வளர்ப்பது என்று யோசனையாக இருந்தது. வேலையை விட்டுவிட்டால் திருட்டைச் செய்யவில்லை என்றாகிவிடுமா எனவும் நினைத்துப் பார்த்தான். ஆனால், இதற்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்யவேண்டும் போல் அவனுக்குள் தோன்றியது. தற்கொலை செய்துகொண்டால் என்ன என்றும் நினைத்தான். உயிரைக் கொடுக்கும் அளவுக்கான திருட்டு இது இல்லை என்றும் சமாதானப்படுத்திக் கொண்டான். வேறு எப்படி இதற்குத் தீர்வு காண்பது என்றும் புரியாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

மீண்டும் அந்த நபரைச் சந்தித்துப் பேசலாமா என்றும் நினைத்துப் பார்த்தான். அது சிறிது ஆசுவாசத்தைக் கொடுத்தது. ஆனால், அது வீணான பிரச்சினைகள் ஏதாவது கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்றும் அவனுக்குள் தோன்றியது. வீடு வந்து சேர்ந்தான். தன் குழந்தைகளைப் பார்த்த போது அவை ஒரு நாள் தங்களுடைய தந்தை ஒரு திருடன் என்று தூற்றும் என்று தோன்றியது. மனைவியிடம் சொல்லவும் கூச்சமாக இருந்தது. சில நாள் அப்படியே விட்டுவிட்டால் சரியாகிவிடும் என்று நினைத்தான். யாரிடமும் பேசாமல் உணவை முடித்துக்கொண்டு உறங்கிப் போனான்.

காலையில் எழுந்து யாரிடமும் பேசாமல் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு சாப்பிட்டு அலுவலகம் கிளம்பினான். வரும் வழியில் அவன் வேலைக்குச் சேர்ந்த நாளில் நடந்த அனைத்தும் அவனுக்கு மீண்டும் நினைவுக்கு வந்தன. அந்த அலுவலகத்திற்கு வேலைக்கு நேர்காணலுக்கு அவன் சென்ற போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அங்கு இருந்தார். அவன் பெயரை அழைத்தவுடன் அவருடைய அறையில் அவன் நுழைந்தான். அவனைக் கண்டவுடன் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அவனுடைய மாமாவை அவருக்குத் தெரியும் என்றும் அவரால்தான் அந்த நிறுவனத்தை அவர் உருவாக்க முடிந்தது என்றும் அதற்கு நன்றி பாராட்ட அவனுக்கு வேலை கொடுப்பது அவருக்கு மகிழ்ச்சி என்றும் சொன்னார். மாமாவைப் பற்றி ஏதேதோ பேசினார். அவனுக்கு ஏதும் புரியவில்லை. வெறும் தலையாட்டினான். அவன் அமைதியாக இருந்ததே அவன் குடும்பத்தினரின் அடக்கம், பணிவு என்று பாராட்டினார். மேலாளரை அழைத்து அவனை வேலைக்குச் சேர்த்திருப்பதாகச் சொல்லி சம்பளம் உள்ளிட்டவற்றைப் பேசும் படி கூறி அவருடன் அவனை அனுப்பிவைத்தார். அவனை அந்த அலுவலகத்தில் இதுவரை மிகவும் நல்ல முறையில் நடத்தி வந்திருக்கின்றனர். அதுவே அவனுக்கு ஆறுதலாக இருந்தது. இப்போது இந்த நிறுவனத்தின் உரிமையாளர் நினைத்திருக்கும் மயிலவன் தான் அல்ல என்று தெரிந்தால் தன் மீதிருக்கும் மதிப்பு சரிவதோடு தன்னை வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள் என்ற எண்ணம் தோன்றியதும் அவனுக்கு உடல் உதறி நின்றது. நேற்று வந்தவன் தனக்கு எந்த ஊறையும் விளைவிக்க வரவில்லை என்றாலும் தன் நிம்மதி போய்விட்டதால் மனஉளைச்சல் அதிகமாகிவிட்டதை எண்ணி மிகவும் சோர்ந்து போனான்.

இந்த எண்ணத்திலும் உளைச்சலிலும் ஆறு மாதங்கள் கடந்தன. அவன் பேச்சைக் குறைத்தான். வீட்டில் பேசுவதையே நிறுத்திவிட்டான். அவன் மனைவிக்கு அவனுக்குள் என்ன பிரச்சினை என்று புரியாமல் வேதனையாக இருந்தது. அலுவலகத்திலும் அவன் ஏதோ சிக்கலில் இருப்பதாக நினைத்தார்கள். அவனுக்கும் தானாகவே அவனுக்கு இருக்கும் பிரச்சினையை வெளிக்காட்டிவிட்டது போல் இருந்தது. ஆனாலும் அவனுக்கு மௌனமாக இருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதற்கு ஏதாவது ஒரு தீர்வைக் காணவேண்டும் என்ற வெறி மட்டும் அவனுக்குள் அவ்வப்போது வேகமாக எழுந்து அடங்கியது. மாலை நேரங்களில் கோயிலுக்குச் சென்று அமைதியாக அமர்ந்துவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டான். அது அவனுக்கு ஓரளவு நிம்மதியைத் தந்தது.

 

மயிலவன்-2

மயிலவன் என்ற பெயரைத் தேடிக்கொண்டு வந்தவன், ஒரு தெருவில் ஒருவருடைய பெயர் மயிலவன் என்று இருப்பதை அறிந்து, அந்தத் தெருவில் அது யாராக இருக்கும் என்று தேடிக்கொண்டு வந்தான். அவன் தேடி வந்த வீட்டில் அவனை வரவேற்று உள்ளே அமர வைத்தனர். அவர்கள் வீட்டில் மயிலவன் என்று யார் இருக்கிறார்கள் என்று கேட்டான். முதியவர் ஒருவர் ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தார். இந்தக் குழந்தைக்குத்தான் மயிலவன் என்று பெயர் என அவர் சொன்னார். வந்தவனுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அந்தக் குழந்தையை வாங்கிக் கொஞ்சினான். அது அவனை விநோதமாகப் பார்த்தது. சிறிது நேரத்தில் சிரித்து விளையாடியது. வந்தவன் அந்தக் குழந்தைக்கு ஏதாவது வாஙகித் தர ஆசையாக இருப்பதாகச் சொல்லி வெளியே தூக்கிப் போனான். அவனிடம் குழந்தை ஒட்டிக்கொண்டது.

அந்தக் குழந்தையுடன் சிறிது நேரம் பழகியவுடனேயே ஏதோ ஒரு பெரிய சொத்து கிடைத்துவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. அந்தக் குழந்தையின் பெயர் தன்னுடைய பெயரான மயிலவன் என்று இருப்பதால் அப்படித் தோன்றுகிறதோ என்று நினைத்தான். இருந்தாலும் அந்தக் குழந்தையைப் பார்த்த போது தன்னையே பார்ப்பது போல் அவனுக்கு இருந்தது. அவனுக்கு அழுகையும் வந்தது. தனக்கு என்ன தேவை என்றே அவனுக்குப் புரியவில்லை. இது போன்ற ஒரு குழந்தை தேவையாக இருக்குமோ என்றும் நினைத்துப் பார்த்தான். குழந்தைக்கு சிறிய தின்பண்டங்களையும் விளையாட்டுப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுக் கிளம்பினான்.

அடிக்கடி அந்தக் குழந்தையிருந்த வீட்டுக்கு வந்து அதனுடன் விளையாடிவிட்டுப் போனான். அவ்வப்போது அதைத் தூக்கிக்கொண்டு வெளியே போனான். ஒரு நாள் அவன் வெளியே போய்விட்டு வருகையில் எதிரே அலுவலகத்தில் கண்ட மயிலவன் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்டவுடன் பாய்ந்து சென்று பேசப் போனான். அவன் நிலை தடுமாறி இவன் மீது வண்டியை மோதப் பார்த்தான். இவன் குழந்தையைத் தவறவிட எங்கிருந்தோ வந்த அந்தக் குழந்தையின் பெற்றோர் வண்டியின் குறுக்கே புகுந்து குழந்தையைக் காப்பாற்ற முனைந்ததில் மயிலவனின் இரு சக்கரவாகனம் இடித்து இருவரும் தூக்கிவீசப்பட்டனர். எப்படியோ தடுமாறி தெருவில் நின்ற மயிலவனின் கையில் குழந்தை பத்திரமாக வந்துவிட்டது. குழந்தையின் பெற்றோர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்துவிட்டனர்.

வண்டியை ஓட்டிய மயிலவனுக்குக் கை, கால் உதறத் தொடங்கியதால் அப்படியே சாலை ஓரத்தில் அமர்ந்துவிட்டான். குழந்தையுடன் இவன் மயிலவன் அருகே வந்து அமர்ந்தான். இவனைப் பார்த்து மயிலவனுக்குப் பெரும் அழுகை வந்தது. “முதலில் என்னை திருடன் என்று பட்டம் கொடுக்க வந்தீர்கள். இப்போது கொலைகாரனும் ஆக்கிவிட்டீர்கள்” என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதான்.

“என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். உங்களைப் பார்த்த உற்சாகத்தில் ஓடிவந்தேன். இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை. குழந்தையின் பெற்றோர் இறந்து போனதுதான் பெரும் சோகமாக உள்ளது. இந்தக் குழந்தைக்கு இப்போது தாத்தாவைத் தவிர யாரும் இல்லை” என்றான். அதை எல்லாம் கேட்கும் மனநிலையில் மயிலவன் இல்லை. அடுத்து என்ன செய்வது என்றே புரியாமல் அமர்ந்திருந்தான். எங்கிருந்தோ காவல் துறை வாகனம் வந்து நின்றது. நடந்த நிகழ்வைக் குறித்து விசாரணை நடந்தது. மயிலவனை ஏற்றிக்கொண்டு பறந்தது.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு மயிலவன் அதன் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அதிர்ச்சியில் தாத்தாவும் இறந்துவிட்டது தெரிந்தது. குழந்தைக்கு இப்போது தான் மட்டுமே பொறுப்பு என்று புரிந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே மயிலவன் அமர்ந்துவிட்டான். தன்னால்தான் இத்தனை பிரச்சினைகளும் வந்திருக்கின்றன என்பதும் இதை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பமும் மயிலவனைப் பெரிதும் பாடுபடுத்தின.

அடுத்தநாள் காவல்துறை அழைத்துச் சென்ற மயிலவனைப் பார்க்க அவன் நிறுவன உரிமையாளர் வந்திருந்தார். அவன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதாக உறுதி கூறினார். மயிலவன் அமைதியாக இருந்தான். அப்போது குழந்தையுடன் மயிலவன் காவல்துறை அலுவலகத்தில் நுழைந்தான். மயிலவனிடம் வந்து தன்னால்தான் இத்தனை சிக்கல்களும் நடந்துவிட்டன எப்படியாவது அவன் குடும்பத்தைத் தான் காப்பாற்றுவதாக உறுதி அளித்தான். இதைக் கவனித்த மயிலவனின் நிறுவன உரிமையாளர் அவனைப் பற்றி விசாரித்தார். மயிலவனுக்கு தன் பொய் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது என்று நினைத்து மேலும் வயிற்றைக் கலக்கியது. குழந்தையை வைத்துக் கொண்டிருந்த மயிலவன் உடனே தான் மயிலவனின் நெருங்கிய நண்பன் என்றும் தன்னால்தான் அந்த விபத்து நேரிட்டதாகவும் உரிமையாளரிடம் சொன்னான். மயிலவனின் வேலையை அவன் தண்டனை காலம் முடியும் வரை அவன் பார்த்துக்கொள்ளச் சொல்லி உரிமையாளர் சொல்லிவிட்டார். அது மயிலவனுக்கு துக்கத்தையும் ஆறுதலையும் ஒரே நேரதில் தந்தது. அவர் கிளம்பிய பின் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மயிலவன் அருகே வந்து தான் எப்போதும் அவன் ஆள் மாறாட்டம் செய்ததை வெளிப்படுத்தப் போவதில்லை. அஞ்சவேண்டாம் என்றான்.

மயிலவனுக்கு அப்போது பெரும் துயர் பீடித்தது போல் இருந்தது. இந்த வேலையில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு அவன் குடும்பத்தையும் அந்தக் குழந்தையையும் பார்த்துக்கொள்ளப் போவதாகவும் அவன் தண்டனை முடிந்து வெளியே வந்த பின் அந்தக் குழந்தையை மட்டும் பராமரித்துக் கொள்ளவேண்டும் என்றும் மீண்டும் அந்தப் பணியை அவனுக்கே வழங்குமாறும் உரிமையாளரிடம் கெஞ்சிக் கூத்தாடி கேட்டுப் பெற்றுத் தருவதாகவும் சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தான் மயிலவன். அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. “என் வாழ்க்கையில் செய்த ஒரு குற்றத்திற்கான தண்டனைதான் இது என நினைக்கிறேன். ஆனால், அதிலும் ஓர் ஆறுதலாக நீங்கள் என் குடும்பத்தைக் காப்பாற்ற வந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. நான் அந்தக் குழந்தையை நிச்சயம் நன்றாக வளர்ப்பேன்” என்றான். அது போதும் என்று சொல்லிவிட்டு மயிலவன் குழந்தையுடன் நகர்ந்தான்.

 

மயிலவன்-3

மயிலவனுக்கு விபத்து ஏற்படுத்தியதற்காக இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவன் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவன் குடும்பத்தை மயிலவன் பாதுகாத்தான். அவனுடைய வேலையை அவன் நிறுவனம் வழங்கியது. அந்த நிறுவன உரிமையாளர் அடிக்கடி அவனைச் சிறையில் வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போனார். மயிலவன் அவனுடைய குடும்பத்தையும் விபத்து நடந்ததால் பெற்றோரை இழந்த அந்தக் குழந்தையையும் பராமரிக்க வேண்டியிருப்பதால் அவனுக்குச் சில ஆயிரம் ரூபாய்கள் சம்பளத்தில் அதிகரித்துத் தருவதாக உரிமையாளர் சொன்னார். அவனுக்கு அதெல்லாம் திருப்தி தந்தாலும் தன்னுடைய கவனமின்மையால் விபத்தை ஏற்படுத்தி சிறையில் அடைபட்டுவிட்டதை எண்ணி பெரிதும் வருந்தினான். இரண்டு ஆண்டுகள் எப்படி கடக்கும் என்று நினைத்து மிகவும் ஆதங்கப்பட்டான்.

மயிலவன் புதிய வேலையில் சேர்ந்து, அந்தக் குழந்தையின் வீட்டில் தங்கிக்கொண்டு, சிறை சென்றுவிட்ட மயிலவனின் குடும்பத்தையும் பராமரித்துக் கொண்டான். அந்தக் குழந்தையை மயிலவனின் குடும்பமே வளர்த்துக்கொண்டது. இரு பெண் குழந்தைகளும் ஆண் குழந்தையான மயிலவனைப் பாசத்துடன் வளர்த்தார்கள். மயிலவனுக்குத் தன்னால் நேர்ந்த இக்கட்டை நினைத்து அவனும் தினமும் வருந்திக் கொண்டிருந்தான். சிறைக்குச் சென்று மயிலவனை அடிக்கடி சந்தித்து வந்தான். அவன் சிறையை விட்டு வந்தவுடன் அவனுக்கு மீண்டும் தன் வேலை கிடைத்துவிடும் என்று சொல்லி அவனை ஆறுதல்படுத்தினான். தன்னை மன்னித்துவிடச் சொல்லி பெரிதும் கெஞ்சினான். சிறையில் இருப்பதால் ஏற்பட்ட துக்கமும் தன் குடும்பத்தைப் பார்க்க முடியாத இன்னலும் சிறையை விட்டு வந்தவுடன் அந்தப் புதிய குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பும் என எல்லாம் சேர்ந்து அவனைக் கலங்கடித்தன.

இரண்டாண்டுகள் கழிந்தன. அவன் விடுதலை செய்யப்பட்டான். வீட்டுக்கு மயிலவன்தான் அழைத்து வந்தான். உணவு உண்டு முடித்து அவனை அலுவலகம் அழைத்துச் சென்று தன் வேலையை அவனிடம் ஒப்படைப்பதாக உரிமையாளரிடம் சொல்லிவிட்டு அவனிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். அவன் எங்கே போகிறான் என்பதை மயிலவன் கேட்கவில்லை. அவன் தன் வீட்டுக்குப் போய்விடுவான் என்று நினைத்துக் கொண்டிருந்தான். பிறகு அவனைத் தொடர்புகொள்ளலாம் என்றும் எண்ணிக்கொண்டான். அலுவலகத்தில் அவனது சிறை அனுபவங்களைப் பற்றிப் பலரும் வந்து கேட்டு அறிந்துகொண்டு போனார்கள். அவனுக்குப் பலரும் ஆறுதல் சொன்னார்கள். அதெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. உரிமையாளரும் அவனை அழைத்து இனி கவலை வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார்.

வீட்டுக்கு வந்தவன் பெற்றோர் இல்லாத அந்த குழந்தையைப் பார்த்தான். அந்தக் குழந்தை அவனை விநோதமாகப் பார்த்தது. அது பேசத் தொடங்கி இருந்தது. அவனுடைய குழந்தைகள் அப்பா என்று அழைத்ததால் அதுவும் அவனை அப்படியே அழைத்தது. அதை ஒழுங்காக வளர்த்து நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதுதான் அதனுடைய பெற்றோருக்குத் தான் செய்யும் பிரதி பலனாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். இரண்டாண்டுகள் அவர்களை நல்ல முறையில் பராமரித்த மயிலவனைப் பார்க்கலாம் என்று அந்தக் குழந்தை இருந்த வீட்டுக்குப் போனான். அங்கு, அவன் வரவில்லை என்றார்கள். அவனுடைய தொடர்பு எண்ணிலும் அவனோடு பேச முடியவில்லை. அவன் எப்படியும் தன்னைப் பார்க்க வருவான் என்று நினைத்துக்கொண்டு அமைதி காத்தான்.

இரண்டு நாட்கள் ஆன பின்னும் மயிலவன் வரவில்லை. அவன் எங்கே போயிருப்பான் என்று தேடவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் தன் சொந்த ஊர் என்று கூறியிருந்த இடத்திற்குச் சென்று விசாரித்த போது அவன் அங்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன என்று சொன்னார்கள். அவனுடைய பெற்றோர் இறந்துவிட்டதாகவும் அவனை அவன் பெற்றோர் அநாதை ஆசிரமத்திலிருந்து தத்தெடுத்து வளர்த்தார்கள் என்றும் தெரியவந்தது. அவனுடைய மாமா ஒருவர் அங்கிருந்தார் என்றும் அவரும் இறந்துவிட்டதால் அவன் அந்த ஊருக்கு வருவதையே நிறுத்திவிட்டதாகவும் தெரிந்தது. அவன் எங்கே போயிருப்பான் என்று அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. அவன் முகவரியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் விட்டது தன்னுடைய தவறு என்று நொந்துபோய் வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டில் குழந்தை மயிலவன் அவனை வளர்த்த அந்த மயிலவனைக் காணாமல் ஏங்கிப் போனது. அதற்குத் தன் ஏக்கத்தைச் சொல்லத் தெரியாமல் அடிக்கடி அழுதது. அதனுடைய நினைவை மாற்றி அதை அவன் உற்சாகம் பெற வைத்தான்.

அவனை நன்றாகப் படிக்க வைத்தான். அவனும் பள்ளியில் சிறந்த மாணவனாக இருந்தான். ஆசிரியர்கள் அவனுடைய திறனைக் கண்டு வியப்படைந்து அவன் அதிக மதிப்பெண்கள் பெற உதவினர். அவன் மருத்துவனாக வேண்டும் என்று மயிலவன் விரும்பினான். அதே போல் அவனுக்கு மருத்துவப் படிப்பு கிடைத்தது. அதையும் அவன் படிக்க மயிலவன் பெரிதும் ஆதரித்தான். அவனுடைய பெண் குழந்தைகள் சுமாராகப் படித்துத் தேறினர். அரசு வேலைகளுக்குத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அந்த வேலைகளிலும் சேர்ந்தனர். அவர்களுக்கும் திருமணம் செய்து முடித்தான். மருத்துவப் படிப்பு முடித்து மேற்படிப்பும் படித்தான் மயிலவன். அவனுக்கு ஒரு பெரிய மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது. மயிலவனுக்குப் பெரும் திருப்தி ஏற்பட்டது. தன் கடமைகள் அனைத்தும் முடிந்துவிட்டன என்று தோன்றியது.

மருத்துவத்துறையில் அவன் பலருக்கும் இலவச சிகிச்சைத் தரவேண்டும் என்று மயிலவன் அவனை வலியுறுத்தினான். அவனும் அதை ஏற்றுக்கொண்டான். அப்போது மயிலவனுக்கு உடல்நிலை ஏனோ சட்டென்று சீர் குலைந்தது. மருத்துவராக மயிலவன் இருந்ததால் உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்த்தான். அங்கு அவனை அழைத்து, மயிலவன் என்ற பெயரில் இருந்தவன்தான் அவனைத் தன்னிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லியதையும் அவனுடைய பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டதையும் அதற்குத் தான் காரணம் ஆனதையும் மருத்துவன் மயிலவனிடம் சொன்னான். மேலும், தான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த மயிலவன் காணாமல் போய்விட்டதாகவும் அவனை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து அவனிடம் தான் கடமையை நிறைவு செய்துவிட்டதைச் சொல்லவேண்டும் என்றும் கூறினான்.

மருத்துவன் மயிலவன் தான் அதை நிச்சயம் செய்வதாக உறுதி கொடுத்தான். அதன் பின் சில மணி நேரங்களில் மருத்துவமனையிலேயே மயிலவனின் உயிர் பிரிந்தது.

மருத்துவன் மயிலவன் பல இடங்களிலும் மயிலவனைத் தேடிக்கொண்டிருந்தான். ஒரு நாள் ஒரு மலைப் பிரதேசத்தில் ஓர் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு ஒரு சாமியார் அமர்ந்து பலருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் மயிலவனுக்கு அவரிடம் ஆசி வாங்கவேண்டும் என்று தோன்றியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் அமைதியாக தன் முறை வரும் வரைக் காத்திருந்தான்.

அவன் முறை வருவதற்கு சற்று முன் சாமியார் எழுந்து வெளியே போனார். அவன் பின் தொடர்ந்து போனான். உடன் இருந்த சிஷ்யர்கள் விலகிச் சென்றுவிட்டார்கள். காட்டுக்குள் தனியாக அந்த சாமியார் நடந்து சென்று கொண்டிருந்தார். அவனும் அவரைப் பின் தொடர்ந்து வேகமாகச் சென்றான். ஒரு குளம் வந்தது. அப்போது சாமியார் திரும்பி அவனைப் பார்த்தார். அவன் அதே இடத்தில் உறைந்து நின்றுவிட்டான். குளம் அருகே சாமியார் அமர்ந்தார். அவன் அருகில் சென்று அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தான் தேடி வந்த மயிலவன் பற்றியும் தன்னை வளர்த்த மயிலவன் பற்றியும் தான் மருத்துவனாகிவிட்டது பற்றியும் தன் கடமை முடிந்துவிட்டதாகச் சொல்லிவிட்டு தன்னைக் காப்பாற்றிய மயிலவனிடம் அந்தச் செய்தியைச் சேர்த்துவிடச் சொல்லி அவர் இறந்து போனதையும் சாமியாரிடம் சொல்லி முடித்தான். அவன் கண் திறந்து பார்த்த போது சாமியார் எழுந்து நடந்து கொண்டிருந்தார். உடனே அவனும் எழுந்து நடந்தான். அவனைத் திரும்பிப் பார்த்து, “பின் தொடராதே நீ சொல்ல வந்தது தனக்கு முன்பே தெரியும்” என்று சொல்லிவிட்டு அவர் காட்டில் மறைந்து போனார்.

தான் தேடி வந்த மயிலவன் அவர்தான் என்பது போல் அவனுக்குப் புரிந்தது. தன்னை வளர்த்தவருடைய இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவனுக்குள் ஏற்பட்டது.

முபீன் சாதிகா <mubeensadhika@gmail.com>

Mubeen Sahika

 

Amrutha

Related post